தர்மயுக முரசு நவம்பர் 2023
அய்யாவின் அருளால் எந்நாளும்நன்னாளே
-அசோக்குமார் அய்யா – 009607704901, 8012174032.
நட்டங்காணாதே நாடாள்வாய் என்மகனே”
தெய்வீகப் பிறவிகளே! “தெய்வப் பிறவியல்லோ திசைவென்ற சான்றோர்கள்” என்று நம்மை பார்த்துப் பகவான் சொல்லுவார். அப்படியிருக்க நாம் எவ்வளவு கருத்தோடு இருக்க வேண்டும். ஆனால் சமீபத்தில் நமது அய்யா வைகுண்ட பரம்பொருளின் தவப்பதியான சுவாமிதோப்பில் நமது அயயாவழிபாட்டு மரபை மீறி தலையில் தலைப்பாகை இல்லாமலும், நெற்றியில் திருநாமம் இல்லாமலும் பதிக்குள் சென்ற செய்தி அறிந்து நாம் எல்லோரும் கண்ணீர் விட்டோம்.
இச் செயலை நமது தர்மயுக முரசு வன்மையாகக் கண்டனத்தைப் பதிவு செய்கிறது. மேலும், இது போன்ற ஆகம விதிமுறை மீறல்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ள இந்து அறநிலையத் துறையிடம் விண்ணப்பிக்கிறது. மேலும், இது போன்ற நிகழ்வு எங்கும் செய்யாமல் இருக்க நாம் எல்லோரும் சேர்ந்து அய்யாவிடம் முறையம் இடுவோம்.
இதுபோன்ற ஆகம விதிமுறை மீறல்களின் காரணத்தை ஆராய்ந்தால் ஆன்மிகம் அரசியலிடம் மண்டியிட்டுக் கிடக்கிறது. காரணம் ஆன்மிக வாதிகள் தன்நிலை மறந்து சுயநலவாதிகளாக மாறி போலி ஆன்மீக வாதிகளாக வலம் வருவதே ஆகும்.
மேலும், இதுபோன்ற ஆகம விதிமுறைக்கு இரண்டு சாரார்களும் காரணம். ஒரு பதிக்கு நாம் செல்லும் போது அப்பதியின் விதிமுறைகளைக் கேட்டுத் தெரிந்து அதன்படி உள்ளே செல்ல வேண்டும். அதுபோல் ஒருவர் நம் பதிக்கு வந்தாலோ அல்லது நாம் அழைப்பு விடுத்தாலோ நமது மரபுகளை அவர்களிடம் சொல்லி அதற்கு உட்படுத்தி அழைக்க வேண்டும். மரபுகளுக்கு உட்படாமல் இருந்தால் அன்பாகச் சொல்லி விலகிக் கொள்ள வேண்டும் இது நமது கடமை.
யார் ஒருவர் ஆகம விதிமுறைகளை மதிக்க வில்லையோ அவர்களிடம் இறை பயம் இல்லை என்றே பொருள். அவர்கள் கலிமயக்கத்தில் இருப்பவர்கள். எனவே, நாம் எப்போதும் பயபக்தியுடன் செயல்பட வேண்டும்.
மேலும், இதுபோன்ற தவறான சம்பவங்களை எல்லாம் நாம் ஒரு பாடமாக எடுத்து இத் தவறுகளை நாம் செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒருபோதும் போலி ஆன்மிக வாதிகளாக மாறிவிடக் கூடாது. நாம் பிறந்திருப்பதே பாவக் கர்மாவை தொலைத்து ஆண்டவனிடம் சேர்ந்து வாழ. ஆனால் பலபேர் இப்பேருண்மையை மறந்து சிற்றின்பத்தில் அடிமையாகி மீண்டும் மீண்டும் பாவக் கர்மாவை பெருக்கிக் கொள்கிறார்கள். இதனால் அவர்களுக்குக் கிடைப்பது துன்பமே தவிர இன்பம் அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
சில துன்பத்தில் சில நன்மையும் விழையும். அந்த அடிப்படையிலே அய்யா வைகுண்ட தவப்பதியில் சமீபத்தில் அரங்கேறிய “மரபு மீறல் நிகழ்வு” ஒன்று நமது அய்யாவழிபாட்டு இந்து மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தத் தவறான செயலுக்கு எதிர்ப்புக் குரல் ஒலித்தன. இது தொலைக்காட்சி மூலம் உலகமெங்கும் பரவியது.
