தர்மயுக முரசு ஆகஸ்ட் 2023
அய்யாவின் அருளால் எந்நாளும்நன்னாளே
-அசோக்குமார் அய்யா – 009607704901, 8012174032.
சனாதன தர்மிகளே: ஒரு கூட்டம் நம் அம்மை அப்பனான அய்யா வைகுண்ட பரம்பொருளை எங்கள் தாத்தன் பாட்டன் பூட்டன் என்று பொய் சொல்லுகிறார்கள். ஒரு கூட்டம் இறந்து போன முத்துக்குட்டி தான் அய்யா வைகுண்டர் என்று பொய் சொல்லுகிறார்கள். ஒரு கூட்டம் ஆண்டவன் வைகுண்டத்தை சமுதாய சீர்திருத்தவாதி, அவர் ஒரு மகான், மாமனிதன் என்று பொய் சொல்லுகிறார்கள். இன்னொரு கூட்டமோ வைகுண்ட தயாபரனை மனிதன் கடவுளானான் என்று பொய் உரைக்கிறார்கள். இன்னும் சிலரோ வைகுண்ட மாமணியை உலகத்தின் ஒளிவிளக்குகளின் வரிசையில் வைத்து ஒரு தீர்க்கதரிசி என்று பொய்யான தகவலைப் பதிவு செய்கிறார்கள்.
இன்னும் சிலர் ஒருபடிக்கு மேல் சென்று என்பெருமான் ஓம்கார நாயகனாம் வைகுண்ட சுவாமிக்கு ஒரு கற்பனையான உருவத்தை வரைந்து எப்படியாவது மனிதன் என்று சொல்லிவிட வேண்டும் என்று துடிக்கிறார்கள்.
இன்னும் சிலரோ அதையும் தாண்டி சனாதன தர்மத்தை வகுத்துக் கொடுத்தது மட்டுமல்லாமல் கலியுகத்தில் சனாதனதர்மத்தைக் காக்க வந்த ஆதி மூல ஏகப் பரம்பொருளாம் அய்யா வைகுண்ட பரம்பொருளை சனாதன தர்மத்தை அழிக்க வந்தவர் என பொய்யான தகவலை மேடை தோறும் தொங்க விட்டுத் திரிகின்றனர்.
இன்னும் சிலரோ நாங்கள் தான் அய்யா வைகுண்டரின் நேரடி வாரிசு என்றும் நான் ஆறாவது தலைமுறை என்றும் புலம்பி வருகின்றனர். அவர்கள் இன்னும் ஒருபடிமேல் சென்று சுவாமிதோப்பு பதியில் தவறான கல்வெட்டுகளைப் பதித்து உலகளந்த மாயன் ஆதி வைகுண்ட அவதாரத்தை தவறாகச் சித்தரித்து வரலாற்றுப் பிழை செய்து பாவ கர்மாவை பெருக்கி வருகின்றனர்.
இப்படி பல பேர் செய்யும் இடையூறுகளை எண்ணிப் பார்க்கும் போது எம்பெருமான் நாராயணர் கலைக்கோட்டு மாமுனிவரிடம் தனது வைகுண்ட அவதாரத்தை எப்படி நிகழ்த்துவேன் என்று சொன்னதைப் பார்ப்போம்.
எந்தன் பேரோ காணும் யாரோ எனச் சொல்வார்
இதோ வந்தான் என்பார் இவனில்லை என்றிடுவார்
அதோ வந்தான் என்பார் அவனில்லை என்றிடுவார்
இப்படியே சூட்சமொன்று எடுப்போம் நாம் மாமுனியே
எப்படியும் உள்ளறிவோர் எனையறிவார் மாமுனியே.”
ஆனால் “எப்படியும் வுள்ளறிவோர் யெனையறிவார் மாமுனியே” என்ற நாராயணரின் கூற்றுப் படி நல்லவர்கள், இறையடியாளர்கள், இறைவனே தஞ்சம் என்று எண்ணி இறைவனிடம் சரணாகதி அடைந்து செயல்படும் அனைத்து ஜீவாத்மாக்களும் நாராயணரின் கலியுக அவதாரமாம் அய்யா வைகுண்ட அவதாரத்தைக் கண்டு கொள்வார்கள்.
