தர்மயுக முரசு ஏப்ரல் 2023

அய்யாவின் அருளால் எந்நாளும்நன்னாளே

-அசோக்குமார் அய்யா – 009607704901, 8012174032.

“எனக்காகும் பேர்கள் இனம் கேளு மாமுனியே
ஆடு கிடாய் கோழி அறுத்து பலியிடார்கள்”அகிலம்.
செயல்வீரர்களே: எந்த பதி அய்யாவழிபாட்டு இந்து தர்மத்தை முன்னெடுக்க வேண்டுமோ, எந்த பதி அய்யா வைகுண்ட அவதாரத்தை உலகெங்கும் பறைசாற்ற வேண்டுமோ அந்த பதி தவறான பாதைஅய்யாவின் சொல் கேட்கும் பிள்ளைகளாக செயல்பட்டு அவருக்கு ஆகின்ற மக்களாக இப்புவியில் விளங்கும் அன்புக் கொடி ஆன்றோர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம்

அன்பானவர்களே: கலியனின் வருகையால் அவனது கண்ணில் சிக்காமல் சென்றுகொண்டிருந்த மகாவிஷ்ணுவிடம் “அய்யனே, தாங்களே அவனைக் கண்டு ஓடினால் நாங்கள் எப்படி இக்கலியில் இருந்து மீண்டு வரமுடியும் என்று வினவுகிறார்.

பலவிதமான வரங்களை வாங்கி வந்த கலியனின் பிடியில் இருந்து தப்புவது மிகக் கடினம், அப்படிப்பட்ட கலியுகத்தில் இப்படி இப்படி வாழ்ந்து எனது அருளைப் பெறலாம் என்று வழிவகைகளைக் கூறும் இடத்தில் இந்த உபதேசத்தைச் சொல்லுகிறார். உலகில் உண்டாக்கிய ஒவ்வொரு ஜீவராசிகளும் இப்படி, இப்படித்தான் வாழவேண்டும், இன்ன இன்ன உணவுகளை உண்ணவேண்டும் என்று வகையிட்ட இறைவன், மனிதனுக்கு மட்டும் நன்மை தீமைகளை ஆராயும் சிந்தனை/பகுத்தறிவான ஆறறிவு சக்தியையும் கொடுத்து அதன் படி வாழுங்கள் என்று சொல்ல, அதன் அடிப்படையில் உலகம் இயங்குகிறது.

மனிதப்பிறவி என்பது உலகை சமநிலை படுத்துவதற்காகவா? புல்லாகி, பூண்டாகி, மரமாகி, பறவையாகி, விலங்காகி, மனிதனாய் வந்தோம் என்று பல ஆன்றோர்கள் கூறுகிறார்கள். அப்படிப்பட்ட மனிதப் பிறவி உணவு உண்பதற்காகவா? இல்லை., மனித உடலமைப்புத்தான் இவ்வுலகில் மேல் நிலைக்கு உயர உதவி செய்யக்கூடியது, அப்படிப்பட்ட உடலை வாங்கி வந்த ஆன்மாக்கள் பாவங்களைச் சம்பாதிக்கலாமா?

ஒருசில சமயத்தவர்கள் தங்களின் வசதிக்காக “ஆட்டையும்/மாட்டையும் மனிதனுக்காகவே படைத்திருக்கிறான், அதை சாப்பிடுவது நமது கடமை” என்று சப்பை கட்டுவார்கள். இவர்கள் உணவு சுழற்சிக்காக படைக்கப் பட்டவர்களோ! என்றும் எண்ணத் தோன்றுகிறது.

இன்னும் ஒரு சிலரோ முட்டை அசையா பொருள் தானே, அது சைவம் தான் என்று உண்ணலாம் என்பார்கள். அதைக் கொஞ்சம் சிந்திக்கவேண்டும். ஒரு பறவையானது முட்டையிட்டு கண்ணும் கருத்துமாக, அம்முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொறித்து காக்கிறதெனில், அப்பறவைக்கே தெரிந்திருக்கிறது அம்முட்டையில் தன்னைப் போன்ற ஓர் உயிர் இருக்கிறது என்று, ஆனால் ஆறறறிவு படைத்த மனிதனுக்குத் தான் தெரியாமல் முட்டைகளை அவித்தும், ஆம்லேட் போட்டும் தின்று கொண்டு நான் முட்டையைத் தான் தின்றேன் கோழியைத் திங்கவில்லை என்று தன்னை அசைவவானாக காட்டி, பெருமைபட்டு கொள்கிறான்…

ஆம், ஒரு சான்றோன்/ யோகி/ஞானி வாழ்வதற்கு வேண்டி அவன் இருக்கும் இடத்தில் அவனுக்காகவே பல ஜீவராசிகள் வாழ்ந்து கொண்டிருக்குமாம், ஞானி ஒன்றும் செய்யமாட்டான், அவன் சார்பாக உலக சமநிலை காரியங்களை மற்ற உயிரினங்கள் செய்யுமாம். அப்படிப் பட்ட உயிரினங்களாகவே நாம் அசைவம் உண்ணும் மனித கூட்டத்தை எண்ண வேண்டி உள்ளது.

“கொன்ற பாவம் தின்றால் போச்சு” – செய்த பாவங்கள் அதற்குரிய தண்டனைகளை அனுபவித்தால் மட்டுமே போகும் என்பதைக் கூறும் இப்பழமொழியையும் தங்களுக்குச் சாதகமாக கூற ஆரம்பித்து விட்டார்கள். அன்போரே! நீங்கள் பகுத்தறிவுள்ள மனித இனம் என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும் எனில் அசைவத்தைத் தவிருங்கள், இறைவன் வாசம் கொள்ளும் ஆலயமாய் மாறுங்கள். அசைவம் உண்ணும் ஜீவராசிகள் புத்தியிலும்/செயலிலும் அமைதியின்றி சஞ்சலத்தோடு திரிவதையும், சைவ உண்ணிகள் (ஆடு,மாடு,யானை,மான்) செயலில் அமைதியாகவும், சாந்தமாகவும், பலமாகவும் உள்ளதை அறியலாம்.

ஒரு முறை திருமுருக கிருபானந்த வாரியார் ஆன்மிக சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார் அப்போது, மேடைக்கு முன்பு அமர்ந்திருந்த சிறுவர்களை பார்த்து “நமக்கெல்லாம் சுடுகாடு எங்கே இருக்குன்னு தெரியுமா?” என்று கேட்டார். அதற்கு அந்த சிறுவர்கள், “ஊர் கோடியில் இருக்குது!“ என்று ஒட்டு மொத்தமாக பதில் கூறினார்கள். உடனே, “ஆடு, மாடு, கோழிகளுக்கு எங்கே இருக்கிறது?” என்று அடுத்த கேள்வியைக் கேட்டார் வாரியார். குழந்தைகள் பதில் தெரியாமல் மிரட்சியுடன் அவரை பார்த்தனர்.

அப்போது வாரியார் சிரித்துக்கொண்டே “இதோ இங்கே இருக்குது” என்று தன் வயிற்றை தடவிக் காண்பிக்க, கூட்டத்தில் பலமாய் சிரிப்பொலி எழுந்ததோடு மட்டுமல்லாமல் சிந்திக்கவும் வைத்தது. நீங்களும் உங்கள் வயிற்றை பிணத்தை உண்டு சுடுகாடாக மாற்றாதிர்கள் என்று உருக்கமாக வேண்டிக் கொண்டார்.

“இறந்த மாமிசத்தை எரிக்க, வேகவைக்க வீடு என்ன மயானமா? இல்லை அதை உண்ண நாம் என்ன அசுரப் பிறவிகளா? சைவ நெறிமுறையே அகிலத்திரட்டை புரிய வைக்க முதல் படிக்கட்டு, ஆம் அன்பர்களே! இது எனது சொந்தக்கருத்தல்ல. பலபேரிடம் உரையாடும் வேளையில் அவர்களின் மூலம் அறிய வந்தது. இது எப்படியெனில்., கலியனால் நமது முன்னோர்கள் பல முறைகளில் வஞ்சிக்கப்பட்டனர், அதன் பகுதிதான் சான்றோர்களைப் பயிரிட்டு உண்ண விடாமல் தடுத்தான், அதன் விளைவு மக்கள் மாமிசத்திற்கு அடிமையாகிப்போனார்கள்

இதையே முட்டப்பதி தவசிகளை நோக்கி கலியர்கள்” எப்போது மீன் வரும் என்று எதிர்பார்த்து அதை அரைகுறையாய் அவித்து தின்னும் கூட்டம்” எனக் கூறுவதாக அகிலம் கூறுகிறது. மேலும், நமது முன்னோர்கள் முதல் இன்றைய வாழ்க்கை முறையைப் பாருங்கள், ஞாயிறு, வெள்ளி, செவ்வாய் என்றுகூட பேதமின்றி நாமிருக்கிறோம். விசயத்திற்கு வருவோம்., அகிலத்திரட்டானது வேதம், அந்த வேதத்தில் உறைபவன் வேதாந்த நாயகனாம் நாராயணன்.,

அப்படிப்பட்ட ஏட்டினை வீட்டில் வைத்திருந்தாலே சோதனைகள் வரும், தெய்வக்குற்றமாகிப்போகும் என்கிற பயம்., ஆம், அகிலத்திரட்டை வீட்டில் வைத்திருந்து மீனையும், கறியையும் தின்றால் குற்றம் என்கிற நோக்கில் அகிலத்திரட்டையே பார்க்காமல் வாழ்நாளை தொலைத்த சான்றோர்கள் ஏராளம். ஆரம்பநிலையில், சிலர் அசைவம் சாப்பிடுவர்கள் கூட பக்தியாக தான் இருக்கிறார்கள். ஆனாலும், சாப்பிடும் நாளில், அகிலத்திரட்டை தொடவும், வீட்டில் வழிபடவும் மனம் இடம் கொடாமல் அப்படியே ஒதுக்கி வைத்து, வைத்து காலத்தை வீண்செய்து, அய்யாவுக்கும் நமக்கும் உள்ள இடைவெளியை அதிகரிக்கிறார்கள்….

