தர்மயுக முரசு டிசம்பர் 2023
அய்யாவின் அருளால் எந்நாளும்நன்னாளே
-அசோக்குமார் அய்யா – 009607704901, 8012174032.
அகிலத்திரட்டு அம்மானை உதயதின விழாவை கொண்டாடுவோம்
ஆன்றோர் பெருமக்களே! கார்த்திகை மாதம் 27 ஆம் தேதி, நாராயணப் பரம்பொருள் அருள அரிகோபால சீடரால் “அகிலத்திரட்டு அம்மானை” என்னும் வேத ஆகமம் எழுதப் பட்ட நன்னாள். அகிலம் அழகாக சொல்கிறது….
கண்டானைக் கண்டேன் கார்த்திகை மாதமதில்
தெய்தி இருபத்தி ஏழில் சிறந்த வெள்ளி நாளையிலே
சுருதியுடன் நித்திரையில் சுபக்கியான லக்கனமதில்
நாதன் என் அருகில் நலமாக வந்திருந்து
சீதமுடன் எழுப்பிச் சொன்னாரே காரணத்தை
காப்பில் ஒருசீர் கனிவாய் மிகத்திறந்து
தார்பிரியமாக சாற்றினார் எம்பெருமான்”
– அகிலத்திரட்டு அம்மானை
இப்படிபட்ட அற்புதமான நன்னாளை நாம் எப்படியெல்லாம் கொண்டாடி மகிழலாம் என்பதைச் சுருக்கமாக பார்ப்போம்
வழக்கம் போல் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து அய்யாவுக்குத் தீபம் ஏற்றி உகப்படிப்பு படித்து அகிலத்திரட்டு அம்மானையை அலங்கரிக்கப்பட்ட தாம்பாளத்தில் வைத்துத் தொட்டு வணங்கி விழாவை சிறப்பித்து ஆரம்பிப்போம்
எல்லோரும் மாறிமாறி அகிலத்திரட்டு அம்மானை உதயதின நல்வாழ்த்துகளை பரிமாறிக் கொள்வோம்
ஆங்காங்கே அகிலத்திரட்டு அம்மானையை கையில் ஏந்திய வண்ணம் அகில ஊர்வலங்களை ஏற்படுத்திக் கொண்டாடி மகிழ்வோம்
ஆங்காங்கே அகில மாநாடுகளை ஏற்படுத்தி அய்யாவின் அவதார மகிமையை உலகெங்கும் பறைசாற்றி கொண்டாடி மகிழ்வோம். வழக்கம் போல் உச்சி வேளையில் உச்சிப்படிப்பு படித்து விழாவை தவ உணர்வோடு கொண்டாடி மகிழ்வோம்
நிறைய அகிலத்திரட்டு அம்மானை ஆகம நூல்களை வாங்கி ஆகமதர்மம் செய்து கொண்டாடி மகிழ்வோம்
வழக்கம் போல் மாலை உகப்படிப்பு படித்து அகிலத்திரட்டு அம்மானையை வாசித்து விளக்க உரையாற்றி கொண்டாடி மகிழ்வோம்
நமது தாங்கல்களிலும் இல்லங்களிலும் நிறைய தீபங்கள் ஏற்றி அகில தீப திருநாளாக கொண்டாடி மகிழ்வோம்
இதுபோன்ற இன்னும் பல விதங்களில் நமது அகிலத்திரட்டு அம்மானை உதயதின விழாவை கொண்டாடி உலகத்திற்குப் பறைசாற்றி உலகெங்கும் விழாக் கோலமாக அமைய செயல்படுவோம். தர்மயுக வாழ்வு பெறுவோம்
அகிலத்திரட்டு அம்மானை உலகத்தின் இறுதி வேதம் என்பதையும் அய்யா வைகுண்ட அவதாரம் நாராயணரின் பத்தாவது அவதாரம் என்பதையும் உலக மக்களுக்கு எடுத்துரைத்து எல்லோரும் இந்த மாபெரும் உண்மையை அறிந்து அதன்படி செயல்பட்டு பிறவிப்பிணி அறுத்து பேரின்ப வாழ்வாகிய தர்மயுக வாழ்வை பெற அரும்பாடு படுவோம். அய்யாவின் அருளைப் பெறுவோம்.
அகிலத்திரட்டு அம்மானை உதயதின விழாவை கொண்டாடுவோம்
அனைவருக்கும் இனிய அகிலத்திரட்டு அம்மானை உதயதின நல்வாழ்த்துகள்!
அகில கேள்வி
1. முப்பூ என்றால் என்ன? அவை யாவை?
2. முப்பொறி என்றால் என்ன? அவை யாவை?
3. மும்மலம் என்றால் என்ன? அவை யாவை?
4. முத்தொழில் என்றால் என்ன? அவை யாவை?
5. முத்தீ என்றால் என்ன? அவை யாவை?