அதுமட்டுமல்லாமல் இறை தொண்டாற்றும் இறையடியாளர்களுக்குப் பல சாவால்களும், பல விதமான போராட்டங்களும் நேரும். ஆனாலும் நாம் அதனை அன்போடும் நிதானத்தோடும் பண்போடும், ஆகம நெறிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படுவோம் என்று சொன்னால் அனைத்துவிதமான இடறுகளையும் உடைத்தெறிந்து உலகத்தின் ஒளிச்சுடருகளாக வெளிப்பட்டு கலியுக அவதாரமாம் அய்யா வைகுண்ட அவதாரத்தை உலகறிய செய்யும் சான்றோர்களாக திகழ்ந்து ஆண்டவனின் அருள் பெற்று தர்மயுக வாழ்வு மெறுவோம்.
அய்யா உண்டு
அகில கேள்வி
1. நீதம் என்றால் என்ன?
2. ஐந்துமுகம் உடையவர் யார்?
3. நான்முகன் யார்?
4. மாமறலி மூவர் யார்?
5. கன்னிமார்களின் பெயர் என்ன?
விடை 7 பக்கம் பார்க்கவும்
அகிலதிரட்டு அம்மானை மூலமும், உரையும்
-க. ரீகன் அய்யா- 0096893145654
நல்ல சிவனாரை நந்தீசுரனாக்கி
வல்லபிலமுள்ள வாய்த்த திக்கெட்டிலுள்ள
பாலரை வீரர்களாய்ப் பண்ணினா ரெம்பெருமாள்”
எனவே நாராயணர் சூரர்களை வதைக்க தனது தங்கையாகிய அம்மை உமையவளை ஒரு கூர் வேலாயுதமாக அமைத்து சூரர்களை வதைக்கும் ஆயுதமாக அமைத்தார். மேலும் சிவபெருமானை நந்தீசுரராக அமைத்து தனக்கு பக்கபலமாக வைத்துக் கொண்டார். மேலுலக பாலர்களை வீரர்களாக அமைத்து இவர்கள் மூலமாக சூரர்களை எதிர்க்க ஆயத்தமானார்.
கந்தனென நாமம் கனத்த சடையாண்டியுமாய்
கொந்து கொந்தாய்ப் பீற்றைக் கூறைமிக வணிந்து
வேலுமிகப்பிடித்து வெண்ணீறுமே தரித்து
நாலுரண்டு சிரசில் நல்லவுத்தி ராட்சமிட்டு”
தான் கொண்ட பண்டார வடிவத்திற்கு கந்தன் என நாமம் கொண்டு தன்னுடைய மேனி முழுவதும் திருநீற்றை வாரி பூசிக் கொண்டார். தன்னுடைய ஆறு சிரசிலும் உத்திராட்ச மாலையை அணிந்து கொண்டார். இப்படி தான் கொண்ட வடிவத்தில் சக்தி வேலாயுதத்தையும் கைப்பிடித்து சூரர்களை வெல்ல ஆயத்தமானார்.
முத்திரிகளிட்டு கந்தப் பொக்கணங்கள் தோளிலிட்டு
சன்னாசிபோலே தானடந்து யெம்பெருமாள்
நன்னா தானெனவே நாலஞ்சிகவி தான்பாடி
வந்துவொரு மலைமேல் வாய்த்த கூடாரமிட்டு
சந்துமிகச் சொல்லி தான்விட்டார் சூரனுக்கு”
ஒரு சன்னாசி எப்படி நடந்து கொள்வாரோ அது போலவே அவர் நடந்து கொண்டு பாசுரங்களை பாடிக் கொண்டு சூரர்களை அழிப்பதற்காக தேர்ந்தெடுத்த மலை மேலே தன்னுடைய படை பரிவாரங்களோடு வந்து கூடாரமிட்டார். இப்போது சூரர்களை எதிர்த்துப் போரிடுவதற்காக தாம் வந்திருக்கின்றோம் என்று சூரர்களுக்கு அறிவிப்பதற்காகவும், அவர்களுக்கு வேண்டிய புத்திகளை சொல்வதற்காகவும் ஒரு தூதனை அழைத்து இப்போது அந்த தூதனிடம் காரியத்தை எடுத்துக் கூறலுற்றார்.
