தர்மயுக முரசு ஜூலை 2022

அய்யாவின் அருளால் எந்நாளும் நன்னாளே

அசோக்குமார் அய்யா -009607704901, 8012174032.

தாழ்ந்திருக்க வென்றால் சர்வதுக்கும் தாழணுமே

விட்டுக்கொடுத்தவர்கள் கெட்டுப் போனதாகச் சரித்திரம் இல்லை என்கிற அடிப்படையில் இலக்கை மையமாகக் கொண்டு தன்னடக்கத்தோடு செயல்படும் சனாதன தர்மத்தின் வித்துக்கள் அனைவருக்கும் பணிவான வணக்கம். 

 சான்றோர் பெருமக்களே! இது கலியுகம். இங்கு யாரையும் நாம் கணித்து விட முடியாது. பகவான் அய்யா வைகுண்டர் அழகாக சொல்லுவார் “நல்லவர் கெட்டவர் நாட்டினில் நீ அறிவாயோ” அதாவது இங்கு யாரும் நூறு சதமானம் நல்லவர்களும் இல்லை நூறு சதமானம் கெட்டவர்களும் இல்லை. அப்படி இருக்க எப்படி நாம் ஒன்றுபட்டு செயல்பட என்கிற குழப்பம் நம் பலருக்கு வரலாம். இந்தக் குழப்பத்தில் இருந்து தப்பித்து பயணிக்க வேண்டுமென்றால் இரண்டு விசயத்தில் நாம் கருத்தோடு இருக்க வேண்டும் ஒன்று ஆன்மிக சித்தாந்த ரீதியாகவும் மற்றொன்று விட்டுக்கொடுக்கும் எதார்த்தமான வாழ்வியல் ரீதியாகவும் கையாண்டோமே ஆனால் நிச்சயமாக நமது செயல்பாடு தடுமாற்றம் இல்லாத பயணமாக அமையும். மாறாக, இவ்விரு விசயங்களில் நாம் தடம்புரண்டு விட்டோம் என்றால் அச்செயல்பாடு தடுமாறிப் போகும். 

 சித்தாந்தம்: அதாவது ஆண்டவன் வகுத்துத் தந்த நமது ஆன்மிக கோட்பாடுகளில் இருந்து ஒருபோதும் நாம் விலகிவிடக் கூடாது. யாருக்காகவும் எதற்காகவும் அச் சித்தாந்தத்தில் நாம் நழுவிடக் கூடாது.  ஒருவேளை நாம் அச் சித்தாந்தத்தில் இருந்து விலகிவிட்டோம் என்றால் நாமும் இந்தச் சிற்றின்ப சூழலில் உழன்றுவிடுவோம். எனவே இறைவனின் கொள்கைக் கோட்பாடுகளில் நாம் உறுதித்தன்மையோடு இருந்தோமே ஆனால் நிச்சயமாக இந்த உலகியல் ஆசாபாசத்தில் பற்று வைக்காமல் பேரின்ப வாழ்வாகிய தர்மயுக வாழ்வில் மட்டுமே பற்று வைத்து செயல்படுகின்ற தன்மையைப் பெற்று உலகத்தின் ஒளிவிளக்குகளாக விளங்கி நமது இலக்காகிய பரந்தாமனின் திருவடியைச் சென்றடைவோம். 

 விட்டுக் கொடுக்கும் பண்பு: அதுபோல ஆண்டவன் வகுத்து தந்த கொள்கைக் கோட்பாடுகளில் உறுதிபாடுடைய ஒத்தக் கருத்துடைய அன்பர்களோடு பயணிக்கும் போது அப்பயணம் சிறப்பானதாக அமையும். ஆனாலும், அப்பயணத்தில் கூட சிலசமயங்களில் சில சலசலப்புகள் வரலாம். காரணம் நாம் இருப்பதோ கலியுகம். இங்குக் கலிமாயை எல்லார் மனங்களிலும் குடிபுகுந்திருக்கிறான் என்பதை மறந்துவிடக் கூடாது. எனவே, நமது செயல்பாடுகளில் எப்போதும் விட்டுக் கொடுக்கும் தன்மையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்படி வளர்த்துக் கொண்டோமே ஆனால் நிச்சயமாக நமது பயணம் வெற்றிகரமாக அமையும்.

மேலும், எல்லாச் செயல்பாடுகளிலும் நாம் தான் முன்னே நிற்க வேண்டும் என்கிற எண்ணம் ஒருபோதும் நமக்கு வந்துவிடக் கூடாது. நம்மோடு பயணிக்கும் சக செயல்பாட்டாளர்களை முன்னிறுத்த நாம் ஒரு கருவியாகச் செயல்பட வேண்டும். பிறர் முன்னெடுப்பதில் மனம் மகிழும் தன்மையை ஊருவாக்கி கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட பண்பை வளத்தோம் என்று சொன்னால் நமது செயல்பாடு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளரும் ஒளிரும். 

 மேலும், ஆன்மிக செயல்பாடுகளில் வெற்றி, தோல்வி என்ற ஒன்று கிடையவே கிடையாது. நாம் செயல்பட்டோமா? அய்யா நமக்கு அச்செயல்பாடுகளில் பங்கு பெறும் வாய்ப்பைத் தந்தாரா என்ற எண்ணம் மட்டுமே போதுமானது.  சில செயல்பாடுகளில் பங்கு பெற நம்மால் முடியாமல் போனாலும் செயல்பட வேண்டும் என்கிற ஆர்வமும் அதற்கான முயற்சியும் இருந்தால் போதும், நிச்சயம் ஒரு நாள் பல செயல்பாடுகளில் பங்கு பெறும் சிறப்பை அய்யா நமக்குத் தருவார். மேலும் நம்மால் ஒன்றும் இல்லை எல்லாம் ஏகாபரன் நிச்சயித்தபடி என்ற உண்மையை உணர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். 

மேலும், நமது செயல்பாட்டின் சிறப்பு என்னவென்றால் பிறரின் நல்ல செயல்பாட்டை ஊக்கப் படுத்தி கொண்டே இருக்க வேண்டும். இது பொறாமை எண்ணத்தை வேரோடு அறுக்க உதவும். மேலும் இச் சிறந்த பண்பாடு நமது செயல்பாட்டை மேன்மேலும் வளர உதவும். 

 பொறாமையைப் பொசுக்கி அறியாமையை அகற்றி கல்லாமையை களைந்து விட்டுக்கொடுக்கும் மன தைரியத்தை வளர்த்து சித்தாந்தத்தில் ஒருபோதும் சிதறாமல் ஆன்மிக வாழ்க்கைப் பயணத்தை முன்னெடுப்போம். திருமாலின் திருயடியில் சென்றடைவோம். 

ஒன்றுக்கும் மலைய வேண்டாங்காண் உத்தமரே

என்றைக்கும் நானிருப்பேன் என் மக்கள் தங்களிடம்

அகில கேள்வி

1.சோழ மன்னன் மக்களிடம் இருந்து எத்தனையில் ஒரு பங்கை வரியாக வாங்கினான்? 

2.சுவாமி தோப்பின் முந்தைய பெயர் என்ன? 

3.அகிலத்திரட்டு அம்மானை எழுதப்பட்ட இடத்தின் பெயர் என்ன? 

4.அய்யா வைகுண்டரின் அவதாரம் நிகழ்ந்த ஆண்டு, மாதம், நாள்? 

5.அய்யா யாருக்காக தன்னுடைய அவதாரத்தை கலியுகத்தில் நிகழ்த்தினார்? 

 விடை ……… பக்கம் பார்க்கவும்

உச்சிப்படிப்பு – விளக்கம்                            கா.த.

“…பரலோகம் அளந்த பச்சைமால் நாராயணர் சிவசிவா சிவ மண்டலம்
திருவுக்கும் சடைகுரு சிவசிவா சிவ மண்டலம்
செங்கண் திருகுரு சிவசிவா சிவ மண்டலம்
சன்னாசி குரு சிவசிவா சிவ மண்டலம்
மகாகுரு சிவசிவா சிவ மண்டலம்
அரி சங்காரகுரு சிவசிவா சிவ மண்டலம்…”

 

‘பரலோகம்’ என்பது ஈரேழு பதினான்கு லோகங்களில், மேல் ஏழு லோகத்தில் உச்ச நிலையான தவ முனிவர்கள் வாழும் மலை லோகமாகும்.

‘அளந்த’ என்கிற பதம் இவ்வுலகம் முழுமையையும் படைத்து, காத்து, ரட்சிக்கும் இறைவனின் ஓயாத இயக்கத்தையே குறிக்கும். உச்ச நிலையில் உள்ள பரலோகத்தையே அளந்தவன் என்பதால், அதற்குக் கீழ் நிலையில் உள்ள அனைத்தையும் அளந்தவன் என்ற பொருளை இயல்பாகவே உணர முடியும். அதனாலேயே ‘பரலோகம் அளந்த’ என்ற பதம் இங்கு எடுத்தாளப்படுகிறது.
“…மண்டலம் அளந்த கை கொண்டு எழுதும்…”
“…வையம் அளந்ததோர் நாரணர்க்கு…”
எனும் அகிலத்திரட்டு வாசகத்தையும் இங்கு ஒப்பு நோக்குவோம்.
‘பச்சைமால்’ என்பது கருமையான பச்சை நிறத்தை உடைய நாராயணர் என்பதாகும்.
“…பச்சை நிறமும் பவளவாய்க் கனியிதழும் நச்சரவில் பள்ளிகொண்ட நல்ல சொருபம் போலே…” எனும் அகில வாசகத்திலிருந்து பொருள் கொள்வோம்.
‘திரு’ என்கிற பதம் ‘மதிப்பளித்தல்’, ‘அழகு’, ‘மங்கலம்’, ‘அம்பிகை’ எனப் பொருள் இருந்தாலும் ‘அம்பிகை’ எனும் பொருளே இங்கு பொருந்தி வருகிறது.

