தர்மயுக முரசு ஜூன் 2023
அய்யாவின் அருளால் எந்நாளும்நன்னாளே
-அசோக்குமார் அய்யா – 009607704901, 8012174032.
அறுத்துவிட என்றால் அபூருவமோ எந்தனுக்கு”
ஆன்றோர்களே! நமது ஆன்மிக பயணம் எப்போதும் மனமகிழ்வைதான் கொடுக்கும் என்று நாம் எண்ணிவிடக் கூடாது. ஆன்மிக பயணமே பாவ கர்மாவை போக்கி புண்ணிய கர்மாவை சம்பாதிப்பதாகும். புண்ணிய கர்மாவை சம்பாதிக்க சம்பாதிக்க பாவ கர்மா கரையப் படும். பாவ கர்மா சிறு சிறு தண்டனைகளாலும் புண்ணியம் செய்வதாலும் கரையப் படுகிறது. தண்டனைகள் பாவ கர்மாவின் அடிப்படையில் கிடைக்கிறது.
வாழ்க்கைப் பயணமானது ஆன்மிகத்தை அடிப்படையாகக் கொண்டே அமைக்க வேண்டும். ஆன்மிகம் சாராத எந்தச் செயலும் நன்மை தராது. அப்படிப்பட்ட ஆன்மிகம் சார்ந்த வாழ்க்கைப் பயணத்தில் துன்பங்கள் வருகிறது என்று சொன்னால் பாவ கர்மாவினால் ஏற்படும் தண்டனைகளாலும் நமது பயணத்தில் உறுதித்தன்மையை பகவான் பரீட்சிப்பதாலும் ஏற்படலாம்.
துன்பங்கள் எப்படி ஏற்பட்டாலும் அது நமது பாவ கர்மாவால் கிடைத்தது என்ற உண்மையையும் மறந்துவிடக் கூடாது. மேலும் நமது ஆன்மிக பயணம் ஆகம சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செல்கிறதா என்று அவ்வப்போது நம்மை நாம் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பகவான் ஆகமத்தில் அழகாக சொல்லுவார் “கேடு வரும் உனக்கு கேள்வி கேளாதிருந்தால்” அதாவது நாம் செய்கிற ஒவ்வொரு செயலும் ஆகம வழிதானா என்று நம்மை நாமே கேள்வி கேட்க மறந்துவிடக் கூடாது. இப்படி நம்மை நாம் மாணவன் என்கிற நிலையிலேயே பாவித்து நமக்குள் கேள்விகள் எழுப்பி அதன் விடையை ஆகமத்தில் அறிந்து செயல் பட்டோம் என்றால் அச் செயல்பாடு சிறப்பாக அமையும்.
ஆன்மிக செயலைத் தனியாகவும் செய்வோம் கூட்டு முயற்சியாகவும் செய்வோம். தனியாக செய்யும் போது அச் செயல்பாடு ஒரு குறுகிய கால அளவு கொண்டதாக அமைந்து விடும். ஆனால் கூட்டு முயற்சியாக செயல்படும் போது அச் செயல்பாடு வாழையடி வாழையாக தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும். ஆனால் கூட்டு முயற்சியில் சில இடையூறுகள் வரும். எதனால் இடையூறுகள் வருகிறது என்றால் பொறாமையின் வெளிப்பாடாகும். பொறாமை குணத்தால் போட்டிகள் வெளிப்படும். அப்போட்டிகளால் பகைமை கூட ஏற்படலாம். இதனால் மனசஞ்சலங்கள் ஏற்படும். இதை தவிர்ப்பது எப்படி யென்றால் பொறுமை என்கிற கேடயத்தால் பொறாமை தீயை அணைத்து போட்டி என்கிற வட்டத்துக்குள்ளே செல்லாமல் புன் சிரிப்போடு நமது பணியைத் தொடரும் போது அனைத்தும் சிறப்பாக அமையும்.
ஆன்மிக கூட்டுச் செயல்பாட்டில் நமக்கு ஒருபோதும் பொறாமையோ அதனால் விளைகின்ற போட்டி உணர்வோ நமக்கு வந்துவிடக் கூடாது. இப்படிப்பட்ட மோசமான உணர்வு நமக்கு வந்துவிட்டால் நமது பாவ கர்மா பன்மடங்கு கூடிவிடும். பிறருக்கு வந்துவிட்டால் நம்மால் முடிந்த ஆலோசனைகளை அகில வழி நின்று பொறுமையாக எடுத்துரைப்பது நமது கடமையாகும். பிறருக்கு இக் கெட்ட உணர்வுகள் வந்து அதனால் நாம் பாதிக்கப் பட்டாலும் அது பற்றி நாம் கவலை கொள்ளாமல் நமது பணியை தடைபடாமல் செய்து கொண்டே இருக்க வேண்டும்.
பிறரால் ஏற்படும் துன்பங்களுக்கும் நமது பாவ கர்மாவே காரணம் என்று எண்ணி அய்யா பார்த்துக் கொள்வார் என்று நாம் செயல்பட வேண்டும். யார் தவறு செய்தாலும் அதற்கான தண்டனையைப் பெறுவர் என்பது நமது ஆகமங்கள் மூலமாக அய்யா நமக்கு அருளிய பாடத்தை மறவாமல் செயல்பட்டு பரிசுத்த ஜீவாத்மாக்களாக செயல்பட்டு உலகத்தின் ஒளிவிளக்குகளாக விளங்கி நித்திய வாழ்வான தர்மயுக வாழ்வை பெறுவோம்
அய்யா உண்டு
அகில கேள்வி
1. குறோணியின் உயிரானது எந்த யுகத்தில் இரண்டு முறை பிறவி செய்யப்பட்டது?
2. “நந்தி குலம் வாழ நாம் பிறப்போம் கண்டீரே” என்று சொன்னவர் யார்?
3. “அரவக் கொடியோன்” என்பது யாரைக் குறிக்கும்?
4. கம்சனுக்குச் சாபமிட்ட முனிவரின் பெயர் என்ன?
5. மந்திரப் புரக்கணையாக வளர்ந்த முனிவரின் பெயர் என்ன?