விடை 8 பக்கம் பார்க்கவும்
அய்யா உண்டு
அகிலதிரட்டு அம்மானை மூலமும், உரையும்
-க. ரீகன் அய்யா- 0096893145654
தத்தியாய் சூரனையும் சங்காரம் செய்தந்த
சூரனார்தன்னைத் தீயோந் தனக்கழித்து
வீரச் சூரன்தனையும் மேலும் அந்தயுகத்தில்
பார யிரணியனாய்ப் படைத்தார் காணம்மானை”
உடனே அய்யா நாராயணரும் சாந்தி வேள்வியை வளர்த்து அம்மை உமையவளை மறுபடியும் பழைய நிலைக்குச் சாபம் தீர்த்து அருளினார். பின்பு அம்மை மேலுலகமான கைலைக்குச் செல்ல விடை கொடுத்தார். இப்படி கிரேதா யுகத்தில் குறோணியினுடைய மூன்றாவது துண்டினைப் பிறவி செய்து அவனுக்கு வேண்டிய புத்திகளைக் கூறியும் அவன் கேளாத காரணத்தால் அவன் உயிர் பாழாக மாண்டு போனது. எனவே, அவனுக்கு மீண்டும் ஒரு வாய்ப்புக் கொடுக்கும் பொருட்டு அதே யுகத்தில் குறோணியின் உயிரை இரணியன் என்ற அசுரனாக பிறவி செய்தார்.
மாயன் ஒரு கோலம் மகவாயுருவெடுத்து
வாயினடையில் வைத்து மாபாவி சூரனையும்
நெஞ்சையவர் நகத்தால் நேரே பிளந்து வைத்து
வஞ்சகனோடே மாயன் மிகவுரைத்து”
அசுரன் இரணியன் இந்த உலகை அடக்கி ஆளுவதற்காக சக்தியைப் பெறும் பொருட்டு சிவபெருமானை நினைத்து தவம் இருந்தான். இரணியனின் கடுமையான தவத்தால் மனம் இரங்கிய சிவபெருமான் அவனுக்கு வரம் கொடுப்பதற்காக அவன் முன் காட்சியளித்தார். சிவபெருமான், தவமிருந்த இரணியனிடம் உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். உடனே இரணியன் தனக்கு உலகில் பண்ணி வைத்த எந்த விதமான ஆயுதங்களாலும் அழிவு வரக்கூடாது என்ற வரத்தைக் கேட்டான்.
மேலும் தனக்கு மிருகங்களாலோ மனிதர்களாலோ வலியுவரக்கூடாது என்ற வரத்தைக் கேட்டான். தனக்கு இரவிலோ பகலிலோ அழிவு வரக்கூடாது என்று கேட்டான். வீட்டிற்கு உள்ளிலோ, வெளியிலோ அழிவு வரக்கூடாது என்ற வரத்தினைச் சிவபெருமானிடம் கேட்டான். கொடியவன் இரணியன் கேட்ட வரங்கள் அத்தனையும் சிவபெருமான் இரணியனுக்குக் கொடுத்தார். வரத்தினைப் பெற்ற இரணியன் மிகுந்த மமதை கொண்டான்.
இனி இந்த உலகில் தான்தான் மிகப்பெரியவன் என்று ஆணவம் கொண்டான். தன்னுடைய ஆட்சியில் யாரும் இதுவரையில் செய்த இறை வழிபாடுகளைச் செய்யக்கூடாது என்று கட்டளையிட்டான். எல்லோரும் ‘ஓம் இரணியாய நமக’ என்று தன்னுடைய பெயரிலேயே துதிக்க வேண்டும் என்று கட்டளையிட்டான். நாட்டு மக்கள் எல்லோரும் இரணியனுடைய ஆட்சியில் நடுங்கித் துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். இரணியனுடைய கொடுமை அதிகமாகவே நாராயணர் தாமே ஒரு மகவாகக் கோலம் கொண்டு அவனுக்குப் பிரகலாதன் என்று பிள்ளையாகப் பிறந்தார்.
இரணியன் என்ன என்ன செய்யக்கூடாது என்று அறத்திற்கு மாற்றாக செய்யச் சொன்னானோ அதை அத்தனையும் மகனாக இருந்த பிரகலாதன் செய்தான். உச்சபட்சமாக இரணியன் தனது பெயரை இறை நாமமாக ‘இரணியாய நமக’ என்று பள்ளிக்கூடத்தில் சொல்லிக் கொடுக்கும் போது பிரகலாதன் மட்டும் “ஓம் நாராயணாய நமக” என்று உயிர்களைக் காப்பவன் பெயரைச் சொல்லி நின்றான். நாளாக நாளாக பிரகலாதன் தனது கட்டளைக்கும் தனது சொல்லுக்கும் அடிபணியாததால் சிறு குழந்தையாக இருக்கக்கூடிய அவனை சேவகர்கள் மூலமாகக் கொல்ல ஆணையிட்டான்.
பாலிலே விஷத்தைக் கலந்து பிள்ளையைக் கொல்வதற்காகக் கொடுத்தான். ஆனால் அந்த விஷம் பிரகலாதனை ஒன்றும் செய்யவில்லை. அடுத்துக் கடலிலே தள்ளினார்கள். குழந்தை நலமோடு வீடு திரும்பியது. மலை உச்சியில் இருந்து தள்ளினார்கள். பிரகலாதனுக்கு ஒன்றும் செய்யவில்லை. தன்னால் மகன் பிரகலாதனைக் கொல்ல இயலவில்லை என்று கோபம் கொண்ட இரணியன் ‘நீ உச்சரிக்கக் கூடிய அரி எங்கே இருக்கிறார்’? என்று இரணியன் கோபத்தோடு கேட்டான். உடனே பிரகலாதன் இவ்வுலகை படைத்த அரி நாராயணன் எல்லா இடத்திலும் நிறைந்திருக்கிறான் என்று கூறினான். கடும் கோபத்தால் இரணியன் ‘அப்படியானால் இங்கே இருக்கக்கூடிய தூணிலே உன்னுடைய அரி இருக்கிறானா’? என்று கேட்டான்.