அதுமட்டுமல்லாமல் இது மிகப்பெரிய விவாத பொருள் ஆனது. இந்த விவாதத்தின் மூலம் இனி யாரும் ஆலய மரபை மீறக் கூடாது என்று முழங்கிய நமது மக்கள், நாமும் நமது தாங்கல்களில் எந்த ஒரு மரபு மீறல்களையும் செய்யக் கூடாது என்று தங்கள் மனத்தில் உறுதி எடுத்துக் கொண்டது ஒரு வகையில் ஆறுதலாக இருந்தது.
அய்யா உண்டு
அகில கேள்வி
1. தசரதர் மேலோகத்தில் எந்த முனிவராக இருந்தார்?
2. கஞ்சன் தன்னுடைய சகோதரிகளுக்கு எந்த பழத்தை பறித்து கொடுத்தான்?
3. கர்ணன் திரேதாயுகத்தில் யாராக பிறந்திருந்தான்?
4. மாடு தனிலேறி என்பது யாரை குறிக்கும்?
5. மாமறலி மூவர் யார்?
விடை 7 பக்கம் பார்க்கவும்
எனவே அப் அறப்பாடசாலையில் கலந்து கொள்ள எல்லா சனிக்கிழமையும் கீழ் கண்ட லிங்கை கிளிக் செய்து இணைந்து பயன் பெறுங்கள் https://meet.google.com/btd-zzjs-uph. இந்த வகுப்பில் திருஏடு வாசிப்பு, பாராயணம், ஆன்மிக கதை, அய்யா பாடல், அய்யாவின் உபதேசங்கள் போன்றவை அன்பர்களால் சிறப்பாக வழங்கப்படுறது.
அன்புக்கொடி சொந்தங்கள் இந்த ஆன்மிக வகுப்பில் கலந்து பயனடைய அன்போடு வேண்டுகிறோம்.
அய்யா உண்டு
அகிலதிரட்டு அம்மானை மூலமும், உரையும்
-க. ரீகன் அய்யா- 0096893145654
என்னையும் நாய்நரிக்கு யிடுவேனென்றதும் நீயோ
என்றேவச் சூரன் இயம்பிமிக நகைத்து
பண்டாரத்தோடே படையெடுத்தா னம்மானை”
வீரர்களும் வந்து வெட்டினா ரம்மானை
வெட்டினதால் செத்தார் மிகு சூரக்குலங்கள்
பட்டார்க ளென்று பார்சூரன் தான்கேட்டு
வந்தேயெதிர்த்தான் காண் மாயாண்டி தன்னோடே”
வேலாயுதத்தை விறுமா பதஞ்சேவித்து
மேலாம் பரனார் விமல னருளாலே
எறிந்தார் காண்சூரன் இறந்தானே மண்மீதில்
பறிந்தே வேலாயுதமும் பாற்கடலில் மூழ்கியதே”
வீரமுள்ள நாதன் வீணனவன் முன்பில்வந்து
சொன்ன மொழியெல்லாஞ் சூட்சமாய்க் கேளாமல்
இந்நிலமேல் பாவி இறந்தாயே வம்பாலே”
கோட்டையு முன்னுடைய குஞ்சரமுந் தோற்றாயே
தந்துவிட்ட சொற்படிக்குத் தந்து அரசாளாமல்
விந்துக் குலங்களற்று வீணாய்நீ மாண்டாயே
மாளா வரங்கள் மாகோடி பெற்றோமென்று
பாழாக மாண்டாயே பண்டாரங் கையாலே”
முந்து பிறந்த முப்பிறப்புச் சூரமதாய்
என்னையோ கொல்ல இரப்பனா ஏலுவது
உன்னையோ கொல்ல ஓட்டுவனோ நான்துணிந்தால்
வேலா யுதத்தாலே வென்று கொன்ற தல்லாது
ஏலாதுன்னாலே இளப்பமிங்கே பேசாதே
என்றானே சூரன் எம்பெருமாள் கோபமுடன்
கொன்றாரே சூரன் குறவுயிரை அம்மானை”
வீரமால் பதத்தைப் போற்றி விளம்புவாள் சக்திமாது
மூரனைச் செயிக்க முன்னே முர்ச்சூலமாய்ச் சபித்த சாபம்
தீரவே வேணுமென்று திருப்பதம் வணங்கி நின்றாள்”
சோதியே யென்னுடைய சூல்சாபம் தீரும்
என்று உமையாள் எடுத்து மிகவுரைக்க
நன்றெனவே அந்த நாராயணருரைப்பார்”
தாபமுடன் மாயன் சாந்தி மிகவளர்த்தார்
அம்மை உமையாளின் ஆனசாபந் தீர்ந்து
செம்மையுடன் கயிலை சென்றனர் காணம்மானை”
அய்யா உண்டு
மனித உடலின் சிறப்பு என்ன?