விடை ……… பக்கம் பார்க்கவும்
அகிலதிரட்டு அம்மானை மூலமும், உரையும்
-க. ரீகன் அய்யா- 0096893145654
மேலுகந்தா னிங்கே மிகுத்தகிரேதா யுகந்தான்
இருக்குது காணென்று ஈச ருரைத்திடவே
மருக்கிதழும் வாயார் மனமகிழ்ந்து கொண்டாடி”
மண்டலங்கள் மெய்க்க வாணாள் கொடுத்தருளி
சிங்கமுகச் சூரனெனும் திரள்சூர பற்பனெனும்
வங்கணமாய்ப் பிண்டம் வகுத்தனர் காணம்மானை”
போரக் கால்கைகள் பொருப்பெடுக்கு மாபலமும்
சூரன் சுறோணிதத்தைச் சுக்கிலங்கள் தானாக்கி
ஊரேநீ போவென்றே உற்ற விடைகொடுத்தார்”
திடமாகப் பூமி செலுத்தியர சாண்டிருந்தான்
வரம் வேண்டவென்று மலரோனடி வணங்கி
திறமான ஓமமிட்டு செப்புக்குடம் நிறுத்தி
நின்ற தவத்தில் நெடியோனைக் காணாமல்
அன்றந்தச் சூரன் அக்கினியில் விழுந்தான்”
பாரமுள்ள தன்சிரசைப் பறித்தெறிந்தா னக்கினியில்
ஆனதா லீசுரரும் அம்மையுமை யாளிரங்கி
ஈனமாஞ் சூரனுக் கேதுவரம் வேணுமென்றார்”
பாசமுடன் செத்த பர்பனென்ற சூரனையும்
எழுப்பித் தரவேணும் யாங்கள்மிகக் கேட்டவரம்
மழுப்பில்லா வண்ணம் வரமருள்வீ ரென்றுரைத்தான்”
பாரமுள்ளவோம பற்பமதைத் தான்பிடித்து
சிவஞான வேதஞ் சிந்தித்தா ரப்பொழுது
பவமான சூர பர்ப்பன் பிறந்தனனாம்
இறந்து பிறந்தனற் கிளையான் அவன்றனக்கு
சிறந்த புகழீசர் செப்புவா ரப்பொழுது”
வீரரே கேளுமென்று வேதனிவை உரைக்க
அந்நாளில் சூரன் அகமகிழ்ந்து கொண்டாடி
உன்னாலும் ஐந்துமுக முள்ளவர்கள் தன்னாலும்
உலகத்தில் பண்ணி வைத்த உற்ற ஆயுதத்தாலும்
இலகு மன்னராலும் இந்திரனார் தன்னாலும்
கொல்லத் தொலையாத கொடிய வரமதுவும்”
தேவர் தேவேந்திரனும் திருக்கன்னி மாரையும்
ஏவலா யுன்னுடைய லோகமதி லுள்ளவர்கள்
முழுது மெனக்கு ஊழியங்கள் செய்திடவும்
பழுதில்லா திந்தவரம் பரமனே நீர் தாருமென்றான்”
(தொடரும்)
அய்யா உண்டு
சிவகாண்ட அதிகார பத்திரம்
மாடசாமி அய்யா 8973349046
“உங்களுக்கு வேலை செய்ய உலகில் வந்தேன் கண்ணு மக்கா”
பொருள்: நான் உங்களை கடைதேற்றுவதற்காக உலகில் வந்தேன் கண்ணு மக்கா.
விளக்கம்: எண்ணிறந்த கோடி சீவர்களின் மேல் கொண்ட இரக்கத்தால் பகவான் உலகில் அவதாரம் எடுக்கிறார். அவர் அவதாரத்தால் பகவானுக்கு எந்த பலனும் இல்லை. அவரால் உலகியலில் மூழ்கி இருக்கும் மக்களுக்கும், ஆன்ம விழிப்புணர்வு உடையவர்களுக்கும், சண்டாளர்களுக்கும், தேவகோடிகளுக்குமே பலன்.
இவர்கள் அவதார காலத்தில் பிறக்காவிட்டாலும் கூட, பிந்தய நாட்களில் பகவானின் அவதார கதையமுதைக் கேட்பதாலேயே தங்களின் பாவங்களினின்று விடுபட்டு ஆன்ம விடுதலையான முக்தியையும், கர்மக் கட்டு கரைந்ததால் இக போகங்களையும் பெறுகின்றனர். எனவே அய்யா “உங்களுக்கு வேலை செய்ய உலகில் வந்தேன் கண்ணு மக்கா” என்கிறார்.
“இருமனதாய் எண்ணாதே எனக்குத்தரம் சொல்வாயோ”
பொருள்: நீ சந்தேக கண்ணோடு நோக்கி,என் அவதார லீலைகளை அறியாமல் என்னை மனிதனோ? தெய்வமோ? என்று குழம்பினால் தீர்ப்பு கொடுக்கும் போது எனக்கு உன்னால் பதிலுரைக்க இயலாது (உத்தரம்- பதில்)
விளக்கம்: ஏகப்பரம்பொருளாகிய இறைவன் தன்னுடைய அவதாரத்தை விளக்கி கூறினார் முந்தைய சூத்திரங்களில். ஆனால் மனிதன் இந்த சிவ காண்டத்தை அறியாமல், அவரின் வார்த்தைகளில் நம்பிக்கை கொள்ளாமல், அவரை மனிதன் என்றும், அவர் தெய்வத் தன்மை பெற்றவர் என்றும் இருமனதாய் எண்ணுகிறான்.
இதனால் பகவானின் உண்மையை அறியாமல் போகிறான். அவனுக்கு தீர்ப்பு கொடுக்கும் நாளில் என்னை அறிவாயோ? என்ற கேள்விக்கும், உன்னை அறிவாயோ? என்ற கேள்விக்கும் பதில் தர வேண்டியிருக்கும். மேலும் பரம்பொருளை மனிதனாக காட்டிய பாவத்தை சுமக்க வேண்டி வரும். எனவே இறைவனை ஆகமங்களின் வழி அறிய வேண்டும். அய்யாவே இறைவன் என்பது கருத்து.
“மருந்துவாழ் மாமுனிவன் மாயாஜால காரணும் நான்”
பொருள்: பிறவிப் பிணிமுதல் சகலப்பிணிக்கான மருந்து நானே! பல மாய லீலைகள் புரிவதும் நானே!
