தர்மயுக முரசு மார்ச் 2022
அய்யாவின் அருளால் எந்நாளும் நன்னாளே
அசோக்குமார் அய்யா –009607704901,8012174032.
“பஞ்சமிர்தே என்னுடைய பாதை தப்பி நீ நடந்தால்”
“கொஞ்சம் கிளியே உன்னை கொன்னு எழுப்புவேன்”
மனம்போன போக்கில் செயல் படாமல் அகிலத்திரட்டு அம்மானை ஆகம நெறிமுறைப்படி செயல் பட்டு அய்யாவின் பிள்ளைகளாக வாழும் சான்றோர் அனைவருக்கும் அன்பு வணக்கம்.
மெய்யன்பர்களே: யுகாயுகங்கள் தோறும் நமது வாழ்வியலுக்கு வழிக்காட்டி,நம்மை நல்வழிப்படுத்த சனாதன தர்மம் நம்மோடு பயணித்து கொண்டு இருக்கிறது. இறைவன் தனது கடமைகளில் இருந்து ஒருபோதும் விலகியது கிடையாது. நமக்காக சனாதன தர்மத்தை வகுத்து கொடுத்து அந்த தர்மத்தின் படி நம்மை வாழ வைக்க அவனே இந்த மண்ணகத்தில் அவதரித்து வாழ்ந்து காட்டி ஒவ்வொரு யுகத்திற்கு ஏற்ப நமது சனாதன தர்மத்தை வகுத்து கொடுத்து, நமக்கு குருவாக சமைந்து வழிகாட்டுகிறான். எனவே நமது கடமை நமது சனாதன தர்மத்தின்படி வாழ்ந்து காட்ட வேண்டும்.
இக்கலியுகத்தில் கலியன் நமது சனாதன தர்மத்தையே அசைத்து பார்க்க வேண்டும் என்று எண்ணி நம்மில் அறியாமை மூடநம்பிக்கை, சாதிய வேற்றுமை போன்றவற்றை விதைத்தான்.எனவே நாம் நமது தர்மத்தை சரியாக கடைபிடிக்காமல் நம் தலைவனான இறைவனை அடைய வேண்டும் என்கிற எண்ணம் இல்லாமல் மனபோன போக்கில் செயல் பட ஆரம்பித்தோம். இதை சாதகமாக பயன்படுத்திய கலியன் பிறப்பால் ஜாதி என்கிற விஷத்தை விதைத்து நம்மை பிரித்தாண்டான்.
இப்படி சிதறடிக்கப்பட்ட நாம் நம் மனம்போன போக்கில் வாழ்வியல்களையும், வழிபாடுகளையும் செய்து பாவ கர்மாவை பெருக்கி பரமாத்மாவை அடைய எண்ணம் இன்றி வாழ்ந்தோம். இதை பார்த்த நாராயணர் தனது கடைசி அவதாரமாம் அய்யா வைகுண்ட அவதாரத்தில் “அகிலத்திரட்டு அம்மானை” என்னும் ஆகமத்தை தந்து நமது சனாதன தர்மத்தின் படி செயல்பட வழிகாட்டினார். எனவே இந்த கலியுகத்தில் நமது சனாதன தர்மத்தை அய்யாவழி என்று அன்பாக அழைக்கிறோம்.
இப்படிபட்ட நமது அய்யாவழிபாட்டில் வாழ்கிற நாம் ஒருபோதும் மனம்போன போக்கில் செயல்பட்டு பாவ கர்மாவை பெருக்காமல், ஆகமம் காட்டிய பாதையில் செயல்பட்டு அய்யாவின் பிள்ளைகளாக வாழ்ந்து காட்டுவோம்.ஆனால் சிலர் ஆகமத்தை சரியாக உணராமல் நாம் வாழ்வது கலியுகத்தில் என்பது கூட நினைக்கால், நமது மனத்தில் இறை வெளிப்பாடு, கலி வெளிப்பாடு என்கிற இரண்டு எண்ணம் இப்பதை மறந்து மனம் போன போக்கில் செயல்படுகிறார்கள். இது தவறு, இது நம்மை மட்டுமல்லாமல் நமது அடுத்த தலைமுறையினரையும் பாதிக்கும்.
மேலும் இவர்கள் இன்னும் ஒருபடி மேல் சென்று “அவரவர் நினைப்புக்கு தக்கதாக இருந்து விளையாடுவேன்”என்று அய்யா சொன்னதை தவறாக பொருள் கொண்டு நம் மனதில் தோன்றுவது எல்லாம் சரியே நாம் புறத்தில் பார்பது எல்லாம் சரியே என்று செயல்படுகிறார்கள். ஆனால் அய்யா அவ்வாசகத்தின் மூலம் என்ன சொல்ல வருகிறார் என்றால், நாம் மனம்போன போக்கில் செயல் படுகிறோமா அல்லது அவர் வகுத்து தந்த ஆகம நூல் முறைபடி செயல் படுகிறோமா என்று பரிட்சித்து பார்பார். எனவே மனம்போன போக்கில் போகும் போது முதலில் எல்லாம் சரி என்று தோன்றும் ஆனால் முடிவில் நமது இலக்கை அடைய முடியாமல் தவிப்போம்.
எனவே எந்த செயலாக இருந்தாலும் ஆகமம் என்ன சொல்கிறது என்று பார்த்து செயல் பட்டு உலகத்தின் முன்னோடிகளாக வாழ்ந்து காட்டி தர்மயுக வாழ்வு பெறுவோம்.
“கள்ளனிடம் நானிருப்பேன் பின் காட்டிக் கொடுத்திடுவேன்”
அகில கேள்வி
1.”மலரோ னடிபணிந்து வைகுண்டம் கேட்டிடவே” இவ் அகில வரியில் எம்பெருமான் மகாவிஷ்ணுவை “மலரோன்” என வர்ணிக்கும் காரணம் என்ன?
2. “செவ்வாக நின்று செப்பினா ரீசரிடம்” இவ் அகில வரியில் வரும் “செவ்வாக” என்னும் வார்த்தையின் பொருள் என்ன?
3.”கிளர்ந்த மொழிகேட்டுக் கிருபைகூர்ந் தேயீசர்” இவ் அகில வரியில் வரும் “கிளர்ந்த மொழி” என்பதின் பொருள் என்ன?
4.”சாலப் பொருளும் சம்மதித்தாங் காரமுடன்” இவ் அகில வரியில் “சாலப் பொருள்” என குறிப்பிட காரணம் என்ன?
5. “சிலையேற்றி யம்பைச் சிரித்து மிகத்தொடுக்க” இவ் அகில வரியில் வரும் “சிலையேற்றி யம்பைச்” என்பதின் பொருள் என்ன?
விடை .14-.ம்……… பக்கம் பார்க்கவும்
விடை ……….. பக்கம் பார்க்கவும்
உகப்பெருக்கு விளக்கம்
கா.த.லிங்கேஷ்- 9842679780
காட்டிக் கொடுக்க வருகிறார் எங்கள் அய்யா
சிவசிவ சிவசிவா அரஹர அரஹரா…”
‘தவம்’ என்பது உலக வழக்கின் படி ‘ஊனை உருக்கி உள்ளொளியை பெருக்குதல்’ என்று பொருள் படும். அதாவது,உடலுக்கு வேண்டிய உணவை குறைத்து, சுகத்தை தவிர்த்து ஆன்மீக வெளிச்சத்தை அதிகமாக்குதல் ஆகும். ஆனால் அய்யா நமக்கு சொன்னது, இல்லறத்தை விட்டு தவம் இல்லை என்பதே. எனவே இங்கு ‘தவம்’ என்பது இறை ஆகமமாம் அகிலத்திரட்டு அம்மானையை உள்ளன்போடு படித்து, அதன் மூலம் அகமகிழ்ந்து, அதில் கூறியுள்ள உயர்ந்த வாழ்வியலை கடைபிடித்து, மனைவி(கணவன்), மக்களோடு சேர்ந்து வாழ்தலையே குறிக்கும். ‘கும்பிட்டுத் தவம்’ எனும் போது, நீயே கதி! என்று அய்யாவிடம் சரணாகதி அடைந்து, உச்சிப்படிப்பு, உகப்படிப்பு நாமத்தை சொல்லி மேற்கண்ட தவ வாழ்க்கை வாழ்தலை குறிக்கும்.
‘கோட்டைத்தலம்’ எனும் பதம், இனி உதிக்கும் தர்மயுகத்தில் அய்யா அரசாட்சி செய்து அமரக்கூடிய வைகுண்ண்டபதியை குறிக்கும். இதுவே நாம் கடைசியில் கண்டடைந்து சேரவேண்டிய தலமாகும்.
பொருள் :-
வைகுண்டரை முழுமையாக சரணடைந்து, அவர் சொன்ன மாநூல்(அகிலத்திரட்டு) முறைப்படி வாழ்பவர்களுக்கு தர்மயுக பதி தலத்தை காட்டி கொடுக்க வருகிறார் மூலமுதற் பொருள் எங்கள் அய்யா என உணர்ந்து சிவசக்தியான உம்மையே போற்றுகின்றோம்! உம்மிடமே அபயமிடுகின்றோம்!
இருள் கொண்ட படை அறுக்க வருகிறார்
எங்கள் அய்யா சிவசிவ சிவசிவா அரஹர அரஹரா….”
‘இருள்’ எனும் பதம்,நல்லதையே நினைத்து நல்லதையே செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் கெட்ட எண்ணமே மேலோங்கி தவறான செயல்களுக்கு நம்மை உட்படுத்தும் மனநிலையை குறிக்கும். இதையே ‘கலிமாய நினைவு’ என்றும் ‘மன மாசு’ என்றும் சொல்லலாம். அகிலத்திரட்டு இதையே ‘நீசம் அடைந்த மனவீடு’ என்கிறது.
