தர்மயுக முரசு ஜனவரி 2023
அய்யாவின் அருளால் எந்நாளும்நன்னாளே
-அசோக்குமார் அய்யா – 009607704901, 8012174032.
அலயவிடாதுங்கோ அஞ்சுபஞ்சமதையும்”
இந்த கலியுக ஆசாபாசங்களில் பற்று வைக்காமல் மேலோக வாழ்வில் கருத்தாய் இருந்து வீரநடை போடும் சான்றோர் பெருமக்களுக்கு அன்பு வணக்கம்
உலகத்தின் ஒளிவிளக்குகளே: நமது இந்த கலியுக பயணமானது கரடுமுரடுகள் நிறைந்தது. இங்கு நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும். நல்லதில் கெட்டதும் கலந்து இருக்கும், கெட்டதில் நல்லதும் கலந்து இருக்கும். இப்படிப்பட்ட விசித்திரமான உலகம் இந்த கலியுகம். எனவே, நமது ஒவ்வொரு அடியும் கருத்தோடு எடுத்து வைக்க வேண்டும்.
ஆன்மிக பயணத்தில் கொள்கைக்கு தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமே தவிர நட்புக்கு அல்ல. கொள்கை பிடிப்பு உள்ளவர்களுக்கு நல்ல நட்பு தானாக அமையும். கெட்ட நட்புகள் தானாக விலகி போகும். நட்புக்காக கொள்கையை விட்டு கொடுத்தால் இக் கலியில் சிக்கி சின்னாபின்னமாக போய்விடுவோம். எனவே கொள்கைதான் முக்கியம் என்பதை மறந்துவிட கூடாது.
மேலும் ஆன்மிகம் ஒருபோதும் யாருக்காகவும் சாய்ந்து விட கூடாது. ஆன்மிகமே இந்த உலகில் அனைத்தையும் கொடுக்கிறது. எனவே ஆன்மிகவாதிகள் உதாரண புருஷர்களாக திகழவேண்டும். ஆன்மிகவாதிகளை பார்த்து மற்றவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.
ஆன்மிக கல்வியே ஒவ்வொரு மனிதனையும் சான்றோன் ஆக்கும். ஆன்மிக புத்தகங்களே நமது வாழ்வியல் புத்தகம். ஆலயங்கள் எல்லாம் ஆன்மிக பாடசாலை. இறைவனே நமது வழிகாட்டி என்பதை நன்கு உணர்ந்து செயல்படுவோம்.
பண்டைய காலத்தில் அரசவையில் ஆன்மிக குரு ஒருவர் இருப்பார். அவரிடம் ஆலோசனை பெற்றே அரசன் அனைத்தையும் செயல்படுத்துவான். அப்படி இருந்தது அந்த காலம். அதாவது அரசியல் ஆன்மிகத்தை நாடிச் சென்றது அந்தகாலம். ஆனால் இந்த காலமோ ஆன்மிக வாதிகள் நெறிதவறி போன காரணத்தினால் அரசியல் வாதிகளிடம் ஆன்மிகம் மண்டியிட வேண்டிய சூழல் உருவாகி வருகின்றன. இதற்கு காரணம் கொள்கையில் உறுதிபாடு இல்லாமலும், இவ் உலக ஆசாபாசத்தில் பற்று வைத்து கொள்வதுமாகும். இதனால் பணம், பெயர், புகழ் என்கிற மோகத்தில் ஆன்மிகவாதிகளும் அலைந்து கொண்டு இருக்கின்றனர்.
ஆன்மிக வாதிகளின் தடுமாற்றத்தால் அரசியல்வாதிகளும், மற்றவர்களும் தடுமாறி போய்விடுகின்றனர். இதனால் ஆன்மிகம் உலகத்தின் முதன்மை தன்மையை இழந்து இரண்டாம் பட்சமாக பார்க்க படுகிறது. ஆள்பலம், அதிகார பலம், பண பலம் ஆகியவைகளே இங்கு முதன்மையாக்க படுகிறது. ஆலய மரபுகள் மீறப்படுகின்றன. இறை பயம் இல்லாமல் போய்விட்டது. பண்பாடு, கலாச்சாரம் சீர்குலைந்து விட்டன. ஆன்மிக வாதிகளும் அற்ப சந்தோசத்திற்காக தன்னிலை மறந்து அடிமைபட்டு கிடக்குகிறார்கள்.
இந்த நிரந்தரமற்ற சந்தோசத்தில் இருந்து வெளிவரமுடியாமல் போலி வேடம் புனைந்து ஆன்மிகத்தின் உயர்ந்த நிலையான “குரு” என்கிற ஸ்தானத்தை கையாளுபவராக தங்களை வெளிபடுத்தி கொள்கின்றனர். ஆனால் இந்த கலியுகத்தில் குரு என்கிற ஸ்தானத்தை யாராலும் கையாள முடியாது என்பதே வேத ஆகமத்தின் கூற்று. இது தெரிந்த ஆன்மிக வாதிகள் கூட மதியிழந்து தங்களை “குரு” என்று முன்நிறுத்துவது அவர்களின் பாவ கர்மாவை பெருக செய்கின்ற செயல்லாகும்.
எனவே, நமது இந்த ஆன்மிக பயணத்தில் ஓவ்வொரு அடியும் கருத்தோடு எடுத்து வைத்து எதார்த்தமான வாழ்வை வாழ்ந்து பற்றற்ற நிலையில் செயல்பட்டு கொள்கை பிடிப்போடு வாழ்ந்து காட்டி ஆண்டவன் வகுத்து தந்த ஆகமத்தின்படி செயல்பட்டு வந்த பயணத்தை முடித்து விட்டு ஆண்டவனின் திருவடியை அடைவோம்.
“சத்தியத்தில் குடியிருந்தால் சுவாமி துணையாய் வருவேன்”
– அய்யா வைகுண்ட பரம்பொருள்
அய்யா உண்டு
அகில கேள்வி
1. தாண்டவ சங்காரன் யார்?
2. அரிகோபால சீசர் எப்படிப்பட்ட நித்திரையில் இருந்தார்
3. பருதி சூடும் பரமன் யார்?
4. மள்ளர் என்பவர் யார்?
5. நால் வேதம் எது?
அகிலதிரட்டு அம்மானை மூலமும், உரையும்
-க. ரீகன் அய்யா- 009689314565432.
கொலுவும் பெரிய குவிந்தமதில் கோட்டைகளும்
கெட்டுக் கிளைபாணி கிரண மதுவுடனே
நட்டுப் பயிரால் நாளும் பசிதீர்ந்து
இருந்து பொறுக்க இராட்சியமொன் றுண்டாக்கும்
வருந்தி மகாதேவர் மலரோனடி வணங்க”
தேவர்கள் சிவபெருமானை தொழுது முதல் இரண்டு யுகங்களிலும் பிறந்த அசுரர்கள் எந்தவிதமான வரங்களையும் கேட்டு பெற்றுக்கொள்ளவில்லை. ஆயினும் அவர்கள் இறைவன் வகுத்த நிலைக்கு மாறாக நடந்ததால் அவர்கள் அழிக்கப்பட்டார்கள். ஆனால் இனி படைக்கக்கூடிய யுகத்தில் அசுரர்கள் அவர்களுக்குத் தேவையான வரங்களை கேட்டு பெற்றுக் கொள்ள வேண்டும். அது மட்டும் அல்லாமல் அவர்களுக்கான ஆயுதங்கள், படைகள், கோட்டை கொத்தளங்கள் முதலிய எல்லாவற்றையும் கொடுக்க வேண்டும்.