– S. அன்ன செல்வம் அம்மா – 9443622222
அகில விடை
1. துசுவீசு மாமுனிவர்
2. மாம்பழம்
3. வாலி
4. சிவன்
5. எமன், காலன், தூதன்
அய்யா உண்டு
மனித மனதின் அற்புத அதிசயங்கள் எவை?
– S. அன்ன செல்வம் அம்மா – 9443622222
மனித மனம் என்பது உருவமற்றது. மனம் வாயுவின் அம்சமாகும். மனித வாழ்விற்கு மனம் அடிப்படையானது. அனைத்து இன்ப துன்பங்களுக்கும் காரணமாக இருப்பது. மனதை மனசாட்சி என்று சொல்லி உயிருக்கு ஒப்பிட்டு, இதயத்தில் கை வைத்துக் காட்டுகிறோம். மனதின் ஆழத்தை யாராலும் கணக்கிட்டுச் சொல்ல முடியாது. மனம் என்பது நம்முடைய நினைவுகளின் வெளிப்பாடு. அது உணர்ச்சிகளின் ஊற்று. மனம் ஒரு மகாசக்தி வாய்ந்தது. மனம் ஒரு நிலை பட்டால் ஐம்புலன்களும் அடங்கும்.மனதின் தலைமை இடமாக விளங்குவது மூளை.
மனம் மூன்று வகைப்படும்:
1, வெளிமனம்
2, உள்மனம்
3, ஆழ்மனம்
வெளிமனம்: வெளிமனம் மனிதனுக்கு இன்பத்தையும் துன்பத்தையும் கொடுக்கின்ற செயல்களைச் செய்து வருகிறது. மனம் ஒரு குரங்கு என்று சொல்வது போல், அலைபாயும் தன்மை கொண்டது அதனால் தான் மனம் போன போக்கில் போக வேண்டாம் என்று பெரியவர்கள் சொல்வார்கள். நம்முடைய வெளிமனமானது ஐம்புலன்கள் வழியாகச் செயல்படுகிறது.
நம்முடைய உடல் இயக்கத்திற்கு மூலகாரணம் வெளி மனமே ஆகும் .நாம் கண்ணால் பார்ப்பது, காதால் கேட்பது, மூக்கால் வாசனையை நுகர்வது, வாயால் பேசுவது ,உண்பது, கை கால்களால் வேலை செய்வது, நடப்பது என அனைத்து இயக்கங்களுக்கும் வேண்டிய அறிவுரையை மூளையின் மூலம் செய்வது வெளி மனமே ஆகும். மனமும் மூளையும் ஒன்றுக் கொன்று தொடர்புடையன. நம்மை உலகில் மனிதனாக வாழச் செய்வதே வெளி மனம் தான்.
ஆசையது உங்களுக்குத் தோசமாய் இருக்குதடா”
——–அருள்நூல் வாசகம்
கலியுக ஆசையும் வாழ்க்கையுமாக இருக்கிறது.
உள்மனம்: உள்மனம் என்பது அபார சக்திகளைக் கொண்டது. தெய்வீக ஆற்றல் நிறைந்தது. சாதாரண நிலையில் உள்ள மனிதனால் இதை உணர்ந்து கொள்ள முடியாது. சகல அறிவுகளுக்கும் ஞான ஊற்றாக விளங்குவது உள் மனமே. உள்மனம் நமது வெளிமனதின் கட்டளைகளையும் ஆலோசனைகளையும் அப்படியே செய்கிறது. வெளி மனதை விட உள் மனம் மிகவும் வலிமை வாய்ந்தது.
