தர்மயுக முரசு பிப்ரவரி 2022
அய்யாவின் அருளால் எந்நாளும் நன்னாளே
அசோக்குமார் அய்யா –009607704901,8012174032.
அலயவிடாதுங்கோ அஞ்சுபஞ்சமதையும்”
“நாராயணர் தனக்குதானே வைகுண்டமாய் தோன்றினார்”
– அகிலத்திரட்டு அம்மானை
தர்மயுக முரசு நேயர்கள் அனைவருக்கும் உலகளந்த “அய்யா வைகுண்ட பரம்பொருளின்” அவதார தின நல்வாழ்த்துக்கள்
அவதார நாயகனின் அவதார லீலையை அவனியெங்கும் யெடுதுரைக்கும் சான்றோர் பெருமக்களுக்கு மாசி மாத அன்பு வணக்கம்:
ஆம் கொல்லும் ஆண்டு 1008 மாசி மாதம் இருபதாம் தேதி…….
- விண்ணகத்து வேந்தன் மண்ணகத்தில் அவதரித்த அவதார நாள்
- நாராயணரின் கடைசி அவதாரம் நிகழ்ந்த நன்நாள்
- சனாதன தர்மத்தை நிலைபெற செய்ய சிவமே வைகுண்டமாய் அவதரித்த அற்புத நாள்
- முப்பொருளும் ஒருபொருளாய் ஏகப்பரம்பொருளாய் வல்லாத்தான் வைகுண்ட பரம்பொருளாய் அவதரித்த திருநாள்
- தெய்வமும் அவராய் திருவுள்ளமும் அவராய் மக்கள் காண மனுவாய் தோன்றிய பொன்நாள்
- கலியை அழிக்க கடவுளார் அவதரித்த திருக்கருணை நாள்
- ஜீவாத்மாக்களை எல்லாம் ஆட்க்கொள்ள பரமாத்மா அவதரித்த ஒளி நாள்
- தர்மயுகமாக்கி தாரணியை ஆளுதற்கு கர்மகலியில் தாயாபரன் வந்த தெய்வத்திரு நாள்
- ஒரு சொல்லுக்குள்ளே ஒரு கொடிக்குள்ளே ஒரு மொழிக்குள்ளே உலகை ஆள வந்த ஆண்டவன் அவதரித்த ஆனந்த நாள்
- கலியுக மக்களாகிய நம்மை காக்க கருணை கடலாகிய காரண கடவுள் வைகுண்ட குழந்தையாக அவதரித்த கருணை நாள்
- திருமால் தனது திருக்கல்யாண கோலங்களை பூலோகத்தில் காண்பிக்க வைகுண்ட மணவாளாய் தோன்றிய காரண பொன் நாள்
- அதர்மத்தை அழித்து தர்மத்தை ஸ்தாபிக்க ஆதி நாராயணயர் ஆதி வைகுண்டமாய் அவதரித்த புண்ணிய நாள்
- இருள் சூழ்ந்த உலகத்தையும் இருள் குடிகொண்ட வாழ்க்கையையும் ஒளிமயமாக்க சூரிய நாராயணரே வைகுண்ட ஜோதியாய் உதித்த ஒளி நாள்
இப்படிபட்ட தங்கத்திருநாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்வோம். எப்படி என்றால் அய்யா வைகுண்ட அவதார சூட்சமத்தை நாம் சிறப்பாக உணர்ந்து பிறரையும் உணர செய்து அவர் தந்த அகிலத்திரட்டு அம்மானைப்படி செயல் பட்டு அவதார நன்நாளை பொது விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டுமென வைகுண்ட பரம்பொருளை வேண்டி கொண்டாடி மகிழ்வோம்.
மேலும் பஞ்சபதிகளில் ஒன்றான சுவாமிதோப்பு பதியில் வைக்க பட்டுள்ள தவறான கல்வெட்டுகளை அகற்றி உண்மை மலர செய்ய வாரும் அய்யா என்று அவர் பாதம் பணிந்து கொண்டாடுவோம், செயல் படுவோம் தர்மயுக வாழ்வு பெறுவோம்.