அவர்கள் பசிக்காக பயிர் நட்டு விளைவித்து அதன் மூலம் அவர்கள் பசி விசாரம் தீர்ந்து கொள்ளும் அளவில் இருக்கக்கூடிய ஒரு ராச்சியத்தை இப்போது படைக்க வேண்டும் என்று தேவர்கள் சிவபெருமானிடம்
வேதியரைத் தான்வருத்தி விளம்புவா ரீசுரரும்
மாலும் பிரம்மாவும் வாய்த்தபர மேசுரரும்
நாலு மறையோரும் நடுவர் மிகக்கூடி”
இப்படி தேவர்கள் இனி படைக்கக்கூடிய யுகத்தினைப் பற்றி சிவபெருமானுடன் வேண்டுகோள் விடுத்தவுடன் சிவபெருமான் மன மகிழ்ச்சிக் கொள்கின்றார். அவர் வேதியரை அழைத்து படைக்கக்கூடிய யுகத்தை பற்றிக் கூறுகின்றார். இப்போது தேவ சங்கங்கள் கூடி இனி படைக்கக்கூடிய யுகத்தைப் பற்றியும் அதில் படைக்க வேண்டிய அசுரர் பற்றியும் ஆலோசிக்கின்றார்கள்.
பின்னே பிறப்புப் பிரமா உருப்படைக்க
சிவாயப் பொருள்தான் சீவநிலை கொடுக்க
உபாயப் பொருள்தான் உல்லாசமே கொடுக்க”
தேவ சங்கங்கள் எல்லோரும் கூடி ஆலோசித்து குறோணியினுடைய இரண்டாவது துண்டினை இரண்டாக வகிர்ந்து அதை இரு அசுரர்களாக படைக்க முடிவு செய்தார்கள். அப்படி படைக்கக்கூடிய இரு அசுரர்களுக்கான உருவினை பிரம்ம தேவர் கொடுத்தார். அவர்களுக்கான உயிரினை சிவபெருமான் கொடுத்தார். அவர்கள் செயல்படக்கூடிய செயலாற்றலும் நினைவும் திருமால் கொடுத்தார்.
தெண்டமது கொண்டார் சிவனை மிகப்போற்றி
அப்போது மாயன் ஆதியடி வணங்கி
இப்பொழு தீசுரரே இவர்களிரு பேர்க்கும்
என்னபேர்தானும் இடுவோமென உரைக்க
வன்னப் பரமேசு ரனார் வகுத்துரைப்பார்”
பிறந்த வசுரருக்குப் பேரிட வேணுமென்றால்
மாயனே நானுமொரு உபாயம் வகுப்பேன்கேள்
ஆயனே நீயு மதுகேட்க வேணுமென்றார்”
தம்முடைய திறத்தால் எப்படிப்பட்ட அசுரர்களையும் அழிக்கும் வல்லமையைப் பெற்ற திருமாலே நீர் இப்போது நான் சொல்வதைக் கேட்பீராக. இப்போது பிறந்த இந்த இரு அசுரர்களுக்கும் பெயர் இடும் முன்பாக நாம் சில உபாயங்களைச் செய்ய வேண்டும். அந்த உபாயத்தை நான் இப்போது உம்மிடம் சொல்கின்றேன். அதை நீர் கேட்க வேண்டும் என்று சிவபெருமான் நாராயணரிடம் கூறினார்.
“அண்ட பிண்டங் காணா ஆதி கயிலாசத்தில்
தெண்டனிட்டு நிஷ்டை செய்கிறான் சுருதிமுனி
இந்த முனியடுக்கல் இவர்கள் ரண்டுபேரை விட்டு
அந்த முனிதவத்தை அழிக்கவே சொல்லிடுவோம்”
அன்று பிறந்த அசுரர்களைத் தானேவ
போறானே சூரன் பொருப்பொரு நூறானதுபோல்
வாறானே சூரன் வாய்களிரு காதவழி”
இப்படி சுருதி முனியின் தவத்தை இந்த இரு அசுரர்கள் மூலம் அழிக்கச் செய்ய வேண்டும் என்று சிவபெருமான் சொல்ல அதை திருமால் முதற்கொண்டு தேவசங்கங்கள் எல்லோரும் சம்மதித்தார்கள். இப்போது இரு அசுரர்களையும் அழைத்து அவர்கள் சுருதி முனியின் தவத்தை அழிக்க வேண்டிய நிலையைச் சொன்ன உடனேயே அவர்கள் எதையும் உற்று உணர்ந்து பாராமல் சுருதி முனியின் தவத்தை அழிப்பதற்குப் புறப்பட்டுச் சென்றார்கள். அப்படி செல்லக்கூடிய சூரர்களின் தன்மையைப் பற்றி சொல்லும் போது மிகப்பெரும் மலையைப் போன்று அவர்கள் அசைந்து சென்றார்கள். அவர்கள் வாய்கள் இரு காதம் வரையும் நீண்டு இருந்தது என்று அய்யா சொல்லி வருகின்றார்.
மூரன்கால் நூறு உயர்ந்தசிர சன்பதுவும்
கண்கள் ஒருநூறு வெண்டரள மிருகலமே
துங்கணங் களாகச் சூர ரடந்தேறி”
வண்கவிழ்ந்த மாமுனியை வாரி யெடுத்தவர்கள்
அலைமே லெறிய ஆர்பரிக்கு மவ்வளவில்
கலைமேல்ப் பரந்த கடியமுனி பகர்வான்”
(தொடரும்)
அன்புக்கொடி சொந்தங்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம்: அன்பானவர்களே: தாங்கள் சார்ந்துள்ள தாங்கல் வரலாற்றை நமது தர்மயுக முரசு பத்திரிகையில் வெளியிட வேண்டும் என்றால் உங்கள் தாங்கலின் வரலாற்றை அழகாக எழுதி 0096893145654 என்ற வாட்சப் எண்ணிற்கு தாங்கலின் புகைப்படத்தோடு சேர்த்து அனுப்பி தாருங்கள். அதனை வருகின்ற மாதங்களில் நமது தர்மயுக முரசு பத்திரிகையில் பதிவு செய்து வெளியிடலாம்.
