தர்மயுக முரசு பிப்ரவரி 2023
அய்யாவின் அருளால் எந்நாளும்நன்னாளே
-அசோக்குமார் அய்யா – 009607704901, 8012174032.
வைகுண்ட அவதார தினவிழாவை
கொண்டாடுவோம்!!!
எந்தன் பேரோ காணும் யாரோ எனச் சொல்வார்
இதோ வந்தானென்பார் இவனில்லை என்றிடுவார்
அதோ வந்தானென்பார் அவனில்லை என்றிடுவார்
இப்படியே சூட்சமொன்று எடுப்போம் நாம் மாமுனியே
எப்படியும் உள்ளறிவோர் எனையறிவார் மாமுனியே”
சான்றோர் பிள்ளைகளே: நம் தாய் தந்தையான நாராயணரின் வைகுண்ட அவதாரத்தை நாம் கண்டு கொண்டது போல் உலக மக்கள் எல்லோரும் கண்டு கொள்ள நம்மால் இயன்ற பணியை இடைவிடாது செய்து கொண்டே இருப்போம். வைகுண்ட அவதார தினம் என்றாலே நம் இல்லங்களிலும் தாங்கல்களிலும் ஒரே கொண்டாட்டம் தான். இந்த அழகிய கொண்டாட்டத்தின் நோக்கமானது ஆண்டவனின் அவதார மகிமையை எடுத்து சொல்லத்தான் இருக்க வேண்டும். நாராயணரின் வைகுண்ட அவதாரத்தை ஒருசிலர் தங்கள் சுயலாபத்திற்காக தவறாக சித்தரித்து பிரச்சாரம் செய்கின்றனர். இன்னும் ஒருசிலர் தவறாக புரிந்து தவறாக சொல்லி வருகின்றனர். பலர் தவறாக புரிந்து வைத்திருக்கின்றனர். சிலர் மட்டுமே உள்ளதை உள்ளபடி உணர்ந்து வைத்துள்ளனர். ஒருசிலரே உண்மையை பறைசாற்றி வருகினறனர். இந்த வினோதத்தைப் பார்க்கும் போது பகவான் சொன்ன மேலே சொல்லப்பட்டுள்ள வாசகம்தான் நினைவுக்கு வருகிறது. அவ் வாசகத்தில் அய்யா இறுதியாக சொல்லியுள்ள எப்படியும் உள்ளறிவோர் எனை அறிவார் என்ற படி நாம் எல்லோரும் வைகுண்ட அவதார சூட்சுமத்தை உள்ளதை உள்ள படி உணர வைகுண்டப் பரம்பொருளிடம் வேண்டி உணர்ந்து அதனை ரசித்து மகிழ்ந்து அதனைப் பிறருக்கு எடுத்துரைத்துச் செயல்பட்டு அவதார தின விழாவை கொண்டாடி மகிழ்வோம்
மேலும் அவதார தினத்தன்று அவதார ஊர்வலங்களில் பங்கு பெற்று அவதார நாயகனின் அவதார தினத்தை உலகமே உற்று நோக்கச் செயல்படுவோம். மேலும் அவதார மகிமையை எழுத்து வடிவமாக்கிப் பிறருக்குக் கொடுத்து அவதார சூட்சமத்தை தெரியப் படுத்துவோம். ஆங்காங்கே அவதார மகிமையை எடுத்துரைக்கும் வண்ணம் கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, வினாடிவினா போட்டி போன்ற அவதார சூட்சமத்தை வெளிக்கொண்டு வரும் போட்டிகளை நடை முறை படுத்துவோம். முடிந்த அளவு அவதார மகிமையை எல்லா மொழிகளிலும் அச்சிட்டு உலகமே அறியும்படி வழிவகை செய்வோம்.
அவதார தினத்தன்று நாடு முழுவதும் பொது விடுமுறையாக அரசு அறிவிக்க எல்லாம்வல்ல அவதார நாயகன் அய்யா வைகுண்டப் பரம்பொருளிடம் வேண்டுவோம்
பச்சிப் பறவை பல சீவ செந்துக்களை
நிச்சயமாய்ப் படைத்த நீலவண்ண நாதனும் நான்
மண்ணேழுமளந்த மாயப்பெருமாள் நான்
விண்ணேழுமளந்த விஷ்ணுத் திருவுளம் நான்
ஏகம் படைத்தவன் நான் எங்கும் நிறைந்தவன் நான்
நாதக்கடல் துயின்ற நாகமணி நானல்லவோ
சீவசெந்துக் கெல்லாம் சீவனும் நானல்லவோ
கொண்டாடுவோம்! கொண்டாடுவோம்!
அய்யா வைகுண்ட அவதார தின விழாவை கொண்டாடுவோம்
அய்யா உண்டு
ஸ்ரீமன் நாராயணரின் வைகுண்ட அவதாரக் கதை/h3>
பா. கிருஷ்ணமணி அப்புக்குட்டி அய்யா 9841933992
டே. பிரபின்குமார் அய்யா 9845312128
கொலுவும் பெரிய குவிந்தமதில் கோட்டைகளும்
கெட்டுக் கிளைபாணி கிரண மதுவுடனே
நட்டுப் பயிரால் நாளும் பசிதீர்ந்து
இருந்து பொறுக்க இராட்சியமொன் றுண்டாக்கும்
வருந்தி மகாதேவர் மலரோனடி வணங்க”
அகிலத்திரட்டு அம்மானை (அகிலம்)
இறைவன் இந்த மண்ணகத்தில் தாம் எடுக்கின்ற அவதாரத்தினைப் பற்றி அறிந்து கொள்ளும் வகையில் புனித நூல்களை கொடுக்கின்றான். ஸ்ரீ இராமருடைய அவதாரத்தை அறிந்து கொள்ள இராமாயணத்தையும், ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரத்தை அறிந்து கொள்ள பாகவத புராணம் மற்றும் மகாபாரதத்தையும், ஸ்ரீ முருக அவதாரத்தை அறிந்து கொள்ள கந்த புராணத்தையும் அருளிய இறைவன், ஸ்ரீ வைகுண்டரின் அவதாரத்தை உலகம் அறிந்து கொள்வதற்காக தந்ததே “அகிலத்திரட்டு அம்மானை எனும் வேதநூல் ஆகும்.
உலக தோற்றம்
அகிலத்திரட்டு அம்மானை உலக தோற்றம் பற்றி கூறுவதாவது “எங்கும் நிறைந்த ஏகமானது பரமாகி, அது “ஓம்” என்னும் பிரணவமாகி, அவ்வாயு சத்தியாக வளைந்து, அந்த சத்தியில் சிவம் தோன்றியும், சிவத்தில் சக்தியும், சக்தியில் நாதமும், நாதத்தில் விஷ்ணுவும், ருத்திரர், மகேஸ்வரர் போன்றவர்களும் தோன்றினர், பின்பு வானவர்கள், தேவர்கள், வேத சாஸ்திரங்கள், ஆதித்தன், வாயு உட்பட அண்ட பிண்டங்களையும் படைத்த பரம்பொருள், அதிலே 84 லட்சம் வகையான உயிரினங்களை படைத்து, காத்து, ஈரேழு 14 லோகத்தையும் தன்னுடைய சங்கல்பத்தின்படி இயக்கி வருகின்றார்”.
ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் முந்தைய அவதாரங்கள்
சிவப்பெருமான் வளர்த்த வேள்வியில் இருந்து தோண்றிய குரோணி என்னும் அரக்கன் கைலையையே விழுங்க ஆர்பரித்து நின்றான். அவனை ஆறு துண்டுகளாக வெட்டி அழிக்க வரம் கேட்டு நாராயணர் சிவனை நோக்கி தவம் இருந்தார். சிவன் தோன்றி, மகாவிஷ்ணு கேட்ட வரத்தை கொடுத்ததோடு, அவனின் ஆறு துண்டத்தில் இருந்து யுகாயுகங்கள் தோறும் பிறக்கும் அசுரர்களையும் நாராயணரே உத்தமனாக பிறந்து அழிக்க வேண்டும் என்றார். நாராயணரும் சம்மதித்து குரோணியை ஆறு துண்டுகளாக வெட்டி அழித்தார். அத்தோடு முதல் யுகமான நீடிய யுகம் முடிவடைந்தது.
இரண்டாவது யுகமான சதிர்யுகத்தில் குரோணியின் முதல் துண்டத்திலிருந்து குண்டோமசாலி என்னும் அரக்கனை சிவப் பெருமான் பிறவி செய்தார். அவனும் முன் பிறந்த குரோனியை விட மிக மோசமானவனாக இருக்க, நாராயணர் அவதரித்து குண்டோம சாலியனையும் கொன்று சதிர் யுகத்தை முடித்தார்.
குரோணியின் இரண்டாவது துண்டில் இருந்து தில்லை மல்லலான், மல்லோசி வாகனன் என்னும் இருவர் பிறவி செய்யப்பட்டனர். இரு அரக்கர்களும் கட்டுக்கடங்காத கொடுமை செய்ததால் நாராயணர் மீண்டும் அவதரித்து அவர்களையும் அழித்து மூன்றாம் யுகமான நெடிய யுகத்தை முடித்தார்.
கிரேதா யுகத்தில் குரோணியின் எஞ்சிய நான்கு துண்டுகளில் இருந்து ஒரு துண்டை எடுத்து, அதை இரண்டாக பிளந்து, சூரபத்மன் மற்றும் சிங்கமுக சூரன் என்னும் இரு அரக்கர்கள் படைக்கப் பட்டார்கள். அவர்களின் அநியாயம் பொறுக்காமல் நாராயணன் ஆறுமுகனாக அவதாரம் கொண்டு இருவரையும் அழித்தார். அந்த யுகம் முடிய காலம் இருந்ததால் இதே யுகத்தில் மீண்டும் இரணியனாகப் பிறவி செய்யப்பட்ட அசுரனை நாராயணர் நரசிம்மராக அவதரித்து அழித்தார்.
ஐந்தாம் யுகமான திரேதா யுகத்தில் குரோனியின் நாலாவது துண்டத்திலிருந்து இராவணனை சிவன் பிறவி செய்தார். அவன் செய்த அநியாயத்தால் நாராயணர் இராமராக அவதாரித்து அவனை அழித்து யுக தர்மத்தை காத்தார். ஆறாவது யுகமான துவாபரா யுகத்தில் குரோணியின் ஐந்தாவது துண்டத்திலிருந்து நூறு சகோதர்களுடன் பிறந்து, பொறாமை குணத்தால் அநியாயம் செய்த துரியோதனனை அழிக்க நாராயணர் கண்ணனாக தோன்றினார். மகாபாரத போரில் பஞ்ச பாண்டவர்களின் பக்கம் நின்று, பீமனின் கதைக்கு பலம் கொடுத்து, அவன் மூலம் துரியோதனனை அழித்து, யுகதர்மத்தை நிலை நிறுத்தினார். பின்னர் தனது கிருஷ்ண அவதாரத்தை முடிக்க நினைத்த நாராயணர் தான் கிருஷ்ணராக உலகிற்கு காட்டிய பொய்யான தோற்றத்தை கலைத்துவிட்டு ஸ்ரீரங்கம் நோக்கி சென்றார்.
சான்றோர்கள் பிறப்பு:
ஸ்ரீரங்கம் செல்லுகின்ற வழியில் அரிகோண மாமலையில் உள்ள அயோத அமிர்த கங்கையில், கயிலையில் வாழ்ந்திருந்த மரகதம், வல்லி, வள்ளி, சலிகை, சரகதக்கன்னி, சரிதை, அரிமடவு எனும் சப்த கன்னியரைக் கண்டார். அவர்கள் அமிர்த கங்கையில் அனு தினமும் குளித்து, விளையாடி, மகிழ்ந்து, தங்களின் கற்பின் வலிமையால் நீரை பந்துப் போல் திரட்டிச் சென்று சிவபெருமானுடைய தலை முடியில் ஊற்றி அபிஷேகம் செய்து பூஜித்து வந்தனர்.
இதை கண்ட ஸ்ரீமன் மஹாவிஷ்ணு சன்னியாசி வேடத்தில் அவர்கள் முன் சென்று நின்றார். அவரை பார்த்த மங்கைகள் அவர் சிவபெருமான் அல்ல, எதோ ஒரு சன்யாசியாகவே இருக்க வேண்டும் என நினைத்து அவருக்கு வழி விட்டு விலகி நின்றார்கள். அப்போது சப்த மாதர்களிடம் பலநாளும் ஈஸ்வரர்க்கு செய்யும் இந்த அனுஷ்டானத்தை இன்று தமக்கு செய்யுமாறு அய்யா கேட்டார். அவர்களோ “எப்போதும் இறவாதிருந்து, தமக்கு நிகர் தாமே ஆனவரும், காளை வாகனத்தின் மீது அமர்ந்துள்ள ஈஸ்வரரை தவிர வேறு யாருக்கும் ஏவல் செய்ய மாட்டோம் என்றும், தேவரிஷி, மகரிஷி அத்தனை ஏன் பாம்பணையில் துயிலும் ஸ்ரீ மஹாவிஷ்ணுவாக இருந்தாலும் நாங்கள் இந்த பூஜையை செய்ய மாட்டோம் என்று கூறினார்கள்.
அம்மைமார்களின் மதமான சொல் கேட்டு கோபமுற்ற அச்சுதர், அவர்களிடம் ”ஓட்டில் இரந்துண்ண ஊர்வழியே தான்திரியும் ஆண்டிக்கே அல்லாது அரவணையில் துயிலும் காண்டீப னுக்கேவல் கருதோம் என உரைத்தீரே, இனி கங்கையை சுருட்டுவதைப் பார்ப்போம்” என்று கூறி மேலோகம் சென்றார். பரலோகம், சிவலோகம், வைகுண்ட லோகம், பிரம்மலோகம், சொர்க்க லோகம், தேவலோகம், எமலோகம் என்னும் மேல் லோகம் ஏழிழும் வாழ்கின்ற நல்ல ஏழு வித்துக்களை எடுத்து தனது இருதயத்தில் அடக்கிக் கொண்டு பூலோகம் வந்தார்.
சப்த கன்னியரின் கற்பை சோதிக்க எண்ணிய மகாவிஷ்ணு, பிரமா உபதேசம் பிறப்பு உருவேற்றி, காமத் தணலாய் கருமேனியானதிலே தீத்தணலாய் கொழுந்து விட்டு எரிந்துக் கொண்டிருந்தார். வழக்கம் போல் ஏழு அம்மைமார்களும் கூபத்தில் இறங்கி நீராடி விட்டு வெளியே வந்தனர். அப்போது நாராயணர் வருணன் மூலம் அவர்களுக்கு குளிரை ஏற்படுத்த, குளிர் தாங்க முடியாத அம்மைமார்கள் அக்கினியை சுற்றி வளைந்து, கனலை துணை என ஆவிப்பிடித்தனர். அந்நேரம் தீதனலாய் நின்ற திருமாலின் ஓங்கார மோகத்தால் அம்மையர்கள் வையிற்றில் கர்ப்பமுற்று உடனே ஏழு குழந்தையை பெற்றனர்.
சப்த கன்னியர்கள் தவம்
கன்னியராக இருந்து பிள்ளைப் பெற்றதால் பயந்து கலங்கிய சப்த கன்னியர்கள் கையில் நீரை திரட்ட முயல, நீர் திரளாததினால் மண்ணில் புரண்டு கதறி அழுது புலம்பினர். கன்னியரின் மேனி கனிந்து மினுமினுத்து, அவர்களது தனங்களில் இருந்து பால் சுரந்தது. கற்பு தவறி விட்டதால் இனி கலைக்கு செல்ல முடியாது என்று தெரிந்து கொண்ட கன்னியர்கள், இன்று எங்கள் கற்பை அழித்த மாமுனிவனே வந்து தமக்கு மாலையிட வேண்டும் என்ற வரம் கேட்டு சிவனை நோக்கி தவம் இருக்க சென்றனர்.
