தர்மயுக முரசு நவம்பர் 2022
அய்யாவின் அருளால் எந்நாளும்நன்னாளே
-அசோக்குமார் அய்யா – 009607704901, 8012174032.
கண்டானை கண்டேன் கார்த்திகை மாதமதில்
தெய்தியிருபத்தேழில் சிறந்தவெள்ளி நாளையிலே
சுருதியுடன் நித்திரையில் சுபக்கியான லக்கமதில்
நாதனென் னருகில் நலமாக வந்திருந்து
சீதமுடனெழுப்பிச் சொன்னாரே காரணத்தை”
ஆகமத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து ஆகமத்தைப் படித்து ஆகம கருத்துக்களை அகத்தில் பதித்து அதன்படி நடந்து ஆண்டவனை அகத்தில் சுமந்து ஆனந்தமாய் வெற்றிநடை போட்டு அகில ஜோதிகளாகப் பிரகாசிக்கும் தர்மயுக முரசு வாசகர்கள் அனைவருக்கும் இனிய “அகிலத்திரட்டு அம்மானை” உதயதின நல்வாழ்த்துகள்.
அகில ஜோதிகளே: நாம் எல்லோரும் கார்த்திகை மாதம் 27 ஆம் தேதியை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். ஆம் நம் வாழ்விற்கு வழிகாட்டின நன்னாள். நமக்கு உண்மையான விடியலை தந்த பொன்நாள். அந்நாளை நாம் சீரும் சிறப்புமாக கொண்டாடி மகிழ்வோம்.
நமது கொண்டாட்டம் ஆன்மிக தேடலுக்கு வழிகாட்டியாக அமைய வேண்டும், ஆன்மிக ஆர்வலர்கள் அதிகரிக்க வேண்டும், மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்கிற வரையறைக்குள் நிற்க வேண்டும், இளைஞர்கள் மத்தியில் இறை நாட்டம் பெருகச் செய்ய வேண்டும், பாராயணக்காரர்கள் பன்மடங்கு அதிகரிக்க வேண்டும். எல்லோரும் பணிவிடைக்காரர்களாகப் பக்குவம் பெற வேண்டும். ஆன்மிகவாதிகளே உலகத்தின் நிஜ கதாநாயகர்கள் என்ற உண்மையை மலரச் செய்ய வேண்டும். மனித இனத்தின் இலக்கு என்ன என்று வழிகாட்டிட வேண்டும். இளைஞர்களின் பன்முக திறமைகள் அனைத்தும் ஆன்மிக தேடலுக்கு வித்திட வேண்டும் போன்ற அனைத்துவிதமான நன்மைதரும் கொண்டாட்டமாக நமது அகிலத்திரட்டு அம்மானை உதயதின விழா ஏற்பாடுகளைத் துவங்குவோம்.
குறிப்பாக அன்றையதினம் ஆங்காங்கே சமய மாநாடுகளை ஏற்படுத்தியும், அறப்பாடசாலை மாணவ மாணவிகளுக்கான பன்முக திறமைகளை வெளிப்படுத்தும் போட்டிகளை நடைமுறைப் படுத்தியும், ஆகம விழிப்புணர்வு ஏற்படுத்த அகில ஊர்வலத்தை செயல் படுத்தியும், அகிலத்திரட்டு பாராயணம் மற்றும் பாராயண உரை எங்கும் ஒலிக்கச் செய்யும் விதமாக நடத்திக் காட்டி கொண்டாடி மகிழ்வோம்.
நமது அகிலத்திரட்டு அம்மானை உதயதின விழா கொண்டாட்டமானது கலிக்கு ஒரு சாட்டை அடியாக இருக்க வேண்டும். உலகமே இவ்விழாவை உற்றுப் பார்க்க வேண்டும். வாழ்ந்தால் அய்யாவழி மக்கள் போல் வாழ வேண்டும் என அனைவரும் சொல்ல வேண்டும். நமது செயல்பாட்டைக் கண்டு அரசாங்கமே இந்நாளைப் பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும்.
ஆகம உதயநாள் அன்று ஆகம தர்மம் செய்து எல்லோர் இல்லங்களிலும் ஆகமம் இருக்கும் படி வழிவகை செய்வோம்.
ஆகம உதயநாளானது நம் ஒவ்வொருவர் வாழ்விலும் வெளிச்சம் தந்த நாள். எனவே அன்றைய தினம் நம் இல்லங்களிலும் தாங்கல்களிலும் நிறைய தீபங்கள் ஏற்றி அகில ஜோதி திருநாளாகக் கொண்டாடி மகிழ்வோம்.
மேலும் அன்றைய தினம் புதிதாகக் கல்வி கற்கத் துவங்கும் மழலைகளுக்குத் திருநாமத்தில் அய்யா என்று எழுதச் சொல்லி கொடுத்து அவர்கள் சிறந்த ஞானிகளாக திகழ வழிவகைச் செய்வோம்.
அன்பானவர்களே: அகிலத்திரட்டு அம்மானை உதயதின விழா கொண்டாட்டமானது கலியுக ஆசாபாசத்திற்கு நம்மை தள்ளிவிடாமல் கலியைக் கடந்து தர்மயுக வாழ்வு பெற வழிவகுக்கும் விழாவாக செயல்படுத்தி உலகத்தின முன்னோடிகளாக திகழ்ந்து தர்மயுக வாழ்வு பெறுவோம்
கொண்டாடுவோம் கொண்டாடுவோம்!
அகிலத்திரட்டு அம்மானை உதயதினவிழாவை கொண்டாடுவோம்!!
“நானுரைக்க நீயெழுதி நாடுபதினாலறிய
யானுரைக்க நீயெழுதி அன்போர்கள் தங்கள் முன்னே
வாசிக்கக்கேட்டு மகிழ்ந்திருந்த அன்போர்க்கு
பூசித்து நின்ற பூரணங்கள் கிட்டுமடா”.
– அகிலத்திரட்டு அம்மானை
1.மூன்றான ஜோதி யார்?
2.மூவாதி மூவர் யார்?
3.பத்து சிரசு உடையவன் யார்?
4. மள்ளர் என்பவர் யார்?
5. நால் வேதம் எது?
அன்புக்கொடி சொந்தங்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம்: அன்பானவர்களே: தாங்கள் சார்ந்துள்ள தாங்கல் வரலாற்றை நமது தர்மயுக முரசு பத்திரிகையில் வெளியிட வேண்டும் என்றால் உங்கள் தாங்கலின் வரலாற்றை அழகாக எழுதி 0096893145654 என்ற வாட்சப் எண்ணிற்கு தாங்கலின் புகைப்படத்தோடு சேர்த்து அனுப்பி தாருங்கள். அதனை வருகின்ற மாதங்களில் நமது தர்மயுக முரசு பத்திரிகையில் பதிவு செய்து வெளியிடலாம்.
உச்சிப்படிப்பு– விளக்கம்
கா.த.லிங்கேஷ் அய்யா – 9842679780
*சிவசிவா த.ம. அ.அ.சி அரிநன்றாக குருவே துணை*
சிவசிவா தெந்தேனன்னாய் தென்னானாய் தெந்தேனன்னாய் தென்னானாய்
சிவசிவா தன்னானாய் தன்னானாய் தன்னானாய் தன்னானாய்
சிவசிவா தானானோம் தானானோம் தானானோம் தானானோம்
சிவசிவா நானானோம் நானானோம் நானானோம் நானானோம்
சிவசிவா தன்னேனன்னம் தந்தேனன்னம் தன்னேனன்னம் தந்தேனன்னம்”
அன்போர்களே: நாம் மேற்கண்ட உச்சிப்படிப்பின் விளக்கத்தை புரிந்து கொள்வதற்கு உதவியாக கீழ்க்கண்ட அகிலத்திரட்டு மற்றும் அருள்நூல் வாசகங்கள் அமையும் என்பதால் அதன் பொருள் விளக்கத்தை முதலில் பார்ப்போம்.
“தெய்வ மாதவருமாகி வழிதனில் வன்னியாகி வகுத்திடும் மகவோராகி அழிவில்லா பதிதான் ஆள்வார்”. இந்த அகிலத்திரட்டு வாசகம், பரம்பொருளான நாராயணரே, தன்னுடைய திருவருள் சக்திகளான சப்த கன்னியராகவும், தான் படைத்த தேவர்களின் அம்சமான சான்றோர் மக்களாகவும், நால்வித பிறப்புகளில் அடங்காத நெருப்பாகவும் இருக்கிறார் என்பதை நமக்கு உணர்த்துகிறது.