பாரமுள்ள கைலை பருவதமுந் தேவருட
சிறைக ளகற்றி வானோர் தேவரையும் நீயனுப்பி
திறவானாகச் சீமையர சாளுமென
இப்படியே ஆகாட்டால் யின்றுகளித் தெட்டாம்நாள்
அப்படியே வுந்தனக்கும் ஆனகந்த சுவாமியர்க்கும்
சண்டைதானென்று தான்கூறி வாவெனவே”
தூதன் மிகநடந்து சிவனே செயலெனவே
காதமொன்றுதான் கடந்து கண்டானே சூரனையும்
கந்த சுவாமி கருத்தா யுரைத்த தெல்லாம்
அந்தயசுரனுக்கு அத்தூதன் தானுரைத்தான்”
ஏறாதபாவி யிகழ்த்தினா னப்போது
தூததனென்றோன் போகாமல் துடர்ந்து மிகப்பிடித்து
பாதப் பெரும் விலங்கில் பாவிவை யென்றுரைத்தான்”
தூதுவர்களை எந்த சூழ்நிலையிலும் சிறைப்படுத்தக்கூடாது என்பது ராஜநீத மரபு. ஆனால் அநியாயமாக அநீத ஆட்சி புரியும் அசுரர்கள் தங்கள் முடிவு காலத்தில் எந்த நல்ல உபதேசங்களையும், சட்டங்களையும் மதிப்பது இல்லை. அதுபோலவே இந்த சூரர்களும் செய்யக்கூடாத செயலாக தூது வந்த தூதுவரையும் சிறைப்படுத்தி அவர்கள் எண்ணத்தை தூதுவருக்கு சொல்லலானார்கள்
பாரடாவுந்தன் கந்தன் படுகிறதை
ஈசுரனும் யெந்தனுக்கு யிருந்த யிடமருளி
மாயனிடம் போயலையில் வாழ்ந்தது நீ கண்டிலையோ
எமலோகமான யிந்திரலோகம் வரையும்
நவகோளு நானல்லவோ நாட்டமறிந்திலையோ”
சிவபெருமானே எங்களுக்கு அவர் இருக்கக்கூடிய கைலையை தந்து அதன் பிறகு எங்களை எதிர்க்காமல் நாராயணரிடம் சென்று அவர் பள்ளி கொண்டிருக்கக் கூடிய பாற்கடலில் தஞ்சம் புகுந்ததை பற்றி உனக்கு தெரியாதா?
மேல் உலகமான எமலோகம் முதல் இந்திரலோகம் வரை எல்லா உலகங்களையும் நாங்கள் வெற்றி கொண்ட செய்தி உனக்குத் தெரியாதா? அது மட்டுமல்லாமல் ஒன்பது கோள்களும் எங்கள் கட்டுப்பாட்டில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. நாங்கள் நினைத்தால் எதுவும் செய்வோம். என்று தூதனிடம் அவர்கள் பராக்கிரமங்களை தொடர்ந்து கூறுகின்றார்கள்.
(தொடரும்)
அய்யா உண்டு
நடப்பதெல்லாம் நன்மைக்கே
– மீனா சுகின் அம்மா- 9344813163
தென் தமிழகத்தின் ஒரு சிற்றூரில் கந்தன் என்ற பரம ஏழை வாழ்ந்து வந்தான். கிழிந்த அழுக்கடைந்த ஆடை அணிந்து இருப்பான். இவனுக்கு பெற்றோர் இல்லை. ஒரு வேலையும் இல்லை உணவுக்காக அங்கும் இங்கும் அலைந்து கிடக்கும் சிறு வேலைகளை செய்தும் வாழ்ந்து வந்தான்.
ஒரு நாள் மதியம் வேளை அதிக பசியால் வரும் பொழுது ஒரு சிவாலயத்தைக் கண்டான். மிகுந்த மகிழ்ச்சியால் உள்ளே சென்று சாப்பிடுவதற்குப் பிரசாதமாவது கிடைக்கும் என்று உள்ளே சென்றான். அங்கே மக்கள் இலையில் பிரசாதத்துடன் வந்து கொண்டிருந்தார்கள். கந்தன் மிகுந்த மகிழ்ச்சியில் தனக்கும் உணவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வரிசையில் நின்றான். அப்போதுதான் ஒரு பெரியவர் மற்றொருவரிடம் இன்றைக்கு அரசனின் பிறந்தநாள் ஆகையால் இன்று அன்னதானம் செய்கிறார்கள் என்று கூறிக் கொண்டே சென்றார்.
கந்தன் வரிசையில் நிற்பதைப் பார்த்த மற்றவர்கள் முகம் சுளித்தார்கள். இவன் உடலில் இருந்து துர்நாற்றம் வீசியதால் இவனைவித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்த்தார்கள். இதைப் புரிந்து கொண்ட கந்தன் ஒதுங்கி மற்றவர்களை முன்னே விட்டுவிட்டுக் கடைசியாக சென்றான். ஆனால் அவனுக்கு மட்டும் உணவு கிடைக்கவில்லை தீர்ந்து விட்டது.