அன்னை பத்திரக்காளியிடம் பிள்ளைகளை வளர்க்க கொடுத்தல்
ஏழு பிள்ளைகளுக்கும் தெய்வேந்திரனின் பசு மூலம் பால் கொடுத்து வளர்த்த ஸ்ரீமன் நாராயணர், அவர்களுக்கு பெயர் சூட்ட எண்ணினார். எனவே சிவபெருமான், பிரம்மா உட்பட தேவ சங்கத்தார் அனைவரையும் அழைத்து அவர்கள் மூலம் அந்த பாலர்களுக்கு சாணான், சான்றோர், நாடாள்வார் உட்பட 13 பெயர்களை சூட்டினார். பின்னர, அன்னை பத்திரக்காளியிடம் ஏழு பாலர்களை கொடுத்து அவர்களை நல்ல முறையில் வளர்த்து ஆளாக்குமாறு கூறினார். அப்போது அன்னை காளியிடம் ‘என் பிள்ளைகளுக்கு ஏதேனும் தீங்கு வந்தால், காளியே உனக்கு சிறை தான் கிடைக்கும்’ என கூற, அதற்கு அம்மையும் சம்மதிக்க, குழந்தைகளை வளர்க்க கொடுத்தார் நாராயணர்.
சான்றோர்களுக்கு சகல கலைகளையும் கற்றுக் கொடுத்து, சிறப்பாக வளர்த்து வந்த அன்னை காளி, அவர்களின் துணையோடு தக்கனையும் வதைத்தாள். பின் நாரத முனிவர் மூலம் நிருபத ராஜனின் ஏழு பெண்களை சான்றோர்களுக்கு திருமணம் செய்து வைத்து, பெரிய கோட்டையும் கட்டி சிறப்பாக வாழ வைத்தாள். சான்றோர்கள் எல்லா விதமான தொழிலையும் செய்து, பெரும் புகழ் பெற்று வாழ்ந்தனர். அவர்களது வீரத்தை அறிந்த சோழ மன்னன் பொன் பொருள், யானை, குதிரை போன்றவையுடன் தனது நாட்டின் ஒரு பகுதியையும் கொடுத்து அவர்களை மன்னராக்கினான்.
கலியுகம் பிறப்பு:
ஸ்ரீமன் மஹாவிஷ்ணு ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டு இருந்தபோது கலியுகத்தை தோற்றுவிப்பதற்கான காலம் கனிந்து விட்டதை குரு முனிவன் மூலம் அறிந்து கொண்ட சிவபெருமான், மேலோகத்தார் அனைவரையும் அழைத்து “கலியுகத்தை பிறப்பிக்க ஸ்ரீமன் மகாவிஷ்ணு இங்கு வர வேண்டாமா?” என கேட்டார். ஆனால் அவர்களோ ’மேகவண்ணர் இங்கே இல்லை, ஒன்பதாம் பிறவி முடித்து மீண்டும் பிறக்க கீழ் உலகில் மாண்டு கிடக்கிறார்’ என்று சொல்ல, ஸ்ரீமன் மகாவிஷ்ணு இல்லாமலே கலியனை பிறவி செய்ய சிவபெருமான் முடிவு செய்தார்.
குறோணியின் முந்தைய ஆறு பிறவிகளிலும் அவன் அசுரனாகவே இருந்து, தெய்வ சக்தி உள்ளதை உணராதவனாக இருந்ததினால் இறைவனை வணங்கவில்லை. இந்த பிறவியிலும் அவன் இறைவனை நினையாதிருந்தால் வேறு ஒரு பிறவி அமைய போவதில்லை. எனவே அழகு சவுந்தர்யமுடன் இறைவனை துதிக்க நல்ல புத்தியும் கொடுத்து, ஒரு தலையுடன் பிறவி செய்ய நினைத்தார். கலியனை பிறவி செய்ய வேண்டும் என சிவபெருமான் நினைத்த அடுத்த கணமே குறோணியின் கடைசி சதை துண்டத்திலிருந்து தலைக் கீழாக கலியன் பிறந்தான். துட்ட குணமுடைய பூதம், கிங்கிலியர் மற்றும் மொட்டை குறளிகள் போன்றவை கலியனை சிவப்பெருமான் முன் அழைத்து வந்தனர். கலியன் கேட்டதின் பேரில் அவனது வலது விலா எலும்பிலிருந்து ஒரு பெண்ணை சிவபெருமான் படைத்துக் கொடுத்து, அவன் கேட்ட வரங்களையும் தனது அகத்திலிருந்து தோன்றிய அகத்தீசர் மூலம் கொடுத்தார்.
கலியன் பெற்ற வரங்கள்
கலியன் அனைத்து தெய்வங்களின் மூலத்தையும், பல வித சாஸ்திர வித்தைகளையும், தந்திரங்களையும், மரணம் வரா வித்தைகளையும், பூலோகத்தை கெடுக்கும் வரங்களையும், தூயவனரான ஸ்ரீமன் மஹாவிஷ்ணுவின் திருமுடியையும், சக்ராயுதத்தையும் வரமாக வேண்டி பெற்றான். வரத்தை பெற்றுக் கொண்டு கலிச்சியோடு பூலோகம் வரும் போது, ஸ்ரீமன் மஹாவிஷ்ணு கந்தல் துணி உடுத்தி, தலை விரித்த கோலத்திலும், எந்த விதமான ஆயுதமும் கையில் இல்லாத ஒரு பண்டார உருவில் நீசக் கலியனை வழி மறித்து ‘நீ ஈஸ்வரரிடம் கேட்டு பெற்ற வரங்களிலே இந்த பரதேசிக்கும் சிறிது தராமல் போனால் சாபமிடுவேன்” என்றார். அதற்கு கலியன் ‘ஆண்டியாகிய உன்னோடு சண்டையிடுவதா? மாயன் வந்தால் வலு பார்த்துவிடுவேன், நீ போடா’ என்றான்.
அதற்கு அந்த பண்டாரம் ‘பிச்சைக்காரனாகிய எனக்கு பலமில்லை என்று நினைத்தாயா? சண்டையிட்டு பார்த்தால் தான் என் பலம் உனக்கு தெரியும்’ என்றார். உடனே புத்தியில்லா நீசன் ‘ஆள் படைகளில்லாமல், ஆயுதங்களில்லாத பண்டாரமான உன்னோடு நான் சண்டையிட்டால் எனக்கு ஆண்மையில்லை என்றென்ணி நல்ல பெண்கள் சிரிப்பார்கள்’ என்றான். அவன் கூறியதைக் கேட்டு தான் எண்ணியபடி அனைத்தும் நடைபெறுவதைக் கண்டு மனதுக்குள் மகிழ்ச்சி அடைந்த ஸ்ரீமன் மஹாவிஷ்ணு அவனிடம் கூறினார் ‘அப்படி என்றால் நீ இனிமேல் எந்த ஒரு பண்டாரத்திடமும் மோதி வம்புக்கு செல்ல மாட்டேன், ஆண்டிகளை கொடுமைபடுத்தி தொந்தரவும் செய்ய மாட்டேன்’ என சத்தியம் செய்து தர வேண்டும்’ என்ற நிபந்தனையை விதித்தார்.
அதற்கு கலிநீசனும் யார் மீது சத்தியம் செய்து கொடுக்க வேண்டும் என ஆணவமாகக் கேட்க, பண்டார உருவில் இருந்த ஸ்ரீமன் மஹாவிஷ்ணு ‘இப்போது நீ ஈஸ்வரரை வணங்கிப் பெற்றுக் கொண்டு வந்துள்ள வரங்கள் பெயரிலும், உன் மனைவியின் பெயரிலும் சத்தியம் செய்து கொடுக்க வேண்டும்’ என்றார். மேலும் ‘கொடுத்த சத்தியத்தை மீறி நீ எந்த ஒரு ஆண்டியையோ அல்லது பண்டாரத்தையோ வம்பு செய்து அவர்களை துன்புறுத்தினால் அதன் விளைவாக உனது படைகளை இழந்து, மனைவி மக்களையும் இழந்து, ராஜ்யத்தையும் இழந்து, உனது வாழ்க்கையின் அனைத்து சுகபோகங்களையும் இழந்து, நாசம் அடைந்து உனது உயிரையும் இழந்து நரகத்துக்கு செல்வாய்’ என்று கூறினார். ஸ்ரீமன் மஹாவிஷ்ணு கேட்ட சத்தியத்தின் உள்ளே பொதிந்து கிடந்த ரகசியத்தை அறிந்திடாத கலியனும், ஸ்ரீமன் மஹாவிஷ்ணு கேட்ட அந்த சத்தியத்தை செய்து கொடுத்தவுடன், கலியன் விரைவில் அழிவை சந்திப்பான் என்று ஸ்ரீமன் மஹாவிஷ்ணு மனதில் மகிழ்ச்சி அடைந்தார்.
அதோடு விடாமல் சன்யாசி உருவில் இருந்த ஸ்ரீமன் மஹாவிஷ்ணு கலிநீசனிடம் கூறினார் ‘உன்னிடத்தில் உள்ள மந்திர தந்திர சக்திகளினால் உன்னால் எந்த ஆயுதத்தையும் எந்த இடத்திலும் வரவழைக்க முடியுமே, அப்படி இருக்கும்போது இந்த வெற்று இரும்பு ஆயுதத்தை நீ ஏன் சுமக்கிறாய்? நீ கேட்ட உண்மையான சக்ராயுதத்தை தராமல் இந்த இரும்பு ஆயுதத்தை அல்லவா உனக்கு வரம் கொடுத்தவர் தந்து இருக்கின்றார். இதனால் பலன் ஏதும் இல்லை என்பதால், என் சக்தியால் உனக்கு மேன்மை தரும் செல்வமாக (பணம்) இதை மாற்றித் தருகிறேன்’ என்று ஆசைக் காட்டினார். மதி இழந்த நீசனும் மிக்க மகிழ்ச்சி அடைந்து சக்கரத்தை ஸ்ரீமன் மஹாவிஷ்ணுவிடம் கொடுக்க, அதை பணமாக உரு மாற்றிக் கொடுத்தார். பணமாக மாறிய சக்ராயுதம், ஸ்ரீமன் மஹாவிஷ்ணுவிடம் தனக்கு ஏற்பட்டுள்ள இந்த சாபம் எப்போது தீரும் என்று கேட்க, ‘கலிகாலம் முடிவுறும் போது உனது சாபம் தீரும்’ என்று உறுதி கூறினார்.
கலியனின் வரவால் பூமியில் ஏற்பட்ட மாற்றம்
கலியன் புவியில் கால் வைத்தவுடன் நல்லவை யாவும் மறைந்து, தீமைகள் கை ஓங்கியது. உலகெங்கும் பாவச் செயல்கள், பக்தி இன்மை, சகிப்புத் தன்மை இன்மை, ஆணவம், அகம்பாவம், மற்றும் தீய பழக்க வழக்கங்கள் போன்றவை பெருகின. வேதங்களின் அர்த்தங்களும் எவருக்கும் புரியாமல் போயின. நல்ல வகையான ஊர்வனங்கள், பறவைகள், விலங்குகள், வெள்ளை உள்ளம் கொண்ட உயிரினங்கள் அனைத்தும் ஸ்ரீமன் மகாவிஷ்ணுவை நாடி கானகத்துக்கு சென்றது. அப்போது ஸ்ரீமன் மகாவிஷ்ணு பண்டாரமாக வந்து ஆறுதல் சொல்லி, ‘வம்பை அழித்து தர்ம ராஜ்யத்தை ஆளத் திருமால் வரவேண்டும் என்று தவசு செய்யுங்கள்’ எனக் கூறி அவர்களை பல்வேறு இடங்களுக்கும் அனுப்பினார்.
சோழன் இரு சான்றோரை கொல்லுதல்
மானிட நன்னெறிகள் அனைத்தும் அழிந்து, ஜாதி பேதங்களினால் மக்கள் பிளவுபட்டு, கலி மாயைக்குள் சிக்கிக் கிடந்ததினால் பூலோகத்தில் தர்மம் குன்றியது. அதனால் கோபமுற்ற இயற்கை பேய் மழையை பொழிய வைத்து, ஏரி குளங்களை நிரப்பி, வைகை ஆற்றின் கரையை உடைத்தது. வெள்ளத்தினால் சோழ ராஜ்யமே அழிந்து விடுமோ என்கின்ற நிலை உருவாகியது. என்ன செய்வது என தெரியாது திகைத்த சோழ மன்னனான கரிகாலன் கலியின் மாய்கையினால் ஈனமான ஒருவனின் சொல்லை கேட்டு சான்றோர்களை அழைத்து, அவர்களும் மன்னனுக்கு நிகரானவர்கள் என்பதை மறந்து, கூடையில் மண் எடுத்து வந்து அணையின் உடைப்பை அடைக்கும்படி உத்தரவிட்டான். ஆனால் சான்றோர்களோ கூடையில் மண்ணை சுமந்து வர மறுத்திட, இரண்டு சான்றோர்களை யானையின் காலடியில் மிதிக்க வைத்து கொன்றான். அந்த செய்தியை வித்யாதர முனிவர் ஸ்ரீமன் மஹாவிஷ்ணுவிடம் சொல்ல, அவர் சொக்கராக வேடம் போட்டு வந்து பிட்டுக்காக கூடையில் மண் சுமந்து, பிரம்படிகள் பட்டு, வைகை அணையை அடைத்து மீதம் இருந்த ஐந்து சான்றோர்களை காப்பாற்றினார். பின்னர் கோபத்தோடு மீண்டும் ஸ்ரீரங்கம் சென்று பள்ளி கொண்டார்.
ஸ்ரீரங்கம் ஆலயத்திருந்து வெளியேறிய ஸ்ரீமன் மகாவிஷ்ணு
கலியின் மாயையினால் பிடிக்கப்பட்டு இருந்த ஸ்ரீரங்க ஆலய வேதியர்கள் பூசை முறைகளை சரிவர கடைபிடிக்காமல் தம் மனத்திற்கேற்ப நடத்தினார்கள். ஒரு வேதியன் மற்றொரு வேதியனின் பூசை காலத்தில் பூசை செய்ததால் பாதிக்கப்பட்ட வேதியன் வேள்வி வளர்த்து சாக துணிந்தான். அவனை தடுத்து காத்த ஸ்ரீமன் மஹாவிஷ்ணு மனம் வெறுத்துப் போய் அங்கிருந்து சென்று விட முடிவு செய்தார். அதோடு ஏற்கனவே சுகப்பிரம்ம மகரிஷியும் ஸ்ரீமன் மஹாவிஷ்ணுவிடம் திருவனந்தபுரம் செல்லுமாறு வேண்டுதல் வைத்திருந்தார். எனவே ஆலயத்தின் காவல் சேத்திரன் மற்றும் பாதிக்கப்பட்ட வேதியனை அழைத்துக் கொண்டு ஸ்ரீமன் மகாவிஷ்ணு அங்கிருந்து வெளியேறினார்.