 அம்பிகை எனும் போது, இறைவனின் திருவருள் சக்தியைக் குறிக்கும். நாராயணரின் திருவருள் சக்தியான லட்சுமாதேவி, சிவபெருமானின் இடப்பாகமான பார்வதிதேவி என இருவரில் யாரைக் குறிப்பிட்டாலும் சரிதான்.

“…என்று திருவும் யீதுரைக்க மாயவரும் நன்று நன்றென்று நாராயணருரைப்பார்.”  என்ற அகில வாசகத்தின் மூலம் லட்சுமாதேவியாகவும்,

“…அருகில் சிவனார் அகமதிலே வீற்றிருக்கும் திருவுக்கு நன்றாய் தெரிவித்தார் அம்மானை…”   எனும் அகில வாசகத்தின் மூலம் பார்வதிதேவியாகவும் கொள்ளலாம்.

 ‘சடை’ பொதுவாக ஜாடமுடி என்னும் பின்னி முடியப்படும் கூந்தல் முடியையே குறிக்கும். இங்கு தேவர்கள்-மனிதர்கள் அனைத்து சீவ கோடிகளின் சிக்கலான பாவ புண்ணிய கணக்குகளைத் தானே அடக்கி ஆள்கிறான், என்பதை உணர்த்தவே சடைமுடி அணிந்தவனாகக் காட்டப்படுகிறான்.

 “…ஆறு செஞ்சடை சூடிய அய்யனார் அமர்ந்து வாழும் கயிலை…” எனும் அகில வாசகத்தை இங்கு ஒப்பு நோக்குவோம்

 “…தவமுனி பேயனைப் போல் சடையும் முடியுமாகத்

தலை விரித்து இருந்தேன் அய்யோ சிவனே அய்யா…” எனும் சாட்டு நீட்டோலை வாசகத்தின் மூலம், மனுநிறம் காட்டி தெட்சணம் வந்துதித்த நம் அய்யா வைகுண்டம் எடுத்தணிந்த வேசமே, சடையணிந்த பண்டார வடிவே என்பதை நாம் உணரலாம்.

‘செங்கண்’ எனும் பதம், செந்தாமரையை ஒத்த கண்களை உடைய சாட்சாத் நாராயணனையே குறிக்கும். இவ்விடத்தில் ‘திரு’ என்பது, அம்பிகையைக் குறிக்காது. ‘அழகு’, ‘மங்கலம்’ எனும் பொருளே சிறப்பாக பொருந்தி வரும். உலக உயிர்கள் அனைத்துக்கும் அழகு (அ) மங்கலம் என்பது, தலைவனாகிய இறைவனை அறிந்து கொள்ளும் ஞானமே. அத்தகைய ஞானத்தை உபதேசிக்கும் சொந்தாமரையை ஒத்த நாராயணர் என்பதே ‘செங்கண் திரு குரு’ என்பதன் விளக்கம்.

 “…எங்களுக்கு அங்கே இருந்தால் ஆகாதெனவே

செங்கண் மால் ஆயனையும் தேடியே போறோமென்றார்…” எனும் அகில வாசகத்தையும் இங்கு ஒப்பு நோக்குவோம்.

‘சன்னாசி’ என்றால் எந்த வித விருப்பு வெறுப்பு இல்லாமல், இன்ப துன்பத்தை சமமாகக் கருதி, பிச்சை எடுத்து உண்டு, தனக்காக எதையும் சேமித்து வைக்காமல், இறை நாமத்தைச் சொல்லி துறவு நிலையில் வாழ்பவனே ஆகும்.

 அதுபோல, இன்னான் – இனியான் எனப் பாராமல், அவரவர் நல்வினை – தீவினைக்கு ஏற்ப பிறவி வகுத்து, தீவினைகளில் இருந்து காத்து, நல்வினைகளைப் பிச்சையாக (பிச்சாடன மூர்த்தியாக) ஏற்று நல்பேறு அருளும் ஸ்ரீபண்டாரமாக எழுந்தருளிய வைகுண்ட பெம்மானை சிறப்பித்துச் சொல்வதாகும்.

 ஞானாசிரியனாக இருந்து மக்களுக்கு ஞானத்தைப் போதித்து, அதனால் அவர்கள் செய்த புண்ணியத்தை பிச்சையாக ஏற்று, தர்மயுக வாழ்வருளும் நாராயணன் என்பதே ‘சன்னாசி குரு’ என்பதன் விளக்கமாகும்.

 ‘மகாகுரு’ என்பதற்கு உயர்ந்த நிலையிலுள்ள ஞானாசிரியன் என்பதே பொருளாகும்.

 “…வல்லாதான் அல்லோ வைகுண்ட மாபொருளும்

அவர் நாமம் கேட்டால் யார் அல்லவென்று சொல்வது காண்

சிவபரன் முதலாய் சிந்தை பதறணுமே…” எனும் அகில வாசகத்தை ஒப்பு நோக்குங்கால் வைகுண்டரையே         ‘மகாகுரு’ என்கிற பதம் குறிப்பதை உணரலாம். அதுபோல், நம் மனதில் மண்டி கிடக்கும் ‘அறியாமை’ கலிஇருளை முழுமையான அழிப்பதற்கான ஞானத்தை நல்கும் இறைவனையே ‘சங்காரகுரு’ எனும் பதம் சுட்டுகிறது.

 பொருள்: கருமையான பச்சை நிறத்தை மேனியாகக் கொண்ட நாராயணரே, பரலோகம் வரையிலான அனைத்தையும் காத்து ரட்சிக்கின்றார். அவரே பிரபஞ்சம் முழுதும் நிறைந்திருக்கிறார் என உணர்ந்து சிவ-சக்தியான உம்மையே துதிக்கின்றோம்.

 சடை முடியை தரிக்கும், பார்வதி தேவியின் சிவபொருளே, ஞானாசிரியனான அய்யா வைகுண்டர். அவரே பிரபஞ்சம் முழுதும் நிறைந்திருக்கிறார் என உணர்ந்து, சிவ-சக்தியான உம்மையே துதிக்கின்றோம்.

 செந்தாமரையை ஒத்த கண்களை உடைய நாராயணரே, உலக உயிர்கள் அனைத்தும் தன்னை உணர்ந்து தலைவனை அறியும் ஞானத்தைப் புகட்டும் பொருட்டு, அய்யா வைகுண்டராக அவதரித்தார். அவரே பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கும் சிவபொருள் என உணர்ந்து, சிவ-சக்தியான உம்மையே துதிக்கின்றோம்.

 ஞானாசிரியனாக இருந்து, மக்களுக்கு ஞானத்தைப் போதித்து, அதனால் அவர்கள் செய்த புண்ணியத்தை பிச்சையாக ஏற்று, தர்மயுக வாழ்வருளும் அய்யா வைகுண்டரே, சிவப்பொருளாய் பிரபஞ்சம் முழுதும் நிறைந்திருக்கிறார் என உணர்ந்து சிவ-சக்தியான உம்மையே துதிக்கின்றோம்.

 யாருக்கும் அடங்காத வல்லாத்தான் அய்யா வைகுண்டரே பிரபஞ்சம் முழுதும் நிறைந்திலங்கும் சிவபொருள். அவரே உயர்வான ஞானாசிரியன் என உணர்ந்து சிவ-சக்தியான உம்மையே துதிக்கின்றோம்.

 அனைத்து உயிர்களுக்கும் அமுதளித்து காக்கும் நாராயணனே, நம் மனதில் மண்டிக் கிடக்கும் கலிமாய இருளை அழிக்கும் ஞானத்தைப் போதிக்கும் சங்காரன். அவரே சிவபொருளாய் பிரபஞ்சம் முழுதும் நிறைந்திருக்கிறார் என உணர்ந்து சிவ-சக்தியான உம்மையே துதிக்கின்றோம்.

 அய்யா உண்டு

[தொடரும்]

அகிலதிரட்டு அம்மானை மூலமும்,உரையும்         

க.ரீகன் அய்யா- 96890418976

“பொன்னம் பலநாதர் பொருந்திருக்கு மண்டபமும்
கின்னரர்கள் வேதம் கிளர்த்துகின்ற மண்டபமும்
வேதப் புரோகி விளங்குகின்ற மண்டபமும்
சீத உமையாள் சிறந்திலங்கு மண்டபமும்”

 

கயிலையினுடைய வளமைகளை அய்யா மேலும் அழகாக சொல்லி வருகின்றார். பொன்னம்பல நாதர் என்று சொல்லக்கூடிய சிவபெருமான் இருக்க கூடிய கயிலையின் மண்டபச் சிறப்பும், கின்னரர்கள் என்று சொல்லக்கூடிய வேதத்தை இசையாக ஒலிக்க கூடியவர்கள் இருக்ககூடிய மண்டபச் சிறப்பும், வேதங்களை சொல்லக்கூடிய புரோகிதர்கள் சிறப்பாக இருக்க கூடிய மண்டபச் சிறப்பும், அம்மை உமையவள் சிவபெருமானோடு சிறந்து விளங்கி இருக்க கூடிய மண்டபச் சிறப்பையும் அய்யா சொல்லுகின்றார்.