விளக்கம்: “நல்ல மருந்திம் மருந்து – சுகம் நல்கும் வைத்தியநாத மருந்து” என்பது வள்ளலார் வாக்கு. இறைவனே இகத்துக்கும் பரத்துக்கும் மருந்து. தீராத பிறவிப் பிணி தீர நாராயண நாமமே மருந்து. தீராத உடல் நோய்க்கும் அஃதே மருந்து. எனவே இறைவனே மருந்து வாழ்கின்ற மலை என்பது கருத்து.
மேலும் அவருடைய லீலைகள் புரிந்து கொள்ள முடியாத ஒன்று. அந்த லீலைகளின் மொத்த நோக்கமே சீவனின் பிறவிப் பிணி தீர்தலாம். எனவே அய்யா தன்னை “மாயா சாலக்காரணும் நான்” என்கிறார்.
தொடரும்
அய்யா உண்டு
அகில விருத்தமும் விளக்கமும்
– பா. அசோக் குமார் அய்யா 009607704901, 8012174032
“அறிந்தார் மாயன் சேயாகி அழுதே யிரங்குங் குரலதினால்
செறிந்தார் குழலார் யிவர்கள் சென்று சேர்த்தே யெடுத்து அணைத்ததுவும்
பறிந்தே யிவர்கள் நாணினதும் பால்தான் தனத்தில் பாய்ந்ததுவும்
அறிந்தே கன்னி யிருவரையும் அழித்தே பிறவி செய்தனராம்”
விளக்கம்: மாயோன் குழந்தை வடிவம் எடுத்து கானகத்தில் அழுது கிடந்ததைப் பார்த்த இந்த இரு மாதர்களும் அக்குழந்தையை எடுத்து அன்போடு அணைத்து, அதனால் தங்களுடைய கன்னித்தன்மை இழந்து வெட்கப்பட்டு நிற்பதையும், தாய்மை நிலையால் தனத்தில் பால் சுரந்ததையும் அறிந்த சிவபெருமான் இவர்களைப் பூலோகத்தில் பிறவி செய்ய முற்பட்டார்.
அய்யா உண்டு
அய்யா உண்டு
அய்யாவின் உபதேசங்கள்
– பா. கிருஷ்ணமணி அப்புகுட்டி அய்யா 9841933992
மெய்யரோடு அன்பு மேவியிரு என்மகனே”
பெருமாள் நானென்ன செய்வேன்”
சாமி துணையாய் வருவேன்”
வம்பு வசைகள் சொல்லி வைதாலும் கேட்டிடுங்கோ
அவரவர்கள் தன்கணக்கு உங்கள் அரசனிடத்தில் இருக்கிறது”
அநியாயமாக ஒருவர் உங்களை அடித்தாலும் பதிலுக்குப் பதில் அவரைத் திருப்பி அடிக்காமல் சகித்துக் கொள்ளுங்கள். வம்பாக வசைகள் சொல்லி திட்டினாலும் பதிலுக்குப் பதில் திட்டாமல் பொறுமையாகக் கேட்டு கொள்ளுங்கள். இவ்வாறு அநியாயமாக செயல்படுகின்றவர்களின் செயலைப் பார்த்து கணக்கு வைத்துக் கொண்டுதான் இருக்கிறேன். அவர்களின் பாவச் செயலுக்கு ஏற்ற தண்டனையை இறைவனாகிய நான் நிச்சயமாக வழங்குவேன்.
தொடரும்
அய்யா உண்டு
அகில விடை
1. நந்தீஸ்வரர்
2. கணபதி
3. மூன்றரை
4. அரன் (சிவன்)
4. தேவர்கள்
5. அரைக் கோடி
தியானம் என்றால் என்ன?
– S. அன்ன செல்வம் அம்மா – 9443622222
“தலைமன்னார் மீதிருந்து சாத்திரங்கள் சொல்லுதப்பா”
நம்முடைய மனம் எப்படிப்பட்டது என்றால் ஒன்றை மறக்க வேண்டும் என்றால் மறக்காது. ஓர் இடத்திற்கு போகக் கூடாது என்றால் போகச் சொல்லும். பார்க்கக் கூடாது என்றால் பார்க்கச் சொல்லும். கேட்கக் கூடாது என்றால் கேட்க சொல்லும். இப்படியே மனம் நமக்கு எதிராகப் போராட்டம் பண்ணிக் கொண்டே இருக்கும். ஏன் என்றால் இது கலியுகம். எனவே மனம் கலித் தன்மை கொண்டதாக இருக்கிறது. அப்படிப்பட்ட மனதை அடக்க முடியுமா? என்றால் அடக்க முடியும். அது தியானத்தால் மட்டுமே முடியும்.
ஒரு மனிதனுடைய ஆன்மீகம், ஞானம், முக்தி அனைத்திற்கும் மூலமாக இருப்பது தியானமே. தியானத்தால் மட்டுமே இறைவனுடைய அருளைப் பெற முடியும். தியானம் என்பது தீமையை நன்மையாகவும் துன்பத்தை இன்பமாகவும் மாற்றக்கூடிய ஆற்றல் பெற்றது.
இறைவனுடைய படைப்பில் காரணம் இல்லாமல் காரியம் இல்லை என்று சொல்லலாம். ஒவ்வொரு படைப்பும் அர்த்தமுள்ளதாகவே இருக்கிறது. இறைவனுடைய படைப்பில் மனிதப் பிறவி மட்டும் தனித்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
மனிதனுக்கு மட்டுமே சிந்திக்கும் திறன் இருக்கிறது. எனவே தியானத்தின் மூலம் இறை சிந்தனை உண்டாகிறது. அதன் மூலம் ஏற்படும் மாபெரும் சக்திகளை நாம் அனுபவிக்க முடியும். மனிதன் மகத்துவம் நிறைந்தவன். தியானம் என்பது இந்த உலக பிரபஞ்ச சக்தியோடு இறைவனோடு நம்மை ஐக்கிய படுத்துவதாகும்.
