தர்மயுக முரசு செப்டம்பர் 2023
அய்யாவின் அருளால் எந்நாளும்நன்னாளே
-அசோக்குமார் அய்யா – 009607704901, 8012174032.
“ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டமாய் தோன்றினார்”
“சனாதன தர்மத்தை காக்க வந்த அய்யா வைகுண்டர்”
இறைவன் வகுத்து தந்த சனாதன தர்மத்தின்படி செயல்பட்டு தர்மத்திற்காக தங்கள் வாழ்க்கையை அர்பணித்துச் செயல்படும் தர்ம போராளிகள் அனைவருக்கும் வீர வணக்கம்.
தர்ம வீரர்களே! யுகா யுகங்கள் தோறும் யுகதர்மத்தை நிலைநாட்ட ஆதிமகாமூலத்து ஆதிநாராயணர் அவனியில் அவதரித்து அதர்மத்தை அழித்து தர்மத்தை ஸ்தாபித்து அருள்பாலித்து நமக்குத் தர்மத்தைப் போதித்து அவரிடம் போய் சேர வழிகாட்டுகிறார். இப்படி அவர் போதித்த தர்மமே சனாதன தர்மமாகும். அச் சனாதனதர்மமே இந்து சமயம், சனாதன தருமம், வேத சமயம், வைதீக சமயம், அய்யாவழி போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது.
சனாதன சமயம் என்றால் அழிவில்லாத, நிலையான அறம் எனப்படும். இது வேதங்களை அடிப்படையாக கொண்டு இயங்குவதால் வேத சமயம் என்றும். வேதநெறிகளையும் சாத்திரங்களையும் மையமாகக் கொண்டுள்ளதால் வைதீக சமயம் என்றும் அழைக்க படுகிறது.
முந்தைய யுகங்களில் இருந்த அசுரன் சனாதன தர்மத்தையோ அல்லது சனாதன தர்மத்தின் ஆகமங்களையோ ஒன்றும் செய்யவில்லை. அதைப் பின்பற்றுபவர்களை மட்டும் துன்ப படுத்தினான். ஆனால் இக் கலியுகத்தில் தோன்றிய கலியனான அசுரனோ சனாதன தர்மத்தை அழிக்க வேண்டும் என கங்கணம் கட்டி ஆகமத்தைக் கூறழித்தான்.
போலியான கட்டுக்கதைகளைப் புகுத்தினான். அறியாமை மூடநம்பிக்கையை விதைத்தான். சாதிய ஏற்ற தாழ்வுகளை ஏற்படுத்தினான். இதனால் மக்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டனர். இப்படிப்பட்ட மோசமான காரியங்களை ஏற்படுத்தியது சனாதன தர்மம் என்று பொய் பிரச்சாரம் செய்தான்.
சனாதன தர்மத்தை அழிக்க மாற்று மதங்களை இக் கலியுகத்தில் உருவாக்கிக் காட்டினான் கலியன். இச் சூழ்ச்சியில் சனாதன தர்மத்தைப் பின்பற்றும் மக்களே அகப்பட்டனர். தங்கள் தாய் தர்மத்தை மறந்து பணத்திற்காக கலியன் உண்டுபண்ணின மாற்று மதங்களை நாடினர். நாடினது மட்டுமல்லாமல் தங்கள் தாய் தர்மமான சனாதன தர்மத்தையே இழிவாக பேசினர்.
இப்படி இக்கலியுகத்தில் தர்மமும் பாதிக்கப் பட்டது தர்மவான்களும் பாதிக்கப் பட்டனர். இதைப் பார்த்த பாரளந்த பெருமாள் நாராயணர் ஆதி வைகுண்டமாக கொல்லம் ஆண்டு 1008 மாசி 20 ஆம் தேதி திருசெந்தூர் திருப்பாற் கடலினுள் அவதரித்து தருவை கரையில் மனு சொரூபம் காட்டி தெச்சணம் எழுந்தருளி மக்களை ஒன்றுதிரட்டி தான் யார் என்பதை வெளிப்படுத்தி மக்களுக்கு விவேகத்தையும் ஞானத்தையும் ஏற்படுத்த அகிலத்திரட்டு அம்மானை என்னும் வேத ஆகமத்தை அருளி ஆதி சானாதன தர்மத்தைக் காட்டினார்.