“ஒன்றாகி இரண்டாகி உலகெங்கும் நானாகி”. இந்த சிவகாண்ட அதிகாரப் பத்திரம், ஒன்றாகி நின்ற இறைவனே, இரண்டாகி, நான்காகி, எட்டாகி, 16, 32 எனப் பல்கி கோடி கணக்கிலாகி உலகம் முழுதும் அவனே நிறைந்திருக்கிறான் என்பதை விளக்குகிறது.
“ஒன்றும் இரண்டும் மூன்றும் நாலாய் அஞ்சாய் உனை வகுத்தேன்” எனும் வாசகம், நம் உடற் கூட்டுக்குள்ளே இருக்கும் 6 ஆதாரங்களால் உண்டான 5 அறைகளிலும் 5 தொழில்களைச் செய்யும் பஞ்சபிதாக்களான பிரம்மா, விஷ்னு, ருத்திரன், மகேஷ்வரன், சதாசிவம் ஆக நாராயணரே அமர்ந்து நம்மை படைத்திருக்கிறார் என்பதை விளக்குகிறது.
“ஏகமதாய் நிறைந்த பரன் இருந்துலகை ஆளுகிறார்”. எனும் வாசகம், தனக்கு நிகராக எதுவும் இல்லாத, எதற்கும் கட்டுபடாதவனாய் ‘ஏகன்’ எனும் திருநாமத்தில் அனைத்து உயிரினத்தினுள்ளும் நிறைந்து, பரம்பொருளாய் இவ்வுலகை ஆட்சி செய்கிறார் இறைவன் என்பதை விளக்குகிறது.
“தன்னை அறிந்ததுண்டால் தலைவனை நீ அறிவாய் மகனே”. எனும் வாசகம், நாம் யார்? நமக்கும் பிரபஞ்சத்திற்கும் என்ன தொடர்பு? நமக்கும் இறைவனுக்கும் என்ன தொடர்பு? என்பதை நாம் அறிந்து (மேலே உள்ள 3 வாசகத்தின் விளக்கத்தையும் பார்க்கவும்) கொள்ளும் போது நம்மை படைத்த பரம்பொருளான நாராயணரைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் என்பதை விளக்குகிறது.
இனி உச்சிப்படிப்பு பகுதியின் விளக்கத்தைத் தொடர்ந்து காண்போம்.
‘தன்னானாய்’ என்னும் பதத்திற்குத், ‘தன்’ எனும் நானாக இருப்பதும் நீயே! என்பதே பொருளாகும். அதாவது பரம்பொருளான வைகுண்டரின் அம்சமாகவே ஜீவப்பொருளான நாம் இருக்கிறோம் என்பதே ஆகும். ‘தந்தேனன்னாய்’ என்கிற பதத்தைத் தந்தேன் + நன்னாய் எனப் பிரித்து பொருள் கொள்ள வேண்டும். அதாவது, நாம் நற்பேறைப் பெறுவதற்கு ஏற்ற வகையில், கர்ம கடனைக் கழிப்பதற்கு ஏதுவாக இவ்வாழ்வை அமைத்துத் தந்தவனும் பரம்பொருள் வைகுண்டமே என்பதே விளக்கமாகும்.
‘த.ம.அ.அ.சி’ என்ற 5 எழுத்துகளும் இங்கு 5 வார்த்தைகளாகப் பொருள் கொள்ளப் படுகிறது. இதில் ‘த’ என்பது படைக்கும் பிரம்மாவை குறிக்கும். ‘ம’ என்பது காக்கும் விஷ்னுவை குறிக்கும். ‘அ’ என்பது அழிக்கும் ருத்திரனைக் குறிக்கும். அடுத்த ‘அ’ என்பது 8 – யை குறிக்கும். 8 என்பது பூரணத்தைக் குறிக்கும். அதாவது அனைத்தையும் பூரணமாக அருளும் மகேஷ்வரனையே ‘அ’ என்பது குறிக்கும். ‘சி’ என்பது மறைக்கும் சதாசிவத்தைக் குறிக்கும். இந்த 5 இயக்கங்களையும் கையாளும் இறையவர்களே பஞ்சபிதாக்கள் ஆவர். மேலும் தமிழ் எழுத்துக்களைத் தனித்தனியாக உச்சரிக்கும் போது, உதாரணமாக, ‘அ’ என்பதை ‘ஆனா’ என்றும். ‘ஆ’ என்பதை ‘ஆவன்னா’ என்றும் சொல்வார்கள். ஆதலால் இங்கு, தானா மானா…..அ ஆனா சீனா என்று உச்சரிப்பதே சிறப்பானதாக அமைகிறது.
‘தெந்தேனன்னாய்’ என்கிற பதம் நம் உள்ளமாகிய அகத்தில், பரவெளியாக, பஞ்ச பிதாக்களாக(பிரம்மா, விஷ்னு, ருத்திரன், மகேஷ்வரன், சதாசிவம்) , அணுவுக்கும் அணுவாக ஒடுங்கும், தன்னிகரில்லாத ஏகனாக ஒடுங்கும் வைகுண்டரைத் தேடுவதற்கான இல்லியல்பான ஞானத்தை வழங்குபவனும் வைகுண்டரே என்பதைக் குறிக்கிறது. ‘தென்னானாய்’ என்கிற பதம், தர்மயுக பேறை அருளும் தென்திசையாக இறைவனே இருக்கிறார் என்பதை குறிக்கிறது. அதனால் தான் நாராயணர் தன்னுடைய கடைசி அவதாரத்தை ‘தெட்சணா மூலை’ என்ற தென்குமரி நன்னாட்டில் பிறப்பித்தார். தர்மயுக வாழ்வை பெறுவதற்காக பிறப்பெடுத்த மேலோகத்தார்களைத் ‘தென்மேனி சான்றோர்’ என்று அகிலத்திரட்டுச் சிறப்பிப்பதையும் நாம் உணர்வோம். “…தென்னாடுடைய சிவனே போற்றி…” என்ற முன் ஆகம வாசகத்தையும் இங்கு ஒப்பு நோக்குவோம்.
‘தானானோம்’ என்கிற பதம், தானாகிய நானே(வைகுண்டர்) அனைத்துமாக இருக்கின்றேன் என்பதைக் குறிப்பிடுகிறது. அதாவது இறைவனே உலகமாகவும் உலகப் பொருளாகவும் உரு மாறியிருக்கிறான் என்றும் கூறலாம். ‘நானானோம்’ என்கிற பதம், ‘நான்’ என்கிற உன்னுள்ளும் (நம்முள்) நானே(வைகுண்டம்) உறைகிறேன் என்பதை விளக்கிறது. ஆக ‘தானானோம்! நானானோம்!’ என இரண்டையும் இணைத்துப் பார்க்கும் போது, பிரபஞ்சமாக இறைவனே விரிந்துள்ளதையும், பிரபஞ்சத்தின் ஒவ்வொரு துகளுள்ளும் இறைவனே ஒடுங்கி உள்ளதையும் அழகாக விளங்கிக் கொள்ளலாம்.
‘தந்தேனன்னம்’ என்ற பதத்தைத், தந்தேன் + அன்னம் என்று பிரித்து பொருள் கொள்ள வேண்டும். ‘அன்னம்’ என்பதற்கு இரு வேவ்வேறு பொருள் இங்கு பொருந்தி வருவதைக் காணலாம். ஒன்று ‘உணவைக்’ குறிக்கும். மற்றொன்று ஞானத்தைக்’ குறிக்கும். நாம் உயிர் வாழ்வதற்கான உணவையும், நாம் நற்பேறு பெறுவதற்கான ஞானத்தையும் இறைவனே தந்தருள்கிறான் என்பதே இதன் பொருள்.
‘தன்னேனன்னம்’ என்பதற்கு உணவாகவும் ஞானமாகவும் இருப்பதும் நானே (இறைவனே) என்று பொருள் கொள்ளலாம்.
பொருள்: ஒவ்வொரு உயிரான நாமாக இருப்பதும், அந்த ஒவ்வொரு உயிருக்கும் கர்ம கடனை கழிப்பதற்கான நல்வழிகளைத் தந்தருள்வதும் பரம்பொருள் வைகுண்டமே என உணர்ந்து சிவசக்தியான உம்மையே போற்றுகின்றோம்.
நாராயணத்திலிருந்துப் பிரிந்து பஞ்ச பிதாக்களாகி நம் அகத்தினுள்ளே ஒடுங்கி, நம்மை இயக்குவது பரம்பொருள் வைகுண்டரே. அவரே நமக்கு ஞானாசிரியனாக துணை புரிகிறார் என உணர்ந்து சிவசக்தியான உம்மையே போற்றுகின்றோம்.