“மந்திரமும் நானானேன் மருந்து மூலி நானானேன்
சந்திரனும் நானானேன் சூரியனும் நானானேன்
சோசியங்கள் சூத்திரங்கள் பல சாஸ்திரங்கள் நானானேன்
எண்ணடங்கா சோதிபரன் மண்ணடங்கி இருக்கிறேன்
வேதாந்தம் சித்தாந்தம் விளம்பி வைத்தேன் வையகத்தில்”
-அருள் நூல் வாசகம்
உற்று உற்றுப் பார்க்க ஒளிவிடும் மந்திரம்
பற்றுக்கு பற்றாக பரமன் இருக்கும் மந்திரம்
சிற்றம்பலம் என்று அறிந்து சேர்ந்து கொண்டேனே”
–திருமூலர் வாக்கு.
தியானத்தின் மூலமாக மூச்சு அதாவது சுவாசத்தைக் கொண்டே அடிப்படை அம்சங்கள் அனைத்தும் காணப்படுகின்றன. பயிற்சிகள் மூலம் சுவாசத்தைக் கட்டுப்படுத்தி தன்னை அறிய வேண்டும். தன்னை அறிய முதலில் தன்னுடைய சுவாசத்தை அறிய வேண்டும். ஒரு ஒழுங்குமுறை இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சுவாசத்தை ஒழுங்குபடுத்தி ஓட விட்டால் வாழ்க்கை வளமாகவும் நலமாகவும் ஞானமாகவும் அமையும். சுவாசத்தைக் கட்டுப்படுத்தினால் வாழ்க்கை நம் வசப்படும்.
காற்றே கடவுள். பிராணன் இல்லாமல் உயிர் வாழ முடியாது. சுவாசமே சிவமாக இறை சக்தியாக உயிராக நமக்குள் இருந்து நம்மை இயக்குகிறது. தியானத்தின் மூலம் முறையாக சுவாசித்து இறைவனை நமக்குள் உணர்ந்து கொள்ளலாம். சுவாசம் அடங்கினால் மனம் அடங்கும். மனதை அடக்கும் கலையே தியானம். தியானத்தின் மூலம் நான் இந்த உடல் அல்ல நான் ஆன்மா என்பதை அறிந்து கொள்ளலாம். அதுவே தன்னை அறியும் இறை நிலையாகும்.
தியானத்தின் பலன்கள் எண்ணில் அடங்காதது. எனவே தான் அய்யா மாயப்பெருமாள் கலி மாயையை அழிக்க நமக்கு தந்த தந்திரம் தியானம். ஆகவே தான் அய்யா சொல்கிறார்.
அய்யா உண்டு
யுகதர்மம்
– ஹரி வெங்கடேஷ் அய்யா 8508518505
அப்படி என்றால் சனாதன தர்மத்தின் “ஓர் அங்கம்தான்” அய்யாவழியா என்றால் அது அப்படி இல்லை. அப்படி சொன்னால் சனாதான தர்மத்தில் இன்னும் பல அங்கங்கள் (தர்மம் அல்லது அறம்) உள்ளது அதிலே அய்யாவழியும் ஒரு தர்மம் என்பது போல் பொருள் ஆகி விடும்.
ஆனால் தர்மம் என்பது எப்போதும் ஒன்றே ஒன்றுதான். அந்த வழியில் சென்றால் ஒரு தர்மம் இந்த வழியில் சென்றால் ஒரு தர்மம் என்று வெவ்வேறு தர்மங்கள் இல்லை. இறைவன் வகுத்த தர்மம் எப்பொழுதும் ஒன்றுதான். இதைத்தான் அய்யா,
“அண்டத்திலே ‘ஓர் அறம்’ தான் நாதன் சொல்லுகிறேன் தப்பாது” என்றும்
“அதிகார சட்டம் இது அவனி எங்கும் ஆகுதப்பா” என்றும் கூறியுள்ளார்.
ஆகவே சனாதன தர்மத்தின் ஓர் அங்கம்தான் அய்யாவழி என்று கூறுவது தவறு. சனாதான தர்மத்தின் கலி “யுக தர்மமே” அய்யாவழி என்பதுதான் சரியான கூற்று.
நம்மில் சிலரது கருத்தானது அகிலத்திரட்டு கூறும் யுகதர்மத்தை ஏற்றுக் கொள்ளாமல் வைகுண்ட அவதாரத்துக்கு முன்பு உள்ள சனாதன தர்மத்தின் முன் ஆகமங்களின் வழி நடப்பவர்களாலும் தர்மயுகம் அடைய முடியும் என்று எண்ணுகிறார்கள். ஆனால் அது நடவாத காரியம் ஆகும். ஏனெனில் ஒரு வேளை அப்படி இருந்திருந்தால் கலியுகத்தில் வைகுண்டரின் அவதாரம் அவசியமற்ற ஒன்று ஆகி விடும்.
சாரமும் கெட்டு போச்சு” என்கிறார் அய்யா.
சிலபஸை விட்டு விட்டு வெளியில் இருக்கும் பாடத்தைப் படிப்பதன் மூலம் நமக்குக் கிடைக்கும் மதிப்பெண் பூச்சியம்தான். சிலபஸில் இருக்கும் பாடத்தைத் தேடி கண்டுபிடித்துப் படிப்பதுதான் உத்தமம்.
– அய்யா
அய்யாஉண்டு
நமது அகில உலக அய்யாவழி சேவை அமைப்பு (IASF)
நடத்தும் கூகுள் மீட் அகிலத்திரட்டு அறப்பாட சாலை எல்லா சனிக்கிழமையும் இரவு 8 மணி முதல் 9 மணி வரை நடைபெறுகிறது
எனவே அப் அறப்பாடசாலையில் கலந்து கொள்ள எல்லா சனிக்கிழமையும் கீழ் கண்ட லிங்கை கிளிக் செய்து இணைந்து பயன் பெறுங்கள் https://meet.google.com/btd-zzjs-uph
இந்த வகுப்பில் திருஏடு வாசிப்பு, பாராயணம், ஆன்மிக கதை, அய்யா பாடல், அய்யாவின் உபதேசங்கள் போன்றவை அன்பர்களால் சிறப்பாக வழங்கப்படுறது.
அன்புக்கொடி சொந்தங்கள் இந்த ஆன்மிக வகுப்பில் கலந்து பயனடைய அன்போடு வேண்டுகிறோம்.