ஸ்ரீமன் மகாவிஷ்ணு நிகழ்த்திய அற்புதம்
ஸ்ரீமன் மஹாவிஷ்ணு திருவனந்தபுரத்திற்கு போகும் வழியில் பிறப்பு ரகசியத்தைக் குறித்த பிரம்மனின் புத்தகத்தை திருடிய குற்றத்திற்காக, பிரம்மனிடம் சாபம் பெற்று கற் சிலையாக நின்று இருந்த 55 ரிஷிகளை தொட்டு அவர்களின் சாபத்தை நீக்கினார். அவர்களிடம் மேல் லோகம் வேண்டுமா அல்லது பூலோகம் போதுமா? என கேட்க, அவர்கள் பூலோகத்திலே சென்று வாழ விரும்பினர். எனவே அவர்களை பூலோகம் சென்று பிட்ஷை பெற்று அதை உண்டு, வேறு எதிர்பார்ப்புகள் எதையும் வைத்துக் கொள்ளாமல், மிருக பலி கொடுத்து பூஜைகளை செய்யாமல், ஸ்ரீமன் வைகுண்டரின் நினைவோடு இருந்து கொண்டு ஒவ்வொரு தேசத்திலும் ஒருவராக வாழும்படி சொல்லிவிட்டு திருவனந்தபுரம் நோக்கி சென்றார்.
திருவனந்தபுரம் செல்லும் வழியில் பெரிய மலை போல ஒரு பெண் வனத்தில் கிடக்க, ஸ்ரீமன் மகாவிஷ்ணுவின் பாதம் அவள் மீது பட்டு அவள் உயிர் பெற்று எழுந்தாள். கல்லாய் கிடந்தவள் எவ்வாறு பெண்ணாக மாறினாள் என வேதியன் மற்றும் சேத்திரனிடம் ஸ்ரீமன் மஹாவிஷ்ணு கேட்க, சிவபெருமானின் சாபத்தினால் எக்காள துர்க்கை எனும் அவளுக்கு அந்த நிலை ஏற்பட்டது என்றார்கள். மேலும் கூறினார்கள் ‘அவள் சாபம் பெற்று இருந்தபோது தனது சாபம் எப்போது முடிவிற்கு வரும் என சிவபெருமானிடம் கேட்டபோது, அனந்தபுரத்தில் ஸ்ரீமன் மஹாவிஷ்ணு பள்ளிக் கொள்ள வரும் போது அது நடைபெறும் என்று அவளுக்கு சிவபெருமான் உறுதி கூறினார். அதன்படியே உமது பாதம் அவள் மீது பட்டதினால் அவளின் சாபம் தீர்ந்தது’ என்றனர்.
எக்காள துர்க்கையிடம் ‘பெண்ணே உனக்கு என்ன வேண்டும்’ என ஸ்ரீமன் மஹாவிஷ்ணு கேட்க, ‘முன்பு தாம் சிவகாமியை ஒத்த அழகிய பெண்ணாக இருந்தவள் என்றும், என் மேல் ஆசை கொண்ட எமன் எனது கணவரான செந்திரிஷியை கொன்றான் என்றும், தனது கணவனை கொன்ற எமனின் அழிவுக்கு ஈஸ்வரரை வேண்டி தவமிருந்தாகவும், அப்போது சிவபெருமான் என்னிடம் இப்போது எமனை அழித்தால் மக்கள் தொகை பெருகி நாடு தாங்காது, எனவே கொஞ்சம் பொறுத்திருக்க வேண்டும் என்று கூறி சமாதானமாக போகும்படி கூறியதாகவும், ஆனால் நான் சிவபெருமானின் வார்த்தையை கேட்காததால் குன்று போல கிடக்க சாபம் கொடுத்தார்’ என்றும் தனது சாபத்துக்கான காரணத்தை கூற, அவளது சாபத்தையும் நீக்கி, பழைய அழகையும் கொடுத்து, தர்ம யுகத்தில் எமன் அழிவான் என எமனின் அழிவு காலத்தையும் கூறி அதற்காக அவளை தவமிருக்க சொல்லி விட்டு ஸ்ரீமன் மஹாவிஷ்ணு திருவனந்தபுரம் நோக்கி சென்றார்.
அதை போல தன் மீதான மோகத்தினால் தனது மகனை கொன்ற கணக்கரான சித்திர புத்திரனின் அழிவுக்காக தவம் இருந்த பெண்ணுக்கும், தன்னுடைய மகனே மீண்டும் தமக்கு கன்றாக பிறக்க வேண்டும் என தவமிருந்த பசுவுக்கும் காட்சி கொடுத்து, அவர்களின் தவம் நிறைவேறுவதற்கான காலத்தையும் கூறி விட்டு திருவனந்தபுரத்தை நோக்கி சென்றார்.
திருவனந்தபுரத்தில் ஸ்ரீமன் மகாவிஷ்ணு பள்ளிக்கொள்ளுதல்
புலச்சி ஒருவளுக்கு காட்சி கொடுத்த ஸ்ரீமன் நாராயணருக்கு திருவாங்கூரை ஆண்டு கொண்டிருந்த கலிநீச மன்னன் திருவனந்தபுரத்தில் பெரிய ஆலயம் ஒன்றை எழுப்பி (ஸ்ரீ அனந்தபத்மநாப சுவாமி) சிறப்பான பூசையை செய்து வந்தான். ஆனால் கலிநீச மன்னன் நல்ல குல சான்றோர் மக்களை அடக்கி, ஒடுக்கி, அதிகமான வரியை விதித்து துன்புறுத்தி ஆட்சி செய்து வந்தான். நல்ல மக்கள் படுகின்ற துன்பத்தை கண்டு மனம் வெதும்பிய ஸ்ரீமன் மஹாவிஷ்ணு, அவன் மேல் கோபம் கொண்டு, மன்னன் முன் எழுந்தருளி அவனது தீய செயல்களை மாற்றிக் கொள்ளுமாறு நல்ல உபதேசங்களை கூறினார். தொடர்ந்து மன்னனும் அவனது வம்சாவளியினரும் ஆட்சி செய்து வேண்டும் எனில் அன்னை பத்ரகாளியினால் வளர்க்கப்பட்ட சான்றோர் குல மக்களின் துன்பத்தை நீக்கும்படி அறிவுரை கொடுத்தார். மாறாக சான்றோர்களை சித்திரவதை செய்து வதைத்தால் மன்னன் தனது ராஜ்யத்தை இழந்து நாசம் அடைவான் எனவும் எச்சரித்தார். ஆனால் மதி இழந்த நீசனோ என்ன ஆனாலும் சரி, சான்றோர்களுக்கு உள்ள வரியையோ துன்பத்தையோ நீக்க போவது இல்லை என்று ஸ்ரீமன் மஹாவிஷ்ணுவிடம் திட்டவட்டமாகக் கூறினான். அதைக் கேட்டு கடும் கோபமுற்ற ஸ்ரீமன் மஹாவிஷ்ணு திருவனந்தபுரத்தை விட்டு தான் திருச்செந்தூருக்கு செல்வதாகவும், வெகு விரையில் மன்னனை அழிக்க வேறு ஒரு கோலத்தில் வருவதாகவும், அப்போது அனைத்து ஜாதியினரையும் ஒன்றிணைத்து, கலிநீச மன்னனை ஒழித்துக் காட்டுவதாக அவனிடம் சூளுரைத்தப் பின்னர் திருவனந்தபுறத்தை விட்டு திருச்செந்தூருக்கு கிளம்பிச் சென்றார்.
ஏழுலோகத்தாரை பூமியில் பிறவி செய்தல்
மானம் மரியாதை இழந்து துன்பப்பட்ட சான்றோர்கள் நிலையைக் கண்டு வருத்தமுற்ற தேவர்களும், அன்னை உமையவளும் திருச்செந்தூர் சென்று ஸ்ரீமன் மகாவிஷ்ணுவிடம் சான்றோர்கள் படும் துயரங்களை எடுத்துக் கூறி அவர்களை காப்பாற்ற வேண்டும் என முறையிட்டார்கள். உமையவளின் வேண்டுதலுக்கு இரங்கிய ஸ்ரீமன் நாராயணர் கயிலைக்கு சென்றார். தன்னை கலந்து ஆலோசனை செய்யாமல் கலியனை பிறவி செய்ததினால் சிவபெருமான் மீது ஸ்ரீமன் மஹாவிஷ்ணு கோபம் கொள்ள, சிவபெருமான் அவரை சமாதானம் செய்து, ஸ்ரீமன் நாராயணருக்கு கலியனை அழிப்பதற்கு தேவையான அனைத்து வித அதிகாரத்தையும் கொடுத்து கலியை அழிப்பதற்கான வகையை பார்க்க சொன்னார். ஆயுதங்கள் ஏந்தி கலியை அழிக்க முடியாது என்பதால் தெய்வ லோகம், வைகுண்ட லோகம், பிரம்ம லோகம், சிவ லோகம், பர லோகம், யம லோகம் மற்றும் சொர்க்க லோகம் ஆகிய மேல் லோகம் ஏழில் உள்ளவர்களை சான்றோர்களாக பூமியில் பிறவி செய்தார்.
சப்தகன்னியர்களின் தவத்தை காண செல்லுதல்
ஸ்ரீமன் மஹாவிஷ்ணுவை திருமணம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் தவத்தில் நின்று கொண்டிருந்த சப்த மாதர்களை காண சிவபெருமான், ஸ்ரீமன் மஹாவிஷ்ணு, அன்னை உமையவள் என அனைவரும் கானகம் சென்றனர். அவர்களது தவத்தை மெச்சிய ஸ்ரீமன் மஹாவிஷ்ணு, பூமியில் தான் ஸ்ரீமன் வைகுண்டராக அவதரிக்கும் போது உங்களை திருக்கல்யாணம் செய்வேன் என்றும், அப்போது நீங்கள் பெற்றெடுத்த குழந்தைகளை தருவேன் என்றும் உறுதி கொடுத்து பூலோகத்தில் சான்றோர் வழியில் பிறவி செய்தார்.
அன்னை மகாலட்சுமி மகரமாக வளருதல்
ஸ்ரீமன் மஹாவிஷ்ணு அன்னை மகாலட்சுமியை அழைத்து ‘மனதிற்கினிய மாதே, நான் மாயக் கலியை அழித்து சான்றோர்களின் துயர் தீர்க்க பூமியில் அவதரிக்க உள்ளதால் நீயும் திருச்செந்தூர் சென்று திருப்பாற் கடலில் மகர சிலையாக வளர்ந்து, எனது வரவுக்காக காத்திரு’ என்றார். அதைக் கேட்ட அன்னை மகாலட்சுமி மகிழ்ந்து சம்மதிக்க, கடற்கரைக்கு சென்ற அன்னையை கடல் அலைகள் வந்து கடலுக்குள் அழைத்துச் செல்ல, அவளும் திருச்செந்தூர் கடலுக்குள் ‘மகரமாக’ வளர்ந்தாள்.
கலைக்கோட்டு முனிக்கு உபதேசம்
துவாபர யுகம் முடிந்தப் பின்பு முன்னர் நடந்த ஒரு நிகழ்வை பற்றி ஸ்ரீமன் நாராயணர் சிவபெருமானிடம் கூறினார். ‘பஞ்ச பாண்டவர்களுக்கு உதவி செய்து விட்டு அவர்களை அரசாணையில் அமர்த்திய பிறகு புவியில் நான் இருக்கும் போது, நீசக் கலியன் பிறந்து வந்ததைக் கண்டு பதறி நடுநடுங்கி ஓடினேன், அப்போது என்னைக் கண்ட கலைக்கோட்டு மாமுனி (ரிஷ்யசிருங்கர்), ‘என்ன காரணத்தினால் இப்படி ஏய்த்திளைத்து ஒடுகின்றீர்கள்?’ என்று கேட்டான், அதற்கு நான் அவனிடம் “கலியன் வந்து விட்டதால் அவனின் கண் காணாமல் போகிறேன்” என்று சொன்னேன். அதற்கு அந்த கலைக்கோட்டு முனி என்னிடம் ‘இப்போது ஓடுகின்ற தாங்கள் இவனை அழிப்பதற்கு எப்போது வருவீர்கள்?’ என்றுக் கேட்டான். அதற்கு அந்த முனியிடம் நான் சொன்னேன் “வஞ்சக நீசக் கலியை நான் முன்னின்று கொல்ல நியாயமில்லை, ஏனென்றால் கலியனோட கண் கண்டால் பவம்சூடும், அவனுடைய உயிரை ஜெயிக்க எவரால் முடியும்?, முன்னின்று கொல்ல மூவராலும் அரிது?, எனவே பின் நின்று அவன் அவனால் பேசாதே மாழவைப்பேன். அந்த மானீசன் கண்முன்னே எந்தவிதமான வல்லமையும் காட்ட மாட்டேன், ஆனால் நில்லாமல் நின்று அந்த கலி நீசனை அறுப்பேன், எவ்விதமான அற்புதத்தையும் கலி நீசனின் கண்முன்னே செய்யமாட்டேன், மேலும் அவனுக்கு எந்த விதமான உபகாரங்களையும் செய்யாமல், ஒன்றும் அறியாமல் நின்றிடுவேன்” என்று கூறினேன்.
நான் இந்த வகையில் சூட்ஷமமான முறையில் கலியுக அவதாரத்தை எடுப்பதால் எனது வைகுண்ட அவதாரத்தை யாரும் எளிதில் கண்டு கொள்ள மாட்டார்கள், ஆகையால் சிலர் ஸ்ரீமன் நாராயணனாகிய நான் வந்துவிட்டேன் என சொல்வார்கள், பின் இல்லை அவர் வரவில்லை என்று கூறுவார்கள். ஆனாலும் எப்படியும் என் மீது நம்பிக்கை கொண்டோர் ஸ்ரீமன் நாராயணனாகிய நான் தான் ஸ்ரீமன் வைகுண்டராக அவதரித்துள்ளேன் என்பதை அறிந்து கொள்வார்கள். அவ்வாறு என்னை அறிந்தவர்கள் நன்றாக வாழ்வார்கள், அறியாதவர்களோ அழிந்து போவார்கள்’ என்றும், ‘நான் சாஸ்திரத்திலும் அறிந்து கொள்ள முடியாதவர், நான்கு வேதத்தையும் தாண்டி நிற்பவன், தவம், அன்பு, அறம், வணங்குதல், வம்பு, நம்பிக்கை, ஞானம், கிரியை, யோகம், கனவு, போன்ற எந்தவிதமான முறைகளிலும் அடங்காமல் இருந்து கலியை அழிப்பேன்’ என்று கூறினேன்.
திருவாசகம் எழுதி பூலோகம் அனுப்புதல்
ஸ்ரீமன் மஹாவிஷ்ணு கலியுகத்தில் அவதரிக்க எண்ணி உள்ள உண்மையை அனைவரும் தெரிந்து கொள்ளவும், அதை படிக்கும் தீயவர்கள் திருந்தவும் அனைத்து நிகழ்வையும் திருவாசகம் எனும் பெயரில் அன்னை சரஸ்வதி தேவி கூறிட, அவற்றை ஸ்ரீமன் நாராயணர் தன் கைப்பட எழுதி அனுப்பினார். தாம் அனுப்பிய திருவாசகத்தை மனதில் கொண்டு தமது நடத்தைகளை பூலோகத்தார் திருத்திக் கொள்ளாமல் இருந்ததால், ஆதி வேதமதில் கூறி உள்ளபடி தான் பூமியில் அவதரிக்கும் காலம் கனிந்து விட்டதா? என்று வேத வியாசரை அழைத்து ஸ்ரீமன் நாராயணர் கேட்டார். அந்த மகரிஷியும் ‘மண்ணளந்த பெருமானே, நீங்கள் ஸ்ரீமன் வைகுண்டராக அவதரிக்கும் காலம் கனிந்து விட்டது, அதற்கான தக்க தருணம் இதுவே’ எனக் கூறினார்.