அய்யா உண்டு
உச்சிப்படிப்பு- விளக்கம்
கா.த.லிங்கேஷ் அய்யா – 9842679780
சிவ லிங்கம்
குரு லிங்கம்
திரு லிங்கம்
ஏக்கா லிங்கம்
ஏக லிங்கம்
அரி லிங்கம்
லிங்கா லிங்கம்
சொக்க லிங்கம்
சுகா லிங்கம்
ஆதி லிங்கம்
அருள் லிங்கம்
அடங்கா லிங்கம்”
அதாவது இடகலை, பிங்கலை, சுழிமுனை போன்ற மூன்று நிலைகளாக பார்க்கப்படுகிறது. இப்படி மூன்று விதமாக நிலை பெற்றிருப்பதே பரமாத்ம சொருபம். அதையே இங்கு ‘லிங்கம்’ என்கிற பதம் எடுத்துரைக்கிறது. இந்த பரமாத்ம சொருபமே, மனிதன் முதலான அனைத்து உயிர்களிடத்தும் ஜீவாத்ம சொருபமாய் உறைந்திருக்கிறது. அதையே ‘ஆத்ம லிங்கம்’ என்று அழைக்கலாம். இதை அகத்தில் ஆராதித்து துதிக்கும் முறையே, ஆத்மலிங்க வழிபாடு என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த ஆத்மலிங்க சொருபத்தையே நாம் இன்று பள்ளியறையில் உருவகமாக நிர்மாணித்திருக்கின்றோம். அதாவது இருபுறமும் இடகலை பிங்கலையை உணர்த்தும் விதமாய் இரு குத்துவிளக்கையும் நடுவிலே சுழிமுனையை உணர்த்தும் விதமாய் ஓர் காவித்துணியைக் கூம்பு வடிவம் பெறுமாறு செய்து, குத்துவிளக்கை விட சற்று உயரம் வருமாறு நிர்மாணித்திருக்கின்றோம். அதே நேரத்தில், இடகலை, பிங்கலை, சுழிமுனை என்பதை இறைவனாகக் கொள்ளலாகாது. இறைவன் நம் முள்ளே நீக்கமற நிறைந்திருக்கிற அழகை உருவகப் படுத்தும் ஓர் அடையாளம் மட்டுமே. மற்றபடி நம் கற்பனைக்கு உள்ளாகும் எந்தச் சொருபத்திலும் அடங்காதவன் இறைவன் என்பதை மனதில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
லிங்கமொன்றிலே மூன்று யிணையாகத் தோன்றிய பின்”
“செந்தூரலையில் தேவன் உதித்தன்று வந்து
முந்து மூலப்பதியில் உவரி கரையிடத்தில்
சென்றங்கிருந்து சிவலிங்கம் தானமைத்து
மன்றுக்குள் கொஞ்சம் மறைத்து வைத்து மாயவரும்”
போன்ற அகிலத்திரட்டு வாசகத்தையும் இங்கு ஒப்பு நோக்குவோம். மேலும், 96 தத்துவ உடல் ரீதியாக பார்த்தால், ‘இடகலை’ என்பது இடது நாசி வழியாக செல்லும் காற்றின் தூண்டலையும், ‘பிங்கலை’ என்பது வலது நாசி வழியாக செல்லும் காற்றின் தூண்டலையும் ‘சுழிமுனை’ என்பது தண்டுவடம் வழியாக செல்லும் மின் தூண்டலையும் குறிக்கும். சாதரணமாக நமது மூச்சுக்காற்று வலது (அ) இடது நாசியில் ஏதாவது ஒன்றில் மாறி மாறி உச்சமாக மாறிக்கொண்டிருக்கும். அவ்வாறு இல்லாமல் ஆன்ம சாதனையின் மூலம் இரு பக்க நாசி ஒட்டத்தையும் சரி செய்வதன் மூலம், சுழிமுனையோடு சேர்ந்து மூன்றும் ஒன்றாக ஆறு ஆதாரங்களையும் கடந்து, பரவெளியோடு ஒன்றிணையும்.
உச்சிப்படிப்பின் போது உடற் கூறு தத்துவத்தின் படி மேற்கண்ட செயல்பாடே நடக்கிறது. எனவே தான் திரிகரண சுத்தியை தரும் ‘லிங்கம்’ எனும் பதத்தைச் சொல்லி உயர்ந்த நிலையான தர்மயுக வாழ்வை அருளும் உச்சிப்பாட்டு ஓதுதல் முடிவடைகிறது.
லிங்கம் என்பதை மூன்று நிலையாக அகத்தில் உணர்வது போல, மேலே சொல்லப்பட்டுள்ள 13 வகையான லிங்கங்களும் இறைவனின் இயல்பான 13 நிலைகளைக் குறிக்கும். இந்த 13 வகையான லிங்கங்களை உள்ளடக்கியதே ‘ஆத்ம லிங்கம்’ ஆகும். இந்த ‘ஆத்ம லிங்க வழிபாட்டுக்கு நிகரான வழிபாடு இல்லை’, என்பதே ஆன்றோர் பெருமக்கள் கண்டறிந்த உண்மை. அதை அய்யா வைகுண்டரின் அருளால் ஞானம் கைவரப்பெற்ற துவையல் பண்டாரங்கள் பதிகள் மற்றும் தாங்கல்கள் தோறும் பள்ளியறையில் ஆத்மலிங்க பிரதிஷ்டை செய்து வழிபாட்டு முறையை ஒழுங்கு படுத்தினர்.
‘மஹா’ என்பதற்கு அனைத்திலும் பெரியது, அதற்கு மேலானது இல்லை என்று பொருள் கொள்ளலாம். ‘சிவ’ என்பது முதல் மூர்த்தி ஆன சிவனைக் குறிக்கும். ‘குரு’ என்பது ஆன்மீக அறிவை அருளும் ஞானாசிரியன் எனும் இறை நிலையைக் குறிக்கும். ‘திரு’ என்பது மங்கலம் அருளும் அம்பிகை (அ) லட்சுமாதேவி எனும் இறைவனின் திருவருள் சக்திகளைக் குறிக்கும்.
‘ஏக்கா’ என்பதற்கு எதற்கும் கட்டுப்படாதது, எதிலும் அடங்காதது என்பது பொருள். ‘ஏக’ என்பது ஒன்றே ஆகி அனைத்திலும் நிறைந்தது என்று பொருள் கொள்ளலாம். ‘அரி’ என்பது அனைத்து உயிரினங்களுக்கும் தேவையானதைக் கொடுத்து காக்கும் நாராயண மூர்த்தியைக் குறிக்கும். ‘லிங்கா’ என்பதை தோற்றமும் ஒடுக்கமும் இல்லாதது என்று பொருள் கொள்ளலாம். ‘சொக்க’ என்பதற்குப் பரிசுத்தமானது, முழுமையானது, அழகானது எனப் பொருள் கொள்ளலாம். ‘சுகா’ என்பதற்கு எல்லையில்லா ஆனந்த நிலையில் என்றும் மாறாமல் இருப்பது என்று பொருள். ‘ஆதி’ என்பது அனைத்துக்கும் காரணமானது, தொடக்கமானது என்பது பொருள். ‘அருள்’ என்பது அனைத்து சத்துக்களின் (ஆற்றல்) பிறப்பிடம். ‘அடங்கா’ என்பதற்கு உடலாலோ, மனதாலோ, உணர்வாலோ என எந்த நிலையிலும் அடங்காத, அறிய முடியாத ஒன்று என பொருள் கொள்ளலாம்.