உடனே பிரகலாதன் அவன் தூணிலும் உண்டு துரும்பிலும் உண்டு என்று இரணியனுக்கு உபதேசம் சொன்னான். கோபத்தால் அறிவிழந்த இரணியன் அவன் முன்னால் இருந்த தூணினை அடித்து உடைத்தான். அப்போது அங்கே அனைவரும் கண்டு ஆச்சரியப்படும் வகையில் நாராயணர் சிங்கமுகம் மனித உடல் கொண்டு நரசிம்ம வடிவம் கொண்டு தூணில் இருந்து வெளிப்பட்டார். இரணியனுடைய கொடுமையில் இருந்து இந்த உலகை காக்கும் பொருட்டும், அவனுக்கு கூறிய புத்தி உபதேசங்களை கேட்காத காரணத்தாலும் அவனை அழிப்பதற்காக இரணியனை அப்படியே தூக்கி வாயில் நடையில் தன்னுடைய தொடையிலே இரணியனைக் கிடத்தி தன்னுடைய கைகளில் இருக்கக்கூடிய கூர்மையான நகத்தின் மூலமாக இரணியன் வயிற்றைப் பிளந்தார்.
இரணியன் பெற்ற வரத்தின் படி அவனை மனிதனோ விலங்கினமோ கொல்லக்கூடாது. ஆகவே நாராயணர் தான் மனிதனும் அல்லாமல் மிருகமும் அல்லாமல் நரசிம்மமாக வடிவெடுத்தார். அதுபோல வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் கொல்லக்கூடாது என்ற வரத்தினைப் பெற்ற காரணத்தினால் வாயில் நடை என்று சொல்லக்கூடிய உள்ளிலும் இல்லாமல் வெளியிலும் இல்லாமல் அவனைத் தன் தொடை மீது கிடத்தினார். மேலும் பகலிலோ இரவிலோ தனக்கு மரணம் வரக்கூடாது என்ற வரத்தின் படி பகலும் இல்லாமல் இரவும் இல்லாமல் அந்தி சாயக்கூடிய அந்த நேரத்தில் இரணியன் வயிற்றைக் கிழித்து அவனைச் சங்காரம் செய்தார்.
(தொடரும்)
அய்யா உண்டு
சிவகாண்ட அதிகாரப் பத்திரம் மூலமும் உரையும்
— மாடசாமி அய்யா
“இருமனதாய் எண்ணாதே எனக்குத்தரம் சொல்வாரில்லை”
பொருள்: நான் கூறிய இந்த உபதேசங்களை உண்மையோ? பொய்யோ? என்று இருமனதாய் எண்ணாதே. நான் தீர்ப்பு கேட்கும் நாளையில் எனக்கு உன்னால் பதில் சொல்ல இயலுமா.
விளக்கம்: “பற்றி பிடித்திருங்கோ” “பிடித்தவருடன் இருப்பேன் அவனைப் பிள்ளையைப் போல் ஆக்கிடுவேன்” என்பது அய்யாவின் திருவாக்கு. சந்தேகங்கள் அற்று ஆண்டவனின் அமுத மொழிகளை அருந்துபவர்களுக்கே ஆனந்தம் கிடைக்கும். அய்யா சொல்வது முக்காலம் சத்தியம் என்பதை நம்புபவர்களுக்கு உபதேசம். குருவின் வாக்கை நம்புகிற மாணவனே சீக்கிரம் பாடசாலையை விட்டு விடுவிக்கப்படுகிறான். அதைப் போல் இறைவனின் வாக்கை உண்மை என்று நம்பி பிடிப்பவர்களே உலக கட்டுக்களில் இருந்து விடுபடுகிறான். முக்தி அடைகிறான். இறைவனின் கேள்விக்குப் பதில் கொடுக்க சித்தமாக இருக்கிறான்.
இந்த உபதேசம் பரலோகத்தில் இருந்து வந்தது. இது பூலோக வார்த்தை இல்லை. இதை அய்யா இது பரலோக வார்த்தையல்லால் பூலோக வார்த்தை இல்லை என்று தோணிப்பு பத்திரத்தில் குறிப்பிடுகிறார். மேலும், உபதேசம் உண்மை என்று நம்பினால் மட்டும் போதுமா? என்று வினவ பகவானே விடை தருகிறார். இது பரலோகத்தில் இருந்து மக்களுக்கு அருளப்பட்ட அழியாத வாழ்வு பெறுவதற்கான வழி”. எனவே அய்யா தந்த இந்த உபதேசத்தைக் கடைப்பிடித்து நடக்க வேண்டும் என்கிறார்.
எனவே, பகவான் உபதேசம் செய்யும் கூலி உடன் கையில் கொடுத்திடுங்கோ என்கிறார். அதாவது உபதேசத்தின் படி நடத்தலே உபதேசம் செய்யும் கூலி ஆகும். உபதேசத்தை உண்மை என்று நம்பி அதன் வழி நடந்தால் கிடைத்தற்கரிய பகவானே கிடைப்பார் என்பது கருத்து. எனவே, பகவான் இருமனதாய் எண்ணாதே எனக்குத்தரம் சொல்வாயோ என்கிறார். மேலும், ஒரு சிறுகதையின் மூலம் உபதேசம் மற்றும் அதன் மகிமையை அறியலாம்.