மேலும், நம் மனதில் ஒரு துர் எண்ணம் உருவானாலே அது பற்பல துர் எண்ணங்கள் உருவாகுவதற்கு காரணமாய் அமைந்து விடும். உதாரணமாக, ஒரு சிறு பொய் சொல்லி விட்டு,அதை மறைக்க இன்னொரு பொய் சொல்வது என தொடர்ந்து படுபாதக செயல்களை கூட பயப்படாமல் செய்யும் மனநிலை உண்டாகுவது. இதனால் தான் மேற்கண்ட விருத்தத்தில் ‘இருள் கொண்ட படை’ என்கிற பதம் எடுத்தாளப்படுகிறது. அதாவது ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுக்கும் மனமாசுக்களின் குவியலை குறிக்கும்.
பொருள் :- வைகுண்டத்தில் ‘வைகுண்டமாமுனி’ எனும் நாமத்தில் முடி சூடி ஆள்பவரே, பூலோக மக்களுக்காய் தன்னுடைய அளப்பரிய கருணையால் நம் மனதில் குடிகொண்ட துர் எண்ணங்களின் குவியலை அழிக்க வருகிறார். அவரே மூலமுதற் பொருள் அய்யா என உணர்ந்து சிவ சக்தியான உம்மையே துதிக்கின்றோம்! உம்மிடமே அபயம் இடுகின்றோம்.
துவரயம்பதி உதித்து அரசாள்வதும் எங்கள் அய்யா
சிவசிவ சிவசிவா அரஹர அரஹரா….”
‘ஆயிரம் நாட்டுக் கொடுமுடி’ என்பதற்கு இருவிதமாய் பொருள் கொள்ளலாம்.அதாவது,முன்பு கொந்தளப்பன் மற்றும் கோனாண்டி ராசன் போன்றோரின் கோட்டையை எப்படி அழித்தாரா அதுபோல இன்றைக்கும் தங்களை வல்லரசுகள் என்று பிரகடனப்படுத்தி கொண்டு, சிறிய நாடுகளை தங்களுக்கு அடிமை படுத்தி அதன் பொருளாதாரத்தை சுரண்டும் கொடுங்கோலர்களின் ஆட்சியை இல்லாமல் ஆக்கி என்று பொருள் கொள்ளலாம். மேலும் ‘நான்’, ‘எனது’ என்ற அகங்காரத்திற்குட்டு தானே மன்னன் என்றும் தலைவன் என்றும் அனைத்திலும் சிறந்தவன் என்று தனக்குத்தானே கற்பனையாக ஒரு முள் கீரீடத்தை சூடிக் கொண்டு சான்றோர் நிலைக்கு உயர முடியாமல் தவிப்பவர்களின் முள்முடியை உடைத்து எறிவது என்றும் பொருள் கொள்ளலாம். இங்கு ‘ஆயிரம்’ என்பது 1000 என்று எண்ணிக்கையை கொள்ளாமல், அதிகமான (அ) அனைத்துமான என்கிற மிகைபடுத்தும் பொருளாக கொள்வதே சிறப்பு.
பொருள் :-
பிற நாட்டு மக்களை துச்சமாக கருதும் கொடுங்கோல் ஆட்சியாளர்களின் அரச முடியையும், ‘நான்’, ‘எனது’ எனும் அகங்காரத்தால் மனிதர்கள் தங்கள் இதயத்தில் சூடிக் கொண்ட முள்முடியையும் உடைத்து தர்மயுக பதியை தோன்ற வைத்து அரசாள்வதும் மூலமுதற் பொருளான எங்கள் அய்யா என உணர்ந்து சிவசக்தியான உம்மையே போற்றுகின்றோம்! உம்மிடமே அபயம் இடுகின்றோம்!
தொடரும்…….
அகிலதிரட்டு அம்மானை மூலமும்,உரையும்
க.ரீகன் அய்யா- 96890418976
மத்திபமாய்க் காக்க வையென்றா ரீசுரரும்
நினைத்தோர்க் குறுதி நினைவிலறிவு தோன்றி
எனைத் தோத்திரங்கள் இளகாமல் வையுமென்றார்”
நித்திராதேவி என்பது உயிர்களுக்கு தூக்கத்தை கொடுக்க கூடியது ஆகும். ஒரு மனிதனுக்கு தூக்கம் என்பது அவசியம் எனும் போதும், அது அளவிற்கு அதிகமாக இருந்தால் சோம்பலாகவும், மந்தமாகவும் இருக்கும்.இதுவே ஒரு ராச்சியத்திற்கு பீடித்தால் அந்த நாடு வளர்ச்சி அடையாது. ஆகவே தான் சோழமன்னனுடைய நாட்டில் நித்திரை என்பது அளவாக இருக்கும்படி ஈசுரர் கட்டளை இடுகின்றார்.
“அதுபோலவே இறைவனை பற்றி அறிய வேண்டுமானால், இறைவனால் நமக்கு தரப்பட்டுள்ள புராண இதிகாசங்கள் மூலமாக அறிந்து கொள்ள முடியும். ஆனால் இறைவனை உணர்ந்து அவர் காட்டிதந்த வாழ்வியல்படி வாழ்ந்து அவனை அடைய வேண்டுமானால் அது அவர் நினைத்தால் மட்டுமே முடியும். நாம் என்னதான் வழிபட்டாலும், வழிபாடுகளை செய்தாலும், அவர் மனது வைத்தால் மட்டுமே அவர் காட்டிய சரியான வழியில் பயணித்து அவர் திருவடிகளை அடைய முடியும்.
இப்படி சோழனுடைய ராச்சியம் இறைவனுக்கு மகிழ்ச்சியை தரும்படி நீதி நெறியோடு ஆளப்பட்டு வந்ததால், யார் இறைவனை நினைத்து அவர் வழிப்படி நடக்க வேண்டும் என்று நினைக்கின்றார்களோ, அவர்களுக்கு அந்த நினைவு எப்போதும் உறுதியாக இருக்கும்படி செய்து மேலும் மேலும் இறைவனை அறிந்து கொள்ள ஞானத்தை கொடுத்து அவர்கள் எப்போதும் பாதை மாறாதபடி இருந்து அவரை அடைவதற்கு அவரையே வணங்கி கொண்டிருக்ககூடிய அறிவை கொடுக்க சிவபெருமான் நாராயணரிடம் கூறுகின்றார்.
அன்றிலோ டேகுயிலும் அன்புற்றிருந்திடவும்
கீரியும் பாம்பும் கிளைபோல் குழைந்திடவும்
வாரி குளம்போல் வரம்பிலே நின்றிடவும்”
இந்த உலகில் படைக்கப்பட்ட உயிரினங்களில் பல்வேறு வகையான பேத வகைப்பாடு உண்டு.அவை 84 லட்ச பேத வகைகள் என்று சொல்லப்படுவதுண்டு. உலகின் நியதிக்கு ஏற்ப இவை மண்ணில் வாழ்ந்து வந்தாலும், அடிப்படை குணங்களில் இவற்றில் சாதுவான உயிரின வகையும் உண்டு; அதுபோலவே மூர்க்கமான குணத்தினை உடைய உயிரினங்களும் உண்டு. உயிரினங்களின் இன அடிப்படையில் ஒரு வகையான மிருக இன வகை மற்றொரு வகையான மிருக இனவகையோடு நட்பு பாராட்டுவதில்லை. அவை ஒன்றையொன்று எதிரியாக பார்க்கும் நிலையே உண்டு. ஆனால் சோழனுடைய ராச்சியம் தர்ம சிறப்போடு ஆளப்பட்டு வந்தமையால், இந்த மிருக இனத்தில் இருக்ககூடிய பகைமை மாறுபாடுகள்கூட இல்லாமல் அவைகள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து அன்புற்று இருக்க இறைவன் நினைக்கின்றார். அதன்படி இந்த உலகில் பிறவி இன அடிப்படையில் எதிரிகளாக உள்ள பன்றியும், கடுவாய் எனப்படுகின்ற புலியும் அவைகள் பகைமை மறந்து ஒன்றாக இருக்க இறைவன் அருள் புரிகின்றார்.
அதுபோல மிருக இனங்களை போலவே பறவை இனங்களிலும் பெரிது, சிறிது என்ற மாறுபாடு உண்டு. ஆனால் சோழன் ராச்சியத்தில் அன்றில் பறவை என்று சொல்லக்கூடிய சிறிய பறவை இனங்களும் அதுபோல பெரிய பறவையாக இருக்ககூடிய குயில்களும் தங்களுக்குள் விரோதம் பாராட்டாமல் அன்பாக இருக்க இறைவன் அருள் புரிகின்றார். மேலும் இந்த உலகு நிலப்பரப்பில் மூன்று பங்கு தண்ணீரால் சூழப்பட்டு கடலாக காட்சி அளிக்ககூடியது.
கடலில் ஆர்ப்பரிக்ககூடிய அலைகள் தங்கள் இயல்பைவிட ஆக்ரோசமானால் இந்த உலகம் அழிந்துவிடும். நாமும் பல நேரங்களில் கடல் சீற்றத்தால் அழிவுகளை சந்தித்தே வருகின்றோம். ஆனால் சோழன் ஆட்சியில் இறைவன் கருணையால் அவ்வாறான அழிவுகள் ஏற்படாத வண்ணம் அலைகள் ஆர்பரிக்காமல், எப்படி ஒரு குளம் காட்சிதருமோ அதுபோலவே கடல் இருக்க அருள்புரிய ஈசுரனார் நாராயணரிடம் கூறுகின்றார்.