உடனே கந்தன் மனம் வருந்தி அக்கோவிலின் கோபுரத்தைப் பார்த்து இறைவா இன்றைக்கும் நான் பட்டினி தானா ஏன் எனக்கு மட்டும் இப்படி ஒரு நிலை என்று கேட்டான். பின்னர் கோவிலின் குளத்தின் அருகே சென்று கைகால் கழுவி விட்டு அந்த நீரையே குடித்துவிட்டு அங்கேயே அமர்ந்தான். அப்போது அங்கே வந்த அரசர் அனைவரும் பசி தீர்ந்து இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் கந்தனிடம் வந்து சாப்பிட்டாயா அப்பா? பசி தீர்ந்ததா? என்று மகிழ்ச்சியுடன் கேட்டார். அதற்குக் கந்தன் யார் என்று கூட திரும்பிப் பார்க்காமல் எப்படி ஐயா என் விதி என்று ஒன்று உள்ளதே என் தலையெழுத்து வழக்கம் போல் இன்றும் பட்டினிதான் என்று கூறினான்.
அதைக் கேட்ட அரசன் கந்தனின் அருகில் சென்றான். அப்போதுதான் நீரில் அரசரின் முகம் தலையில் கிரீடத்துடன் தெரிவது கண்ட கந்தன் வந்திருப்பது அரசன் என்பதை அறிந்து எழுந்து மதிப்பு அளிக்கவில்லை என்று மன்னிப்பு கேட்கிறான். உடனே அரசன் கந்தனைத் தன்னுடனே தன் தேரிலே அரண்மனைக்கு அழைத்துச் சென்றார்.
தன் பணியாட்களை அழைத்து கந்தனைக் குளிப்பதற்கு ஏற்பாடு செய்யவும் நல்ல ஆடை கொடுக்கவும் கூறினார். மேலும் அரசர் கந்தனைப் பார்த்து என் பிறந்தநாளில் எந்த உயிரும் பசியாக இருக்கக் கூடாது என்று எண்ணினேன் ஆனால் உன் பசி ஆறவில்லை எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. ஆகவே, இன்று என் கையாலே உனக்கு பரிமாறுகிறேன் என்று அரசரும் அரசியுமாக கந்தனுக்கு உணவு வழங்கினர். மேலும் குடம் நிறைய பொற்காசினை வழங்கி நேர்மையான முறையில் தொழில் செய்து வறுமை நீங்கி வாழக் கூறினார்.
உடனே கந்தன் அழத்தொடகினான். அரசருக்கு ஒன்றும் புரியவில்லை. இவனுக்கு நல்லது தானே செய்தேன். எதற்கு அழுகிறாய் என்று கேட்டார். உடனே கந்தன் அரசே இன்று ஒரு நாள் மட்டும் தான் உணவுக் கிடைக்கவில்லை என்று மனவிரத்தியில் கோயில் கோபுரத்தைப் பார்த்து இறைவா என்னை ஏன் இப்படி ஒரு இழி பிறவியாக படைத்தாய் என்று மனம் வருந்தி வேண்டினேன். ஆனால் இறைவன் எனக்கு இப்படி ஒரு நல் வாழ்வை தந்திருக்கிறான் என்று கூறிவிட்டு நடப்பதெல்லாம் நன்மைக்கே இறைவன் அனைத்து நிகழ்விற்கும் ஒரு காரணம் வைத்திருப்பார் என்று நன்றி கூறிவிட்டு தன் வாழ்வை சிறப்பாக நடத்தினார். இதைத்தான் அகிலத்தில் தேவர்கள்.
தூறு மிகப் பேசி தொழாத பேர் ஆனாலும்
ஏழாம் பிறப்பில் எள்ளளவு தான் நினைத்தால்
வாழலாம் என்றோருக்கு வைகுண்டம் ஈந்தோனே
அய்யா உண்டு
மஎம்மதமும் சம்மதமா?
– ஹரி வெங்கடேஷ் அய்யா 8508518505
– அய்யா
எல்லா மதத்திலும் இருக்கும் கடவுள் ஒருவர்தான் என்பதற்காக எல்லா மதமும் ஒன்று ஆகிவிடாது. சில நாட்களுக்கு முன் எனக்குத் தெரிந்த அய்யாவழி அன்பர் ஒருவர் இஸ்லாமிய மத விருந்தில் கலந்து கொண்டு அங்கு பரிமாறப்பட்ட உணவை உண்டு விட்டு அங்கிருந்து வெளியே வந்தார். இதைக் கண்டு சற்று வருத்தம் அடைந்த நான் அவரிடம் சென்று ஒரு வார்த்தைக் கேட்டேன்.