தன்னிகரில்லாத ஏகனாக நம்முள்ளே ஒடுங்கும் நாராயணரை தேடுவதற்கான இல்லியல்பான ஞானமாக இருப்பவரும், ஞானத்தின் திசையான தென்திசையாக இருப்பவரும் பரம்பொருள் வைகுண்டரே என உணர்ந்து சிவசக்தியான உம்மையே போற்றுகின்றோம்.
‘தன்’ என்கிற நாமாக இருப்பவர் பரம்பொருள் வைகுண்டரே என உணர்ந்து சிவசக்தியான உம்மையே போற்றுகின்றோம்.
“தானாகிய நானே பிரபஞ்சமாகவும் அதன் திரட்சியாகவும் விரிந்துள்ளேன்” எனும் இறை ரீங்காரத்தை அகத்தில் உணர்ந்து சிவசக்தியான உம்மையே போற்றுகின்றோம்.
“நான் என்கிற உன்னுள்ளும் நானே ஒடுங்குகின்றேன்” எனும் இறை ரீங்காரத்தை அகத்தில் உணர்ந்து சிவசக்தியான உம்மையே போற்றுகின்றோம்.
“உலகின் உணவாகவும் ஞானமாகவும் இருப்பதும் நானே! உங்களுக்குத் தேவையான உணவையும் ஞானத்தையும் தந்தருள்வதும் நானே!” எனும் இறை ரீங்காரத்தை மனதில் உணர்ந்து சிவசக்தியான உம்மையே போற்றுகின்றோம்.
– அடுத்த இதழில் முடியும்
அய்யா உண்டு
அகிலதிரட்டு அம்மானை மூலமும், உரையும்
-க. ரீகன் அய்யா- 0096893145654
குன்றுபோல் வந்த கொடிய படுபாவி
குரோணிதனைச் செயிக்கக் கோபம் வெகுண்டெழுந்து
சுறோணித வேதன் துடியாய் நடந்தனராம்”
குரோணியை ஆறு துண்டுகளாக வெட்டி அழிப்பதற்காக சிவபெருமானிடம் நாராயணர் வரத்தைக் கேட்டார். அவரும் குறோணியை ஆறு துண்டுகளாக வெட்டி வதைத்தாலும் இனி வரக்கூடிய ஒவ்வொரு யுகத்திலும் உமக்கு மாற்றினாய் (எதிரியாய்), வெட்டிய ஒவ்வொரு துண்டும் பிறப்பெடுக்கும். அப்படி பிறப்பெடுத்த ஒவ்வொரு துண்டையும் நீரே மீண்டும் பிறந்து அவனை அழிக்க வேண்டி வரும் என்று வரத்தைக் கொடுத்தார். வரத்தினை பெற்றுக்கொண்ட நாராயணர் உலக சமநிலையைக் கெடுக்க வந்த கொடிய பாவியான குறோணியை அழிப்பதற்காக பெரும் கோபத்துடன் புறப்பட்டுச் சென்றார்.
வேகத்தால் குறோணிதனை வெட்டி பிளக்கலுற்றார்
வெட்டினா ராறு மிகுதுண்ட மம்மானை
துண்டம தாறுந் தொல்புவியிலே போட்டு
பிண்டமதைச் சுமந்து போட்டனர் காணம்மானை”
நாராயணமூர்த்தி எப்போதும் பாற்கடலில் அனந்த சயனத்தில் பள்ளி கொண்டு இருக்கக் கூடியவர். அவர் அப்படியே பள்ளி கொண்டு இருந்தாலும் உலக இயக்கங்களை நடத்தக்கூடிய வல்லமை உடையவர். எப்போது உலக சமநிலை பாதிக்கப்படுகிறதோ, எப்போது உலகில் அதர்மம் மேலோங்குகிறதோ அப்போது திருவவதாரமெடுத்து அசுரர்களை அழிக்கக் கூடியவர். இப்போதும் குறோணி என்ற அசுரன் காரணமாக உலக நிலை பாதிக்கப்பட்டது. இறைவன் படைத்த உலகையே எடுத்து விழுங்க முற்பட்டான். ஆகவே உடனே நாராயணர் அவனை அழிக்க முற்படுகிறார். இப்படியாக நாராயணமூர்த்தி குறோணியை ஆறு துண்டுகளாக வெட்டிப் பிளந்து போட்டார். வெட்டப்பட்ட ஆறு துண்டுகளையும் தொல்புவி என்று சொல்லக்கூடிய இப்புவியிலே போட்டு விடுகிறார்கள்.
கொந்து கொந்தாகக் குளம்போலே குண்டுவெட்டி
உதிரமதை விட்டு உயர்ந்த பீடம் போட்டு
சதுரயுக மெனவே தான்வகுத்தாரோர் பீடத்தை”
இப்படி குறோணியினை ஆறு துண்டுகளாக வெட்டி அந்தத் துண்டங்களையும் புவியிலே இட்டாகி விட்டது. இப்போது அவன் ரத்தங்களை எல்லாம் ஒரு பெரிய குளம் போல குண்டு வெட்டி, பின் அதை உயர்ந்த பீடமாக அமைக்கப்பட்டது. இப்போது குறோணி அழிக்கப்பட்டு நீடிய யுகமானது நிறைவுக்கு வந்தது. எனவே அடுத்த யுகமாக சதுரயுகம் தோற்றுவிக்கப்படுகிறது
“அவ்வுகத் திலேயுதிரம் அசுரக் குலமாகி
முவ்வுகத்துப் பாவி முடிந்தவொரு துண்டமதை
குண்டோம சாலி எனவே கொடியவனாய்ப்
பண்டோர் குறோணி பாதகனாறு துண்டமதில்
வந்து பிறந்தான் சதுர வையகத்தி லம்மானை”
குண்டமசாலியானவன் முன்பு பிறந்த குறோணியை விடவும் மிகவும் மோசமாக அசுர குணத்துடனேயே பிறக்கின்றான். மேலும் அவன் உருவிலும் அவலட்சணம் உடையவனாக பிறந்தான். அவன் முகம் மந்த முகமாய் இருந்தது. அவன் உயரம் நானூறாயிரம் முழங்களாக (ஏறக்குறைய 186 கி.மீ) அதாவது 6,12,422 அடியாக இருந்தது அவன் கால் கைகள் 300 என்ற எண்ணிக்கையில் இருந்தது. மேலும் அது பார்ப்பதற்கு யானையின் துதிக்கையைப் போல பிரமாண்ட அளவில் இருந்தது.
அட்டைபோலே சுருண்டு அம்மிபோலே கிடப்பான்
மட்டைபோலே திரிவான் வயிறு மிகப்பசித்தால்
அன்னுகத்திலுள்ள அசுரக் குலங்களையும்
தன்வயிற்றுக் கிட்டுத் தடிபோலு ருண்டிடுவான்”
இப்படி மிகப்பெரும் உருவ அளவில் பிறந்த குண்டோமசாலிக்கு நன்மை தீமை என்பவற்றைக் கூட பகுத்து அறியாதவனாக மூடனாக இருந்தான். தன்னை முதற்கொண்டு இந்த உலகத்தில் காணக்கூடிய அத்தனையும் படைத்தவன் இறைவன் என்ற உண்மையை அறியாதவனாக அவன் இருந்தான். எந்த ஒரு செயல்பாடும் அற்றவனாக ஒரு அட்டையைப் போல சுருண்டு கொண்டு அப்படியே விழுந்து கிடப்பான்.
மேலும் அவனுக்குப் பசி என்று ஏற்பட்டால் அவன் யாரென்றும் எதுவென்று பார்ப்பதில்லை. அவன் கண்ணில் படுபவனவற்றை எடுத்து விழுங்கக் கூடியவனாக இருந்தான். அப்படி அவன் பசி அடங்காவிட்டால் தன்னுடைய குலங்களான அசுர குலங்களையே எடுத்து விழுங்கக் கூடியவனாக பெரும் மூடனாக இருந்தான்.
அப்படியே தின்று அவன் பசிகளாற்றாமல்
அய்யையோ வென்று அலறினன் காணம்மானை
மெய்யை யனான விறுமாவது கேட்டு
சிவனைத் தொழுது சொல்லுவா ரம்மானை”
இப்படி சில காலம் குண்டோமசாலி தன் அசுர குலங்களை உண்டு பசியாற்றினான். அப்படி தின்றாலும் அவன் பசி அடங்கவில்லை. எனவே அவன் பசியின் பொருட்டு “அய்யையோ” என்று அலறினான். இப்படி இவன் பூவுலகில் இட்ட சத்தமானது மேல் உலகத்திலும் கேட்கின்றது. இதனால் மேலுலகமான தவலோகம் திடுக்கிடுகின்றது. இதனைக் கண்ட நாராயணர் சிவபெருமானை வணங்கி இப்படி தவலோகம் தடுமாறக் காரணம் என்ன என்று கேட்கின்றார்.