“நாட்டுக்கரி விதிநான் நாராயணனும் நான்
பட்சிப்பறவை பலஜீவ செந்துகளை
நிச்சையமாய்ப் படைத்த நீலவண்ண நாதனும் நான்
மண்ணேழமளந்த மாயப்பெருமாள் நான்
விண்ணேழுமளந்த விஷ்ணுத் திருவுளம் நான்
ஏகம்படைத்தவன் நான் யெங்கும் நிறைந்தவன் நான்
நாதக்கடல் துயின்ற நாகமணி நானல்லவோ
ஆகப் பொருள் மூன்றும் அடக்கமொன்று ஆனதினால்
ஜீவஜெந்துக் கெல்லாம் சீவனும் நானல்லவோ”
— அய்யா வைகுண்ட பரம்பொருள்
கொண்டாடுவோம்! கொண்டாடுவோம்!!
அய்யா வைகுண்ட அவதார நாளை கொண்டாடுவோம்!!!
அகில வினா
- “நம்பிபதமறந்துநாம்தாம் பெரிதெனவே” இவ் அகில வரியில் வரும் “பதமறந்து” என்னும் வார்த்தையின் பொருள் என்ன?
- “கெம்பினான்சூரன் கெட்டனர் காணம்மானை” இவ் அகில வரியில் வரும் “கெம்பினான்” என்னும் வார்த்தை யின் பொருள் என்ன?
- “பூலோகந்தன்னிலுள்ள புருடரா யுதத்தாலும்” இவ் அகில வரியில் வரும் “புருடர்” என்னும் வார்த்தை யின் பொருள் என்ன
- முத்துயரம்என்றால்என்ன? அவை யாவை?
- முத்தீஎன்றால் என்ன? அவை யாவை?
விடை …. பக்கம் பார்க்கவும்
உகப்பெருக்கு விளக்கம்
கா.த.லிங்கேஷ்- 9842679780
“…தூணை மலையென்று நம்பின பேர்க்குத்
தொட்டு நாமம் சாற்றி வருகிறார் எங்கள் அய்யா
சிவசிவ சிவசிவா அரஹரா அரஹரா…”
‘தூண்’என்பது ஒன்றை தாங்கி பிடிப்பது. அப்படி கலிமாய இருளினால் துன்பப்படும் நம்மை தாங்கி பிடித்து கரையேற்றுவதற்காக வந்த தோணி வைகுண்டரையே இங்கு ‘தூண்’ என்கிற பதம் சிறப்பித்து சொல்கிறது. ‘மலை’ என்பதும் உவமை படுத்தும் பொருளாகவே இங்கு எடுத்தாளப்படுகிறது. ‘மலை’ என்றால் வலிமையானது, பெரியது, முதன்மையானது என்பது போல, அய்யா வைகுண்டர் தான் அனைத்துமாய் இருக்கிறார். அனைத்து தெய்வ சக்திகளின் மூலமுதற் பொருளாக இருக்கிறார். அவரால் அன்றி இவ்வுலகில் எந்த அணுவும் அசைய முடியாது, என்கிற மேலான நிலையில் அய்யா வைகுண்டரை நாம் உணர வேண்டும்.
