தர்மயுக முரசு செப்டம்பர் 2022

அய்யாவின் அருளால் எந்நாளும்நன்னாளே

-அசோக்குமார் அய்யா – 009607704901, 8012174032.

அன்னமளக்கும் ஆதித்திரு நெடுமால்

முன்னவன்றன் பேரால் முத்திரிகளிட்டதினால்

சென்றவிடமெல்லாஞ் சிறப்பதிகமுங்களுக்கு

நெற்றியில் நெடுநாமம், நெஞ்சத்தில் நேர்மை, நினைவெல்லாம் நாராயணம். இப்படி தினந்தோறும் வெற்றி நடை போடும் அய்யாவழிபாட்டு சனாதன சொந்தங்கள் அனைவருக்கும் வீர வணக்கம்.

அகில ஜோதிகளே: “நீறு இல்லாத நெற்றி பாழ்” என்று சொல்வார் அவ்வையார். அதாவது நெற்றியில் எப்போதும் ஆன்மிக சின்னம் அணிவது கட்டாயமாகும் என்கிறார். எப்போதும் நம் நெற்றியில் திருநாமம் இட்டும், நம் உள்ளத்தில் பகவானைச் சுமந்தும் செயல்பட வேண்டும். இச் சிறப்பான செயல் பாட்டில் ஒருபோதும் நாம் தயங்கிவிடக் கூடாது. இச்சிறப்பான செயல்பாடு நம்மை மேலும் மேலும் சான்றோனாக்கி உயர்ந்த இடத்திற்கு அழைத்துச் செல்லுவது மட்டுமல்லாமல் நம்மை அகில உலகத்தின் ஒளிவிளக்குகளாகப் பிரகாசிக்க வைக்கும்.

ஆனால், இந்த நவநாகரீக உலத்தில் நாகரீகம் என்கிற போர்வையில் பெரும்பாலும் அழிச்சாட்டியங்களே நடந்து கொண்டு இருக்கின்றன. அனைத்தையும் தவறாகவே மக்கள் மனங்களில் படியச் செய்து கொண்டு இருக்கின்றன.

 அதாவது சிலர் நினைக்கிறார்கள், நெற்றியில் சமையச்சின்னம் அணிவதால் அழகு இல்லை என்றும்,  மற்றவர்கள் தவறாக நினைத்து விடுவார்கள் என்றும், வியாபாரம் நடக்காது என்றும், வேலைவாய்ப்பு பறிபோய் விடும் என்றும், நண்பர்கள் நகைப்பார்கள் என்றும், மாற்றுச் சமயத்தினர் தவறாக நினைப்பார்கள் என்றும், பிறர் நம்மை ஒதுக்குவார்கள் என்றும், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் திட்டுவார்கள் என்றும், அது நாகரிகம் இல்லை என்றும், அது தேவையில்லாதது என்றும், அது கட்டாயமில்லை என்றும், நாம் இன்னார் என்று அடையாள படுத்திவிடும் என்றும் குறுகிய பார்வையில் தவறாக முடிவு செய்கிறார்கள்.

 இப்படி அனைத்தையும் தவறாக நினைத்து நமது தனித்துவத்தையும், பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் நாம் இழந்து கொண்டு வருகிறோம். அதுமட்டுமா சமையச்சின்னம் அணிவதால் நமக்குக் கிடைக்கும் அனைத்து விதமான சிறப்புக்களை நாம் இழந்து கொண்டு வருகிறோம். 

 வைகுண்ட ஜோதி அழகாக சொல்லுவார் “முன்னவன்றன் பேரால் முத்திரிகளிட்டதினால் சென்ற விடமெல்லாஞ் சிறப்பதிகமுங்களுக்கு” என்று. ஆகா! என்ன அற்புதமான வார்த்தை. அய்யாவை நினைத்து நாம் நெற்றில் நெடுநாமத்தை எப்போதும் இட்டு செயல்பட்டோமேயானால் எல்லா விதமான பாக்கியங்களும் நமக்குக் கிடைக்கும். நெடுநாமம் நமது உள்வினையையும் ஊழ்வினையையும் போக்கி நம்மை சான்றோனாக்கி தர்மயுகத்திற்கு அழைத்து செல்லும் அற்புதமான மருந்து என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

 மேலும் எந்தச் சூழ்நிலையிலும் நமக்கான அடையாளத்தை விட்டுக்கொடுக்காமல், குறைத்து மதிப்பிடாமல், பெருமையாக எண்ணி அதனை வெளிப்படுத்துவதே சிறந்தது. மற்றவா்களுக்காக நமக்கான அடையாளத்தை மறைத்தும் விட்டுக்கொடுப்பதும் ஒருநாளும் நமக்கு மேன்மையைத் தராது.

 அன்பானவர்களே: சமையச்சின்னத்தின் மகத்துவம் என்ன?  புனிதத்துவம் என்ன? சிறப்பு என்ன? போன்றவற்றை உணர்ந்து நமது சந்ததியினருக்கும் அதனைப் புரிய வைத்து நெற்றியில் நெடுநாமத்தோடு எப்போதும் இவ்வுலகத்தில் நாம் காட்சியளித்து உலகத்தின் ஒளி விளக்குகளாக விளங்கி பிரகாசிப்போம் அகில ஜோதிகளே!

என்பேரால் முத்திரிகள் இட்டோரே நன்றாகும்

 

அய்யா உண்டு

 

அகில கேள்வி

1.சென்னி என்பதன் பொருள் என்ன?

2.பரமன் என்பவர் யார்?

3.எட்டுதிக்கு பாலர்களை வீரர்களாக்கியது எந்த யுகம்?

4.காமனை எரித்தது யார்?

5.கல்லாத கட்டன் யார்?

 விடை ……… பக்கம் பார்க்கவும்

அன்புக்கொடி சொந்தங்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம்: அன்பானவர்களே: தாங்கள் சார்ந்துள்ள தாங்கல் வரலாற்றை நமது தர்மயுக முரசு பத்திரிகையில் வெளியிட வேண்டும் என்றால் உங்கள் தாங்கலின் வரலாற்றை அழகாக எழுதி 0096893145654 என்ற வாட்சப் எண்ணிற்கு தாங்கலின் புகைப்படத்தோடு சேர்த்து அனுப்பி தாருங்கள். அதனை வருகின்ற மாதங்களில் நமது தர்மயுக முரசு பத்திரிகையில் பதிவு செய்து வெளியிடலாம்.

உச்சிப்படிப்புவிளக்கம்

        கா.த.லிங்கேஷ் அய்யா –  9842679780

“படச்சி நிறைந்தவர் பாலன் வடிவு கொண்டவர்
பங்காளர் பங்காளர் பாருலோகம் அளந்தவர்
அளந்தவர் திருமாலு ஆதிகுரு சன்னாசி
சிவசிவா சன்னாசி செந்தில் வேல் வடிவுமவர்
செந்தில்வேல் சன்னாசி செந்தில் வேல் அவர்
வடிவும் புகழ் படைத்தவர் மாயநிறமானவரவர் சிவசிவா
கங்கை கண்ணானவர் காரணம் நிறைந்தவர்”

 ‘பாலன் வடிவு’ என்கிற சொல்லானது, இந்த உலகத்தையும், உயிரினங்களையும் படைத்து, அதினுள்ளே நீக்கமற நிறைந்து விஷ்வரூபமாக உயர்ந்து நிற்கும் நாராயணனே, சிறிய ரூபம் கொண்ட பாலகனாகவும் தோற்றமளிக்கிறான் என்பதாகும். உதாரணமாக, வாமன அவதாரத்தில் நாராயணர் எடுத்தணிந்த வேசத்தைக் குறிப்பிடலாம். அதாவது மாபலி ஆனவன் சிறு பாலகன் தானே என நினைக்க, அவரோ மண் – விண் முட்ட விஷ்வரூபமாக வளர்ந்து நின்றார். அதுபோல, மகரத்தில் உதித்த வைகுண்ட அவதாரத்தையும் பல்வேறு பருவநிலைகளில் அங்கு காட்டப்படுவதையும் கீழ்க்கண்ட அகிலத்திரட்டு வாசகம் மூலம் உணர்ந்து கொள்ளலாம்.

“பாலனை போல்காட்டி பதினாறுடன் காட்டி
நாலுரண்டு காட்டி நல்லமகவதுக்கு”

‘பங்காளர்’ எனும் பதம், இரண்டு பொருள் தரும். ஒன்று எந்தச் சூழ்நிலையிலும் நமக்குப் பக்க பலமாக இருப்பவர், உதவுபவர். இங்கு இது காக்கும் கடவுளான நாராயணனைக் குறிக்கிறது. அவரே நாம் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து துயர் தீர்ப்பவர். அரக்கர்கள் கேட்கும் வரங்களை எல்லாம் மகேஷ்வரன் (ஈசன்) கொடுக்க, அதனால் துன்பப்படும் தேவர்களின் அபயக்குரலை கேட்டு, ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு வேசத்தில் பூமியில் அவதாரம் எடுத்து, அரக்கரை அழித்து, தேவர்களின் துயர் தீர்ப்பதே! நாராயணரின் இயல்பான நிலை. அதானால் தான் பங்காளர் என்று நாராயணர் சிறப்பிக்கப் படுகிறார்.