“நீதத் திருமால் நிறைந்திலங்கு மண்டபமும்
சீதை மகிழ்ந்து சிறந்திலங்கும் மண்டபமும்
ஆதவனும் சந்திரனும் அவதரிக்கு மண்டபமும்
வேதாவு ருத்திரனும் வீற்றிருக்கு மண்டபமும்”

நீதங்களை நாட்டிலே நடத்தி வைக்க கூடிய திருமால் நிறைந்து தன் அருட் சொரூபத்தை காட்டக்கூடிய மண்டபச் சிறப்பும், அம்மை லெட்சுமி நாராயணரோடு சிறப்பாக வீற்றிருக்ககூடிய மண்டபச் சிறப்பும், சந்திர சூரியர்கள் தங்களுடைய தோற்றத்திற்கு மூலமாக இருக்ககூடிய மண்டபத்தின் சிறப்பும், பிரம்மாவும் ருத்திரரும் சிறப்போடு வீற்றிருக்ககூடிய மண்டபத்தின் சிறப்பையும் அய்யா கயிலை அழகோடு மேலும் சொல்லி வருகின்றார்.

“ஆரு மறிந்து அளவிடக் கூடாத
பாரு படைத்த பரமே சுரனாரை
விசுவாச மேலோர் விமலனடி வணங்கி
வசுவாசு தேவன் வந்து மிக வணங்கி”

உலகிலுள்ள யாரும் அறிந்து இதுதான் அளவீடு என்று அளவிட முடியாத அனைத்தையும் கடந்தவர் சிவபெருமான். முன்பே நாம் சிவபெருமானின் அடிமுடி தேடிய வரலாற்றை பார்த்திருந்தோம். சிவபெருமானை ஆதியும் அந்தமும் அளவிட முடியாமல் மேலும் கீழும் சென்று பார்த்தும் அவர் அளவை பிரம்மாவாலோ, திருமாலின் மூலமாகவோ அளவீடு செய்ய முடியவில்லை. அப்படி சிறப்பு பொருந்தியவர் சிவபெருமான். மேலும் அவர் இந்த உலகை ஒரு வார்த்தையால் படைத்தவர். இப்படி எல்லோருக்கும் பெரியவரான, எல்லோரையும் விட மூத்தவரான சிவபெருமானை அனைத்து தேவசங்கத்தாரும் கயிலையில் வணங்கி மகிழுகிறார்கள்.

“மறைவேத சாஸ்திரங்கள் மலரோ னடிவணங்க
இறவாத தேவர் இறைஞ்சி மிக வணங்க
எமதர்மராச னெப்போதும் வந்துநிற்க
பூமகளும் வேதப் புரோகிதர் வந்து தெண்டனிட”

காமதேவன் முதற்கொண்டு உயிர்களின் நல்வினை, தீவினை கணக்குகளை பார்த்துக் கொண்டு இருக்ககூடிய முனிவர்கள்வரை நாமநெடியோன் என்று சொல்லக்கூடிய சிவபெருமானை, அதாவது உலகில் இறைவன் தன் திருவிளையாடலால் பலபல பெயர்களில் அழைக்கபட்டாலும், அவை அத்தனை பெயரும் சிவம் என்று சொல்லக்கூடிய ஒன்றில் அடங்கும். ஆனால் அவர் திருவிளையாடலோ நெடியது. அப்படிப்பட்ட சிவபெருமானை நாள்தோறும் அனைவோரும் போற்றி நிற்க, அவர் வீற்றிருக்ககூடிய திருக்கயிலையின் சிறப்பை எடுத்துரைத்து முடிக்க இயலாது.

“ஆறு செஞ்சடை சூடிய வய்யனார்
அமர்ந்து வாழுங் கயிலை வளமதைக்
கூறக் கூறக் குறைவில்லைக் காணுமே
கொன்றை சூடும் அண்டர் திருப்பதம்
வாறு வாறு வகுக்க முடிந்திடா
மகிழுங் குண்ட வளஞ் சொல்லி யப்புறம்
வேறு வேறு விளம்பவே கேழுங்கோ
மெய்யுள் ளோராகிய வேத அன்பரே”

 

சிவபெருமான் கங்கையை தன் சடைமுடியில் வைத்திருக்க கூடியவர். பகீரத அரசன் முயற்சியால் சிவபெருமான் சடையிலிருந்து கங்கை பூமிக்கு வந்தது. அப்படிபட்ட கங்கையை தன் சடைமுடியில் வைத்திருக்ககூடிய சிவபெருமான் இருக்ககூடிய கைலையின் வளமையை கூறக்கூற குறையாமல் இருக்கும். எந்த ஒரு பொருளும் எடுக்க எடுக்க குறைந்துவிடும். ஆனால் கயிலையில் வளமையானது எப்போதும் குறைவில்லாமல் பேசும்படி இருக்கும்.

  “அதுபோலவே சிவபெருமான் ஓம்கார வடிவத்தையும், பொன்னிறத்தையும் உடைய கொன்றை பூவை சூடியிருக்க கூடியவர். அப்படிப்பட்ட அவரின், அவர் வீற்றிருக்க கூடிய கயிலையின் வளமையை சொல்லி முடிக்க இயலாது. அவ்வளவு சிறப்பு பொருந்தியது. இத்தனை வளங்களையும் சொல்லி இனி வைகுண்ட லோகத்தினை பற்றியும், அதன் சிறப்புகளையும் அய்யா வாசகத்தில் சொல்லி வருகின்றார்.

“கயிலை வளமை கட்டுரைக்க கூடாது
அகிலம் வளமை அருளுகிறே னம்மானை
தேவாதி தேவர் திருக்கூட்ட மாயிருக்க
மூவாதி மூவர் மிக்கவொரு மிக்கவொரு”

இப்படியாக கயிலையின் வளமையை சொல்லில் அடக்கியோ, எழுத்தால் விபரித்தோ முழுமையாக விபரிக்க இயலாது. அவ்வளவு சிறப்பு பொருந்தியது கயிலை. இப்படி கயிலையின் வளமையை சொல்லி அதன்பிறகு அய்யா வைகுண்ட லோகத்தின் சிறப்புகளை சொல்லி வருகின்றார். தேவாதி தேவர்களெல்லாம் ஒருதிரு கூட்டமாக அமர்ந்து அய்யா நாராயணரையும், அம்மை லெட்சுமியையும் அப்படியே போற்றி பணிந்து நிற்கின்றார்கள்.

“சிங்காசனத்தில் சிறந்திருக்கும் வேளையிலே
மங்காத தேவி மாதுதிரு லெட்சுமியாள்
ஈரேழுலகும் யிரட்சித்த வுத்தமியாள்
பாரேழும் படைத்த பரமதிரு லட்சுமியாள்
நன்றா யெழுந்திருந்து நாராயணர் பதத்தை
தெண்டனிட்டு லட்சுமியும் செப்புவா ளம்மானை”

இப்படி தேவர்களும், தேவசங்கங்களும் மகிழ்வோடு அமர்ந்திருக்க கூடிய நேரத்தில் அம்மை லெட்சுமி அய்யா நாராயணரிடம் ஒரு கேள்வியை கேட்கின்றாள். அம்மையை பற்றி அகிலத்தில் சொல்லும்போது மங்காத தேவி என்று வருணித்து சொல்லுகின்றார். அதாவது எப்போதும் குன்றாத புகழுடனும், சிறப்புடனும் போற்றி புகழக்கூடியவள் அம்மை. அப்படிப்பட்ட அம்மை அய்யாவிடம் தனக்கு ஏற்பட்ட ஒரு சந்தேகத்தை கேட்க, அந்த சந்தேகத்தை தீர்க்கும் பொருட்டு அய்யா அம்மைக்கு எடுத்துரைத்த தேவ ரகசியத்தை அய்யா அருள்புரிந்து இந்த உலக மக்களும் அறிந்து பயன்பெற அகிலத்திரட்டு அம்மானையாக அய்யா நமக்கு தந்துள்ளார். அதையே நாம் இப்போது படித்து அறிந்து அதன்படி நடந்து கிடைத்தற்கு அரிய பேறான அய்யாவின் திருவடிகளை பற்றி கொண்டிருக்கின்றோம்.

தொடரும்…. 