எவனோ ஒருத்த னிட்டசத்த மானதிலே
தவலோக மெல்லாந் தானலைவ தேதனவே
மாயனது கேட்க வகுப்பா ரங்கீசுரரும்
ஆயனே நீயு மறியலையோ ஞாயமது”
மேலும் நாராயணர் சிவபெருமானைப் பார்த்து “தவமே தவப் பொருளே தாண்டவ சங்கரவனே” என்று புகழ்ந்து பேசுகின்றார். அதாவது உலக உயிர்கள் தவம் செய்து சிவபெருமானைக் கண்டு கொள்ளலாம். ஆனால் அந்த தவமாகவே இருக்கக்கூடிய பொருள் சிவமாகும். மேலும் அவர் தாண்டவம் ஆடக்கூடியவர். அப்படிப்பட்ட சிவபெருமானே, எவனோ ஒருவன் இட்ட சத்தத்தின் காரணமாக தவலோகமான இந்த மேல் உலகம் நிலை மாறுகிறதே அதற்கு என்ன காரணம் என்று கேட்கின்றார். அப்போது சிவபெருமான் நாராயணரிடம் கூறியதை தொடர்ந்து காணலாம்.
(தொடரும்)
அன்புக்கொடி சொந்தங்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம்: அன்பானவர்களே: தாங்கள் சார்ந்துள்ள தாங்கல் வரலாற்றை நமது தர்மயுக முரசு பத்திரிகையில் வெளியிட வேண்டும் என்றால் உங்கள் தாங்கலின் வரலாற்றை அழகாக எழுதி 0096893145654 என்ற வாட்சப் எண்ணிற்கு தாங்கலின் புகைப்படத்தோடு சேர்த்து அனுப்பி தாருங்கள். அதனை வருகின்ற மாதங்களில் நமது தர்மயுக முரசு பத்திரிகையில் பதிவு செய்து வெளியிடலாம்.
எல்லாம் அவன் செயல்
– ஐவி அம்மா – 9444741707
இவ்வுலகம் இறைவனால் தோற்றுவிக்கப்பட்டு இயக்கப்படுகிறது. அத்தகு இறைவன் மக்களை காக்கும் பொருட்டு எண்ணற்ற அவதாரங்களை எடுத்துக் கொண்டிருக்கின்றான். இறைவனால் படைக்கப்பட்ட இவ்வுலகம் இறைவன் எண்ணப்படியே நடக்கின்றன. இதனை,
“அய்யா நிச்சயித்தபடியல்லாது மனுஷன் நிச்சயித்தபடியல்ல அய்யாவே” என்னும் அருள்நூல் வாசகம் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கின்றது. இறைவனுக்கு உருவம் இல்லை. எனவே அருவ நிலையில் மனம், மொழி, மெய் ஒன்றிணைத்து வழிபடுவது சிறப்பு. வழிபடுவது என்று கூறுவதை விட வாழ்த்துவதே நலம் என்று கூறலாம்.
ஒவ்வொருவர் உணர்வின் மூலம் உணர்ந்து கொள்ள வேண்டியவனே பரம்பொருள் தாயாக தந்தையாக, நண்பனாக, சகோதரனாக, தோழியாக என எண்ணத்திற்கேற்ப நம்முள் உறைபவன் இறைவன். இதனை உணரத்தான் முடியுமே தவிர, அதனை வெளிப்படுத்த வார்த்தைகள் தேடினாலும் கிடைக்காது என்பதே உண்மை.
முதலில் இறைவன் உலகத்தார் அனைவருக்கும் பொதுவானவன் என்பதை உணர வேண்டும். இக்கலியுகம் மாயையால் நிறைந்தது. உலகக் காட்சி தெரிகின்றவரை கடவுள் காட்சியை நம் மனம் அறிய இயலாது. கலியுகத்தில் மக்களை கடைத்தேற்ற அய்யா வைகுண்டமாக அவதரித்தார். அருள் நூல், அகிலத்திரட்டு மூலம் மக்களைப் பக்குவப்படுத்திக் கொண்டிருக்கிறார். கலி மாயையிலிருந்து மீண்டு தர்மயுகம் செல்வதற்கு எளிதான ஒரு வழியையும் கூறுகிறது.
“மானமாக இருந்தால் மாளும் கலி தன்னாலே” என்னும் ஓர் அகில வாசகமே நம்மை தர்மயுகத்திற்கு அழைத்துச்செல்ல போதுமானதாக அமைந்துள்ளது கண்கூடு. எங்கும் நிறைந்திருக்கும் இறைவனது அருளல்லாமல் எதுவும் இயங்காது என்பதை உணர வேண்டும். அவனருள் இருந்தால் மட்டுமே அவனை வணங்க முடியும்.
“ஒரு புத்தியாகி உள்ளென்னைக் கொண்டோர்க்குப் புதுபுத்தி ஈந்து பூலோகம் ஆளவைப்பேன்” என்னும் வாசகம் மனத்தை அலைபாய விடாமல் ஒரே சிந்தனையில் வாழ வலியுறுத்துகிறது. எனவே, உலகத்தைப் படைத்தவன் நம்மைக் காப்பான் என்ற நம்பிக்கையோடு விதண்டாவாதங்களைத் தவிர்த்து, இறை நாமத்தை மனதில் தியானித்து வாழ்வோம். எல்லாம் அவன் செயல் என்ற எண்ணத்தை நம்முள் விதைப்போம்.
நடுதீர்ப்பு காலம் என்றால் என்ன?
– S. அன்ன செல்வம் அம்மா – 9443622222
கலியுகத்திற்கும் தர்மயுகத்திற்கும் இடைப்பட்ட நடுவில் உள்ள காலம் நடுதீர்ப்பு காலம். அவரவர் செய்த நன்மை தீமைகளுக்குப் பாவ, புண்ணிய தீர்ப்பு வழங்கும் நிகழ்வாகும். இத்தனை யுகங்களிலும் அவரவர் செய்த கர்ம வினைகளுக்கு ஏற்ப நீதி வழங்கும் செயலாகும்.
“கலியோ விளைந்து போச்சு சக்ராயுதத்திற்கு இரை காணும் பருவமாச்சே சிவனே அய்யா” – அருள் நூல்
இந்த வாசகம் அய்யா வைகுண்ட அவதாரத்தின் போது கூறியது. அய்யா கலி அழிக்கவே வைகுண்ட அவதாரமாக வருகிறார். கலியுகத்தை சூட்சமமாக முடிக்கும் அய்யா அடுத்ததாக நடுதீர்ப்பு நடத்தப் போகிறேன் என்பதை சக்ராயுதத்திற்கு இரை காணும் பருவமாச்சே என்று கூறுகிறார்
மேலும் அய்யா சீசருக்குச் சொன்ன அதிகாரப்பத்திரத்தில் செல்கிறார்..
“எல்லோருக்கும் அறியும்படியாக வாசிக்க
இன்பமாகக் கேட்டுக் கொள்ளுங்கள்
நான் தீர்ப்பு கேட்கும் வேளையிலே
உத்தரம் சொல்ல திறமையாய் இருங்கள்.
நாலாம் தீர்ப்பு சொல்லி வருகிறார் நம்மளையா
ஆகையால் தர்மத்தைச் செய்து தவத்தைப் பெருக்கி
உங்கள் சராசரத்தைத் தேடுங்கள் என் மக்களே”
– அருள்நூல்.
வைகுண்டராகிய நான் நடுதீர்ப்பு கேட்க வரும் போது நீங்கள் உங்கள் வாழ்க்கையில் நடந்த ஒழுக்க நெறிகளைச் சொல்ல தகுதி உள்ளவர்களாக இருங்கள். நீங்கள் பாவ வாழ்க்கையில் சிக்கிக் கொள்ளாமல் நீதி நேர்மையாய் தர்மத்தின் வழியில் நடந்து தவம் செய்து ஞானத்தோடு வாழுங்கள். நான் உங்களுக்கு அருளிய உபதேசத்தைக் கடைப்பிடித்து கண்ணியமாக வாழுங்கள். நீங்கள் நல்ல எண்ணத்தோடு சத்தியம் தவறாமல் நடந்தீர்கள் என்றால் நடுதீர்ப்பைக் கண்டு அஞ்ச வேண்டாம். நான் உங்களுக்குத் துணை இருப்பேன் என்கிறார்.