“ஒருசாம நேரத்திலே ஊழி என்ற காற்று வரும்
மல்புடைய பிள்ளைகளே வருவேன் நான் எழுப்புதற்கு”

 

எனும் அருள்நூல் வாசகத்தையும் இங்கு ஒப்பு நோக்குவோம். இரண்டாவது, ஒரு ஆண்மகனின் விந்து வழி வந்த குடும்பத்தை பங்காளன் அல்லது பங்காளி குடும்பம் என்று சொல்வது உண்டு. அதுபோல இங்கு நாம் அனைவரும் பரம புருஷனாகிய நாராயணர்கும் சப்த கன்னியர்களுக்கும் பிறந்த ஒரே விந்து வழி குலமே. அதனால் தான் பங்காளர் எனும் பதம் இந்தப் பொருளிலும் பொருந்தி வருகிறது.

அரிஅரசன் தவசு பண்ணி பெற்ற மக்கள் நீங்கள்

 எனும் அருள்நூல் வாசகத்தை இங்கு ஒப்பிட்டு உணர்வோம்.  ‘அளந்தவர்’ எனும் பதம்,

“ஓரடியால் அளந்த மாயன் உலகம் ஆள நாம் வருவோம்
பாதியடி கேட்டதற்குப் பங்கு இல்லை என்று சொன்னான்
சீறி அவனைப் பார்த்து சினத்து விட்டேன் மாபலியை”

எனும் அருள்நூல் வாசகத்தின் படி, மண்ணையும் விண்ணையும் ஓரடியால் அளந்து விட்டு, பாதி அடி எங்கே என்று கேட்டு மாபலியைப் பாதாள சிறைக்குத் தள்ளிய வாமன அவதார வரலாற்றின் தத்துவார்த்த பொருளையே உணர்த்துகிறது. அதாவது, இறைவன் அனைத்தின் மீதும், அனைத்திற்கு மேலாகவும் வல்லமை பெற்றவன் என்பதே இதன் உள்ளார்ந்த பொருளாகும்.  

 ‘செந்தில் வேல்’ எனும் பதத்தில் செந்தில் என்பது ஆறுமுகக்கடவுளான முருகனைக் குறிக்கும். செந்தூர் தலத்தில் இருந்து சிங்கமுக சூரன், சூரபத்மனை அழித்து அங்கேயே அருள் பாவிப்பதால் ‘செந்தில் ஆண்டவர்’ என்று முன் ஆகமங்களின் மூலம் அறிகிறோம். மேலும் சூரனை அழிப்பதற்காக ஓர் ஆண் பிள்ளை வேண்டும் என்று, சிவனை நினைத்து சரவணப் பொய்கையில் தவம் நிற்கிறாள். அந்தத் தவத்தின் பயனாக நாராயணனே ஆறுமுகனாய் சக்தியின் மைந்தனாக தோன்றுகிறார் என்பதை அகிலத்திரட்டு மூலம் நாம் அறிகிறோம்.

 நாராயணன் எனும் நாமத்தைப் பரநிலையிலிருந்து பார்க்கும் போது, சிவத்திலிருந்து சக்தியும், சக்தியிலிருந்து நாதமும், நாதத்தில் விந்துவும், விந்துவில் விஷ்ணுவான நாராயணர் தேன்றியதை அறிகிறோம். ஆக நாராயணன் எனும் நாமம் ‘சிவம்’ என்கிற பர தத்துவத்தில் ஒன்றாகி விடுகிறது. ஆக செந்தில் என்பதற்கு ‘சிவம்’ எனும் பொருளே இவ்விடத்தில் சிறப்பானதாக அமையும்.

“கந்தனார் வேசம் கரந்திருந்த மாயவனார்
செந்தூர் பதியில் சேர்ந்திருந்தார் அம்மானை”

எனும் அகில வாசகத்தையும் இங்கு ஒப்பு நோக்குவோம். அடுத்து ‘வேல்’ என்கிற பதம், ஆறுமுகன் சூரனை அழிப்பதற்காக ஏற்றுக்கொண்ட ஆயுதத்தைக் குறிக்கும். அதனால் சூலாயுதப் பெருமாள் என்ற நாமமும் அவருக்கு உண்டு. அன்னை பராசக்தி தான் சூரனை அழிக்க வேலாக சமைந்தாள் என்று அகிலத்திரட்டு அம்மானை மூலம் நாம் அறிகிறோம். எனவே வேல் என்பதை ‘சக்தி’ – யாக கொள்ளலாம். ஆக ‘செந்தில் வேல்’ எனும் போது, ‘சிவசக்தி’ என்கிற உச்ச நாமத்தைக் குறிப்பதாகக் கொள்வதே இங்குப் பொருத்தமாக அமையும். ‘ செந்தில் வேல் சன்னாசி’ எனும் போது, சக்தியை வேலாயுதமாக கொண்டு சூரனை அழித்தது போல, காவி துணி உடுத்து உத்திராட்ச மாலை சூடி, தோளில் பொக்கணமும், மாத்திரைகோல் மற்றும் சுரைகுடுக்கையில் கொண்டு முழு பண்டாரக் கோலத்தில் வந்து, கலிமாய எண்ணங்களின் மொத்த உருவான கலியனின் வரத்தை மாற்றி அவனை முடியடிவேரில்லாமல் அழிக்க வேசமெடுத்த அய்யா வைகுண்டரையே இங்குச் சிறப்பித்துச் சொல்லப்படுகிறது. 

 ‘மாயநிறம்’ என்றால் எந்த ரூபத்திற்கோ நிறத்திற்கோ உட்படாதது என்று பொருள்.  ‘கங்கை கண்’ எனும் பதத்தின் பொருள் நேரடியாக பார்த்தால் கங்கை நதியின் மைய பகுதி ஆகும். ஆனால் இங்கு சிறப்பிக்கும் பொருளாகவே எடுத்தாளப்படுகிறது. கங்கை நதியானது நீராடுபவர்களின் பாவத்தைத் தன்னுடைய கருணையால் போக்குவதாக முந்தைய ஆகமங்கள் கூறுகின்றன. அதுபோல் கங்கை நதியின் கருணையை உவமையாகக் கொண்டு, நாராயணரின் முதன்மையான குணமே உலக உயிர்களின் மேல் அளப்பரிய கருணை கொள்தலே ஆகும் என்பதை உணர்த்தவே கங்கை கண்ணானவர் எனும் பதம் எடுத்தாளப்படுகிறது. ‘காரணம் நிறைந்தவர்’ என்றால், உலகின் அனைத்து செயல்களுக்கும் காரணனாக இருக்கும் மூலமுதற் பொருள் என்பதாகும்.

 பொருள்: ஒரே மூலப்பொருளான தன்னிலிருந்தே அனைத்தையும் படைத்து அதினுள்ளே ஜீவனாக நீக்கமற நிறைந்து விஷ்வருபியான நாராயணரே, மகரத்திலிருந்து பாலகன் வைகுண்டராக வெளிப்பட்டார் என உணர்ந்து உம்மையே போற்றுகின்றோம்.

 ஈரேழு லோகங்களையும் ஓரடியால் அளந்த நாராயணரே, தன் விந்து வழி சான்றோர்களைக் காப்பாற்றுவதற்கு வந்த பங்காளர் என உணர்ந்து உம்மையே போற்றுகின்றோம்.

மண்ணையும் விண்ணையும் தன் காலால் அளந்த நாராயணரும், அனைத்துக்கும் முதலாய் தோன்றிய சிவப்பொருளும் இணைந்தே பண்டாரமாக அவதரித்தார் என உணர்ந்து உம்மையே போற்றுகின்றோம்.

 ஆதி நிலையான சிவசக்தி வடிவமே கிரேதாயுகத்தில் செந்தில் வேல் வடிவத்திலும், கலியுகத்தில் பண்டார வடிவத்திலும் அவதரித்தார் என உணர்ந்து உம்மையே போற்றுகின்றோம்.

சூரனை அழிப்பதற்காக பராசக்தியை வேலாயுதமாக மாற்றி கந்தனாக வந்த நாராயணரே கலியனை அழிக்க பண்டாரமாக வந்தார் என உணர்ந்து சிவசக்தியான உம்மையே போற்றுகின்றோம்.

 ஒவ்வொரு யுகத்திலும் எடுத்தணிந்த பல்வேறு வடிவங்களாலும், அதனதன் நாமங்களாலும் 14 லோகங்களிலும் பெருமை நாட்டிய நாராயணர் உண்மையில் எந்த விதமான நாம – ரூபங்களுக்கும் அடங்காத மாய சொரூபன் என உணர்ந்து சிவசக்தியான உம்மையே போற்றுகின்றோம்.