பொருள்: [குறிப்பு: 13 நிலைகளும் ஒன்றில் இருந்து ஒன்று பிரிந்ததை விளக்குவதற்காக முதலில் ‘அடங்கா லிங்கம்’ – ன் பொருளையும் கடைசியாக ‘மஹா லிங்கம்’ – என்னும் பொருளையும் தந்துள்ளோம்]
எந்த வகையிலும் உணர முடியாத, அடங்காத பரம்பொருளையே ஆத்ம லிங்கமாக உணர்ந்து போற்றுகின்றோம். அனைத்து ஆற்றல்களின் மூலமும் அனைத்துக்கும் காரணமாகவும் தொடக்கமாகவும் நின்றதை ஆத்ம லிங்கமாக உணர்ந்து போற்றுகின்றோம்.
அனைத்துக்கும் காரணமாகி எல்லையில்லா ஆனந்த நிலையில் நின்றதை ஆத்ம லிங்கமாக உணர்ந்து போற்றுகின்றோம். ஆனந்த நிலையில் நின்றதே பரிசுத்தமான, முழுமையான, அழகான ஆத்மலிங்கம் என உணர்ந்து போற்றுகின்றோம்.
அந்த முழுமையான பரம்பொருளே தோற்றமும் ஒடுக்கமும் இல்லாத ஆத்ம லிங்கம் என உணர்ந்து போற்றுகின்றோம். தோற்ற – ஒடுக்கம் இல்லாததே நாராயணராய் பிரணமித்தது. அதையே ஆத்ம லிங்கமாக உணர்ந்து போற்றுகின்றோம்.
நாராயணரே, உயிருள்ள, உயிரற்ற எனை அனைத்திலும் நீக்கமற நிறைந்த ஏக வஸ்துவான ஆத்ம லிங்கம் என உணர்ந்து போற்றுகின்றோம். எங்கும் நிறைந்தாலும் எதிலும் உட்படாமல் தனித்துவமாக நிற்பது ஆத்ம லிங்கம் என உணர்ந்து போற்றுகின்றோம்.
தனித்துவமாக நின்றதில் இருந்தே மங்கலம் அருளும் திருவருள் சக்திகள் பிரணமித்தன. அதையே ஆத்ம லிங்கமாக உணர்ந்து போற்றுகின்றோம். திருவருள் சக்திகளிலிருந்தே ஆன்மீக அறிவை போதிக்கும் ஞானாசிரிய மூகூர்த்தம் தோன்றியது. அதையே ஆத்ம லிங்கமாக உணர்ந்து போற்றுகின்றோம்.
முதல் மூர்த்தியான சிவனை ஆத்ம லிங்கமாக உணர்ந்து போற்றுகின்றோம். சிவனே அனைத்திலும் மேலானதாக, பெரியதாக நின்றது. அதையே ஆத்ம லிங்கமாக உணர்ந்து போற்றுகின்றோம்.
– முற்றிற்று
[அய்யா நிச்சயித்த படி அடுத்த இதழிலிருந்து ‘சப்த கன்னிமார் பாடல் – விளக்கம்’ இடம்பெறும்]
அய்யா உண்டு
சிவகாண்ட அதிகார பத்திரம்
– மாடசாமி அய்யா 8973349046
“பப்புச் செடிக்குள் பாம்பு படம் விரித்து ஆடுதடா”
பாம்பு- குண்டலினி சக்தி
பொருள்: இந்த உடலானது 70000 நாடி நம்புகளைக் கொண்ட பரந்து விரிந்த செடி. இதில் உள்ள 70000 நாடி நரம்புகளில் 24 நாடிகள் தலைமையானதாம். இவைகள் சந்திக்கும் புள்ளி சுவாதிட்டானத்துக்கு மேலாகவும் மணிப்பூரகத்திற்க்கு கீழாகவும் அமைந்துள்ளது. இதன் மேல் மற்றும் கீழ் புரத்தில் பத்து பத்து நாடிகளும் இடது மற்றும் வலது பக்கத்தில் இரண்டு இரண்டு நாடிகளும் செல்கின்றன. மூலாதாரத்தில் தூங்கும் பாம்பு வடிவான குண்டலினி தனது படத்தை விரித்து ஆடும் பகுதி இதுவே யாகும். எனவே அய்யா குண்டலினி விழித்து மையங்கொண்டு ஆடுவதை பப்புச் செடிக்குள் பாம்பு படம் விரித்து ஆடுதடா என்கிறார். அதாவது உடலில் குண்டலினி விழிப்படையும் நிலையைக் கூறுகிறார்.
சூத்திரம்:
” ஈரேழு லோகமுண்டு எடுத்துச் சொல்வார் யார்மகனே”
அருஞ்சொற் பொருள்: ஈரேழு லோகம்- ஞான பூமி ஏழு, அஞ்ஞான பூமி ஏழு,மற்றும் பூ, புவர் முதலிய பதினான்கு உலகங்களும்.
பொருள்: 1 (ஞானத்தைப் பற்றியது): இந்த உடலில், பூ லோகம், புவர் லோகம் முதலிய லோகங்களின் சாரம் அமைந்துள்ளது அவைகளின் அமைவிடம் யாதெனில்:
பாதாளம்-உள்ளங்கால்
ரசாதலம்-பாதம்
மகாதலம்-கணுக்கால்
தலாதலம்– முன்னங்கால்
சதலம்-மூட்டு
அதலம் – கீழ் துடை
விதலம்– மேல் துடை
பூதலம் – இடுப்பு
ஆகாயம் – தொப்புள்
நட்சத்திர தலம்– திரு மார்பு
மஹர் உலகு – கழுத்து
சன லோகம்-முகம்
தேவலோகம் – நெற்றி
தலை– சத்ய லோகம்.
பொருள்: 2 (யோகம் பற்றியது): இந்த உடலில்பதினான்கு உலகங்கள் இருப்பதாக இராமகிருஷ்ண பரமஹம்சர் குறிப்பிடுகிறார். இதை வேதாந்த நூல்களும் விளக்குகின்றன. அவையாவன,
ஞான பூமிகள் ஏழு: சுபேச்சை, விசாரணை, தநுமானசி, சத்வா பத்தி, அசம் சத்தி, பதார்தாபாவனை, துரியம்.
அஞ்ஞான பூமிகள் ஏழு: பீஜ சாக்கிரம், சாக்கிரம், மகாசாக்கிரம், சாக்கிர சொப்பனம், சொப்பன சாக்கிரம், சுழுத்தி.
சாதியான கொடிப்பாம்பு சதி செய்யும் பாம்பதுதான்
அருஞ்சொற் பொருள்: சாதியான கொடிப்பாம்பு- தனிச்சிறப்பு மிக்க ஒரு பொருளை சாதியானப் பொருள் என்பர். உதாரணமாக உயர்ந்த ரக மல்லியை சாதிமல்லி என்றும், உயர்ந்த ரக கோழியை சாதிக் கோழி என்றும் அழைப்பார்கள். அதுபோல உயர்ந்த இரக பாம்பை சாதியான பாம்பு என்று அழைக்கிறார் இந்தப் பாம்பே குண்டலினி. மேலும் கொடிப்பாம்பு என்பது மரங்களிலும், குச்சிகளிலும், செடிகளிலும் வாழும். குச்சியையோ கொடியையோ பற்றி மேல் நோக்கி ஏறும். வாசியைப் பற்றிக் குண்டலினி மேல் நோக்கி ஏறுவதால் குண்டலினியை அய்யா கொடிப்பாம்பு என்கிறார்.