துருவ மகாராஜா ஐந்து வயது குழந்தையாக இருந்தார். அப்பொழுது அவர் தனது தந்தையின் மடியில் கொஞ்சி விளையாடி அமர்ந்திருந்தார். இதைக்கண்ட துருவராஜனின் சின்னம்மை துருவ ராஜாவின் தந்தை மடியில் இருந்து துருவ ராஜாவை இழுத்துக் கீழே தள்ளினார். இவர் எனது மகனான உனது தம்பிக்குச் சொந்தமானவர் என்று குழந்தையைச் சினந்தார். உடனே துருவ ராஜா தனது தாயின் அரண்மனைக்கு அழுது கொண்டு சென்று தனது தாயிடம் நடந்த அனைத்தையும் கூறினார்.
உடனே துருவ ராஜாவின் தாயார் மகனுக்குப் பின்வருமாறு உபதேசித்தார். உலகம் அனைத்திற்கும் ஒரே தந்தை உள்ளார். அவரே நாராயணர். அவருடைய மடி உனக்காக காத்திருக்கிறது. அவரைத் தவம், தியானம், பக்தி ஆகியவற்றால் எளிதில் அடையலாம்.
இந்த உபதேசத்தைக் கேட்ட துருவன் அதை அப்படியே ஏற்றுக் கொண்டு வனம் புகுந்தார். வனத்திற்குச் சென்ற குழந்தைக்கு நாராயணர் “ஓம் நமோ பகவதே வாசுதேவாய” என்ற 13 எழுத்து மந்திரத்தை நாரத மகரிஷியின் மூலம் உபதேசித்தார். இந்த உபதேசத்தைப் பெற்றுக்கொண்ட துருவன் வனத்தில் 14 நாட்கள் தவம் ஏற்றினார். 14 வது நாள் நாராயணர் துருவனுக்கு காட்சி கொடுத்தார்.
ஆனால் நமக்கு நாராயணரே நேரில் தோன்றி மகா மந்திரத்தையும், தவ, இல்லற வாழ்க்கையையும் உபதேசித்துள்ளார். உலகத்தோரே அதை கடைபிடிக்காமல் விடுவது மனித வாழ்வை பாழ்படுத்திக் கொள்வது என்பதை உணர வேண்டும்.
மருந்துவாழ் மாமுனிவன் மாயசால காரனும்நான்
விளக்கம்: 1. மருந்துவாழ் முனிவன்: ஜெகத்தில் பிறப்பெடுத்த எறும்பு கடை யானை முதல் அத்தனை உயிருக்கும் பிறவிப் பிணிக்கு மருந்து பகவானும், பகவானின் திவ்ய நாமமும், பகவானின் லீலைகளும் ஆகும்.
மாயக்காரக் காரணும் நான்: சர்வ மாயைக்கும் அவரே காரணம். மாயை என்பது இந்த உலக இயக்கத்திற்கு காரணமான உன்னத சக்தி. இவளே அனைத்து உயிருக்கும் காரணம். இவளே அன்னை. இந்த மாயை அனைத்து உயிரையும் அதன் கட்டுப்பாட்டில் வைத்து உயிர்களை பந்தத்தில் அழத்தி ஆட்டுகிறாள். ஆனால் இந்த மாயையோ பகவானின் விருப்பப்படி ஆடுவாள். இவள் பகவானின் கட்டளையின் கீழ் செயல்படுகிறாள்.
உலக இயக்கத்திற்கு காரணமான மாயை பற்றியே இந்த விஞ்ஞானம் ஆய்வு செய்கிறது ஆனால் அந்த மாயையின் (இயற்கையின்) கோடியில் ஒரு பகுதியைக் கூட விஞ்ஞானத்தால் எட்ட இயலவில்லை எனில் மாயாதி சூட்சமாகிய பகவானை இந்த அறிவு கொண்டு அறிவது எங்கனம்? எனவே அறிவுக்கு எட்டாத ஆன்மாவால் மட்டுமே உணரக்கூடியவன் தான் என்பதை விளக்கவே மாயசாலக்காரன் என்கிறார். எனவே பக்தியால் பக்தியுடன் கூடிய தவ தியானத்தாலும் பகவான் அறியப்படக் கூடியவன் என்பது கருத்து.
அய்யா உண்டு
அகில விடை
1. முப்பூ என்பது மூன்று கலையை குறிக்கும், அவை இடகலை, பிங்கலை, அக்னிகலை ஆகும்
2. மூன்று எந்திரத்தை குறிக்கும், அவை மனம், வாக்கு, காயம் ஆகும்.
3. மூன்று செயல்களை குறிக்கும், அவை படைத்தல், காத்தல், அழித்தல் ஆகும்
4. மூன்று செயல்களை குறிக்கும், அவை படைத்தல், காத்தல், அழித்தல் ஆகும்
5. முத்தீ என்பது மூன்று விதமான தீய குணங்களை குறிக்கும், அவை காமம், வெகுளி, மயக்கம் எனப்படும்.
அய்யா உண்டு
மனித குணங்கள் எப்படிப்பட்டவை?
– S. அன்ன செல்வம் அம்மா – 9443622222
மனித குணங்கள் மூன்று வகைப்படும். அவை சாத்வீக குணம், ராஜஸ குணம், தாமச குணம் என்பவையாகும். குணங்கள் மனித மனதோடு தொடர்பு உடையவை. நாம் உண்ணும் உணவிற்கு ஏற்றபடி குணமும் குணத்திற்கு ஏற்றபடி மனமும் மனதிற்கு ஏற்றபடி வாழ்க்கையும் அமைகிறது.