அய்யா உண்டு
அகில விடை
1. கிரேதாயுகம்
2. திருமால்
3. துரியோதனன்
4. சயோக முனி
5. சுருதி முனி
அய்யா உண்டு
எது சிறந்த பக்தி
– மீனா சுகின் அம்மா- 9344813163
ஒருநாள் மகாவிஷ்ணுவுடன் நாரதர் சென்று அந்த செல்வந்தர் பக்திமானாக இருக்கிறார். தினமும் உங்களுக்குப் பூஜை செய்கிறார். அவர் நிம்மதியாக வாழ தாங்கள் ஏதாவது செய்யக்கூடாதா பெருமானே என்றார். அதற்கு விஷ்ணுவும் சம்மதித்து நாரதரை பூலோகம் அனுப்பினார். முதலில் செல்வந்தரிடம் சென்று நான் நாராயணனிடம் இருந்து வருகிறேன் என்று கூறுங்கள். நாராயணர் என்ன செய்கிறார் என்று கேட்டால் ஒரு ஊசியின் காது வழியாக யானையை நுழைத்துக் கொண்டிருக்கிறார் என்று கூறுங்கள் என்று நாராயணர் நாரதர் இடத்தில் கூறி அனுப்பினார். அப்படியே செருப்பு தைக்கும் தொழிலாளியிடமும் சென்று வரக் கூறினார்.
நாரதர் முதலில் செல்வந்தரின் வீட்டுக்குச் சென்றார். அங்கு அவர் பூஜைகளையும் முடித்துவிட்டு வந்து நாரதரிடம் நீங்கள் யார் என்று கேட்க நாரதரும் நாராயணனிடம் இருந்து வருகிறேன் என்று கூறினார். அதற்குச் செல்வந்தர் நாராயணர் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று கேட்டார். அதற்கு நாராயணர் கூறி அனுப்பிய பதிலை நாரதரும் கூறினார். அதற்கு செல்வந்தரும் அது எப்படி சாத்தியமாகும்? இது என்ன நடக்கும் காரியமா? ஊசி காது வழியாக எப்படி யானையை நுழைக்க முடியும் என்று கேட்டார்.
பின்னர் நாரதர் செருப்பு தைக்கும் தொழிலாளியிடம் சென்று இதே உரையாடல் நடைபெற்றது ஆனால் கடைசி பதிலுக்கு அந்த தொழிலாளி இதில் என்ன விந்தை இருக்கிறது ஒரு பெரிய ஆலமரத்தை சின்ன விதையிலேயே அடக்கி வைத்தவர் அதேபோல் உலகத்தையே தன் வாயில் காண்பித்தவர் அவருக்கு என்ன யானையை ஒரு ஊசியில் நுழைப்பது பெரிய விஷயமா என்றார். இவர்கள் இருவருடைய பதில்களையும் நாராயணர் இடத்தில் வந்து கூறினார் நாரதர்.
கடவுள் பக்தி என்பது பூஜை புனஸ்காரம் செய்வதில் மட்டுமில்லை இறைவனின் பாதத்தை பூரண நம்பிக்கையுடன் நீயே சரணம் என்று பற்றுவதே உண்மையான பக்தி. இப்போது தெரிகிறதா ஏழையின் நிம்மதிக்குக் காரணம் என்ன என்று பதிலளித்தார் நாராயணர். காந்தம் இரும்போடு எப்படி ஒட்டிக் கொள்கிறதோ நதியானது மகா சமுத்திரத்துடன் எப்படி கலந்து விடுகிறதோ அதே போல் நமது மனமும் இறைவனுடன் கலந்து விட வேண்டும் கடவுளிடம் தன்னை அறியாமல் போய் நிற்க வேண்டும் காரணம் இருக்கக் கூடாது காரணம் வந்துவிட்டால் அது வியாபாரம் ஆகிவிடும்.
இறைவனிடம் எதுவும் கேட்கக் கூடாது. கேட்டால் அது வியாபாரம் தான். ஒன்றுக்கொன்று கொடுப்பது போல் செல்வத்தைக் கொடு பக்தி செய்கிறேன் என்று இறைவனிடம் பரிமாறிக் கொள்வதனால் நம் பக்தி வெறும் வியாபாரம் ஆகிவிடுகிறது. அப்படி இல்லாமல் எதையும் நினைக்காமல் இறைவன் திருவடிகளில் போய் சேர்வதை நினைத்து நம்மை அறியாமல் ஓடுகிறோம் அல்லவா அதுதான் உண்மையான பக்தி தரும்.
அய்யாஉண்டு
அய்யா அருளிய வாழ்வியல் நெறி முறைகள்
-த. சீதா லெட்சுமி அம்மா 949655691
“மகனே நானுனது மனதுள் குடியிருந்து
சிவனே பொருந்தி செப்புவது முத்தரவே”
இதை தான் அய்யா, மகனே மனதுள் குடியிருந்து சிவனே பொருந்தி செப்புவது முத்தரவே என்கிறார். இறைவனைத் தனதுள் கண்டு கொண்டவர்களுக்குத் தெரியும் இந்த வாக்கியத்தின் உட்பொருள் அய்யா எல்லாவற்றையும் சூட்சமமாகவே கூறியிருக்கிறார். இதை அறிந்தவர்கள் உணர்ந்து கொள்வார். அய்யாவின் உடைய உத்தரவு எப்படியிருக்கும் என்பது பற்றி அய்யா சொல்லுவார், அவரவர் மனதில் ஆனபடி எவரெவரையும் பார்த்திருப்பேன் நான் உன்னிடமிருந்து என்பார்.
நாம் நினைக்கின்ற நினைப்புக்கு ஏற்றவாறுதான் வாழ்க்கை அமையும், நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதற்கு ஏற்றார்போல் உங்களை நான் வாழ வைப்பேன் என்கிறார். எனவே நாம் நல்ல நினைவோடு வாழ வேண்டும், அப்படி நாம் வாழும்போதுதான் இறையருள் நமக்கு கிடைக்கும். இறைவனுடைய அருள் இருந்தாலே நாம் எல்லாவற்றையும் வெற்றி கொண்டவர் ஆகிவிடுவோம். உலகிலுள்ள எல்லா செல்வங்களையும் அனுபவிப்பதற்கு இறைவன் அருள் பாலிப்பார். அய்யாவே கூறியிருக்கிறார், “நல்ல நினைவோருக்கு நாள் எத்தனை ஆனாலும், பொல்லாங்கு வராமல் புவி மீது வாழ்ந்திருப்பார்.”