சிவகாண்ட அதிகார பத்திரம்

மாடசாமி அய்யா – 8973349046

சூத்திரம்:
ஆயர் பாடி ஊர்தனிலே ஆயருட பட்டணத்தில்
ஒருபதிநாயிரத்து உற்றபெண்கள் தங்கள் முன்னே
மாப்பிள்ளையாய் நானிருந்த மாயசித்தை சொல்மகனே

 

பொருள்: ஆயர்பாடியிலே பதினாறாயிறம் பெண்களுக்குப் மாப்பிள்ளையாய் நானிருந்தேன். அந்தப் பக்தியின் இரகசியத்தை இந்த உலகுக்குச் சொல் மகனே

விளக்கம்: பகவானின் பெருமைகள் மேற்கண்ட பல சூத்திரங்கள் வாயிலாக விளக்கப்பட்டு வருகிறது. பகவான் எங்கும் இருந்து அவதாரம் எடுப்பதையும், பகவான் நமது ஆன்மாவுக்கு ஆன்மாவாக இருப்பதையும் விளக்கிய பகவான், இனி அவரை அடையும் வழியையும் விளக்குகிறார்.  ஆயர்பாடியிலே கண்ணனாக பகவான் அவதாரம் கொண்ட பொழுது பதினாறாயிறம் பெண்களை மணந்தார். அவர்கள் அனைவரும் முற்பிறப்பில் தாருகா வனத்து இருடிகளாம் (ரிஷிகள்) இவர்கள் பகவான் மீது கொண்ட பக்தியினாலும் தவத்தாலும் பெண்களாய் பிறவி பெற்று, கண்ணனை மணந்தனர். பகவான் இவர்கள் ஒவ்வொருவர் இல்லத்திலும் ஒரேநேரத்தில் தனித்தனியாகக் கூடி அப்பெண்களை மகிழச் செய்தார். அதாவது உண்மை பக்தி, உள்ளன்போடு ஆண்டவனைக் கேட்டால் அவர் தன்னையும் கொடுக்கிறார். மேலும், இறைவனை அடையும் வழியை அடுத்தச் சூத்திரத்தில் தெளிவு படுத்துகிறார் அய்யா.

சூத்திரம்:எண்ணடங்கா பெண்களுக்கு இருக்கிறேன் மாப்பிளையாய்

பொருள்: எண்ணடங்காத சீவ ஆத்மாக்களுக்கு நானே பரமாத்மாவாக இருக்கிறேன்.

விளக்கம்: இவ்வுலகில் தோன்றிய அத்துனை சீவன்களும் பெண்கள் என்று வேதம் கூறுகிறது. அந்தப் பெண்கள் விரும்பி அடையும் மாப்பிள்ளையாய் பரமபுருஷனான பகவானே இருக்கிறார். இந்த சீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றிணைதலே முக்தி ஆகும். பிறப்பெடுத்த சீவன்களின் உன்னத குறிக்கோள் (ultimate aim) பகவானை அடைதலே. எனவே, பகவான் எண்ணடங்கா பெண்களுக்கு மாப்பிள்ளையாய் இருக்கிறேன் என்கிறார். இதை அகிலத்தில் ” கேலிமிக வுரையாதுங்கோ இன்னுமிக கெணிமயவார் அனேகமுண்டு மணங்கள் செய்ய” என்று குறிப்பிடுவார். அதாவது சீவன் பரமனை நினைத்துப் பெண் தன்மை அடைந்தால் முக்தி அடையலாம் என்பது கருத்து.

சூத்திரம்:
ஐந்து தலை நாகத்தின் மேல் பள்ளி கொள்வதறியலையா
பத்தவதாரம் வந்த பாதைகளைச் சொல்மகனே

பொருள்: ஆதி சேடனாகிய பாம்பின் மேல் பாற்கடலில் நான் பள்ளிக் கொண்டிருப்பதை அறியலையோ. (இந்த பள்ளிக்கொண்ட வடிவமே ஷுரோதகஷாயி விஷ்ணு என்று அழைக்கப்படுகிறது, இந்த வடிவில் இருந்தே அவதாரம் வெளிப்படுகிறது) என்னுடைய பத்து அவதாரமும் அந்த மூலமாகிய ஷூரோதகஷாயி விஷ்ணுவிடமிருந்து வந்ததை சொல் மகனே.

விளக்கம்: இதுவரை அவதார லீலைகளை விளக்கிய அய்யா இனி அவதார சூட்சுமத்தை விளக்குகிறார். பகவான் பாற்கடலில் இருந்தே அவதார மூர்த்தியாக வெளிப்படுகிறார் என்கிறது புராண இதிகாசங்கள். பகவான் அவதாரமாக பூமிக்கு எழுந்தருளும் போதும் பாற்கடலிலும் அதே சமயத்தில் வீற்றிருக்கிறார். அதாவது, பகவான் பூமிக்கு அவதாரமாகி வந்ததும் பாற்கடலோ வைகுண்டமோ வெறிச்சோடிப் போவதில்லை பகவான் அங்கும் நித்திய வடிவாய் இருக்கிறார் அவர் இல்லாமல் இருந்ததில்லை. உதாரணமாக பகவான் இராமனாகவும் கண்ணனாகவும் திருவிளையாடல் செய்யும் போது பகவான் வைகுண்டத்திலும், பாற்கடலில் இருந்தும் அந்த திரு விளையாட்டைக் கண்டதாக புராணங்கள் கூறுகின்றன. அதாவது பகவான் எப்பொழுதும் பாற்கடலிலும் வைகுண்டத்திலும் அனைவருள்ளும் இருக்கிறார்.

 சிவகாண்ட அதிகாரப் பத்திரம் தொடரும்..

 தர்மயுக முரசு வாசகர்களுக்கு அன்பான வேண்டுகோள்

நமது தர்மயுக முரசில் கேள்வி பதில் என்கிற பகுதியில் கேள்வி கேட்க நினைப்பவர்கள் கீழ் கண்ட விலாசத்திற்கு கடிதம் மூலமாக கேட்கலாம் அல்லது கீழ் கண்ட வாட்சப் எண்ணிற்கு டைப் செய்தும் அனுப்பலாம். அதன் விடைகளை உங்கள் கேள்வியோடும் உங்கள் பெயரோடும் நமது தர்மயுக முரசில் பதிவாகும்

 விலாசம்:அகில உலக அய்யாவழி சேவை அமைப்பு

அய்யா வைகுண்டர் வளர்பதி, கைலாசக் கோனார் காம்பவுண்ட்,

வடக்கு மெயின் ரோடு, வள்ளியூர் 627117, திருநெல்வேலி மாவட்டம்

வாட்சப் எண்: 8903201008

 எண்ணமும் மனமும்

த. சீதா லெட்சுமி அம்மா

மனிதனுடைய வாழ்க்கையைக் கட்டமைப்பது எண்ணங்களே! ஆம். ஒவ்வொரு மனிதனும் தான் எவ்வாறு தன்னுடைய வாழ்க்கையைக் கட்டமைக்கிறான் என்பது அவனுடைய எண்ணத்தைப் பொறுத்துத்தான் அமைகிறது. மனிதன் எப்படிப்பட்ட எண்ணத்தை எண்ணுகிறான் என்பதை வைத்தே வாழ்வில் வெற்றி, தோல்வியானது நிர்ணயிக்கப்படுகிறது. நல்ல எண்ணங்களைச் சிந்திப்பவன் வாழ்வில் வெற்றி பெறுகிறான். தீய எண்ணங்களைச் சிந்திப்பவன் வாழ்வில் தோல்வியைச் சந்திக்கின்றான்.

ஆனால் வெற்றி பெற்றவுடன் எல்லாம் தான், தான் என்றும், தோல்வியுற்றவுடன் அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இல்லாமல் பிறர் மீது பழிக் கூறுவதும் அதை தொடர்ந்தே காழ்ப்புணர்ச்சி, பழிவாங்கும் உணர்வு, பொறாமை போன்ற பல தீய குணங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வாழ்க்கையில் வந்து கொண்டே இருக்கின்றது. இதை தான் அகிலம் கலிமாய எண்ணங்கள் என்று கூறுகின்றது. இந்தக் கலிமாய எண்ணங்களிலிருந்து விடுபட, அகிலத்திரட்டு அம்மானை நமக்கு என்ன வாழ்வியலைப் போதித்து இருக்கின்றது என்பதை நாம் இங்கே பார்ப்போம்.

“நல்லார்க்குமோர் நினைவு நலமாகும் என்று சொல்லி
எல்லோருக்கும் விளம்பி இரு நீ என் மகனே”

எண்ணம் போல் வாழ்க்கை என்பது சான்றோர் வாக்கு. நமது மனதில் உண்டாகும் எண்ணங்களே நமது வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன என்பதை நம் முன்னோர்கள் நமக்குத் தெளிவாக உணர்த்திச் சென்றனர். நல்ல எண்ணங்கள் என்று கூறும்போது பெரும்பாலும் செயற்கையாக, நல்ல விஷயங்களை நினைத்துப் பார்க்கச் சொல்வார்கள். ஒன்றை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். எண்ணம் வேறு, சிந்தனை வேறு.

நாமாக ஒரு விஷயத்தை நினைத்துப் பார்ப்பது சிந்தனையே ஒழிய, எண்ணம் அல்ல. எண்ணங்கள் என்பவை நம் மனதில் ஏற்கனவே பதிந்திருக்கும் பதிவுகளினால் சுயமாக உருவாகுபவை. எண்ணங்களை யாராலும் உருவாக்க முடியாது. நல்ல எண்ணங்கள் உருவாக வேண்டுமென்றால் மனதினில் நல்ல பதிவுகளைப் பதிய வேண்டும்.