பட்டியும்முயலும் பண்புற் றிருந்திடவும்
பசுவும் புலியும் ஒருபக்கம் நீருண்டிடவும்
கசுவுங் கரைபுரளக் கரும்பு முத்தீன்றிடவும்”
இறைவன் அருள் இருந்தால் இயற்கையே வேண்டிய அத்தனையும் வாரி வழங்கும்.மக்களுக்கு பஞ்சம் என்பது இல்லாமல் செழிப்போடு இருக்க செய்வது இயற்கையால் விளையும் உணவாகும். சோழனுடைய ஆட்சி சிறப்பாக நடப்பதால், அவனுடைய ஆட்சி சிறப்பை இறைவன் கண்டு மகிழ்ந்ததால் அவன் தேசத்தில் பயிரிடப்பட்ட உணவு தானியங்கள் மிகுந்த விளைச்சலை கொடுத்தன. ஒருமுறை இடக்கூடிய பயிரானது ஒரு முறை விளைச்சலில் பதினாறு மடங்கு விளைச்சலை பெருக்கி அந்த ஒருமுறை இடுபயிரிலேயே கிடைக்ககூடிய அளவு தானியங்கள் விளைந்தன.
அதுபோலவே இந்த உலகிலே காணப்படுகின்ற உயிரினங்களிலே பலவகையான இனங்கள் உண்டு. அப்படி இருக்ககூடிய உயிரின வகைகள் தங்களுக்குள் பகைமையாகவே இருக்கும். சிலவகை இனங்கள் பிறவகை உயிர்களை உணவாக கொள்ளும். சில இனங்கள் தங்கள் இனங்களையே உணவாக கொள்வதும் உண்டு. அப்படி எப்போதும் பகைமை பாராட்டக்கூடிய இன உயிர்கள் கூட சோழ தேசத்தில் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தன. உதாரணமாக முயலினை கண்டால் நாயானது அதனை துரத்தி அடிக்ககூடிய நிலையினை உடையது. ஆனால் சோழதேசத்தில் அவைகள் ஒன்றுக்கொன்று நட்பாக பகைமை பாராட்டாமல் இருந்தன. அதுபோல புலியானது பசுவினை தன் உணவாக கொள்ளக்கூடிய விலங்கு. ஆனால் சோழதேசத்தில் அவைகள் தங்களுக்குள் பகைமை பாராட்டாமல், ஒரே இடத்தில் சென்று நீரருந்தக் கூடியவையாக இருந்தன. இதுமட்டுமல்லாமல் சோழனுடைய தேசம் செல்வ செழிப்பில் மேலோங்கி இருந்தது. பணம் காசு எல்லோரிடத்திலும் நிரம்பி இருந்தன.
சூத்திரமாக துல்வப் படுத்திடவும்
மனுவோர் தழைத்து மக்களொரு கோடிபெற்று
இனிதாக நாமும் இறவாதிருக்க வென்றும்”
சாஸ்திரங்கள் ஆறும் வேதங்கள் நான்கும் இறைவனால் நமக்கு அருளப்பெற்று கிடைத்திருக்கின்றன.இந்த வேதங்களிலும் சாஸ்திரங்களிலும் இறைவனை பற்றி சொல்லி அவரை அறிந்து கொள்ளவும் எல்லா உயிர்களும் இறைவனை அடைவதற்கான வழியை சொல்லி இருக்கின்றன. அப்படி எந்த நோக்கத்திற்கு இந்த வேதங்கள் கொடுக்கப்பட்டதுவோ, அந்த நோக்கங்கள் நிறைவேறக்கூடிய அளவில் வேதசாஸ்திரங்கள் விளங்க வேண்டும். சில வேளைகளில் தீய எண்ணம் கொண்டவர்கள் இந்த சாஸ்திர வேதங்களை கற்று அதை தவறான நோக்கத்திற்கு செயல்படுத்துவது உண்டு. ஆனால் சோழ தேசத்தில் இறைவன் அருள் நிறைந்து இருப்பதால் சாஸ்திர வேதங்கள் முறையாக கற்று மக்கள் இறைவனை அறிந்து கொள்ள உதவியாக இருந்தன.
அதுபோலவே தேசத்தில் பிறவி செய்யப்பட்ட மனுக்கள் தழைத்து வாழ்ந்து அவர்கள் மூலமாக உருவான வம்மிசங்களான மக்களெல்லாம் எந்த விதமான குறைவும் இல்லாமல், தாங்கள் உலகில் எந்த நோக்கத்திற்காக பிறவி செய்யப்பட்டோமோ, அந்த பிறவி நோக்கத்தினை எந்தவித குறைவும் இல்லாமல்,பல சிறப்புகளை பெற்று மகிழ்ச்சியாக வாழ்ந்து பின் அந்த பிறவி நோக்கத்தினை நிறைவு செய்து மீண்டும் பிறவாத நிலையை பெற்று இறைவனின் பாதாரத்தை அடையக்கூடிய அளவில் சோழ தேசத்தில் வாழ்ந்த மக்கள் இருந்தார்கள்…
தொடரும்…….
அகில விடை
- மலர்களைபோன்றுமென்மையானவன், அதாவது கருணையானவன். மலர் பாதங்களை கொண்ட இறைவனை நாடுகின்றவர்களுக்கு நன்மை பயக்கின்றவன். அதனால் தான் அனைத்து ஜீவாத்மாக்களும் அவரின் மலர் பாதங்களை நாடுகின்றன. அங்கையே முத்தி பெற்று இளைப்பாறுகின்றன.
- செம்மையாக, சிறப்பாக, நன்மைபயிக்கும்விதமாக, பரிபக்குவம் அடைந்த
- மேலானஆறுதல்சொல்
- பரம்பொருள், மிகமிகஉயர்வான பொருள்
- வில்லில்கணையைவைத்து
சிவகாண்ட அதிகார பத்திரம்
மாடசாமி அய்யா – 8973349046
“அண்ட பகிரண்டம் வெல்ல ஆயுதம் வந்து இருக்குதப்பா
இட்ட வாளுக்கு இரையாக இருக்கிறார் சத்துருக்கள்”
பொருள்:
இந்த பிரபஞ்சம் முழுவதையும் வெல்வதற்கு ஆயுதம் வந்து இருக்கிறது. அந்த வாளுக்கு இரையாக நீசர்கள் இருக்கிறார்கள்
விளக்கம்:
முப்பத்து மூன்று அறங்களின் பெருமையை சொன்ன அய்யா, இனி ஒரு ஆயுதத்தை விளக்குகிறார். இந்த உலகம் முழுவதையும் வெல்வதற்காக ஒரு ஆயுதம் இப்பூமியில் வந்திருக்கிறது என்கிறார். அந்த ஆயுதம் என்ன வென்று அகிலப் புத்தகத்தில் விஞ்சைப்பகுதியில் அய்யா கூறுகிறார். இங்கு இறைவன் சொல்லும் ஆயுதமானது 32 அறங்களையும் தாங்கி நிற்கும் தர்மம் ஆகும். இதை அகிலத்தில்” தர்மம் தான் வாளு” என்றும், “போருக்கு நினைத்தவரை பலிசெய்யும் தருமம்” என்றும் அய்யா கூறுகிறார். எனவே இட்ட வாளுக்கு அதாவது செய்த தருமம், நீசர்களை பலிகொள்ளும். எனவே நாம் ஒவ்வொருவரும் தம் வாழ்வில் 32 அறங்களையும் கடைபிடித்து ஒழுகவேண்டும் என்பது கருத்து இந்த தருமம் ஓர் கவசமாக கர்ணனை காத்தது போல் நம்மையும் காக்கும் என்று இந்த சூத்திரத்தில் தருமத்தை வழியுறுத்துகிறார் நமது அய்யா.
சூத்திரம்:
“திருச்சம்பதி அழியுதடா திருமாலும் சொல்லுகிறேன்”
பொருள்:
இறைவன் அமர்ந்த தலம் அழிந்துக் கொண்டிருக்கிறது. இதை திருமாலாகிய நான் உங்களுக்கு சொல்கிறேன்.
விளக்கம்:
ஒவ்வொரு உயிர்வாழியின் உடலிலும் பரமாத்மாவாக இறைவன் இருக்கிறார். எனவே திருச்சம் பதி என்பது உடலைக் குறிக்கிறது. இந்த உடலானது தினந்தோறும் மெதுவாக அழிந்து கொண்டிருக்கிறது. எனவே ” திருச்சம்பதி அழியுதடா என்கிறார் அய்யா. இப்படி அழியும் உடல் ஒருநாள் அழிந்து இல்லாமல் ஆகிவிடும். எனவே இந்த உடல் நிலையற்றது ஆகும். இந்த உடலில் உயிர் ஒட்டியிருப்பது கொஞ்ச காலமே, ஆகவே பிறவியை பயன்படுத்தி தருமம் செய்க என்பது சூத்திர கருத்து.
சூத்திரம்:
” எட்டு திசை வட்டக்கோட்டை கட்டுமுட்டாய் இருக்குதடா“
பொருள்:
பரந்து விரிந்து எட்டுத்திசைகளின் நடுவே நீங்கள் கட்டிய வட்டக்கோட்டை உங்களுக்கு தடையாய் இருக்கிறது.