சாதி இல்லை பேதம் இல்லை ஏற்றத் தாழ்வுகள் இல்லை ஒன்றே குலம் ஒருவனே தெய்வம் என்ற உண்மையை உணர்த்தி கலியன் பெற்ற வரங்களை அழித்து அவனை ஒன்றும் இல்லாதவன் ஆக்கி மக்களை எல்லாம் சான்றோர் ஆக்கி கலியனால் விதைக்கப் பட்ட விசச் செடிகளை அறுத்து எறிய வழிகாட்டி மக்களைப் பார்த்து நீங்கள் கூலிக்கார மக்கள் இல்லை கோடி வரிசை பெற்ற மக்கள் என்று தங்களின் பயணத்தை உணர்த்தி தர்மம் வளர வழிவகை செய்து நல்லவர்களைத் தெரிந்தெடுக்க பொய் சொரூபம் ஒன்றனுப்பி வைகுண்டத்தில் பள்ளி கொண்டார்.
அன்பானவர்களே! இப்போது இங்கு நடக்கும் தீமைகளுக்கு கலியனோ அல்லது அவன் பெற்ற வரங்களோ அல்ல காரணம் நாராயணம் வைகுண்டமாக அவதரித்து அவன் பெற்ற வரங்களை அழித்து அவனை நடை பிணமாக்கினார். எனவே இப்போதைய தீமைகளுக்குக் காரணம் கலியனும் வெண்நீசனும் விதைத்த விதைகள் மற்றும் நம் மனதில் படித்துள்ள ஆறு அகப் பகைகளே காரணம்.
இதை உணர்ந்து பெரிய அதர்மவானாகிய கலியனிடம் இருந்து விடுதலை பெற்று தந்த நமது தாய் தந்தையாகிய அய்யா வைகுண்ட பரம்பொருளுக்கு நன்றி சொல்லி அவர் வகுத்துத் தந்த ஆகம நெறிமுறைகளை தவறாது பின்பற்றி ஐம்புலன்களைக் கட்டுப்படுத்தி ஆறு அகப்பகைகளை வெல்வோம்
உலகத்தின் முன்னோடிகளாக திகழ்ந்து கலியன் விதைத்த விசச் செடிகளை அறுத்து சனாதன தர்மத்தின் உண்மைத்தன்மையை உலகுக்கு உணர்த்தி எல்லா ஜீவாத்மாக்களையும் தன்னிலையை உணர வழிகாட்டி தாய் தர்மமான சனாதன தர்மத்தைப் பின்பற்றாதவர்களைத் தாய் மதம் திரும்ப வழிவகை செய்து உலக ஜோதிகளாக ஜொலித்து எல்லோரையும் பிரகாசிக்க வைத்து வாழ்ந்து காட்டுவோம்
“நாராயணமே வைகுண்டம்”
“உறுதி மகனே உலகமதை ஆளுவது”
அகில கேள்வி
1. சான்றோர்கள் பிறந்த இடம்?
2. ஐபேரின் பத்தினி யார்?
3. தேவகிக்குத் திருமணம் நடைபெறக் காரணமாக இருந்த முனிவர் யார்?
4. சான்றோர்களுக்கு முதல் பெயர் வைத்தது யார்?
5. சான்றோர்களுக்குத் தாலாட்டு பாடியது யார்?
விடை 9 பக்கம் பார்க்கவும்
அகிலதிரட்டு அம்மானை மூலமும், உரையும்
-க. ரீகன் அய்யா- 0096893145654
நாற்பத்து நாற்கோடிரிஷி நமக்கென்ற றிந்திலையோ
அறியாத வனோகாண் ஆண்டிக்குத் தூதுவந்தாய்
சிறியனென் றிராதே என்சிரசுடம்பு கண்டிலையோ
உந்தனுட கந்தன் உயரமது நானறிவேன்
என்னுடைய உயரம் இனிநீ யறிவாயே”
சிவபெருமான் முதற்கொண்டு எங்களுக்கு இடம் கொடுத்து அவருக்கு இருக்க இடமில்லாமல் நாராயணரிடம் தஞ்சம் அடைந்ததைச் சொல்லி முப்பது முக்கோடி தேவர்கள் என்று சொல்லக்கூடிய எல்லா வகைப்பாட்டு தேவர்களும் ரிஷிகளும் இப்போது நாங்கள் சொல்லும் சொல்படி கேட்டுத்தான் நடப்பார்கள் அப்படிப்பட்ட வலிமை பொருந்தியவர்கள் நாங்கள் இப்படிப்பட்ட பராக்கிரமங்களைக் கொண்ட எங்களைப் பற்றி நீ கேள்விப்பட்டதில்லையா? அப்படிக் கேள்விப் பட்டிருந்தாயானால் ஆண்டி பண்டாரமாகிய கந்தனுக்காக நீ தூது வந்திருப்பாயோ? என்று தூதுவனைப் பார்த்து இகழ்ச்சியாக பேசுகிறார்கள்.