ஆக, நாம் குற்ற உணர்வின்றி, மனத்தெளிவுடன் அகிலத்தைக் கற்க வேண்டுமெனில் நாம் முதலில் தன்னம்பிக்கையுடன் அகிலத்தை கையிலெடுக்க வேண்டும். அந்தச் சூழ்நிலையானது உருவாக முதற்படியாக உணவில் நாம் சைவத்தை கடைப்பிடிக்க வேண்டும். அப்பொழுதுதான் மனம் அகிலத்தைத் தொட அனுமதிக்கும். இறந்த மாமிசத்தை எரிக்க, வேகவைக்க வீடு என்ன மயானமா? இல்லை அதை உண்ண நாம் என்ன அசுரப் பிறவிகளா? சிந்தியுங்கள் அய்யாவின் பிள்ளைகளே! வீட்டிலும் வெளியிலும் சைவத்தை கடைபிடியுங்கள், மனத்தெளிவுடன் அகிலம் கற்று அய்யாவின் அருகேறுவோம்.

அய்யா உண்டு
யில் செல்லுகிறது என்பது நம் எல்லோருக்கு தெரியும். ஆம் அது நமது பஞ்சபதிகளில் ஒன்றான சுவாமிதோப்பு பதி. அங்கே என்ன என்ன தவறுகள் அரங்கேறி இருக்கின்றன என்பதை நினைவு கூறி, என்ன என்ன வற்றை சரி செய்ய வேண்டும், எப்படி சரி செய்ய வேண்டும் என பார்ப்போம்.

அய்யா வைகுண்ட பரம்பொருளின் அவதார காலம் பதினெட்டு ஆண்டுகள், ஆனால் பதியின் முன் வாசலில் வைக்க பட்டுள்ள கல்வெட்டில் நாற்பத்தி இரண்டு வயதில் அவர் வைகுண்ட லோகம் சென்றார் என்று தவறாக சித்தரிக்க பட்டுள்ளது. அதுமட்டுமா பதியின் உள்ளே இடதுபக்கமாக செல்லும் போது அங்கே ஒரு கல்வெட்டில் அய்யாவின் இல்லற புதல்வன் பொதுக்குட்டி உறைவிடம் என்று தவறாக வைக்க பட்டுள்ளது. தொடர்ந்து பதியை சுற்றி வருகின்ற போது அய்யாவின் இல்லற துணைவி திருமாலம்மை உறைவிடம் என்று தவறாக இன்னொரு கல்வெட்டு வைத்துள்ளனர். இப்படி வைகுண்ட அவதாரத்தையும், அய்யா வழிபாட்டையும் கொச்சை படுத்தி உள்ளனர் சுயநலவாதிகள். மேலும் சற்று விரிவாகவும் இதனை சரிசெய்ய என்ன செய்யலாம் என்றும் பார்ப்பொம்.

வரலாற்றுச் சிறப்புமிக்க நமது சுவாமி தோப்பு அய்யா வைகுண்டர் திருப்பதியில் வரலாற்றைப் பிரதிபலிக்கும் ஞானமுனி கலைமுனி மேடையைப் போலி சமாதிகளாக மாற்றி வைகுண்ட அவதாரத்தைத் தவறாக சித்தரித்தும், அய்யாவழிபாட்டிற்குக் குந்தகம் விளைவிக்கும் தற்போதைய சுவாமிதோப்பு பதி பணிவிடையாளர்கள் திருந்தி அவ் தவறுகளை அப்புறப்படுத்த எல்லாம் வல்ல வைகுண்ட பரம்பொருளிடம் எல்லோரும் முறையம் இடுவோம்

மேலும் தவப்பதியாம் சுவாமிதோப்பு பதியில் பள்ளியறைக்குள்ளே பனை ஏறுபவர் பயன்படுத்தும் பொருட்களை வைத்து அய்யா அவதாரத்தைத் தவறாக சித்தரிக்க முயற்சிக்கிறார்கள் நாராயணா! அப் பொருட்களை அப்புறப்படுத்த அருள்புரியும் தாய் தந்தையே என்று எல்லோரும் முறையம் இடுவோம்.

சுவாமிதோப்பு பதியில் வைக்கப்பட்டுள்ள தவறான மூன்று கல்வெட்டுகளை அகற்றித் தாரும் அய்யா வைகுண்ட பரம்பொருளே என்று எல்லோரும் வேண்டுவோம்.

எல்லோரும் தவறாது முச்சந்தி வழிபாடு செய்யும் போது அய்யா வைகுண்ட பரம்பொருளை நோக்கி முறையம் இடுவோம். கைகளில் தீபங்களை ஏந்தி வீதியில் நின்று அய்யா வைகுண்ட பரம்பொருளை நோக்கி முறையம் இடுவோம்.

வருகிற அகிலத்திரட்டு அம்மானை உதயதின விழாவை முன்னிட்டு திருஏடுதந்த தென்தாமரை குளம் பதியில் இருந்து ஆகமத்திற்கு எதிராக செயல் படும் தற்போதைய சுவாமிதோப்பு பணிவிடையாளர்கள் திருந்தி அத் தவறுகளை எல்லாம் அப்புறப்படுத்த பகவானை நோக்கியும் அறநிலையத்துறையின் கவனத்தில் வரும்படியும் முறையம் இட்ட வண்ணம் அகில ஊர்வலமாக சுவாமிதோப்பு பதியில் வந்தடைந்து ஓம்கார நாயகனை நோக்கி முறையம் இடுவோம். நிச்சயமாக அய்யா நமது முறையத்திற்குச் செவிசாய்த்து தவறுகளை அகற்றி உண்மையை மலரச் செய்வார்.

அய்யா உண்டு

அகில கேள்வி

1. கிரேதா யுகத்து சூரர்களை அழிப்பதற்காக சிவன் யாராகினார்?

2. “தந்தி முகவன்” என்பது யாருடைய பெயர்?

3. இராவணன் சிவபெருமானிடம் எத்தனை கோடி வரத்தை பெற்றான்?

4. இமையோர்கள் என்பது யார்?

5. இராவணன் பெற்ற மூன்றரை கோடி வரத்தை நாராயணர் எத்தனை கோடி வரமாக ஆக்கினார்?

விடை ……… பக்கம் பார்க்கவும்

அகிலதிரட்டு அம்மானை மூலமும், உரையும்

-க. ரீகன் அய்யா- 0096893145654 டே. பிரபின்குமார் அய்யா

“அம்புவியில் உள்ள அஸ்திரங்கள் வாளாலும்
தம்பிரா னானாலுந் தாண்டமுடி யாதவரம்
வானமது பூமி மலைகளிது மூன்றிலுள்ள
தானவராய் வாழுகின்ற தங்களா லெங்களையும்
கொல்லத் துலையாத கொடிய வரமதுவும்”
சிவபெருமான் அசுர்களான தில்லைமல்லாலன் மல்லோசி வாகனன் என்ற இரு அசுரர்களுக்கும் என்ன வரம் வேண்டும் என்று கேட்ட உடனேயே தீமையான குணத்தினையுடைய அசுரர்கள் இருவரும் தங்களுக்கு வேண்டிய வரத்தினைக் கேட்டார்கள். அம்புவி என்று சொல்லக்கூடிய இந்தப் பழமையான பூமியில் உண்டு பண்ணப்பட்ட அஸ்திரங்களாலோ, வாளாலோ தங்களுக்கு அழிவு என்பது வரக்கூடாது என்ற வரத்தினைக் கேட்டார்கள். வானலோகம், பூலோகம், மலைலோகம் என்று சொல்லக்கூடிய மூன்று உலகங்களில் வாழக்கூடியவர்களாலும் தங்களுக்கு அழிவு வரக்கூடாது என்ற வரத்தினைக் கேட்டார்கள். அதுமட்டுமல்லாமல் வரத்தைத் தரக்கூடிய உம்மால் கூட எங்களை அழிக்க முடியாதபடி வரத்தினையும் தர வேண்டும் என்று கேட்டார்கள்.
“மல்லுக் குபாயமதும் வலுவும் பலமதுவும்
ஏவலாய் வானோர் எமைத் தொழுது நின்றிடவும்
தவறாம லிந்தவரம் தரவேணு மென்றுரைத்தார்
உடனே சிவனாரும் உற்ற அசுரருக்கு
அடமா யவன்கேட்ட அவ்வரங்கள் தான் கொடுத்து”
நீங்கள் என்னை எடுத்து கடலிலே போட்டாலும் உங்களை அழிப்பதற்காக ஓர் அம்பாக உருவெடுத்து பங்கயக்கண் மாயன் என்று சொல்லக்கூடிய நாராயணரின் பக்கத்திலே நான் சேர்ந்து வளர்ந்து வருவேன். மேலும் தக்க சமயம் வரும்போது உங்களை அறுத்து இந்த கடலிலே எறியச் செய்வேன். நீங்கள் ஆளக்கூடிய நாட்டை அழித்து நானும் வைகுண்ட பேறு பெறுவேன். இது இறைவன் மீது ஆணை என்று சொல்லி சுருதிமுனி அசுரர்களுக்குச் சாபத்தை கொடுத்தார்.
“உடனே முனியை உயர்த்தியெடுத்தே சூரர்
கடல் மேலெறிந்தார் கர்ம விதிப்படியே
அந்த முனியும் அரனா ரருளாலே
மந்திரபுரக் கணையாய் வாரியலைக் குள்ளிருந்தான்”
மேலும் அசுரர்களான தில்லை மல்லாலன் மல்லோசி வாகனாகிய இருவரும் சிவபெருமானிடம் தங்களை எதிர்த்து வரக்கூடியவர்களை எதிர்த்து நின்று போராடக்கூடிய பலத்தைக் கொடுக்க வேண்டும் என்றும், வானோர்களான தேவர்கள் இரு அசுரர்களையும் தொழுது பணிந்து நின்று வேலை செய்ய வேண்டும் என்ற வரம் தர வேண்டும் என சிவபெருமானிடம் கேட்டார்கள். உடனே சிவபெருமானும் அசுரர்கள் கேட்ட அத்தனை வரங்களையும் உங்களுக்குத் தருகிறோம் என்று வரத்தினை அசுரர்களுக்குக் கொடுத்தார்.
“நீசனிருக்க நெடிய யுகம் வகுத்து
பாசனுக்குபேரு பகிர்ந்தே விடை கொடுத்தார்
விடை வேண்டிப் பாவி விமலன் தனைத் தொழுது
மடைப்பாவியான மல்லோசி வாகனனும்
தில்லை மல்லாலனுமாய்ச் சேர்ந்தங்கிருபேரும்
வல்ல சிவன் வகுத்த வையகத்தில் வந்தனராம்
வந்தார் சிவன் வகுத்த வையகத்திலம்மானை”