பொதுவாகவே நாம் மோட்சம், நரகம், நடுதீர்ப்பு, எமன், காலன், தூதன் இதுபோன்றவைகளில் நம்பிக்கைக் குறைந்தவர்களாக இருக்கின்றோம். எனவேதான் மக்கள் அறிந்து கொள்ளும் விதமாக மிகவும் தெள்ளத் தெளிவாகக் கூறுகின்றார். நடுதீர்ப்பு எப்படி நடக்கும் என்பதையும் தெளிவுபடுத்துகிறார்.
“பிரம்மனைப் பகைத்ததுண்டால் நீங்கள் பேசாமல் போய்விடுவீர்
விஷ்ணு பகைத்ததுண்டால் வெறியாட்டம் கொண்டிடுவீர்
உத்திரன் பகைத்ததுண்டால் உயிர் பிழைக்க மாட்டீரப்பா
காலனும் வந்துவிட்டால் உங்களை கைபிடியாய்க் கொண்டு போவான்
இத்தனை பேர் சேர்ந்து இருக்க ஈசன் என்ன செய்வேன் அப்பா
அவரவர்க்கு இட்ட குறை ஆதிமுனி என்ன செய்வேன்
நடுதீர்ப்புக் கேட்பதற்கு நாளடுத்து வருகுதப்பா
நடுதீர்ப்புக் கேட்டவுடன் நாடாள நான் வருவேன்
சீசன்மார் தன்னிடத்தில் மக்கள் தெளிவாகக் கேட்டிடுங்கோ
சொல்லுங்கப்பா அன்பருக்குத் துணையாய் இருந்திடுங்கோ
– அருள்நூல்
இங்கே நீதிபதிகள் மூன்று பேர் என்று சொல்லப்படுகிறது. அதாவது மும்மூர்த்திகள் என்று சொல்லக்கூடிய சிவன், விஷ்ணு, பிரம்மா என்பவர்கள். இவர்களுடைய தீர்ப்பை எதிர்நோக்கி கைபிடியாய் கொண்டு செல்ல காலன் காவல் நிற்பான். எனவே அப்போது என்னால் ஒன்றும் செய்ய இயலாது. அவரவர் முன் ஜென்ம கர்ம வினையின் பிரகாரம் அனைத்தும் நடக்கிறது. இத்தனை விதமான பரலோக சட்டவிதிமுறைகளோடு நடக்கும்போது நான் ஒன்றும் செய்ய முடியாது. ஆகையால் இப்போதே நீங்கள் ஞானமாக வாழ்ந்து புனிதம் அடைய வேண்டும். மேலும் நடு தீர்ப்பு கேட்கும் நாள் நெருங்கிவிட்டது. நடுதீர்ப்புக் கேட்டவுடன் வைகுண்ட நாராயணராகிய நான் இந்த உலகத்தை நேரடி ஆட்சி செய்ய வருகிறேன். இந்த விவரங்களைப் புத்தியுள்ள மக்கள் தெரியாத மக்களுக்குச் சொல்லிக் கொடுங்கள். அப்படி ஞான அறிவை சொல்லிக் கொடுக்கும் அன்பர்களோடு நான் எந்நாளும் உயிருக்கு உயிராக இருப்பேன் என்று நமது அய்யா கூறுகின்றார். நியாய நடு கேட்டு குற்றம் தீர்த்து ஆகாத்ததெல்லாம் அழித்து நரகத்திலிட்டு வாகாய் நரக வாயில் தனைப் பூட்டி என்று சொல்லப்படுகிறது. எனவே வைகுண்டருடைய உபதேசத்தின் படியாக வாழ்வோம்.
…… மீண்டும் தொடரும்
அய்யா உண்டு
அகில விடை
1.அய்யா வைகுண்டர்
2.சிவன் விஷ்ணு பிரம்மா
3.இராவணன்
4.இராமர்
5.உலகம்
அய்யா உண்டு
சைவ நெறியே அய்யாவழி
– ஹரி வெங்கடேஷ் அய்யா 8508518505
ஏன் சைவ உணவை உண்ண வேண்டும்?
மனிதர்கள் எந்த உணவை வேண்டுமானாலும் சாப்பிடலாம் எல்லாம் படைக்கப்பட்டது நமக்காகத்தான் என்ற கூற்று முற்றிலும் தவறானது. மிருகங்களைக் கொன்று உண்பது நிச்சயம் பாவமே. இதில் நமக்குச் சந்தேகம் ஒன்று தோன்றலாம். தாவரங்களுக்கும் உயிர் உள்ளது. விலங்குகளுக்கும் உயிர் உள்ளது. அப்படி இருக்க விலங்குகளைக் கொல்வது மட்டும் எப்படிப் பாவம் ஆகும்?
இந்த உலகில் ஒவ்வொரு உயிரும் மற்ற உயிரைச் சார்ந்து வாழும் படிதான் இறைவன் படைத்திருக்கிறார். தாவரத்தை மட்டும் தான் உண்ண வேண்டுமா விலங்குகளை உண்ணக்கூடாதா? என்ற சந்தேகம் நமக்கு எழும். பொதுவாக இப்படிப் பட்ட இரண்டு இக்கட்டான சூழ்நிலைகள் ஒரு சேர வரும் போது எந்தச் சூழ்நிலை குறைவான பாதிப்பையும் பாவத்தையும் கொடுக்குமோ அதையே நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்.
தாவரங்களை நாம் உட்கொள்ளும் போது அவைகளுக்கு ஏற்படும் வலி மிக மிக குறைவு. ஆனால் மிருகங்களைக் கொலை செய்யும் போது அவை தனது உயிரைக் காப்பாற்ற இறுதி வரை போராடும். தனது எதிர்ப்பை முழுமையாகத் தெரிவிக்கும். ஆனாலும், நாம் விடாமல் இரக்கமே இல்லாமல் வெட்டி சாப்பிடுவோம். இது முறையா? இதுதான் அய்யா நமக்குச் சொல்லி தந்த பொறுமையா? தன் தாயை இழந்த ஒரு கன்று தன் தாயின் நினைவில் வாடாதா? நம்மைப் போலேதானே மிருகங்களும்?
மனிதனைப் போலவே மிருகங்களும் கண், காது, மூக்கு, செவி, வாய் என்ற ஐம்புலன்களைக் கொண்டுள்ளது. ஆகவே, நம்மை வெட்டிக் கொன்றால் நமக்கு எப்படி வலிக்குமோ அது போல் விலங்குகளுக்கும் கட்டாயம் வலிக்கும். ஆனால், தாவரங்கள் அப்படி இல்லை. புலன்கள் குறைய குறைய உணர்வுகள்(வலிகள்) குறையும். தாவரங்கள் வெறும் ஒரே ஒரு புலன் கொண்டவை. ஆகவே, தாவரங்களுக்கு ஏற்படும் வலி மிக மிகக் குறைவு. ஆனால், மனிதனுக்கு ஈடாக ஐம்புலன்கள் கொண்ட மிருகங்களைக் கொன்று குவிப்பதைக் கொலை என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது?
இந்த ஐம்புலன்கள் ஐந்து அறிவுகள் எனப்படுகிறது. இது தவிர்த்து ஆறாவதாக பகுத்தறிவு இறைவன் மனிதனுக்குக் கொடுத்ததே எது நன்மை? எது தீமை? என்று பிரித்தறியவே. இந்தப் பகுத்தறிவு விலங்குகளுக்குக் கிடையாது. ஆகவே சிங்கம் புலி போன்றவை மான் போன்றவற்றை வேட்டையாடுவதை அதர்மம் செய்கிறது என்றும் சொல்ல முடியாது. ஆடு, மாடு போன்றவை தர்மம் செய்கின்றன என்றும் சொல்ல முடியாது. அவை படைக்கப் பட்டதே அத்தகைய இயல்புகளுடன்தான். ஆனால் மனிதனுக்கு தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு கொடுக்கப் பட்டுள்ளது.
எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம் எல்லாம் நாம் உண்ணதான் என்று சொல்பவர்களிடம் ஒரே ஒரு கேள்வி. எல்லாம் நாம் உண்ணதான் என்றால் உணவுக்காக மனிதனைக் கொல்வதும் சரிதானே. “இல்லை அப்படிச் செய்வது தவறு மனிதனும் விலங்கும் ஒன்றா?” என்று கேட்பவர்கள் தாவரங்களைக் கொன்று உண்பதும் விலங்குகளைக் கொன்று உண்பதும் ஒன்றுதான் என்ற கூற்றைக் கைவிட வேண்டும். ஏனெனில் மனிதனை விட ஒரே ஒரு அறிவு மட்டும் குறைவான விலங்குகளோடு மனிதனை ஒப்பிடும் போது மட்டும் “விலங்குகளும் மனிதனும் ஒன்றா?” என்று பிரித்துப் பார்க்கத் தெரிந்தவர்களுக்கு ஓரறிவு கொண்ட தாவரமும் ஐந்தறிவு கொண்ட விலங்கும் ஒன்று அல்ல என்று பிரித்துப் பார்க்கத் தெரிவதில்லை. ஆகவே பகுத்தறிவை பயன்படுத்தி அதர்மத்தைத் தவிர்த்துத் தர்மத்தை தேர்ந்தெடுக்க வேண்டியது நமது கடமை ஆகிறது.