விளக்கம்:
உடலெடுத்த உயிர்கள் யாவும் எட்டுத்திசைகளுக்கு நடுவே மாயைக்கு ( இயற்கைக்கு) கட்டுப்பட்டு வினை புரிகின்றன. இந்த வினையின் பலனால் சீவாத்மா, பிறப்பு இறப்பு என்னும் வட்டக்கோட்டைக்குள் அதாவது பிறவி சுழற்சியில் சிக்கித்தவிக்கின்றன. இந்த பிறப்பு இறப்பு என்னும் வட்டக்கோட்டை சீவன் முக்தி அடைய தடையாக அமைகிறது. எனவே “எட்டு திசை வட்டக்கோட்டை கட்டுமுட்டாய் இருக்குதடா” என்று அய்யா கூறுகிறார். ஆகவே தருமத்தை செய்து முக்திக்கு பாடுபடவேண்டும் என்பது கருத்து.
சிவகாண்ட அதிகாரப் பத்திரம் தொடரும்
த.சீதா லெட்சுமி அம்மா -9486880072
“பொறுமையின் சிறப்பு”
பொறுமை என்பது நமக்குத் துன்பம் ஏற்படும்போது உணர்ச்சி வசப்படாமலும், கோபம் கொள்ளாமல் இருக்கும் நிலையாகும். மற்றவர்கள் நம்மை இகழும் போதும், நீண்ட தாமதங்கள் ஏற்படும் போதும், பிரச்சினைகள் ஏற்படும்போதும்தொடர் துன்பங்கள் வரும்போதும், சில அசாதாரண சூழ்நிலைகளில் அமைதியாக இருக்கும் குணமாகும்.நம்முடைய வாழ்வில் பல சாதனைகள் நிகழ்த்துவதற்கு பொறுமை அவசியம் ஆகிறது. நாம் பொறுமை என்பது சோம்பேறி தனம் என்று நினைத்துவிடக்கூடாது. பொறுமைதான் ஒரு மனிதனின் மன உறுதியையும் துணிவையும் தரும்.
எப்படி என்றால் நாம் பொறுமையோடு பல விஷயங்களை ஆராய்ந்த போது அது நமக்கு பல வெற்றிச் சாதனைகளைத் தருகிறது .நாம் பொறுமையுடன் நன்கு ஆராய்ந்து நன்மை தீமைகளை பற்றி அலசி ஆராய்ந்து செயல்படுத்துகின்ற எந்த செயல் நமக்கு வெற்றியைத்தான் தரும் .
ஒரு சிற்பி அழகான சிலையை வடிக்க அல்லது செதுக்க வேண்டும் என்றால் அவரிடம் பொறுமை அவசியம் இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த சிற்பியால் ஒரு சிலையை அழகாக செதுக்க முடியும்.நம்முடைய சிந்தனையும் சிறப்பானதாக அமைய பொறுமை அவசியம்.
பொறுமை கடலினும் பெரிது என்பார்கள்.வற்றாத கடலைவிட பொறுமை பெரியது என்றால் பொறுமையின் சிறப்பு எத்தகையது என்பதை நாம் உணரவேண்டும். நாம் சாதிப்பதற்கு அறிவுடன் பொறுமை இருக்க வேண்டும். அறிவு என்பது நன்மை தீமைகளைப் பிரித்துப் பார்ப்பதுப் பார்ப்பதற்கு திறக்கின்ற ஒரு உணர்வின் திறவுகோல். ஆனால் பொறுமை என்பது அந்த உணர்வின் திறவுகோலாக விளங்குகிறது. ஒருவரிடம் ஆணவம் என்ற காற்று வீசினால் கோபம் என்ற சுனாமி சுழன்றடிக்கும். அப்போது அழிவு கோபபடுபவனுக்கு மட்டுமல்ல. கோபப்படுகிறவனைச் சார்ந்த சமுதாயத்திற்கும் ஆகும்.
சிந்திக்கத் தெரிந்தவர்கள் தான் சாதனைச் சிகரத்தை எட்ட தெரிந்தவன். ஒவ்வொருவருக்குள் ளும் அகப்பகையாகிய காமம், குரோதம், லோபம், மதம், மாச்சரியம்,மோகம் என்ற அகப்பகையும் இருக்கிறது. அன்பு, இரக்கம், கருணை, தர்ம சிந்தனை , என்ற நல்ல குணங்களும் இருக்கிறது. ஆனால் நல்ல சிந்தனை மேலோங்கி தீயவை அழிக்க ப்பட வேண்டும் என்றால் அதற்கு பொறுமை அவசியம்.
நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போல் பொறுமைக்கு இரண்டு பக்கங்கள் உண்டு. ஒன்று சிந்திப்பது மற்றொன்று சாதிப்பது . ஆகவே நாம் வாழ்க்கையில் சாதிப்பதற்கு பொறுமை மிக மிக அவசியமாகும்.நமது வாழ்க்கையில் நமக்கு பெருமையை தேடித் தருவது பொறுமையாகும். இதுதான் அய்யா பொறுதிதான் என் மகனே பெரியோராகுவது என்கின்றார்.
திருக்கலியாண இகனை
– பா. கவிதா அம்மா 009609805601
எம்பெருமானிடம் பிள்ளைகளைக் கேட்ட சப்தமாதர்களிடம் பிள்ளைகளின் அடையாளம் சொன்னால் தருகிறேன் என்றார் இதனைக்கேட்ட அம்மைமார்கள் அனலில் இட்ட புழுபோல் துடித்தனர். அவர்கள் எம் பெருமானே போற்றி,
மெய்யனே ஒப்பில்லாத வேத நன்மணியே கேள்மோ
வெய்ய நல்மதலையீன்று வெட்கமும் மிகவே ஆகி
கையது தப்பியோட கண்டோமோ மதலை என்றார்”
எம்பெருமானிடம் அந்த அம்மைமார்கள் கல்லும் உருகும் வண்ணம் கசிந்துருகி மதலையை தாருமையா!நாங்கள் பெற்ற மதலையை தாருமையா என்று போற்றி நின்றார்கள். நாங்கள் பெற்ற பிள்ளைகளை கண் குளிரக் காணாத காரணத்தால் பெற்ற வயிறு பெரும் கனலாய் கொதிக்கிறது. அவர்களின் மழலை மொழிகளை கேட்க எங்களுக்கு பாக்கியம் கிடைக்கவில்லை. அவர்களின் மழலை மொழிகளைக் கேட்டு கொஞ்சி மகிழ்ந்திருக்க மதலையை தாரும் அய்யா என உருகினர்.
மேலும் அவர்கள் சொல்வார்கள் பெற்ற நாள் அன்று முதல் இன்று வரை பிள்ளைகளைக் காணாமல் மனம் நொந்து எங்கள் உடம்பெல்லாம் தளர்ந்து வாடுகிறோம்.அறியாப் பருவத்தில் வனத்தில் வந்து உமது மாய்கையால் எங்களை கோலம் அழித்த கோலகால மாமுனியே அதாவது பேரானந்தத்தை கொடுக்கும் பரம்பொருளே எங்கள் குழந்தைகளை தந்து எங்கள் மனக்கவலையை மாற்றும் அய்யா என்றனர்.கயிலையங்கிரியில் சிவபெருமானுக்குத் தொண்டு செய்து ஒளி உடலோடு அமுதுண்டு திளைத்திருந்த நாங்கள் உமது மாய்கையால் அம்மை உமாதேவியையும் மறந்து எங்கள் காமத்தை தொலைப்பதற்கோ இந்த கூறு கெட்ட கலியில் வந்தோம்.
அருஞ்சுனைகளில் நீராடி மகிழ்ந்து பெருஞ் சிறப்புகளோடும் பெருமையோடும் வாழ்ந்த நாங்கள் எங்கள் விதிப்பயனின் காரணத்தால் இந்த கூறுகெட்ட கலியில் வந்தோம். பொன்னும் பந்தாரம் என்ன பூத்தொடுக்கும் சிறப்பு என்ன பசும் பொன்னால் ஆன மேடை என்ன பந்தடிக்கும் வீரம் மென்ன,இப்படிப்பட்ட அனைத்து சிறப்புகளையும் துறந்து நீர் முன்னுரைத்து விட்டதுபோல் மூண்டகலி மீதில் வந்தோம். கன்னி அழியும் முன்னே காதல்தனைப் பெற்றதினால் நாங்கள் பெற்ற பிள்ளைகளை பார்க்காமல், பாலமுது ஊட்டாமல், முகத்தோடு சேர்த்து அணைக்காமல், வெட்கத்தால் யார் கண்ணிலும் படாமல் வனத்தில் ஓடி ஒளிந்து தவசிருந்தோம்.
பால் இளகி நல் அமிர்தம் (ஞானப்பால்)பாலாய் சொரிகிறது மாலழகா எங்கள் பிள்ளைகளை தந்து மனக்கவலையை மாற்றும் அய்யா மக்களுடைய நிறம் என்ன அழகு என்ன சாயல் என்ன என்பதை கண்ணாலே காணவில்லை. தாங்கள் இதுதான் உங்கள் பிள்ளை என்று காட்டினால் தானே எங்களுக்கு தெரியும் ஐயகோ! எங்களால் தாங்க முடியவில்லையே! அங்கமெல்லாம் சேர்கிறதே! ஆவிமெத்த வாடுகிறதே தங்கமணியே நாங்கள் பெற்ற தவமணிகளை தாருமையா.
மங்காத தெய்வ குல மக்கள் ஏழும் இன வழியும் எல்லாம் சேர்த்தெடுத்து குறுங்கலியை அடக்கி சீக்கிரமாக தாங்கள் தாரும் அய்யா என்று வேண்டினார்கள்.