1, சாத்வீக குணம்: சாத்வீக குணம் தெய்வீகமான சாந்த நிலையாகும். அன்பு, பொறுமை, தர்மம், கருணை,அமைதி ஆகியவை இவர்களுடைய குண நலன்களாகும். இவர்கள் சைவ உணவை மட்டுமே உண்பார்கள். இவர்களுடைய மனம் எப்போதும் இறைவனை நினைத்தபடியே இருக்கும். தன்னைப் போல் பிறரையும் நேசிப்பார்கள். மனம் தூய்மை உடையவர்களாகவும் உதவிபுரியும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். சாத்வீக குணத்தால் இந்தப் பிரபஞ்சம் அனைத்தும் தாங்கப்படுகிறது. முக்குணங்களில் மிகச்சிறந்தது சாத்வீக குணமே. இதை சத்துவ குணம் என்றும் சொல்வார்கள். நல்ல காரியங்களை மட்டுமே இவர்கள் சிந்திப்பார்கள். மனிதர்களில் இவர்கள் சாதுக்கள் என்று போற்றப்படுகிறார்கள்.
2, ராஜஸ குணம்: ராஜஸ குணம் உடைய இவர்கள் நடுநிலையான குணம் படைத்தவர்கள். சுயநலம் உடையவர்கள். சூழ்நிலைக்கு ஏற்றது போல் மனதை மாற்றிக் கொள்வார்கள். பணத்திற்கும் புகழுக்கும் ஆசைப்பட்டு இன்ப துன்பத்திற்கு ஆளாவார்கள். எப்போதும் மன அழுத்தம் உடையவர்களாகவும் காணப்படுவார்கள். சைவ, அசைவ உணவு வகைகளையும் காரம் நிறைந்த உணவுகளையும் விரும்பி உண்பார்கள். இவர்கள் பக்தி, கல்வி, செல்வம், வீரம், புகழ், ஆணவம், ஆசை, என உலக இன்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். இந்தக் குணம் படைத்த சாதாரண மக்கள் உலகில் அதிகமாக வாழ்கின்றார்கள். இதை ரஜோ குணம் என்றும் சொல்வார்கள். தன்னையும் தன்னுடைய குடும்பத்தையும் அதிகமாக நேசிப்பார்கள்.
3, தாமஸ குணம்: தாமஸ குணம் கொண்டவர்கள் அசுர குணம் படைத்தவர்கள்.இவர்களுக்கு ஈவு இரக்கம் என்பது இருக்காது. வேலை செய்ய மாட்டார்கள். சோம்பேறிகளாக இருப்பார்கள். சமுதாயத்திற்கு விரோதிகளாக காணப்படுவார்கள். கொலை, களவு, பொய், காமம், குரு நிந்தனை போன்ற பஞ்சமா பாதகங்களைச் செய்வார்கள். இறை நம்பிக்கை அற்றவர்களாக இருப்பார்கள். தீய எண்ணங்களும் தீய செயல்களும் நிறைந்தவர்களாக இருப்பார்கள். மூடன், கொடூரன், நெட்டூரன் என்று சொல்லலாம். அசைவ உணவு மது போன்ற உணவுகளை விரும்பிச் சாப்பிடுவார்கள். இவர்களை தமோகுணம் என்றும் சொல்வர். கோபமே இவர்களுடைய குணமாக இருக்கும்.
“அடக்கம் பெரிது அறிவுள்ள என் மகனே
கடக்கக் கருதாதே கற்றோரை கைவிடாதே
நன்றி மறவாதே நான் பெரிதென்று எண்ணாதே
அண்டின பேரை அகற்ற நினையாதே
ஆபத்தைக் காத்து அகல நீ தள்ளாதே
சாபத்தைக் கூறாதே தன்னளவு வந்தாலும்
கோபத்தைக் காட்டாதே கோளோடு இணங்காதே
பாவத்தை காணாதே பகட்டு மொழி பேசாதே
பசுவை அடைத்து பட்டினிகள் போடாதே
விசுவாசமதிலே விரோதம் நினையாதே
எளியோரைக் கண்டு ஈந்து இரங்கிடு நீ
அழிவென்ற பேச்சு அணுப்போல் நினையாதே
வரம்பு தப்பாதே வழி தவறி நில்லாதே
பரம்பூமி கண்டு பாவித்து இரு மகனே
இத்தனை புத்தி எடுத்துரைத்தேன் என் மகனே”
அய்யா உண்டு
யார் அய்யாவழியினர்?
– ஹரி வெங்கடேஷ் அய்யா 8508518505
சிலர் அய்யாவின் எந்த தர்மநெறிகளையும் அறியாதவராகவும் அறிய விருப்பம் இல்லாதவராகவும் தனது சுய ஆசைகள், பயங்கள் போன்ற விருப்ப வேண்டுதலுக்காக மட்டுமே அய்யாவை வணங்குகிறார்கள். இது போன்றவர்களுக்கு அய்யாவை அறிய விருப்பமும் இல்லை. அவர் ஆகமத்தைப் படிக்க ஆவலும் இல்லை. அவர் வழியில் நிற்க அறிவும் இல்லை. பின்பு எப்படி இவர்கள் தங்களை அய்யாவழி என்று நினைத்துக் கொள்கிறார்கள். இது போன்றவர்கள் ஒன்று மட்டும் புரிந்து கொள்ள வேண்டும்.