 உலகின் அனைத்து செயல்களுக்கும் காரணனாக இருக்கும் மூலமுதற் பொருளே, நம் மீது அளப்பரிய கருணை கொண்டுள்ளார் என உணர்ந்து, சிவசக்தியான உம்மையே போற்றுகின்றோம்

அகிலதிரட்டு அம்மானை மூலமும், உரையும்        

 -க. ரீகன் அய்யா- 0096893145654

“அவ்வுகத்தை கண்டு ஆதிபிரமா மகிழ்ந்து
இவ்வுகத்து நாம் என்ன விடுவோமென்று
மாலும் பிரமாவும் மாயா திருப்போனும்
ஆலோசித்து ஆகமத்தைத் தான்பார்த்து”

 அம்மை மகாலெட்சுமி அய்யா நாராயணரிடம், உமக்கு இந்த உலகில் எதிரி எப்படித் தோன்றினான்? என்று கேள்வியினைக் கேட்க அய்யா நாராயணர் இப்போது உலகம் தோன்றியது முதல் தெய்வ சக்திகள் தோன்றிய நிகழ்வுகளையும் சொல்லி இனி யுக வரலாறுகளைச் சொல்லி வருகின்றார். இப்போது தெய்வ சக்திகள் உலகில் தோன்றிவிட்டன. அழகான ஒரு ராச்சியமும் படைக்கப்பட்டு விட்டது. படைக்கப்பட்ட இந்த யுக காலத்திற்கு என்ன பெயரை வைப்பது என்று தேவசங்கங்கள் ஆலோசனையாகின்றன.

 

நீடிய யுகமெனவே நியமித்துறுதி கொண்டு
தேடிய முப்பொருளும் செப்பினர் காணம்மானை
அவ்வுகத்தை ஈசர் ஆர்ப்பரித்த காலமதில்
இவ்வுகத்துக் காரை இருத்துவோமென்று சொல்லி”

இப்போது படைக்கப்பட்ட இந்த யுககாலத்திற்கு மும்மூர்த்திகளும் ஆலோசித்து நீடிய யுகம் என்று பெயரிடுகிறார்கள். இப்போது படைக்கப்பட்ட உலகிற்கு பெயரிடப்பட்டாகிவிட்டது. இனி இந்த உலகில் யாரை அமர்த்துவது என்று தேவசங்கங்கள் ஆலோசிக்கின்றன.

“எல்லோரும் கூடி யிதமித்தா ரம்மானை
தில்லை யாரீசன் திருவேள்வி தான்வளர்க்க
நல்லை யாவேள்வி நன்றாய் வளர்த்திடவே
பிறந்தான் குறோணி பெரிய மலைபோலே”

இப்படி எல்லா தேவசங்கங்களும் கூடி, படைக்கப்பட்ட இந்த ராச்சியத்தில் யாரை அமர்த்துவது என்று ஆலோசித்திருக்கின்ற வேளையில் சிவபெருமான் அங்கே ஒரு திரு வேள்வியை வளர்க்கின்றார். அந்த வேள்வி நன்றாக வளர்ந்து வருகின்ற வேளையில், அந்த வேள்வியிலிருந்து குறோணி என்று சொல்லக்கூடிய அசுரன் பிறக்கின்றான். அவன் பிறக்கும்போதே அளவில் பெரியவனாக இருக்கின்றான். அவனை ஒப்பிடும்போது அய்யா பெரிய மலைக்கு ஒப்பிட்டு சொல்லுகின்றார். அப்படி பெரிய மலைபோலே அந்த குறோணி அங்கே வேள்வியிலிருந்து பிறக்கின்றான். 

“அறந்தா னறியா அநியாய கேடனுமாய்
பிண்டம் நிறையும் பொல்லாதான் தன்னுடம்பு
அண்டம் மமைய அவன் பிறந்தானம்மானை
முகங்கண்க ளெல்லாம் முதுகுப் பிறமேலாட
நகக் கரங்கள் கோடி கால்க ளொரு கொடி”

அய்யா குறோணியைப் பற்றி சொல்லும்போது “அறந்தான் அறியா அநியாய கேடன்” என்று சொல்லுகின்றார். அதாவது இந்த உலகம் இறைவனால் படைக்கப்படும்போதே இறைவன் நியதிபடிதான் அறத்தால் இந்த உலகம் இயங்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டே இந்த உலகம் படைக்கப்பட்டது. அப்படி படைக்கப்பட்ட இந்த உலகம் இறைவன் தர்ம நியதிபடியே இயங்குகின்றது. அப்படி இயங்கிய இந்த உலகமானது தொடர்ந்து இறைவன் நியதிபடி இயங்க வேண்டுமெனில் உலகில் படைக்கப்படும் உயிர்களும் அதே தர்ம நியதிபடியே வாழ வேண்டும். அப்படி தர்ம நியதிபடி வாழவேண்டுமெனில் அந்த உயிர்களும் இறைவன் வகுத்த அறம்பற்றி அறிந்திருக்க வேண்டும். ஆனால் சிவபெருமான் திருவேள்வியிலிருந்து பிறந்து வந்த குறோணி அறம் பற்றி அறியாத சண்டித் தடிமோடனாகவே இருக்கின்றான். அறம் பற்றி ஒருவன் அறியாதவனாக இருந்தால் அவன் உலகின் நன்மை தீமை பற்றி அறிய மாட்டான். அவன் செய்வது அத்தனையும் அநியாயமாகவே இருக்கும். எனவேதான் அய்யா குறோணியை அறம் அறியா அநியாய கேடன் என்று சொல்லுகிறார்.

மேலும் அய்யா குறோணி பற்றிய வடிவத்தை விவரித்துச் சொல்லுகின்றார். குறோணி என்னும் அசுரன் நம் கற்பனைக்கு எட்டாத மிகப்பெரும் உருவ அமைப்பைக் கொண்டவனாக இருக்கின்றான். அவன் உடம்பானது இந்த அண்டத்திலிருந்து படைக்கப்பட்ட பிண்டமான உலகம் நிறையும் அளவிற்கு இருக்கும். அவனுடைய முகமும், கண்களும் முதுகுப் புறமாக இருக்கும்படியாக அவன் பிறந்தான். அதாவது, அவன் படைப்பே ஒரு விசித்திரமான படைப்பாக இருந்தது. நேரான செயல்கள் செய்பவர்களுக்கே நேர்வழி தெரியும். அநியாய செயல்களைச் செய்பவர்களுக்கு நல்லவழி தெரிவது இல்லை. குறோணிக்கும் அப்படியே அவன் செய்யும் தீய செயல்களுக்கு ஏற்ப அவன் கண்களும் முகமும் முன்னோக்கி இல்லாமல் பின் நோக்கியே இருந்தன. மேலும் அவன் கைகள் ஒருகோடி அளவுடையதான எண்ணிக்கையில் இருந்தன. அதுபோல அவன் கால்களும் ஒரு கோடி எண்ணிக்கையில் அளவிட முடியாத அளவில் இருந்தன.

“தவங்க ளறியாச் சண்டித் தடிமோடன்
குறோணி அவனுயரங் கோடி நாலுமுழமாய்
கயிலை கிடுகிடுடென்னும் கால்மாறி வைக்கையிலே
அகிலங் கிடுகிடென்னும் அவனெழுந்தா லம்மானை”

தவம் என்பது இறைவனைக் கண்டு கொள்ள, தம்மை செம்மைப்படுத்த உதவும் ஞானம் ஆகும். இறைவனை அறியும் நாட்டம் உள்ளோர் தவம்பற்றி அறிந்து வைத்திருப்பர். இறைவனால் படைக்கப்பட்ட உயிர்கள் தம் தந்தையான இறைவனை மீண்டும் அடைய தவமே முதன்மையானது. தவம் பற்றிய அறிவு உடையவர் எப்போதும் விழிப்புடையவர்களாக இருப்பர். ஆனால் அசுரப் பிறவியாகிய குறோணிக்குத் தவம் பற்றிய ஞானம் இல்லாமல் சண்டித் தடிமோடனாக இருந்தான்.