உற்பனமாய் அறிந்தவர்களாயினும் ஒதுங்கி இருங்கோ…
அய்யா உண்டு
அகில விருத்தமும் விளக்கமும்
– பா. அசோக் குமார் அய்யா 009607704901, 8012174032
விருத்தம்: 8
சூரனைத்துணித்த சத்தி சூலமும் கடலில் முழ்கி
வீரமால்பதத்தைப் போற்றி விளம்புவாள் சத்திமாது
மூரனை செயிக்க முன்னே முர்ச்சூலமாய்சபித்த சாபம்
தீரவே வேணுமென்று திருப்பதம் வணங்கிநின்றாள்
விளக்கம்:
அம்மை உமையவள், முருக பெருமானின் கையில் சூலமாய் இருந்து, சூரரையும் அறுத்து விட்டுக், கடலில் மூழ்கி, திருமாலின் திருவடியைப் போற்றி வணங்கி “மாயவா முன்பு இந்த சூரர்களை அழிப்பதற்கு என்னைச் சூலமாய் சபித்த சாபத்தைத் தீர்த்து அருள வேண்டும்” என்று நின்றார்கள்.
சிவகாண்ட அதிகார பத்திரம்
– மாடசாமி அய்யா – 8973349046
சூத்திரம்:“வட்டக் கோட்டைக் கட்டுக்குள்ளே நட்டுவனார் கொட்டுகின்றார்“
அருஞ்சொற் பொருள்:
வட்டக் கோட்டை- பிறவி சுழல்
கட்டு- கட்டப்பட்ட உடல்
நட்டுவனார்- சதி சொல்லி ஆடவைப்பவர். இங்கே நம்மை ஆட்டுவிக்கும் பரம்பொருள்.
பொருள்: “பிறவி சுழலில் நீங்கள் எடுத்த உடலுக்கு உள்ளே பரமாத்மாவாய் இருந்து உங்களின் கர்ம வினைக்கேற்ப உங்களை ஆட பண்ணுகிறவன் நானே. நானே உங்களின் பாவ புண்ணிய கணக்குகளைப் பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.
விளக்கம்: மனிதன் தான் செய்த கர்ம வினைகளுக்கு ஏற்பவும், தன் முயற்சியாலும் செயல் படுகிறான் என்று எண்ணுவது தவறு ஆகும். மனிதனின் சக்திகள் அனைத்தும் இறைவனிடமிருந்து வந்தவை. மனிதனின் கர்ம வினைகளுக்கு ஏற்ப இறைவனின் இச்சைப்படியே மனிதன் ஆடுகிறான்.
இறைவன் மனிதனின் உடலுக்குள் பரமாத்வாக இருந்து (நடுவராக) மனிதனின் நல்வினை மற்றும் தீவினையைச் சாட்சியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அதாவது மனிதனின் செயலுக்குச் சக்தியளித்து, அவனை இயக்கி, அவன் வினைகளுக்குச் சாட்சியாக இருக்கிறார். எனவே அய்யா ” வட்டுக்கோட்டை கட்டுக்குள்ளே நட்டுவனார் கொட்டுகிறார்” என்கிறார். இறைவன் நமது உடலுக்குள், சாட்சியாகவும், நம்மை ஆட்டுவிப்பவராகவும் இருக்கிறார் என்பது சூத்திரக் கருத்து.
சூத்திரம்:“வட்டக் கோட்டைக் கட்டுக்குள்ளே நட்டுவனார் கொட்டுகின்றார்“
அருஞ்சொற்பொருள்:
வட்டக் கோட்டை- பிறவி சுழல்
கட்டு- கட்டப்பட்ட உடல்
நட்டுவனார்- சதி சொல்லி ஆடவைப்பவர். நடுவர், இங்கே நம்மை ஆட்டுவிக்கும் பரம்பொருள்.
பொருள்: “பிறவி சுழலில் நீங்கள் எடுத்த உடலுக்கு உள்ளே பரமாத்மாவாய் இருந்து உங்களின் கர்ம வினைக்கேற்ப உங்களை ஆடப் பண்ணுகிறவன் நானே. நானே உங்களின் பாவ புண்ணிய கணக்குகளை பார்த்துக் கொண்டும் இருக்கிறேன்.
விளக்கம்: மனிதன் தான் செய்த கர்ம வினைகளுக்கு ஏற்பவும், தன் முயற்சியாலும் செயல் படுகிறான் என்று எண்ணுவது தவறு ஆகும். மனிதனின் சக்திகள் அனைத்தும் இறைவனிடமிருந்து வந்தவை. மனிதனின் கர்ம வினைகளுக்கு ஏற்ப இறைவனின் இச்சைப்படியே மனிதன் கர்ம வினைகளை அனுபவிக்கிறான். அதாவது இறைவன் அவனது கர்ம வினைப் பலனை அவனுக்கு ஊட்டுவிக்கிறார்.
மேலும் மனிதனுக்கு அளிக்கப்பட்ட சிறு சுதந்திரத்தின் காரணமாக மனிதன் தன் சுயமதியால் யோசித்துச் செயல்படுவதால் அவனின் செயல்களுக்குச் சக்தி இறைவனிடமிருந்தே வருகிறது.அதாவது அவனின் இயக்கத்திற்கு மூல காரணம் இறைவனே. மேலும் இறைவன் மனிதனின் உடலுக்குள் பரமாத்வாக இருந்து (நடுவராக) மனிதனின் நல்வினை மற்றும் தீவினையைச் சாட்சியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார். எனவே அய்யா ” வட்டுக்கோட்டை கட்டுக்குள்ளே நட்டுவனார் கொட்டுகிறார்” என்கிறார். இறைவன் நமது உடலுக்குள், சாட்சியாகவும், நம்மை ஆட்டுவிப்பவராகவும் இருக்கிறார் என்பது சூத்திரக் கருத்து.
சூத்திரம்:
“சொன்னேனென்று எண்ணாதே என்சொருபம் அறிவாயோ“
அருஞ்சொற் பொருள்:
சொன்னேனென்று- மேலே சூத்திரத்தில் சொன்ன விசயங்களை நான் சொல்லியது என்று.
எண்ணாதே- எண்ணி நடக்காமல் அல்லது கடைப்பிடிக்காமல் இருத்தல்
என்சொருபம்- உனது இதயத்தில் இருக்கும் சாட்சியான பரமாத்மா வடிவம்
பொருள்: நான் சொல்லிய எனது பெருமையை உனது சிந்தையில் நினைத்து தியானித்து என்னை அடையும் வழியில் ஒழுகாவிடில், நீ உனக்குள் ஒளிரும் என்னை அறிய மாட்டாய்
விளக்கம்: மனிதன் உபதேசம் பெற்றால் மட்டும் போதாது. உபதேசத்தைக் கடைபிடித்து ஒழுகுதல் வேண்டும். *”அஹம் பிரம்மாஸ்மி*” என்று வேதம் கூறினாலும் அதை உணர்வாரில்லை. அதை உணர யமம், நியமம் முதலிய ஒழுக்கங்களில் ஒழுகுதல் வேண்டும். தொடர்ந்து இறைவனை அகத்துள் உணர வேண்டும்.
இறைவன் நமது இருதய ஆசனத்தில் இருப்பதாக எண்ணித் தியானிக்க வேண்டும். இப்படித் தியானம் பழகப் பழக இறைவன் நமக்குள் இருப்பதை உணரலாம். இறைவன் நம்மோடு பேசாமல் பேசுவார். ஆன்மா அவரோடு இரண்டற ஒன்றும். இருதய கமலத்தில் இறைவனைப் பாவனையாய் பாவித்துத் தொடர்ந்து முயலாவிடில் இறைவனை அறிய இயலாது. எனவே அய்யா “சொன்னேன் என்று எண்ணாதே என்சொருபம் அறிவாயோ” என்கிறார்.