அவ்வாறு உணராத நிலையில் தான் அய்யா வேறு, சிவன் வேறு, அம்மன் வேறு,முருகன் வேறு என்று பல தெய்வ வழிபாடு முன்னெடுக்கப்படுகிறது. அடுத்து ‘தொட்டு நாமம் சாற்றி’ என்கிற பதம் ‘திருநாமம் இடுதல்’ என்கிற நேரடி பொருளை தந்தாலும், ‘தொட்டு நாமம் சாற்றி வருகிறார் எங்கள் அய்யா’ என்று சொல்வதால் நேரடிப் பொருளை விட தத்துவ ரீதியான பொருள் விளக்கமே இங்கு பூரணமாக அமையும். ‘தொட்டு’ என்பதற்கு இறைவனின் அருள் பார்வை (அ) கருணை என்றும், ‘நாமம் சாற்றுதல்’ என்பதற்கு பிறப்பில்லா பேறை அருளுதல் (அ) இந்த ஆன்மா தர்மயுக வாழ்க்கைக்கு உரிய தகுதியை பெற்று விட்டது என்பதை குறிப்பதுமாகும். சேர்த்து பார்க்கும் போது, தர்மயுகம் உதிக்கும் வரையிலும் அந்த ஆன்மாவை தன்னுடைய அரவணைப்பில், மோன நிலையில் ஆனந்தத்தை உணர வைக்கிறார் (தீட்சை) என்பதாகும். இதையே நிறை நிலை வாழ்வு என்கிறோம். இப்படியே தர்மயுகம் உதிக்கும் வரையிலும் அய்யா வைகுண்டர் செய்து வருகிறார் என்பதுமாகும்.
பொருள் : –
துன்பகரமான கலியுக வாழ்வில் மயங்கி அறியாமல் செய்த பாவங்களை தாங்கி, உலக மக்களை காப்பதற்காக ‘தூண்’ போல் அவதாரம் எடுத்த அய்யா வைகுண்டரை, அனைத்துமாய் விளங்கும் ‘வல்லாத்தான்’ என நம்பிடும் மெய்யன்பர்களை, இனி பிறவாத நிலையான ஆனந்தத்தை அருளி வருபவரை மூலமுதற் பொருளான எங்கள் அய்யா வைகுண்டர் என உணர்ந்து சிவசக்தியான உம்மையே போற்றுகின்றோம்! உம்மிடமே அபயமிடுகின்றோம்.
“….தொழுத மதலையைக் கண்டு தொழுது பணிந்து நடந்தவர்க்கு
நாடு நமக்கென்று எடுத்துக் கொடுத்து
ஆளவருகிறார் எங்கள் அய்யா
சிவசிவ சிவசிவா அரஹரா அரஹரா….”
இங்கு ‘தொழுத மதலை’ என்பது அய்யா வைகுண்டரை குறிக்கும். அதாவது, நாராயணர்க்கு மகனாக உதித்ததால் ‘மதலை’ என சொல்லப்படுகிறது. அதுபோல, அய்யா வைகுண்டர் உதித்ததும் தகப்பனான நாராயணரை வணங்கி, பூமியில் தான் என்ன செய்ய வேண்டும் என்பதை விஞ்சை உபதேசமாக பெறுகிறார். அதுமட்டுமல்லாமல், பூமியிலே வந்து இகனை நடத்திக் கொண்டிருக்கும் போதும் 2 முறை முட்டப்பதி கடலுக்குள் சென்று நாராயணரை வணங்கி விஞ்சை உபதேசம் பெறுகிறார். அதுபோல மோலோகத்தார்களை பிறப்பிக்கும் போது சொன்ன உறுதிமொழி படி, சிவனாகிய பரப்பிரம்மத்தை நோக்கி வணங்கி தவம் செய்கிறார். இதனால் தான் ‘தொழுத மதலை’ எனும் அடைமொழி எடுத்தாளப்படுகிறது.
இங்கு நாம் ஒன்றை உணர்ந்து கொள்ள வேண்டும். நாராயணமே இங்கு வைகுண்டமாக அவதரித்தது. சிவப்பொருளே இங்கு வைகுண்டமாக தோன்றியது. பின் ஏன் தந்தை – மகன் என்கிற உறவு இங்கு சொல்லப்படுகிறது என்றால், தந்தையாகிய நாராயணரை, மகனாகிய வைகுண்டர் எவ்வாறு வணங்கி, போற்றி உபதேசம் பெற்றாரோ! அதுபோல் நமக்கெல்லாம் தந்தையாகிய அய்யா வைகுண்டரை வணங்கி வாழ வேண்டும், என்று உணர்த்தவே! இந்த காரண காரியத்தை இறைவன் நடத்துகிறார்.