விளக்கம்: உங்கள் உடலில் உள்ள குண்டலினி என்னும் கொடிப்பாம்பே சதி செய்கிறது. அது எப்படி எனில் குண்டலினி பொதுவாக முதல் மூன்று ஆதாரத்துள்ளேயே நின்று விடுகிறது. அதனாலேயே மனிதன், காமம், கோபம் முதலான பந்தத்தில் சிக்கி பிறவியில் சுழல்கிறான். எனவே அய்யா குண்டலினியை சதி செய்யும் பாம்பு என்கிறார்.
“முப்பூவைத் தானெடுத்து முக்தி செய்தால் சக்தியுண்டு”
அருஞ்சொற் பொருள்; முப்பூ- இடகலை, பிங்கலை, சுழிமுனை
முக்தி செய்தல்- சகஸ்ரத்தில் நிறுத்தல்
விளக்கம்: பொதுவாக குண்டலினி மூன்று ஆதாரங்களில் இயங்கும் போது அது நம்மை பந்தம் பாசத்தில் ஈடு படுத்தினாலும், அது சகஸ்ரத்தை அடையும் போது இறைதரிசனம் கண்டு சக்தி சொருபமான முக்தியை அடையலாம். குண்டலினியை உயர எழம்பச் செய்ய சுவாசத்தை சுழிமுனையில் நிறுத்த வேண்டும். நமது உடலில் இடகலை, பிங்கலை, சுழிமுனை என்ற முக்கிய மூன்று நாடிகள் உண்டு. இடகலை என்பது இடது நாசியில் நடக்கும் சுவாசம், இதன் எழுத்து அகரம், அதிதவதை பிரம்மன். பிங்கலை என்பது வலது நாசியில் வரும் சுவாசம், இதன் எழுத்து உகரம், தேவதை விஷ்ணு. சுழிமுனை என்பது இரண்டு நாசியிலும் சமமாக ஏற்படும் சுவாசம். இதன் எழுத்து மகரம், தேவதை ருத்திரன். இடது மற்றும் வலது நாசியில் தரிகெட்டுப் பாயும் சுவாசத்தை யோக அப்பியாசத் தின் மூலமாக சுழிமுனையில் நிறுத்த வேண்டும். அதாவது அகர, உகர, கலைகளை மகர கலையில் நிறுத்த வேண்டும். அதாவது அகரம், உகரம், மகரம் என்னும் முப்பூவை சரி செய்ய வேண்டும். அப்பொழுது சுழிமுனை நாடியில் பாயும் சுவாசம் பாம்பு வடிவில் மூலாதாரத்தில் தூங்கும் குண்டலியைத் தட்டி எழுப்பும். கண்டலினி விழித்து நம்முடைய ஆதாரங்களைக் கடந்து சகஸ்ரத்தை அடையும். அதாவது முக்தி அடையும். அப்பொழுது ஆன்மா பிரம்மதரிசனம் பெற்று சமாதியை அடைந்து சக்தி வடிவாகிறது. எனவே அய்யா முப்பூவைத் தானெடுத்து முத்திசெய்தால் சக்தியுண்டு என்கிறார்.
அய்யா உண்டு
அகில விருத்தமும் விளக்கமும்
– பா. அசோக் குமார் அய்யா 009607704901, 8012174032
“இராவணன் தன்னைக் கொல்ல ராம பாணங்களோடே
ஸ்ரீராமராய் மாயன்றானுத் தசரதன் தனக்குத் தோன்ற
விராகனமாதுசீதை வில்லுடனுதிக்கத்தேவர்
மராமரக் குலங்களாகி வந்தனர் புவியின்மீதே”
விளக்கம்: நாராயணர், ராவணனைக் கொல்வதற்காக ராம பாணங்களோடு மன்னன் தசரதருக்கு மகனாக ஸ்ரீ ராமராய் அவதரிக்க, அம்மை லெட்சுமியும் சீதாபிராட்டியாக வில்லோடு அவதரிக்க, தேவர்கள் எல்லாம் வானரங்களாக தோன்றி இந்த உலகத்தில் வந்தனர்
அய்யா உண்டு
அகில விடை
1. அரன் (சிவன்)
2. சுருதி
3. அரன் (சிவன்)
4. விவசாயி
5. ரிக், யஜூர், சாம, அதர்வணம்
அய்யா உண்டு
ஆன்மிகம் என்றால் என்ன?
– S. அன்ன செல்வம் அம்மா – 944362222
கடம் + உள் = கடவுள் (கடம் – உடல்)
இறைவன் நம்மை இவ்வுலகத்தில் படைத்ததே ஆன்மிக வாழ்க்கை வாழ்ந்து ஆனந்தம் அடையவே. எனவே தான் மானிட மக்களுக்கு மட்டும் ஆறறிவைக் கொடுத்தார். இந்த பிரபஞ்ச உலகத்தில் சிந்திக்கும் ஆற்றல் மனிதனுக்கு மட்டுமே இறைவன் அன்பளிப்பாக கொடுத்தார். இவ்வுலக மக்கள் அனைவரும் விரும்புவது பரிபூரண ஆனந்தத்தையும் அமைதியையும் மட்டுமே. இந்த அமைதி உலக பொருள்களில் கிடைக்கும் என்கிற கற்பனையில் மனிதன் வாழ்கிறான். இறைவன் மனிதனுடைய வாழ்க்கையை மேன்மைப்படுத்தவே நினைக்கிறார். ஆன்மிக வாழ்க்கை என்பது தன்னை சீர்படுத்தி பரம்பொருளை நோக்கிய பயணமாக இருக்கச் செய்வதாகும். ஆன்மிகத்தின் முதல் படி அன்பு தான். அன்பு உள்ளம் கொண்டவன் ஏழையாக இருந்தாலும் அவன் இறைவனுக்கு சமம். ஒருவர் காட்டும் கருணையில் இறைவன் இருக்கிறார்.
பேராகவே இருந்தால் பேறுண்டு உங்களுக்கே கிடைக்கும்”
ஒரு தோட்டத்தை பராமரிக்கின்ற தோட்டக்காரன் தினமும் பயிருக்குள் முளைக்கும் கழையைப் பிடுங்கி எறிவது போன்று நாமும் நம்முடைய குற்றம் குறைகளைக் கண்டுபிடித்து நம்மை சரி செய்து கொள்ள வேண்டும். அப்படி செய்யும்போது நமக்குள் நல்ல குணங்கள் மட்டுமே இருக்கும். மேலும் ஆன்மிக வாழ்க்கைக்குப் புலனடக்கும் கட்டாயம் தேவை. நம்முடைய ஐம்புலன்களான மெய், வாய், கண், மூக்கு, செவி இவைகள் நம்மை மனம் போன போக்கில் ஆட்டிப் படைக்கின்றன. நாம் நம்முடைய ஞான அறிவின் மூலம் அவைகளைத் தன் வசப்படுத்தி நம்முடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டால் வாழ்க்கை ஒளிமயமாகிவிடும்.