(தொடரும்)
அய்யாவின் அற்புதம்
– வைகுண்ட ராஜன் அய்யா – 9500791234
உயிர்க்கொல்லி நோய் ஒன்றால் பாதிக்கப்பட்ட ஒரு கிறிஸ்தவ குடும்பம், உனது கணவர் இன்னும் ஆறு மாதம் தான் உயிரோடு இருப்பான், அவனுக்கு நல்லது கெட்டது பண்ணிக் கொடு என்று மருத்துவர் சொல்லி விடவே மனக்கவலையில் படுத்த மனைவியின் கனவில் ஸ்ரீ ராமர் தோன்றி நான் இக்கலியில் வைகுண்டராய் வந்திருக்கிறேன். எனக்குப் பதி வைத்து பணிவிடை செய் உன் கணவன் உயிர் பிழைப்பான் எனச் சொல்ல திடுக்கிட்டு கண் விழித்த மனைவி அடுத்த நாளே தனது வீட்டில் அய்யாவுக்குச் சிறிய அறை அமைத்துப் பணிவிடை செய்து வந்தார்.
ஆறு மாதத்தில் இறந்து விடுவான் என டாக்டர் சொல்லி 20 வருடங்கள் ஆகிறது. இன்றும் அந்த மனிதர் வாழ்ந்து வருகிறார். ஒரு பதி பண்டாரமாக.
இரண்டு கிட்னியும் பெயிலியர் ஆகிவிட்டது, இனி காப்பாற்றுவது கடினம் என 12 ஆண்டுகளுக்கு முன் மருத்துவர்களால் கைவிடப்பட்ட ஒரு மனிதர் இன்றும் வாழ்ந்து வருகிறார். ஒரு பதி பண்டாரமாக.
15 வயதில் ,ஒரு பனைமர உயரம் அளவுக்கு ஆழம் உள்ள நீர் வற்றி விட்ட, வெடி வைத்து தகர்க்கப்பட்ட கூர்மையான பாறைகள் நிறைந்த தண்ணீர் இல்லாத மேலே ஏற படிக்கட்டுகள் இல்லாத ஒரு பாழும் கிணற்றில் தலைகீழாக விழுந்த ஒரு சிறுவன் உடலில் எவ்வித சிறைப்புகளும் இல்லாமல், மனிதர் எவருடைய உதவியும் இல்லாமல் மேலே வந்தான்.
அந்தச் சிறுவனின் தந்தை அந்த ஊர் அய்யாவழி பண்டாரம் ஒருவரிடம் சென்று கேட்க, அவர் அதற்கு முந்தைய நாள். கனவில் சுடுகாட்டில் ஒரு சிறுவனை வைத்து எரித்து கொண்டிருந்ததாகவும் அய்யா பண்டார வடிவில் வந்து எரிந்து கொண்டிருந்த அந்தச் சிறுவனை தனது பிரம்பால் தட்டி எழுப்பி வீட்டுக்குப் போகச் சொன்னதாகவும் அந்தச் சிறுவன் உயிர் பெற்று வீட்டுக்குத் திரும்பியதாகவும் கனவில் கண்டதாகச் சொல்லி உள்ளார்.
அந்தச் சிறுவன் இப்போது ஒரு பதி பண்டாரமாக, பணிவிடையாளனாக இருக்கிறான். அந்தச் சிறுவன் நான் தான். இது போன்ற அதிசயங்கள் அற்புதங்கள் அய்யாவால் மட்டுமே சாத்தியம். ஆன போதும் கூட இன்றளவும் அய்யாவைவை ஒரு சிவனடியார் என்றும், சித்தர் என்றும், சமூக போராளி என்றும் கூறும் அறிவிலிகள் இருக்க தான் செய்கிறார்கள்.
அதுவும் அய்யா அவதரித்த குமரி மாவட்டத்திலேயே. இதற்கெல்லாம் காரணம், அய்யாவழியின் பஞ்சபதிகளில் ஒன்றான சுவாமிதோப்பு பதியை நிர்வாகம் செய்பவர்கள் தங்கள் வருமானதிர்காக அய்யாவை எங்கள் முப்பாட்டன் என அகில திரட்டுக்கு விரோதமாக உளறி திரிவது தான்.
அய்யா உண்டு
திருக்கலியாண இகனை
– பா. கவிதா அம்மா 009609805601
சென்ற மாத தொடர்ச்சி….
அய்யாவும் அம்மைமார்களும் தெருவீதி வலம் வருகிறார்கள். அப்போது அய்யா
“சமுசாரி ஆகணுமே – பெண்ணே
தலையில் சோறு சுமக்கணுமே
ஒவுதாரி ஆகணுமே – பெண்ணே
உங்களை நான் அடிக்கணுமே“
சமுசாரி என்றால் முத்திப் பயன்பெறுதல். எம்பெருமான் மக்களை எல்லாம் நிறை நிலை அடைய அருளுங்கள். நான் உங்களையும் மக்களையும் இரட்சித்து ஆண்டு கொள்வோம் என்றார். உடனே அம்மைமார்கள்
“அயலூரு போகணுமே – சுவாமி
அழைக்க நீரும் வரவேணுமே
கயல் விழிமார் ஒருவர்க்கொருவர் – சுவாமி
கற்றுதல்கள் கொள்ளனுமே“
அம்மைமார்கள் சொல்வார்கள் ஜீவாத்மாவாகிய நாங்கள் எங்கள் அறியாமையால் உம்மை விட்டு விலகிச் சென்றாலும் தாங்கள் எங்களை நாடி வந்து ரட்சிக்க வேண்டும் என வேண்டுகின்றனர். உடனே அய்யா
“நானும் வந்து நிரத்தணுமே – பெண்ணே
நல்ல மொழி சொல்லணுமே
தேனும் பாலும் போல நாமள் – பெண்ணே
தேசமதில் வாழணுமே“
எம்பெருமான் சொல்லுவார் நான் உங்களை நாடி வந்து ஞானம் அருளி ஆண்டு கொள்வேன். நாம் சிவமும் சக்தியும் போல ஒன்றிணைந்து நாம் மக்களோடு ஆனந்தமாக வாழ்வோம் என்றார்.
“கண்டு இந்த நீசகுலம் – சுவாமி
களிப்புச் சொல்லி உம்மையுமே
பெண்டுகளுக்கு வீங்கி என்று – சுவாமி
பொல்லாப்பயல் ஏசணுமே“
இப்படி ஜீவாத்மா இறைவனோடு ஐக்கியப் படுதலே உணர்த்துவதே இந்தத் திருக்கல்யாண இகனை என்பதை உணராத கலிநீசர்கள் எம்பெருமானையும் தங்களைப் போல் லெளகீக பந்தத்தில் கட்டுண்டு கிடக்கும் சாதாரண மானிட திருக்கல்யாணம் என்று கேலிச் செய்பவர்கள் மாளட்டும் என்று சொல்கிறார்கள். உடனே அய்யா
“காரணத்தை அறியாமலே – பெண்ணே
கலிப்பயல்கள் தான் நகைத்தால்
மாரணத்தின் தீர்வைதனில் – பெண்ணே
மடுநரகம் பூத்திடுவேன்”
இங்கு காரணம் என்பது அய்யாவின் பிள்ளைகளைத் தன்னோடு ஐக்கியமடையச் செய்தல். இதனை அறியாமல் கேலி பேசுபவர்கள் தன் குணத்தால் மாண்டு மடு நரகம் சென்றடைவர் என்பதாகும்.
“செம்பவள நற்பதியின் – சுவாமி
தெருவலங்கள் சுற்றி வந்தோம்
பொன் பதிக்குள் நாமள் புக்கிட– மறு
பொழுது வந்தால் வருவோம் அய்யா“
அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் உள்ளது என்பதற்கு இணங்க செம்பவள நற்பதியின் ஆதார தெருக்களையும் பிரபஞ்சத்தையும் வலம் வந்தோம். இனி பொன்பதி என்னும் சகசிராரத்தில் கொலுவிருந்து தேவைப்படும் போதெல்லாம் எழுந்தருள்வோம்.
சோபனம் என்பது அழகு, ஆனந்தம், மங்கலம், வாழ்த்து, நன்மை, சுபம் என்னும் பொருள்களைத் தருகிறது. இதனால் எல்லாவிதமான திருவருளுக்கும் அய்யாவே ஆதாரம் என்றும் ஜாதி, மத, இன, மொழி, பேதம் இன்றி எல்லா மக்களும் எல்லா நன்மைகளையும் பெற்று நிறை நிலை அடைந்து பேரானந்தப் பெரு வாழ்வில் திளைத்திருக்க அருளும் பரம்பொருளே அய்யா வைகுண்டர்.
முதலில் சப்தமாதர்கள் அய்யாவை பார்த்து உமது திருநடனத்தால் அனைவருக்கும் மங்களம் உண்டாகட்டும் என வாழ்த்துகின்றனர். அடுத்து குரு தெய்வமாக இம்மண்ணகம் எழுந்தருளிய நாராயணனுக்கும் அவர் தேவியர்க்கும் மங்களம், சுப மங்களம் என வாழ்த்தப்படுகிறது.