தேவர்களுடன் ஸ்ரீமன் மஹாவிஷ்ணு திருச்செந்தூர் வருதல்
ஸ்ரீமன் மஹாவிஷ்ணு தாமே வைகுண்டராக அவதரிப்பதற்காக சிவபெருமான், அம்மை உமையவள் முதலான சங்கத்தாருடன் கயிலையங் கிரியில் இருந்து கிளம்பி திருச்செந்தூருக்கு வந்தார். அங்கு ஸ்ரீமன் நாராயணரின் அவதாரத்துக்காக காத்திருந்த ரிஷ்யசிங்கர் எனும் கலைமுனியும், பதஞ்சலி எனும் ஞானமுனியும் இறைவனின் பாதத்தில் விழுந்து வணங்க, அவர்களை தன்னோடு வைத்துக் கொண்டார்.
முன்னர் தேவலோகத்தில் வாழ்திருந்த சம்பூர்ணதேவன் எனும் முத்துக் குட்டி அவர்கள் (அகிலத்திரட்டில் சம்பூர்ணதேவன் என்றே கூறப்பட்டு உள்ளது), பூமியில் தாமரையூரில் பிறந்து தனது கர்மக்கடனை கழித்து, இறைவனால் ஆட்கொள்ளப்படும் நிலையை பெற்றிருந்தார். ஸ்ரீமன் மஹாவிஷ்ணு அவரிடம் தாம் ஸ்ரீமன் வைகுண்டராக அவதரிக்க வரும் போது ஆட்கொள்வதாக முன்னர் கொடுத்திருந்த வாக்கின்படி, அவரை இரு முனிவர்கள் மூலம் வரவைத்து அருள் புரிந்து ஆட்கொண்டார்.
(குறிப்பு: அய்யா நாராயணரால் திரு. முத்துக்குட்டி அவர்கள் ஆட்கொள்ளப்பட்டதும் அவரின் வரலாறு இத்தோடு நிறைவடைகிறது)
ஸ்ரீமன் மகாவிஷ்ணு வைகுண்டராக அவதரித்தல்
கலியுகத்தில் அவதரித்து கலியை அழிப்பதுக்காக ஆயிரம் கோடி சூரிய பிரகாசமாய் திருச்செந்தூர் கடலுக்குள் ஸ்ரீமன் மஹாவிஷ்ணு சென்றார். அங்கு தனது வரவை எதிர்பார்த்து மகரமாக வளர்திருந்த அன்னை மஹாலட்சுமியிடம் சென்றார். மாமோக சக்கரத்தை ஸ்ரீமன் மாயவனார் அவள் மீது வீச பதினாழு லோகமும் மயங்க, அன்னை சீதை மயங்க, மகரத்துக்கள் சென்ற ஸ்ரீமன் நாராயணர் தனது மகனை நினைக்க, தமக்கு தானே மகனாய் அவதரித்தார். ஸ்ரீமன் நாராயணர் எடுத்த பத்தாவது அவதாரமே ஸ்ரீமன் வைகுண்டர் அவதாரம் ஆகும்.
(குறிப்பு: ஸ்ரீ முருக மற்றும் ஸ்ரீ நரசிம்ம அவதாரம் போன்றே இந்த அவதாரத்திலும் ஒரு தாயின் வயிற்றில் ஸ்ரீமன் மஹாவிஷ்ணு பிறக்கவில்லை. எனவே இந்த அவதாரத்தில் இறைவனுக்கு பூலோக தாய் தந்தை என்று யாரும் கிடையாது)
கொல்லம் ஆண்டு (மலையாள ஆண்டு) 1008, மாசி மாதம் 20-ஆம் தேதி (1st March C.1833) வெள்ளிக்கிழமை அன்று தனக்குத் தாமே குழந்தையாக அவதரித்த மகாவிஷ்ணு விஞ்சை என்னும் உபதேசத்தை வெளிப்படுத்திவிட்டு கடற்கரைக்கு வந்தார்.
தேவர்கள் அபயமிடுதல்
அய்யா வைகுண்டராக அவதரித்து கடற்கரைக்கு வந்த ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் காலில் விழுந்து வணங்கிய தேவர்கள் சான்றோர் மக்களை காக்க வேண்டி அபயமிட்டனர். ஸ்ரீ வைகுண்டர் தேவர்களிடம் “பதற்றம் அடைய வேண்டாம், சான்றோர்களை காப்பேன்” என ஆறுதல் மொழி கூறினார்.
கடற்கரையில் காத்திருந்த சம்பூர்ண தேவனின் (முத்துக்குட்டி) தாய்க்கு அவள் காணும் வகையில் ஒரு சடல உருவைக் காட்டி, தான் ஸ்ரீமன் நாராயணனாகிய நானே வைகுண்டமாய் அவதரித்துள்ளேன் என்பதை சொல்லி, தாம் எவ்வாறு மகரத்துக்கள் அவதரித்தேன் என்பதையும் காட்டி அந்த தாய்க்கு பாற்கடலின் பதத்தையும் கொடுத்துவிட்டு தெச்சணம் நோக்கி புறப்பட்டார்.
கங்கையை வரவழைத்த அய்யா “நங்கையே என்னுடைய நாமத்தை சொல்கின்ற நல்ல அன்பர்களின் பாவத்தை போக்கிடு, சூல்புத்தியுள்ள வம்பருக்கு கேடு செய்” என சட்டமிட்டு தெச்சணம் எழுந்தருளினார்.
முருகப் பெருமானுக்கு சட்டம்
தனது முந்தைய அவதாரமான முருகனுக்கு சட்டம் சொல்லுவது போல் ஆயிரத்து எட்டு அண்டங்களில் வாழ்கின்ற தேவர்களுக்கும் காணிக்கை, கைகூலி, காவடி, பூசை புனக்காரம், பெலி, தீபம், தேரோட்டம், சப்பிரம், கைகாட்டல், ஆலத்தி, கைவிளக்கு, ஆராட்டு, சாலத்தீ, சலப்பூ, கொழுந்து, மஞ்சனை, ஓமமுறை, தீபரணை, ஆபரணம், திருநாள் போன்ற எதுவும் ஏற்க கூடாது என சட்டம் உரைத்தார். நீர் உரைத்த சட்டமதில் நாங்கள் தவற மாட்டோம் என கந்தன் பணிய, “இது நிசமானால் உன் கோபுரத்தின் வட மூலையில் பின் கோபுரம் காண பிளந்துப் போடு எனவும், உலகோர் உண்டு பண்ணிய செல்லா சிலையை தெற்கு முகமாக திருப்பிவிடு எனவும், உலகோர் அறிய ஒரு வாயிலை அடைத்து கண்மூடி கவிழ்ந்திருப்பார்” பகவான் அய்யா கூற, முருகப் பெருமான் சம்மதித்தார். பின் தேவர்கள் திருப்பாட்டு ஓதி ஆடி பாடி வர வைகுண்டர் திருச்செந்தூர் தலம் விட்டு தெச்சணம் நோக்கி சென்றார்.
வைகுண்ட சுவாமி மனுச் சொரூபம் எடுத்தல்
ஸ்ரீ வைகுண்டர் தருவை கரையில் வைத்து மக்கள் காணும் வகையில் மனுச் சொரூபம் எடுத்து நால்திசையும் மேவி தெச்சணம் நோக்கி நடந்தார். அப்பொது அவரை தாங்கிவர தயாரான பூதத்தை விலக்கி விட்டு “நீங்கள் என்னை சுமந்தால் நீங்கள் செய்யும் யுக சோதனையின் போது நான் கேட்க முடியுமா? எனவே வேதாளா உங்களின் சேவை எனக்கு வேண்டாம் பஞ்சவர்களான பாண்டவர்கள் உண்டு எனக்கு” என்று சொல்லி நடக்கலானார். கலியைக் கண்டு அஞ்சி கானகம் சென்ற நல்ல உயிரினங்களும், இதுவரை கடலுக்குள்ளேயே மூழ்கி கிடந்த வெண் சங்குகளும், பல உயிரினங்களும் சமுத்திரத்தில் இருந்து வெளிவந்து ‘அய்யா தர்மப் பெருமானே, நீர் வந்ததினால் இந்த உலகுக்கு நன்மை உண்டாக வேண்டும்’ என்று கூறியபடி ஸ்ரீ வைகுண்டரை வணங்கின.
நல்ல குலதெய்வங்கள் நாட்டுக்குடைய நாராயணர் வந்ததால் இனி வம்பருக்கு அழிவும், நல்ல மனதோருக்கு வாழ்வும் வந்தது என்றது. மேலும் இனி கலியனின் சட்டம் குலைந்து போக போகிறது என சொல்லி, இன்று முதல் எங்களுக்கு மக்களிடமிருந்து கேட்க எந்தவகையும் இல்லை, எனவே வைகுண்டரை கண்டுக் கொள்ளுங்கள் என கூறி மறைந்தது. பின் அம்மை பகவதிக்கு உபதேசித்துவிட்டு, தாம் தெச்சணத்தில் தவரு இருக்க போகிறேன் என கூறி வழி நடந்தார்.
நிருபம் எழுதுதல்
தவத்துக்குரிய இடமான தாமரையூர் பதியை அடைந்த அய்யா, கலை மாமுனியை அழைத்த அய்யா, தன்னுடைய வைகுண்ட அவதார வருகையையும், உபதேசத்தையும் திருவாங்கூரை ஆண்டு வந்த கலிநீச மன்னன் அறியும் வகையில் ஒரு நிருபம் எழுதி அனுப்புமாறு உத்தரவிட்டார். உடனடியாக கலை மாமுனியும் அரசனுக்கு மட்டும் அல்ல அனைத்து மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் “ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டமாய்த் அவதரித்து தர்மம் நிச்சயத்து, காணிக்கை, கைக்கூலி யுகம் சோதித்து ஒரு குடைக்குள் ஆள்வதற்காக நாராயணர் பண்டாரமாக எளிய கோலத்தில் தெச்சணத்தில் பள்ளிக் கொண்டு, தர்மமாக தண்ணீராலே சகல நோயையும் தீர்த்து, சாம்ப சதாசிவ சாமி மூவரும் ஒன்றாய் சமைந்து உயர்வு கொண்ட சப்த மாதர்களின் வழியிலே வைகுண்டமாய் பிறந்திருக்கின்றார் என்கின்ற செய்தியை அனுப்பினார்.
மாமரத்து அடியில் மாயோன் அமர்தல்
தாமரைப் பதியில் உள்ள ஒரு மாமரத்துக்கு கீழ் முன்பு அர்ஜூனன் சிவனிடம் பாசுபதம் பெற்ற புனித இடத்தில் அய்யா அமர்ந்தார். வீர நாராயணரும் தெச்சணத்தில் பள்ளிக் கொண்டார் என தேவர்கள் ஆரவரமிட, திசை எட்டில் உள்ள பேய்களை விலகி இருக்க உபதேசித்த அய்யா 10 மாதம் வரை உலக நடப்பையும் ஒரு குடைக்குள் உலகை ஆள இருப்பதையும் பாடிக் கொண்டிருந்தார். இதனைக் கண்டவர்கள் உண்மையை அறியாமல் ஏதோ பைத்தியக்காரனின் புலம்பல் என கூறினர். உலக நடப்பு அனைத்தையும் பாடி முடித்தப் பின் உகத்தை சோதிப்பதற்காக தவம் இருக்கலானார்.
வைகுண்ட சாமியின் தவம்
கலியுகத்தின் அழிவுக்காக முதல் தவசும், ஜாதி வேற்றுமைகள் மறைந்து நல்ல வகை சாதிகளுக்காக இரண்டாம் தவசும், சப்த கன்னியர் மற்றும் அவர்களின் பிள்ளைகளான சான்றோர்களின் மேன்மைக்காக மூன்றாம் தவசு செய்தார். ஒவ்வொரு தவசுக்கும் இரண்டு இரண்டு ஆண்டுகள் வீதம் மொத்தம் ஆறு ஆண்டுகள் சிவபெருமானை நோக்கி தவம் இருந்தார்.
பண்டாரமாக தெட்ஷணத்தில் தவமிருந்த ஸ்ரீ வைகுண்டர், ஐம்பத்தாறு தேசத்து மக்களும் தன்னை நாடி வர வேண்டும் என நினைத்த உடனேயே சாணார், இடையர், வணிகர், நானாதா காவேரி, நல்ல துலுபட்டார், சூத்திரர், பிரம்மா தோல்வணிகன், பறையன், உதிரா நிசன், உழவன், குரவன் கம்மாளநீலன், கருமறவன், பரவன், வெம்ம நாசுராணி, சக்கிலியன், வேகவண்ட இடையர், என 18 சாதி மக்களும் தங்களுக்கு நல்ல காலம் பிறந்து விட்டது என எண்ணி சற்றும் தயக்கம் இன்றி, அனு தினமும் ஆயிரக்கணக்கில் அய்யாவை நாடி சுவாமி தோப்பில் வந்து குவிந்தார்கள்.
வைகுண்டரின் அற்புதம்
உலகை ஒரு குடையின் கீழ் ஆள ஸ்ரீ மஹாவிஷ்ணு பண்டாரமாக தெச்சணத்தில் இருந்ததினால் வெளி உலகையே பார்க்க முடியாமல் தத்தமது வீட்டு அறைகளில் முடங்கிக் கிடந்த பெண்கள், கிழவர், முடவர்கள், ஊனர்கள் என இளம் வயது முதல் முதியோர் வரை அனைவரும் ஸ்ரீ வைகுண்டரிடம் வந்தார்கள். அய்யாவை தேடி வந்தவர்களது தீராத நோய்கள் விலகின, குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தைகள் பிறந்தன, பிறவிக் குருடர்களுக்கு கண் பார்வையும், உமைகளுக்கு பேசும் திறனும் வந்தது. அனைத்து ஜாதி மக்களும் ஒரே கிணற்றில் குளித்து குடித்து ஜாதி பேதமின்றி ஒன்றாய் இருந்தார்கள்.
பேயை எரித்தல்
பரம்பொருள் ஸ்ரீ வைகுண்டராக அவதரித்து தெச்சணா பூமிக்கு வந்ததுமே பேய் பிசாசுகளை ஒதுங்கி இருக்குமாறு உத்தரவிட்டிருந்தார். ஒராண்டு ஒன்றரை ஆண்டு கழித்து யுக சோதிக்கையில் ஸ்ரீ வைகுண்டரிடம் மக்கள் பேய்களின் அட்டகாசங்களை பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்று புலம்பினார்கள். ஸ்ரீ வைகுண்டரும் அந்த தீயப் பேய்கள் செய்த அனைத்து அட்டூழியங்களையும் ஆராய்ந்து பார்த்து, அவைகள் செய்வது தவறு தான் என்பதால் அவற்றை அழிக்க எண்ணினார். சற்றும் தாமதிக்காமல் நருட்களின் மேல் பேயை ஆட வைத்து, அவற்றை மலையில் போய் எரிந்து போகும் படி செய்தார்.
மாந்திரீகத்தை அழித்தல்
தீய மாந்திரீகவாதிகளின் கொட்டத்தை அழிக்க நினைத்த வைகுண்டர், பில்லி, சூனியம் செய்து மக்களை பயமுறுத்தி வந்த மந்திரவாதிகளின் மீது காட்டு மிருகங்களை ஏவி விட்டார். எவ்வளவு முயன்றும் மாந்திரீகத்தால் விலங்குகளை கட்டுப்படுத்த முடியாமல் போனதால், அந்த மந்திரவாதிகள் ஒரு குறி சொல்லும் குறத்தியின் ஆலோசனைப்படி வைகுண்டரின் பாதத்தில் அடிபணிந்தனர். ‘இனி மேல் மாந்திரீகம் செய்ய மாட்டோம்’ என்று வைகுண்டரிடம் ஆணையிட்டனர். மந்திர தந்திர சக்திகளை மந்திரவாதிகள் இழந்ததால் மக்கள் பயமின்றி வாழலாயினர்.