உள்மனம் தன்னுடைய விருப்பத்திற்கு உடலின் முக்கிய பாகங்களை வேகமாகவோ அல்லது மெதுவாகவோ இயங்கச் செய்யும் ஆற்றல் பெற்றது. மருந்தில்லாமல் நோய்களைச் சுகமாக்கும் ஆற்றல் என்பது இதுதான். கடந்தகால சம்பவங்களைப் பதித்து வைத்திருப்பது இந்த உள்மனம் தான் .உள் மனம் கண்கள் இல்லாமல் பார்க்கவும் காதுகள் இல்லாமல் கேட்கவும் முடியும் அளவுக்குச் சக்தி பெற்றது. உள் மனதால் முடியாதது எதுவுமில்லை. நினைப்பது நடக்கும் கேட்பது கிடைக்கும் உயிர் நண்பனாக இருந்து செயல்படும். அறநெறியில் நடக்கும்.
ஆழ்மனம்: ஆழ்மனதை ‘அடி மனம்’ என்று சொல்கிறோம். ஆழ்மனம் தெய்வீக சக்தி கொண்டது. மனிதனின் உடல் இயக்கத்திற்கு மூளையும், மூளையின் இயக்கத்திற்கு மனமும், இவற்றிற்கு உந்து சக்தியாக ஆழ்மனமும், இருக்கிறது. ஆழ் மனதில் காந்த சக்தி என்கிற தெய்வீக சக்தி புதையுண்டு கிடக்கிறது. எனவேதான், இதை இறையருள் என்பார்கள். இந்தச் சக்தியை அறிந்து கொண்டவர்கள் மனிதருள் மாணிக்கமாக திகழ்கின்றார்கள்.
அய்யா உண்டு
அகில விருத்தமும் விளக்கமும்
– பா. அசோக் குமார் அய்யா 009607704901, 8012174032
“வேண்டாமேனவே மெல்லியர்கள் விமலனடியை மிகப்போற்றி
மாண்டாரெலும்பை மார்பணியும் மறையோன் பின்னும் மகிள்ந்துரைப்பார்
தூண்டாசுடரோன் திருமாலைச் சேயென்றெடுத்த செய்கையினால்
ஆண்டாருனக்கு மகனாகி அதின்மேல் பதவியுங்களுக்கே”
அய்யா உண்டு
மச்ச அவதாரம்
-த. சீதா லெட்சுமி அம்மா 949655691
ரிஷிவேந்தே! எதற்காக ஹரிபகவான் ஒரு சாதாரண கர்மவசியனான புருஷனைப் போல, உலகத்தாரால் நிந்திக்கப்படக் கூடியதாகவும், தாமசப் பிரகிருதியாகவும், சகிக்கக் கூடாததாகவும் இருக்கிற மச்சரூபம் தாங்கி அவதாரம் செய்தார்.
அதற்குச் சுகபிரம்மர் மகாவிஷ்ணு எடுத்த முதல் அவதாரம் இது. மச்சாவதாரத்தை மத்ஸ்யாவதாரம் என்றும் கூறுவார்கள். இந்த அவதாரம் வேதங்களை அபகரித்துக் கொண்டு போய் கடலில் ஒளித்து வைத்த சோமுகாசுரனைக் கொன்றது. வேதங்களை மீட்டது.
இந்த அவதாரத்திலேயே மகாப் பிரளயம் வர ஏழாவது மனுவும், சப்த ரிஷிகளும் மீன் உருக் கொண்டு தம் உயிர் பிழைத்திருக்க, மற்ற எல்லா உலகங்களும் அழிந்து ஒழிந்தன. பொங்கிப் பெருகும் கடலில் மூன்று உலகங்க ளும் மூழ்கின. ஹயக்கிரீவன் என்ற அசுரன் அங்கே வந்தான். அவனுக்குக் கழுத்திற்கு மேல் குதிரை உருவம். அதனால் அப்பெயர் அவனுக்கு வந்தது.
பிரம்மா சோர்ந்து தூங்கும் போது அவர் வாயிலிருந்து வேதங்கள் தாமே வெளிவந்து கொண்டிருந்தன. இதைப் பார்த்த ஹயக்ரீவன் தனது யோக சித்தியினால் அந்த வேதங்களைத் திருடிக் கொண்டு போய் விட்டான். பிறகு அதை ஒளித்து மறைத்து விட்டான்.