அதாவது நமது ஐம்பொறிகளால் பார்ப்பது, கேட்பது, நுகர்வது, சுவைப்பது, மற்றும் உணர்வின், மூலமாகவும் நமது மனப் பதிவுகள் உருவாகின்றன. இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் நல்ல விஷயங்களை விட, தீய விஷயங்களே அனைவரையும் எளிதில் சென்றடைகின்றன. இந்தத் தீமைக் களையப்பட நாம் நல்லோரோடு உறவு கொள்ள வேண்டும்

இதற்கு நாம் கடைப்பிடிக்க வேண்டியது நல்லவர்களுடைய தொடர்பையே. இதையே,

நல்லாரைக் காண்பதுவும் நன்றே;
நலம்மிக்க நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே;
நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே;
அவரோடு இணங்கி இருப்பதுவும் நன்று. என்று நமது முன்னோர் எடுத்துரைத்தனர்.

நல்ல மனிதர்களுடனானத் தொடர்பு மிகவும் பயனானது. நாம் நல்லவர்களோடு இருக்கின்றபோது நம்முடைய மனமானது எப்போதும் நல்லனவற்றையே சிந்திக்கும். தீய மனிதர்களுடன் எந்த வகையானத் தொடர்பு வைத்திருந்தாலும் அது நமக்குக் கெடுதலையே செய்யும் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

முடியாது, நடக்காது, கிடைக்காது, போன்றவற்றை எதிர்மறை வார்த்தைகள் என்று கூறுவார்கள். ஆனால், உண்மையில் நமது மனநிலையை மாற்றக்கூடிய அனைத்துமே எதிர்மறை வார்த்தைகள்தான். நமது மனதின் பதிவுகளைப் பாதிக்கக்கூடிய அல்லது தவறானப் பதிவுகளை உண்டாக்கக்கூடிய அனைத்துமே தீய விஷயங்கள் தான்.

நம் எண்ணங்கள் எல்லாம் வெளிப்பாடாக ஆகின்றன. நாம் இப்பொழுது இருக்கும் நிலைக்கு நம் எண்ணங்களே காரணம். நாம் நம் ஆழ்மனதில் எப்பொழுதும் எதையாவது சிந்தித்துக்கொண்டே இருக்கிறோம்.  ஆனால், நாம் நமக்கு என்ன வேண்டும் என்பதை விட நமக்கு என்ன வேண்டாம் என்பதைப் பற்றித்தான் அதிகம் சிந்திக்கிறோம்.
ஆனால், இந்த பிரபஞ்சம், நாம் என்ன எண்ணுகிறோமோ, அதை நம்மிடம் தவறாமல் கொண்டு வந்து சேர்க்கிறது என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

நாம் பயப்படுபவற்றைப்பற்றி, நாம் கவலைப்படுபவற்றைப்பற்றி, நமக்குத் தேவை இல்லாததைப்பற்றி எண்ணிக்கொண்டிருக்கிறோம்? அல்லது நம் வாழ்வில் நடந்த மகிழ்ச்சி தரும் நிகழ்வுகளைப்பற்றி எண்ணிக்கொண்டிருக்கிறோமா? அல்லது நாம் எதைப்பற்றி அதிக நேரம் எண்ணிக்கொண்டிருக்கிறோமா? அதனால்தான் நாம் ஈர்க்கப்படுகிறோம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நமது மனத்தின் முதன்மையான நிலையே நாம் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை.  இந்த நிலையே நம்முடைய எதிர்காலத்தை உருவாக்குகிறது. கடந்த காலத்தில் வாழ்வது எந்தவிதப் பயனும் அளிக்கப்போவதில்லை. அது நம்மில் மேலும் மேலும் எதிர்மறை எண்ணங்களைத்தான் தோற்றுவிக்கும். நம் எதிர்காலமும் அதுபோலவே அமையும்.

ஆகவே, ஒரு மகிழ்வான எதிர்காலம் அமைய, நம்முடைய இன்றைய நிலை மிகவும் முக்கியமானதாக ஆகிறது. இன்று நம் மனதில் முதன்மையாக நேர்மறை எண்ணங்களுடன் ஒரு மகிழ்வான மனநிலையில் வாழ்ந்தால், அதே போன்ற ஒரு எதிர்காலத்தை உருவாக்குகிறோம். இதைக்கொண்டு நம் வாழ்வில் எதை வேண்டுமானாலும் பெறலாம்;

  • மகிழ்ச்சி
  • செல்வம்
  •  ஆரோக்கியம்
  • அன்பு
  •  உறவுகள்

நாம் ஒரு எல்லையற்ற ஆற்றல் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நம் உடல், மனம், உணர்வு எல்லாமே எல்லையற்ற ஆற்றல் கொண்ட பெரும் சக்தி. அதுபோலவே, இந்தப் பிரபஞ்சத்தில் எல்லாமே ஆற்றல் கொண்ட பெரும்சக்திதான் என்பதை நாம் புரிந்து கொண்டால், நம் வாழ்வில் எதை வேண்டுமானாலும் இந்த ப்ரபஞ்சத்திடம் கேட்டுப்பெறலாம். நம் மனம் நம் வசமாகிவிடும். நாம் சொன்னதைக் கேட்கும்.

நம்மில் பல பேர் இரு வித மனநிலையில் வாழ்கிறோம். சில நேரங்களில் நிறைவாகவும் சில நேரங்களில் குறைவாகவும் உணர்கிறோம். இதற்குக் காரணம் நமது எண்ணமே. நம் மனதை எப்படிக் கட்டுக்குள் வைத்திருந்து நம் விரும்பிய வாழ்வை அமைத்துக்கொள்ளப் போகிறோம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் அப்போது தீமைகள் அழிக்கப்பட்டு நம் வாழ்வும் சிறக்கும் இதையே அய்யா, “நல்லார்க்குமோர் நினைவு நலமாகும் என்று சொல்லி எல்லோருக்கும் விளம்பி இரு நீ என் மகனே “
என்று கூறியிருப்பதிலிருந்து தெளிவாக உணர முடிகிறது. நம் மனதைக் கட்டுக்குள் கொண்டு வந்து நாம் விரும்பும் எல்லாவற்றையும் நம் வாழ்வில் பெறும் நேரம் வந்துவிட்டது! ஆகவே நம் எண்ணத்தைச் செம்மைப்படுத்தி, அய்யா சொன்ன நெறிப்படி நல்லோராக வாழ்ந்து வாழ்க்கையை வண்ணம் உடையதாக மாற்றி தர்ம யுக வாழ்வு பெறுவோம்.

அய்யா உண்டு

திருக்கலியாண இகனை

– பா. கவிதா அம்மா 009609805601

சென்ற மாத தொடர்ச்சி….

அன்புடையீர்! இப்படியாக எம்பெருமான் அம்மைமார்கள் அங்கு வர திருவுளம் கொண்டார். அவர்கள் வந்து எம்பெருமானை வணங்கி எங்களுட பிள்ளைகளைத் தந்து நல்புவியை ஆள வேண்டும் என்று வேண்டி நின்றார்கள் 

 உடனே, எம்பெருமான் பிள்ளைகளை இங்கு வரச் செய்யுங்கள். இந்த சபையில் கொடுக்கல் வாங்கல்களைப் பேசி, சிவானந்தம் அருளி உங்களை நான் கோலமணம் செய்து உங்கள் பிள்ளைகளையும் தந்து புவியாள வைப்பேன் என்றார். 

 உடனே அம்மைமார்கள் புவியாள வைப்பேன் என உரைக்கும் எங்கள் பொன்மானே! கண்மணியே! கருணைக்கடலே! பிரம்ம ஞானிகள் போற்றும் பிரணவ சொரூபனே! பரமானந்த அமிர்த சொருபனே! காயாம்பூ மேனியனே! அதாவது கார்மேக நீலவண்ணனே இந்த கலிப் பூமியில் நாங்கள் தோன்றியதால் இதுநாள் வரையும் எங்களுக்கு அன்னம் அளித்து ஆதரித்து வாழ்ந்த இந்த மக்களின் நிலை என்ன? நாங்கள் உமது திருவடியைச் சேர்ந்தால் அவர்கள் ஏது செய்வார்கள்? அவர்களும் எங்களோடு சேர்க்கை தானே என்று பணிந்து நின்றார்கள். 

 உடனே எம்பெருமான் அவர்களைப் பார்த்து நீங்கள் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டு விட்டீர்களே தெரியாமல் பேசாதீர்கள். நமது வாழ்வும் மக்களுட வாழ்வதுவும் ஒன்று போல தர்மயுகத்தில் வைத்து ஆள நான் நினைத்திருக்கின்றேன் ஆனால் அவர்கள் அந்நிலைக்குப் பக்குவப்பட்டிருக்கிறார்களா? என்பதை அறிய நான் அவர்களுக்குக் கொடுக்க இருப்பதையும் அவர்கள் எனக்குத் தர இருப்பதையும் அறிந்து உங்களை நான் மணம் கூடுவேன் என்றார். 

 இப்படி அய்யா உரைத்ததும் அந்த மக்கள் “அணங்கியவர்கள் வழி போல் வந்து” அதாவது கன்னிகள் மதலையான கற்பகக் குலங்கள் தன்னில் “அதாவது உடல்கூறு சக்தி உயிரோடு உதித்து வந்தவர்கள் எம்பெருமானிடம் வந்தார்கள். 