தவம் பற்றிய ஞானம் இல்லாததால் இறைவன் பற்றிய ஞானமும் அவனிடம் இல்லை. மேலும் அவன் உயரத்தைப் பற்றி சொல்லும்போது நான்கு கோடி முழங்கள் அவன் உயரம் இருக்கும் என்று அய்யா சொல்லுகின்றார். அவன் இவ்வளவு மிகப்பெரும் அளவில் இருப்பதால், அவன் தன் கால்களை எடுத்து மாற்றி வைக்கும்போது கயிலையானது அதிர்வுகளால் ஆடக்கூடியதாக இருந்தது. அவன் எழுந்து நின்றாலே இந்த உலகம் தாங்க முடியாமல் கிடுகிடென்று ஆடும் என்ளு அய்யா குறோணியின் நிலையை வருணித்துச் சொல்லுகின்றார்.————————–

“இப்படியே குறோணி என்றவொரு அசுரன்
முப்படியே நீடிய யுகத்திலிருந்தான் காண்
இருந்து சிலநாள் இவன்தூங்கித் தான் விழித்து
அருந்தும் பசியால் அவனுயர்ந்து பார்ப்பளவில்
பாருகங் காணான் பலபேருடல் காணான்
வாருதிரை நீரை வாரி விழுங்கினன் காண்”

 

இப்படியாகக் குறோணி என்ற ஒரு அசுரன் யாராலும் விபரித்துச் சொல்ல முடியாத அளவில் மிகப்பெரும் உருவ அமைப்போடு நீடிய யுகத்தில் அனுப்பப்பட்டு இருந்தான். அப்படி அவன் எந்தவிதமான நன்மைகளையும் அறிந்திருக்காத காரணத்தால், தான் எதற்காகப் படைக்கப்பட்டோம் என்ற அறிதலும் இல்லாமல் அப்படியே சிலகாலம் உறக்க நிலையில் இருக்கின்றான். பின்பு அவனுக்குப் பசி உணர்வு ஏற்படுவதால் அவன் விழித்து எதையாவது விழுங்க வேண்டும் என்று சுற்றும் முற்றும் பார்த்து அப்படியே அவன் உயரத்தால் எழுந்து நின்று பார்க்கும் போது அவன் கண்ணுக்கு எந்த உயிரினங்களும் தெரியவில்லை. இப்போது பசி அவனுக்கு மிகுந்து எதையாவது எடுத்து வாயில் இட வேண்டும் என்ற நிலையைக் கொடுக்கின்றது. அப்போது விரிந்து பரந்திருந்த கடலானது அவன் கண்ணுக்குத் தெரியவே, அதை அப்படியே எடுத்து அவன் வாயில் எடுத்து விழுங்கினான்.

(தொடரும்)

தர்மயுக முரசு வாசகர்களுக்கு அன்பான வேண்டுகோள்

நமது தர்மயுக முரசில் கேள்வி பதில் என்கிற பகுதியில் கேள்வி கேட்க நினைப்பவர்கள் கீழ் கண்ட விலாசத்திற்கு கடிதம் மூலமாக கேட்கலாம் அல்லது கீழ் கண்ட வாட்சப் எண்ணிற்கு டைப் செய்தும் அனுப்பலாம். அதன் விடைகளை உங்கள் கேள்வியோடும் உங்கள் பெயரோடும் நமது தர்மயுக முரசில் பதிவாகும்

விலாசம்:

அகில உலக அய்யாவழி சேவை அமைப்பு
அய்யா வைகுண்டர் வளர்பதி, கைலாசக் கோனார் காம்பவுண்ட்,
வடக்கு மெயின் ரோடு, வள்ளியூர் 627117, திருநெல்வேலி மாவட்டம்
வாட்சப் எண்: 8903201008

சிவகாண்ட அதிகார பத்திரம்

-மாடசாமி அய்யா – 8973349046

சூத்திரம்:என்னை யறிந்தவர்க்கு ஈசன் வழி சொல்லுகிறேன்

பொருள்: என்னை உள்ளபடி அறிந்தவர்க்கு ஈசனாகிய நான் முக்திக்கான வழியைக் கூறுகிறேன்.

விளக்கம்: இறைவனின் தன்மையை உள்ளபடி அறிந்தவர்க்கு அந்த இறைவனே குருவாக வழிகாட்டியாக வழி காட்டுகிறார். இறைவனைத் தன்னைப் போன்ற மனித ஆன்மா என்றோ, மனித உடல் எடுத்தவர் என்றோ எண்ணுபவர்களுக்கு இறைவனின் உபதேசம் புரிந்து கொள்ள இயலா ஒன்றாகிறது. அவர்களின் ஆணவம் பகவானின் உண்மை நிலையை அறியத் தடையாய் நிற்கிறது. அவர்களுக்கு இறைவனின் வாக்கில் நம்பிக்கை ஏற்படுவது இல்லை. எனவே, உபதேசம் ஆனது அய்யாவை ஈசன் என்று அறிந்தவர்க்கு மட்டுமே. எனவே அய்யா ” என்னை அறிந்தவர்க்கு ஈசன் வழி சொல்கிறேன் ” என்கிறார்.

 சூத்திரம்:மண்ணில் மூவாசையது மாற்றானாய் இருக்குதடா

 பொருள்: உங்களுக்கு இந்த மண்ணுலகில் மண், பெண், பொன் ஆகியவற்றின் மீது கொண்ட ஆசை‌ மாற்றானாய் இருக்கிறது.

 விளக்கம்: உடலெடுத்த சீவன்களுக்கு எல்லாம் ஆன்ம ஞானத்தை அடைய விடாமல் ஆசை செய்கிறது. அது எங்ஙனம் எனில் ஆசையால் முயற்சி ஏற்படுகிறது, முயற்சி நிறைவேறினால் மேலும் ஆசை வளர்கிறது, முயற்சி தோல்வியடைந்தால் வெறுப்பு, கோபம் ஏற்படுகிறது. கொலை, களவு, பொய்யுரைத்தல் போன்ற கேடுகள் ஏற்படுகின்றன. இவை அனைத்தும் மூவாசை எனப்படும் மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை‌ எனும்‌ மூவாசையால் பொதுவாக ஏற்படுவன. ஆனால்‌, பெண் ஆண் மீதும், ஆண் பெண் மீதும் கொண்ட ஆசையால் பந்தம், பாசம் போன்ற கட்டுகளும், அத்து மீறிய காமத்தால் உலக அழிவு வரை உண்டானது வரலாறு. எனவேதான்‌, அய்யா‌ ஆசையே தோசம் என்றார். புத்தர் ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்றார், திரு‌மூலர் “ஆசை அறுமின் ஆசை‌ அறுமின் ஈசனோடாயினும் ஆசை‌ அறுமின்‌‌” என்றார். இப்படி ஆசையே சீவனை ஆன்ம போதம் அடைய விடாமல் தடுப்பதால் அய்யா‌ மூவாசையை ஆன்மாவிற்கு எதிரியாக அதாவது மாற்றானாக குறிப்பிடுகிறார்

 சூத்திரம்:கண்ணாலே கண்டதுண்டால் கலிதீரும் என்மகனே

பொருள்: இந்த உண்மையை நீங்கள் அகக்கண் கொண்டும் புறக்கண் கொண்டும் கண்டால் கலி தீரும்.

 விளக்கம்: ஆசையே ஆன்ம போதம் அடைய‌ மாற்றான் என்று சொன்ன அய்யா, இந்த உண்மையை அகத்துள்ளும்‌‌‍, உணர வேண்டும் என்கிறார். ஆசையே துன்பத்திற்கு காரணம் என்பதை மனிதன் புற உலகில் கண்டு, அகத்துள் அதை சிந்திக்க வேண்டும். அப்பொழுது மனிதனின் அகக்கண் விழிப்படைந்து விவேகம் வளரும். விவேகத்தால் எது நல்லது எது தீயது என்பதை அறிய இயலும். இவ்விவேகத்தால் அறிவும் ஞானமும் வளர்ந்து மனிதன் துன்பத்திற்குத் காரணமான ஆசையை விட்டு விலகி விஞ்ஞானம் எனப்படும் பூரண‌ ஞானத்தைப்பெற்று ஆனந்தத்தில் திளைக்கிறான். இவ்விதமாக தன்னில் மகிழ்பவன் தலைவனை யடைகிறான். இதுவே முக்தி. எனவே அய்யா ஆசையின் தன்மையை அகக்கண்ணுள்ளும் புறக்கண்ணுள்ளும் உணர வேண்டும் என்கிறார்.

 சிவகாண்ட அதிகாரப் பத்திரம் தொடரும்..

   அய்யா அருளிய வாழ்வியல் நெறி முறைகள்

                         -த. சீதா லெட்சுமி அம்மா 949655691

“எளியோரைக் கண்டு இரங்கியிரு என் மகனே
வலியாரைக் கண்டு மகிழாதே என் மகனே”

மனித வாழ்க்கையின் லட்சியங்கள் பல. இந்த உலக வாழ்வில் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் அந்த நிலை உருவாக பாடுபட வேண்டும். நாம் நம்முடைய வாழ்க்கை ஓட்டத்தில் பல வகைகளில் கலியின் பிடியில் சிக்குண்டு இருக்கிறோம். எப்படியென்றால் பணத்துக்கும் பகட்டுக்கும் மரியாதை அளிப்பது, எளிமையை விலக்குவது ஆகும். தாழக்கிடப்பாரைத் தற்காக்க வந்தவர் அய்யா வைகுண்டர். அவருடைய முன்னிலையில் அனைவரும் சமம். அங்கு இருப்பவனுக்கு ஒன்று இல்லா
தவனுக்கு ஒன்று என்ற எந்தப் பாகுபாடும் கிடையாது.