அய்யாவழி என்று சொல்லுகிறீர்கள் நெற்றியில் நாமமும் போட்டுக் கொள்கிறீர்கள். ஆனால் மாற்று மதத்தவரின் மதவிருந்தில் கலந்து கொள்ளுகிறீர்களே! இது நியாயம்தானா? என்றேன். ஆனால் அவரோ உடனடியாக எனக்குப் பதிலளிக்கும் விதமாக “நீ மத வெறியன்” ஆனால் நானோ அய்யா காட்டிய சமத்துவ வழியில் செல்பவன். எம்மதமும் எனக்குச் சம்மதமே என்றார். “பேய் எச்சித் தின்று அவர் பேய் போலே அலைகிறாரே” என்று அய்யா சொன்னது இவர்களைப் போன்றவர்களைத்தானோ என்று நினைத்து அவ்விடம் விட்டு அகன்றேன்.
இவரைப் போன்ற சிலர் “எல்லாக் கடவுளும் தாமே என்று அய்யா சொல்லி இருக்கிறாரே ஆகவே பைபிள் குர் ஆனும் அய்யா உடையதுதான் என்று தவறாக நினைத்து விடுகிறார்கள். இறைவன்தான் ஒருவனே தவிர மதம் ஒன்று அல்ல. இறைவன்தான் ஒருவனே தவிர மதத்தைப் போதிக்கும் ஆகமங்கள் ஒன்று அல்ல.
அய்யாவழியினர் பலர் இக்கருத்தில் தெளிவாக இருந்தாலும் அகிலத்திரட்டைப் படித்து உணராத சில அய்யாவழியினர் இந்தக் கருத்தில் குழம்பிப் போய் கிறிஸ்துவ மற்றும் இசுலாமிய மதங்களும் அய்யாவின் மதமே என்று புரிந்து கொள்ளும் அவல நிலையில் உள்ளனர். இந்தத் தவறான புரிதலால் மாற்று மதத்தவர்களுடன் அவர்கள் மதக் கொள்கைகளில் சமரசம் செய்து கொள்கிறார்கள். இது மிகவும் தவறான போக்கு.
“உண்டு பண்ணி வைத்த நல்ல உட்பொருளைத் தேடாமல் கண்டதெல்லாம் தெய்வம் என கை எடுப்பான் சண்டாளன்” என்ற அய்யாவின் வாசகம்தான் நினைவுக்கு வருகிறது. இது போன்று மாற்று மதத்தவரின் கொள்கைகளில் சமரசம் செய்து கொண்டு நமது அய்யாவழி கொள்கையை (உட்பொருளை) அறியாதிருக்கும் அன்பர்களுக்கு அய்யாவழியின் மேன்மையை எடுத்துச் சொல்வது நமது கடமை ஆகும்.
அய்யா உண்டு
அகில விடை
1. நீதி (தர்ம நெறி) (அற ஒழுக்கம்)
2. அரன் (சிவன்)
3. பிரம்மா
4. எமன், காலன், தூதன்
5. மரகதம், வல்லி, வள்ளி, சலிகை, சரிதை, சரகத கன்னி, அரிமடவு
அய்யா உண்டு
சனாதன தர்மமே அய்யாவழி
– ஹரி வெங்கடேஷ் அய்யா 8508518505
– அய்யா
உண்மையில் அவரது நோக்கம் அதுவாக இருந்தால் இறைவனின் மஹா யுக அவதாரம் எதற்கு? சாதாரண ஒரு மனிதனாலேயே இதைச் சாதிக்க முடியுமே. அப்போது நடந்த அடக்குமுறைகளை எதிர்க்க அய்யா அவதரித்தார் என்றால் இப்போதும் சில இடங்களில் அது போன்ற அடக்குமுறைகள் இருக்கத்தான் செய்கிறது. அவற்றை எல்லாம் எதிர்க்க தனித் தனியாக அவதாரம் தேவைப்படுமா?
அய்யாவழி என்றால் என்ன? என்று கேட்பவர்களுக்கு நாம் இது போன்ற முக்கியமற்ற விளக்கங்களைக் கொடுத்ததனால்தான் அய்யா வைகுண்டரை மனிதராகவும் சமூகச் சீர்திருத்தவாதியாகவும் சித்தரிக்க முயலும் கூட்டத்தாருக்கு வேலை எளிதாகிப் போனது. “முக்கியமற்ற விளக்கமா? சான்றோரைக் காக்கத்தானே அய்யா அவதரித்தார்” என்று தோன்றலாம். ஆம் சான்றோரைக் காக்கத்தான் அய்யா அவதரித்தார்.