வேதங்கள் இருந்தாலன்றிப் பிரும்ம சிருஷ்டி இயங்காது. உலகத்தில் அறம் ஒழுங்காக நிறைவேற வேதத்தின் துணை அவசியம். எனவே ஹயக்ரீவனால் திருடி மறைக்கப்பட்ட வேதங்களை மீட்பதற்காக பரந்தாமன் மீனாக அவதரித்தான்.
ஸ்ரீமந் நாராயணன் எடுத்த மச்சாவதாரத்தில் சத்யவிரதன் என்ற பெயருடைய ராஜரிஷி இருந்தான் அவன் நாராயணன் மீது அளவிலா பக்தி கொண்டவன். அந்த ஹரிபக்தன் வேறு உணவு எதுவும் அருந்தாமல் தண்ணீரை மட்டும் உட்கொண்டு ஒரு நோன்பு நேற்று வந்தான். இப்போது நடக்கும் கல்பத்தில் மனுவாக விளங்கும் விவஸ்வரன் இவனே.
அந்தக் காலத்தில் திராவிடத் திருநாட்டின் தேசாதிபதியாக இருந்தான். அவன் ஒருநாள் கிருதமாலா என்ற ஆற்றங்கரையில் அமர்ந்து தன் மூதாதையர்களுக்குத் தண்ணீர் இறைத்து அர்க்கியம் கொடுத்துக் கொண்டு இருந்தான்.
அரக்கியம் செய்யும் பொழுது இரு கைகளிலு ம் தண்ணீரை எடுத்தான். அங்கே கைக்குள் தேங்கிய நீரில் ஒரு குஞ்சு மீன் அழகுற நீந்திக் கிடப்பதைப் பார்த்தான். பேரழகுமிக்க அந்த மீன் பேசியது: ” ராஜனே என்னை மீண்டும் தண்ணீரில் தள்ளிவிடாதீர்கள். குட்டி மீனான என்னைப் பெரிய மீன்கள் விழுங்கி விடும். அச்சம் என்னை பிடுங்கித் தின்கின்றது…” என்றது.
இதைக் கேட்டு அகமகிழ்ந்து அந்த மச்சத்தின் வேண்டுகோளை நிறைவேற்ற நினைத்தான். ஆற்றுக்குத் தன்னுடன் எடுத்து வந்த கமண்ட லத்திற்குள் மீனைப் போட்டான். அதைத் தன் வழிபாட்டு ஆஸ்ரமத்திற்கு எடுத்துப் போனான்.
அன்று இரவே அந்த மச்சம் கிடுகிடுவென்று வளர்ந்து கமண்டலம் முழுவதும் பரவியது. அரசே இந்த இடம் எனக்கு வசிக்கப் போதாது என்றது மச்சம். சத்தியவிரதன் மீனைக் கமண்டலத்தில் இருந்து எடுத்து நீர் நிறைந்த வேறு ஒரு பாத்திரத்தில் போட்டான்.
இந்தப் பாத்திரமும் எனக்கு வசிக்கப் போத வில்லையே என்று திரும்பவும் கெஞ்சியது. மன்னவன் உடனே மீனை அங்கிருந்து எடுத்து ஒரு குளத்தில் விட்டான். வெகு சீக்கிரமாக வளர்ந்து அந்தக் குளத்தை நீக்கமற அடைத்து நின்றது. அடுத்து அந்த மீனை ஆழமானதும் விரிந்து பரந்ததுமான மடுக்களிலும், ஏரிகளிலும் போட்டான்.
அங்கும் அது பெரிதாக வளர்ந்து தனக்கு வாழ இடம் போதவில்லை என்று சொல்லியது. கடைசியாக அதை சமுத்திரத்தில் கொண்டு போடும் போது அந்த மச்சம் சொன்னது:
ராஜரிஷியே! இந்தப் பெரிய கடலில் திமிங்கலம் போன்ற பெரிய ஜந்துக்களின் நடமாட்டம் இருக்கிறது. ஆகவே என்னை நீ இங்கே விட்டு விட்டுப் போய் விடாதே” என்று அலறியது.