ஆகவே அந்த நிலையின் அடிப்படையில் நாம் வாழ்வை அமைக்க வேண்டும். அந்த நடைமுறையை நாம் பின்பற்றி வாழ்வதற்காகவும் எல்லோரும் ஒரே நிலையில் வரவேண்டும் என்பதற்காகவும் பல நெறிமுறைகளை வகுத்து தந்துள்ளார் வைகுண்டர். அதன் படி இருப்பவர்கள் இருப்பவர்க்கே கொடுக்காமல் இல்லாத பேருக்கும் கொடுப்பது தான் எல்லோரும் சிறப்பாக வாழ வழி ஆகும்.  அய்யாவின் பிள்ளைகளுக்கான அடையாளமும் ஆகும்.

அதன்படி நம்மிடம் இருக்கும் செல்வமாக இருக்கட்டும், கல்வியறிவாக இருக்கட்டும், அய்யா நமக்குத் தந்திருக்கின்ற ஞானமாக இருக்கட்டும், நாம் செய்கின்ற தொழிலின் அடிப்படையில் கொடுக்கப்படும் உதவியாக இருக்கட்டும் என்னவாக இருந்தாலும் நம்மால் முடிந்தவரை இல்லாத எளியோருக்குக் கொடுத்து உதவ வேண்டும். எளிய நிலையில் இருப்போரின் வாழ்வாதாரத்தை உயர்த்தப் பாடுபட வேண்டும். இதையே அய்யா “எளியோரைக் கண்டு இரங்கியிரு என் மகனே” என்கிறார்.

ஆனால் கலியுகத்தினுடைய நிலை எப்படி இருக்கிறது என்றால் செல்வம், வசதி, வாய்ப்புகள், சுகம், சிறப்பு, பட்டம், பதவி போன்ற எல்லா நிலைகளிலும் நிறைவடைந்தவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் இருக்கிறது.  உயர்ந்த பதவியில் இருப்பவர்களுக்கு தான் ஆள்பலம் என்கிற மக்களின் கூட்டம், பணம் என்கிற செல்வச் சிறப்பு மரியாதை எல்லாம் கொடுக்கப்படுகிறது. இது ஒரு கலிமாயச் செயல் இதற்குள் அகப்பட்டு விடக்கூடாது. ஆடம்பரம் என்ற பெயரில் எவ்வளவு வீண் செலவுகள் செய்யப்படுகின்றன.

அதே நேரத்தில் அப்படி வீணாக்கப்படுகின்ற எந்த ஒரு பொருளையும் இல்லாத எளியவருக்குக் கொடுத்து உதவுவதற்கு இன்றைய காலகட்டத்தில் மக்களிடம் மனநிலை குறைவாகவே இருக்கிறது. ஆகவே, அந்த நிலை மாற்றப்பட வேண்டும் பணம், பட்டம், பதவி வைத்து மட்டுமே உயர்ந்தவர்கள் என்று எண்ணிவிடாதே. இருப்பவர்கள் இல்லாதவர்களுக்குக் கொடுத்து ஒரு சமநிலையை உருவாக்க வேண்டும். இதுவே உலக நியதி. ஆனால் நாம் கலிமாய்கைக்குள் அகப்பட்டு விடக் கூடாது.

மனத்தூய்மையுடன் எளிய நிலையில் வாழுகின்ற நல்ல உள்ளங்களுக்கு உதவிகளைச் செய்து அவர்களை உயர் நிலைக்குக் கொண்டு வர வேண்டும். ஆனால் இன்று சமுதாயத்தில் ஏழ்மை நிலையில் இருப்பவர்கள் ஒதுக்கப்படுபவர்களாகவும், செல்வ நிலையில் உயர்ந்தவர்கள் போற்றப்படுகின்ற நிலைதான் இருக்கிறது. பகட்டான கலிமாய்கைக்குள் அகப்பட்டு விடக் கூடாது.

இதையே அய்யா “வலியோரைக் கண்டு மகிழாதே என்கிறார்”. மேலும் பலசாலிகளாக இருப்பவரைப் பார்த்து மகிழவும் கூடாது. ஏனென்றால் யுகாயுகம்தோறும் அவதரித்த அய்யா பலசாலிகளாக இருந்த அசுரர்களை எல்லாம் பண்டாரமாகவே இருந்து வதைத்தார். ஆகவே எளியமுறையில் மனத்தூய்மையோடு வாழ்ந்து தர்மயுக வாழ்வுப் பெறுவோம்.

அய்யா உண்டு

தர்மயுக முரசு வாசகர்களுக்கு அன்பான வேண்டுகோள்:
சைவ உணவு முறையே நமது வாழ்வியலின் நெறிமுறையாகும். அசைவ உணவு உட்கொள்ளுவது மிகப் பெரிய பாவச் செயலாகும். எனவே, தயவுகூர்ந்து அசைவ உணவை உட்கொள்ளாமல் சைவ உணவை மட்டும் உட்கொண்டு உலகத்தின் முன்னோடிகளாக விளங்கி தர்மயுக வாழ்வு பெறுவோம்.

அய்யா உண்டு

திருக்கலியாண இகனை

– பா. கவிதா அம்மா 009609805601

சென்ற மாத தொடர்ச்சி….

அன்புடையீர் இப்படியாக அம்மைமார்களைத் திருக்கல்யாணம் செய்த எம்பெருமான் தெருவீதி வலம் வருகின்றார். இங்கு இதன் தத்துவத்தை நாம் பார்ப்போம்.

ஆண் இயல்பு அறிவு (சிவம்) பெண் இயல்பு அன்பு (சத்தி). அன்பும் அறிவும் இணையும்போது அருள் பிறக்கிறது.  இந்த அருளானது அனைத்து ஜீவராசிகளுக்கும் பக்குவத்தைக் கொடுக்கும் ஞானபாடியம் ஆகும். எனவே, எம்பெருமான் சக்தியின் அம்சமாகிய சப்தமாதர்களை தம்மோடு ஐக்கியப்படுத்தியதன் விளைவாக உயிர்கள் இருள் நீங்கி ஒளி பெற்று சிவத்தை அடைந்து முக்தியடைய உதவுகிறது. இதுவே தெருவீதி வலம் வருதல் என்னும் பாடல்களால் உணர்த்தப்படுகிறது.

“தெருவீதி நாம் வருவோம் – எந்தன்
தேவியரே கன்னி நாயகமே
மருவினிய கன்னியரே – பதி
வலங்கள் சுற்றி நாம் வருவோம்”.

முதலில் சுவாமி தம் சப்தமாதர்களைச், சீவர்களுக்கெல்லாம் ஆன்மபலம் அருளி அவர்களைக் காத்தருள்வோம் வாருங்கள் என அழைத்துக் கொண்டு தெரு வீதிவழி வலம் வருகிறார்

“கண்மணியே காரணரே – ஓகோ
காயாம்பு மேனியரே
மண்ணேழ் ளந்தவரே – ஓகோ
மாயவரே பதி வலம் வருவோம்”.

உடனே அந்தத் தாய்மார்கள் சுவாமியைப் பார்த்து கண்ணுள் மணியாய் நிற்பவரே! சத் அசத் ஆகிய அனைத்துக்கும் மூலகாரணரே! எல்லையற்ற கருணைக் கடலே! எங்கும் நிறைந்தவரே! ஏகமயமானவரே! மாயைகளுக்கெல்லாம் அதிபதியே! அப்படியே ஆகட்டும் எனக் கூறி அகமகிழ்ந்து அவரைப் பின் தொடர்கின்றனர்.

“பெண்ணரசே மாமயிலே- நமது
பொறுமைப்பதி வலம் வருவோம்
தண்ணமுள்ள தேவியரே – நமது
தர்மபதி வலம் வருவோம்”.

  ஒளிமயமான மாமயிலே! பெண்ணரசே! கருணையே வடிவான தண்ணமுள்ள தேவியரே! வாருங்கள். பூலோக மக்களெல்லாம் ஆன்மவிழிப்படைந்து பொறுமைப் பெரியோராய் ஆகட்டும். தர்மத்தை தாங்கும் வல்லமை பெற்று உய்யட்டும்.

“ஆண்டமணி நாயகமே – உலகு
ஆண்டருளும் கண்மணியே
காண்டம் நிறை வேற்றவந்த – எங்கள்
கணவனாரே வலம் வருவோம்”.