வைகுண்ட சுவாமியின் உபதேசம்
‘ஏக பரம்பெருளே தஞ்சமென்று’ ஒரு புத்தியாய் உறுதியான மன நிலையுடன் இருக்குமாறும், இறைவனாகிய தனக்கு பயந்து வாழ்வது அல்லாமல் பொய்கொண்ட மற்றோருக்கு பயப்பட தேவையில்லை என்றும், காணிக்கை காவடி போன்றவை தேவையில்லை என்றும், கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தினை வீணாய் செலவு செய்ய வேண்டாம் என்றும், அவனவன் தேடும் முதலை அவனவன் வைத்து ஆண்டுக் கொள்ளுங்கள் என்றும், எவருக்கும் இனி பதறி மலைய வேண்டாம் என்றும் போதனை செய்தார்.
திருவாங்கூரை ஆண்ட கலிநீச மன்னனின் சுசீந்திரம் வருதல்
ஸ்ரீ வைகுண்டரின் உபதேசங்களாலும், வழிகாட்டுதலினாலும் அற்புதங்களினாலும் அனைத்து மக்களும் பயன் அடையத் துவங்கினர். ஸ்ரீ வைகுண்டரின் தவத்தின் பயனாக தாழ்த்தப்பட்டு, ஒதுக்கப்பட்டு கிடந்த மக்கள், மெல்ல மெல்ல தலை நிமிர்ந்து வாழ துவங்கினர். இந்நிலையில் சுசீந்திரத்துக்கு நகர் சோதனைக்கு வந்த மன்னன் தன்னுடைய மந்திரியிடம் “மந்திரியே! பெரும் மன்னர்களால் ஆளப்பட்டு வந்திருந்த நம் நாடு இப்போது ஆங்கிலேயனுக்கு அடிமையாக இருந்தாலும், நான் சொல்வதையே இங்குள்ள மக்கள் கேட்பார்கள். ஆதலால் எனக்கு எதிரி யாரையாவது இந்த நாட்டில் உண்டானால் கூறிடு’ என்றான்.
கலியரசன் கூறியதைக் கேட்ட அமைச்சன் மன்னனிடம் ‘மன்னா, உங்களுக்கு எதிரியாக எவரையும் இப்பூமியில் நான் பார்க்கவில்லை. ஆனால் நம் சட்ட திட்டங்களை மாற்றி அமைக்க இன்னொருவன் இன்னொரு வழிமுறையை தேர்ந்தெடுத்துள்ளான் என்பது தெரிகின்றது. நமக்கு வரி கொடுத்து, நமக்கு தொண்டு செய்து வரும் பெரும் எண்ணிக்கையுடைய சாணார் இனத்தில் பிறந்த ஒருவன் ‘உலகைப் படைத்த நாராயணனாகிய தாமே வைகுண்டமாக அவதரித்தேன் என்றும், பூமியெல்லாம் ஒருகுடைக்குள் ஆள்வேன் என்றும், ஆகாத்தப் பொல்லாரை எல்லாம் அழித்துப் போடுவேன் என்றும் கூறுகிறான்” என கூறினான்.
அதைக் கேட்ட கலியரசன் மந்திரியைப் பார்த்து ‘மந்திரியே கீழ் சாதியில் உள்ள ஒருவன் இப்படி சொல்வதில் ஏதோ ஒரு சூட்சமம் உள்ளது, எனவே இதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்’ என்று கூறினான். ஆராய்ந்து பார்த்த அவர்கள் சாஸ்திரம் தெரிந்த ஒரு ஜோசியனை வரவழைத்து கேட்கலாம் என முடிவு செய்தனர்.
மன்னன் ஜோதிடனிடம் “எனது தர்ம ஆட்சியில் எனக்கு எதிரிகள் யாரேனும் உண்டா என்பது பற்றி கூறுவாய்” என்றான். உடனே அந்த ஜோதிடனும் சாஸ்திரங்களை நன்கே ஆராய்ந்து பார்த்தப் பின் அரசனை நோக்கி ‘தரும முடி வேந்தே, நான் கூறுவதை கருணை கூர்ந்து, அன்புடன் கேட்பீராக. கலியின் தோஷமானது ஏழு மண்டலங்களையும் தாண்டி பூமி முழுவதிலுமே பரந்து விரிந்துள்ளது. எனவே அனைத்து தெய்வங்களுக்கும் மேலான ஸ்ரீ மஹாவிஷ்ணு, மிகுந்த கோபங் கொண்டு பூமியில் பிறந்து, கலிதோஷத்தை தருமத்தின் மூலம் அழித்து, நாட்டை தர்ம பூமியாக்கி, ஆட்சி முழுவதும் ஒரே குடைக்குள் கொண்டு வர, மானிடப் பிறவி எடுத்து, ஸ்ரீ வைகுண்டர் என்னும் பெயர் சூட்டி, தவசு இருந்து, நல்லோர்களை தன் வசப்படுத்தி, அவர்களை வலிமை மிக்கவர்களாக்கி, சாகா வரங்களை தந்து, இவ்வுலகை ஆள வருவார் என்பதுதான் தற்போதைய நிலை என்பதைத் தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்று தெளிவாகச் கூறினான்.
அதைக் கேட்டு மகிழ்ந்த மன்னன் ‘ஜோதிடனே, நீ சொன்னது எல்லாம் சரிதான். ஸ்ரீ மஹாவிஷ்ணு மனித உருவில் ஸ்ரீ வைகுண்டர் என்ற பெயரில் பிறந்துள்ள இனம் எது என்பதை சுத்த ஜோதிடனாகிய நீ தெளிவுபட எடுத்து உரைப்பாயாக’ என்று கேட்க, ஜோதிடனும் ‘அரசே இன்ன ஜாதியில்தான் கடவுள் பிறப்பு எடுப்பார் என்று சொல்வதற்கு நான் முயன்றாலும் அது முடியாது. தெய்வங்கள் எடுக்கும் அவதாரமே பூமியில் உள்ளவர்களது நன்மைக்காக என்பதாகவே இருப்பதினால், அவர் எடுக்கும் பிறப்பானது பொறுமைக் குணமுள்ள குலமாகவும், உயர்வான பாரம்பரியம் மிக்க குலமாகத்தான் இருக்கும் என்பதற்கு மேல் வேறு எதையும் என்னால் தெளிவாக கூற முடியவில்லை, அது சம்மந்தமாக என்னிடம் மீண்டும் மீண்டும் கேள்வி கேட்டு வேலை வாங்காமல் இத்துடன் விட்டு விடுங்கள்’ என்று கூறி அரசனை வணங்கி நின்றான்.
ஆனால் ஜோதிடன் கூறியவற்றை ஏற்க மறுத்த மன்னன் “ஸ்ரீ மஹாவிஷ்ணு இப் பூமியில் வந்து பிறக்க வேண்டும் என்ற நியதி இருந்தால் போற்றி, நம்பூதிரி, பிராமணர் என்ற உயர் குடியில் பிறப்பெடுக்காமல் தாழ்ந்த சாதியான சாணார் குலத்திலா அவதரிப்பார்? ஸ்ரீமன் வைகுண்ட சுவாமி என சமைந்தது எல்லாம் ஏமாற்று வேஷமாகவே தெரிகின்றது’ என்றதோடு “வைகுண்ட சுவாமி என்னும் அந்த சாணானை பிடித்து ஒரு நொடியில் என் முன் கொண்டு வர வேண்டும்” என்று மந்திரிக்கு உத்தரவிட்டான்.
மன்னனின் உத்தரவை ஏற்றுக் கொண்டு மந்திரிகள் கிளம்பியபோது, அப்போது அங்கே அமர்ந்திருந்த யாதவ குலத்தை சேர்ந்த பூவண்டர் அய்யா இறைவன் என்பதை எடுத்துக் கூறியும் அதை ஏற்க மறுத்த மன்னன் அய்யாவை சிறைப்பிடிக்க தனது படையை அனுப்பினான். படைகள் வருவதை அறிந்த ஸ்ரீ வைகுண்டர் நல்ல மக்கள் யார்? நீசர்கள் யார்? என்பதை அறிவதற்காக தான் முன்பு அவதரித்த பாற்கடலை நோக்கி ஓடினார். அதனைக் கண்ட நல்ல மக்கள் சிவசிவா என்று அய்யாவை பின் தொடர்ந்து போனார்கள், ஆனால் நீச பாவிகளோ இவன் கள்ள சாமி என்றும், உண்மையானவனாக இருந்தால் பயந்து ஓடுவானா? இத்தனை நாள் இவனை நம்பியதும் வீணாய் போச்சு என்று திட்டினர். கடலுக்குள் சென்று தந்தையாகிய ஸ்ரீமன் நாராயணரிடம் சென்ற மகனாகிய ஸ்ரீமன் மகாவிஷ்ணு இனி நடக்க வேண்டியவற்றை விஞ்சையாக பெற்று மீண்டும் தவமிருந்த இடத்தில் வந்து அமர்ந்தார்.
கலிப்படைகள் சுவாமி தோப்பை அடைதல்
கௌடன் தலைமையில் கலிப்படைகள் தன்னை கைது செய்ய வந்து சேரும் முன் தமது அருகில் நின்று இருந்த தம் மக்களை அன்புடன் அழைத்து “நீங்கள் அனைவரும் சற்று விலகி பொறுமையைக் கடைப் பிடியுங்கள், நான் அவனை வெற்றி கொண்டு மீண்டும் இங்கு வரும் போது உங்களை என் அருகில் அழைத்துக் கொள்ளுவேன்’ என்று கூற அவர்கள் விலகி நின்றார்கள்.
ஸ்ரீ வைகுண்டர் தவமிருந்த தாமரையூர் பதியை சுற்றி வளைத்த கௌடன் தன் கையிலிருந்த கொடுமையான சாட்டையை சுற்றிச் சுற்றி வீசியபடி அங்கே கூடி நின்ற சாணார் இன மக்களை அடித்து விரட்டினான். அதைக் கண்டு வெகுண்டு போன மக்களும், அந்த நீசப் பாவியின் வம்சத்தையும், அரச கிரீடத்தையும் ஒரு நொடியில் இப்போதே தூள் தூளாக்கி அவர்களையும் அடித்துக் கொன்று விட வேண்டும் என்ற துடிப்புடன் கோபமாக எழுந்தனர். ஆளுக்கு ஒருவன் என்று அனைவரும் சேர்ந்து தாக்கினால் அவர்கள் தாங்க மாட்டார்கள் என்று நினைத்தவாறே ஸ்ரீ வைகுண்டரை மனதில் நினைத்துக் கொண்டு, தத்தம் வேட்டிகளைத் கட்டி, எஞ்சி இருந்த ஆடையை அதன்மேல் இறுக்கிக் கட்டிக் கொண்டு நீசர்களின் படையினரை அழிக்க வேண்டும் என்னும் ஒரே சிந்தனையோடு ஆக்ரோஷமாக கிளம்பினார்கள்.
அரச படையினரை தாக்கச் கிளம்பிய சான்றோர்களை தடுத்து நிறுத்தி அய்யா ‘அன்பானவர்களே, நான் சொல்வதைக் கேட்டு நீங்கள் பொறுமையாய் இருங்கள், பொறுத்தவரே பூமியை ஆள்வார், இவர்களை நொடியில் அழித்து ஒழிப்பது எனக்கு ஒரு பெரிய காரியம் அல்ல, என் குல மக்களை கலிநீசர்கள் துன்புறுத்துவதைக் கண்டே அவர்கள் அனைவரையும் அழிக்க நான் வந்தேன், ஆகவே எனது அன்பு இதயத்தில் குடிகொண்டுள்ள என் அருமை மக்களே, நீங்கள் அனைவரும் பொறுமையாக இருக்க வேண்டும், உங்கள் அனைவரையும் இந்த பூலோகத்தை ஆள வைப்பேன், என் கட்டளையை ஏற்று அமைதியாய் விலகிச் செல்லுங்கள்’ என்று கூறினார். உடனே சான்றோர்கள் இனி நாம் என்ன செய்வோம் என்று கூறி கைகளைப் பிசைந்து, தங்களின் கையைக் கடித்துக் கொள்வதுமாக கோபத்தை வெளிப்படுத்தினாலும், அய்யா கூறியபடி விலகி நின்று, தாங்கள் பெரிய மனத்தைக் கொண்டவர்கள் என்பதை நிலை நாட்டினார்கள்.
அதைக் கண்டு தங்களை எதிர்ப்பதற்கு யாருக்கும் தைரியம் கிடையாது என்று தவறாக எண்ணிக் கொண்ட கௌடனும் மனம் மகிழ்ந்து, ஸ்ரீ வைகுண்டரை நெருங்கி தான் கொண்டு வந்திருந்த கயிற்றினால் அவரை இறுக்கிக் கட்டி, தன் கையிலிருந்த துப்பாக்கியால் உடம்பில் இடித்து, அவிழ்ந்த கட்டை மீண்டும் இறுக்கிக் கட்டி, அவரைக் கீழே தள்ளி உதைத்தான். அவரது நீண்ட தலை முடியை தனது கையால் பிடித்து இழுத்து தாறுமாறாக ஆட்டியபடி, கடல் அலை இங்குமிங்கும் அலைவது போல, ஸ்ரீ வைகுண்டரை ஆட்டி ஆட்டி துன்புறுத்தினான். அவனை சுற்றி இருந்த படையினர் ஸ்ரீ மஹாவிஷ்ணு இவரா என்று கூறி எள்ளி நகைத்தார்கள். ஆனால் எல்லா உயிர்களையும் படைத்த ஸ்ரீ மஹாவிஷ்ணுவாகிய ஸ்ரீ வைகுண்டர் வாய் பேசாமல் தலையை கவிழ்ந்த வண்ணம், கண்களை மூடிக் கொண்டு, உள்ளத்துக்குள்ளே மகிழ்ச்சியோடு அவர்களுடன் நடந்து சென்றார்.
இவ்வாறு ஸ்ரீ வைகுண்டர் கைது செய்து தாமரைப் பதியிலிருந்து சுசீந்திரத்தை நோக்கி சென்று கொண்டிருந்தபோது, ஸ்ரீ வைகுண்டரின் மீது அதிக பாசம் கொண்டிருந்த சான்றோர்கள், அவர் நடந்து சென்ற பாதையெங்கும் நின்று கொண்டு கண்ணீர் விட்டு அழுதனர். அவர்கள் சுவாமியை நோக்கி ‘சுவாமியே, இந்த ஏழைகளுக்காக மனம் இறங்கி எங்கள் சாணார் இனத்தில் வந்தீர், கோழைக் குலத்தை சேர்ந்த நீசன் தங்களைத் துப்பாக்கிக் கொண்டு அடிக்க வந்து விட்டானே. நீசப் பாவிகளினால் நாங்கள் பட்ட துன்பங்களை அறிந்து, எங்களை காப்பாற்ற வந்தீரே, இனி நாங்கள் அழிந்து போவோமே’ என்று கதறி அழுதனர்.