உடனே சத்யவிரதன் அந்த மீனைக் கரம் கூப்பித் தொழுது, ” பரம்பொருளே! ஒரு சாதாரண மீனாகத் தாங்கள் என்னிடம் வந்து மயங்க வைக்கிற மாயம் எனக்கு என்ன என்று தெரிந்து கொள்ள முடியவில்லையே? இப்படி தேவரீர் என்னை விடாமல் பிடித்து வைத்துக் கொண்டிருப்பதன் காரணம் என்ன? நீர் வளர வளர நிச்சயம் ஸ்ரீ ஹரியேதான் தாங்கள் என்பதை உணர்ந்து கொண்டேன். ஆகவே பெருமானாகிய தாங்கள் இந்த உருவத்தோடு இங்கு வந்த காரணத்தைத் தங்கள் தொண்ட னாகிய எனக்குத் தெரிவிக்கும்படி பிரார்த்தி க்கிறேன்..” என மச்சாவதார மூர்த்தியை வீழ்ந்து வணங்கிக் கேட்டான்.
மச்சம் பதில் சொல்லியது: ராஜரிஷியே! இன்று முதல் ஏழாம் நாள் இந்த பூமியும், விண்ணும், அதற்கிடைப்பட்ட வெளியும், பொங்கி எழுந்து வரும் கடலுக்கு இரையாகப் போகிறது. உலகங்கள் அழியும் நாள் வந்து விட்டது. அஞ்சாதே! நான் உனக்கு ஒரு பெரிய தோணியை அனுப்பி வைக்கின்றேன்”
நீ அந்தத் தோணியில் சமஸ்த மூலிகைகள் பற்பல வித்துகளையும் ஏற்றிக்கொண்டு சப்த ரிஷிகளுடன் சர்வபலம் கொண்டவனாக அந்தகாரமான சமுத்திரத்தில் மகா தீரனாக சஞ்சரிக்கப் போகிறாய். வாயுவால் அலைக் கழிக்கப்பட இருக்கும் அந்தத் தோணி கவிழ்ந்து விடாமல் எனது கொம்பில் சேர்த்த கட்டிவிடு”
அப்படிக் கட்டினால்நான் பிரம்ம தேவனுடைய இராப்பொழுது தீரும்வரை அந்த ஓடத்தோடு சஞ்சரித்துக் கொண்டு இருப்பேன். அப்போது சப்தரிஷிகளும் ஒளிமயமாக இருந்து உனக்கு வழிகாட்டுவார்கள். என் உடல் அப்போது திமிங்கலம் போலக் காணப்படும். அந்தப் படகை என் கொம்பில் கட்டச் சொன்னேன் அல்லவா?..”
அப்படிக் கட்டுவதற்கு உரிய கயிறு வாசுகி என்ற பாம்பு என்பதை மறந்துவிடாதே. அந்தப் பாம்பை எனது சிதளில் கட்டிவிடு. அதன் பின்பு நீ எனது பெருமையைத் தெரிந்து கொள்வாய். உனக்கு சர்வமங்களமும் உண்டாகட்டும்..” என்றார்.
தர்ப்பாசனத்தில் இருந்தபடி சத்தியவிரதன், உலகை அழிக்கப்போகும் பிரளயத்தை எதிர்நோக்கிக் கொண்டு இருந்தான். ஏழாம் நாள், ஆகாயம் அந்தகாரத்தில் மூழ்கியது. பெருமழை பெய்த வண்ணம் இருந்தது. கடல் கரைபுரண்டு வந்தது. பூமி இருக்கும் அடையாளமே தெரியவில்லை.
எங்கும் ஒரே தண்ணீர்க்காடு அந்தப் பொங்கும் நீர்ச்சுழிகளின் ஊடே பரந்தாமன் தங்கத் திமிங்கலத் தோற்றத்துடன் காணப்பட்டார். தகத்தகாயமாக ஜ்வலித்த அவர் உடம்பில் கொம்பு போல் ஒன்று நீண்டு இருந்தது.
சத்யவிரதன் அப்போது சப்தரிஷிகளுடன் மூலிகை விதைகள் சகிதம் ஏறி இருந்த ஓடத்தைப் பகவான் கூறியபடி அவரைத் தியானம் செய்தபடியே, தங்கத் திமிங்கிலக் கொம்பில் கட்டினான். அந்த அபூர்வ மச்சம் இவர்கள் ஏறிய படகைப் பற்றி இழுத்துக் கொண்டு வெள்ளத்தின் மத்தியில் பயமோ, அபாயமோ இன்றி அலைந்து கொண்டு இருந்தது.