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்
தெள்ளத் தெளிந்தோர்க்கு சீவன் சிவமாகும்
கள்ள புலன் ஐந்தும் காண மணிவிளக்கே” -திருமூலர்
உள்ளம் என்பது இறைவன் அமர்ந்திருக்கும் பள்ளியறை. நமது உடல் உச்சி முதல் உள்ளங்கால் வரை ஆலயமாகும். நம்முடைய வாய் ஆலயத்திற்குச் செல்லும் கோபுரத்தின் நுழைவாயில். நல்ல மனம் தெளிந்து பெற்றவர்களுக்கு ஆன்மா இறைத்தன்மை அடையும். நம்முடைய ஆசையைத் தூண்டும் ஐந்து புலன்களும் ஓர் ஆலயத்தின் மணி விளக்குகளைப் போல் நம்முடைய உடலில் தன்னடக்கமாக செயல்பட்டு ஒளியாக மாறும். இதுவே ஆன்மிகத்தின் மிகப்பெரிய சிறப்பாகும் இத்தனை சிறப்புகள் நமக்குள் இருக்கும் போது அதை நாம் அறியாமல் பொறுப்பற்றவர்களாக இருக்கின்றோம். ஆன்மி விகம் என்றால் ஆலய வழிபாடு மட்டுமல்ல ஆண்டவனை அகத்தில் காண்பது ஆகும். இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறான் என்பதைட எல்லாம் அவனாகவே இருக்கின்றான் என்பதே உண்மை.
“எங்கும் நிறைந்தவர் ஏகமயமானவர்
நமக்கு உதவி செய்ய வந்த நாராயணர் இவர்தான்”
– அய்யா வைகுண்டர்
அய்யா உண்டு
தர்மயுக முரசு வாசகர்களுக்கு அன்பான வேண்டுகோள்
நமது தர்மயுக முரசில் “கேள்வி பதில்” என்கிற பகுதியில் கேள்வி கேட்க நினைப்பவர்கள் கீழ் கண்ட விலாசத்திற்கு கடிதம் மூலமாக கேட்கலாம் அல்லது கீழ் கண்ட வாட்சப் எண்ணிற்கு டைப் செய்தும் அனுப்பலாம். அதன் விடைகளை உங்கள் கேள்வியோடும் உங்கள் பெயரோடும் நமது தர்மயுக முரசில் பதிவாகும்
விலாசம்:
அகில உலக அய்யாவழி சேவை அமைப்பு
அய்யா வைகுண்டர் வளர்பதி, கைலாசக் கோனார் காம்பவுண்ட்,
வடக்கு மெயின் ரோடு, வள்ளியூர் 627117, திருநெல்வேலி மாவட்டம்
வாட்சப் எண்: 8903201008
அய்யாவழி
– ஹரி வெங்கடேஷ் அய்யா 8508518505
“பத்தவதாரம் பிறந்த பாதைகளை சொல்மகனே”
ஏகமாய் எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்து இருக்கும் அந்த ஆதி சிவமாகிய அய்யாவே இந்த உலகை படைத்து ஆட்டுவதற்காக சிவன், பிரம்மா, விஷ்ணு என முப்பொருளாக தோன்றுகிறார். அப்படி தோன்றிய இறைவனே அண்ட பிண்டங்களையும் படைத்து பிண்டத்திலே குறோணி என்ற ஒரு அசுரனை படைத்து அந்த குறோணி என்ற அசுரனுக்கு வரம் கொடுக்க சிவமாகவும் அவன் வரம் வாங்கிக் கொண்டு தேவர்களுக்கு கொடுமை செய்வதால் அவனை அழிப்பதற்கு விஷ்ணுவாகவும் அய்யா சிவமே வருகிறார்.
இதன்படியாக நீடியயுகம் சதுரயுகம் நெடியயுகம் கிரேதாயுகம் திரேதாயுகம் துவாபராயுகம் கலியுகம் என ஏழு யுகங்களிலும் சிவனிடம் வரம் வாங்கிக் கொண்டு அசுரன் கொடுமை செய்யும் போது எல்லாம் அவனை அழிப்பதற்கு விஷ்ணுவாக அய்யாவே வருகிறார்.
ஆகவே அய்யாவழியும் இப்போது வந்தது இல்லை. அய்யாவும் இப்போது பிறந்தவர் இல்லை. ஆதி அந்தம் இல்லா சிவமே அய்யா. அவர் கலியுகத்தில் கலியை அழிக்க வைகுண்டராக அவதரித்த வருடமே 1008 ஆம் ஆண்டே தவிர அய்யாவின் தோற்றம் 1008 ல் அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அய்யாஉண்டு
அய்யாஉண்டு
அய்யா அருளிய வாழ்வியல் நெறி முறைகள்
-த. சீதா லெட்சுமி அம்மா 949655691
அப்படி வாழ்வது தான் நடுநிலை வாழ்வு. அப்படி வாழ்பவர் ஒரு வீட்டையோ அல்லது ஒரு நிறுவனத்தையோ அல்லது ஒரு நாட்டையோ ஆளும் தகுதி பெறுகிறார். இதைத்தான் அகிலத்திரட்டு “திராசு நிறையிலும் துல்லிபமாய் செங்கோல் செலுத்தவே வந்தவர் அய்யா” என்றுக் குறிப்பிடுகிறார்.
ஒருவரை மிகவும் சிறப்பின் உச்சத்திற்குக் கொண்டுச் செல்வது தன்னைப் போல் பிறரை எண்ணும் தன்மை ஆகும். அந்தத் தன்மையே ஒருவருடைய மிகச் சிறந்த அணிகலன் ஆகும். சான்றோருக்கு அழகு எதுவென்றால் நல்லதும், கெட்டதும், நிலை இல்லாததும், எது என்று உணர்ந்து மனசாட்சிக்கு விரோதமில்லாமல் செயல் படுவதே ஆகும். நடுநிலை தவறி செயல்பட்டால் தனக்கு அழிவு நேரிடும் என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்பட வேண்டும். நாம் நமக்கு வேண்டியவர், வேண்டாதவர் என்ற பாகுபாடு இல்லாமல் நாம் செயல்படுகின்ற போது நாம் எவ்வளவு வறுமையில் இருந்தாலும் இந்த உலகம் அதை இழிவாக எண்ணாது.
ஆனால் இன்றைய கலியுக வாழ்வானது மக்களை ஒரு கட்டுக்குள் கொண்டு வந்து நடுநிலைமை தவறச் செய்துவிடுகிறது. இதனால் மக்கள் தவறான ஒரு நீதியைச் சொல்ல முற்படுகின்றனர். எப்படி என்றால், தனக்கு வேண்டியவர் வேண்டாதவர் எனப் பிரித்துப் பார்த்து தனக்கு வேண்டியவர் எவ்வளவு கெடுதல் செய்தாலும் அது தப்பு என்று சுட்டிக் காட்டாமல் தனக்கு வேண்டியவர்களுக்குச் சாதகமாக அங்கே நியாயம் பேசி விடுகின்ற போது உண்மையில் எந்த விதத் தவறும் செய்யாத அவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் அங்கே நடுநிலைத் தவறி விடுகிறது.