இப்படி அசுரர்கள் இருவருக்கும் வேண்டிய வரங்களைக் கொடுத்த சிவபெருமான் பின்பு அவர்கள் இருந்து ஆட்சி புரிவதற்கு வேண்டிய யுகத்தையும் அமைத்து அதற்கு நெடிய யுகம் என்று பெயரிட்டு அவர்களை வழி அனுப்பி வைத்தார்.

சிவபெருமானிடமிருந்து விடைபெற்ற மடைப் பாவிகளான இரு அசுரர்களும் புறப்பட்டு சிவபெருமான் வகுத்துக் கொடுத்த நெடிய யுக ராஜ்ஜியத்திற்கு வந்தார்கள். அய்யா இந்த அசுரர்களை மடைப்பாவி என்று குறிப்பிடுகிறார். அதாவது சிந்தித்துச் செயல்படக் கூடியவர்களாக இல்லாத அறிவிலிகள் என்று கூறுகின்றார். அதாவது இந்த இரு அசுரர்களும் முன்னமே சுருதி முனியைக் கடலிலே போடச் சொன்ன உடனேயே எதுவும் சிந்திக்காமல் இவரை எடுத்து கடலிலே போட்டால் தங்களுக்கு வரமும் பெலமும் கிடைக்கும் என்று எண்ணி செய்யக்கூடாத அந்தச் செயலை செய்து தங்கள் அழிவிற்குத் தாங்களே வழி தேடிக் கொண்டார்கள். அதன் பின்பு வரம் கேட்கும் போது தேவர்களை எதிரிகளாக பாவித்து அவர்களை அடிமை வேலை செய்ய வேண்டும் என்ற வரத்தைக் கேட்டுப் பெற்றுக் கொண்டார்கள். இப்படிச் சிந்தித்து நல்லதை செய்யாத இவர்களை அய்யா மடைப்பாவி என்று குறிப்பிடுகின்றார்.

“அந்த அசுரர் அவரிருக்கும் அன்னாளில்
உதிரமது சூரர் ஒக்க வுதித் தெழுந்து
செதிர் சூரப் படையாய்ச் சேர்ந்தங்கிருந்தனராம்
இப்படியே சூரர் இவர் சேர்க்கை தன்னுடனே
அப்படியே அந்த யுகம் ஆண்டிருந்தாரம்மானை”
இப்படி நெடியுகத்தில் தில்லைமல்லாலன் மல்லோசிவாகனன் என்று சொல்லக்கூடிய இரு அசுரர்களும் ஆட்சி புரிந்து இருக்கக்கூடிய நேரத்தில் இவர்களுக்குப் பக்கபலமாக சூரப் படைகள் வந்து சேருகின்றார்கள். இந்தச் சூரப்படைகள் குறோணியின் உதிரத்தில் இருந்து ஒவ்வொரு யுகத்திலும் அந்த யுக அசுரர்களுக்குத் துணையாக வந்து சேர்வார்கள். அப்படியே இந்த யுகத்திலும் தில்லைமல்லாலன் மல்லோசிவாகனுக்கு ஆதரவாக அவர்களுக்குப் பக்க பலமாக அசுரப் படைகள் வந்து சேர்ந்தார்கள். இப்படி வந்து சேர்ந்த அரக்க வழிக் குலங்களோடு இந்த இரு அசுரர்களும் நெடிய யுகத்தை ஆண்டு கொண்டு இருந்தார்கள்.
“ஆண்டிருந்த சூரன் அவனிருக்க மேடைகளும்
தாண்டிருந்த வானத் தடாக உயரமதே
சூரப் படைகள் தொழுது அடிபணிந்து
பாதகனுக்கு நித்தம் பணிந்தேவல் செய்திடுவார்
ஊழியங்கள் செய்து வுற்றயிறை இறுத்து
பாளையங்களாகப் பணிந்திருந்தா ரம்மானை”
இப்படி நெடுயுகத்தை ஆட்சி புரிந்து கொண்டிருந்த அசுரர்கள் தங்களது ஆட்சியை வலிமையாக ஆக்கிக் கொண்டார்கள். அவர்களது சிம்மாசன உயரம் வானம்வரை உயர்ந்தது என்று அய்யா குறிப்பிடுகின்றார். அதாவது அவர்களின் ஆட்சியால் வானலோகமும் அடக்கி ஆளப்பட்டது. அப்படி வலிமை பொருந்தி ஆட்சி செய்தார்கள். இவர்களுடைய குலமான சூரப்படைகள் இவர்களுக்குப் பணிந்து ஏவல் செய்பவராக இருந்தார்கள் அவர்கள் இவர்களுக்கு வரி செலுத்தக்கூடிய பாளையக்காரர்களாக இருந்தார்கள். இப்படி சூரர்கள் எல்லோரையும் அடக்கி ஆண்டு கொண்டு இருந்தார்கள்.
“சூரன் கொடுமுடியைச் சூட்டி யரசாண்டு
பாரமுள்ள கோட்டைப் பண்ணினா னம்மானை
இப்படியே சூரனிவன் வாழுமந் நாளில்
முப்படியே சூரன் ஊழி விதிப்படியால்
இறப்பதறியாமல் எரியை மிகக் கண்டாவி
உற் பொசிக்க சென்ற விட்டி லிறந்தாற்போல்”
இப்படி சூரர்கள் தாங்கள் அரசாட்சி புரிகின்ற நாட்டை பெரிய மதிற் கோட்டைகள் கட்டி அதை அறமற்ற முறையில் அரசாட்சி புரிந்து வந்தார்கள். இப்படி அரசாட்சி புரிந்து வந்த அவர்களுக்கு, அவர்களுக்கான கர்ம வினைப்படி அவர்களுக்கான அழிவு கால நேரம் வந்தது. அந்த வினையினை அவர்களாகவே தங்களுக்குத் தேடிக் கொண்டார்கள். அதாவது விட்டில் பூச்சி என்று சொல்லக்கூடிய பூச்சியானது இருட்டில் பறந்து திரிந்து கொண்டிருக்கும் அல்லது தனது கூட்டிலேயே இருந்து கொண்டிருக்கும். அப்படி இருக்கக்கூடிய விட்டில் பூச்சி எரிகின்ற தீயின் வெளிச்சத்தை பார்த்தவுடனேயே மிகவும் ஆவலாக அந்த எரிகின்ற தீயினை ஆவி உணவு அருந்தலாம் என்று பறந்து சென்று அந்தத் தீயிலேயே விழுந்து விடும். இப்படி தீயினை அணைத்துக் கொண்டால் தாங்கள் இறந்து விடுவோம் என்ற உணர்வு இல்லாமல் வெளிச்சத்தை பார்த்த உற்சாக மிகுதியால் தீயிலேயே விழுந்து எரிந்து போகின்ற விட்டில் பூச்சியைப் போல் அரக்கர்களான தில்லைமல்லாலன் மல்லோசிவாகனன் என்ற இரு அசுரர்களும் தங்களாகவே தங்கள் அழிவை தேடிக் கொள்ள முற்பட்டார்கள்.
“தம்பி தமையன் சந்ததிகள் மந்திரிமார்
மும்பிலுள்ள சூரர் முடுக்கமதைக் கண்டாவி
நம்பி பதமறந்து நாம் தாம் பெரிதெனவே
கெம்பினான் சூரன் கெட்டனர் காணம்மானை
சூரர்கள் தங்கள் படைபட்டாளங்களைக் கொண்டு வலிமையாக இருந்ததால் அவர்கள் மமதை கொண்டார்கள். தாங்கள் தான் எல்லாரையும் விட பெரியவர்கள் என்ற அகங்காரம் கொண்டார்கள். தங்கள் வலிமையால் எதையும் சாதிக்க முடியும் என்று எண்ணினார்கள். இப்படி இவர்கள் கொண்ட அகங்காரம் அவர்கள் கண்ணை மறைத்தது. தங்களைப் படைத்த தங்களுக்கு வரங்கள் கொடுத்த இறைவனை அவர்கள் பொருட்டாக மதிக்கவில்லை. இறைவனை விட தாங்களே உயர்ந்தவர்கள் என்று அவர்கள் பறைசாற்றினார்கள் இப்படி இறைவனையே எதிர்த்த காரணத்தினால் அவர்களுக்கான அழிவை அவர்களே தேடிக் கொண்டார்கள்.
(தொடரும்)

அய்யா உண்டு

சப்தகன்னிமார் பாடல் – விளக்கம்

கா.த.லிங்கேஷ் அய்யா – 9842679780

“வகுப்பதற்கு இன்னதென்று அறியேன் நானும்
வகை விபரம் நீரருளி வரமே தந்து
தொகுப்பதற்கு சிவமதுவே துணையாமென்று
சொல்லுகிறேன் தொல்புவியில் சுருதியாக
இகட்பதற்கு இல்லாமல் இடறே தீர்த்து
எப்போதும் எனை ஆளும் எம்பிரானே
உகபதியில் மேவி உதித்து எழுந்த நாதா
உன் உவமை சொல்லுவதற்கு உதவி காப்பாம்”
அகிலத்திரட்டு அம்மானையை போலவே, இங்கும் நூலாசிரியர் தனது பணிவுடைமை மற்றும் சரணாகதியையும் வலியுறுத்துகிறார். அதாவது என்ன வென்று தெரியாத எனக்கு, நீயே விவரமாக எடுத்துரைத்தாய். அதை கதை போல் எடுத்துச் சொல்லவும் சிவமாய் துணை நிற்கின்றாய் என்று பணிந்து சொல்கிறார்.