கள்ளங் கபடம் அறியாத மழலைச் செல்வங்களை கலியிலிருந்து மீட்டு மாமன்னனான உமது பிள்ளைகள் அவர்கள் என்பதை உணர வைத்து ஞான திருமுடிசூடி,மக்களையும் எங்களையும் ஓக்க ஒருமித்து உமது பக்கத்தில் வைத்து பரம்பொருளாகிய தாங்கள் எங்களோடு இருந்து அரசு உமது பிள்ளைகளை தாருங்கள் என்று சரணடைந்தார்கள்
இதனை கேட்ட எம்பெருமான் பிள்ளைகளை கொடுத்தாரா? இல்லையா? என்பதை அடுத்த இதழில் காணலாம்..
தொடரும்…
அய்யா சொன்ன முன் அறிவிப்புகள் எவை?
– S. அன்ன செல்வம் அம்மா 9443622222
தர்மம் தோன்றுவதற்கு முன் என்ன நடக்கும் என்பதை அய்யா பத்து அடையாளங்கள் மூலம் மக்களுக்கு தெரிய படுத்துகிறார்.பெரும் காற்றினால் அழிவு, வெள்ளத்தால் அழிவு, பேய் மாறாட்டத்தால் அழிவு, பெரும் சுரத்தால் அழிவு, சம்மாரியால் அழிவு, காளி வெள்ளத்தால் அழிவு நஞ்சு தின்று கொலை பட்டழிவு பெண்ணாலே ஆண் அழிவு, ஆணாலே பெண் அழிவு, பூமி அதிரும் ஓசையினால் ஒரு பெருமூச்சு உண்டாகும். அவை அத்தனையும் அடையாளங்கள்.
கடந்த மாத இதழில் பெரும் காற்றினால் அழிவு என்கிற விவரங்களை பார்த்தோம்.அதன் தொடர்ச்சியாக வெள்ளத்தால் அழிவு என்பதை பற்றி பார்ப்போம். வெள்ளத்தால் அழிவு: மழை வெள்ளம் அதிகமானால் அதனால் உண்டாகுவது பேரழிவு ஆகும். இதனால் உயிர் இழப்பு, பொருள் இழப்பு, பஞ்சம், பசி, பட்டினி, என்று எவ்வளவு துன்பங்கள் கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். வெள்ளம் அதிகமான காரணத்தால் மக்கள் வாழ்கின்ற நாடு நகரங்களும்,
விவசாய நிலங்களும், மரம் செடி கொடிகள் என அழிவின் விவரங்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. அதிக வெள்ளத்தால் அழிவு வந்தபோதிலும் குடிநீர் இல்லாமல் தண்ணீர் பாட்டில்களை விலை கொடுத்து வாங்கி குளிக்கிறோம். இது மிகவும் அவலமான நிலை. அனைத்து நோய்களுக்கும் மூலகாரணமாக இருப்பது இதுவே.இது ஏன் எதற்காக நடக்கிறது என்கிற காரணத்தை உணர வேண்டும். இயற்கையை நாம் அறிகிறோம். எனவே இயற்கையாக இருக்கின்ற இறை சக்தி நம்மை அளிக்கின்றது. நம்முடைய முன்னோர்கள் பாதுகாத்து வந்த குளங்களையும், ஏரிகளையும், ஆற்று ஓரங்களையும்,
அழித்துவிட்டோம். நவீன விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக ஏரி குளம் இருந்த இடங்களில் இன்று தனியார் கல்லூரிகள், கிராம குடியிருப்புகள், அடுக்குமாடி குடியிருப்புகள், பேருந்து நிலையம், விளையாட்டு மைதானம், ரியல் எஸ்டேட், என்று மனிதன் தன்னுடைய ஆடம்பர வாழ்க்கைக்கு ஏற்றபடி மாற்றிக் கொண்டார்.எனவே பாதுகாக்கப்பட வேண்டிய தண்ணீர் நீர்ப்பாசனங்களுக்கு உதவாமல் அவை சேமித்து வைக்க முடியாமல் மக்களுக்குப் பேரழிவை கொடுத்துவிட்டு கடலில் போய் சேர்கிறது. நவீனமயமாக்கப்பட்ட தமிழ்நாட்டில் சுமார் 100 ஆண்டுகளில் 6000 குளங்களை காணவில்லை. புதிதாக எந்த ஒரு அணைகளும் கட்டப்படவில்லை. அழிவின் விவரங்களை சொல்லிக்கொண்டே போகலாம். அய்யா வைகுண்டர் அருள் நூலில் இவ்வாறு தெளிவாகக் கூறுகின்றார்
“நடக்கும் குறிகள் தன்னை நான் சொல்லுகிறேன் என்றும் அடக்கமறச் சொல்லுகிறேன் அதுகேளும். பஞ்சம் வரும் செழிக்கும் பாவத்தால் பகையாம்
வஞ்சகப் பெருங் காற்றால் வையகத்தில் சஞ்சல நோய் தீநரகக் காந்தல் செகத்தோற்கு தான் வயிற்றில் மாநெருப்பாய் தங்கி வயிறு கழிந்து தீனமுடன் மாழ்வார் சில பேர்கள் மாறாமலே சிலநாள். தாழ்வார் உயர்வார் தான்கெடுவார் கோழ் சண்டையாலே.சாவார்கள் அழிவார்கள் உண்டெனவே. இரத்த மிகவோடவே மண்டலத்தில் நாடு பிளையாது நற்காலம் போயொழிக்கும். கேடு தொடுத்துலகம் பெய்யாமல் வானம் சுருங்கி வரும். களைகள் பயிரில் கலக்குமே விளையாது வெள்ளத்தால் பஞ்சம் வரும் வெண்சாவி ஆகிவிடும்.
மனித மக்களாகிய நாம் இயற்கையாக இருக்கின்ற பிரபஞ்சத்திற்கு பல கெடுதல்களை செய்கிறோம்.அதன் விளைவாக இந்த பிரபஞ்சம் நமக்கு தண்டனை தருகிறது. “தினையை விதைத்தவன் தினையை அறுப்பான் வினை விதைத்தவன் வினை அறுப்பான்” என்பது போன்று தர்மச் செயல்கள் குன்றி அதர்மச் செயல்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அணு ஆயுதம் முதல் நவீன கண்டுபிடிப்புகள் அனைத்தும் பேராபத்து நிறைந்தவையாக உள்ளன. அதிக மழை பெய்வதற்கு காரணமும் தட்பவெப்ப நிலை சரியில்லாத காரணமே. மனிதன் நினைக்கின்றான் கல்வி அறிவும் விஞ்ஞான அறிவும் முன்னேறிக் கொண்டு இருக்கிறோம் என்று. அய்யா மக்களைப் பார்த்து நினைக்கிறார் மெய்யறிவையும் ஆன்மீக அறிவையும் விட்டு விட்டாயே மகனே என்று புலம்புகிறார்.
…… மீண்டும் தொடரும்
தர்மம் செய்வோம்
– ஹரி வெங்கடேஷ் அய்யா 8508518505
“தர்மத்தை செய்து தவத்தை பெருக்கி உங்கள் சராசரத்தைத் தேடுங்கள்…”
மனிதர்கள் வாழ்வில் இன்பத்தை அனுபவிக்கிறார்கள். இன்பத்தை அடைவதை இலக்காகவும் கொண்டு இருக்கிறார்கள். வாழ்வில் ஒருவன் இன்பமாக இருக்க என்ன தேவை என்று கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தை சொல்லுவார்கள். அவர்கள் சொல்லும் காரணமும் கூட நேரத்துக்கு நேரம் மாறுபடும்.தங்களுடைய கண் செவி போன்ற புலன்கள் எந்த பொருள்களில் இணக்கம் வைக்கும் பொழுது இன்பம் ஏற்படுகிறதோ அந்தப் பொருள்தான் இன்பத்துக்கு காரணம் என்று சொல்லுவார்கள்.
பொதுவாக பணம் பதவி பொருட்கள் உடமை போன்றவைதான் இன்பத்துக்கு காரணம் என்று சொல்லுவார்கள்.ஒரு குழந்தையிடம் சென்று இன்பத்துக்கு காரணம் என்ன என்று கேட்டால் அது ஒரு பலூனை காட்டும். ஒவ்வொரு நபருக்கும் அவர்களுடைய தேவைக்கு ஏற்ப சூழ்நிலைக்கு ஏற்ப இன்பம் மாறுபடுகிறது. அவர்களுடைய காரணமும் மாறுபடுகிறது. ஆனால் உண்மையில் ஒருவனுடைய இன்பத்துக்கு காரணம் அவன் செய்த புண்ணியமே ஆகும். ஒருவன் இன்பம் அனுபவிக்க தேவையான பொருளை அவனிடம் கொண்டு சேர்ப்பதும் அவன் செய்த புண்ணியமே ஆகும். அதுபோல ஒருவன் விரும்பாத துயரத்தை அவனிடம் கொண்டு சேர்ப்பதற்கு காரணம் அவன் செய்த பாவமே ஆகும்.நாம் விரும்பும் ஒரு பொருளில் இன்பம் எனும் நிலையை உருவாக்குவது நாம் செய்த புண்ணியம் ஆகும்.
நம்மிடம் நாம் செய்த புண்ணியம் இல்லை எனில் நாம் விரும்பும் பொருட்கள் நம்மிடம் இருந்தாலும் கூட நம்மால் அதன் மூலம் இன்பத்தை அனுபவிக்க முடியாது.இனிப்பு கடையே வைத்திருப்பவராக இருந்தாலும் சர்க்கரை வியாதி உள்ளவராக இருந்தால் இனிப்பு கடை வைத்திருப்பவருக்கு அதன்மூலம் ஏது இன்பம். ஆகவே புண்ணியம் செய்தவர்களால் தான் இன்பத்தை அனுபவிக்க முடியும். நம்மில் யாரும் துன்பத்தை வேண்டுமென்றே வரவழைப்பது இல்லை இருப்பினும் துன்பம் நம்மைத் தொடர்ந்து வருவதற்கு காரணம் நாம் செய்த பாவம். தர்மத்தைச் செய்வதால் புண்ணியமும் அதர்மத்தை செய்வதால் பாவமும் ஏற்படுகிறது மற்றவர்களுக்கு துயரத்தை கொடுக்காமல் நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு நற்செயல்களும் தர்மம் ஆகும்.