 எம்பெருமான் அவர்களிடம் கொடுப்பதென்ன இவர்களை நான் மணங்கள் செய்தால், பணங்கள் மிகப் பொன்காசு ரொம்ப ரொம்ப பாவையர்க்குச் சீதனங்கள் பகருவீரே என்றார். 

 இது லெளகீகம் அல்ல. இந்தக் கொடுக்கல் வாங்கல் என்பது பக்தர்களின் தகுதியை நிர்ணயம் செய்ய அய்யா நடத்திய திருவிளையாடல். அவரே வர்த்தக நாராயணன். 

உடனே அந்த மக்கள் அய்யாவிடம் நீர் அவர்களுக்கு என்னப் பரிசம் தருவீர் என்றார்கள். பரிசம் என்பது மணவாளன் மணவாட்டியின் மாதா பிதாக்களுக்குக் கொடுக்கும் வெகுமானமாகும். இப்படி மக்கள் கேட்டவுடன் உடைய குல சொக்கரான எம்பெருமான் “தகருமோ நான் தரும் தங்கக்காசு, சதாகோடி எண்ணமது தானோ இல்லை, நிகருவீர் நீங்கள் தரும் சொத்தையெல்லாம்” என்றார்.  இங்கு உடைய குலசொக்கர் என்றால் எம்பெருமான் இந்த கற்பகக் குலங்களைக் கவர்ந்து தன் உடமையாக்கும் பேரழகன் சொக்கலிங்கம் என்பதாகும். 

 “தகருமோ நான் தருகும் தங்கக் காசு” என்பது எம்பெருமான் அவர்களுக்குத் தரும் வெகுமானம் ஒருநாளும் அழியாத ஒளி நிலை மற்றும் புதுமை மாறாதது பேரானந்த நிலை. இதனைக் கேட்டதும் அய்யாவின் அருளால் அதனை உணர்ந்த மக்கள் 

 ஆண்டவரே இப்பரிசம் தருவீரானால்

யாமடியார் ஆளுகின்ற வஸ்து எல்லாம்

கூண்ட பண்டம் பொன்னுடமை ஆடு மாடு

குருபரனே யாங்கள்வரை உமக்குச் சொந்தம்

மீண்டடிமை முக்காலும் உமக்கு நாங்கள்

விலையடிமை ஆனோம்காண் விரையமாலே

பாண்டவரைக் காத்துரட்சித்தாண்டார் போலே

பாவையரும் மக்களும் உன் பக்கம் தானே

 என்று கூறி பரிபூரண சரணாகதி யடைந்தனர்.  “நாம் வந்தோம் என்று நாமமது கேட்டவுடன் தாம் வந்து வேடமிட்ட சாதியது நன்றாகும்” என்று அகிலத்தில் கலைக்கோட்டு மாமுனியிடம் எம்பெருமான் சொன்னதின் உட்பொருள் இதுவேயாகும். 

 உடைமை அனைத்தையும் தியாகம் செய்து உடல், பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்து பூரண சரணாகதி நிலையை அடைந்தவர்களே சச்சிதானந்த பரப்பிரமத்தை அடைவார்கள். 

 உடனே எம்பெருமான் அவர்களைப் பார்த்து பதறாதீர் உங்களையும் காத்துக் கொள்வோம். நீங்கள் எனக்குத் தந்ததுவும் நான் உங்களுக்கு ஈந்ததுவும் சரியே, உங்களை ஒன்று போல் காத்து இரட்சித்து எல்லோருமாக இருந்து தர்மபுவி ஆள்வோம் என்று உறுதி கூறி அந்த மக்களைப் பார்த்து மிக்க தெய்வக் கன்னியரை மணங்கள் செய்ய, மெல்லி கையைப் பிடித்தெனக்கு விடுகுவீரோ என்றார். 

 அதன்பிறகு என்ன ஆயிற்று என்பதை அடுத்த இதழில் பார்ப்போம்.

அய்யா சொன்ன முன் அறிவிப்புகள் எவை?

– S. அன்ன செல்வம் அம்மா 9443622222

சென்ற மாத தொடர்ச்சி….

அய்யா வைகுண்டர் தர்மயுகம் தோன்றுவதற்கு முன் இவ்வுலகில் என்ன? என்ன? அடையாளங்கள் நடக்கும் என்று முன் அறிவிப்பாக அறிவித்து உள்ளார். முக்கியமாக பத்து அடையாளங்கள். ஆறுவிதமான அடையாளங்களை இதற்கு முன்னுள்ள பதிவுகளில் பார்த்துவிட்டோம். ஏழாவது அடையாளமாக 

 நஞ்சி தின்று கொலைப் பட்டழிவு: – இந்த வார்த்தைக்குள் மாபெரும் ரகசியம் அடங்கியிருக்கிறது. அதாவது இந்த இடத்தில் நஞ்சு தின்று என்றால் தினமும் அன்றாட வாழ்க்கையில் விஷ உணவை உண்டு என்று பொருள்படும். கொலைப் பட்டழிவு என்றால் கொஞ்சம் கொஞ்சமாக விஷத்தை அருந்தி நாளடைவில் பெரும் துன்பத்திற்கு ஆளாகி மரணமடைவது. 

நவீனமயமான இன்றைய காலகட்டத்தில் நம்முடைய எல்லா நோய்களுக்கும் முதல் காரணம், நாம் உண்ணும் உணவே ஆகும். ஆரோக்கியமான உணவுகளை உண்கின்றோமா? என்றால் இல்லை. நாம் சுவாசிக்கும் காற்று சுகாதாரமாக இருக்கிறதா? என்றால் அதுவும் இல்லை. சுகாதாரமான ஆடைகளை அணிகின்றோமா? என்றால் அதுவும் இல்லை. சுகாதாரமான குடிநீரை அருந்துகின்றோம்? என்றால் அதுவும் இல்லை. நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துகின்ற அத்தனை வீட்டு உபயோகப் பொருட்களும் சுகாதாரம் ஆனதா? என்றால் அதுவும் இல்லை. நாம் அனுபவிக்கின்ற எல்லாவற்றிலும் விஷத்தன்மை கலந்துள்ளது. அதைத்தான் அய்யா வைகுண்டர் அருள் நூலில் நஞ்சுத் தின்று கொலைப் பட்டழிவு என்றார். 

 உணவு வகைகள்: – நாம் பயன்படுத்தும் உணவு தானிய வகைகளில் மிக முக்கியமானது அரிசி, கோதுமை, கேழ்வரகு போன்ற நவதானியங்கள். அதற்குப் பிறகு பருப்பு வகைகள். அதன் பிறகு கடலை வகைகள் என்று எடுத்துக் கொண்டால், இவைகள் அனைத்தும் விஷத்தில் தான் விளைகின்றன. அதற்கு கொடுக்கப்படும் உரமே கெமிக்கல் தான். சாணம், இலைதழைகள் போன்ற உரங்கள் கிடையாது. காரணம் ஆடு மாடுகளும் இல்லை, மரம் செடி கொடிகளும் இல்லை. அடுத்ததாக அனைத்தும் பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தப்பட்டு பயிர் செய்யப்படுகிறது. இது கொடுமையான ஆள்கொல்லி விஷம். 

 காய்கறிகளை எடுத்துக் கொண்டால் அதுவும் அப்படித்தான். விஷத்திலேயே முளைத்து, விஷத்திலேயே வளர்ந்து, விஷத்திலேயே காய்கறிகளை உற்பத்தியாகி விஷத்தையே தருகிறது. அது கீரையாக இருந்தாலும் சரி, நாம் அன்றாடம் உபயோகிக்கும் காய்கறிகளாக இருந்தாலும் சரி, பழவகைகள் அதுவும் அப்படித்தான். பால் பாக்கெட், தண்ணீர் பாக்கெட் எல்லாமே கெமிக்கல் சேர்ந்தவை ஆகும். 

காற்று: – நாம் உயிர்வாழ ஆதி மூலமாக இருப்பதே காற்று. நல்ல காற்று நமக்கு கிடைக்கிறதா என்றால் இல்லை. மாசுபடிந்த அசுத்தக் காற்றையே சுவாசிக்கிறோம். காரணம் காற்று புகை மண்டலமாக மாறி விட்டது. வாகனங்களிலிருந்து வெளிப்படும் புகை, தொழிற்சாலைகளிலிருந்து வெளிப்படும் புகை, கழிவு பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதால் உண்டாகும் விஷப்புகை, நம்மால் அசுத்தமாக்கப்பட்ட மண்புழுதிகள் காற்றோடு காற்றாக கலந்து விடுகிறது. அதனால் நோய்க்கிருமிகள் நம் உடலுக்குள் சென்று பலவிதமான நோய்களுக்கு ஆளாகிறோம். அனைத்து நோய்களுக்கும் காரணம் நாம் சுவாசிக்கும் மாசு படிந்த காற்று. மாசற்ற காற்று கிடைப்பதே கடினமாகிவிட்டது. காட்டை அழித்தோம் கண்ணீர் விடுகிறோம். 