‘சுருதி’ என்கிற பதம் ஞானம் கைவரப் பெற்ற ஒருவருக்கு இறைவனால் மனதில் உணர்த்தப்பட்டு, காலக்கிரக ஓட்டத்திற்குக் கட்டுப்படாமல், மற்றவர்களால் எடுத்துச் சொல்லப் படுவதாகும். அதாவது இதுவும் நாரணரின் வார்த்தைகள் அன்றி ஆசிரியரின் வார்த்தைகள் அல்ல என்பதை உணர்வோம்.

அடுத்து, இறைவனே உணர்த்துகிறார், ஆசிரியர் நமக்கு எடுத்துரைக்கிறார். இடையில் ஆசிரியரின் கர்மவினையால் எந்தவித குறையோ தவறோ நேர்ந்து விடக்கூடாது என்பதற்காக என்னால் ஏற்படும் இடரை தீர்த்து உன்னுடைய பெருமையைச் சொல்வதற்கு நீயே காத்தருள வேண்டும் என்று வேண்டுகிறார்.

மேற்கண்ட இரு விருத்தங்களால் அமைக்கப்பட்ட காப்பு பகுதி சப்த கன்னியர்களின் வரலாற்றுச் சூட்சுமத்தையும், இது யாரால் அருளப்பட்டது என்பதையும் விளக்கி அருள் நூல் ஆகமத்தின் பூரணமான ஞான பொக்கிஷம் என்பதை உணர்த்தி இருக்கிறது.

பொருள்: என் உயிரான பிராணனுக்கு பிராணனாய் இருந்து எனை ஆளும் என் வைகுண்ட பெம்மானே, இந்தப் பூலோகத்தில் ஏதும் அறியாத எனக்கு அனைத்தையும் மனதிலே உணர வைத்து, எந்தக் குறையும் வராமல் கர்மவினையும் தீர்த்துப் பூலோகத்தார் அறியும் படியாய் சொல்ல வைக்கிறாய். தெட்சணா பூமியில் அவதரித்த ஓங்கார வைகுண்டா, நீ சப்த கன்னியர்கள் மூலம் செய்த இகனைகளை அடியேன் சொல்வதற்கு உன் அருளே காக்கட்டும்.

“காப்பாம் சிவபர ஆதி நாராயணக் கண்மணி ஆனவரே
கன்னிமார் பாடலுக்கு உன்னை நினைத்திடக் கல்விக்கு உதவுவாயே
சேர்ப்பாய் உந்தன் அருள் சிந்தையில் வைத்திருந்த தெய்வ மடவாரின்
திருக்கதை கூறிட செயல் குரு நீயே அல்லால் சீமையில் ஆருளரோ”
பொருள்: ஆதியில் பரத்திலிருந்து சிவமாகவும், சிவத்திலிருந்து நாராயணராகவும்(விஷ்னு), நாராயணரிலிருந்து ஒரே மகனான வைகுண்டமாய் வந்தவரே, நீயே காத்தருள்வாய். மேலும் எப்போதும் உன் மனத்தகத்தில் வாசம் செய்யும் தெய்வ மடவாரான, 7 மாதர்களின் வரலாற்றை சொல்வதற்கான கல்வியை நல்கும் ஒரே ஞானாசிரியன் நீ அல்லாது வேறு யாரும் இருக்கிறார்களோ! இல்லவே இல்லை என்று ஆசிரியர் கூறுகின்றார்.
“முத்தி பெறும் தெய்வ மாதர் ஏழு பேரும் முன்னான்கு காலமெல்லாம்
மூண்ட வனத்தில் கூண்ட தவம் செய்து முற்றும் நிறைவேற்றி
பக்தியுடன் அன்று சொல்லியே வைத்த படிமுறை தப்பிடாமல்
பாரான தெட்சணம் மீதானதில் வந்து பண்பாகக் கண்டு உமையும்”

“வாதாடி அவர் பெற்ற மக்களைக் கேட்டும்மை வருடியே நாள் தோறும்
சீரான மக்களை ஈந்து பின் ஏழ்வரை சேர்த்து மணமருளி
தேவியும் மக்களும் மன்னவராகி நீர் சீமை தனை ஆண்டதுவும்
பண்பான இந்தக் கதை படிப்பேன் என்ற பாவனை ஆனதெல்லாம்”

“பறக்கும் கருடனைக் கண்டொரு உள்ளான் பறந்தது போலே ஒக்கும்
குயில் நின்று கூவிட மந்திக் குரங்குகள் கூப்பிடதொக்கும் என்றே
கூறும் செந்தமிழ்ப் பாவாணர் முன்னே குழந்தை உரைத்தேனப்பா
குற்றமது ஒன்றும் வராமல் காத்திட கர்த்தனருள் வேணும்”

‘முக்தி’ என்கிற பதம் பொதுவாக இறைவனால் படைக்கப்பட்ட ஓர் உயிரானது இறப்பு – பிறப்பு என்கிற வினையிலிருந்து விடுபடுவதைக் குறிக்கும். ஆனால் இங்கு, பரபிரம்மத்திலிருந்து பிரிந்து வந்த திருவருள் சக்திகளான 7 மாதர்களும் நமக்காக பூமியில் பிறந்து, பின் மீண்டும் பரபிரம்மத்தை அடைவதற்கான நிலை எய்தியதைக் குறிக்கும்.

பொருள்: இறைவனிலிருந்து பிரிந்து மீண்டும் இறைவனோடு இணையும் பாக்கியம் பெற்ற திருவருள் சக்திகளான தெய்வ கன்னிகள் 7 பேரும், 4 புறமும் அடந்த மரங்களால் சூழப்பெற்ற காட்டில், மனம் முதலாய் அனைத்துப் புலன் – பொறியிலும் அயராது ஈசுரரை நினைத்து தவம் செய்து, முழுமையாக நிறைவேற்றி, அன்று அவர் சொன்ன உத்தரவு மாறாமல், தெட்சணா பூமியில் வைகுண்டராகிய உம்மை கண்டு, அவர்களுடைய பிள்ளைகளை உம்மிடம் பெற உம்மிடமே வாக்குவாதம் செய்ய, அவர்களின் குழந்தைகளைக் கொடுத்தீர்.

பின், 7 மாதர்களையும் திருக்கல்யாணம் செய்து, ராஜாதி ராசனாக நீயும், சப்த கன்னியர்கள் உன்னுடைய தேவிமாராகவும், சான்றோர் மக்களை உன் பிள்ளைகளாகவும் கொண்டு, தர்மயுக பூமியை நீங்கள் அரசாட்சி செய்ததுமான இந்த திருக்கதை சொல்வேன் என்ற என்னுடைய மன ஓட்டமானது, கருடன் பறப்பதைப் பார்த்து ‘உள்ளான்’ எனும் பறவை பறந்தால் எப்படி இருக்குமோ! குயிலானது கூவுவதைப் பார்த்து, குரங்குகள் கூவினால் எப்படி இருக்குமோ! அதுபோல், தமிழ் மொழியில் முழுமையான ஞானம் பெற்ற பாவாணர் முன், குழந்தை நிலையில் இருக்கும் நான் பாடுகின்றேன். எனவே இதில் எந்தப் பிழையும் நடந்து விடாமல் படைத்தவனாகிய நாராயணனே காத்திட வேண்டும் என்று நூலாசிரியர் இங்கு முன்மொழிகிறார்.
[அய்யா நிச்சயித்தப்படி தொடரும்]

அய்யா உண்டு

அகில விருத்தமும் விளக்கமும்

– பா. அசோக் குமார் அய்யா 009607704901, 8012174032

விருத்தம்: 12

“என்னொரு தம்பியாலே யென்னையுங் கொன்றாயென்று
தன்னொரு மதத்தால் நீயுஞ் சாற்றிய வரக்காவுன்னை
பின்னொருயுகத்தில் நூறு பிறப்புடன் பிறவிசெய்து
இன்னொரு ஆளின் கையால் யிறந்திட செய்வேனுன்னை”

விளக்கம்: தொடர்ந்து ராமபிரான், ராவணனைப் பார்த்து சொல்கிறார்… ராவணா உன்னுடைய தம்பியாலே உன்னை நான் கொன்றேன் என்று ஆணவத்தோடு சொல்கிறாய், எனவே உன்னை அடுத்த யுகத்தில் நூறு சகோதரர்களோடு பிறவி செய்து வேறு ஒருவரின் கையால் உன்னை அழிப்பேன் என்றார்.
அய்யா உண்டு

அய்யா உண்டு

அகில விடை

1. நந்தீஸ்வரர்

2. கணபதி

3. மூன்றரை

4. அரன் (சிவன்)

4. தேவர்கள்

5. அரைக் கோடி

சிவகாண்ட அதிகார பத்திரம்

-மாடசாமி அய்யா 8973349046

சூத்திரம்:
“தலைமன்னார் மீதிருந்து சாத்திரங்கள் சொல்லுதப்பா”

பொருள்: அந்த குண்டலினி சக்தியானது, உச்சித்தலையில் இருந்து (சகஸ்ரத்தில்- தலைமன்னார்) பல சாஸ்திரங்களைச் சொல்கிறது.