‘நாடு’ என்பது துவரயம் பதியாகிய தர்மபதியையும் தர்மயுக நிலத்தையுமே குறிக்கும். இதை தர்மயுக வாழ்வில் நமக்கு கொடுத்து அய்யா அரசாட்சி செய்யப்போகிறார் என்பதுமாகும்.
“…சொந்தமாய் உங்களுக்கு துவரயம்பதி யெனவும்
தந்தோம் இலங்கை தளவாடம் உள்ளதெல்லாம்…”
எனும் ‘கல்யாண வாழ்த்து‘ பகுதியையும் இங்கு ஒப்பு நோக்குவோம்.
பொருள் :
நாராயணரை வணங்கி விஞ்சை உபதேசம் பெற்ற அய்யா வைகுண்டரை பணிந்து வணங்கி, அவர் சொன்ன ஆகம முறைப்படி நடப்பவர்களுக்கு தர்மபதியை சொந்தமாக எடுத்து கொடுத்து அரசாள வருகிறார் மூலமுதற் பொருளான அய்யா வைகுண்டர் என உணர்ந்து, சிவசக்தியான உம்மையே போற்றுகின்றோம்! உம்மிடமே அபயம் இடுகின்றோம்.
(தொடரும்…)
அகிலதிரட்டு அம்மானை மூலமும்,உரையும்
க.ரீகன் அய்யா- 96890418976
ஆறி லொருகடமை அவன் வேண்டிற் றானெனவே மாறி யவன்புவியோ மனதிற்கென வைகளில்லை கோவில் சிவாலயங்கள் குளங்கூபம் வாவிகளும் சேவித் தனுதினமுஞ் செய்வானே தானதர்மம்.
இப்படியாக சிறப்பாக ஆட்சி புரிந்த வந்த சோழமன்னன் ஆட்சியில் மக்கள் அனைவரும் மிகுந்த மகிழ்வோடு வாழ்ந்து வந்தார்கள். அதில் ஒரு கடமையாக அவன் விளைச்சலில் வரும் வருமானத்தில் ஆறு பங்கில் ஒரு பங்காக வரியை வாங்கினாலும், அதனால் அவன் தேசத்து மக்கள் எந்த துன்பத்தையும் அனுபவிக்கவில்லை. மக்கள் அனைவரும் மிகுந்த மகிழ்வோட இருந்தார்கள். சோழ மன்னன் தினமும் தான தர்மங்களை எளியோருக்கு வாரி வழங்குபவனாக இருந்தான். மேலும் இறைவனை தொழுது அறநெறியில் ஆட்சி புரிந்தால், இறைவனுக்கான ஆலயங்களும் அதில் புனித நீராட வழிவகைகளும் செய்து அறநெறியோடு, இறை பக்தியோடு ஆட்சி புரிந்து வந்தான்.
“ஆனதால் சோழன் அரசாளுஞ் சீமையிலே
நீதமாய்த் தெய்வம் நிலைநிறுத்த வேணுமையா
என்று மிகத் தேவர் இறைஞ்சித் தொழுதிடவே
கண்டிருந்த ஈசர் கதியமா லோடுரைப்பார்.”
இப்படி எல்லோரும் போற்றும் வகையில் நீதி நெறி தவறாது அறத்தினை கடைபிடித்து ஆட்சி புரிந்த அந்த சோழ மன்னன் தேசத்தில் எல்லாவித சிறப்புகளையும் நிலை நிறுத்த வேண்டும் என தேவர்கள் ஆசை கொண்டார்கள். ஒரு தேசத்தில் எல்லாவித் சிறப்புகளும் குறைவுபடாமல், எந்த வித தோஷங்களும் அணுகாமல் இருக்க வேண்டுமெனில், அத்தேசத்தில் தெய்வத்தின் கருணை இருக்க வேண்டும். அப்படி அந்த தெய்வ கருணையை, தெயவ அருளை பூரணமாக விளங்க செய்ய வேண்டுமென தேவர்கள் சிவபெருமானிடம் திருமாலோடு கூடி வந்து வேண்டுதலை வைத்தார்கள்.