சாகாத தர்ம அன்புள்ளோரை உம் கருணை என்னும் குடையின் கீழ் வைத்து ஆண்டமணி நாயகமே! பிரபஞ்சத்திலுள்ள அனைத்தையும் உம் ஈர்ப்பு சக்தியால் இயக்கும் எம் கண்மணியே! உலகை உய்வித்தல் என்னும் காண்டம் நிறைவேற்ற வந்தவரே! எங்கள் பரமபுருஷனே! இதோ வருகிறோம், மக்களெல்லாம் உய்வுபெற அருள்வோம்.

“பொறுமைப்பதி வலம் வருவோம் – கலி
பொடியயாமம் போட்டிடுவோம்
தர்மமது தழைக்கச் செய்வோம் – பதி
தானேவலம் நாம் வருவோம்”

 பொறுமை காத்தல் என்னும் வைராக்கியத்தை நிலைப்படுத்தி ஞானம் அருளி கலிமாய நினைவுகளெல்லாம் பொடிபட்டுப் போகும்படி செய்வோம். உயிர்களை உய்விக்கும் பெரிய தர்மமாகிய பக்தியைத் தழைக்கச் செய்வோம் வாருங்கள்.

“பொல்லாத வகையழித்து – சுவாமி
புதுப்பூமி தோண வைத்து
கல்லாதார் கருவறுத்து- சுவாமி
கதியபதி வலம் வருவோம்”

பொல்லாத வகைகளாகிய புலன்களையும் பொல்லாத எண்ணங்களையும் கல்லாத மூடர்களை முற்றிலுமாக ஒழித்து, மக்களைப் பக்குவமாக்கி புதுப் பூமியாகிய சகசிரார ஒளியில் நிலைத்திருக்கச் செய்ய சிவகதியருளும் பதி வலம் வருவோம்.

“நாடுபதி தலங்கள் வாழும் பெண்ணே
நம்முடைய இனங்கள் வாழும்
கேடுகலி கோடு அறும் – பெண்ணே
கிளர்ந்தபதி வலம் வருவோம்”

கேடு செய்யும் கலியை அழித்து ஆதாரத் தானங்களை விளங்கச் செய்து பக்தர்களின் அகக்கண் திறக்கச் செய்து வாழ்விப்போம்.

“ஆகாத பேரையெல்லாம் – சுவாமி
அக்கினிக்கு விருந்தளித்து
வாகாகத் தர்மபதி – சுவாமி
வாழும்பதி வலம் வருவோம்”

ஆகாதபேர்களாகிய காமக் குரோதாதிகளை ஞான அக்கினிக்கு விருந்தளித்து நம் மக்கள் ஒளியுடல் முதலான நான்கு வரங்களையும் பெற்று மகிழ்ந்து இன்புற வாழும் பதி வலம் வருவோம். 

“முன்குறோணி உதிரமதால்- பெண்ணே
உதித்து வந்த குலங்களெல்லாம்
தன் குணத்தால் மாண்டுபோக – பெண்ணே
தர்மபதி வலம் வருவோம்”

குறோணியின் வழியாய் வந்த அசுர சக்திகளை யெல்லாம் தன்னாலே தான் கெட்டுத் தான் போவார் என்றபடி தன்குணத்தால் மாளச் செய்து, நம் மக்களை தர்மபதியில் வைத்து அரசாள்வோம்.

“மாற்றானொழிய வேணும் – சுவாமி
மக்களெல்லாம் வாழவேணும்
காத்தோரைக் கைவிடாமல் – நாமள்
கருணைப்பதி வலம் வருவோம்”

மாற்றானாகிய அசுரசக்திகளை ஒழிப்போம். பரிபக்குவிகளை வாழ்விப்போம். சரியான கொள்கை, சரியான ஒழுக்கம், சரியான ஞானம் ஆகிய திரிரத்தினங்களை வைராக்கியத்துடன் காத்தோரைக் கைவிடாது காத்தருள்வோம். மேலும், இதன் தொடர்ச்சியை அடுத்த இதழில் பார்ப்போம்.

அய்யா உண்டு

அகில விருத்தமும் விளக்கமும்

                          – பா. அசோக் குமார் அய்யா 009607704901, 8012174032

                                                                                                                                         விருத்தம்: 5

 

இப்படித்தெய்வ இராச்சிய நீதமும்

மற்படித்தேச மனுவுட நீதமும்

நற்புடன் தேசம் நாடி வாழ்வதைக்

கற்புட ஈசர் கண்டு மகிழ்ந்தனர்

விளக்கம்:

 இப்படியாக உண்மையான தெய்வ நீதம் மற்றும் ராஜ நீதமும், கற்புநெறியுடையமனு நீதமும் தேசத்தில் சிறப்பாக தழைத்தோங்கி இருப்பதைக் கண்டு எப்போதும் தன் நிலையில் மாறாமல் இருக்கின்ற சிவபெருமான் மகிழ்ந்து இருந்தார்.

 அய்யா உண்டு

அய்யா சொன்ன முன் அறிவிப்புகள் எவை?

– S. அன்ன செல்வம் அம்மா 9443622222

சென்ற மாத தொடர்ச்சி….

அய்யா வைகுண்டர் 1008 மாசி மாதம் தெச்சணத்தில் பள்ளி கொண்டு மக்களுக்கு அருள் நூல் மூலம் பல உபதேசங்களைக் கூறினார். சிவகாண்ட அதிகார பத்திரத்தில் தர்மயுகம் தோன்றுவதற்கு முன் நடக்கும் அடையாளங்களைக் கூறுகின்றார்.  முக்கியமான அடையாளங்கள் 10 அதில் எட்டு அடையாளங்களை முன்புள்ள தொடர்களில் பார்த்தோம். ஒன்பதாவது அடையாளமாக அய்யா கூறுவது

ஆணாலே பெண் அழிவு: ஆண் என்றாலே ஆளப்பிறந்தவன், அவன் முதன்மையானவன், அரசனாக, தலைவனாக, வீரனாக பலப் பெயர்களில் அதிகாரம் உள்ளவனாக இருக்கிறான். ஆணுக்கு வலிமையும் பெருமையும் அதிகம். ஆண்மகன் என்று சொல்லி மார்தட்டிக் கொள்ளும் சிறப்புக்கு உடையவர்கள். ஆண்கள் பெண்களைப் பாதுகாக்கும் கவசமாக இருந்தார்கள். ஆண் துணையின்றி பெண்களால் வாழ முடியாது என்கிற நிலை இருந்தது. குடும்பத் தலைவன் என்கிற பொறுப்பில் இருந்து ஆண்கள் வீட்டுக்கும் நாட்டுக்கும் தொண்டாற்றி வந்தார்கள். ஆனால் இந்தக் கலியுகத்தின் இறுதியில் “ஆணாலே பெண் அழிவு” என்கிறார். கலி முற்றி விட்ட காரணத்தால் நாட்டிலுள்ள செயல்பாடுகள் எதிர்மறையாக மாறிவிட்டன. ஆண்களின் ஆணவத்தால் பெண்களுக்கு ஆபத்து என்று கூறப்படுகிறது. அதற்குக் காரணம் என்ன? கலியுகம் என்பதால் அன்பு, நேசம், பாசம், பயம், பக்தி என்பதை அடிப்படையாகக் கொண்ட ஆண்கள் ஆணாதிக்கம் கொண்டவர்களாக மாறிவிட்டார்கள். ஒரு வீட்டை எடுத்தால் அங்கே ஆணாதிக்கம். ஒரு அரசியலை எடுத்தால் அங்கு ஆணாதிக்கம் என்று ஆகிவிட்டது. பலசாலிகள் என்று தன்னை பெருமை பாராட்டிக் கொள்பவர்கள் மது, மாது என்கிற கொடிய நோயிலிருந்து மீளமுடியாமல் சிறைபட்டு இருக்கிறார்கள். எனவே, ஆணால் பெண்ணுக்கு சீரழிவு உண்டாகிவிட்டது. நாடு சீர்குலைகிறது. வீடு சீர்குலைகிறது. ஆணாலே பெண் அழிவு என்கிற கலியின் விதி விளையாட்டு மக்களைப் பெரும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது. ஒவ்வொரு துயர சம்பவத்திற்கு முன்னால் ஆணும் பின்னால் பெண்ணும் இருப்பது சகஜமாக மாறிவிட்டது. இதைத்தான் அய்யா வெளிப்படையாக நமக்குக் கூறுகின்றார்.