விளக்கம்: ஞானிகள், வாசியைச் சீர்செய்து, குண்டலினியை எழுப்பி சகஸ்ரமாகிய தலைமன்னாரை அடையும் போது அமுத ஊற்று எடுக்கும். அங்கே அரண் நடனம் காணலாம். விளங்காத ஞானம் அங்கு விளங்கப்படும். அங்கு அந்த முனிவர்கள் பெற்ற ஞானத்தை அவர்கள் உலகுக்குப் போதித்தார்கள். எனவே அய்யா “தலைமன்னார் மீது இருந்து பல சாத்திரங்கள் சொல்லுதப்பா ” என்றார்.

சூத்திரம்:
“சங்குநதிக் குள்ளிருந்து தனித்துவந்தேன் வையகத்தில்”

அருஞ்சொற் பொருள்: சங்குநதி- மூச்சுக்காற்று, மூலாதாரம், நாதம்

பொருள் -1: பிரம்மனின் மூச்சுக்காற்றில் இருந்து தனியே இந்த வையகத்தில் வந்தேன்

விளக்கம்: சங்குநதி என்பது மூச்சுக்காற்றைக் குறிக்கும். இதை சிவவாக்கியரின் ” சங்கிரண்டு தாரை ஒன்று சன்னபின்னம் ஆகையால்” என்னும் சிவவாக்கியத்தின் மூலம் அறியலாம். ஒருசமயம் இரண்யாக்சன் என்ற அரக்கன் பூமியைச் சமுத்திரத்துள் மறைத்து வைத்தான். அப்போது பிரம்ம தேவரின் வலது நாசித்துவாரத்தில் பிரம்மனின் மூச்சுக்காற்றில் பகவான் வெண் பன்றியாக வடிவெடுத்து வராக அவதாரம் மேற்கொண்டார், மேலும் அவர் தனியே சமுத்திரத்துள் குதித்து இரண்யாக்சனைக் கொன்றார். எனவே பகவான் “சங்குநதிக் குள்ளிருந்து தனித்துவந்தேன் வையகத்தில்” என்றார்.

பொருள் – 2: நாத தத்துவமாக இருப்பவனும் நான்.

விளக்கம்: சங்கிலிருந்து நாதம் நதி போல் வெளிப்படுகிறது. எனவே சங்கு நதி என்பது நாததத்துவத்தைக் குறிக்கும்‌ இங்கே பகவான் 36 தத்துவங்களில், சுத்தமாயையில் இறைவனின் முதல் திருவிறக்கமான நாதமாக அதாவது ஓங்காரமாக, சிவப்பொருளாக இருப்பதும் அவரே…

பொருள் – 3: மூலாதரத்தில் குண்டலினி வடிவாய் இருப்பதும் அவருடைய சக்தியே.

விளக்கம்:
சங்கினுள் நாதம் சூக்சுமமாக இருக்கிறது. இதைப்போல் மூலாதாரத்தில் நாதம் ஒளிவடிவமாய் சூக்சுமமாக இருக்கிறது எனவே சங்குநதி என்பது மூலாதாரத்தையும் சீவசக்தியாகிய குண்டலினியையும் குறிக்கிறது. குண்டலி சக்தியானது இறைவனின் வடிவம் என்பது நாம் அறிந்ததே

தொடரும்

அய்யா உண்டு

முக்தி என்றால் என்ன?

– S. அன்ன செல்வம் அம்மா – 9443622222

முக்தி என்பது ஒருவருடைய ஆன்மா மறுபிறவி இல்லாமல் முழுமை அடைதல் அல்லது வீடு பேறு அடைதல் என்று கூறலாம். மானிடர்கள் பிறப்பு இறப்பு என்கிற சுழற்சியில் இருந்து நிறைவடையும் நிலையாகும். நாம் பல பிறவிகள் எடுத்து முப்பொருளும் ஒரு பொருளாய் இருக்கின்ற அய்யா வைகுண்ட நாராயணரை அறிந்தபின், நம்முடைய முன் ஜென்ம கர்ம வினைகளில் இருந்து விடுபட்டு தெய்வீக நிலைக்கு மாறுகின்ற நிலையே முக்தி ஆகும். வீடு பேறு என்றால் நம்முடைய உடலாகிய அதாவது கூடாகிய வீடு பூலோகப் பிறவியில் உள்ள உலகியல் வாழ்க்கையை இறையியல் தன்மையோடு வாழ்ந்து, அழியா நிலை என்கிற பேறு பெறுவதாகும். மனிதன் புனிதனாக வாழ வேண்டும் என்பதற்கு இறைவனே மாபெரும் சக்திகளை கொடுத்து மக்களை பிறவி செய்துள்ளார். எண்ணத்தைச் சொல்லாகவும் சொல்லை செயலாகவும் செய்து முடிக்கும் ஆற்றல் மனித குலத்திற்கு மட்டுமே கொடுக்கப் பட்டுள்ளது.

நாராயணர் தன்னுடைய வைகுண்ட அவதாரத்தில் அகிலத்திரட்டு அம்மானை, அருள் நூல் ஆகிய இரு ஆகமங்களைத் தந்து அதன் மூலம் ஞான உபதேசங்களைக் கூறுகின்றார். அஞ்ஞானத்தில் மூழ்கி இருக்கும் மக்களை மீட்டெடுக்கவே மெய்ஞான பொக்கிஷங்களைத் தந்தார். உண்மை ஞானத்தை அதாவது மனிதன் மனிதனாக வாழும் வாழ்க்கை நெறியை உலகத்திற்கு உணர்த்தினார். மனிதன் என்றாலே பொதுவாக பிணி,மூப்பு சாக்காடு என்கிற மூன்று நிலைகள் உண்டு. ஆனால் அந்த நிலையை மாற்றி அமைக்கும் தன்மையைக் கலியுகத்தில் பிறந்த சான்றோர் மக்களுக்கு அய்யா கொடுத்தார்.

அன்பு பொறுமை தர்மத்தை அடிப்படை குணமாகக் கொண்டு வாழ வேண்டும் என்கிற விதி முறையைக் கூறினார். அதன் பிறகு வாழ்வியல் தத்துவமாக உடல் கூறு தத்துவங்களைக் கூறுகின்றார். இதன் மூலம் இறை ஞான அறிவு உண்டாகிறது. அவ்வாறு மேலான நிலைக்கு வரும்போது *”தர்மத்தை செய்து தவத்தைப் பெருக்கி உங்கள் சராசரத்தை தேடுங்கோ என் மக்களே”* என்று அய்யா வைகுண்ட பரம்பொருள் கூறுகின்றார். மனித மக்கள் இந்த தன்மைக்கு மாறும்போது சாதுக்களாக சாந்தமாக அன்புள்ளம் கொண்டவர்களாக மாறுகின்றார்கள். இறைவன் வகுத்த வழிமுறைகளைப் பின்பற்றி நேர்மையாக வாழ்வார்கள்.

மனித மக்கள் தங்கள் சுய புத்தியினால் தியானம், தவம் செய்து தங்கள் உயிர் சக்தியை வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே ஞானம் அடைய முடியும். ஞானத்தின் மூலம் தன்னை அறியும் அறிவைப் பெற்று, முக்தி பேறு அடைவார்கள். முக்தி பெற்ற ஆன்மாக்கள் மட்டுமே தர்மயுக வாழ்வு பெற முடியும். அவர்களுடைய தெய்வீக இறை அருளால் இறைவனை முகமுகமாய் கண்டு மகிழ்வார்கள். அய்யா வைகுண்டருடைய தர்மயுக ஆட்சியில் சான்றோர் மக்கள் தேவர்களைப் போல் மிக உயர்ந்த நிலையில் இருப்பார்கள்.

தர்மயுகம் என்கிற மெய்யான நிலையான உலகம் எட்டாவது யுகமாக தோன்றப் போகிறது. அது பொன்னாலான உலகமாக ஜொலிக்கப் போகின்றது. அங்கே முத்தி பெற்ற மக்கள் சொக்க தங்க திருமேனியாக, தூய்மையான உள்ளம் கொண்டவர்களாக, பரிசுத்தமாக, தெய்வீகமாக காணப்படுவார்கள். இந்த நிலையை அடைவதற்குரிய, சகல விதமான சக்திகளும், மனித உடலுக்குள் படைக்கப் பட்டிருக்கிறது.

நாம் இந்த உலகத்தில் கண்ணால் காண்பதை எல்லாம் மெய் என்றும், கண்ணால் பார்க்காததை எல்லாம் பொய் என்றும், காதால் கேட்டதை எல்லாம் மெய் என்றும், காதால் கேட்காததை எல்லாம் பொய் என்றும் நினைத்து ஏமாந்து கொண்டிருக்கிறோம். இத்தனைக்கும் காரணம் நம்முடைய மனமே. மனமது செம்மையானால் கலி என்கிற தீய சக்தி நம்மை நெருங்கவே நெருங்காது. எனவே அய்யா வைகுண்டர் கூறிய உபதேசங்களை கருத்தில் கொண்டு ஞானமாக வாழ்வோம். பரமாத்மாவுடன் சேர்ந்து ஆனந்தமாக வாழ்வோம். நிலையான ஆனந்தமே முக்தியாகும். நாம்
“ஆதியென்ற மணி விளக்கை அறிய வேணும், அகண்ட பரிபூரணத்தை காண வேணும்”

அய்யா உண்டு

தர்மயுக முரசு வாசகர்களுக்கு அன்பான வேண்டுகோள்

நமது தர்மயுக முரசில் “கேள்வி பதில்” என்கிற பகுதியில் கேள்வி கேட்க நினைப்பவர்கள் கீழ் கண்ட விலாசத்திற்கு கடிதம் மூலமாக கேட்கலாம் அல்லது கீழ் கண்ட வாட்சப் எண்ணிற்கு டைப் செய்தும் அனுப்பலாம். அதன் விடைகளை உங்கள் கேள்வியோடும் உங்கள் பெயரோடும் நமது தர்மயுக முரசில் பதிவாகும்