இப்படி ஒரு நல்லது பூவுலகில் நடக்கும் போது அது தேவலோகத்து தேவர்களை மகிழ்ச்சி அடைய செய்து, அவர்கள் தாமாகவே அந்த நன்மைக்கான பலனை கொடுக்க வேண்டும் என எண்ணுவதை நாம் இதன் மூலம் அறிய முடிகிறது. ஆகவே நாம் நியாயபடி இறைவன் வகுத்த சட்டப்படி இந்த உலகத்தில் சத்தியத்தோடு வாழ்ந்தால், அந்த நன்மை நம்மை சார்ந்தவர் களுக்கு தெரிகின்றதோ, இல்லையோ, மேல் உலகத்தாருக்கு அது தெரியும். அதன் மூலம் அவர்கள் அந்த நன்மைக்குரிய பலனை நிச்சயம் தருவார்கள். இப்படி இந்த தேகர்களெல்லோரும் கூடி சிவபெருமானிடம் தெய்வ நீதத்தை சோழன் அரசர்களும் சீமையில் நிலை நிறுத்த வேண்டும் என்று விண்ணப்பம் வைத்த உடனே, சிவபெருமான் இதனைப் பார்த்து மகிழ்ந்து திருமாலோடு ஆலோசித்து கூறறுற்றார்.
“நல்லதுகாண் மாயவரே நாட்டை மிகக்காக்க
வல்லவனே பூமா தேவி தனைவருத்தும்
வருணன் தனையழை நீ மாதமும் மாரி பெய்ய
கருணைக் குடை விரிக்க கங்குல் தனையழையும்”.
இப்படி சிவபெருமான் திருமாலோடு ஆலோசித்து சோழன் அரசாளும் சீமையினை நாம் சிறப்பு செய்ய வேண்டும். ஆகவே ஒவ்வொரு சக்திகளையும் வரவழைத்து அவர்களை எப்படி , எப்படி இந்த ராச்சியத்திற்கு சிறப்பு செய்ய வேண்டும் என உபதேசிக்க வேண்டும் என்று கூறுகின்றார். முதலில் பூமா தேவியினை அழைத்து இந்த தேசத்தை காக்க வேண்டும் என்று கூறும் என்று கூறுகின்றார். அதாவது நாம் வாழக்கூடிய பூவுலகினை தாயாக இருந்து நம்மை முதற்கொண்டு, படைக்கப்பட்ட அத்தனை ஜீவராசிகளையும் தாங்கி கொண்டிருப்பது பூமா தேவியாகும். நமக்கு வேண்டிய பொசிப்பினை தருவதும் அன்னையாகிய பூமா தேவியே. பூமி சுழன்று கொண்டு இருந்தாலும், நம்மை அவள் மடியிலே ஒரு குழந்தையை போல துன்பமில்லாமல் காத்து வருபவள். பூமி குலுங்கினால்,இந்த உலகம் இருப்பதில்லை. உலக ஜீவராசிகள் அழிந்து விடும். ஆகவே இப்படி எந்த துன்பமும் சோழ மன்னன் ராச்சியத்தில் வரக்கூடாமல் பூமா தேவி காத்து அருள வேண்டும் என கூறினார்.