அவர்களது அழுகை சத்தத்தைக் கேட்ட, ஸ்ரீ வைகுண்டர், கன்றுக்கு இரங்கும் பசுவைப் போன்று அவர்களை நோக்கி ‘மாமுனிவன் ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் குழந்தைகளே, நீங்கள் மனம் கலங்கி அலைய வேண்டாம், மலையின் மீது ஏற்றிய தீபத்தைப் போன்று என்றைக்கும் நீங்கள் சுதந்திரமாக வாழுங்கள், கன்றுக் குட்டிக்குத் தேவையான பாலை தரும் பசுவைப் போலவும், கண்னைப் பாதுகாக்கும் புருவம் போன்றும் உங்களிடம் இருந்து என்றும் உங்களை பாதுகாத்து ஆட்சி செய்வேன்” என்றார். மேலும் “இந்த நீசப் பாவியின் கைகளினால் அடி வாங்க வேண்டும் என்பது எனது விதியாக உள்ளது, இறுதியில் அழியப் போகிறவன் கலிநீசப் பாவிதான் என்பதினால் இனி வரும் காலம் எனக்கு நன்மை தருவதாகவே அமைந்து இருக்கும், கலியை வெற்றி கொண்டு, தர்ம பூமியை நாம் ஆட்சி புரிவோம் என்பதை நம்புங்கள் என் குழந்தைகளே, உங்களின் விதிப்படி நீங்கள் அனைவரும் நன்மைகளையே அடைவீர்கள், எந்த வகையிலும் உங்கள் வாழ்க்கை தாழ்வு இல்லாமல் சிறப்புடன் இருக்கும் என்பது சத்தியம்’ என்று மகிழ்ச்சியுடன் எம் பெருமான் கூறி விட்டு நடக்கத் துவங்கினார்.
கலிநீச மன்னன் முன் அய்யாவை நிறுத்துதல்
சுசீந்திரத்தில் கலிநீச மன்னன் முன்பு நிறுத்தப்பட்ட ஸ்ரீ வைகுண்டரை பரிசோதிக்க நினைத்த மன்னன், தன்னுடைய மோதிரத்தை யாருக்கும் தெரியாமல் தனது கைக்குள் மறைத்து வைத்தான். பின் தனது கைக்குள் இருப்பதை கூறும்படி கேட்ட, அனைத்தையும் அறிந்த ஸ்ரீ வைகுண்டர், இப்போது நாம் சரியாக சொல்லிவிட்டால் நாம் யார் என்று இந்த நீசகுலங்கள் கண்டு பிடித்து விடுவார்கள், இதனால் நமக்கு தொண்டு பண்ணியிருக்கும் சான்றோர் மக்களின் துயரம் மாறாது என எண்ணி, “எல்லாம் படைத்த ஏகன் கிருபையென, அல்லா நினைத்தபடி ஆகுமென’ உரைத்தார்”. மோதிரம் என்பதை அய்யா சொல்லாததால் மகிழ்ந்த மன்னன், ‘சுவாமி ஏன்று சொல்லி இவன் ஏமாற்றுகிறான்’ என கூறி, இவனை விட்டு வைத்தால் நமக்கு ஆபத்தானவனாகி விடுவான் எனக் கருதிய கலியரசனும் வைகுண்டரை கொல்வதற்காக சறடனிடம் அனுப்பினான். சறடனோ, ஸ்ரீ வைகுண்டருக்கு வஞ்சகமாக, பாலில் ஐந்து வகைகளிலான விஷத்தைக் கலந்து, அதை பால் என்று கூறி அவருக்கு அருந்துவதற்குக் கொடுத்தான். ஆனால் பச்சை நிற மேனியனான காலனையே காலாலுதைத்தக் கடவுளார் மகிழ்ந்து அதை மகிழ்ச்சியோடு வாங்கி குடித்தார்.
ஸ்ரீ வைகுண்டரை சுண்ணாம்பு களவாயில் வைத்து நீற்றினான், அடுக்கி வைத்த விறகுக் கட்டையில் தீ மூட்டி அதில் அய்யாவை நடந்து வரச் சொன்னான். ஆனால் விஷத்தின் தன்மையோ, சுண்ணாம்புக் களவாயோ, தீயோ ஸ்ரீ வைகுண்டரை எதுவுமே செய்யவில்லை. எத்தனை செய்தும் அவரை ஒன்றும் செய்ய முடியவில்லையே எனக் கோபமுற்ற கலிநீசன், ஏழைகளின் நலனையே மனதில் வைத்துக் கொண்டு இருந்திருந்த தர்மராஜர் கைகால்களில் குதிரை சேணம் பூட்டுவதை போல விலங்குகளை பூட்டி திருவனந்தபுரத்துக்கு நடத்தியே அழைத்து வரச் சொன்னான். திருவனந்தபுரம் எல்லையை அடைந்ததும் ஸ்ரீ வைகுண்டர் இந்த ஊரைக் கண்டு எத்தனை நாளாகிவிட்டது என மனதில் நினைத்துக் கொண்டே இருக்க அவரை கால் விலங்குகளோடு சிங்காரத் தோப்பு சிறையில் வைத்தான் கலிநீசன்.
நாட்டினரின் நன்மைக்காக, கலியன் தன் காலில் போட்டு இருந்த விலங்கோடு சிறையில் அமைதியாக இருந்தார் ஸ்ரீ வைகுண்டர். சோலைகளில் ஆனந்தமாக பறந்து கொண்டும், பாடிக் கொண்டும் இருக்கும் பறவைகள் ‘சுவாமி வந்து விட்டாரென’ ஆனந்தப்பட்டு, அங்கு பறந்து வந்து, மெல்லிய கீதங்களை எழுப்பிய வண்ணம் இருந்தன. மன்னன் புலியை பிடித்து வரச் செய்து, வைகுண்டரை கொல்ல நினைக்க, சேவகர்கள் பெரிய புலியை பிடித்து வந்தனர். அதைக் கண்டு பதறிய சான்றோர்கள் ‘சுவாமி இனி நாங்கள் என்ன செய்வோம்’ எனக் கதறியபோது, அமைதியாக ஸ்ரீ வைகுண்டர் “இந்த கலி காலத்தில் விதியை நிர்ணயிக்க வந்தவரே நான்தான், நானே பட்சிகள், பறவைகள், பலவித ஜீவ ஜந்துக்கள் மற்றும் உயிரினங்களை படைத்தவன்” ஆவேன் என்றார். இந்த உலகை அளந்த பெருமானும், இந்த உலகைப் படைத்தவனும், உலகெங்கும் வியாபித்து உள்ளவனும் நானே தான் அலையோசை எழுப்பும் கடலில் பெரும் நாகத்தின் மீது துயில் கொண்டுள்ள ஸ்ரீ விஷ்ணுவும் நானே, சிவன், பிரம்மா மற்றும் விஷ்ணு எனும் மும் மூர்த்திகளின் அவதாரமான நானே அனைத்து உயிர்களுக்கும் ஜீவன் ஆவேன், ஆகவே இந்த கலி நீசர்களுக்கு என்னை அடையாளம் தெரியாவிட்டால் என்ன ஆகி விடும்?, நான் படைத்த விலங்கினத்திற்கு என்னை தெரியாதா?, ஆகவே என்னையே சதா மனதில் நிறுத்தி கலங்கும் சான்றோர்களே, நீங்கள் மனம் தளர வேண்டாம்” என ஆறுதல் கூறினார்.
புலிக்கு பட்டினிப் போட்டு மூன்றாம் நாள் புலி இருந்த கூட்டுக்குள் அய்யாவை தள்ளினர். அய்யா இறைவனே என்பதை அறிந்து கொண்ட புலி பசியோடு இருந்தாலும் அவர் அருகில் சென்று அவர் பாதத்தை தொட்டு வணங்கியபடி இருந்தது. அதைக் கண்ட மன்னனின் படை ஆட்கள் ‘ஓஹோ, புலியை குத்தி எழுப்ப வேண்டும் போலும்’ எனக் கருதி அங்கிருந்த தலையாரியிடம் ஒரு ஈட்டியை எடுத்து அதனால் புலியை குத்துமாறு கூற, அந்த புலியோ ஈட்டியை பிடித்து இழுத்தது. தலையாரி புலியிடம் இருந்து பலத்துடன் ஈட்டியை இழுக்க, புலி ஈட்டியை விட்டுவிட பறந்து வந்த ஈட்டி அங்கிருந்த ஒரு பிராமணன் உடலில் பாய அவனது குடல் சரிந்து வெளியே விழ, அவனது உயிரும் அங்கேயே பிரிந்தது.
அதைக் கண்டு மிரண்டு போன மன்னன் தலையாரியை கடிந்து கொண்டு’ நான்கு திசை மக்களும் ஒரு பிராமணனின் கொலையை ஏற்றுக் கொள்ள மாட்டார்களே. அது ஆயிரம் பசுக்களைக் கொன்றதை விட அதிக குற்றம் அல்லவா. அந்தணனைக் கொன்ற பாவத்தின் மூலம் நம் நாட்டிற்கல்லவா பெரும் பாவத்தை ஏற்படுத்தி விட்டோம். நாம் நடத்திய அனைத்து சோதனைகளும் தோல்வி அடைந்து விட்டதே’ என மனம் ஒடிந்து போய் சோர்ந்து நின்றான். மன்னனின் படை வீரர்களோ இவர் நிச்சயமாக மனிதராக இருக்க முடியாது. அனைவரும் கூறுவது போல இவரே கலியுகத்தை முடிக்க வந்துள்ள கடவுளின் அவதாரமாக இருக்கலாம் என எண்ணலாயினர்.
அய்யாவை விடுதலை செய்தல்
சில நாட்கள் சென்ற பின்பு மன்னன் இந்த ஸ்ரீ வைகுண்டரை என்ன செய்யலாம் என்று விசாரிக்கும் போது துவராயுகத்தில் ஆயர்க்குடியில் அவதரித்து கிருஷ்ணருக்கு அன்னமும் பாலும் அருந்த கொடுத்த தூய கோமான் ஒருவன் வைகுண்டரின் சிறப்பை எல்லாம் எடுத்துரைக்க, மன்னனும் கைச்சீட்டு ஒன்றை எழுதி வாங்கிக் கொண்டு வேறு வழியின்றி உலகளந்த ஸ்ரீ மஹாவிஷ்ணுவாகிய ஸ்ரீ வைகுண்டரை விடுதலை செய்தான்.
அப்போது ஸ்ரீ மஹாவிஷ்ணு ‘நீ போகச் சொன்னால் உடனே நான் போக வேண்டுமா? நான் நிச்சயித்த நாளில் மட்டுமே போவேன்’ என்று சொல்லி சிறையிலே இருந்தார். விஞ்சையில் பெற்ற நாள் வந்தவுடன் ஸ்ரீ வைகுண்டர் சான்றோர்களிடம் ‘எனது குழந்தைகளே, நல்லவர்களே, வரவிருக்கும் மாசி மாதம், பத்தொன்பதாம் தேதி, நாம் இங்கிருந்து கிளம்பி, கிழக்கு திசை நோக்கிப் பயணம் புறப்படப் போகிறோம், எனவே, நீங்கள் எல்லாரும் மலை மீதுள்ள விளக்கு ஒளிபோல் பிரகாசிக்கும் வீரம் பொருந்தியவர்களாக இருக்க தயாராக இருங்கள்’ என்று கூறினார். இதைக் கேட்டு மகிழ்ந்த சான்றோர்கள் நமது துன்பம் தீர்ந்தது என்று நிம்மதி அடைந்து தொட்டில் போன்ற ஒரு பல்லக்கை கட்டி, அதில் அய்யாவை அமர வைத்து, தூக்கிக் கொண்டு கிழக்கு திசை நோக்கி செல்லத் துவங்கி தாமரையூர் நற்பதியாகிய சுவாமிதோப்பை அடைந்தனர்.
துவையல் தவசு
ஸ்ரீ வைகுண்டர் தம் மக்களை மேன்மையான தவவலிமை பெற்றவர்களாக்க எண்ணி, துவையல் தவசு என்ற ஒரு தனித் தன்மை வாய்ந்த தவத்தை செய்யும் எண்ணத்தைக் கொடுத்தார். அய்யாவின் பேரில் அன்புக் கொண்ட மக்கள் தங்ககளின் ஆடு மாடு, வீடு, நிலம் அனைத்தையும் அரை கால் விலைக்கு விற்று விட்டு குழந்தை, கிழவன், கற்பினி என குடும்பத்தொடு பல நூறு பேர்கள் தவசில் கலந்துக் கொள்ள வந்தனர். ‘மூன்று வேளை குளித்து துணி துவைத்து, உச்சி ஒரு நேரத்தில் மட்டும் கடல் நீரில் சமைத்த பச்சரிசி கஞ்சியை மணல் தரையில் போட்டு உண்ண வேண்டும், கடல் நீரை மட்டுமே குடிக்க வேண்டும், காலை, மாலை இருவேளையும் உகப் படிப்பும், மதியம் உச்சிப் படிப்பும் படித்து இறைவனை வணங்கவதே துவையல் தவசு ஆகும். குருவாக நிற்கும் பரம்பொருளிடம் தஞ்சம் அடைய வேண்டும் என்று எண்ணி, துவாரயம் பதியின் வடக்கு வாசலில் அமைந்த வாகைப் பதியில் சான்றோர்கள் சிறப்பாக தவசை நடத்தி வரலானார்கள். அவர்களின் தவத்தின் உறுதியை சோதிப்பதற்காக தெள்ளு, மூட்டை, நண்டு போன்றவற்றை ஏவிவிட்டு கடிக்க வைத்து மிகுந்த இன்னலைக் கொடுத்தார். ஆனால் மக்கள் அவைகள் கடிக்கும் போது அவற்றைக் கொல்லாமல் வளர்ப்பாரை போல் தடவி எடுத்து விட்டனர். பின் அவர்களின் தேகத்தில் வங்கையும் சிரங்கையும் வரவைத்து சோதித்தார். அய்யா கொடுத்த அனைத்து சோதனைகளை தாங்கிக் கொண்ட மக்கள் ஈசன் செயலெனவே தவத்தை செய்து வந்தனர்.
இப்படியாக ஆறு மாதங்கள் வாகை நற்பதியில் இருக்கையில் சான்றோர் ஒருவர் கனவில் தோன்றிய ஸ்ரீ மஹாவிஷ்ணு, அந்த இடத்திற்கு நேர் தெற்கு திசையில் முட்டப்பதி நாடு எனும் ஒரு பதி அமைந்துள்ளது என்றும், தீயவர்களை அழித்து வெற்றிக் கொடி நாட்டி சுற்றி மதில் கோட்டை கட்டி முகுந்தன் முன்பு ஆட்சி புரிந்த முட்டப்பதியில் சென்று தவத்தை தொடர அறிவுறுத்த, அவர் அனைவருக்கும் தெரியப்படுத்த, அனைவரும் அவர் கூறியதை ஏற்றுக் கொண்டு முடடப்பதிக்கு சென்றார்கள்.
அனைத்து மக்களும் எந்த வித ஏற்றது தாழ்வுகளும் இல்லாமல், தத்தம் உறவினர்களோடு காலை, மதியம், மாலை என மூன்று வேளையும் ஸ்ரீ மஹாவிஷ்ணுவை துதித்து, அவரது அருளினால் நம் சந்ததியினர் இந்நாட்டை ஆள்வது நிச்சயம் என்ற மன நிலையில் தவம் செய்து கொண்டு இருந்தார்கள். முட்டப்பதி தவத்தில் நல்ல நீர் குடித்து, நல்ல தண்ணீரில் அவித்த அரிசியை சமைத்து, காய் கனி வகையோடு சாப்பிட்டு தவத்தை செய்தனர்.