ஆனால் எந்தப் பக்கமும் சாயாமல் நடுவில் நிற்கும் தராசு முள்போல் நடுவுநிலைமை தவறாமல் இருப்பதுதான் சான்றோர்க்கு அழகாகும். அப்படி நடுநிலைத் தவறாமல் வாழ வேண்டும் என்ற ஒரு எண்ணம் மனதில் தோன்றினால் அது சொல்லிலும், செயலிலும் வெளிப்படும். அப்போதுதான் அந்த நபர் பலரின் நம்பிக்கைக்கு உரியவர் ஆகிறார். அதோடு மட்டும் நின்று விடாமல் பார் போற்றும் வண்ணம் புகழப் படுகின்றார். நம்மை நாடி ஒருவர் நீதி வேண்டி நிற்கின்ற போது நாம் நன்கு ஆராய்ந்துச் செயல்பட வேண்டும். அப்படி நாம் செயல்படுவோமேயானால் அய்யா கூறிய வாரம் சொல்லாமலும் வழக்கை ஒரு சாரார் பக்கம் பேசாமலும் வாழ முடியும். எனவே அய்யா கூறிய வழிநின்று தர்மயுக வாழ்வு பெறுவோம்.
அய்யா உண்டு
நல்ல குணத்துக்கான உணவுகள் எவை?
– வைகுண்ட ராஜன் அய்யா – 9500791234
அன்றைய காலகட்டத்தில் இன்றுபோல் எழுந்தவுடன் படுக்கையிலேயே தேநீர் அருந்தும் பழக்கம் இல்லை.
காலை ஆகாரம் என்பது பெரும்பாலும் கஞ்சி, அவித்த பயறு, துவையல் மற்றும் அப்பளம் ஆகியவையாகும். விசேஷ நாட்களில் மட்டுமே பலகாரம் செய்வார்கள்.
காய்கறிகள், பயறு வகைகள், பழ வகைகள், கிழங்கு வகைகள், கீரைகள் ஆகியவற்றை உணவாக உட்கொண்டிருந்தார்கள். ஏனென்றால் எளிமையான உணவை உட்கொள்ளுவதால் நமக்கு நல்ல குணங்கள் உண்டாகின்றன.
ஆனால் நடப்பு காலத்திலோ நமது மண்ணின் தட்ப வெப்ப நிலைக்கு ஒப்பாத உணவு வகைகளான மாமிச உணவுகளான பிரியாணி, பிரெய்டு ரைஸ், பீஸா, பர்கர் என்று உண்டு கொழுத்து நாவிற்கு அடிமையான மனிதன், அவன் உண்ட உணவினாலேயே பாதியிலேயே தனது வாழ்க்கைப் பயணத்தை முடித்துக் கொள்கிறான். இதைத் தான் அய்யா சாட்டுநீட்டு ஓலையிலே,
புழு எட்டி கொத்தக் கண்டேன் சிவனே அய்யா”
நல்ல உணவுகளை உண்டு, நீடித்த ஆயுள் கொண்டு வாழ்வோம்.
அய்யா உண்டு
முனிமார் பெற்ற மக்கள்
-அலெக்ஸ் ராஜன் அய்யா 8248688566
முனிமார் பெற்ற மக்கள் சிவனே அய்யா”
ஒண்ணுசொல்ல ஒண்ணு கேட்டு என்று வாயில் அடித்து அய்யாவின் பெயரால் உறுதிமொழிக்கு ஒப்பான தீர்மானம் எடுப்பவர் சற்றேனும் பிறரின் சொல்லுக்குச் செவிமெடுப்பதில்லையே. ஏனிந்த நடிப்பு… ஏனிந்த வேசம்…. இப்படியும் நகைப்போர் கோடி!!!!
அவர்களின் நகைப்பில் உள்ள கலியின் தாக்கத்தை அறியாத பணிவிடை அன்பர்களின் அறியாமையை எண்ணி உஷாராகவேண்டியது நாம்தான்!
இதே வேளையில், எல்லா இயலாமைக்கும் கலியை காரணமாக்கி பழித்தால் சரியாகிவிடுமா என நமது ஆழ்மனது நம்மிடம் வினா எழுப்புகிறது, நகைக்கிறது.
சரிதான், இந்த கலியைக் கைகாட்டி எத்தனை காலம் ஏய்த்து நிற்பது?., இதனாலேயே என்னவோ அகிலம் தமது ஆகமத்தின் நுழைவு தோரணமாக கலியுகமும் தெய்வீக லோகத்துக்கு ஒப்பாக வாழ்ந்தது என அடிக்கோடிட்டு பயணிக்கிறது. ஆம், இக்கலியுகத்திலும் நாராயணர் வந்தமர்ந்த தெட்சணாபூமியானது
தவமே பெரிதெனவே தவனிலைகள் செய்வாரும்
கோவிந்தாவென்று குருபூஜை செய்வாரும்
நாவிந்தையாக நால்வேதம் பார்ப்பாரும்
கருதல் சிவன் பேரில் கருத்தாய் இருந்தனராம்”
பத்தாசை யாகப் பண்பாய் தழைத்திடவே
நாலான வேதம் நல்ல கலியுகமாய்
மேலும் பரமாய் விளங்கி இருந்திடவே”
சரி, விசயத்துக்கு வருவோம், இப்படி ஒரு சிறப்பான தெய்வீக எழுந்தருள்தலுக்கு அடிப்படைக் காரணமாக அகிலம் சுட்டும் முதல் நிலையாக மக்களின் தொடர்ச்சியான இறைவழிபாடும், இறைவனைப்பற்றிய கருதலும், இறைநெறி தவறாத வாழ்வியலும், படைத்தவனே நமக்கெல்லாம் ஒரே தலைவன் என்ற இல்லற இயல்பான அறம், பொருள், இன்பமாய் வாழ்ந்திருந்த வாழ்வே காரணம் என அகிலம் குறிப்பிடுகிறது!
அவ்வண்ணமே மீண்டும் இக்கலியில் முத்தான சீமையின் இயல்பு உருவாக வேண்டுமெனில் என்நேரமும் மக்கள் சிவ நினைவோடு கருதல் சிவன் பேரில் இருந்து செய்யும் செயலெல்லாம் சிவ அர்ப்பணமாய் இருந்தாக வேண்டும் என்பதே அய்யா அருளிய வழிபாட்டு முறையாகும்.
நித்தம் திருநாள் முறை நடத்திய காரணமும் இதுதான், காலை, மாலை, அந்தியில் வழிபாடு ஓதிட கற்பித்த நியாயமும் இதுதான்… ஆனாலும் என்ன செய்ய., கலியின் தாக்கம் ஒருபுறம் துரத்தினாலும் சான்றோராகிய நாம் அய்யாவின் அறிவுரைப்படி என்நேரமும் கருத்தில் சிவ நாமம் தரித்து சிவ நினைவு மாறாது இருப்பதே நமக்கிட்ட சட்டமாகும்.
தூற்றுவோர், நகைப்போரெல்லாம் கலியனின் ஆயுதங்கள் என மனதில் எண்ணி அவர்களை புறந்தள்ளி நமது புறச்செயலை தொடர்ந்து செய்து, அகச்சுத்தியின் பாதையை அடையாதிருப்போம்!