அந்தச் சமயம் பரந்தாமன் ராஜரிஷி சத்திய விரதனுக்கு மச்சாவதார புராணத்தை உபதேசம் செய்தார். பிரம்மதேசன் நித்திரை காலம் முடிந்தது. உலகத்தைக் கவ்வி இருந்த அந்தகாரம் விலகி ஊடே ஊடே ஒளிப் படலங்கள் விரிசலிட்டன. ஓயாது பெய்த மழையும் நின்றது. பல்கிய, உலகில் பொங்கிப் பெருகிய தண்ணீர் வடிய ஆரம்பித்தது.
மச்சமூர்த்தி ஓடத்தைக் கரை சேர்த்தார். சத்திய விரதன் அந்நேரம் பிரம்மனைக் குறித்து பிரார்த்தனை செய்தான். நித்திரையிலிருந்து மீண்ட பிரம்மதேவன் அவன் முன்பு பிரத்யட்சம் ஆனார். மீண்டும் அவர் தம் சிருஷ்டியைத் தொடங்க நினைத்தபோது தான் வேதங்கள் மறைந்த விபரம் அவருக்குத் தெரிந்தது.
பிரம்மதேவர் ஸ்ரீ ஹரியை நோக்கி தியானம் செய்தார். அதுசமயம் மச்சமூர்த்தியாக இருந்த பகவான் வேதங்களை ஹயக்கிரீவன் ஒளித்து வைத்திருப்பதை அறிந்து வெள்ளத்திற்குள் புகுந்து போனார். ஹயக்கிரீவனை வெள்ளத்தில் கண்டு அவனுடன் போர் புரிந்தார்.
வேதங்களை மீண்டும் பிரம்மதேவரிடம் கொடுத்தார். மறுபடியும் சிருஷ்டியைத் தொடங்கும்படி சொன்னார். இப்படியாகப்பட்ட கல்பத்தில் சத்தியவிரதன் வைசதமனு என்ற பெயருடன் ராஜ்ய பரிபாலனம் செய்து வரலானான்.
அய்யா உண்டு
அய்யா உண்டு
ஆன்மிக எழுச்சி தேவை
– கிருஷ்ணமூர்த்தி அய்யா 8431659715
அந்த நிலை தான் இங்கு உருவாக்கிக்கொண்டு இருக்கிறார்கள் அந்நியர்கள். திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் ஏழைகள் அடிமைப்படுத்தப்பட்ட காலமும் இதே அந்நியன் செய்த சதியே. ஒருபக்கம் அடிமைப்படுத்தி விட்டு மறுபக்கம் வந்து ஆறுதல் சொல்லுவது போல நாடகமாடி மதம் மாற்றினான்.
பாரதத்தில் வாழுவோம் ஆனால் அந்நிய நாட்டைத் தான் நேசிப்போம் பாரதத்தில் வாழுவோம் ஆனால் அந்நிய கலாச்சாரத்தைத் தான் பரப்புவோம் பின்பற்றுவோம் இப்படிப்பட்ட இந்த அநியாயங்கள் நம் நாட்டில் நம் கண்முன் சாதாரணமாக நடந்து கொண்டிருக்கிறது. அந்நியன் நமக்கு எதிராக ஆள் திரட்டுகிறான் அதற்கு நம் வரிப்பணத்தையே பயன்படுத்துகிறான்.
பொய்யான ஆளுமை கொண்டவர்கள் அந்நியர்களுக்குத் துணைப் போகிறார்கள். அந்நியர்கள் இங்கு தங்கள் கரங்களை வலுப்படுத்த நினைக்கிறார்கள் .நாட்டை நேசிப்பவர்களை அழிக்கத் துடிக்கிறார்கள்.
யாரிடமும் வம்பு செய்யாத உனக்குள் நீ பிரிந்து வாழாதே !!!