நல்ல எண்ணம் இருந்தாலே இறைவன் நமக்கு வசமாவார், நம்மால் எப்படி ஒரு துர்நாற்றம் நிறைந்த இடத்தில் இருக்க முடியதோ, அது போன்றுதான் இறைவன் தீய எண்ணங்கள் குடி கொண்ட மனதில் இருக்க மாட்டார். நறுமணம் கமழும் இடத்தில் நம் மனம் லயித்து இருக்கும் அதுபோல நல்ல எண்ணம் கொண்டவர் மனதில் இருப்பார்.
அய்யா சொல்லியிருக்கிறார், “நல்லோர் மனதில் நாரணா என்றிருப்பேன்” இவை எல்லாம் நாம் உணர்ந்து செம்மைப் படுவதற்காக இறைவன் தந்த வழி. எனவே நாம் நல்ல எண்ணத்தோடும் வாழ்ந்து நம்முடைய மனதில் இறைவனை குடி கொள்ளச் செய்து அவர் உத்தரவுபடி வாழ்ந்து தர்மயுகம் வாழ்வு பெறுவோம்.
அய்யா உண்டு
சந்தியா வழிபாடு
சரியான நேரத்தில் பணிவிடை செய்து உகம்பெருக்காவிட்டால் அதன்பிறகு அந்தப் பணிவிடை செய்து அர்த்தமில்லை. துவையல் தவத்தோர் செம்மையாக இப்பணிவிடைகளைச் செய்தனர். மேன்மை அடைந்தனர்.
உச்சிப் படிப்பு குறிப்பிட்ட உச்சி நேரத்தில் படிக்க வேண்டும். 2:30 க்குப் படிப்பது உச்சிப்படிப்பு ஆகாது. காலம் தாழ்த்திச் செய்யப்படும் பணிவிடையால் மக்களுக்குக் கிடைக்கவேண்டிய நலம் கிட்டாது. நோய்க்கு மருந்து வேளையில் உண்பதுவே மருந்தாகும். பணிவிடை நேரம் கடந்துவிட்டால் அடுத்தப் பணிவிடை காலத்திற்கு காத்திருந்து பணிவிடை செய்தல் நன்று இடையே பணிவிடை செய்தல் முறையல்ல.
வெண்சாமரம் வீசுவது பற்றி தெரிந்த பெரியவர்களிடம் கேட்டு வீசவும். வீசுகிற பெயரால் பள்ளியறையை அடிப்பதும் அங்கு இருக்கும் விளக்குகளை அணைப்பதுவும், வெண்சாமரத்தைத் தலைகீழாக வீசுவதும் நடப்பதாகிறது. இதன் மகத்துவம் அறியாமல் செயல் படுகிறார்கள். அய்யாவுக்குச் செய்வனவற்றை திருந்தச் செய்யவும். சங்கு கீழ்நோக்கி முழங்கக் கூடாது. சங்கு ஊதுங்கள் என்ற சொல் பயன்படுத்தக் கூடாது. நாமம் அணியாமல் பதியில் உலாவ கூடாது. உத்திராட்சத்தை பூக்கள் போட்டு மறைக்கக் கூடாது உத்திராட்சம் வெளியே தெரியவேண்டும். பிரம்பு, சுரைகுடுக்கை, மாத்திரைக்கோல் நாமப் பெட்டி ஆகியவற்றை மறைக்கக் கூடாது. ஆபரணங்கள் பூணுதல் பிற்காலத்தில் பள்ளியறை அமைப்பைச் சீர்குலைக்க வாய்ப்புள்ளது.
எத்தனை கோடிக்கு அலங்காரம் செய்தாலும், எத்தனை நிகழ்ச்சிகள் வைத்தாலும் பணிவிடை நேரத்திற்குள் முடிக்கவேண்டும் இல்லையானால் பணிவிடை காலத்திற்குப் பிறகு நிகழ்ச்சிகளைத் தொடரலாம். இதைப் பின்பற்றாவிட்டால் எதிர்காலத்தில் வழிபாட்டு காலம் தடம்புரண்டு போகும். நிகழ்ச்சிகளுக்காக பணிவிடை காலம் தள்ளிப் போகிறதை கவனிக்கிறீர்களா? பணிவிடை, தர்மம் தான் நமக்கு முக்கியம். அந்தி,சந்தி,உச்சி சரியான நேரங்களில் நடைதிறப்பது பதிக்கு மகத்துவம் அளிக்கும் . பணிவிடை நிறைவடைந்த பின் அய்யாவை காத்திருக்க வைப்பது மிக மிக குற்றம் .உடனே சங்கு நாதம் முழங்கி நடைதிறப்பது அவசியம் . நாம் தான் அய்யாவுக்காக காத்திருக்க வேண்டும்.
பணிவிடை செய்யும்போது பணிவிடையாளர் அய்யாசிவசிவ அரஹரா மந்திரத்தை உச்சரித்துக்கொண்டே பணிவிடை செய்யவேண்டும் .பணிவிடை வெற்றிலையை பொறுமையாக தாம்பூலம் தரித்து அன்பாக நேமிக்கவேண்டும். எந்தப் பணிவிடை பொருட்களையும் எடுத்துத் தூக்கிப் போடுவது கூடாது. உடைந்த, அழுகிய கீரல் விழுந்த பணிவிடைப் பொருட்களைச் சோதித்து நீக்குவதை நீக்கி, சரியான பொருட்களைப் பயன்படுத்துவது உச்சிதமானது.