அய்யா வகுத்துத் தந்த அகிலத்திரட்டு மற்றும் அருள்நூல் ஆகமங்களை யாரெல்லாம் படிக்க முயற்சி எடுக்கவில்லையோ யாரெல்லாம் அய்யாவழியின் தர்மநெறியை அறிய விருப்பம் காட்டவில்லையோ யாரெல்லாம் அகிலத்திரட்டைப் படித்து ஆன்மீக அறிவை வளர்த்துக் கொள்ள முயற்சி மேற்கொள்ளவில்லையோ அவர்கள் யாருமே அய்யாவழியினர் என்று தன்னை அறிமுக படுத்திக் கொள்ள அருகதை அற்றவர்களே! இத்தகைய நிலையில் இருப்பவர்கள் அய்யாவை வழிபடுவதாலும் மற்ற தெய்வங்களை வழிபடுவதாலும் கிடைக்கும் பலன் ஒன்றுதான். இவர்களால் இந்த உலகியல் ஆசை மற்றும் பயங்களைத்தான் தீர்த்துக் கொள்ள முடியுமே தவிர மேலான தர்மயுகம் எனும் பேறு அடைய முடியாது.
தேர்ந்து உணர்ந்தவரே வாழ்வார்
கூறிய வாசகத்தை உள்ளம்
கொண்டவர் குருவைக் காண்பார்”
நாம் தொடர்ச்சியாக அவர் காட்டிய வழியில் செல்ல வேண்டும். விடாது முயற்சிக்க வேண்டும். நம் சுய முயற்சியால் மட்டுமே கலியைக் கடக்க இயலாது என்பது உண்மைதான். விடாமல் முயற்சிக்க துணையாக இருக்க வேண்டி கலியையும் கலியுகத்தையும் அழிக்க வந்த நாட்டுக்குப் பெரிய வைகுண்டரிடம் அவரது அருளே நமக்குத் துணையாக இருக்க வேண்டி நாம் தினமும் முறையம் வைக்க வேண்டும். ஏனெனில் நம் சுயமுயற்சியால் ஆகாத காரியங்கள் பல இறைவன் மீது நாம் வைக்கும் நம்பிக்கையாலும் அன்பினாலும் ஆகும் என்பது நாம் அறிந்ததே.
பக்தி இல்லாதார் எல்லாம் பாழ் எனச் சொல்லி நின்றார்”
-அய்யா
நம்பியே அவர் வழியில் நடப்போம்! நல்யுகம் படைப்போம்!
அய்யா உண்டு
வாழ்க்கை இரகசியம்
– மீனா சுகின் அம்மா- 9344813163
எமதூதனும் பூலோகத்திற்கு வந்தான். அப்போதுதான் அவனுக்கு ஓர் உண்மை தெரிய வந்தது. அது என்னவென்றால் ஒரு பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் போது அவளுடைய கணவன் ஒரு விபத்தில் இறந்துவிட்டான் என்றும் இப்பொழுது இவளுக்குப் பெண் குழந்தை பிறந்து ஒரு வாரம் தான் ஆகின்றது என்றும் தெரிந்து கொண்டு அப்பெண்ணின் குழந்தை மேல் இரக்கம் கொண்ட அவன் அப்பெண்ணின் உயிரைப் பறிக்காமல் திரும்பிச் சென்றுவிட்டான்.
இதை அறிந்து கொண்ட எமன் மிகவும் கோபத்துடன், தன் தூதரிடம் என்னுடைய கட்டளைகளை நிறைவேற்றுவது மட்டுமே உன்னுடைய பணி. அதைச் செய்யாமல் நீ திரும்பி வந்த காரணத்தால் நீ பூலோகத்திற்குச் சென்று மனித வாழ்க்கையின் தேவ ரகசியங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறி எமதூதனை ஒரு கண், கால், கை ஆகியவற்றை ஊனமாக்கி அனுப்பிவிட்டு ஒவ்வொரு தேவ ரகசியங்களையும் நீ தெரிந்து கொள்ளும்போது உன் ஒவ்வொரு ஊனமும் சரியாகி நீ எமலோகத்தை மீண்டும் அடைவாய் என்று சபித்து அனுப்பினார்.
எமதூதனும் ஒரு கண் கைகால் ஊனத்துடன் பூலோகத்தில் ஒரு மண்டபத்தில் பசியாலும் குளிராலும் நடுங்கிக் கொண்டிருந்தான். அப்போது, அந்த வழியாக வந்த வியாபாரி ஒருவன் எமதூதனைப் பார்த்து யார் என்று கேட்க, இவன் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான். எமதூதன் முகத்திலேயே பசியின் மயக்கம் இருப்பதை அறிந்த வியாபாரி அவனை தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றான். வியாபாரத்தில் போதிய அளவு வருமானம் இல்லாத காரணத்தினால் மிகவும் விரக்தியில் இருந்த வியாபாரியின் மனைவி தன் கணவருடன் மற்றொருவர் வீட்டுக்கு வந்திருப்பதைக் கண்டு கோபத்தில் எமதூதனைப் பார்த்துவிட்டு தன் கணவனை மட்டும் வீட்டுக்குள் அழைத்தாள்.