திரும்பிய பக்கமெல்லாம் பொன், பொருள் சம்பாதிப்பதற்காக நீதி, நேர்மை, உண்மை போய்விட்டது. பெண்ணாசை என்கிற மிகப்பெரிய காமநோய் பிடித்து விட்ட காரணத்தால் கலாச்சாரம் கட்டழிந்து பாலியல் பலாத்காரம் பெருகிப் போனது. பெண் பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர் தன்னால் பாதுகாக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பெண் என்கிற கண்மணிகளைப் போதைப் பொருளாக ஆக்கி விட்டார்கள். ஆணாதிக்கம் கொண்டவன் கண்ணுக்குப் பெண் அடிமையாகத் தான் தெரிவாள். அம்மா, மனைவி, அக்கா, தங்கை, மகள் கஷ்டப்பட்டாலும் எல்லோரும் ஒன்றுதான் என்கிற தரக்குறைவான எண்ணமே உள்ளது. மனித நேயம் செத்து விட்டது. இது போன்ற செயல்களை நாம் இப்போது அதிகமாக பார்க்கின்றோம். நீதிமன்றங்களில் குற்றவாளிகளின் எண்ணிக்கை குவிந்து கிடக்கின்றன. அத்தனைக்கும் மூலக் காரணம் மது. மனிதன் மதுவுக்கு அடிமையாகி பெண்ணை அடிமையாக்கி மகிழ்கிறான். இதைக் காலத்தின் கோலம் அதாவது அவலம் என்றே சொல்லவேண்டும். இப்போது நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் மூலம் கலியுக அழிவு நெருங்கிவிட்டது என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். கலியில் இருந்து தப்பித்து தர்மயுகத்திற்குச் செல்ல அய்யா சொன்ன ஞான உபதேசங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை அய்யா வைகுண்டர் நமக்கு அறிவுறுத்துகிறார்.

காரணம் இல்லாமல் காரியம் இல்லை. யுகசுழற்சி முடிவிற்கு வரப்போகின்ற காரணத்தால் தர்மயுக வித்துக்களைத் தேர்ந்தெடுப்பதற்கான காலமே இது என உணரமுடிகிறது. அய்யா வைகுண்டர் நடு தீர்ப்பு மூலம் நல்ல ஆன்மாக்களைத் தேர்ந்தெடுத்து நித்திய உலகமாக தர்மயுகத்தை ஆட்சி செய்வார். அன்புக்கொடி மக்களாகிய நாம் யுகசோதனைகளில் இருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும்.

 

“செம்பவளத் தேரேறி நான் தேசமெல்லாம் பார்க்க வாறேன்
வம்புவசை அதிகமப்பா வகையறியாமல் மயங்குகிறார்
ஆங்காரம் அடிபிடிகள் அதிகமப்பா தேசமெங்கும்
கொலைகளவு அதிகமப்பா குடிகேடு ஆச்சுதப்பா”

 – அருள் நூல் 

இன்றைய உலக நிலவரம் பற்றி அய்யா தெள்ளத் தெளிவாகக் கூறியுள்ளார். ஏன் சொன்னார்? எதற்குச் சொன்னார்? என்பதைக் கருத்தில் கொண்டு அய்யாவே தஞ்சம் என்று சரணடைந்தால் தர்மயுக வாழ்வு பெறலாம். முப்பொருளும் ஒரு பொருளாக இருக்கின்ற ஆதிமூலப் பரம்பொருளை அண்டின பேரை பாதுகாக்க நம் அய்யா வல்லவராயிருக்கிறார் 

  …… மீண்டும்

தொடரும்

அய்யா உண்டு

அகில விடை

  1. தலை
  2. சிவன்
  3. கிரேதா யுகம்
  4. ஈசன்
  5. கலியன்

அய்யா உண்டு

குரு நினைவை உள் ஏற்றும்

– ஹரி வெங்கடேஷ் அய்யா 8508518505

அலைய விடாதிருங்கோ அஞ்சு பஞ்சமதையும்

 நம்முடைய ஐம்புலன்களான கண், காது, மூக்கு, செவி, வாய் போன்றவை மூலம்தான் ஒவ்வொரு மனிதர்களும், ஐந்து அறிவுள்ள விலங்குகளும் பல்வேறு அறிவுகளை பெறுகின்றன. எனவே, இந்த ஐம்புலன்களைப் “அறிவை கொடுக்கும் கருவி” என்று அழைப்பதுண்டு. உதாரணமாக, கண் மூலமாக நாம் நம் முன் இருக்கும் கைப்பேசியின் நிறம் என்ன என்ற அறிவை அடைகிறோம். நாவின் மூலம் சுவை அறிகிறோம். இது போல் ஒவ்வொரு புலனும் வெவ்வேறு விதமான அறிவை கொடுக்கும் கருவியாக உள்ளது.

 இந்த புலன்கள் சரியான அறிவை கொடுக்க வேண்டும் என்றால் நம் மனமானது இந்தப் புலன்களின் பின்னால் ஒன்றினைந்து சீராக செயல் பட்டிருக்க வேண்டும். அப்படி இல்லாமல் நம் மனமானது வேறு ஏதோ எண்ணத்தில் இருந்து கொண்டு புலன்கள் மூலம் வரும் அறிவையும் கவனத்தில் கொண்டு ஒரே நேரத்தில் இரு நினைப்பில் இருக்குமேயானால் நமக்குக் கிடைக்கப்படும் அறிவானது தெளிவானதாகவோ அல்லது சரியானதாகவோ இருக்காது. இந்தக் குழப்பம் நாம் அகிலத்திரட்டுப் படிக்கும் போதும் வரலாம்.  

 ஆகவே நாம் நம் மனதை அலைய விடாமல் ஒரு நினைவாக்கவே (தியானம்) அய்யா நமக்கு உகப்படிப்பு மற்றும் உச்சிப்படிப்பைச் சொல்லித் தந்தார். ஆனால் நம்மில் பலருக்கு உகப்படிப்பு படிக்கும் போதுதான் ஒரு நினைவு இல்லாமல் பல எண்ணங்கள் தோன்றி மனம் அலை பாய ஆரம்பித்து விடுகிறது. இதற்கு காரணம் மனதை ஒருநிலைப்படுத்தும் திறமை நம்மிடம் இல்லை என்று பொருள் இல்லை. அய்யாவை நினைத்து வணங்க போதிய விருப்பம் இல்லை என்பதே பொருள் ஆகும். ஏனெனில் நமக்கு எந்த நிகழ்வில் விருப்பம் இருக்கிறதோ அந்த நிகழ்ச்சியில் நம் மனமானது நம்மை அறியாமல் எளிதில் இணங்கி விடும்.

உதாரணமாக மூன்று மணி நேரம் கிரிக்கெட் விளையாட்டையோ அல்லது ஒரு பொழுது போக்கு திரைப்படத்தையோ எப்படி கவனம் சிதறாமல் மனம் அலையாமல் நம் மனதால் தொடர்ந்து பார்க்க முடிகிறது? காரணம் அந்தப் பொழுது போக்கு நிகழ்ச்சியில் நமக்கு அளவு கடந்த விருப்பம் இருக்கிறது. அது போன்ற ஒரு கவன குவிப்பை நாம் உச்சிப்படிப்பு மற்றும் உகப்படிப்பு படிக்கும் நேரத்திலும் அடைய வேண்டும். ஆகவே அய்யா மீது அன்பு எனும் விருப்பம் வைத்து உகப்படிப்பு உச்சிப்படிப்பை உதட்டளவில் இல்லாமல் உள்மனதில் இருந்து உச்சரித்து வழி பட கற்றுக் கொள்ள முயற்சி செய்வோம். 

குலைய விடாதிருங்கோ குரு நினைவை உள்ளேற்றும்

இறை

      – அ. ஐவி அம்மா, திருவண்ணாமலை, 9444741707

ஒரு குருகுலத்தை நிர்வகித்து வந்த ஞானி தன் முதுமை காரணமாக ஓய்வு பெற விரும்பினார். அம்மடத்தின் நிர்வாகத்தைச் சிறந்த சீடர் ஒருவரிடம் ஒப்படைக்க விரும்பினார். அதன் காரணமாக சிறந்த சீடர்கள் மூன்று பேரை அழைத்தார். அவர்களிடம் நீங்கள் ஏறக்குறைய எல்லாவற்றையும் கற்று விட்டீர்கள் என்று கருதுகிறேன். எனினும் மனிதன் இறை உணர்வு பெற வேண்டும். அதுதான் முக்கியமானது. எனவே மூவரும் ஓராண்டு பயணம் செய்து உங்களுக்கு ஏற்பட்ட மெய்ஞ்ஞான அனுபவம் குறித்து என்னிடம் கூறுங்கள் என வழி அனுப்பி வைக்கின்றார். 

 ஒரு வருடத்திற்கு பின்பு திரும்பி வந்த சீடர்களில் முதலாமவன், குருவே! நான் இறைவனைக் கண்டேன் அவர் எங்கும் இருக்கிறார். அவருக்கு உருவம் கிடையாது. எல்லாவற்றிலும் எல்லா இடத்திலும் வியாபித்து உள்ளார் என்றார். 

  இரண்டாமவன், குருவே! இறைவனுக்கு உருவம் உண்டு. அவர் ஒளி வடிவமாகக் காணப்படுகிறார். மனக்கண்ணால் மட்டும் தான் அவரைக் காண முடிகிறது. மனமுருகிப் பிரார்த்தனை செய்யும் போதெல்லாம் அவர் பலவிதங்களில் உதவ ஓடி வருகிறார் என்றார்.