விலாசம்:
அகில உலக அய்யாவழி சேவை அமைப்பு
அய்யா வைகுண்டர் வளர்பதி, கைலாசக் கோனார் காம்பவுண்ட்,
வடக்கு மெயின் ரோடு, வள்ளியூர் 627117, திருநெல்வேலி மாவட்டம்
வாட்சப் எண்: 8903201008

அய்யா உண்டு

இறை தண்டனை

– ஹரி வெங்கடேஷ் அய்யா 8508518505

“அவரவர் செய்த அக்குற்றம் தான் கேட்டு
எவரெவர்க்கும் தக்க இயல்பே அருள்வோம்”
-அகிலம்
நான்-எனது என்கிற முனைப்புடன் ஜீவனால் செய்யப்பட்டக் கர்மாக்கள் இருவகை விளைவுகளை உண்டாக்குகின்றன. அவை பாவம் – புண்ணியம். புண்ணிய கர்மா என்பவை அனுதின இறைவழிபாடு, எளியோரைக் கண்டு ஈவு இரக்கமுடன் இருத்தல், தாவரங்களுக்கு நீரூற்றுதல், கருணையின் பேரில் பல்லுயிர்களையும் தன் உயிராய் பாவித்து சக உயிரினங்களுக்கு ஆதரவு தருதல், சக மனிதர்களுக்கு உதவிசெய்ய முன்வருதல் போன்றவை. தன் குடும்பம், குழந்தைகளைக் காப்பாற்றுவதை போல உறவினர் அல்லாத வேற்று மனிதர்க்கும் மனமுவந்து செய்யும் உதவிகள் சக்திவாய்ந்த புண்ணிய விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

பாவமும்-புண்ணியமும் தர்ம விதிகளால் பிறக்கும் விளைவுகள். இவை கண்களுக்குப் புலப்படாது. ஆனால் சுக துக்க அனுபவங்களாக இந்தப் பிறவியிலோ அல்லது எதிர்வரும் பிறவியிலோ வடிவம் பெறுகின்றன. எடுத்திருக்கும் இந்தச் சரீரத்தில் செய்கிற நன்மை, தீமைகளின் பலன்கள் இந்தச் சரீரத்திலேயே பலனாக கிடைத்து விடுவதில்லை. அடுத்து எடுக்க இருக்கும் சரீரத்தின் அனுபவங்களையும் இந்த சரீரத்தில் நாம் செய்கின்ற கர்மங்கள் தீர்மானிக்கின்றன.

நாம் செய்த புண்ணியங்கள் அடுத்த பிறவியில் செல்வமாகவும், சுதந்தரமாகவும், நல்ல உறவுகளாகவும், கடவுளை அறிவதற்கான வாய்ப்பாகவும் வெளிப்படும். கர்ம பலன் இருந்தால்தான் கடவுளின் அனுக்கிரகம் நமக்கு கிடைக்கும்!

இந்த உண்மைகள் ஒருவருக்குத் தெரியாவிடில் அவருக்குச் சந்தேகங்களும், கோபமும்தான் ஏற்படும். என்னை இறைவன் ஏன் படைத்தார்? எனக்கு ஏன் இத்தனை துயரம் கொடுத்தார். என் சருமம் ஏன் இந்த நிறத்தில் இருக்கிறது என்றெல்லாம் நியாயமில்லாத கேள்விகள் பிறக்கின்றன. எந்தச் சரீரத்தில்(பிறவியில்) நாம் செய்த எந்தக் கர்மப் பலன்களின் விளைவாக நமக்கு இந்த சரீரம் கிடைத்தது என்பது நமக்கு தெரியாது, நம்மால் கண்டு பிடிக்கவும் முடியாது. நாம் செய்த கர்மப்பலனால் விளைந்தவை என்பதைப் புரிந்து கொண்டால் மட்டும் போதும்.

இந்தப் பிறவியிலேயே, சில நாட்கள் கடுமையாகவும், சில நாட்கள் இலகுவாகவும் கழிகின்றன. நேற்று மாலை மகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டிருந்த நண்பர், இறந்துவிட்டார் என்று தகவல் இன்று காலை வருகிறது இன்றைய தினம் வருத்தத்தில் கழிகிறது. கர்மா இப்படித்தான் ஒவ்வொரு நிமிடமும் தனது பலனை அவிழ்த்துவிடுகிறது. கடவுள் எங்கோ ஓரிடத்தில் உட்கார்ந்து கொண்டு யார் யாருக்கு என்ன கொடுக்கலாம் என்று யோசித்துச் செய்வதாக நினைக்கவேண்டாம்.

எந்தக் கர்மா-தர்மா உலக நியதிகளையும், அனைவரது கர்மப் பலன்களைக் காலம் நேரம் தவறாமல் நியதிப்படி வெளிப்படுத்துகிறதோ அந்தக் காலமும் நியதியுமாக இருப்பவரே இறைவன்தான். அவர் தனியாக ஓரிடத்தில் இல்லை. கர்ம விதியாகவே அவர் இருக்கிறார். அனைத்து இயற்கை மற்றும் மனித நிகழ்ச்சிகளையும் கர்ம வலையாக இருக்கும் இறைவனே நிகழ்த்தித் தருகிறார். இவற்றின் பலன் பற்றி நமக்குத் தெரியாது.

நீ மனமுவந்து, தானாக முன்வந்து டொனேஷன் கொடுத்தால் உலகம் உன்னைப் பாராட்டாது. ‘பணத்திமிரில் செய்கிறான்- எல்லாம் வரிக்கணக்கு காட்டுவதற்காக’ என்று ஏளனம் செய்யலாம். ஆனால் இயற்கை நியதியால், தர்மவிதியால் உடனுக்குடன் நீ நன்றி சொல்லப்படுகிறாய். உனது கணக்கில் புண்ணிய அளவு கூடுகிறது. கர்ம விதி தப்பவே தப்பாது நீ செய்த நற்காரியத்தை உலகம் எப்படி உதாசீனப்படுத்தியதோ, அதே போல் பலர் செய்யும் தீய செயல்களையும் கண்டு கொள்வதில்லை. பலர் திருட்டுக் கணக்கெழுதி, ஊரை ஏமாற்றிய படியே ‘நல்லவன்’ என்று பெயர் எடுத்துவிடுகிறார்கள். இவர்களது பெயரிலும் பாவங்கள் வரவு வைக்கப்படுகின்றன.

பிறக்கும்போது கொண்டுவந்த கர்மங்கள் தம் பலனை வழங்கிக் கொண்டிருப்பதால், இப்போது செய்த பாவ புண்ணியங்களுக்கு இந்த சரீரத்திலேயே, இப்போதே பலன் கொடுக்க அவகாசம் இல்லை. ஆனால் அவை காலம் கனியும்போது இப்பிறவியிலோ அல்லது அடுத்தப் பிறவியிலோ நிச்சயம் பலனாக வெளிப்படும். மனிதன் ஏற்படுத்திய சட்டங்களின் ஓட்டை வழியாக ஒருவன் தப்பித்துவிடலாம். இயற்கை நியதியாகச் செயல்படும் ஈசனின் கால-நியதியிலிருந்து தப்பிக்கவே முடியாது.

“பாவ புண்ணியமாகி பாராகி நின்றோனே”
-அகிலம்

அய்யாஉண்டு

அன்புக்கொடி சொந்தங்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம்: அன்பானவர்களே: தாங்கள் சார்ந்துள்ள தாங்கல் வரலாற்றை நமது தர்மயுக முரசு பத்திரிகையில் வெளியிட வேண்டும் என்றால் உங்கள் தாங்கலின் வரலாற்றை அழகாக எழுதி 0096893145654 என்ற வாட்சப் எண்ணிற்கு தாங்கலின் புகைப்படத்தோடு சேர்த்து அனுப்பி தாருங்கள். அதனை வருகின்ற மாதங்களில் நமது தர்மயுக முரசு பத்திரிகையில் பதிவு செய்து வெளியிடலாம்.

அய்யாஉண்டு

அய்யாவின் உபதேசங்கள்

– பா. கிருஷ்ணமணி அப்புகுட்டி அய்யா 9841933992

“அச்சுத்தேர் ஒடியும்முன்னே ஆண்டிவேலை செய்திடுங்கோ”
உடலாகிய தேரானது உலக இன்பங்களை அனுபவிப்பதற்காக இறைவனால் படைத்துக் கொடுக்கப்படவில்லை, இறைவனை அடைவதற்காகவே கொடுக்கப்பட்டுள்ளது என்கின்ற உண்மையை உணர வேண்டும். ஆகவே நமக்குக் கொடுக்கப்பட்ட உடலை விட்டு உயிர் பிரிவதற்கு முன்பாக இறைவனை அடைவதற்கான அனைத்து வேலையையும் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே இறைவனை அடைய முடியும்.

“ஏந்துநீ தர்மம் இடறு நினையாதே”
தர்மக் காரியங்கள் தொடர்ந்து பெருகி நடப்பதற்கான வழிகளைச் செய்ய வேண்டும். தர்ம செயலைத் தடுக்க நினைக்காதே.
“சினமும் மறந்து செடமுழிக்கும் பேர்மனுக்கள்
நினைவுக்குள்ளே நாம் நிற்போங்காண்”
காமமும்(ஆசை) கோபமும் உயிர்களின் பிறவிக் குணம் ஆகும். இந்த இரண்டையும் அகற்றுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இருப்பினும் இவற்றை நீக்காமல் மேலான நிலையை அடைய முடியாது.
கோபத்தை அகற்றி, நான் உடல் அல்ல அதற்குள் இருக்கின்ற உயிரே என்கின்ற விழிப்பு நிலையடைகின்ற மேலான மக்களின் சிந்தையில் எப்போதும் நான் இருப்பேன் என அய்யா கூறுகின்றார்.