 ஆடை மற்றும் ஆடம்பரப் பொருட்கள்: – பருத்தி ஆடைகளை மறந்தோம். பாலிஸ்டர் ஆடைகளால் உடலை வெப்பம் தாக்குகிறது. மண் பாத்திரங்களை மறந்தோம். அலுமினியம், நான்ஸ்டிக், பிளாஸ்டிக் பாத்திரங்களால் கேன்சர் போன்ற நோய்களின் அபாயங்கள். இப்படி எல்லாமே நாகரீகம் என்கிற பெயரில் நம்மை நாமே அழித்துக் கொண்டிருக்கிறோம். 

 குறிப்பு: – நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பழக்க வழக்கங்கள் அனைத்தும் ஆரோக்கியமற்றதாக ஆகிவிட்டது. இதுபோன்ற விஷயங்கள் எப்போது நடைபெறுமோ? அதுவும் தர்மயுகம் தோன்றுவதற்கு முன் அடையாளம் என்று நமது அய்யா கூறுகின்றார். எனவே தர்மயுகம் வெகு விரைவில் தோன்றப் போகிறது என்பதை உள்ளத்தில் உணர்ந்து அய்யா கூறிய நல் வழியில் நடப்போம் 

                                                 …… மீண்டும் தொடரும்

அய்யா உண்டு

அகில விடை

  1. ஆறில் ஒரு பங்கை வரியாக வாங்கி
  2. பூவண்டன் தோப்பு
  3. தென் தாமரைக்
  4. கொல்லம் 1008, மாசி 20 
  5. சான்றோர்கள் 

அய்யா உண்டு

யார் ஆன்மீகத்தில் நுழைந்தவர்கள்?

– ஹரி வெங்கடேஷ் அய்யா 8508518505

நாம் செய்கின்ற ஒவ்வொரு செயல்களும் நம்மில் இரண்டு இடங்களில் மாற்றத்தை உருவாக்குகின்றன. அவை அகம் புறம்அகத்தில் மாற்றம் என்றால் நம் மனதை மாற்றி அமைப்பது என்பது பொருள். புறமாற்றம் என்றால் வெளி சூழ்நிலைகளையும் வெளியிலுள்ள பொருள்களையும் மாற்றி அமைப்பது என்பது பொருள். 

 பொதுவாக இறைவனை ஏற்றுக்கொண்டு அவரை வழிபடுபவர்கள் ஆத்திகர்கள் என்று அழைக்கப் படுகிறார்கள். இறைவனை வழிபடுவதால் மட்டுமே இவர்கள் ஆன்மீகத்தில் நுழைந்தவர்கள் என்று கூறி விட முடியாது. பெரும்பாலான ஆத்திகர்கள் இறைவனை, தான் விரும்பும் பொருள்களையோ அல்லது சூழ்நிலைகளையோ அடைய செய்ய வைக்கும் ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்துகிறார்கள். இவர்களுக்கு இறைநம்பிக்கை இருக்குமே தவிர இறைவனைப் பற்றிய ஞானம் இருப்பதில்லை. அவர்கள் அதனை விரும்பி தேடுபவர்களாகவும் இருப்பதில்லை. இந்நிலையில் இருப்பவர்கள் உலகப் பொருள்களை மட்டுமே இலக்காகக் கொண்டு அதை அடைய செய்ய வைக்கும் ஒரு கருவியாக நினைத்து மட்டுமே இறைவனை வழிபாடு செய்கிறார்கள். ஆகவே இவர்களை ஆன்மீகத்தில் அடி எடுத்து வைத்தவர்கள் என்று கூற முடியாது. இவர்கள் செய்கின்ற எல்லாச் செயல்களும் புறச்சூழலை மாற்றுவதற்காக மட்டுமே அமையுமே அன்றி அகச்சூழலை மாற்றுவதற்காக அமையாது. 

 அகத்தில் மாற்றம் என்பது நம் மனதில் நாம் உருவாக்கும் மாற்றம். நம் மனதில் உள்ள தீய குணங்களையும் எண்ணங்களையும் நீக்கி நல்ல குணங்களையும் எண்ணங்களையும் அடைதலே அகமாற்றம் என்று அழைக்கப் படுகிறது. இம்மாற்றம் நிகழ யார் முயற்சிகளை மேற்கொள்கிறார்களோ அவர்களே ஆன்மீகத்தில் நுழைந்தவர்கள்

 அகமாற்றம் ஏன் தேவை என்று பார்ப்போம். 

 ஒருவர் ஒரு மருத்துவரிடம் சென்று என் உடலில் எங்கு தொட்டாலும் வலி ஏற்படுகிறது. ஆகவே என் முழு உடலையும் சோதிக்க வேண்டும் என்று கூறினார். மருத்துவர் பரிசோதித்து விட்டு உங்கள் உடல் முழுவதும் நல்ல நிலையில்தான் உள்ளது. உங்கள் விரலில்தான் உள்காயம் உள்ளது. காயப்பட்ட விரலால் உடலின் எந்தப் பகுதியில் தொட்டாலும் உங்களுக்கு வலிதான் ஏற்படும். ஆகவே காயப்பட்ட விரலைசரி செய்தால் வலி தீர்ந்து விடும் என்று உண்மையை எடுத்துரைத்தார். 

 பக்குவப்படாத பலஹீனமான மனதானது காயப்பட்ட விரலைப் போன்றது. இப்படிபட்ட மனதுடன் இவ்வுலகை நாம் தொடர்பு கொள்ளும் போது அது கோபம், ஆசை, பயம், துயரம், விருப்பு, வெறுப்பு, பொறாமை போன்ற உணர்வுகளை அடைந்து மனதில் துயரத்தை உருவாக்குகிறது.  மனதின் மூலமாகத்தான் நாம் இந்த உலகை தொடர்பு கொள்கிறோம். நம்முடைய மனதின் தன்மைக்கேற்பதான் நமக்கு இன்பமும் துன்பமும் அமைகிறது. மனதின் தன்மையை மாற்றாமல் உலகியல் சூழ்நிலைகளை மாற்ற முயற்சிப்பது பயனற்ற முயற்சி ஆகிறது.  உதாரணத்தில் கூறப்பட்டுள்ள விரலுக்குச் சிகிச்சை போல மனதின் தன்மையை மாற்றுவதுதான் நிரந்தர பலனை அழிக்கும். அதாவது தூய்மையையும் உறுதியையும் உடைய மனதுடன் இவ்வுலகை நாம் சந்திக்கும் போது இந்த உலகத்தால் நாம் எந்த விதத்திலும் பாதிக்கப் பட மாட்டோம். ஆகவே மனதை மாற்றுவோம் மாயோனைப் போற்றுவோம்.

அய்யா உண்டு

கலியுகம் கடப்போம் 

      – அ. ஐவி அம்மா, திருவண்ணாமலை, 9444741707

கலி என்றால் மாயை என்று பொருள். அதாவது, நிலையில்லாத பொருளை நிலையானதாகக் கருதுவது மாயை ஆகும். கலி என்பது அநியாயத்தின் மொத்த உருவமாகக் காணப்படுகிறது. “மனிதன் எதுவரை அநியாயம் செய்கிறானோ அதுவரை கலி இருக்கும் என்பார்” பாரதி. 

 இக் கலியுக வாழ்க்கை மிகுந்த போராட்டம் நிறைந்ததாகவே அமைந்திருப்பது கண்கூடு. பொய்மை மிகுந்து காணப்படும் இவ்வுலகில் உண்மையை நிலைநாட்ட போராட வேண்டியுள்ளது. உழைப்பவரை விட உழைப்பவர் போல் நடிப்பவர் போற்றப் படுவதையும் காண்கின்றோம். இவ்வாறு இவ்வுலக வாழ்க்கை அறநெறி பிறழ்ந்து, தடுமாறிக் கொண்டிருக்கிறது. 

 இக்காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் நம்மைச் செம்மைப் படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். கலியுக வாழ்வை நாம் எவ்வாறு வாழ வேண்டும் என்பது குறித்து எம்பெருமான் வைகுண்டர் 

“கலி என்றால் எலி அல்லவே கணையாளி வேண்டாமே 

வலிமாய நினைவு மாய்மாலம் என்மகனே

ஆனதால் ஆயுதங்கள் அம்புதடி வேண்டாமே

மானமாக இருந்தால் மாளும் கலி தன்னாலே”

என்கிறார். எங்கும் ஏகமாய் நிறைந்திருக்கும் எம்பெருமான் அவரவர் நினைப்புக்குத் தக்கபடி இருந்து அருள்புரியும் மகத்துவம் உணர்ந்து, தத்தம் கடமைகளை அறவழியில் செவ்வனே செய்து வந்தால் கலி தானாகவே மாண்டுபோகும் 

 இப்பூலோக பொருட்கள் மீது கொள்ளும் ஆசைகளே துன்பத்திற்குக் காரணமாக அமைகின்றது. இம்மாய உலகில் நாம் நிலையானதாக நினைக்கும் எப்பொருளும் நிலையானதில்லை. எனவே, பற்றற்று வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்பதனை மக்களுக்கு உணர்த்த, 

 “சொத்தாஸ்தி வஸ்து சுகமென் றெண்ணாதே 

வஸ்தாஸ்தி பெண்ணு வகையென் றெண்ணாதே”என அறிவுறுத்துகிறார். 