மேலும் இரக்கக் குணம் கொண்ட அந்த வியாபாரி தன் மனைவியிடம் சென்று அம் மனிதனைப் பற்றி பரிந்து பேசினார். எப்படி என்றால், அவரால் பிற மனிதர்களைப் போன்று உழைத்துச் சாப்பிட முடியாது. அவரின் ஊனத்தைக் கண்டு மட்டுமே இங்கு அழைத்து வந்தேன். உடனே, வியாபாரி மனைவி எமதூதனை வீட்டுக்குள் அழைத்து உணவளித்தாள். இதனால் முதல் ரகசியத்தை அறிந்து கொண்ட எமதூதனின் கால் ஊனம் சரியானது.
பின்னர் தொடர்ந்து பத்து வருடங்களாக எமதூதன் வியாபாரியிடம் பணியாளாக இருந்து வந்தான். ஒரு நாள் வெளியூருக்குச் சென்ற பொழுது அங்கு ஒரு பெரிய செல்வந்தரையும் அவருடன் இருந்த பெண் குழந்தையும் கண்டார். எமதூதன் அக்குழந்தையைக் கண்டதும் இவருக்குள் ஓர் அதிர்வலை ஏற்பட்டது. ஏன் என்று தெரியாமல் அக்குழந்தையைப் பற்றி விசாரித்த போது தான் தெரிந்தது அக்குழந்தையின் மீதுதான் இரக்கம் கொண்டு இதன் தாயின் உயிரைப் பறிக்காமல் வந்தான் என்றும், அதன் பின் இதன் தாய் இறந்த பிறகு ஒரு செல்வந்தர் அக்குழந்தையை எடுத்து வளர்க்கிறார் என்பதையும் தெரிந்து கொண்டார். இதன் மூலம் இரண்டாவது தேவ ரகசியத்தையும் அறிந்து கொண்டார். இதனால் இவரின் கை ஊனமும் சரியானது.
பின்பு ஒருநாள் இந்த வியாபாரிடம் ஒரு செல்வந்தர் வந்து சில சந்தன மரக் கட்டைகளைக் கொடுத்து பெருந்தொகையையும் கொடுத்து ஒரு பெரிய கட்டிலைச் செய்யுமாறு கூறினார். அப்பொழுது அவர் குறித்த நாளுக்கு முந்தைய நாள் இரவு வியாபாரி, இன்னும் கட்டிலைச் செய்து முடிக்கவில்லை என்று எமதூதனிடம் கூறி வருந்திக் கொண்டிருந்தான். அப்போது எமதூதன் ஐயா நீங்கள் கவலை கொள்ளாதீர்கள். இந்தக் கட்டிலை எரியூட்டுவதற்கு தயாராக வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்.
மறுநாள் சில ஆட்கள் வியாபாரியைத் தேடி வந்து அந்தச் செல்வந்தர் இறந்து விட்டதாகவும் மேலும் சந்தனக் கட்டையில் அவரை எரிப்பதற்காக அந்தக் கட்டிலை வாங்கிச் சென்றனர். அப்பொழுது வாழ்க்கையின் மூன்றாவது ரகசியத்தையும் தெரிந்து கொண்டார் எமதூதர். இதனால் கடைசி ஊனமாகிய கண்ணும் சரியானது. உடனே, அவன் எமலோகம் புறப்பட தயாரானான். அப்பொழுது வியாபாரிக்கு ஒன்றும் புரியவில்லை. எமதூதனைப் பார்த்து எப்படி உனக்குத் தெரியும். அந்தச் செல்வந்தர் இறந்து விடுவார் என்றும் மேலும் நீ என்னிடம் வரும் பொழுது ஊனமாக வந்தாய் இப்பொழுது அது எவ்வாறு சரியானது என்றும் குழப்பத்துடன் வினவினார்.
உடனே எமதூதன் தான் யார்? எதற்காக இங்கு வந்தேன்? என்ற உண்மைகளைக் கூறி மனித வாழ்க்கையில் உள்ள மூன்று தெய்வ ரகசியங்களைத் தெரிந்து கொண்டேன். என் சாபம் நிறைவேறி என் ஊனமும் சரியாகிவிட்டது. இனி எமலோகம் செல்கிறேன் என்று கூறினான். உடனே வியாபாரி அந்த மூன்று ரகசியங்களையும் எனக்கும் கூற முடியுமா என்று கேட்டார். உடனே எமதூதன் கூற ஆரம்பித்தார். முதலாவதாக உன் மனைவி என் மீது கோபம் கொண்டாள் அப்பொழுது அவள் முகத்தில் தரித்திர தேவியைக் கண்டேன். ஆனால் பத்து நிமிடத்தில் அவள் மனம் மாறி எனக்கு அன்னமிட்டாள். அப்பொழுது அவள் முகத்தில் அன்னை மகாலட்சுமியைக் கண்டேன். இதுதான் வாழ்க்கையின் முதல் ரகசியம்.