ஆனால் அந்த அடக்குமுறைக்கு உள்ளானவர்கள் மட்டும்தான் சான்றோரா? நாமும் சான்றோர்தானே. அப்படி என்றால் நம்மைக் காக்க வேண்டிய பொறுப்பும் அவருக்கு உள்ளது தானே.. ஆகவே அந்த அடக்குமுறையில் அவதிப்பட்ட சான்றோர்களைக் காப்பது மட்டுமின்றி கலியுகம் முடியும் வரைக்கும் உள்ள ஒவ்வொரு சான்றோரையும் காப்பது அவர் பொறுப்புதான். அகிலத்திரட்டின் கோல விளையாட்டுகளைக் கொஞ்சம் புரிந்து கொள்வோம்.
அய்யா வைகுண்டர் என்றால் யார்? என்று கேட்பவர்களுக்கு நமது முதன்மை பதில், கலியுகத்தை முடித்து தர்மயுகத்தைத் தோற்றுவிக்க இறைவன் எடுத்த யுக அவதாரம்தான் அய்யா வைகுண்டர் என்பதை தெளிவாக சொல்வதாக இருக்க வேண்டும். கலியைத் தன்னால் சாக வைக்க அவர் தவம் இருந்ததன் மேன்மையைச் சொல்ல வேண்டும்.
கலி தன்னால் சாக அவர் தவம் செய்து விட்டதால் தன்னாலே சாவதற்குரிய வழியைக் கலி தேடிக்கொள்ளும் என்பதை விளக்கமாக விவரிக்க வேண்டும். ஆகவே தன்னால் சாக இருக்கும் கலியை அழிக்க இனிமேல் ஓர் அவதாரம் தேவைப்படாது. அவரே இறுதி அவதாரம். அவரே கலியுகத்தீர்வை. இதனை நாம் தெளிவாகச் சொன்னால் மட்டுமே இனிமேல் தான் கல்கி அவதாரம் வரும் என எண்ணி விண்ணை வியந்து பார்த்துக் கொண்டிருக்கும் வினோத வித்தகர்களுக்குப் புரியும்.
அதை விட்டு விட்டு அகிலத்திரட்டின் சாராம்சத்தைப் புரிந்து கொள்ளாமல், காரணம் போல் செய்த கதையின் கருத்தைப் புரிந்து கொள்ளாமல் திருவிதாங்கூர் மன்னன்தான் கலியன். குறிப்பிட்ட சாதியினர் மட்டும்தான் சான்றோர் என எண்ணிக் கொண்டு அதற்கு விளக்கம் கொடுத்துக் கொண்டு இருந்தால் அதை விட ஒரு சிறந்த மடமை எதுவும் இல்லை.
கண்ணுமக்கா என் சூத்திரத்தைக் கண்டறிந்து பாருங்கப்பா
அய்யாஉண்டு
யோகம் என்றால் என்ன?
– S. அன்ன செல்வம் அம்மா – 9443622222
பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா கூறுகின்றார் “அர்ஜுனா! நீ யோகி ஆவாயாக” என்று சொல்வார். யோகி என்பவன் தவம் செய்பவர்களை விட மேலானவன். சாஸ்திரங்களைப் படித்தவனை விட உயர்ந்தவன் என்பதாகும்.
யோகப் பயிற்சியின் மூலம் உடலில் தூய்மை, உள்ளத்தில் தூய்மை, சொல்லில் தூய்மை, செயலில் தூய்மை எண்ணத்தில் தூய்மை, என விரிவடைந்து கொண்டே செல்லும். அது போன்று ஞானிகள் தூய்மையான உணவையே சாப்பிடுவார்கள். சைவ உணவையே உண்பார்கள். அதுவே சாத்வீகக் குணத்தை கொடுக்கும்.
பால் நன்றாக இருந்தாலும் பால் பாத்திரம் சுத்தமாக இல்லை என்றால் அந்த பால் கெட்டுப் போய்விடும். அதுபோன்று தான் கெட்ட உணவுகளை நாம் சாப்பிட்டால் நம்முடைய மனம் கெட்டுவிடும். ஒவ்வொரு உணவிற்கும் ஒவ்வொரு குணங்கள் உண்டு. நாம் உண்ணும் உணவில் இருந்து தான் நமக்கு குணங்கள் உருவாகின்றன.