அடுத்ததாக வருண பகவானை அழைத்து அந்த வருண பகவான் எப்படி தன் கடமையை சோழ மன்னன் தேசத்தில் செய்ய வேண்டும் என கூறுகின்றார். அதாவது நீர் என்பது உலக மக்களுக்கு மிகவும் இன்றிமையாதது ஆகும். நீர் இல்லா விட்டால் இந்த உலகம் வறண்டு விடும். அந்த நீரே பருவம் தப்பி மழையாக பொழிந்தால், இட்டியிருக்க கூடிய பயிர்கள் நாசமாவதோடு, அரசும் வளமின்மையாகி விடும். அதுவே மிகவும் அதிகமாக பெய்தால் பிரளயம் ஏற்பட்டு அணைகள் உடைபட்டு உலக உயிர்கள் துன்பப்படும். ஆகவே அந்த வருண பகவானை அழைத்து ஒரு மாதத்தில் மூன்று முறை மழை பொழிய சொல் என்று சிவபெருமான் திருமாலிடம் கூறுகின்றார். இவ்வாறு மூன்று மழையாக, மாதம் மும்மாறி எந்த விதமான பஞ்சமும் அந்த ராச்சியத்தில் இருக்காது , தேசமும் செழிக்கும்.
அடுத்ததாக அக்னி பகவானை அழைத்து, அந்த அக்னி பகவான் இந்த சோழ மன்னன் ராச்சியத்தில் எவ்வாறு தன் கடமையை செய்ய வேண்டும் என சொல்லுகின்றார். அதாவது சூரியன் தன் வெப்பத்தை அளவிற்கு அதிகமாக வெளிப்படுத்தினால், வெப்பத்
தால் அத்தனையும் கரிந்து விடும். ஆகவே வெப்பமானது மிதமாக இருக்க வேண்டும். அது உலக மக்களுக்கு இதமாக இருக்க வேண்டும். ஆகவே சூரியன் தன் கதிர் வீச்சை கருணைக்குடை விரித்து அதனுள் உலக மக்கள் இருந்து பாதுகாப்பு வளையமாக இருக்கும் படி தன் வெப்பத்தை கொடுக்க வேண்டும் என செய்ய சொல்லுகின்றார்.
“வாசியது பூவாய் வழங்க வரவழையும்
தோசி மறலியையும் சொல்லி விலக்கிடு நீ
குருபூசை செய்யும் கூட்டமதிற் சிவமாய்
திருவீற்றிருக்கச் செய்திடு நீ கோலமது”.
அடுத்ததாக வாயு பகவானை அழைத்து காற்று எவ்வாறு வீச வேண்டும் என்று திருமாலிடம் சிவபெருமான் சொல்லுகின்றார். காற்று இதமாக வீசும் போது தென்றலாகவும், அதே காற்று அதிக அழுத்தத்தில் வீசினால் புயல் என்றும் கூறுகின்றோம். ஆனால் வீசக்கூடிய காற்று ஒன்று தான். அது வீசும் இயல்பை பொறுத்து உயிர்களுக்கு நன்மையையும் கொடுக்கும். அது போது அழிவையும் உண்டாக்கும். ஆகவே நாட்டில் நடக்கும் இயல்புக்கு தக்கவாறு அதன் தன்மை இருக்கும். இங்கே சோழ மன்னன் ஆட்சி சிறப்பாக இருந்த காரணத்தால், வீசக்கூடிய காற்றினை பூப்போல வீசச் சொல்லுகின்றார். அதாவது பூத்து சொரிந்திருக்கூடிய பூந்தோட்டத்தில் செல்லும் போது, அந்த பூப்பட்டு நம் மேனி எப்படி இதமான தன்மையை அனுபவிக்குமோ, அது போல தெட்சனா பூமியில் வீசக்கூடிய காற்றும் அமைய வேண்டும் என்று வாயு பகவானை அழைத்து சொல்லச் சொல்லுகின்றார்.