எங்களை ஏதோ சிறியவர்களாக பலத்தில் குன்றியவர்கள் என்று நினைத்து விடாதே; எங்களுடைய சிரசையும் எங்கள் உடல் அமைப்பையும் பார்த்தபின் எங்களை சாதாரணமாக எடை போடாதே? உன்னை இங்கே எங்களிடம் தூதுக்கு அனுப்பிய கந்தனைப் பற்றி எங்களுக்குத் தெரியும். அவன் அளவும், அவன் பலமும் எங்களுக்குத் தெரியும். இனி எங்கள் பலத்தினை நீ அறியத்தான் போகிறாய் என்று தூதுவனிடம் சூரர்கள் கூறினார்கள். கந்தபெருமானின் ஆண்டி தோற்றத்தைப் பார்த்து சூரர்கள் தவறாக கணக்கிட்டு இவ்வார்த்தையைத் தூதரிடம் கூறினார்கள்.
எல்லா யுகங்களிலும் தன் உண்மையான சக்தி நிலையை இறைவன் வெளிப்படுத்தாமல் சாதாரண தோற்ற நிலையில் அவதாரம் செய்வதால் இறைவன் பலத்தினை அசுரர்கள் உணர்வதில்லை. அப்படித்தான் கந்தபெருமானின் உண்மை பலத்தினை அறிய முடியாத சூரர்கள் அவர் தோற்றமான பண்டார வடிவத்தைக் கண்டு இவர் சாதாரணமானவர் என்று சூரர்கள் எண்ணினர்.
கானகத்தில் வாழும் கந்தனுக் கேவுரைநீ
என்று மதமாய் இவன் பேசத் தூதனுந்தான்
அன்று அந்தச் சூரனுக்கு அறையாம லேதுரைப்பான்”
பேயோரி நாய்நரிகள் பிய்த்துப் பிடுங்கியுன்னை
கண்ட யிடத்தில் கழுக்கள் மிகப்பிடுங்கி
கொண்டோடித் தின்ன வேலாயுதங் கொண்டு வந்தார்”
மூவர் சிறையும் மும்முடுக்கமும் தீர்த்து
உன்னுடைய சேனை வுற்றப்படை யழித்து
நின்னுடைய கோட்டை நீறுபொடியாக்கி
அரசாள்வா ரெங்கள் ஆறுமுக வேலவனார்”
அன்றே மனது வுளந்துணிந்தே துரைப்பான்
ஆனால் அறிவோம் ஆண்டிதனை யுமிங்கே
போனா லென்னோடே போறு செய்ய ஏவிடு நீ
சூரனிவை யுரைக்கச் சூலாயுதப் பெருமாள்
தூதன் மிகநடந்து சொன்னான் சுவாமியர்க்கு”
சாமி வேலாயுதத்தை கையிலெடுத்தா ரம்மானை
வேலாயுத மெடுத்து வேதப்படை சூழ
சூலாயுதப்பெருமாள் துடியாய் நடக்கலுற்றார்
கந்தனார் வேசங் கலந்திருந்த மாயவரும்
வந்தார் காண் சூரன் வலுவிழந்தா னம்மானை”
மூரன்படைக்கு முன்னே நடக்கலுற்றான்
கண்டரீராறு கரத்தோ னகமகிழ்ந்து
பண்டார வேசம் பண்பாய் யெடுத்திருக்கி
முன்னே வருஞ்சூரன் முகத்தை யவர்பார்த்து
பின்னே சுவாமி புத்திமிக வுரைப்பார்”
(தொடரும்)
அய்யா உண்டு
தர்மயுக முரசு வாசகர்களுக்கு அன்பான வேண்டுகோள்:
எனவே அப் அறப்பாடசாலையில் கலந்து கொள்ள எல்லா சனிக்கிழமையும் கீழ் கண்ட லிங்கை கிளிக் செய்து இணைந்து பயன் பெறுங்கள் https://meet.google.com/btd-zzjs-uph. இந்த வகுப்பில் திருஏடு வாசிப்பு, பாராயணம், ஆன்மிக கதை, அய்யா பாடல், அய்யாவின் உபதேசங்கள் போன்றவை அன்பர்களால் சிறப்பாக வழங்கப்படுறது. அன்புக்கொடி சொந்தங்கள் இந்த ஆன்மிக வகுப்பில் கலந்து பயனடைய அன்போடு வேண்டுகிறோம்.