மற்றவர்களுக்கு நாம் துயரத்தைக் கொடுப்பதும் நம்மிடம் உள்ள தீய பண்புகளும் அதர்மம் ஆகும். எது சரி எது தவறு என்ற அறிவை அடைந்து நாம் தவறை நீக்கி நன்மையைச் செய்வதன் மூலம் புண்ணியத்தை ஈட்டமுடியும். மேலும் அகிலத்திரட்டு மற்றும் அருள் நூலில் அய்யா,தர்மத்தைப் பின்பற்றி வாழ்வதற்கான பல்வேறு வழிமுறைகளை நமக்கு வழங்கியுள்ளார். அந்த வழிமுறையின் படி வாழ்ந்து அதர்மத்தை நீக்கி தருமத்தை செய்ய வேண்டியது நம்முடைய தலையாய கடமை ஆகும்..
உண்மையில் நாம் சேர்த்து வைத்துள்ள புண்ணியமானது பூலோக இன்பத்தை அடைவதற்கவா என்றால் இல்லை. நாம் தேடி வைத்த புண்ணியம் என்பது நாம் சேர்த்து வைத்துள்ள பணத்தை போன்றது. நாம் வைத்துள்ள பணத்தை எந்த காரணங்களுக்கு வேண்டுமானாலும் செலவிடலாம். அதுபோல நாம் சேர்த்து வைத்துள்ள புண்ணியத்தை இன்பத்தை அடையவும் பயன்படுத்தலாம் நன்மையை அடையவும் பயன்படுத்தலாம். புண்ணியம் என்பதனை இன்பத்தை அடைவதற்காக பயன்படுத்தாமல் நண்மையை அடைவதற்காக பயன்படுத்துவதே பகுத்தறிவு ஆகும்.
அறிவற்றவர்கள் சேர்த்து வைத்திருந்த புண்ணியத்தை எல்லாம் இன்பங்களாக மட்டும் செலவிட்டு இறுதியில் இருந்த புண்ணிய பலன் எல்லாம் செலவழித்துவிட்டு வருந்தி வாடுகிறார்கள். ஆனால் ஞானவான்கள் இருக்கும் புண்ணியத்தை தரும வழியில் செலவிட்டு இறைவனை அடைவதற்கான வழியை தேடுகிறார்கள். அசுரர்கள் தவமிருந்து புண்ணியத்தை சேர்த்து அந்த புண்ணியத்தின் மூலம் இன்பத்தை தான் இறைவனிடம் வரமாக கேட்பார்கள் நன்மையை அல்ல. ஆனால் நாம் ஈட்டும் புண்ணியத்தை இன்பத்துக்காக அல்லாமல் நன்மைக்காக பயன்படுத்தும் போது நாம் அடையும் உயர்வு மிகவும் மேலானது.
நன்மையை தேர்ந்தெடுத்தல் என்பது,உணவின் மூலம் உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை தேர்ந்தெடுப்பது போல மனதிற்கு தேவையான மன ஆரோக்கியத்தை தேர்ந்தெடுப்பது. அதாவது மனதை தூய்மைப்படுத்துதல் தான் நன்மை என்று அழைக்கப்படுகிறது. அதாவது மனதில் உள்ள பேராசை பொய் களவு கோபம் போன்ற தீய செயல்களை நீக்கி நல்ல செயல்களை உருவாக்குவதுதான் நன்மை.
நாம் செய்யும் நற்செயல்களின் மூலம் கிடைக்கும் புண்ணியத்தின் பலனை நன்மையை அடைவதற்காக பயன்படுத்துவதுதான் ஆன்மீக முன்னேற்றத்தின் அடிப்படை. ஆகவே நாம் அடைந்து வைத்திருக்கும் புண்ணிய பலன்களை இந்த இகலோக இன்பங்களுக்கு பயன்படுத்தி செலவிடாமல் இறைவனை அடைவதற்கு அடிப்படையான நல்ல பண்புகளை உருவாக்க பயன்படுத்தி செலவிடுவோம்.. மேம்படுவோம்….
சூத்திரம்:
” ஈரேழு லோகமுண்டு எடுத்துச் சொல்வார் யார்மகனே”
சாமிதோப்பு “அய்யா வைகுண்டர் பதியை”, “தலைமை பதி” என்று அழைப்பது சரியா?
பா.கிருஷ்ணமணி அப்புக்குட்டி 9841933992.
ஸ்ரீமன் நாராயண பரம் பொருள் கலியுகத்தில் தன்னுடைய பத்தாவது அவதாரமான “அய்யா வைகுண்டர்“ அவதாரத்தை திருச்செந்தூர் திருப்பாற்கடலில் நிகழ்த்திய பின்பு,இன்று நாம் சுவாமிதோப்பு என்று அன்போடு அழைக்கின்ற தாமரையூர் பதியை அடைந்து, அங்கு பத்து மாதங்கள் பார் நடப்பை எல்லாம் சொல்லிவிட்டு,பின்பு இந்த உலகத்தின் நன்மைக்காக ஆறு ஆண்டுகள் தவத்தை நிறைவேற்றினார். மேலும் முத்திரி கிணறு என்கின்ற உலகத்திலே உயர்வான தீர்த்தத்தை ஏற்படுத்தி சமதர்ம சாம்ராஜ்யத்தை அமைத்து, மண்ணும் தண்ணீரையும் கொடுத்து மக்களின் நோய்களை போக்கினார்.
பேய் பிசாசுகளை எரித்து, மந்திர தந்திரத்தை அழித்து மக்களை காத்தார்.நமது ஏழு அம்மைமார்களையும் இகனை திருக்கல்யாணம் புரிந்தார். அம்மை லட்சுமியையும் திருக்கல்யாணம் புரிந்த புண்ணிய பூமியாக சுவாமித் தோப்பு இருந்து வருகிறது. அய்யாவின் பாதம்பட்ட தவப்பூமியான சுவாமித்தோப்பு மிக உயர்ந்த புண்ணிய பூமி எனபதில் யாருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது.
இவ்வளவு சிறப்புக்கள் பொருந்திய பதியாக சுவாமிதோப்பு பதி இருப்பதால் அதனை தலைமை பதி என்று அழைப்பதில் என்ன தவறு இருக்க முடியும் என்று நமக்கு தோன்றலாம். ஆனால் அதற்கான விடையை நமது முன்னோர்கள் எவ்வாறு ஆலயங்களை அழைத்தார்கள் என்பதிலிருந்து அறிந்து கொள்ளலாம். ஆம்!, நமது பாரத மண்ணில் எவ்வளவு சிறப்பு வாய்ந்த ஆலயமாக இருந்தாலும் அதனை “தலைமை ஆலயம்” என்றோ அல்லது “தலைமை கோயில்“ என்றோ அழைக்கின்ற வழக்கம் இல்லை. உதாரணமாக இந்த பாரத மண்ணில் நமது அய்யா இராமராக அவதரித்த அயோத்தியிலும், கண்ணனாக அவதரித்த மதுராவிலும் உள்ள ஆலயத்தை கூட “தலைமை ஆலயம்” என அழைப்பதில்லை. ஏன் காசி, இராமேஷ்வரம், திருப்பதி, ஸ்ரீரங்கம், திருவண்ணாமலை, சிதம்பரம் கைலாயம், பத்திரிநாத் போன்ற புண்ணிய தலங்களையும் “தலைமை கோவில்” என்று அழைக்கும் மரபு இல்லை.
அதற்கு காரணம் தலைமை என்று அழைக்கும் போது இறைவன்
அந்த தலைமை இடத்தில் மட்டும் அதிகமாக இருப்பதாகவும் மற்ற இடங்களில் எப்போதாவது வந்து போவதாகவும் பொருள் வந்துவிடும். உதாரணமாக ஒரு கட்சியின் தலைமை அலுவலகத்தில் தான் எப்போதும் அந்த கட்சியின் தலைவர் இருந்து தன்னுடைய பணியாற்றுவார். எப்போதாவது தான் மற்றைய மாவட்ட, வட்ட , அலுவலகங்களுக்கு வருவார். அவருடைய முழு பணியும் தலைமை இடத்திலே இருக்கும். அதுபோல ஒரு நிறுவனத்தின் தலைவரரும் அந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள இடத்தில் இருந்து கொண்டு மற்றைய கிளை அலுவலகங்களுக்கு எப்போதாவது மேற்பார்வையிட வருவார்.
ஆனால் இறைவனை அப்படி சொல்ல முடியுமா? முடியாது. இறைவன் ஒரே நேரத்தில் எல்லா ஆலயத்திலும் கோவில்களிலும், பதிகளிலும் தாங்கல்களிலும் இருந்து அருளாட்சி புரிபவன்.அதனால் தான் கோயில்களையும் ஆலயங்களையும் தலைமை என்று அழைக்கின்ற மரபு இந்த மண்ணில் இல்லை. இருப்பினும் அந்த அந்த தலங்களுக்கு உரிய அருமை பெருமைகளை இந்த மக்கள் போற்றி பாதுகாத்து உள்ளார்கள். சரி, இப்படி ஒரு வழக்கம் இதுவரை இந்த மண்ணில் இருக்கவில்லை என்றாலும், அய்யா வைகுண்டப் பரம்பொருள் நம்மை சுவாமிதோப்பு பதியை தலைமைப்பதி என்று தான் அழைக்கவேண்டும் என்று அகிலத்திரட்டிலோ அல்லது அருள் நூலிலோ சொல்லியிருந்தால் நாம் அதை ஏற்றுக்கொண்டு தான் ஆகவேண்டும். ஆனால் அய்யா நமக்குத் தந்த அகிலத்திரட்டு அம்மானை மற்றும் அருள் நூலில் எந்த இடத்தையும் சுவாமிதோப்பு பதியை தலைமைப் பதி என்று அழைக்க சொல்லவில்லை.