அதைக் கண்ட கலிநீச சாதியினர் “பனையேறும் சாணார்கள் இப்படி மூன்று வேளையும் குளித்து சுத்தமாக, வெள்ளை வெளீர் என துணிகளை துவைத்து, உடுத்தி, பொன்னிற தேகம் பெறுவது வேதன் விதித்த விதிப்படி ஸ்ரீ மஹாவிஷ்ணு அவர்களிடம் இருப்பதாலே” என எண்ணி வியந்தார்கள், “எப்பொது மீன் வரும் என காத்திருந்து, அதை வாங்கி, அரைகுறையாக சமைத்து வயிறு வளர்க்கும் சாணார்கள் இப்போது போயிலையும் மறந்து, பெண் ஆணும் ஒர் மனதாய் தவத்தில் இருப்பது முன்விதி வந்ததாலே” என்றனர், “ஓதி உணவருந்த தெரியாத சாணார்களின் துணியை விட போற்றி, நம்பூரி, பிராமணர்களின் துணி மங்களாக இருக்கிறது, சாணார் உடுக்கும் ஆடைகள் சூரியன் போல பளபளக்குதே, பிராமண சூத்திரர்கள் இவர்களுக்கு நித்தல் காய்கனிகள் சுமக்கின்றனர், ஸ்ரீ மஹாவிஷ்ணு இவர்களிடம் அவதரித்ததினால் பனையேறும் சாணார்களுக்கு நல்ல காலம் பிறந்து பவுசும் வந்து விட்டதே” என அதிசயப்பட்டார்கள்.
துவையல் தவசுக்கான கால இலக்கு நிறைவடைந்து விட்டதால் தவசிகளை வீட்டுக்கு அனுப்பிவிட எண்ணிய அய்யா, அவர்களின் மனதில் சொப்பனம் போல் எண்ண வைத்து வீட்டுக்கு செல்ல உத்தரவுக் கொடுத்தார். நாம் அனைத்து சொத்துக்களையும் விற்று விட்டி தவசுக்கு வந்துள்ளோம், எனவே நாம் வீட்டுக்கு சென்றால் சொந்த பந்தங்கள் சிரிப்பார்கள், நமது தவமும் இல்லாமல் போய்விடும் என எண்ணிய தவசிகள் திரும்பி செல்வதை விட கடலில் விழுந்து பதவி பெறலாம் என்று தவத்தை தொடர்ந்தனர். நாம் விடைக் கொடுத்த பின்னும் போகவில்லையே என எண்ணிய அய்யா சாப்பிடும் அன்னத்தின் அளவை குறைத்தார். அப்போதும் அவர்கள் தவசை தொடர, வைசூரியை அய்யா ஏவ அதில் சிலர் மடிந்தனர். இதனால் நடுங்கிய மக்கள் நாதன் சொல்படி வீட்டுக்கு செல்வோம் என் முடிவி செய்து அதற்கு முன்பாக அய்யாவிடம் தாங்கள் பட்ட துன்பத்தை எடுத்துரைப்பதற்காக அய்யாவிடம் வந்தனர்.
“உங்கள் குருவாகிய என்னை மறக்காமல் என் நினைவோடு இருந்தவாறு வாழ்க்கையை நடத்தி வந்தால் அனைத்து வித நன்மைகளையும் நீங்கள் பெறுவீர்கள். என் அருளால் உங்களுடைய உணவுக்கு பஞ்சம் இருக்காது. என் பெயரால், என் புனித திருநாமத்தை அணிந்து கொண்டால் நீங்கள் செல்லும் இடங்கள் அனைத்திலும் உங்களுக்கு பெருமை கிடைக்கும்’ என்று கூறி அவர்களை அவரவர்களது வீடுகளுக்கு திருப்பி அனுப்பினார். சான்றோர் அனைவரும் ஸ்ரீ வைகுண்டரை போற்றி துதித்தப் பின் தத்தம் ஊர்களுக்கு கிளம்பிச் சென்றார்கள். ஊர் திரும்பிய தவசிகளுக்கு அய்யா மிகப்பெரிய சிறப்பை கொடுத்தார்.
சப்த மாதர்களை வைகுண்டர் திருக்கல்யாணம் செய்தல்
முன்னர் தம்மை மணக்க வேண்டும் என்றெண்ணி, தவமிருந்து பிறப்பெடுத்த தெய்வ குல மாதர்களை தமது மாயா ஜால வித்தையினால் ஸ்ரீ வைகுண்டர் அங்கு வரவழைத்தார். சாஸ்திரக்கன்னி கமலக்கன்னி, மோகக்கன்னி, மூலக்கன்னி, கடுங்சக்தி, தெய்வக்கன்னி, அரிமடவை எனும் அந்த ஏழு மாதர்களும் வந்தவுடனே, காவி உடை உடுத்தி, உச்சிக்கொண்டை கோர்த்து, உத்திராட்சஷ மாலை அணிந்து, கையதிலே மாத்திரைக் கோலும், கமூக்கூட்டில் (கை இடுக்கில்) பிரம்பும் ஏந்திக் கொண்டு, நெற்றியில் வெள்ளை நாமமும், உயர்ந்த சுரைக்கூடுமிட்டு, துளசி மாலையும் அணிந்து மணக்கோலம் பூண்டு அந்த கன்னிமாருடைய கைகளை பற்றிக் கொண்டு, தன் கையில் வைத்து இருந்த தாலிகளை கட்டி திருமணம் செய்து கொண்டார். தாலிகளை கட்டும்போது ‘தர்ம பூமி செழித்து வளரட்டும். இவர்கள் கழுத்தில் கட்டும் இந்த தாலி அழிந்து போகாமல் என்றும் இருக்கட்டும், உயர்வான தரும யுகத்திலும் இது இருக்கட்டும். ஈசர் முதல் அனைத்து தெய்வங்களின் ஆசிகளையும் பெற்று இவர்கள் இவ்வுலகில் இருந்து வாழட்டும். பொறுமைக் குல சான்றோர்ககளும் செழிப்புடன் வாழட்டும்’ என்று வாழ்த்து கூறினார்.
மேலும் ஸ்ரீ மஹாவிஷ்ணு அம்மை மார்களிடம் கூறினார் ‘பெண்களே, இங்கு நான் ஏழு பெண்களுடன் திருமணம் செய்து கொண்டதை கேவலமாக நினைக்காதீர்கள். நான் திருமணம் செய்து கொள்ள வேண்டிய பெண்கள் இன்னும் நிறையவே இந்த பூமியில் உள்ளனர். அதனால் இவருடைய வேலையே திருமணம் செய்து கொள்வதுதானோ என்றும் நினைக்காதீர். அனைத்துக்கும் காரணம் உண்டு. இந்தப் பெருமை வாய்ந்த பழம் பெரும் பூமியை நீங்கள் அரசாள்வீர்கள் என்பது சத்தியம். ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் இரகசிய சூட்சமங்கள் பல கோடி உள்ளன. எனவே உங்கள் உள்ளம் சோர்ந்து விடாதபடி வாழ்ந்து வருவீராக’ என்றார். சப்த மாதர்களை வைகுண்டர் திருமணம் செய்த இடம் ‘தாமரையூர்ப்பதி’ என்றழைக்கப்படும் ‘சுவாமிதோப்பு பதி’ ஆகும்.
திருநாள் இகனை நடத்துதல்
எல்லாத் திசைகளிலுமுள்ள மேன்மை மிக்க சான்றோர்கள் நமது தாயாகிய தெய்வக் கன்னிகளை ஸ்ரீ வைகுண்டர் திருமணம் செய்து கொண்டு விட்டதினால் இனி நம் வாழ்வில் வளம் வரும் என்றும், நமது குலத்தை இனி எந்த வித துன்பங்களும் அணுகாது என்றும், ஸ்ரீவைகுண்டரின் மனதில் நம் மீது என்றென்றும் கருணை இருக்கும் என்றும் கூறியவண்ணம் ஸ்ரீ வைகுண்டரையும் சப்தக் மாதர்களையும் சான்றோர்கள் தொழுதனர்.
இந்நேரம் திருநாள் இகனையை ஞாயிற்றுக்கிழமை முதல் ஆனந்தமாய் நடத்த அய்யா எண்ணியதும் மக்கள் மகிழ்ந்து குடும்பத்தோடு வந்து திருவிழாவில் கலந்து கொண்டனர். அப்போது மாலுக்கு ஏற்ற பிச்சியும், பாலுக்கு தேவையான நெல்லும், சிறுமணியையும், வாழைக்கனி முதலிய கனியும், வெற்றிலை பாக்கும் கொண்டு வந்தனர். மேலும் பந்தலிட்டு பட்டால் மேல்கட்டு கட்டி அலங்கரித்து, கொழுந்து, பன்னீர், சந்தனம், கஸ்தூரி, சவ்வாது முதலிய வாசனையுடன், காய்கனிகள் தொங்கவிட்டு, மேள தாளத்துடன் குரவையிட்டு, வான வெடிகளுடன் ஞாயிராச்சை திருவிழாவை சிறப்பாக நடத்தினர்.
மகாலட்சுமியை அய்யா திருக்கல்யாணம் புரிதல்
திருநாள் இகனை மிக நடத்தி சப்த மாதர்களுடன் கூடி தன் திருவிளையாடலை புரிந்து மகிழ்ந்து இருக்கும் வேளையில், பொன்னான ஸ்ரீ மஹாவிஷ்ணுவும் அம்மை சீதா லட்சுமியை இகனை திருக்கலியாணம் புரிந்து அம்மையோடு இருந்தார். இப்படியாக பூமியில் திருவிளையாடல் புரிந்து வாழ்ந்து கொண்டிருந்த சமயத்தில் தமது மனைவிகளாகிய சப்த மாதர்கள் கேட்டபடி அவரவர் பெற்றெடுத்த குழந்தைகளான சான்றோர்களை அம்மைமார்கள் கையில் கொடுக்க வானோர் முதல் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
இப்படியாக தாமரையூர் நற்பதியாகிய சுவாமிதோப்பு பதியில் ஸ்ரீ வைகுண்டர் மனித இயல்புகளோடு தாம் மணந்திருந்த தேவியர்களோடு இருந்தபடி ஆதி ஆகம விதிப்படி பல்வேறு நாடகங்களை நடத்தியவண்ணம் வாழ்ந்து கொண்டிருந்தார்.
அம்பல பதிக்கு அய்யா எழுந்தருளுதல்
வைகுண்டர் திருச்செந்தூர் கடலில் அவதரித்து தெச்சணம் நோக்கி வரும் போது மூலகுண்டபதிக்கு சென்று, அங்கு சிவலிங்கம் தானமைத்து மண்ணுக்குள் மறைத்து வைத்துவிட்டு, தான் தன்னுடைய தவங்களை முடித்து சிறிது காலம் கழித்து ஏழு கன்னிகளையும் திருமணம் செய்து, பல தெய்வீக லீலைகளை நடத்திக் கட்டிய பின்னர் மீண்டும் வருவேன் என்று அந்த சிவலிங்கத்துக்கு வாக்குறுதி கொடுத்திருந்தார். அந்த வாக்குறுதிப் படி அங்கு செல்வதற்காக நாடகத்தை அரங்கேற்றிய ஸ்ரீ வைகுண்டர், பின் தம் மாதரோடும், மக்களோடும் மூலகுண்டபதிக்கு சென்றார்.
புனிதமான அம்பல பதிக்கு வந்தால் எல்லா விதமான தோசமும் நீங்கி நன்மையே நடக்கும், அந்த பதியை வேறெந்த பதியோடும் ஒப்பிட முடியாது என்று உறுதி கூறிய ஸ்ரீ வைகுண்டர், அனைவருடைய பூர்வ ஜென்ம வினைகளை எல்லாம் நீக்கி அவர்களோடு மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார். அய்யா வைகுடண்டர் அம்மையருடன் வெண்பட்டு அணிந்து செவ்வாய்க் கிழமை திருநாள் இகனையை நடத்தினார்.
வைகுண்டர் திருக்கல்யாணம்
தேவலோகத்தில் சிவபெருமானிடம் இருந்து பெற்ற வரத்தோடு கலியன் பூலோகத்திற்கு செல்லத் துவங்கியபோது ரோமரிஷி சிவபெருமானிடம் ‘அவனுக்கு எப்போது அழிவு ஏற்படும்’ என கேட்க, ஈசர் ‘அனைத்து தெய்வ தேவியர்களையும் வையகம் அறிய ஒருவர் மாயத் திருக் கல்யாணம் செய்து ஒருதலத்தில் வாழும் போது அது நடக்கும்’ என்றார். அதற்கு ரோமரிஷி ‘அவர்களை மணக்கப் போவது யார்?’ என்று கேட்க சிவபெருமான் ‘பொல்லாத கலியை அழித்து, நல்லோரை தேர்ந்தெடுக்க, ஸ்ரீ மஹாவிஷ்ணுவே, வைகுண்டராக அவதரிப்பதால் நாங்களெல்லோரும் அவர்குள்ளாவோம், நாங்கள் ஒரு பொருளாய் இருப்பதினால் திருமடந்தையர் யாவரையும் திருமணம் செய்யும் மன்னர் வைகுண்டரே” என்றார். ஈசர் அன்று ரோமரிசியிடம் சொன்ன வாக்கின் படியே, ஆதி ஆகம நூலின்படி கலியை அழித்திடும் காலம் வந்து விட்டதை உணர்ந்து கொண்ட ஸ்ரீ மஹாவிஷ்ணு, வல்லமை வாய்ந்தவளும் ஞான ஸ்வரூபியான தேவி பகவதி, உமையவள் பார்வதி, மண்டைக்காட்டாள் எனப்படும் சரஸ்வதி தேவி, வள்ளி தேவி, தெய்வானை தேவி ஆகிய அனைத்து தேவியர்களையும் கலி முடியும் முன்பே கலியுகத்தோர் முன்னிலையில் திருக்கல்யாணம் புரிந்திட வேண்டும் என மனதில் நினைத்தார்.
‘மூலகுண்டபதி’ என்றழைக்கப்படுகின்ற அம்பலபதியில் வைத்து எந்தெந்த நாமங்களில் தெய்வங்கள் அழைக்கப்பட்டனரோ அந்தந்த வேசம் எடுத்து அதற்குரிய பெண் தெய்வங்களை திருக்கல்யாணம் புரிந்தார். ஈஸ்வரனாக இருந்து அன்னை பகவதியையும், பிரம்மதேவராக இருந்து சரஸ்வதியின் அம்சமான அன்னை மண்டைகாட்டாளையும், முருகனாக இருந்து வள்ளி, தெய்வானையையும் இகனை திருக்கல்யாணம் செய்து கொண்டார். இப்படியான திருக்கல்யாணங்கள் மூலம் உலகில் பல பெயர்களில் இருக்கின்ற தெய்வங்கள் அனைத்தும் தாமே என்றும், ஏகப்பரம் பொருள் ஒன்றே என்பதையும் உலகிற்கு எடுத்துக் காட்டினார்.
அய்யா மக்களின் ஊர்களுக்கு செல்லுதல்
ஸ்ரீ அய்யா மகிழ்ச்சியோடு திருநாள் கொண்டாடி இருக்கையில் அங்கிருந்தவர்களிடம் “என் பெயரால் உங்கள் ஊர்களில் அமைக்க உள்ள நிழல் தாங்கல்களை (சிறு வழிபாட்டுத் தலங்கள்) கண்டு மனம் மகிழ விரும்புகிறேன்” என்றார். அய்யாவையும் அம்மைமார்களையும் மக்கள் தங்களின் வீடுகளுக்கு அன்பாக அழைக்க, அவைகளின் ஊர்களுக்கு சென்று அவர்களின் வீடுகளில் உணவருந்தி ஆகமத்தில் கூறி இருந்தபடியான லீலைகளை செய்து கொண்டு மகிழ்ச்சியுடன் இருந்தார்.
அப்போது மக்கள் அனைவரும் ஸ்ரீ மஹாவிஷ்ணுவிடம், ‘வாடிய பயிர் மழையை எதிர்பார்த்துக் காத்திருந்ததை போல, நீங்கள் எப்போது வந்து எங்களை காத்து அருள்வீர்கள் என காத்திருந்தோம் அய்யா என்றும், நாங்கள் செய்த பிழைகளை பொறுத்து அருளி எங்களை ஏற்றுக் கொள்ளும், நாங்கள் அனைவரும் உமது பொற்பாத திருவடியில் சரணடைந்தோம். நீங்களே எங்களை ஆண்டருளும் ஆதி தெய்வம்’ என போற்றி மகிழ்ந்தனர்.