அடுத்ததாக தோசி மறலியை அந்த தேசத்திலிருந்து விலக்கி வைக்க சிவபெருமான் திருமாலிடம் சொல்லுகின்றார். அதாவது இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் மரணம் என்ற ஒன்று நிச்சயம் உண்டும். அது எப்படி இயற்கையாக ஒரு பிறப்பு நடக்கின்றதோ, அது போல அந்த மரணமும் இயற்கையாகவே நடக்க வேண்டும். ஆனால் சில நேரங்களில் இந்த இயற்கை விதிப்படி இல்லாமல் துர் மரணங்கள் நாட்டில் நடைபெறுவது உண்டு. இம்மரணங்கள் நாட்டில் நாம் நடக்கும் முறையைப் பொறுத்தே அதிகரிக்கின்றது. அத்தோடு, இறைவனுக்கு பயந்து அவர் நியதிபடி வாழ்ந்தால் இவ்வித மரணங்கள் ஏற்படுவதில்லை. ஆனால் நாட்டில் தர்மம் குன்றி அதர்மங்கள் அதிகரித்து இருந்தால் இவ்விதமான தோசி மறலி என்று சொல்லக்கூடிய துர் மரணங்கள் அதிகம் ஏற்படும். இது தனிப்பட்ட ஒருவரை மட்டும் சார்ந்தது அல்ல. நாட்டை ஆளக்கூடிய நீதி நெறிப்படியும் அமைகின்றது. ரெட்சணத்தில் சிறப்பான சோழ மன்னன் ஆண்டு வந்த காலத்தில் அவனுடைய ராட்சியத்தில் இவ்விதமான தோசி மறலி ஏற்படா வண்ணம் அதை விலக்கி வைக்க சிவபெருமான் சொல்லுகின்றார்.
அது போல பூசை முறைகள் செய்யும் போது அந்த பூஜைகளை சிவபெருமானே அங்கே குருவாக இருந்து நடத்தவும் அதை ஏற்கவும் செய்யும்படி அந்த அமைப்பை தெட்சணா பூமியில் ஏற்படுத்த வேண்டும் என சிவபெருமான் நாராயணரிடம் கூறுகின்றார்
(தொடரும்)
உயர்திரு. பொ.முத்துக்குட்டி அவர்களின் வாழ்க்கை வரலாறு
– பா. கிருஷ்ணமணி அப்புக்குட்டி அய்யா
முன்னுரை:
ஸ்ரீமன் நாராயணரின் கலியுக அவதாரமான “அய்யா வைகுண்ட” அவதாரத்தைப் பற்றி அய்யா தனது சீடர் அரிகோபாலர் மூலம் தந்த புனித நூலான “அகிலத்திரட்டு அம்மானை” எடுத்துரைக்கிறது. இறைவனின் கலியுக அவதாரத்தைப் பற்றி சொல்லுகின்ற அகிலத்திரட்டு அம்மானையில் சிறு பகுதியாக தேவலோகத்தில் வாழ்ந்து, பின் பூலோகத்தில் பிறந்த சம்பூர்ண தேவன் என்பவரைப் பற்றிய கதையும் உள்ளது. “சம்பூர்ண தேவன்” என அகிலத்திரட்டு அம்மானை குறிப்பிடுகின்ற நபரின் பூலோக பெயர் திரு.பொ.முத்துக்குட்டி என்று அறியப்படுகிறது. இருப்பினும் அகிலத்திரட்டு அம்மானையில் சம்பூர்ண தேவனின் பூலோக வரலாற்றை சொல்லுகின்ற இடங்களிலும் முத்துக்குட்டி என்று சொல்லாமல், சம்பூர்ண தேவன் என்றே சொல்லப்பட்டுள்ளது.
இனி மதிப்பிற்குரிய பொ.முத்துக்குட்டி (சம்பூர்ணதேவன்) அவர்களின் மேலோக மற்றும் பூலோக வாழ்க்கை வரலாற்றையும், அவர்கள் எவ்வாறு அய்யா வைகுண்டரால் ஆட்கொள்ளப்பட்டார் (பேறு, முத்தி) என்பதையும், மகாவிஷ்ணுவின் கலியுக அவதாரமான அய்யா வைகுண்டர் வேறு பொ.முத்துக்குட்டி என்கின்ற மனிதன் வேறு என்பதையும், பொ.முத்துக்குட்டி என்பவர் திருச்செந்தூர் கடலுக்குள் சென்று வைகுண்டசாமியாக மாறவில்லை என்கின்ற உண்மையையும் அகிலத்திரட்டு அம்மானையின் அடிப்படையில் காண்போம்.