தலைமை என்று வருகிற போது துணை எது? கிளை எது? என்கின்ற கேள்வி பிறக்கின்றது. இன்று நெல்லை மாவட்டத்தின் தலைமை பதிக்கு போட்டியே நடக்கின்றது. வடலிவிளை, வாகைகுளம், ஐயனார்குளம், சிதம்பராபுரம் போன்ற ஊர்கள் “நெல்லை மாவட்டத்தின் தலைமைபதி” என உரிமை கொண்டாடி வருகின்றன. இவையெல்லாம் நாம் இறைவனையும், ஆன்மீகத்தை உணராதவர்கள் என்கின்ற நிலையை நமக்கு காட்டுகின்றது
சுவாமித் தோப்பு பதிவை “தலைமை பதி” என்று அழைக்காதீர்கள் என்று சொல்வதினால் சுவாமித் தோப்பு பதியின் சிறப்பையும், புனிதத்தையும் குறைத்து சொல்லி விட்டதாக அன்பர்கள் எண்ண வேண்டாம். தலைமை பதி என்று அழைக்க வேண்டும் என்பது அய்யாவின் உத்தரவு அல்ல, மனிதர்களால் ஏற்படுத்திய முறை என்பதையும் அன்பர்கள் மனதில் என்ன வேண்டும். உண்மையான ஆன்மிக ஞானம் பெற்ற எவரும் “தலைமை” என்று போடுவதும் இல்லை, அழைப்பதும் இல்லை என்பதாலே இந்த பதிவு ஆகும்.
துவையல் பண்டாரங்கள் என்னும் தியாக செம்மல்கள்
– அ. வைகுண்ட ராஜன் அய்யா
எல்லாம் வல்ல அய்யா வைகுண்டப் பரம்பொருள் கலி நீச மன்னனின் சோதனைகளை எல்லாம் சாதனைகளாக மாற்றி, சிறையை விட்டு மீண்டும் சாமிதோப்புக்கு வந்த உடன் மக்களின் மனதிலிருந்த மாசு கலியை அகற்றுவதற்கும், இல்லற தவத்தை எல்லோரும் கற்று உணரும் வண்ணமும் மக்களுக்கு முன் மாதிரியாக திகழ தன் மேல் அன்பான மக்களை துவையல் தவசு செய்ய சொல்கிறார். அதன் படி இன்றைய நெல்லை, கன்னியாகுமரி,தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள சுமார் 700 குடும்ப மக்கள் அய்யாவின் சொல் கேட்டு துவையல் தவம் புரிய தயார் ஆகின்றனர்.
துவையல் தவம் என்றால் சாதாரணமானது அல்ல,தன்னுடைய வீடு நிலபுலங்கள் ஆடு மாடு சொத்துக்கள் எல்லாவற்றையும் பாதி விலைக்கு விற்று விட்டும், விற்காத பட்சத்தில் அதை எல்லாம் உறவினர்களுக்கு தானமாக வழங்கி விட்டும் செல்ல வேண்டும். இன்றைக்கு என்ன தான் அற்புதமான காரியங்களை ஒருவர் செய்தாலும் அவருக்காக தம்முடைய சொத்துக்களை எல்லாம் தானமாக கொடுத்து விட்டு யாரேனும் அவர் பின்னால் வெறும் கையோடு செல்வார்களா?. ஆனால் அன்றைக்கு துவையல் பண்டாரங்கள் சென்றனர். அதுவும் வெறும் ஆண்கள் மட்டும் அல்ல, ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர், கர்ப்பிணி பெண்கள், வயசு பெண்கள், நிறைமாத கர்ப்பிணி பெண்கள் என சுமார் 700 குடும்பம் அன்றைக்கு துவையல் தவம் புரிய சென்றனர்.
அய்யாவின் உத்தரவு படி அவர்கள் வாகை பதிக்கு சென்று துவையல் தவத்தை ஆரம்பித்தனர். அதுவும் எப்படி தெரியுமா?, தினமும் அதி காலை எழுந்து வாகை பதி கடலிலே சென்று நீராடி, துணி துவைத்து, ஈர உடையுடன் அதிகாலை உகம் படித்து தாகத்திற்காக கடல் நீரை மட்டுமே குடித்து, நல்ல தண்ணீர் நாக்கில் படாமல் மதியமும் கடலிலே நீராடி துணி துவைத்து உச்சிப் படிப்பு ஓதி மதியம் மட்டும் பச்சரிசி பால் அன்னம் கடல் நீரிலே சமைத்து அதை வெறும் தரையிலே கடல் மணலிலே போட்டு உண்ண வேண்டும். உணவு என்பது அந்த ஒரு வேளை மட்டும் தான். மீண்டும் சாயங்காலம் அதே போன்று கடலில் தீர்த்தமாடி உகம் படித்து வெறும் கடல் நீரை மட்டும் குடுத்து இரவு சடவார வேண்டும்.
இப்படி அந்த 700 குடும்பமும் ஆணும் பெண்களும் சிறுவர் சிறுமியர் வயோதிகர் எல்லாம் அந்த துவையல் தவசை சிறப்பாக செய்து கொண்டிருக்கும் போது இங்கே சுவாமி தோப்பிலே இருந்து அய்யா அந்த துவையல் துவைக்கும் மக்களின் மன உறுதியையும், பக்தியையும் சோதிக்க திருவுளம் கொண்டு,வாகை பதியிலே துவையல் தவம் புரிந்து கொண்டிருக்கும் மக்கள் இருக்கும் பகுதியிலே தெள்ளு எனப்படும் பூச்சி படைகளை ஏவி விடுகிறார். எங்கு பார்த்தாலும் ஒரே தெள்ளு பூச்சி, மக்கள் எல்லாம் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
படுத்திருக்கும் வேளையிலே உடலெல்லாம் கடிக்கும், சும்மா உக்கார்ந்தால் முதுகெல்லாம் அரிக்கும். ஆனால் அவற்றை கொல்ல கூடாது, ஏனென்றால் துவையல் தவம் புரியும் காலத்திலே ஒரு சிறு உயிருக்கேனும் இடையூறு செய்ய கூடாது என்பது அய்யாவின் வாக்கு. மக்கள் அந்த தெள்ளு பூச்சியின் தொல்லைகளை எல்லாம் தாங்கி துவையல் தவத்தில் உறுதியாக இருந்தனர். இதனை கண்ட அய்யா மீண்டும் அவர்களை சோதிக்க எண்ணி மூட்டை பூச்சிகளை ஏவிவிடுகிறார்.எப்படி இருக்கும் கொடுமை எண்ணி பாருங்கள்!. ஒரு நொடி கூட அயர்ந்து இருக்க முடியாது.
சுருக் சுருக் என்று கடிக்கும் மூட்டை பூச்சிகள்,எங்கு பார்த்தாலும் தெள்ளு பூச்சி வேறு. ஆனால் அய்யாவின் பால் அளவு கடந்த அன்பு கொண்ட துவையல் பண்டாரங்கள் அத்தனை சோதனைகளையும் கடந்து மூன்று வேளை துவைப்பதையும் உகப்பாட்டு உச்சி ஒது வதையும் நிறுத்தவில்லை. மீண்டும் அவர்களை சோதிக்க எண்ணிய அய்யா ஈறு பேன்களையும் நண்டு இனங்களையும் ஏவி விடுகிறார். தலையில் இருந்து கொத்து கொத்தாக பேன்கள் ஊர்ந்து வருமாம், குடிப்பதோ கடல் நீர், அதையும் குனிந்து இரு கையால் கோதி குடிக்க முற்படும் போது கொத்தாக கையில் வந்து பேன்கள் விழுமாம்.
எப்படி இருக்கும் என்று சற்று கற்பனை பண்ணி பாருங்கள். நாமெல்லாம் ஒரு நொடி தாக்கு பிடிப்போமா?. அதையும் தாங்கி மதியம் உச்சி படித்து உணவு உண்ணலாம் என்று உக்காரும் போது அதன் மேல் நண்டு ஏறி உக்கார்ந்து இருக்குமாம், இப்படி போய் படுக்க போனால் ஒரே தெள்ளு, மூட்டை பூச்சிகள் வேறு,வேறு வழி இல்லாமல் கடற் கரையிலே போய் எல்லாரும் இருக்கின்ற வேளையிலே கடல் சீற்றத்தை அய்யா ஏவி விட்டு அங்கிருந்த பெண்களின் உடைகளை எல்லாம் அலைகள் வந்து அடித்து கொண்டு போய் விட்டது. ஆனால் அதை எல்லாம் தாங்கி அன்றைய துவையல் பண்டாரங்கள் மூன்று வேளை குளித்து இறைவனை துதித்து ஒரு நேரம் மட்டும் கடற்கரை மணலிலே அன்னம் குடித்து தவம் புரிந்தார்கள் என்றால் நம் அப்பன் மேல் எவ்வளவு அன்பும் நம்பிக்கையும் இருந்தால் இவை எல்லாம் சாத்தியமாகும்.