 மூன்றாமவன் எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது. எதுவும் புரியவில்லை. திட்டவட்டமாக இதுதான் இறைவன் என்று ஊகிக்கவோ, முடிவுகட்டுவோ என் அறிவு எனக்கு இடம் தரவில்லை என்றான். குருவின் முகத்தில் புன்னகை ஏற்பட்டது நீ சொன்னதுதான் உண்மை என்றார் அமைதியுடன்.

 இறை உணர்வு என்பது வெறும் சூனியம் தான். இச்சூனியத்திலிருந்து தான் எல்லாம் தொடங்கவும் செய்கிறது. முடிவும் பெறுகிறது. களிமண்ணால் செய்யப்பட்ட பானையின் வெற்றிடமே சமைக்கவும், நீர் எடுக்கவும் உதவுகிறது. அதுபோல, நாலு புறமும் சுவரெழுப்பி கட்டப்பட்ட வீட்டின் வெற்றிடமே நாம் வசிக்க உதவுகிறது. ஆக, கண்ணுக்குத் தெரியாத வெற்றிடமே இறைவன். அந்த வெற்றிடத்தை நாம் எவ்வகையில் பயன்படுத்துகிறோமோ அம்முறையில் தான் வாழ்க்கை அமையும். எனவே, எதற்காக இவ்வுலகிற்கு நாம் படைக்கப் பட்டோம் என்பதை உணர வேண்டியது முதற்கடமையாகிறது.

 அதுபோல நாம் பிறருக்கு நன்மை செய்யாவிட்டாலும் பரவாயில்லை. பிறருக்குத் தீங்கு செய்யாமல் இருப்பதே நலம் பயக்கும் என்ற எண்ணம் ஒவ்வொருவர் மனதிலும் விதைக்கப்பட வேண்டும். இறையை நாம் தேடிச் செல்ல வேண்டாம். இறைவனே நம்முள் உறைந்து விடுவான். நல்லதை செய்வோம்! இறையை அடைவோம்.

அய்யா உண்டு

நாராயணரே வைகுண்டர்

           – ரா. கோபாலகிருஷ்ணன் அய்யா 7200031169

பாண்டவர் தமக்காய் தோன்றி பகைதனை முடித்த ஶ்ரீகிருஷ்ணர், பீமனைக் கருவியாக்கி துரியோதனனை வதைத்து பஞ்சபாண்டவர்களுக்குக் குருநாட்டை ஆளுதற்கு வழங்கினார்.

 அடுத்து மகாலட்சுமியை திருச்செந்தூர் கடலுள் பொன்மகரபெண் மயில் போல் நிற்கச்செய்தார். 

 முப்பொருளும் ஒன்றாகி மகாவிஷ்ணு ஏழுலோகத்தாரையும் பூலோகத்தில் சான்றோர்களாகப் படைக்கும் போது, தேவலோகத்தைச் சார்ந்த சம்பூரணனும் எமலோகவாசியான பரதேவதையும் பூலோகத்தில் கணவன் மனைவியாக வாழவேண்டும் என்ற தவறான ஆசையை வேண்டுதலாக விடுத்தார்கள். கீழான பெண்ணையும் கீழான எண்ணத்தையும் மேலாக்க இருவரையும் தவம் செய்யப் பணித்தார் அய்யா.  ஆசையால் தவம் நிறைவேறாமல் போகவே இந்தப் பாவத்தை மண்ணில் தொலைக்க இருவரையும் நாராயணர் மண்ணில் பிறவி செய்து நற்கதியளிப்பேன் என்று உறுதி யளித்தார். 

 அதன்காரணமாக சம்பூரணனும் பரதேவதையும் மண்ணில் பிறந்து பல்வேறு நோயும் நொம்பலத்தோடும் மனசஞ்சலத்தோடும் வாழ்ந்து வருகிறார்கள். 

 கொடுத்த வாக்கின்படி சம்பூரணனுக்கு நற்பேறு அளிக்கவேண்டும். எனவே, அவனை மாசி 19 அன்று திருச்செந்தூரில் திருவிழா நடக்கிறது. அங்கு அழைத்துவா! என்று அவனது அன்னையின் கனவில் நாராயணர் சொல்கிறார். நற்பேறு என்ற வார்த்தையை தீராத நோயினின்று விடுபட்டு மகன் நலம் பெறப் போகிறான். என்று தவறான புரிதல் கொண்ட தாய் தொட்டிலில் சம்பூரணனை தூக்கிக் கொண்டு உறவினர்களுடன் செந்தூர் நோக்கிக் கிளம்புகிறார்கள்.

 நாராயணரின் கட்டளைப்படி செந்தூர்கடலை நோக்கி முனிவர்கள் சம்பூரணனைத் தூக்கிச்செல்கிறார்கள். 1008, மாசி 19 ல் கடற்கரையில் தேவ சங்கத்தார் முன்னிலையில் சம்பூரணனுக்கு அவன் பிறவியின் போது சொன்னபடியே “நற்பேறு” வழங்கப்படுகிறது.

 உறவினர்கள் கூட்டம் கரையில் நிற்கிறது. உறவினர்களின் பலர் நம்பிக்கையிழந்து வீடு திரும்புகிறார்கள். பெற்ற அன்னை மட்டும் மகன் குணமாகித் திரும்புவான் எனும் தவறான புரிதலோடு கடற்கரையில் அழுதபடியே நாராயணர் மேல் நம்பிக்கையோடு காத்திருக்கிறாள்.

 நாராயணர் வரவை எதிர்நோக்கி செந்தூர் கடலுக்குள் மகரமாக நின்றாள் மகாலட்சுமி. கடலுக்குள் கனலாய் சென்றார் நாராயணர்.

 நாராயணர் தனக்குத்தானே மகவாய் வைகுண்டராக அவதரிக்கிறார். கலியழிக்கும் விஞ்சைகளை தகப்பனாக வழங்கியும் மகவாக பெற்றும் கொள்கிறார்.

 கர்த்தாதி கர்த்தன் கலியுகத்தீர்வையாக வைகுண்டராக அவதரித்து 

1008 மாசி 20 வெள்ளிக்கிழமை அதிகாலை சூரியன் உதிக்கின்ற வேளையில் கடலுக்குள்ளிருந்து அரூபியாக வருகிறார். 

 கடலுக்குள் சென்ற மகனை எண்ணிக் கண்ணீர் வடித்துப் புலம்பி நின்ற அன்னைக்கு ஆறுதல் சொல்வதற்காக ஒரு ரூபம் எடுக்கிறார். திகைத்துப் பார்த்த அந்த அன்னைக்கு “நான் உன் மகனல்ல. கலியழிக்க முப்பொருளும் ஒருபொருளாய் அவதரித்திருக்கும் நாராயண வைகுண்டர்” என்றுசொல்லி அவள் நம்ப வேண்டும் என்பதற்காக கடலில் தான் உதித்து வந்த இடத்தையும் அந்த அதிசயத்தையும் அதோ பார் எனக்காட்டுகிறார்.

 கனவிலே சம்பூரணனின் அன்னையைச் செந்தூருக்கு வரவழைத்த காரணத்தினால் ஏகப்பரம் நாராயணர் தனது அவதாரநிலையை விளக்கி அவளது குழப்பத்தைத் தீர்க்க வேண்டியதாயிற்று.

 சம்பூரணன், பரதேவதை இருவரும் தெய்வ கட்டளையை மீறி செய்த தவம் அவர்கள் கணவன் மனைவியாக பூலோகத்தில் வாழவேண்டும் என்பது மட்டுமே. அது நிறைவேறியதும் சம்பூரணன் நற்கதியடைந்தான்.

 அரூபியாக வந்த இறைவன் முருகப்பெருமான் மூலமும் பகவதி அம்மை மூலமும் மக்களுக்குச் சட்டங்கள் விதிக்கிறார். அசைவம் படையல்கள் ஏற்கும் பஞ்ச தேவர்களை சீவாயிமார்களாக்கி சைவம் உண்ணும் நிலைக்கு மாற்றி தருவைக்கரையில் பண்டாரமாக மனுச்சொரூபம் எடுக்கிறார். 

 அடுத்தடுத்துக் கொல்லம் ஆண்டு 1008 மாசி 19 மற்றும் மாசி 20ல் நடக்கும் நிகழ்வுகள் தொடர்பில்லாதவை என்பதை உணர்ந்தால் மட்டுமே, வைகுண்ட அவதாரம் பற்றிய குழப்பங்களுக்குத் தெளிவு பிறக்கும்.

 ஆராய்ந்துபாட அடியேன் சொல்தமிழ்க்குதவி நாராயணர் பாதம் நாவினில். 

அய்யா உண்டு

 

CONTACT
close slider

    Please feel free to get in touch, we value your feedback.