ஒரு மனிதன் இந்த உலகத்தில் பணக்காரனாக இருப்பதற்கும், ஏழையாக இருப்பதற்கும் அவனுடைய எண்ணங்கள் தான் காரணம் என்று தெரிந்து கொண்டேன். ஒருவரின் வாழ்க்கையில் தரித்திரம் போய் மகாலட்சுமி வருவதற்குப் பத்து நிமிடங்கள் தான் தேவை என்றும் தெரிந்து கொண்டேன். அது எப்போது எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம் என்றும் தெரிந்து கொண்டேன். இதுதான் முதல் ரகசியம்
பத்து வருடம் கழித்து அந்தப் பெண் குழந்தையைப் பார்த்தோம் அல்லவா அந்தக் குழந்தையின் அம்மா இறந்து விட்டால் யார் பார்த்துக் கொள்வார்கள் என நினைத்து அக் குழந்தையின் அம்மாவின் உயிரை எடுக்காமல் சென்றேன். ஆனால், அவள் இறந்த பிறகு அக்குழந்தையைப் பாதுகாக்க அன்பான வசதி படைத்த ஒரு செல்வந்தனை இறைவன் தயாராக வைத்திருக்கிறான். ஒரு எமதூதனாகிய எனக்கே அந்தக் குழந்தையின் மீது கருணை இருக்கும்போது இந்த உலகை படைத்த இறைவனுக்கு இருக்காதா? அவன் அனைத்திற்கும் ஒரு வழி வைத்துக் கொண்டுதான் அந்த உயிரை எடுப்பான். இதுதான் நான் உணர்ந்த இரண்டாவது தேவ ரகசியம்.
மூன்று நாட்களில் சாகப் போகிறவன் இன்னும் 20 வருடங்கள் தான் உயிரோடு இருக்க போகிறேன் என்று விலை உயர்ந்த கட்டிலைச் செய்யக் கூறினான். ஆனால் எனக்கு அவன் மூன்று நாளில் சாகப் போகிறான் என்று தெரியும். அதனால் தான் கட்டிலைச் செய்ய உதவவில்லை. உண்மையில் மக்கள் ஏதோ அதிக காலம் வாழ்ந்து விடுவதைப் போல் நினைத்துக் கொண்டு மனதையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மரணம் எப்போது வேண்டுமானாலும் வரலாம். நேற்று இருந்தவன் இன்று இல்லை. நாளை இருப்பவன் மறுநாள் இல்லாமல் போகலாம். இதுதான் இந்தக் கலியுகத்தினுடைய உண்மை. இதுதான் மூன்றாவது தேவ ரகசியம்
.
இந்த உண்மையை அறியாமல் மனிதன், அகந்தையினால் தன்னைத்தானே அடித்துக் கொண்டிருக்கிறான். இதுதான் துக்கங்களுக்கு மூலக் காரணம் என்று கூறி சென்றான். எனவே அய்யாவின் அன்புப் பிள்ளைகளாகிய நாம் இந்த மூன்று ரகசியங்களையும் உணர்ந்து செயல்பட்டு மகிழ்வோடு பிறருக்கு உதவி செய்து வாழ்வோம்.
அய்யாஉண்டு
அய்யா உண்டு
விழிப்புணர்வு பதிவு
– கிருஷ்ணமூர்த்தி அய்யா 8431659715
யோகா, வாசி போன்ற தியான பயிற்சிகள் பின்பற்றவேண்டியது மிகவும் அவசியம் ஆதலால்தான், அய்யாவழி மக்களுக்கு உச்சிப்படிப்பு, திருஏடு வாசிப்பு மிக அவசியம் என்று கருதியே காலத்தின் கட்டாயமாக அய்யா நமக்காக இவற்றை அருளியுள்ளார். இவையெல்லாம் மனோபலத்தை அதிகரிக்கும் உயிரையும் உடலையும் புதுப்பிக்கும் மகாமந்திரங்களாகும்.
படித்த இளைஞர்கள் முக்கியமாக ஆண்களுக்கு மட்டுமே அதிகப்படியாக இதய நோய் வருகிறது என்றால் இதை சாதரணமாக எண்ண வேண்டாம். தீய பழக்கங்கள் மது, புகைபிடித்தல் போன்றவைகளில் ஆண்கள் அதிகமாக ஈடுபடுவதாலும் குடும்ப மற்றும் சமூக சூழல்களால் மன அழுத்தம் ஏற்ப்படுவதாலும் இதய பாரம் தாங்காமல் அழுத்தப்பட்டு இறப்புகள் ஏற்ப்படுகிறது.
மனோபலம் கண்டிப்பாக தேவை துவையல் தவசு சான்றோர்களுக்கு மனோபலத்தை அதிகரிக்கவே அய்யா பயிற்சி கொடுத்தார். ஆதலால் சற்று நின்று கவனித்து வாழ்வில் பயணம் செய்யுங்கள் அன்பானவர்களே. நம் முன்னோர்கள் ஆன்மீகத்தில் சைவ முறையை பின்பற்றியது விளையாட்டாக அல்ல. இன்று அந்த தமிழருடைய உணவு முறை அழிந்துவிட்டது. இரவு நேரங்களில் எண்ணையில் பொரிக்கப்பட்ட வறுக்கப்பட்ட உணவுகளை எடுத்துக்கொண்டு செரிக்காத உணவுகளின் தீங்கினால் நம் இறப்பை நாமே தேடிக்கொள்கிறோம்.
உடல் உழைப்பு இல்லாமல் வியர்வைகள் வெளியேறாமல் இளைஞர்களுக்கு பலருக்கும் உழைப்பு தெரியாமல் போய்விட்டது. அதுவும் உடலுக்கு ஆபத்தே. என்னதான் சொன்னாலும் ஓர் இழப்பை சந்திக்கும் முன்னர் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். சிறு விழிப்புணர்வுக்காக இப்பதிவை பதிவு செய்தேன். ஓரளவு சரிசெய்ய முயற்சியுங்கள் அன்பானவர்களே!