அய்யா உண்டு
இறைவனை எங்கே காணலாம்
– மீனா சுகின் அம்மா- 9344813163
ஒரு நாள் அந்த விவசாயி அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு தூங்குவதற்குச் சென்றார். அப்பொழுது இறைவன் அவர் கனவில் தோன்றி நாளை உன் வீட்டிற்கு வருவேன் என்னை எதிர்பார்த்து இரு என்று கூறினார். இதைக் கேட்ட விவசாயி மிகுந்த மகிழ்ச்சியுடன் தன் மனைவியை எழுப்பி செய்தியைக் கூறினார். உடனே அவளும் இறைவன் வந்தால் ஆடை நகை மாளிகை கேட்க வேண்டும் என்ற பேராசையுடன் இருந்தாள்.
ஆனால் அந்த விவசாயி இறைவனை எப்படி உபசரிப்பது என்று எண்ணிக் கொண்டே விடிவதற்குள் சமையலுக்கு வேண்டிய பொருட்களுடன் பழங்கள் வாங்கி வந்தார். இருவருமாக சேர்ந்து சமையல் வேலைகளை முடித்துவிட்டு இறைவனுக்காகக் காத்திருந்தனர்.
மேலும் விவசாயி இறைவன் தரையில் இருந்து உணவு அருந்தினால் உடம்பில் தூசிப் பட்டுவிடும் என்பதற்காக ஓர் உயர்ந்த கம்பளியும் இறைவனுக்குப் புதிய ஆடையும் எடுத்து வைத்திருந்தார். வெகு நேரம் ஆகியும் இறைவன் வரவில்லை. இருவரும் வழி மேல் விழி வைத்துக் காத்திருந்தனர்.
அப்போது தூரத்தில் ஓர் உருவம் தென்பட்டது அது பக்கத்தில் வரும்போதுதான் அவர் ஒரு பிச்சைக்காரன் என்பது தெரிந்தது. அந்தப் பிச்சைக்காரன் விவசாயி இடம் உணவு கேட்டார். விவசாயியும் எந்தத் தயக்கமும் இன்றி இறைவனுக்காக அமைக்கப்பட்ட உணவை பிச்சைக்காரருக்குப் பசி தீரக் கொடுத்தார். அவரும் பசியாறிச் சென்றார். ஆனால் விவசாயி மனைவி அவரைத் திட்டிக் கொண்டே இருந்தாள்.
அதற்கு அடுத்ததாக மதிய வேளை ஒரு விதவைப் பெண் கையில் குழந்தையுடன் வந்தாள். மேலும் தனக்கு உதவ யாரும் இல்லை என்றும் தன் குழந்தையை வளர்க்க உதவுமாறும் கேட்டாள். விவசாயி இறைவனுக்காக வைத்திருந்த உண்டியலை அப்பெண்ணுக்குக் கொடுத்து என்னை உன் தந்தையாக நினைத்துக் கொள் உனக்கு என்ன உதவி வேண்டுமானாலும் என்னிடம் கேள் என்று இரக்கத்துடன் ஆறுதல் வார்த்தைகளைக் கூறி அனுப்பினார்.