1.யோகத்தின் மூலம் தீமைகள் செய்யாமல், பொய், களவு, கொலை போன்ற பாவ செயல்களைச் செய்யாமல் நல்லவர்களாக நேர்மையாக வாழ முடியும்.
2. ஒழுக்க நெறியோடு உடல் தூய்மை, உள்ளத்தில் தூய்மை, பொறுமை, வாய்மை, தர்மம், தெய்வ நம்பிக்கை ஆகியவை வந்து விடும்.
3. உயிர்களிடம் அன்பு செலுத்துதல் போன்ற நியமங்களோடு வாழ முடியும்.
4. மூச்சுக் காற்றை முறைப்படி சுவாசித்து பிராணனை அதிகரிக்கும் சக்தி உண்டாகிறது.
5. ஐம்புலன்களையும் அடக்குகின்ற மனம் உண்டாகிறது.
6 இறைவனை அகத்தில் தேடும் ஆற்றல் கிடைக்கிறது.
7. இறைவனை நினைத்து பேரானந்தத்தில் லயித்து இருக்க முடிகிறது.
8 மனதை ஒருநிலைப்படுத்தி பரஞ்சோதியைக் காண முடிகிறது.
9.தன்னை மறந்து இறைநிலை அடைய முடிகின்றது.
10.இறைவனோடு ஐக்கியமாகி தன்னைப் பற்றியும் இறைவனைப் பற்றியும் அறியும் சிவஞான நிலை உண்டாகிறது.
இந்த யோக முறைகளை நாம் நன்றாக உணர்ந்து செயல்பட வேண்டும். யோக சாதனைகள் மூலம் தன்னை உணர்ந்து விட்டால் இறைவனை உணர்வதற்கான மனோபலம் வந்து விடும். “மனம் இருந்தால் மார்க்கம் உண்டு” என்பது இதுதான்.
அகிலத்திரட்டு அம்மானை அருள் நூல் ஆகியவை அய்யா வைகுண்டர் நமக்கு அருளிய ஞான உபதேச நூல்கள். அவைகளில் ஞானம் அடைவதற்கு என்ன செய்ய வேண்டும் என்கிற ஞான போதனையே தரப்பட்டுள்ளது. அவற்றைப் படித்து அவற்றின் உட்பொருள் அறிந்து நாம் நடந்து கொண்டோம் என்றால் தர்மயுக வாழ்வு நிச்சயம்.
மனிதன் அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்கள் யோகநிலைக்குச் செல்லும் போது காக்கும் கடவுள் வைகுண்ட நாராயணர் மலைபோல் உள்ளதைப் பனிபோல் மாற்றுகிறார். எனவே தான் யோகக் கலையைச் சாகாக்கலை என்று சொல்கின்றார்கள்.
அய்யா உண்டு
கலியுக வினோதம்
-அலெக்ஸ் ராஜன் அய்யா 8248688566
கலியனுக்கு பிறந்த வெண்ணீசன் தனது பல தந்திர, மாந்திர வித்தை மூலமாகவும், ரசவாத வித்தையாலும் உபாயத்தால் செல்வ செழிப்பை உண்டு செய்து, புதிய வேத ஆகமங்களை உருவாக்கி அதன் படியே புதியதோர் காலக்கணக்குகளையும் உருவாக்கி, மக்களுக்கு வேண்டிய அடிப்படை தேவைகளை உபகாரமாய் கொடுத்து, பணமானதை மிகுவாகக் கொடுத்து அவனது மதத்தில் சேர்த்து வேண்டிய கூட்டம் சேர்ந்த பின் நாடு பிடிக்க கிளம்பினான்.
இங்கே நடப்பது எல்லாம் தந்திர செயலாகவே நடக்கிறது. பண்டாரமா வேடமிட்டு திரியும் அனேக பேர்கள் தனது கும்பிக்கு இரை தேடி கொடுப்பார் முகம்பார்த்தே அலைகின்றனர். ஆலய நிர்மானமும், அனுஷ்ட்டான முறைகளும் கொண்டிருக்கும் ஒருவனை தேவ உயிர் எனவோ, ஒன்றுமில்லா ஆண்டிப்பண்டாரமாக அடிகள் பட்டு திரிபவனை ஆகாதவன் எனவோ அடையாளம் கொள்ள இயலாது.