 அண்டசராசரமெல்லாம் நிறைந்திருக்கும் இறைவன். அவனால் படைத்துக் காத்து அழிக்கப்படுகின்ற அனைத்தும் அவனிசைவின் படியே நடக்கின்றன. இறைவன் எல்லாவுயிர்கட்கும் பொதுவானவன். அவன் தனது படைப்பில் வேற்றுமை பார்ப்பதில்லை. அவனது படைப்பின் நோக்கமே எல்லா உயிர்களும் தர்மயுக வாழ்வு பெற வேண்டும் என்பதே ஆகும். 

 எனவே, “அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது” என்பதனை உணர்ந்து, நம்மை வருத்தும் துன்பங்களைக் கடந்து செல்லும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்த அழிந்து போகும் உடலுக்குள் என்றும் அழியாது நிலைத்திருக்கும் ஆன்மா ஒளிந்து கொண்டு இருப்பதை புரிந்து கொள்வோம். அந்த ஆன்மாவை இறைவனோடு ஐக்கியப்படுத்தும் நாளாகக் கருதி கொண்டிருக்கும் தர்மயுகத்தைக் காண, கலியுக ஆசா பாசங்களை அகற்றி, இறை நாமத்தைப் பெருக்கி அறவழியில் வாழ்வோம். ஆன்மாவுக்குச் சக்தி அளிப்போம் 

 அய்யா உண்டு

அகிலத்திரட்டு ஆகமப்பலன்கள்

           – ரா. கோபாலகிருஷ்ணன் அய்யா 7200031169

ஆய்ந்து பேணி அமுதளித்து உயிரனைத்தும் காக்கும் திருமாலின் அவதார இகனைகளை யுகவரலாறாக கூறும் கலியுகத்தின் ஒரே வேதாகமம் அகிலத்திரட்டு அம்மானை யாகும். 

மூவராலும் முன்னின்று அழிக்க இயலாத மாயக்கலியழிக்க நாராயணர் முப்பொருளும் ஒன்றாகி அய்யா வைகுண்டராக அவதரித்தார். 

 திருச்செந்தூர்கடலில் கொல்லம் ஆண்டு 1008 மாசி 20ல் பொன்மகர வயிற்றினுள் அவதரித்து, மகரப்பாலை உமிழ்ந்து, விஞ்சை பெற்று தாமரைக்குளத்தூரில் தெச்சணமீதில் ஆறு ஆண்டுகள் தவமிருந்து இகனைகள் புரிந்து இக பர சோதனைகள் பார்த்த நாராயண வைந்தரின் உவமை சொல்வது கலியுகத்தர்மமாகும். 

 நாராயணர் உரைத்த அகிலத்திரட்டு அம்மானையை வாசிக்கக் கேட்டு மகிழ்ந்திருந்த அன்போர்க்கு பூசித்து நின்ற பூரணங்கள் கிட்டும். 

 இயல்பாகக் கருவுற்று குழந்தைபெற இயலாத மலடியும் மகாவிருப்பத் தோடிளகி தலமளந்த மாயவனை நாடி கேட்டால் மதலை ஈன்றெடுக்கும் பாக்கியம் கிடைக்கும். 

 குட்டமென்று சொல்லப்படும் கொடிய தொழுநோயால் பாதிக்கப்பட்டோர்களும் கூட குணம் வைத்து அகிலத்திரட்டு அம்மானையைக் கேட்டால் நோய் தீருவது உறுதியென நாராயணர் கூறுகிறார்.

 தர்மயுகமாக்கி தாரணியையாளுதற்கு கர்மக் கலியில் கடவுளார் வந்த வரலாறான அகிலத்திரட்டு ஆகமம், அதனைப் படிக்கும் அன்புள்ளோர் சாகாதிருக்கும் நிலையை அடைவதற்காக அய்யா நாராயணரால் வகுக்கப் பட்டுள்ளது.  

 

கலியுகத்தில் சான்றோர் பிறந்ததுவும், தரணி யரசாண்டதுவும், பல பெரிய விருதுவகை பெற்றதுவும் அய்யா நாராயணர் உண்மையுள்ள லக்ஷ்மிக்கு உபதேசமாயுரைத்த அகிலத்திரட்டு அம்மானையை தன்போதமாயிருந்து தாழ்மையுடன் கேட்டோர்க்குக் கர்மம் முதல் சஞ்சலங்கள் கழியும். 

 அகிலத்திரட்டில் சொல்லப்பட்டுள்ள வாசகங்களின் தன்மையை நம்புவோர்க்கு இறைவன் எல்லா பாக்கியங்களை கொடுத்து இறப்பு பிறப்பு இல்லாத வைகுண்ட வீட்டையும் கொடுத்து அருளுவார். 

 

தினமொரு நேரம் நாரணரருளிய அகிலத்திரட்டு திருமொழிதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும். கனிமொழி சோதிவாக்கும் கையெழுத்தாதி நோக்கும். துணிவுடன் கேட்டோர் உற்றோர் பிறவியைத் தொலைத்திடுவர். மறுபிறவி என்பது இவர்களுக்குக் கிடையாது.

 அகிலத்திரட்டு அம்மானையை வாசித்தோர் கேட்டோருற்றோர் மனதினில் உணர்ந்து கற்றோர் ஆசித்தன் பதமே காண்பர். அவ்வழி முறையே நின்றோர் கோசித்தன் பதமே கண்டு கோமலை புவியின் வாழ்வும் தேசத்தின் செல்வத்தோடும் சிறப்புடனிருந்து வாழ்வார். 

மானமாய் புதியதாக்கி நாராயணர் வருத்திய அகிலத்திரட்டு அம்மானை கருத்தினுள் அகமே கொண்டு கவனித்தோர்க்கே தக்கும். உருத்தில்லா கேட்போர் ஓருரை வெளியே காணார். சிரித்துரைக் கேட்டோரெல்லாம் சிவபொருள் வெளியே காண்பார். 

 இறைவனது மொழியும் எழுத்தும் ஏடாய் சேர்த்து இவ்வுலகில் சிந்தை மகிழ்ந்த அன்போருக்கு தெரிய திறமாய் அகிலத்திரட்டு அம்மானை எழுதப்பட்டுள்ளது. இந்தத் திருமொழியை வாசித்துரைத்தோர் சந்தமுடனே வாழ்ந்து தர்ம பதியும் காண்பார்கள். தர்மக்கண்காட்சை கண்டே மரணமில்லாமல் என்றும் களிகூர்ந்து கண்ணோன் பதத்தைக் காண்பார். கருணாகரராய் கவ்வையற்று கயிலாசம் கண்டே நன்றாய் வாழ்வார். 

 நாராயணரின் அவதார இகனைகளை நூலாக வகுத்த நாதன், எழுதிய சீடன், வகுத்தெழுதி படித்த சான்றோர் குலமனுவோர், வீறான தெய்வ சக்திமடவார், வீரமுக லட்சுமி, நாராயணர் அருளால் படித்தோர் கேட்டோர், நல்லவுரை மிகத்தெளிந்து நவின்றோர், கற்றோர், அனைவரும் அன்றூழி காலமிருந்தாள்வது திண்ணம்.

 அகிலத்திரட்டு அம்மானையை திடமுடனே மனவிருப்பமாகக் கேட்டோர் எண்ணம் முந்தவினை தீர்ந்து ஞானமான இறைவரின் பாதாரத்தியல்பும் தர்மபதி வாழ்வும் பெற்று மக்களுடன் கிளை பெருகி மகிழ்ச்சியாக நித்தமிந்த பார்மீதில் சாகா வண்ணம் நீடூழி காலமிருந்தாள்வார். 

 மாயனுரைக்க அகிலத்திரட்டு அம்மானையை மாது திரு லட்சுமியாள் கேட்டு மகிழ்ந்து முகம் மலர்ந்து வாய் புதைத்து “தீயனெனும் மாகொடிய அரக்கர் சேர்க்கை திரை அறுக்க நீர் துணிந்து சென்ற நாள் முதலாய் ஞாயநெறி காணாத அடிமை போலே நடுங்கி மனதுடைந்து வெகு நாளாய்த்தேடி ஆயருமை நாயடியாளின்று கண்டு அகமகிழ்ந்தேன் எனது துயர் இழந்திட்டேன்” என்றுரைத்தாள்.

 நாமும் நாள்தோறும் மனமகிழ்ச்சியோடு அகிலத்திரட்டைப் படித்தால், அன்னை மகாலட்சுமி தன் ஐயங்கள், அச்சங்கள், கவலைகள், துயரங்கள் நீங்கி அகமகிழ்ந்தது போல மாயன் அருளால் கவலைகள், அச்சங்கள், ஏக்கங்கள், துக்கங்கள், துயரங்கள் நீங்கி எல்லா நலமும், வளமும், சீரும் சிறப்பும், தெளிவும், மகிழ்வும் பெற்று வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து மாய்கையான கலியை வென்று தர்ம யுகம் காண்போம். இறப்பிறப்பில்லாத பேரானந்த நிலையினை பெறுவோம். 

 கலியழியட்டும்……

தர்மம் தழைக்கட்டும்….

CONTACT
close slider

    Please feel free to get in touch, we value your feedback.