மாலை வேளையாகியும் இறைவன் வரவில்லை அப்போது ஒருவர் ஆடை முழுவதும் சேறுடன் விவசாயி வீட்டுக்கு வந்தார். மேலும் தான் தொழில் அதிபர் என்றும் சேற்றில் தவறுதலாக விழுந்து விட்டதாகவும் ஆடை வாங்க அருகில் கடை இல்லை என்றும் கூறினார். உடனே விவசாயி இறைவனுக்காக வாங்கி வைத்திருந்த ஆடையை அந்தத் தொழில் அதிபருக்குக் கொடுத்தார். அதற்குப் பதிலாக தொழிலதிபர் பணம் கொடுத்தும் மனைவி வாங்குமாறு கட்டாயப்படுத்தியும் இவர் வாங்கவில்லை.
இரவு வேளையாகியும் இறைவன் வராததால் சோர்வாக இருவரும் இருந்தார்கள். அப்போது ஒரு முதியவர் குளிரில் நடுங்கியபடி வந்தார். விவசாயி அவருக்கு மீதம் இருந்த உணவையும் இறைவனுக்கு வாங்கி வைத்திருந்த கம்பளியையும் கொடுத்து அனுப்பினார். ஆனால் அவரின் மனைவியோ இறைவனுக்காக வைத்திருந்த பொருட்களைத் தானம் செய்த காரணத்தினால் தான் இறைவன் வரவில்லை என்று சண்டையிட ஆரம்பித்தாள். மேலும் இறைவன் வராத காரணத்தினால் இருவரும் வருத்தமாகத் தூங்கச் சென்றனர்.
அப்போது விவசாயின் மனைவியின் கனவில் இறைவன் தோன்றினார். உடனே அவள் இறைவா என் கணவன் தங்களுக்காக வைத்திருந்தவற்றைப் பிறருக்குக் கொடுத்த காரணத்தினால் தான் நீங்கள் வரவில்லை என்று எனக்குத் தெரியும் அவரை மன்னியுங்கள் என்று வேண்டினாள். அதற்கு இறைவன் நான் நான்கு முறை உங்கள் வீட்டிற்கு வந்தேன். உன் கணவரும் என்னை நன்றாக உபசரித்து அனுப்பினார். அதற்கு நீயும் அவரைத் திட்டினாயே என்று கூறினார்.
இவளுக்கு ஒன்றும் புரியவில்லை அப்போது இறைவன் நான் பிச்சைக்காரனாக, விதவை பெண்ணாக, தொழில் அதிபராக, முதியவராக வந்தேன் என்றார். உடனே அவளின் கண்களில் நீர் வடியத் தொடங்கியது தன் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டாள். கனவு முடிந்ததும் தன் கணவரிடம் நடந்ததை பற்றி கூறினாள். இருவரும் இறைவன் தங்கள் வீட்டிற்கு வந்தார் என்று மனநிறைவுடன் இருந்தார்கள்.
அன்பானவர்களே இக்கதை போன்று தான் இறைவன் எப்படி நம்மை சந்திக்க வருகிறார் என்பது நமக்குத் தெரியாது. ஆனால் நிச்சயம் ஒருநாள் வருவார். “எண்ணத்துலையாத ஏது சொருபமதும் கண்ணிமைக்கும் முன்னே கனகோடி செய்வோனே”. இந்த அகிலவரிக்கு இணங்க எப்படிப்பட்ட சொருபத்திலும் இறைவன் வருவார். நாம் செய்கின்ற ஒவ்வொரு தரும செயலிலும் இறைவனை நாம் காணலாம். இறைவன் நம் உள்ளத்தில் தான் இருக்கிறார்.
அய்யா உண்டு
அகில விடை
1. அரிகோண மாமலையில் அயோத அமிர்த கங்கை
2. துரோபதை
3. நாரதர்
4. அரன் (சிவன்)
5. சரஸ்வதி
அய்யா உண்டு
அய்யாவே துணை
– ஹரி வெங்கடேஷ் அய்யா 8508518505
அய்யாவழியின் மிக முக்கியமானவராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருக்கும் ஓர் அன்பர் அய்யாவின் மீது மிகவும் பக்தியானவர். அய்யாவின் மீது நீங்கா அன்பை வைத்திருப்பவர். அவர் என்னதான் சுத்த சைவமாக இருந்தாலும் அவர் வைத்து நடத்தும் உணவகம் ஒன்றில் ‘அய்யா துணை’ என்று கொட்டெழுத்தில் எழுதிய அவர் அதன் கீழே “அசைவ உணவகம்” என்று எழுதி அசைவ உணவை அனைவருக்கும் பரிமாறி வருகிறார். இது அவருக்கே முரண்பாடாக தெரியவில்லையா? அவருக்கு நெஞ்சு உறுத்தவில்லையா? அவர் செய்யும் தீச்செயலுக்கு தனக்குத் துணையாக அய்யா வருவார் என்ற நெஞ்சுரம் எங்கிருந்து வந்தது அவருக்கு?