ஸ்ரீ கிருஷ்ண காலம் தொட்டே, துரியனும், பஞ்சவரும் ஒரு கொடியில் பிறந்திருக்கும் உபாயமும், கிருஷ்ணரே பூலோகில் தேவ, அரக்க அடையாளம் கொண்டிருந்த பெற்றோருக்கு பிறந்திருக்க, அவர்களின் உயிர்க்கூறின் அடியாளம் தேவலோகம் என்பது மறை பொருளாக மறைக்கப் பட்டது.
எனவே, அது இது என அடையாளமிட இயலாத வண்ணம் எங்கிலும் கலப்பான ஏனைய இடத்தின் உயிர் மூலத்தை அறிந்தவன் படைத்தவனே அன்றி அவர்களின் கும்பிடுதல், குவித்தல், நம்பிடல், தெய்வீக வேசம், பூஜித்தல் போன்ற நடவடிக்கைகளில் ஊர்ஜிதம் செய்ய இயலாது… ஏனெனில் இவைகளை எல்லாம் தனக்கும் உற்றதாக கொண்டு படைத்தவனை வணங்கும் அறிவும் வரமாக பெற்று பிறந்தவன் கலியன்.
ஆகவே இவ்வகையான கும்பிட்டு நமஸ்காரங்கள் மூலம் இவன் இத்தகையோன் என அறிய இயலாது அன்பு மக்கா!
அய்யா உண்டு
விதியை வெல்லும் இரகசியம்
– சீதா தினகரன் அம்மா 6383619064
இராமனை தன் மகனாக பாசமாக நினைத்த கைகேயி எப்படி இப்படி ஒரு வேண்டுதலை தசரதன் முன் வைக்க மனம் வந்தது? அங்கு தான் விதி வேலை செய்கிறது! கூனி என்னும் பெண், அவள் மனத்தை தன் வாதத் திறமையினால் கொஞ்சம் கொஞ்சமாக நஞ்சாக மாற்றுகிறாள். அதற்கு ஏற்றாற்போல் முன்பு தசரதன் கைகேயிக்குக் கொடுத்த இரண்டு வரங்கள் அவள் உதவிக்கு வருகின்றன. கைகேயின் எண்ணத்தை முறியடிக்க தசரதன் எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. அவன் தன் மதியால் எத்தனையோ வாதங்களை அவள் முன் வைத்தான். எதுவும் அவள் மனத்தை மாற்றவில்லை.
இங்கே இராமன் காட்டுக்குப் போகவேண்டும் என்பது விதி. போகாவிட்டால் பின்னால் இலங்கையில் இராவண வதமே நடந்திருக்காது, இராமனின் அவதாரக் காரணமே நிறைவேறி இருக்காது. மேலும் தசரதனின் வாழ்க்கையை பின்னோக்கிப் பார்த்தால் அவன் கண் தெரியாத கணவன் மனைவி இருவரின் மகனை தெரியாமல் கொன்று அவர்களின் சாபத்துக்கு ஆளாகியிருப்பார். தசரதன் இறக்கும் தருவாயில் அவருடன் எந்தப் பிள்ளையும் உடன் இருக்கமாட்டார்கள் என்பதே அவரின் சாபம். அன்று அவர் செய்த செயல் பின்னாளில் இவ்வாறு விதியாக மாறியது. இவ்வாறு ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலும் ஒரு காரணம் இருக்கும், ஒவ்வொரு செயலுக்கும் வரும் நாட்களிலும் ஒரு வினை உண்டாகும், அதுவே விதி.
விதியை வெல்ல நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டியதில்லை! எப்போதும் கடவுளிடம் எனக்கு இதை கொடு!அதை கொடு! என வேண்டினால் உங்களுக்கு சோதனைகளையும்,கஷ்டங்களையும்தான் கடவுள் கொடுப்பார். எனவே இறைவன் திருவடியை இறுக பற்றிக்கொண்டு ‘இறைவா நீ எதை வேண்டுமானாலும் செய், எப்பொழுது வேண்டுமானாலும் செய்!. ஆனாலும் என்னைக் கைவிட்டு விடாதே!! ‘என்ற ஒரு பரிபூரண பக்தியின் அடிப்படையில் உள்ள பூரண சரணாகதிக்கு நீங்கள் வந்துவிட்டாலே உங்களை இறைவன் எப்போதும் கைவிடமாட்டார்.
இறைவன் நினைத்தால் ஒரு நொடியில் நம் வாழ்வை தலை கீழாக மாற்ற முடியும்!குப்பையில் இருப்பவரையும் கோடீஸ்வரராக மாற்ற முடியும்!