அவர்களின் மன உறுதியையும் பக்தியையும் கண்ட அய்யா இனி அவர்களுக்கு சுகம் அளிக்க வேண்டும் என மனதில் நினைத்தார். அவர்களில் ஒருவர் கனவிலே அய்யா தோன்றி இங்கு இருந்தது போதும், இனி முட்ட பதி நோக்கி செல்லுமாறு கூறி, இனிமேல் கடல் நீரை மட்டுமே குடிக்கும் நிலை மாறி நல்ல தண்ணீர் குடிக்கவும், வெறும் பச்சரிசி பால் அன்னம் மட்டும் உண்ணும் வழக்கம் மாற்றி அவித்த நெல்லோடு காய் கனிகளுடன் உணவு உண்ணவும் அருளினார்.
அவர்களும் அய்யா சொன்னது போலவே முட்டப்பதி கடலிலே தீர்த்தமாடி மூன்று வேளையும் இறைவனை துதித்து உணவு உண்டு துவையல் தவம் மேற்கொண்டிருந்த வேளையிலே அய்யாவும் அன்பர்களின் கனவிலே தோன்றி துவையல் பண்டாரங்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, ஆடைகள் போன்றவற்றை தர்மமாக கொடுக்கும் படி சொல்வாரம். அன்பர்களும் அய்யா கனவில் தோன்றி சொல்லியதும் உடனே மனம் மகிழ்ந்து துவையல் பண்டாரங்களுக்கு வேண்டிய உணவு தானியங்களை தர்மமாக கொண்டு வந்து கொடுத்து அவர்களும் துவையல் பண்டாரங்களோடு சேர்ந்து இறைவனை தொழுது இன்பமுற்று இருந்த வேளையில் மாற்று சாதியினர் கூட எப்போ மீன் வரும் என்று எதிர்பார்த்து மீன் வந்த உடன் அதை சரியாக வேக வைக்க கூட செய்யாமல் அரைகுறையாக அவித்து தின்கின்ற சாணார்களுக்கு வந்த வாழ்வை பாருங்கள் என்று சொல்லி ஆச்சரிய பட்டு, மூன்று வேளை குளிப்பது என்ன மூன்று வேளை துதிப்பது என்ன நாராயணன் இவர் பக்கம் இருப்பதால் தான் இவர்கள் இப்படி பிராமணன் போல் மாறி விட்டனர் என்று ஆச்சரியம் கொண்டு பிராமணன் உட்பட சகல ஜாதிகளும் துவையல் பண்டாரங்களோடு இணைந்து இறை வழிபாடு செய்ய துவங்கினார்.
இதை எல்லாம் பார்த்த அய்யா இனி இவர்களை எல்லாம் அவரவர் ஊர்களுக்கு சென்று அவரவர்கள் மூலமாக இந்த இல்லற தவத்தை பரப்ப செய்ய வேண்டும் என கருதி அவர்களிடம் வந்து இனி அவரவர் ஊர்களுக்கு சென்று மனைவி மக்களோடு இல்லறமாக வாழ்ந்து இதே போன்ற ஒரு இல்லற தவ நிலையை நீங்களும் கடை பிடித்து மற்றோர்கள் அறியும் படி வாழ்ந்து இதை பரப்புங்கள் என்று அவர்களுக்கு உத்தரவ இட்டார்.
ஆனால் துவையல் பண்டாரங்கள் என்ன நினைத்தார்கள் தெரியுமா? இருந்த சொத்துக்களை எல்லாம் கிடைத்த விலைக்கு விற்று விட்டு வந்து விட்டோமே, குடும்பத்தினர் எல்லாம் தடுத்த போது கூட எங்களுக்கு தோப்பையா இருக்கிறார் என்று கூறி வந்து விட்டோமே, இனி அவர்கள் மத்தியிலே சென்றோம் என்றால் நம்மை எல்லாம் ஏளனமாக பார்ப்பார்களே, நம் சாதியினரே நம்மை நக்கலாக பேசுவார்களே, ஆகவே நாம் இறுதி வரை இங்கேயே இருந்து விட வேண்டும், மீறி அவரவர் ஊர்களுக்கு செல்ல வேண்டிய சூழல் வந்தால் அனைவரும் இந்த கடலிலே குதித்தேனும் உயிரை மாய்த்து கொள்ள வேண்டும் என முடிவெடுத்து அவரவர் ஊர்களுக்கு செல்லாமல் அங்கேயே இருந்தனர்.
இதனை அறிந்த அய்யா வைகுண்டப் பரம்பொருள் அந்த துவையல் பண்டாரங்களுக்கு தர்மமாக வரும் அரிசியை குறைத்தார். அப்படியும் அவர்கள் மனம் மாறாமல் இருக்கவே வைசூரி என்னும் அம்மை நோயை அவர்கள் மீது ஏவி விட்டார். அந்த அம்மை நோயிலே 13 துவையல் பண்டாரங்கள் இறந்து போயினர்.அது மட்டும் இன்றி நிறைய பேருக்கு கண் பார்வை மங்கி காது கேட்கும் திறனை இழந்து வாடி போய் இருந்த சூழலில் தான் நம் அய்யா அன்றைக்கே சொன்னாரே அவரவர் ஊர் களுக்கு செல்லுமாறு, நாம் அதை கேட்கவில்லையே, அய்யாவின் உத்தரவை மீறியதால் தான் நமக்கு இந்த நிலை வந்தது என்பதை உணர்ந்து அனைவரும் முட்ட பதியை விட்டு சாமிதோப்பு சென்று நடந்தவைகளை எல்லாம் அய்யாவிடம் சொல்லி அழுதனர்.
அய்யாவும் அவர்களின் நோய் பிணிகளை எல்லாம் தீர்த்து,எம்பெருமான் வல்லாதான் வைகுண்டப் பரம்பொருள் தன் பேச்சை கேட்டு இத்தனை சிரமங்களை தாங்கி வெற்றிகரமாக துவையல் துவைத்த பண்டாரங்களுக்காக அந்த ஆதி பரம்பொருள் பிச்சைகாரனாக வடிவெடுத்து அன்பர்களிடம் தர்மம் எடுத்து அந்த துவையல் பண்டாரங்களுக்கெல்லாம் அமுது படைத்தார். இப்படி அய்யாவின் உத்தரவு படி அந்த துவையல் பண்டாரங்கள் தத்தமது ஊர்களுக்கு சென்றதும் அவர்கள் விற்று சென்ற சொத்துக்களை எல்லாம் வாங்கியவர்கள் மீண்டும் மனது மாறி அவர்களின் சொத்துக்களை அவர்களிடமே திரும்ப கொடுத்தனர்.ஒரு சில ஊர்களில் துவையல் பண்டாரங்களுக்கு ஊர் மக்கள் ஒன்று கூடி புதிதாக வீடுகளும் கட்டி கொடுத்தனர்.
இந்த துவையல் தவசின் சிறப்பு என்ன என்றால் துவையல் தவம் இருந்த காலம் முழுதும் நிறை மாத கர்ப்பிணி நிறை மாதமாகவே இருந்தாளாம், பெண்களுக்கு மாதவிடாய் வரவில்லையாம், என்னே இறைவனின் விந்தை.
இப்படி அந்த துவையல் பண்டாரங்கள் தான் காலையில் உகம் படிப்பதையும் மதியம் உச்சி படிப்பதையும் மாலை உகம் படிப்பதையும் அன்று அய்யாவிடம் கற்றதை பரப்பினர்.இப்படி கடும் தவம் புரிந்து நமது அய்யாவழியை அனைவரும் அறிய செய்த அந்த துவையல் தவசிகள் தியாக செம்மல்களை கூட அகிலம் துவையல் பண்டாரங்கள் என்று தான் அழைக்கிறது. ஆனால் இன்றோ ஆளாளுக்கு அய்யாவழியை நான் வளர்த்தேன் நான் வளர்த்தேன் என்று கூறுக்கொண்டு அந்த குரு இந்த குரு என்று தங்களுக்கு தாங்களே பட்டம் வேறு வழங்கி கொள்கிறார்கள்.
போற்றுவர் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே, சர்வமும் கிருஷ்ணார்ப்பனம்.இதை உணர்ந்தவர் மட்டுமே உண்மையான அய்யாவின் பிள்ளையாக இருக்க முடியும். மாறாக என்னால் எல்லாம் நடந்தது என்ற எண்ணம் மனதில் வந்தால் நாம் மண்ணோடு மண்ணாக போவது திண்ணம்.
இப்படிப்பட்ட துவையல் பண்டாரங்களின் தியாகத்தைபோற்றுவோம்.“தாழ்ந்து இரு என் மகனே சட்டைக்குள்ளே பதுங்கி“ என்ற அய்யாவின் வார்த்தையை நெஞ்சில் வைத்து, அய்யாவே அனைத்துக்கும் மேலானவர்,நாமெல்லாம் அவரது ஆசையினால் அசைவாடும் சிறு துகள்கள் தான் என்ற உண்மையை உணர்ந்து ஆணவம் அகற்றி அய்யாவின் பாதம் சரணடைவோம்.எப்போது நாம் நம்மை உயர்வாக எண்ணுகிறோமோ அப்போது நாம் இந்த துவையல் பண்டாரங்களை மனதில் நினைத்தால் அவர்களின் தியாகத்தின் முன்பு நாம் சிறு துரும்பாக தான் தெரிவோம்.
சர்வமும் வைகுண்ட மயம்
நல்லறிவு
– ஹரி வெங்கடேஷ் அய்யா 8508518505
ஒரு வரியில் ஒரு புராண கதை தந்த அகிலம்
– பா. கவிதா அம்மா 009609805601