பதிகளில் பணிவிடை செய்வோருக்கு இந்த உண்மை புரியவரும் நாளில் நிச்சயமாக இகழ்வோரின் இகழ்ச்சிக்குப் புன்னகையால் பதிலளிப்பார்கள் என்பது சத்தியம்!
மூன்று நேரம் துவைத்து ஒரு நேரம் அன்னம் உண்ண
முனிமார் பெற்ற மக்கள் சிவனே அய்யா
அய்யா உண்டு
நம்புங்கள் வருவான்
-மீனா அம்மா 9344813163
காசி மாநகரில் பரம ஏழையான ஒரு அந்தணர் வாழ்ந்து வந்தார். பிச்சை எடுப்பதின் மூலம் வரும் பொருளினால் இறைவனுக்குப் பணிவிடை செய்துவிட்டு மீதி உள்ளவற்றால் அவரும் அவர் மனைவியும் வாழ்க்கை நடத்தி வந்தனர். இவர் தீவிர கிருஷ்ண பக்தராக இருந்தார். தனது வாழ்க்கையில் அவர் பகவத்கீதையைப் படிக்காத நாட்களே கிடையாது.
ஒரு நாள் பகவத்கீதையைப் படிக்கும் பொழுது ஒரு வாரியில் இவருக்குச் சந்தேகம் எழுந்தது. அந்த வரிக்கானது “யோக சேமம் வகாம் யகம்”. இறைவன் எப்படி எல்லா உயிர்களுக்குள்ளும் இருக்க முடியும் எப்படி அனைவரின் பிரச்சனைகளையும் தீர்க்க முடியும் என்பதே அவரின் சந்தேகம்.
எனவே இந்த சந்தேகத்தைத் தீர்க்க வேண்டும் என்று அந்த வாரியின் பக்கத்தில் ஒரு பெருங்கல் குறி போட்டு வைத்தார். வழக்கம்போல் அந்தணர் பிச்சை எடுக்கச் சென்றுவிட்டார். அவர் சென்று சிறிது நேரம் கழித்த பின்பு அந்தணரின் வீட்டு கதவு தட்டும் சத்தம் கேட்டது. அந்தணரின் மனைவி கணவர் தான் வந்துவிட்டார் சமைப்பதற்குப் பொருட்கள் கொண்டு வந்தார் என்று ஆவலுடன் ஓடிச் சென்று கதவை திறந்துப் பார்த்தாள்.
அப்பொழுது அங்கு ஒரு சிறுவன் முதுகில் பெரிய மூட்டையுடன் நின்று கொண்டிருந்தான். அம்மூட்டையினுள் மூன்று மாதத்திற்குத் தேவையான உணவுப் பொருட்கள் இருந்தன. அந்தணரின் மனைவி சிறுவனிடம் நீ யார் என்று கேட்டாள். அதற்கு அச்சிறுவன் தான் அந்தணரின் மாணவன் என்றும் தன்னுடைய குரு அந்த மூட்டையைக் கொடுத்து அனுப்பியதாகவும் கூறினான்.
அந்தணரின் மனைவி சிறுவனை இதற்கு முன் கண்டதில்லை என்று கூறினாள். அதற்கு அச்சிறுவன் தான் தினமும் அங்குச் செல்வதாகவும் அந்தணரின் மனைவிதான் அவனைப் பார்த்ததில்லை என்றும் கூறினான்.
மேலும் குரு அச்சிறுவன் மூட்டையை சரியாக கொண்டு வீட்டில் சேர்க்க மாட்டான் என்ற சந்தேகத்தில் முதுகில் காயத்தை ஏற்படுத்தினார் என்றும் கூறினான். பின் அவனுடைய முதுகைக் காட்டிக் கொடுத்தான். அப்பொழுது அவன் முதுகில் பெருக்கல் குறி விட்டது போல் இரண்டு கோடுகள் போல் காயம் காணப்பட்டது.
இதைப் பார்த்தவுடன் அந்தணரின் மனைவியால் தன் கணவர் அந்தக் குழந்தைக்குச் செய்த கொடுமையைத் தாங்க முடியாமல் மனம் வருந்தி குழந்தையின் முதுகில் தேங்காய் எண்ணெய் போட்டு முதலுதவி செய்து படுக்க வைத்தாள்.
தன் கணவன் மீது மிகுந்த கோபத்துடன் இருந்தாள். சிறிது நேரம் கழித்து அந்தணர் ஒரு சிறு பொருள் கூட கிடைக்காமல் வருத்தத்துடன் திரும்பினார்.
வீட்டில் அவருடைய மனைவி மிகுந்த கோபமாக நடந்தவற்றையெல்லாம் கூறினாள். அப்பொழுது அந்தணர் தனக்கு அப்படி ஒரு மாணவன் இல்லை என்றும் தான் எந்த பொருளும் கொடுத்து அனுப்பவில்லை என்றும் கூறினார். பிறகு அந்தச் சிறுவனை வீட்டில் பார்த்தபோது அவன் வீட்டில் இல்லை. இறுதியில் தான் அந்தணருக்குப் புரிந்தது வந்து சென்றது சிறுவன் இல்லை இறைவன் தான் என்று.
உடனே தன்னுடைய பகவத் கீதையில் பெருக்கல் குறியிட்ட இடத்தை ஓடிச் சென்று பார்த்தார். அங்கு அந்தக் குறி இல்லை. உடனே அவர் தன் மனைவியிடம் கூறினார் நான் இறைவனை சந்தேகப்பட்டேன் ஆனால் இறைவன் என் அறிவு கண்ணைத் திறப்பதற்காக வந்திருக்கின்றார், உனக்குக் காட்சி அளித்திருக்கின்றார், நீ ஒரு பாக்கியசாலி.
இவ்வாறு தான் இறைவன் அனைத்து உயிர்களிடமும் நிறைந்து இருக்கின்றான். நம்பினால் நிச்சயம் வருவான்
அய்யா உண்டு
தர்மயுக முரசு வாசகர்களுக்கு அன்பான வேண்டுகோள்
நமது அகில உலக அய்யாவழி சேவை அமைப்பு (IASF)
நடத்தும் கூகுள் மீட் அகிலத்திரட்டு அறப்பாட சாலை எல்லா சனிக்கிழமையும் இரவு 8 மணி முதல் 9 மணி வரை நடைபெறுகிறது
எனவே அப் அறப்பாடசாலையில் கலந்து கொள்ள எல்லா சனிக்கிழமையும் கீழ் கண்ட லிங்கை கிளிக் செய்து இணைந்து பயன் பெறுங்கள் https://meet.google.com/btd-zzjs-uph
இந்த வகுப்பில் திருஏடு வாசிப்பு, பாராயணம், ஆன்மிக கதை, அய்யா பாடல், அய்யாவின் உபதேசங்கள் போன்றவை அன்பர்களால் சிறப்பாக வழங்கப்படுறது.
அன்புக்கொடி சொந்தங்கள் இந்த ஆன்மிக வகுப்பில் கலந்து பயனடைய அன்போடு வேண்டுகிறோம்.