பால் அன்னம், உம்பான் வேகவைக்கும் பொழுது அவ்விடத்தில் வாய் பொத்தி நிற்க வேண்டும். அய்யாவுக்கு நியமிக்கும் பொருட்களில் சுத்தம் மிக முக்கியம். அங்கு நின்று கதை பேசுவது மிக தவறு. பதிகளைப் போல முடிந்த வரை பால் அன்னம் உம்பானுக்கான பொருட்களை இயற்கை முறையில் உருவாக்குதல் மகத்துவமான மருந்தாகும். உம்பான் அன்னத்தை பயபக்தியோடு செய்தல் அவசியம் 5 வகை காய்கறிகளைத் தவிர்த்து ருசிக்காக பல வித பொருட்களை இணைப்பது உம்பான் ஆகாது. பிளாஸ்டிக் பொருட்களை அய்யாவுக்குப் பயன்படுத்த கூடாது. அய்யாவின் ஆலயத்தில் பிளாஸ்டிக் உபயோகத்தைத் தவிர்த்தல் மிக மிக நன்று. முடிந்தவரை இயற்கை முறைகளைப் பின்பற்றுவது சிறப்பு.
உண்மையைப் பேசுவது கடினம் பேசினால் ஏற்ப்பதும் கடினம் ஆனால் தன் வீட்டின் மீது அக்கறை கொண்ட ஒருவன் அங்கு நடக்கும் குற்றங்களைப் பொறுத்துக் கொள்வதில்லை. அவ்வாறே அடியேனும். பள்ளிக்கூடம் ஒழுங்காக இருந்தால் தான் பாடம் படிக்க வருபவர்கள் கற்றுச்செல்வார்கள்.
பள்ளிக்கூடமே தவறிப்போனால்? என்ன செய்வது. சித்தித்து செயல்படுவோம். நம் பணிவிடை செயல்களில் இருக்கும் பொறுமையும் செம்மையும் பொறுத்தே குணம் அமையும். இன்னும் நிறைய இருக்கிறது.
அய்யா நிச்சயித்தபடி
அய்யா உண்டு
சைவமே மேன்மை தரும்
-அலெக்ஸ் ராஜன் அய்யா 8248688566
சைவமானவனிடம் அகப்பேய் சற்குரு பாதமடி!
தானற நின்றவிடம் அகப்பேய் சைவம் கண்டாயே!
ஊனற நின்றவர்க்கே அகப்பேய் ஊனமொன்று இல்லையடி!”
-அகப்பேய் சித்தர்!
சைவம் என யாரையடி கூறுவது? அந்தகரணமான மனம், புத்தி, சித்தம், ஆங்காரத்தின் செயல்பாடுகளை அடக்கி ஆளத்தெரிந்தவரே சைவரடி! இம்முறையாய் சைவம் ஆனவனிடம் அந்தகரண பேயாகிய அகப்பேய் இச்சைவனின் பாதத்தில் கிடக்குமடி!
“தான்” “தான்’ எனும் நானெனும் ஆணவத்துடன் காம, கோப, தாப, சம்சார லௌகீக ஊன அகங்காரம் அற்றவனிடம் அந்தகரண அகப்பேய் அடங்கி நிற்குமடி,
நினைவதுக்குள்ளே நிற்போம் நாம் மாமுனியே”
“மனம் சித்தம் புத்தி ஆங்காரம் நாலும் அடக்கி
மௌனத்தில் இருந்திட்டேன் சிவனே அய்யா”
-அய்யா நாராயண வைகுண்டர்!
ஆடை கொடுத்திடுங்கோ அம்பல ஆச்சாரம் செய்திடுங்கோ.
“தான தர்மம் செய்திடுங்கோ தழைப்பீர்கள் நீங்கள் மக்கா”
மனதில் மாமிச ஆசையை விடுக்காதவரை உணவில் சைவமானேன் என்பதை ஏற்க இயலாது. உலக சொத்தாஸ்த்தி, வஸ்தின் பேரிலான ஆசையை துறக்கும் மட்டும் ஆண்டி எனக்கூற இயலாது! துவையல் தவசு முறையே நாராயணர் கூறிய “எனது தவம்” எனும் சான்றோருக்கு அருளிய தவமுறையாகும். இவ்வகையில் இருப்போரே பண்டாராங்களாவர்! சிந்தையில் பொறாமை, ஆசா பாச, கள்ளம் இருக்கும் வரை சத்தியவான் என ஏற்க இயலாது
அய்யா உண்டு
சாப்பாட்டு ராமன்
– மீனா சுகின் அம்மா- 9344813163
ராமர் வனவாசம் சென்ற போது ராவணன் சீதையை கவர்ந்து சென்றான். அதன்பின் ராமர் சுக்ரீவன், அனுமன் மற்றும் வானர படைகளுடைய உதவியோடு இலங்கையில் ராவணனிடம் போர் நடத்தி ராவணனை வீழ்த்தி சீதையை மீட்டு வந்தார். இது அனைவருக்கும் தெரிந்த கதை.
அப்படி வரும்பொழுது ஒரு முக்கியமான நிகழ்வு நடந்தது. ராமர் வனவாசம் செல்வதற்கு முன் பரத்வாஜர் முனிவரிடம் ஆசி பெற்றுச் சென்றார். இப்போ வனவாசம் முடிந்து ராமர், சீதை, அனுமன், விபீஷணர், மற்றும் வானர படைகள் சேர்ந்து அயோத்தி சென்றார்கள். ஆனால் ராமருக்கு ஒரு ஆசை என்னவென்றால் வெற்றிகரமாக வனவாசம் முடிவு பெற்றதால் பரத்வாஜ முனிவரை சந்திக்க வேண்டும் என்பதே. தன் விருப்பத்தை மற்றவர்களிடம் சொல்ல அனைவரும் சம்மதம் தெரிவித்தனர்.
காட்டு வழியாக நடந்து அனைவரும் முனிவரின் ஆசிரமத்தை அடைந்தனர். ராமரையும் சீதையும் பார்த்து பெரு மகிழ்ச்சி கொண்ட பரத்வாஜ் முனிவர் இன்றுடன் உங்கள் வனவாசம் முடிந்துவிடும் என்பது எனக்கு தெரியும் ஆகையால் உங்களை அயோத்தியில் வந்து சந்திக்க வேண்டும் என்றிருந்தேன் என்று கூறினார். மேலும் நீங்கள் என்னை தேடி வந்தது மிகவும் சந்தோஷம். எனக்காக இந்த ஒரு நாள் இங்கே தங்கி இரவு உணவை முடித்துவிட்டு காலையில் செல்லுங்கள் என கேட்டுக்கொண்டார்.