மேலும் வைகுண்ட மாமணியினுள் கரந்து நின்றருளும் பூமலர்ந்த ஈஸ்வரிக்கும் மலர்மிசை ஏகினான் என்னும் பரமாத்மாவுக்கும் அவர் தேவியான மாதுமைக்கும் மங்களம்! சுப மங்களம்! என வாழ்த்தப்படுகிறது.
அனைத்து ஜீவாத்மாக்களுக்கும் பேரின்பம் அருளும் அய்யாவுக்கும் அவரோடு ஐக்கியம் அடைந்த தெய்வ கன்னியர்க்கும் மங்களம்.
அதுபோன்று பூமடந்தை நாயகி ஆன வாலை குமரி, மண்டைக்காட்டாளாகிய சரஸ்வதி, பூமித்தாயான பார்மடந்தை நாயகி, சிவபகவதி, வள்ளி, தெய்வானை ஆகிய அனைத்து சக்திகளுக்கும் ஐவர்குல நாரணர்க்கும் கன்னி அரிவையர்க்கும் மங்களம்! சுப மங்களம்! என வாழ்த்தப்படுகிறது.
“துடியிடைக் கன்னிமாரைத் திருமால் செய்து
குடிபுகழ் சான்றோர் மக்கள் குரவைகள் முழக்கத்தோடு
திடீரென தெருக்கள் சுற்றி தேவியும் மன்னராக
படிமிசை பதியின் உள்ளே பதிந்து வந்திருந்தார் ரன்றே“
அனைத்து இயக்கங்களுக்கும் (துடியிட இயக்கம்) ஆதாரமாய் இருக்கும் சக்தியின் அம்சமான சப்தமாதர்களை உலக தந்தையான திருமால் தன்னோடு ஐக்கியப் படுத்தி குடிபுகழ் சான்றோர் மக்கள் குரவைகள் முழக்கத்தோடு திடீரென தெருக்கள் சுத்தி தேவியும் மன்னராக இந்த மண்ணக உயிர்களுக்கெல்லாம் அருள் பாலித்தல் பொருட்டுப் படிமிசைப் பதியாகிய இவ்வுலகில் தம்பரம கருணையினால் குருபரனாய் இறங்கி வந்தருளினார் என்பதாம்.
இத்தோடு திருக்கல்யாண இகனை நிறைவேற்றது.
அய்யா அருளிய வாழ்வியல் நெறி முறைகள்
-த. சீதா லெட்சுமி அம்மா 949655691
தர்மத்தின் சிறப்பு
“தாழக் கிடப்பாரைத் தற்காப்பதே தருமம்
தருமம் பெரிது தாங்கியிரு என்மகனே
எளியோரைக் கண்டு ஈந்து இரங்கிடுநீ”
தருமம் அல்லது அறம் என்பது வாழ்கைக்கான சரியான வழிமுறையாகச் சொல்லப்பட்டிருக்கும் நீதி நெறி அல்லது போதனைகள் ஆகும். வேதங்களும், புராணங்களும் பல்வேறு தர்மங்களைக் கூறுகின்றன. ஆனால் பகவான் வைகுண்டர் கூறியிருப்பது யுகதர்மம் ஆகும். இத்தர்மம் சற்று வித்தியசமானது ஆகும். மனிதர்களைப் பொறுத்தவரை தருமம் என்றால் சரியான செயல்களைச் செய்வது, சரியான பாதையில் நடப்பது ஆகும். இன்றைய சூழ்நிலையில் எல்லோருக்கும் அவசியமான ஒரு தர்மமாக இருப்பது யுகதர்மமாகிய ஞான உபதேசம் ஆகும்.
எல்லாவற்றையும் பணத்தாலும், பதவியாலும் சாதித்து விடலாம் என்று மனிதன் ஓடிக் கொண்டே இருக்கின்றான். ஆனால் அவற்றால் தன்னுடைய சமுதாயத்தில் உயர்ந்தவனாகக் காட்டிக் கொள்ள முடியுமே தவிர, மனசந்தோசத்தை இழந்து பிறப்பின் நோக்கத்தை உணராமல் இருக்கிறான். இறைவன் வகுத்த உயர்ந்த நிலையாகிய ஞானத்தை உணராமல் உலகமாய்கைக்குள் சிக்குண்டு அதாவது, பிறவி பிணியிலிருந்து விடுபட முடியாமல் இருப்பவர்களை உயர்ந்த நிலையாகிய ஞானத்தைப் பெற வைப்பதே “தாழக் கிடப்பாரை தற்காப்பதே தர்மம்” என்பது அகிலத்திரட் டின் மூலம் அய்யா நமக்கு உணர்த்துகின்றார்.
இன்றைய காலகட்டத்தில் செய்யப்படும் தர்மங்களாக இருக்கட்டும், ஞான உபதேசங்களாக இருக்கட்டும் ஏதாவது எதிர்பார்ப்போடு செய்யப்படுகின்றது. நாம் செய்யக்கூடிய தர்மங்கள் எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்யப்பட வேண்டும். வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் என்ற பாகுபாடு இருக்கக்கூடாது. ஏனெனில் நம்மை விட தாழ்ந்த நிலையில் இருப்பவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை நாம் செய்ய வேண்டும்.
அது பொருள் உதவியாக இருக்கலாம். கல்வியறிவு புகட்டுவதாக இருக்கலாம், மருத்துவ உதவியாக இருக்கலாம், இறைவனை உணரும் மெய்யறிவை போதிப்பதாக இருக்கலாம், அவரவருடைய சூழ்நிலையைப் பொறுத்து நம்மால் இயன்ற உதவியை செய்து அவர்களை உயர்வாக்க முன்வர வேண்டும். அங்கு எந்த எதிர்பார்ப்பும் இருக்கக் கூடாது. இதையே அய்யா எளியோரைக் கண்டு இரங்கியிரு என் மகனே என்று கூறுகின்றார்.
தான் யார் என்பதை உணராமல் பின்தங்கிய நிலைகளுக்குத் தள்ளப் பட்டவர்களுக்கும், தான் யார் என்பதை உணராமல் தன்னால் எதுவும் இயலாது என்று தன் நம்பிக்கை இல்லாமாலும், பிறராலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அவர்கள் நிலையை உயர்த்த பாடுபட வேண்டும். இதையே அய்யா,
“உன்னிலும் பெரியோ னாக ஒருவனுள் ளுயர்த்தி கண்டால்
தன்னிலும் பெரியோ னாகத் தழைத்தினி திருந்து வாழ்வீர்
என்னிலும் பெரியோ னீங்கள் யானுங்கள் தனிலு மேலோன்
பொன்னில் வூற்று வீசும் பொன்பதி யுகத்து வாழ்வே”
என்று கூறுகிறார். நாம் பிறருக்காக பாடுபடும் போது நம் நிலை தானாகவே உயர்ந்து எல்லாச் சிறப்புகளும் பெறுவதற்கு இறைவன் அருள்புரிவார்.
அய்யா உண்டு
தர்மயுக முரசு வாசகர்களே: அகிலத்திரட்டு அம்மானை உதய தின விழாவை சிறப்பாக கொண்டாடி மகிழ்வோம். எப்படியென்றால்…..
எல்லோரும் திருஏடுவாசித்து மகிழ்வோம், எல்லோரும் அகிலத்திரட்டு அம்மானைக்கு விளக்கவுரையாற்றி மகழ்வோம், இல்லங்கள் மற்றும் தாங்கல்கள் முழுவதும் நிறைய தீபங்கள் ஏற்றி அகில ஜோதி திருநாளாகக் கொண்டாடி மகிழ்வோம், அகிலத்திரட்டு அம்மானை இல்லாதவர்களுக்கு ஆகம தர்மம் செய்து மகிழ்வோம், அகிலத்திரட்டு அம்மானையை கையில் ஏந்திய வண்ணம் அகில ஊர்வலங்கள் நடத்தி மகிழ்வோம், அறப்பாடசாலை மாணவ மாணவிகளின் பன்முகத் திறமைகளை வெளிப்படுத்தும் விதமான போட்டிகளை நடத்தி மகிழ்வோம், ஆங்காங்கே அய்யாவழி மாநாடுகளை நடத்தி மகிழ்வோம்.
மகிழ்வோம் மகிழ்வோம்!
அகிலத்திரட்டு அம்மானை உதயதினவிழாவை
கொண்டாடி மகிழ்வோம்!!
அய்யா உண்டு