“சத்தியத்தில் நீ இருந்தால் சாமி துணை இருப்பேன்”
இவர் அப்படி என்றால் இன்னும் ஒருவரோ கறிக்கடை வைத்து நடத்துகிறார். இவர் நடத்தும் கடையின் பெயரை “அய்யா கோழிக்கறிக் கடை” என்று வைத்துள்ளார்.
மறுகலசல் இட்டு மாளாமல் வாழ்ந்திருங்கோ
உங்களுக்குப் புற்பூண்டு உண்டு அதை புசித்து
சங்கையுடன் ஒரு தலத்தில் தண்ணீர் குடித்திருங்கோ”
தயவு செய்து அன்பர்களே, நாம் செய்யும் பாவச் செயல்களுக்குத் துணை வேண்டுமெனில் அய்யாவை துணைக்கு அழைக்காதீர்கள்… ஏனெனில் நமது அய்யா சற்று வித்தியாசம் ஆனவர். அவர் தாய்தமர் என்றும் தமது கிளைகள் என்றும் பார்ப்பவர் அல்ல. சத்தியத்திலும் தர்மத்திலும் யார் யார் வாழ்கிறார்களோ அவர்களுக்குத்தான்
“அய்யா துணை”. தர்மமதில் உறையும் பொறுமை குல தீரன்” ஆன அய்யா வைகுண்டரின் வழியில் இருக்கும் நமக்குத் தர்மம் மற்றும் சத்தியம் மிகமிக முக்கியம். ஆகவே இது போன்ற செயல்களுக்குப் பெயர் பலகைகளில் அய்யாவின் நாமத்தைப் பயன்படுத்தாதிருப்பது நலம்.
தவம் என்றால் என்ன?
– S. அன்ன செல்வம் அம்மா – 9443622222
தன்னுள் மறைந்துள்ள மெய்ப்பொருளை அடைய விடாமுயற்சி மூலம் செயல்படுவது தவம். தவத்தில் வெற்றி பெற்ற மனிதர்கள் தெய்வமாக போற்றப்படுகின்றார்கள். தவத்தின் மூலம் அட்டமா சித்துகளைப் பெற்று மனித உடலில் வாழும் போதே அற்புத அதிசயங்களை நிகழ்த்துகிறார்கள். இது தவத்தினால் கிடைக்கும் பலனாகும். அட்டமா சித்துகள் எட்டு வகைப்படும். இதைப் பற்றி திருமூலர் கூறும் போது
தேடித்தவம் செய்து கண்டேன் சிவகதி
வாடித் தவம் செய்வதே தவம்
இவை களைந்து ஊரில் பல உலவோர் எத்தவரே”
அய்யா வைகுண்டர் அருள் நூலில் தவத்தைப் பற்றிக் கூறும் போது
நான் மறைக்கக் கூடாது ஞானமுத்துச் சொல்லுகிறேன்
எங்கே எங்கே ஒழித்தாலும் இரவு பகல் ஒன்றாகும்
அன்பர்களே என் மக்களே அறிந்தோர் அறிந்திடுங்கள்”
இந்த உண்மையை நான் மறைக்காமல் உங்களுக்கு உபதேசமாக சொல்லுகிறேன் என்று அய்யா நமக்குக் கூறுகின்றார். சிவஞான அறிவைப் பெற்ற நான் உங்களுக்குப் பிழைத்துக் கொள்ளும் வழியைச் சொல்லிவிட்டேன். நீங்கள் தவம் செய்யாமல் வேறு எந்த வழியிலும் கர்ம வினைகளை வெல்ல முடியாது. என்னுடைய பிள்ளைகளுக்கு நான் ஞானஅறிவை சொல்லிவிட்டேன். விருப்பம் உள்ளவர்கள் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று உபதேசமாகக் கூறுகின்றார்.