“கர்த்தாவை நோக்கிக் கடுந்தவங்கள் நாமள்செய்தால்
புத்திவரும் திருப்திவரும் புலம்புவேன் என்மகனே”

அனைத்தையும் படைத்து அதன் இயக்கத்துக்கும் காரணமாய் இருக்கின்ற கர்த்தனாகிய இறைவனை மனதில் நினைத்து தொடர்ந்து தியானிக்கும் போது நல்ல புத்தியும், மன அமைதியும் மகிழ்ச்சியும் ஏற்படும். மேலும் இறைவன் நமக்குள்ளிருந்து உணர்த்துவதையும் உணர முடியும்.
தொடரும்

அய்யா உண்டு

அன்ன தர்மத்தின் அருமை

– மீனா சுகின் அம்மா- 9344813163

ஓர் ஆசிரமத்தில் ஒரு துறவி வாழ்ந்து வந்தார். அவர் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்று காட்டில் மூலிகைகளைப் பறிக்கச் சென்றார். மாலைப்பொழுது வந்ததால் அவரால் ஆசிரமத்திற்குத் திரும்பிச் செல்ல முடியவில்லை. காட்டில் அதிக அளவில் மிருகங்கள் இருப்பதால் பாதுகாப்பாக ஓர் இடத்தில் தங்கி விட்டுக் காலை சென்று விடலாம் என்று தங்குவதற்கான இடத்தைத் தேடினார். அப்போது ஒரு குகை அவரின் கண்ணில் பட்டது அந்தக் குகையினுள் சென்றார். அங்கு ஏற்கனவே ஒரு வேடனும் அவன் மனைவியும் இருந்தார்கள்.

வேடன் துறவியைப் பார்த்து மகிழ்ச்சியோடு வரவேற்றான். ஆனால் வேடனின் மனைவிக்கோ அது பிடிக்கவில்லை. வேடன் தான் உண்பதற்காக சிறிதளவு கிழங்கு மட்டும் வைத்திருந்தான். அதனை தான் உண்ணாமல் துறவிக்கு கொடுத்து மனமகிழ்ந்தான். ஆனால் அவன் மனைவி தன்னிடம் இருக்கும் கிழங்கையும் துறவிக்குக் கொடுத்து விடுவான் என்று தன் கணவனுக்குச் சிறிதளவும் கொடுக்காமல் அனைத்தையும் சாப்பிட்டு விட்டாள்.

பின்பு துறவி வேடனைப் பார்த்து எங்கு தூங்குவது என்று கேட்டபோது வேடன் கூறினான் வன விலங்குகள் இருப்பதால் நம்மால் கீழே தூங்க முடியாது. எனவே, நானும் என் மனைவியும் தூங்குவதற்கு என பரனை இந்தக் குகையின் மேற்பரப்பில் அமைத்துள்ளேன். அதில் நாம் தூங்கலாம் என்றான். உடனே துறவி அந்தப் பரனில் ஏறி தூங்கி விட்டார். வேடனின் மனைவி கணவனைத் திட்டிக் கொண்டே இருந்தாள். இருவருக்காக மட்டும் அமைக்கப்பட்ட பரன். ஆகையால் வேடனும் அவன் மனைவியும் ஓர் ஓரமாக அமர்ந்தே தூங்கினர்.

சிறிது நேரத்தில் பரண் பாரம் தாங்காமல் வேடனும் மனைவியும் இருந்த பகுதி தரையில் சாய்ந்ததால் அப்பொழுது அங்கு வந்த சிங்கக் கூட்டமானது இருவரையும் இழுத்துச் சென்றது. சிங்கத்தின் கர்ஜனை சத்தம் கேட்டுக் கண்விழித்துப் பார்த்தார் துறவி. ஆனால் அவர்கள் இருவரும் இறந்துவிட்டனர்.

காலையில் துறவி மன வருத்தத்துடன் ஆசிரமம் திரும்பினார். பின்பு தன்னுடைய தவப்பலனாக இறைவன் தரிசனம் பெற்றார். இறைவன் துறைவியிடம் என்ன வரம் வேண்டும் என்று கேட்டபோது துறவி எனக்கு வரம் ஒன்றும் வேண்டாம் ஒரு சந்தேகத்தை மட்டும் தீர்த்து வைத்தால் போதும். அதாவது வேடன் எனக்கு நன்மையை மட்டும் செய்தான். அன்னதர்மம் செய்தான். இருந்தும் அவனுக்கு ஏன் இந்த நிலை ஏற்பட்டது என்று கேட்டான். அதற்கு இறைவன் அந்தத் துறவியிடம் இங்கிருந்து சிறிது தூரம் சென்றால் ஒரு பெரிய ராஜ்ஜியம் இருக்கின்றது அந்த நாட்டு மன்னருக்குப் பல ஆண்டுகள் குழந்தை பாக்கியம் இல்லாமல் இப்பொழுதுதான் ஒரு குழந்தை பிறந்துள்ளது. அந்தக் குழந்தையிடம் சென்று கேள் உனக்கான பதில் கிடைக்கும் என்று கூறி இறைவன் மறைந்தார்.

துறவி உடனடியாக அங்கு சென்று அந்தக் குழந்தையிடம் தன் சந்தேகத்தைக் கேட்டார். உடனே அக்குழந்தை எழுந்து அந்தத் துறவிக்கு நன்றி கூறியது. மேலும் நான் என் முந்தைய பிறவியில் ஒரு வேடனாகப் பிறந்தேன். அன்னதர்மம் செய்த காரணத்தினால் இளவரசனாக பிறந்துள்ளேன். எல்லாம் உங்களால்தான் என்று கூறியது.

மேலும் துறவி அக்குழந்தையிடம் அப்போ உன் மனைவி எங்கே என்று கேட்டார். அதற்கு ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் உள்ள சுடுகாட்டில் வெட்டியான் சில பன்றிகள் வளர்க்கிறார் அதில் ஒரு பன்றி சில குட்டிகளை ஈன்றது அதில் கடைசி குட்டியாக என் மனைவி பிறந்துள்ளாள் என்றது.

அன்பானவர்களே! இந்த கதையில் அன்னதர்மம் செய்த காரணத்தினால் வேடனுக்கு உயர் பிறவியும் அவன் மனைவி இடையூறு செய்ததால் அவளுக்குத் தாழ்ந்த பிறவியும் அமைந்தது. ஆகையால் அய்யாவின் பிள்ளைகளாகிய நாம் நம்மால் இயன்றவரை பிறருக்கு நன்மையை மட்டும் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டாலும் இடறு செய்யாமல் இருக்க வேண்டும்.

அய்யா உண்டு

தர்மயுக முரசு வாசகர்களே:

அய்யாவின் பேரருளால்….

அகில உலக அய்யாவழி சேவை அமைப்பு நடத்தும் அறப்பாடச்சாலை மாணவர்களுக்கான திறனாய்வு தேர்வுகளை வருகிற மே மாதம் 7 -ம் தியதி, ஞாயிற்று கிழமை நடத்தப்படுகிறது மற்றும் Online மாணவர்களுக்கான தேர்வுகளை வருகிற மே மாதம் 13 – ம் தியதி, சனிக்கிழமை இரவு 8 – 9 மணி வரை நடைபெறும் என்பதையும் அன்போடு தெரிவித்து கொள்கிறோம்.

மேலும் அகில உலக அய்யாவழி சேவை அமைப்பின் “முப்பெரும் விழா” (அறப்பாடசாலையின் 4 – ம் ஆண்டு பரிசளிப்பு விழா, அமைப்பின் 8 ஆம் ஆண்டு விழா, தர்மயுக முரசின் 4 ஆம் ஆண்டு விழா) மே மாதம் இறுதியில் நடைபெறும் என்பதையும் அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்.

அய்யா உண்டு

அய்யா அருளிய வாழ்வியல் நெறி முறைகள்

-த. சீதா லெட்சுமி அம்மா 949655691

“சொத்தாஸ்தி வஸ்து சுகமென்று எண்ணாதே
வஸ்தாஸ்தி பெண்ணு வகையென்று எண்ணாதே
நீ எண்ணாதே இருந்தால் நீணிலங்களும் மயங்கும்”

எதுவும் நிரந்தரமில்லை: இங்கு எதுவும் நிரந்தரம் கிடையாது. வாழும் வரை நமக்குக் கொடுக்கப்பட்டு உள்ளது. பதவி, பட்டம், அதிகாரம், பொருள், பணம், புகழ், மனைவி, மக்கள், வீடு, வாசல், தோட்டம், துரவு ஏனைய அனைத்துமே நிரந்தரம் இல்லை. ஏன் நமது பெயரும் கூட அப்படித் தான். இவை சில நாள் மட்டும் நம்மோடு.பின் வேறொருவரோடு. நம்மை விட்டுச் சொல்லாமல் சென்று விடும்.

நாட்கள் செல்லச் செல்ல நம்மை இவ்வுலகம் மறந்து விடும். காற்று உள்ளே இருக்கும் வரை தான் உடல். காற்று வெளியே போய் விட்டால் நாம் பிணம். சூரியன் வருமுன் ஜொலிக்கும் இலையின் மேல் உள்ள பனித்துளிகள் தான் நாம். இந்த சொற்ப வாழ்வு நிரந்தரம் என்று மயங்காதீர்கள். சொத்து, சுதந்திரம், அதிகாரம், பேர், புகழ் எல்லாமே, கண்மூடி கண் திறக்கும் வரை தான். சாவி கொடுத்தால் குரங்கு பொம்மை. ஆடும். டமாரம் தட்டும். தலையை ஆட்டும், விசை இருக்கும் வரை தான் வேலையே செய்யும். ஒரு காவல்காரன். வழக்கம் போல் தப்பட்டை அடித்துக் கொண்டு நடுநிசியில் “ஜாக்கிரதை” ‘’ஜாக்கிரதை’’என்று கத்திக் கொண்டே போவான். ஒருநாள் அவசரமாக வேறு ஓர் ஊருக்கு போக வேண்டி இருந்ததால் அவன் வேலையை அவன் பிள்ளை செய்ய வேண்டியதாயிற்று.