ராமருக்கு மறுப்பு தெரிவிக்க இயலவில்லை. மேலும் ராமரின் தம்பி பரதன் ராமர் வனவாசம் சென்ற போது அவரை சென்று சந்தித்து ஆட்சி செய்ய அழைத்தார். ராமர், தந்தைக்கு செய்த சத்தியத்தை மீற மறுத்ததால் அவருடைய பாதகைகளை எடுத்துச் சென்று 14 ஆண்டுகள் கழித்து ராமர் வரவில்லை என்றால் ஒரு நாள் கூட பொறுக்காமல் உயிரை மாய்த்து விடுவதாக பரதன் சபதம் செய்திருந்தார். இது ராமருக்கு ஞாபகம் வந்தது. பரத்வாஜரிடம் மறுப்பு தெரிவிக்க இயலவில்லை.
அயோத்திக்கு இன்று செல்லாவிட்டால் பரதன் உயிரை மாய்த்துக் கொள்வான் என யோசித்துக் கொண்டிருக்கும் போது ராமருக்கு ஒரு விடை கிடைத்தது. உடனே அனுமனை அழைத்து வாய்வு புத்திரனே விரைவாக பரதனிடம் சென்று நான் பரத்வாஜ முனிவரின் ஆசிரமத்தில் தங்கி நாளை காலையில் வந்து விடுவதாக கூறு இல்லையென்றால் அவன் உயிரை மாய்த்து விடுவான் என்று கூறினார்.
அனுமன் வாய்வு போல் விரைந்து சென்றார். பரத்வாஜ முனிவர் சொன்னபடி அனைவருக்கும் உணவு தயாரித்து வாழை இலையில் பரிமாறப்பட்டது. ஆனால் அனுமன் சென்று விட்டதால் அவருக்கு எதுவும் தயாரிக்கவில்லை. அப்போது ராமருக்கு வைக்கப்பட்ட இலையில் நடுகோட்டில் ஒரு பக்கம் சாதம் போன்ற உணவுகளையும் எதிர்பக்கத்தில் பழங்களையும் வைக்க கூறினார். யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் ராமர் செய்யும் செயலுக்கு அர்த்தம் இருக்கும் என்று இருந்தார்கள்.
அப்போது அனுமன் பரதனிடம் செய்தி சொல்லிவிட்டு இங்கு வந்தார். பரத்வாஜருக்கு தர்ம சங்கடம் ஆகிவிட்டது. அனுமனுக்கு உணவு இல்லையே அவர் வருவதற்கு தாமதமாகும் என்று எதுவும் தயாரிக்கவில்லையே இனி தயாரித்தாலும் அதிக நேரம் ஆகும் என்று வருந்தினார். அப்போது ராமர் அனுமனை அழைத்து உனக்கு பழங்கள் மிகவும் பிடிக்கும் என்று எனக்கு தெரியும் ஆகையால் தான் என் இலையில் ஒரு பக்கம் பழங்களை வைக்க கூறினேன் என்றார். பரத்வாஜ முனிவருக்கு இப்பொழுதுதான் மனம் நிம்மதி அடைந்தது. இப்படியாக ஒரே இலையில் ராமர் சாப்பாட்டையும் அனுமன் பழங்களையும் உண்டனர். இந்த நிகழ்வின் காரணமாகத்தான் ராமர் சாப்பாட்டை உண்ட காரணத்தினால் சாப்பாட்டு ராமர் என்ற பெயர் வந்தது.
இப்படியாக அன்றிரவு அங்கு தங்கிவிட்டு அனைவரும் அயோத்திக்கு சென்றனர். தன்னுடைய பக்தனுக்காக சாப்பாட்டை மட்டும் உண்டதால் ராமருக்கு அந்த பெயர் வந்தது. இதுதான் காலப்போக்கில் மருவி அதிகமாக சாப்பிடுபவர்களை சாப்பாட்டு ராமன் என கூறினர். இது போல் தமிழில் பல வார்த்தைகள் பொருள் மாறி இருக்கின்றன.
அய்யா உண்டு
அய்யா உண்டு
அகில உலக அய்யாவழி சேவை அமைப்பு வழங்கிய
அய்யாவே தஞ்சமென்று
என்கிற ஒலிநாடாவில் உள்ள பாடல்
இயற்றியவர்: த. சுஜிமோன் அய்யா
பாடியவர்: பா. இளையபெருமாள் அய்யா
அன்பாலே ஆளுகின்ற அகிலத்தின் ஜோதி (2)
அறிந்தவர் மனதிலே அணைந்திடா ஜோதி (2)
நிகரில்லா அற்புதங்கள் கொண்டிடும் ஜோதி
நிமலன் எங்கள் வைகுண்ட ஜோதி (2)
அன்பாலே ஆளுகின்ற அகிலத்தின் ஜோதி
நிறம்தனை நீங்கிவிட்ட நீரினை போல
அறத்தின் உட் பொருளை தெளிய செய்தார்
கணத்தினை தங்கி நிற்கும் பொழுதினை போல (2)
குணத்தினால் குவலையம் ஆண்டிடுவார்
அய்யா ஆண்டிடுவார்
அன்பாலே ஆளுகின்ற அகிலத்தின் ஜோதி
அறிந்தவர் மனதிலே அணைந்திடா ஜோதி (2)
பூவும் பொக்கிஷம் போலும் விலையில்லா
வெண்பிறை போலும்
பாலும் தன்னிறம்
போலும் நிலைகொள்ளும் சத்தியம் போலும் (2)
உருவின்றி அருவமாய்
அருவமும் உருவமாய்
கருவின்றி உயிர் கொண்ட கார்நிற தத்துவ பொருளே (2)
என் உயிராய் என் உறவாய் யாவும் ஆகிய வைகுண்ட பரம்பொருளே
அன்பாலே ஆளுகின்ற அகிலத்தின் ஜோதி
எங்கள் வைகுண்ட ஜோதி
குறிப்பு: இப்பாடல் இசை வடிவில் வேண்டுமென்றால் 009607704901 என்கிற வாட்சப் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.
அய்யா உண்டு