பூமடந்தை திருக்கல்யாணம்
இன்னமொரு பெண்ணான பூமாதேவியானவள், பூமடந்தை என்ற பெயருடன் பிறந்து வாழ்ந்து கொண்டிருந்த சூரங்குடி எனும் ஊருக்கு மக்களுடன் சென்று உலகறிய திருக்கல்யாணம் செய்தார். ஸ்ரீ வைகுண்டர் பூமடந்தை அம்மையை திருமணம் புரிந்து திரும்பி வரும் வழியில் தேவர்கள் பூ தூவி வணங்கிய இடம் இன்று ‘பூப்பதி’ என்று அழைக்கப்படுகிறது.
வைகுண்டர் அவதாரத்தை நிறைவு செய்தல்
உலகளந்த ஆண்டவரான அய்யா வைகுண்டர் ‘இனி கலியுகத்தை அழித்து இதுவரை நடந்த ஏழு யுகக் கணக்கையும் கேட்டு (அவன் செய்த கொடுமைகளின் கணக்கை), அதற்கான தீர்ப்பும் கொடுத்து, கலிநீசனுக்கு கொடுத்து இருந்த வரங்களையும் பறித்து, அக்கிரமம் செய்தவர்களை அழித்து, அவர்களை நரகத்தில் தள்ளி, அந்த நரக வாசலையும் அடைத்து விட்டு, நல்லோர்களை எழுப்பி, அழிவில்லாத பல வரங்களையும் கொடுத்து, தர்மயுகம் என்னும் புது யுகத்தை உருவாக்கி, உலகை ஒரே ஆளுமையின் கீழ் கொண்டு வந்து, தர்மராஜனாக ஆட்சியில் அமர்ந்து கொண்டு, பதினாலு உலகத்தில் உள்ள அனைவரும் பார்க்குமாறு, நல்லவர்களை கொண்டே ஆட்சி அமைத்து, அனைவரையும் சரி சமமாக பாவிக்க வைத்து, துவாரயம் பதியை உதிக்க செய்து மேன்மையுடன் இருந்து அரசாள தான் வருவேன்’ என்றும், அதற்குண்டான காலத்தையும் அருளி ‘அனைவரும் குடும்பத்தோடு நலமாக வாழ்ந்து கொண்டு இருக்குமாறும்’, தான் மீண்டும் வருகிறேன் எனக் கூறி அருள் புரிந்தார்.
தன்னுடைய கலியுக அவதாரத்தை 18 நடத்திய பின்னர், தனது அவதார நோக்கம் முடிந்து விட்டதை உணர்ந்து வைகுண்டத்திற்கு செல்ல எண்ணினார். அதன்படியே தன்னை அழைக்க விமானத்தில் வந்திருந்த சத்குருவான சடாமுனியை அரைமணி நேரம் காத்திருக்க சொன்னார். பின் அன்பு மக்களிடம் உங்கள் உடலுக்குள் உள்ள இறைவனை நிலையாய் நினைவில் வைத்துக் கொண்டு, ஒற்றுமையாக வாழுங்கள் என்று அருள் புரிந்த பின் அவர்களின் கைகளைப் பிடித்துத் தமது திருமுகத்தோடு சேர்த்து அணைத்துக் கொண்டு, குழந்தைகளே, நான் மீண்டும் உங்களைச் சந்திக்க வருவேன். எனவே, நீங்கள் மனம் பதறாதபடி, சிதறாமல் (ஒற்றுமையாக) இருந்தவண்ணம், ஒருவருக்கொருவர் அனுகூலமாக இருந்து கொண்டு, மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வாருங்கள் என்று கூறி எல்லாருக்கும் திருநாமம் இட்டு அருள் ஆசி வழங்கினார். கொல்லம் ஆண்டு 1026 வைகாசி மாதம் 21-ஆம் தேதி (2nd June C.1851) திங்கள் கிழமை, பூருவ பட்சம், பூச நட்ஷத்திரத்தில் பகல் பன்னிரண்டு மணிக்கு தான் எடுத்த கலியுக அவதாரத்தை முடித்துக் கொண்டு மீண்டும் வைகுண்டத்திற்கு திரும்பிச் சென்றார்.
மேல்லோகத்தில் அய்யாவிக்கு வரவேற்பு
அய்யா வைகுண்டர் மீது வான்லோகத்தார் மலர் தூவ, தேவாதி தேவர்கள் திருப் பாட்டு பாட, தெய்வ ரம்பையினர் குரவை ஒலி எழுப்ப, முனிவர்கள் பெரும் மகிழ்வோடு டம்மான மேளங்களை முழங்கிட, ஆதி மறையில் கூறப்பட்டு இருந்ததை போலவேதான் வைகுண்டராஜர் உலகை ஆள வந்தார் என தெய்வ சக்திகள் போற்றி அவரை வரவேற்றனர். பின் அவருக்கு பெரிய கிரீடமும், செங்கோலும் கொடுத்து, ‘வைகுண்ட மாமுனி’ என பட்டமும் சூட்டி, சிங்க சிம்மாசனத்தில் அமர்த்தினார்கள். தர்ம சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு, மக்களை பரிசோதனைய செய்த பொய் வேசத்தை அனுப்பி, பொய் வேடதாரிகளிடம் மயங்காமல் தான் உரைத்த அகிலத்திரட்டு வேத நூலின்படி வாழ்ந்திடும் மக்களுக்கு தர்ம யுக வாழ்வு கொடுப்பதற்காக பார்த்துக் கொண்டிருக்கின்றார்.
தர்ம யுகத்தில் ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் ஆட்சி
அகிலத்திரட்டு வேதநூலின்படி, ஈஸ்வரர் முன்னர் கூறி இருந்தபடியே இக் கலியுகம் முடியும் தருவாயில் சிவபெருமானும், அன்னை உமா தேவியும், ஸ்ரீமன் மஹாவிஷ்ணுவும், அன்னை லட்சுமி தேவியும், பிரம்மாவும், அன்னை சரஸ்வதி தேவியும், வேத நல்மறையோரும் எல்லோரும் கூடியிருக்க ஸ்ரீமன் மஹாவிஷ்ணு அகண்டத்தில் தோன்றியதை எல்லாம் ஆராய்ந்து, தீயவைகளை முற்றிலும் அழித்ததும், மேன்மையான பூமி, வானம், வாயு (காற்று), நிலவு, மனிதர்கள், ஊர்வன, மற்றும் பிற உயிர் வகைகள் என நல்லவற்றை உள்ளடக்கிய அனைத்தும் தோன்றுகிறது. தான் முடிவு செய்துள்ளபடியே ஸ்ரீமன் மஹாவிஷ்ணு கடலை அழைத்து பூமியை புனிதப்படுத்த கூறுகிறார். அந்த கடலும் ஸ்ரீமன் மஹாவிஷ்ணுவின் ஆணையை ஏற்று உலகை சுத்தப்படுத்திய பின் அவரிடம் சரண் அடைந்கிறது. பூமி சுத்தப்படுத்தப் பட்ட பின்னர் ஸ்ரீமன் மஹாவிஷ்ணு எண்ணி உள்ளபடியே பொல்லாதவர்கள் அழிந்து, நல்லவர்கள் தோன்ற துவாரகா பொன்பதியும் துலங்குகிறது.
ஸ்ரீமன் மஹாவிஷ்ணு நடுத்தீர்ப்பு செய்தல்
ஸ்ரீமன் நாராயணர் முன்பாக குரோணியின் உயிர் கொண்டு வந்து நிறுத்தப்படுகிறது. அப்போது அவனிடம் ஸ்ரீமன் மஹாவிஷ்ணு அவனின் கணக்கை பார்த்து நடுத்தீர்ப்பு செய்கிறார். குரோணியிடம் ஸ்ரீமன் மஹாவிஷ்ணு ‘பாவியே, நான் உன்னை இதுவரை ஏழு பிறவிகள் செய்தேன், நீ தர்மத்தோடும், நற்பண்புகளோடும் வாழ்வாய் என்று எண்ணிப் பல வரங்களைத் தந்துப் பார்த்தேன், ஆனாலும் நீ திருந்தவே இல்லை, இக்கலியில் நானும் பண்டாரம் போல வந்திருந்து உலகறிய தீமைகளை செய்து வந்த வெறி பிடித்த பேய்களையும் எரித்தேன், தண்ணீர் கொடுத்தே அனைவருடைய சகல நோய் பிணிகளை தீர்த்தேன், தருமம் செய்தவர்களுக்கு புண்ணியங்களை கொடுத்தேன், காணிக்கை, கைக்கூலி கொடுத்த சடங்குகளை நிறுத்தி வைத்தேன், அனைத்து மானிடரையும் ஒரே தலத்தில் இருக்க வைத்து புத்திமதிகளை கொடுத்து மன உறுதியை தந்தேன், ஆனால் நீயோ நிலையற்ற புத்தியுடன் என்னை சிறை பிடித்து, விலங்கிட்டு கொடுமைபடுத்தினாய், ஆனால் நானோ பண்டாரமாக இருந்ததினால் உன்னை எதிர்க்கவில்லை” என்றார்.
மேலும் அய்யா அவனிடம் “ஸ்ரீ பண்டாரமாக” இருந்த நானோ மக்களிடம் இருந்து பிட்க்ஷையாக பெற்றுக் கொண்டவற்றை உண்டு மக்களின் குறை, பிணிகளை எளிமையாக தண்ணீர் தந்தே தீர்த்து வைத்து வந்தேன். ஆனால் நீ என்ன செய்தாய்? வஞ்சகமாக என்னை வந்து வாட்டி வதைத்தாய் என்பதை மறந்து விட்டாயா? முன்னால் நீ எந்த ஆண்டியையும் பண்டாரத்தையும் வதைக்க மாட்டேன் என்று எனக்கு சத்தியம் செய்ததையும் அதை மீறினால் நீயும் உன் குடும்பமும் அழிந்து போவீர்கள் என்று சொன்னதையும் மறந்து விட்டாயா? ஸ்ரீ பண்டாரமாக இருந்த என்னை வாழ விடாமல் அடித்தது நியாயமா? நீ சொன்ன சொல்லைக் காப்பாற்றினாயா? சொல்லடா, கொடியவனே. உன் முந்தைய ஏழு பிறவிகளிலும் நீ ஏதாவது ஒரு நன்மை செய்ததுண்டா? அனைவரையும் ரட்சிக்க எளிய குலத்தில் பிறந்து வந்த எனக்கு நீ செய்த அநியாயங்களை விவரிக்க ஆரம்பித்தால் ஈரேழு உலகமும் தாங்காதே” என்றார்.
மேலும் அய்யா “பாவி நீசனே, இன்று நீ ஏவி விட்ட உன் ஏவலாளிகளும், உனது ஆணவமும், யானைப் படைகளும், அரண்மனையும், உன்னுடைய யானைகளும் எங்கே போயின? அனைத்தையும் இழந்து நிற்கும் நீ, நரகத்திற்கு செல்ல வேண்டும் என்ற விதியை நீதானே தேடித் கொண்டாய். உன் விதியினால் மட்டுமே நீ உயிரை இழந்தாய். நீ பிறவி எடுத்த ஒவ்வொரு ஜென்மத்திலும் நானே உத்தமனாகப் பிறந்து உன் அனைத்து செயல்களையும் பார்தேன். அந்த ஏழு பிறவிகளிலும் என் பெயரை சொன்னவர்களை வாட்டி வதைத்தாய், தயவு தாட்க்ஷண்யம் காட்டாமல் சிறையில் அடைத்து கொடுமைகளை செய்தாய். அதனால்தான் முன் ஜென்மத்தில் உன்னிடம் ‘நீயே பிறந்து, உன் செயல்களினாலேயே நீ அழிவாய்’ என்று சூள் உரைத்தேன்” என்றார்.
மேலும் அய்யா “உன் விதிப்படியே நீயும் கலியன் என்ற பெயரோடு பிறந்து இந்த உலகில் வாழ்ந்தாய். உன் கர்ம விதிப்படியே உனது காலம் முடிந்து, உன் தீய செயலினாலேயே நீயும் மாண்டாய். ஆகவே பொல்லாதவனே, அன்று நான் உனக்கு கொடுத்த அரச பதவியையும், நான் கொடுத்த சக்கரத்தையும், நான் தந்த வரங்களையும் என்னிடம் தந்துவிட்டு நீ நரகத்துக்குப் போகின்றாய்’ என்றார். கலியன் செய்த பொய், பித்தலாட்டம், தீமைகள், ஜாலங்கள், வஞ்சகச் செயல்கள் என அனைத்தையும் ஆராய்ந்த பின் அவன் நரகத்துக்கு செல்ல வேண்டும் என்று ஸ்ரீமன் மஹாவிஷ்ணு தீர்ப்பு வழங்க, அதனால் கொடிய தீ மற்றும் கொத்தித் தின்னும் புழுக்கள் உள்ள நரகத்தில் அவனை தள்ளுகின்றது.
தர்மயுகம் தோன்றுதல்
தானே உலகை படைத்து, அதை காத்து வரும் ஸ்ரீமன் மஹாவிஷ்ணு, தர்ம யுகத்தை தோற்றுவிக்க முடிவு செய்ததும், தன் கையில் உள்ள ஒரு சங்கை எடுத்து ஊதுகின்றார். அந்த வெற்றி சங்கின் ஒசையோ ஈரேழு பதினாலு உலகிற்கும் கேட்கின்றது. அப்போது புதிய தர்ம பூமியில் நல்ல குணங்களை கொண்ட நல்லோர்களும், நல்ல மரம், செடி, கொடி வகைகளும், நற் குணம் கொண்ட மிருகங்களும், ஊர்வனங்களும் மற்றும் கற்பு நெறி மிக்க உயிரினங்களும் தோன்றியது. அவை அனைத்துமே பச்சை நிற மேனி கொண்ட ஸ்ரீமன் மஹாவிஷ்ணுவை வணங்கி நின்று, தர்மத்தின் பாதுகாவலர் வந்து விட்டதை பறைசாற்ற, நன்னெறி பறவைகள், நன்னெறி வேதங்கள், நியாய நெறி சாஸ்திரங்கள், கடல் ராஜர், அன்னை லட்சுமி மற்றும் அன்னை சரஸ்வதி தேவி போன்ற தெய்வங்களோடு சேர்ந்து வைகுண்ட சுவாமி எனப் போற்றப்படும் ஸ்ரீமன் மஹாவிஷ்ணு, அந்த பூமியில் மனம் திருந்தி வந்த மக்களுக்கு ஞானமும் தந்து வரங்களும் கொடுக்க, தர்ம பூமியில் அனைவரும் இளமையோடும், ஒற்றுமையோடும் இருக்க, பட்சி, பறவை மற்றும் பலவித ஜந்துக்களும் அச்சமின்றி வாழும் நிலையில், முப்பத்தி இரண்டு புண்ணியங்களை (அறம்) கொண்டு நிர்மாணிக்கப்பட்ட சிங்காசனத்தின் இருபுறமும், பொன்னிற மேனியில் ஜொலிக்கும் சீடர்கள் நின்று கொண்டிருக்க, அவருக்கு எதிரிகளே கிடையாது என்று கூறும் அளவில் துவாரகா நகர அரண்மனையில் பொன் சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு ஸ்ரீமன் மஹாவிஷ்ணு, ஆதி ஆகமத்தில் கூறி உள்ளபடியே பூலோகத்தில் தர்ம நெறி ஆட்சியை நிலைநாட்டி நல்லோரை ஆள வைக்கிறார்.