நீ உன் கடமையில் சரியாக இரு. நீ உன் வழிபாட்டில் தீர்க்கமாக இரு. மதம் மாறாதே மனிதனாக வாழு. உனக்குள் நீயே சண்டையிடாதே! உன் எதிரிகள் உன் மதத்தில் இல்லை .அந்நிய ரூபத்தில் இருக்கிறான். அதர்மத்திற்குத் துணை போகாதே!! தர்மத்திற்கு வா! மதம் மாறிய இந்துக்களே! உன் தாயைக் காப்பாற்று! நீ உன் தாய்தர்மத்திற்கு வா! நீ மாறிப்போன தர்மங்கள் உன்னை கரை சேர்க்காது.உன்னை உயிர்ப்பித்த மண்ணை நேசி! இந்துவாக வாழ்ந்து இந்துவாகவே செத்தாலும் பெருமையே!.
விழித்தெழு!
உயிர்த்தெழு தோழனே!!!
அய்யா உண்டு
பால்கிழமை உருவான வரலாறு
– வைகுண்ட ராஜன் அய்யா – 9500791234
பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் அய்யாவை தேடி வரத்தொடங்கினர்… அய்யாவும் தம்மை நாடி வந்த மக்களுக்கு நல் உபதேசங்கள் சொல்லி மண்ணும் தண்ணீரால் நோய் பிணிகள் தீர்த்துப் பிள்ளை இல்லாத பேருக்கு மதலை வரம் கொடுத்தும் செல்வம் இல்லாத பேருக்கு நல்ல செல்வம் கொடுத்தும் நித்தம் திருநாள் நடத்தி இருந்த வேளையில் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்ற மக்கள் அய்யாவை விட்டு வர மனம் இல்லாமல் அங்கேயே தங்கி விட்டனர்.
இதனை கண்ணுற்ற அய்யா, அங்கு அன்பாக வந்த தூரத்து பகுதி அன்பர்களை அவரவர் இல்லங்களுக்குச் சென்று, விவசாயம், வியாபாரம் என பல்வேறு தொழில்கள் செய்து இல்லறத்தோடு இணைந்த இறை வழிபாடு நடத்தி தமிழ் மாதத்தில் வரும் முதல் ஞாயிறு அன்று பதிக்கு வருமாறு பணித்தார்.
மக்களும் அய்யா சொன்னதின் பிரகாரம் அவரவர் ஊர்களுக்குச் சென்று வியாபாரம், விவசாயம் என பல்வேறு தொழில்கள் செய்து (இன்றளவும் அவ்வாறு அய்யா இருக்கும் போது பதிக்குச் சென்று வந்த மக்கள் தலைமுறை தலைமுறையாகச் செழித்து ஓங்கி வளர்ந்து இருக்கின்றனர்).
தமிழ் மாதத்தின் முதல் ஞாயிறு அன்று சுவாமி தோப்பு வந்து அவரவர் கொண்டு வந்த பச்சரிசி கொண்டு அய்யாவுக்கு பால் வைத்து நியமித்து, அவரவர் கொண்டு வந்த அரிசி காய்களைக் கொண்டு ஒரே அன்னமாக சமைத்து அய்யாவும் அதனை அன்பாக ஏற்று அங்கு வந்த அனைத்து ஜாதி மக்கள் அனைவருக்கும் அதை தர்மமிட்டு கொடுத்தார்.
மக்கள் கொண்டு வந்து கொடுக்கும் எண்ணெய் காசு போன்றவற்றை அய்யா கைக்குள் நின்ற சீசர்களுக்குக் கொடுத்து மக்கள் அய்யாவை பல்லக்கில் அமர வைத்துத் தெரு சுற்றி பவனி வந்து அன்றைய தினத்தை ஒரு பெரும் திருவிழாவாகக் கொண்டாடி அடுத்த நாள் காலை அய்யாவிடம் உத்தரவு வாங்கி “அய்யா கூரைக்கு ” என்று சொல்லி அவரவர் இல்லங்களுக்குச் சென்றனர்.
நான் சிறுவனாக இருக்கும் போது கூட சுவாமி தோப்பு செல்லும் மக்கள் அனைவரும் ஊருக்குத் திரும்பும் போது வடக்கு வாசல் முன்பாகவோ அல்லது கிழக்கு வாசல் முன்பாகவோ நின்று இரு கைகளையும் தலைக்கு மேல் தூக்கிக் கும்பிட்டு “அய்யா கூரைக்கு” என்று சொல்லி கிளம்புவதைப் பார்த்திருக்கிறேன். இவ்வாறு உருவானது தான் பால்கிழமை.