அவன் பிள்ளை கொஞ்சம் வேள்வி ஞானம் உள்ளவன். இரவில் அவன் தப்பட்டை அடித்துக் கொண்டு ”ஜாக்கிரதை, ஜாக்கிரதை” என்று சொல்லிக் கொண்டு தகப்பன் வேலையைச் செய்தான். அடுத்த நாள் ராஜாவே அந்தக் காவல்காரன் வீட்டு வாசலில் நின்றான்.அந்தப் பையனைப் பார்க்கத் தான் வந்தான். ”ஐயோ ராஜாவே வந்திருக்கிறார், என் பிள்ளை என்ன பெரிய தவறு ஏதாவது செய்து விட்டானோ?, இங்கேயே தண்டனையைக் கொடுத்து நிறைவேற்றுவாரோ .? காவல்காரன் மிகவும் நடுங்கினான்….
ஆனால் ராஜா அந்தப் பையனுக்கு பரிசு கொடுத்து கௌரவிக்க அல்லவோ வந்தான்? எதற்காக? முதல் நாள் இரவு பையன், “ஜாக்கிரதை. ஜாக்கிரதை” என்று அப்பாவை போல் சும்மா கத்திக் கொண்டு போகவில்லை. சில வார்த்தைகள் சொன்னது தான் ராஜாவை மயக்கியது. அந்த வாக்கியங்கள் இவை தான். அடே தூங்கு மூஞ்சி, விழித்துக் கொள்ளடா. அப்பன் என்னடா, தாயும் என்னடா, அண்ணன் என்னடா, தம்பி என்னடா, காசும் பொய்,வீடும் பொய் சொந்தமும் இல்லை, பந்தமும் இல்லை,. எல்லாம் மாயை. இதை எல்லாம் நம்பி ஏமாறாதே, உடனே விழித்துக் கொள். பிறப்பே துன்பம், வயோதிகம் பரம துக்கம், வாழ்வே சோகம், மாயம், விழித்துக் கொள் ஜாக்கிரதை.

ஆசையும், பாசமும், கோபமும், பேராசையும் திருடர்களப்பா. உன் உள்ளே இருக்கும் ஞானம் எனும் விலை மதிப்பில்லா மாணிக்கத்தைத் திருடுபவர்கள். விளக்கு எடுத்துக் கொண்டு வெளியே திருடர்களைத் தேடாதே. உனக்கு உள்ளே ஒளிந்து இருக்கும் அவர்களைத் தேடி துரத்து. விழித்துக் கொள், ஜாக்கிரதை ஜாக்கிரதை. மனக்கோட்டை கட்டுபவர்கள் நாம். நம்முடைய சொத்து எல்லாமே கனவில் கட்டிய மாளிகைகள், இளமை, வாலிபம் நிரந்தரமல்ல. நேற்று மொட்டு, காலை மலர், மாலையில் வாடிப் போய் எறிந்தாகி விட்டது. மின்னல் போலாகும் இந்த வாழ்க்கை, இதில் நீ என்ன? நான் என்ன? எல்லாமே மாயை.. விழித்துக் கொள், ஜாக்கிரதை, ஜாக்கிரதை.
ஆம்,தோழர்களே: “உங்கள் புகழை, உங்கள் பதவியை, அதிகாரத்தை ஒரு போதும் நம்பாதீர்கள்” இது எதுவுமே நிரந்தரம் கிடையாது”. ஏற்றம் வரும் போதே மாற்றமும் நிகழும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

அய்யா உண்டு

“எந்தன் மொழியும் என்னெழுத்தும் ஏடாய்ச் சேர்த்து இவ்வுலகில்
சிந்தை மகிழ்ந்த அன்பருக்கு தெரியத் திறமாய் எழுதிவைத்தேன்
எந்தன் பெருமான் திருமொழியை எடுத்தே வாசித்துரைத்தோரும்
சந்த முடனே வாழ்ந்து மிகத் தர்மப் பதியும் காண்பாரே”
பலகோடி வருடங்களாக உலகிடத்திலே கிடந்து உரு திரண்ட ஜீவர்களின் கர்ம சித்தி சுத்தி பெறவேண்டி, அதற்கான உபாய சித்திகளை வேதங்களாக வகுத்து வைத்தான் ஆதிமகாமால். ஜீவர்களின் மேல் பரிவு கொண்ட பரந்தாமன் அந்த வேதங்களைக் கர்ம, ஞான காண்டங்களாக பிரித்து தம்மைக் காட்சி ரூபமாக உருசமைந்து ஜீவர்களின் மேன்மையில் சங்கு, சக்கர, கதை, தாமரை, கரிய திருமேனியனாய் காட்சி கொடுத்து அக்காட்சியைக் கண்ட கண்களின் மூலம் ஜீவர்களுக்குச் சித்தமுக்தியை அருளிவந்தார். யுகா யுகங்களாக இறைவனின் திரு அருளாடல்களுக்கு விரோதமாக அசுத்த மாயையும் வீரியம் கொண்டு ஜீவர்களைத் தீண்டிப்பிடித்து வந்த வண்ணமாய் இருந்தமையால் பரமனும் தம்மை அதற்கு நிகராக உபாயப்பொருளாக்கி அருளாடல் கண்டு வந்தமையை அவதாரமென வகைப்படுத்தி வைத்தனர் விற்பன்னர்கள்!

ஆனாலும் இதன்பாடு முடிவு காணாததாலும், ஆரம்ப யுகத்திலிருந்து கடந்து வந்த யுகத்தின் நன்மை, தீமைகளும் ஜீவர்களின் குணமாக / கர்மமாக / சித்தமாக இருந்து காரண சடலமாக நின்றமையாலும், ஒவ்வொரு யுகத்தின் தொடர்பும் மலரும் அடுத்த யுகத்தின் காரணமாக சமைந்ததாலும்… மாயவர் தாம் கடந்து வந்த யுகாயுகங்களின் வேத நடப்புகள் ஜீவர்களின் சர்வ யுக தேக கர்மத்தின் தீர்வாகிடவேண்டி அவைகளையெல்லாம் வியாசராக தோன்றி ஏகத்தின் ஆரம்ப நிலை முதலாய் அண்ட, பிண்ட படைப்புவரையும் சர்வதையும் கோர்வையாக்கி வேத ஆகமங்களாக்கி அருளி வைத்தார். இவைகளையே வேத, உபநிடத, இதிகாச, புராண, சாரங்களாக எல்லோருக்கும் புரியும் படியாக அருளிவைத்தான்.

இருப்பினும் இந்த ஆகமங்கள் சகலோருக்கும் சென்று சேராதவண்ணம் அசுரத்தனம் ஆக்கிரமித்தமையால் ஆழ்வார், நாயன்மார், பக்தர்கள், ஆச்சாரியர்கள், சித்தர்கள். எனப் பலசொரூபத்தில் இறை உபதேசங்கள் உருவாகின. ஆனால், இவைகள் அனைத்தும் அவரவரின் கொள்கை கோட்பாடுகளின் முன்னிறுத்தல்களினாலும், சில பாஷையாளர்களின் தற்குறித்தனத்தாலும் உண்மையான இறை உபதேசம் மறைக்கப்படலாயின!

ஆகவே எம்பெருமான் சகலோரும் அறிந்து தர்மத்தின் வழி நடந்து தர்மத்தை உபதேசித்து ஜீவர்களின் கர்மத்தைத் தீர்க்கும் பொருட்டு அன்று ஆதியில் எவ்வாறு மனு சொரூபமாய் பாவித்து மனுவம்சத்தினை வியாபித்தாரோ அவ்வண்ணமே இக்கலியில் மனுவாக தெய்வீக உடற்கூறுடன் சான்றோரைப் பிறவி செய்து, அவரவரின் தன்னியத்தை தாமே உணர சூட்சம சூத்திர உபாயம் வழங்கி, அகிலத்திரட்டு எனும் இப்பேரண்டத்தின் முழு தோற்ற, நடப்பு, வருங்கால நிலைகளையும் வகுத்து அருளிவைத்தார். இந்தவிதமாக ஆதிமகாபர இந்திர நாராயணரின் சிந்தையை சிரமேற்தாங்கி அம்மை சரஸ்வதி திருவாய் மலர்ந்து உரைக்க, அய்யா நாராயணமே தன் கைப்பட எழுதி இவ்வுலகோர் அறியும் படி அனுப்பிய திருவாசகத்தையும் அன்றைய ஆதிக்க அசுரத்தனம் நிறைந்த வேதிய/மறையோர் எடுத்து மறைத்து தூஷனித்துப், பின்னர் அகிலம் விடுத்த எச்சரிக்கையின் படி இப்பாதகத்தை செய்த கூட்டத்தினர் நவாப், வெண்ணீசக்கூட்டத்தால் நொம்பலத்துக்குள்ளாகி அல்லலுற்று இன்றளவும் நசுக்கப்பட்டு வருகின்றனர் அவரவரின் செய்கையின் காரணமாய்.

ஆனால் அன்பான மனுவோரின் இன்னலைத்தீர்க்கும் பொருட்டு தகப்பனாக நாராயணமே வைகுண்டமாய் தோன்றி பல்வேறு காரணங்களைப் போதித்து, உபதேசித்து… தர்மத்தைக் கண்ண குழலிசையால் தெய்வீக நற்பண்புகளை விதைத்தது போல் அய்யா இக்கலியில் விஞ்சை, உபதேச, திருவிழா இகணை நடப்புகளாக பலவகைகளை யாமமாக விதைத்து ஜீவர்களின் சித்தசுத்திக்காக செயலாற்றிக் கொண்டிருக்கிறார்.

அய்யா உண்டு

CONTACT
close slider

    Please feel free to get in touch, we value your feedback.