கலியுக மக்களாகிய நமக்குத் தவம் சாத்தியமா? தவத்தினால் பலன் கிடைக்குமா? என்றால் நிச்சயமாக கிடைக்கும். ஏனென்றால் இப்போது பிறவி எடுத்துள்ள மக்கள் நன் மக்களே ஆனாலும் கலியில் சிக்கி தவிக்கின்றார்கள். கர்த்தாவை நோக்கி கடுந்தவங்கள் நாம் செய்தால் புத்தியும் திருப்தியாகிய நிறைவும் வரும்.
தவ வலிமையால் மனிதன் ஆறாவது அறிவிலிருந்து ஏழாவது அறிவாகிய பேரறிவுக்குக் கடந்து சென்று பேரின்ப நிலையை அடைய முடியும். தவம் என்பது சிவநிலையை அடைதல்.
தவத்தை நினைத்து யாரும் பயப்பட வேண்டிய தேவையில்லை. நாமும் சிவகதி அடைந்து நாராயணப் பரம்பொருளோடு ஐக்கியம் ஆகலாம். நமக்கு அட்டமா சித்திகள் தேவையா என்றால் அவைகள் நமக்குத் தேவையில்லை. நமக்கு அய்யா வைகுண்டரின் இறை ஞானசித்தம் மட்டும் போதுமானது. எனவே தவம் செய்து பரகதி பெறுவோம்.
அய்யா உண்டு
அய்யா அருளிய வாழ்வியல் நெறி முறைகள்
-த. சீதா லெட்சுமி அம்மா – 949655691
“பொறுமையின் சிறப்பு”
“பொறுமை பெரிது பெரிய திருமகனே
பொறுதி மகனே பெரியோரா யாகுவது
பொல்லாதா ரோடும் பொறுமை யுரைமகனே”
எப்படி என்றால் நாம் பொறுமையோடு பல விஷயங்களை ஆராய்ந்த போது அது நமக்குப் பல வெற்றிச் சாதனைகளைத் தருகிறது .நாம் பொறுமையுடன் நன்மை தீமைகளைப் பற்றி அலசி ஆராய்ந்து செயல்படுத்துகின்ற எந்த செயலும் நமக்கு வெற்றியைத்தான் தரும் .ஒரு சிற்பி அழகான சிலையை வடிக்க அல்லது செதுக்க வேண்டும் என்றால் அவரிடம் பொறுமை அவசியம் இருக்க வேண்டும். அப்போதுதான் அந்தச் சிற்பியால் ஒரு சிலையை அழகாகச் செதுக்க முடியும். நம்முடைய சிந்தனையும் சிறப்பானதாக அமைய பொறுமை அவசியம்.
பொறுமை கடலினும் பெரிது என்பார்கள். வற்றாத கடலைவிடப் பொறுமை பெரியது என்றால் பொறுமையின் சிறப்பு எத்தகையது என்பதை நாம் உணரவேண்டும். நாம் சாதிப்பதற்கு அறிவுடன் பொறுமை இருக்க வேண்டும்.
அறிவு என்பது நன்மை தீமைகளைப் பிரித்துப் பார்ப்பதற்குத் திறக்கின்ற ஓர் உணர்வின் திறவுகோல். பொறுமை அந்த உணர்வின் திறவுகோலாக விளங்குகிறது. ஒருவரிடம் ஆணவம் என்ற காற்று வீசினால் கோபம் என்ற சுனாமி சுழன்றடிக்கும். அப்போது அழிவு கோபப்படுபவனுக்கு மட்டுமல்ல. கோபப்படுகிறவனைச் சார்ந்த சமுதாயத்திற்கும் ஆகும்.
சிந்திக்கத் தெரிந்தவர்கள் தான் சாதனைச் சிகரத்தை எட்ட தெரிந்தவர்கள். ஒவ்வொருவருக்குள்ளும் அகப்பகையாகிய காமம், குரோதம், லோபம், மதம், மாச்சரியம்,மோகம் என்ற அகப்பகையும் இருக்கிறது. அன்பு, இரக்கம், கருணை, தர்ம சிந்தனை, என்ற நல்ல குணங்களும் இருக்கிறது. ஆனால், நல்லச் சிந்தனை மேலோங்கி தீயவை அழிக்கப்பட வேண்டும் என்றால் அதற்குப் பொறுமை அவசியம்.
நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போல் பொறுமைக்கு இரண்டு பக்கங்கள் உண்டு. ஒன்று சிந்திப்பது மற்றொன்று சாதிப்பது. ஆகவே, நாம் வாழ்க்கையில் சாதிப்பதற்குப் பொறுமை மிக மிக அவசியமாகும். நமது வாழ்க்கையில் நமக்குப் பெருமையைத் தேடித் தருவது பொறுமையாகும். இதுதான் அய்யா பொறுதிதான் என் மகனே பெரியோராகுவது என்கின்றார்.
இன்றைய காலச் சூழலில் பொறுமையைச் சோதிக்கும் விதமாகத் தான் மாய்கையாகிய கலியின் தாக்கம் இருக்கிறது. கலியின் தாக்கத்தால் மக்கள் ஆத்மஞானம் பெற முடியாமல் துன்புறுகிறார்கள். ஆன்ம ஞானம் பெற வேண்டும் என்று நாம் எண்ணினால் நாம் அந்த நிலையை அடைவதற்குப் பொறுமை அவசியம். ஒவ்வொரு மனிதனுக்கு இந்நிலை மாறுபடும். சிலர் சிறு வயதிலே ஆன்ம ஞானம் பெற்று விடுவார்கள். சிலர் பல சோதனைகளைத் தாண்டிப் பெறுவார்கள். இதற்குப் பொறுமை அவசியம்.
இவ்வாறு ஆன்ம ஞானம் விழிப்பு பெற்று இறைவனை நம்முள் உணர்வதற்குப் பல தடைகள் இந்தக் கலி வாழ்வில் வந்துக் கொண்டு தான் இருக்கும். அப்படிப்பட்டச் சூழலில் நாம் அதற்குக் காரணமானவர்களோடு மோதிப் பகைத்துக் கொள்ளக் கூடாது. போற்றுவதும், தூற்றுவதும் கவித்தன்மை என்பதை உணர்ந்து பொறுமையைக் கடைப்பிடித்து இறையருளைப் பெறுவதற்கு நாம் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். எப்படிப்பட்ட தீய எண்ணம் கொண்டவர்கள் எதிர்த்தாலும் நாம் பகை கொள்ளாமல் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
அய்யா உண்டு
அன்புக்கொடி சொந்தங்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம்: அன்பானவர்களே, தாங்கள் சார்ந்துள்ள தாங்கல் வரலாற்றை நமது தர்மயுக முரசு பத்திரிகையில் வெளியிட வேண்டும் என்றால் உங்கள் தாங்கலின் வரலாற்றை அழகாக எழுதி 0096893145654 என்ற வாட்சப் எண்ணிற்கு தாங்கலின் புகைப்படத்தோடு சேர்த்து அனுப்பி தாருங்கள். அதனை வருகின்ற மாதங்களில் நமது தர்மயுக முரசு பத்திரிகையில் பதிவு செய்து வெளியிடலாம்.
அய்யா உண்டு
அய்யாவின் உபதேசங்கள்
– பா. கிருஷ்ணமணி அப்புகுட்டி அய்யா 9841933992
செவ்வென்ற பேச்சுச் செப்பியிரு என்மகனே”
உயிருக்கு உயிராக இருக்கின்ற இறைவனை எங்கெங்கோ வெளியே தேடாமல் நமக்குள் இருக்கின்றான் என்பதை உணர வேண்டும். அதை விடுத்து கண்ட கண்டதை எல்லாம் கோயில் தெய்வம் என்று எண்ணி வணங்கினால் எந்த ஒரு பலனும் இல்லை.
பொறுத்து இருந்தவரே பெரியோரே ஆகுமக்கா”
அதனால் தான் திடீரென வருகின்ற கோபத்தை அடக்க வேண்டும் என்கிறார் நமது அய்யா. கோபம் எவ்வகையிலும் நமக்கு நன்மையைத் தராது, மாறாக தீமையையே விளைவிக்கும் எனும் உண்மையைப் புத்தியால் உணர்ந்து, கோபத்தை அடக்கி பொறுமையாக இருக்கின்றவரே பெரியவராக ஆக முடியும்.
பேராகவே இருந்தால் பேறுங்களுக்கே கிடைக்கும்”