சம்பூர்ண தேவனின் மேலோக வரலாறு:
மேலோகம் ஏழில் உள்ளவர்கள் அனைவரும் நாராயணரின் விந்துவழி குலங்களாக பூலோகத்தில் பிறக்க வேண்டும் என்பது யோக முனியின் சாபம் ஆகும். அயோக அமிர்த கங்கையில் அய்யா நாராயணருக்கும் சப்த மாதர்களுக்கும் பிள்ளையாக மேல் லோகம் ஏழின் வித்தாக ஏழு குழந்தைகள் பிறந்தனர். அவ்வாறு பிறந்த ஏழு குழந்தைகளின் சான்றோர் இனவழியில் ஏழு மேலோகத்தாரையும் பூமியில் பிறவி செய்தார் ஸ்ரீமன் நாராயணர். அப்போது தெய்வலோகத்தை சார்ந்த பெரிய திறவானான சம்பூர்ண தேவன் மட்டும், தான் எமலோகத்தை சார்ந்த பரதேவதை என்கின்ற பெண் மீது கொண்ட ஆசையாலும், மாய்கையாலும் நாராயணரின் வார்த்தையை மறுத்து பேசினான். அப்போது அவன் அய்யா நாராயணரிடம் “தாம் எமலோகத்தை சார்ந்த இன்னொருவரின் மனைவியான பரதேவதையை விரும்புவதாகவும், அவளும் தன்னை விரும்புவதாகவும், எனவே எங்கள் இருவரையும் கணவன் மனைவியாக புவியில் பிறவி செய்ய வேண்டும்” என கேட்கின்றான். மேலும் அவன் “தான் பூவியில் பிறக்க வேண்டுமென்றால் மேற்சொன்ன விருப்பத்தை நிறைவேற்றித் தரவேண்டும் என்றும், நிறைவேற்றி தரவில்லை என்றால் பிறப்பதற்கு சங்கடம் உண்டும்” என்றும் கூறினான்.
சம்பூர்ண தேவனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட நாராயணர் அவனிடம் “நீ என்ன பேசுகிறார், உன் பிறப்பு உயர் பிறப்பு, ஒவியத்தின் தன் பிறப்பு, ஆனால் அந்த பெண்ணின் பிறப்போ எமன் பூமி பிறப்பல்லவா, அப்பிறவியோடு இப்பிறவி சேரமுடியுமா?, இப்படியோரு நியாயத்தை ஏன் உரைத்தாய் பெரிய தேவா, வீணான இந்த ஆசையை விட்டுவிடு” என்று உபதேசித்தார். எவ்வளவோ நியாயத்தை அய்யா நாராயணர் எடுத்துச் சொல்லியும் அவன் புத்திக்கு எட்டவில்லை. எனவே மறுத்து “மாயவரே நான் அந்த பெண்னின் மீது மாமோகம் கொண்டுவிட்டேன், எந்த விதத்திலாவது அந்த பெண்கொடியை எனக்கு சொந்தமாக்கி தரவேண்டும், என் பிரானே இனி நீங்கள் மாற்றி எதுவும் சொல்ல வேண்டாம்” என்று வேண்டி நின்றான்.
இதனை அகிலத்திரட்டு அம்மானை வாசகமானது பின் வருமாறு கூறுகிறது…
“ஏனடா தேவாநீ யிந்தமுறை சொன்னதென்ன
வீணடா யிவ்வாசை விட்டுவிடு நீதேவா
கீரிக்குப் பாம்பு கிளைவருமோ வையகத்தில்
ஓரிக்குச் சிங்கம் வொக்குமோ மாதேவா
இப்படியே மாயன் எடுத்துரைக்கத் தேவாதி
எப்படியும் புத்தி யிசையாம லேயுரைப்பான்
காவலரே மாமோகம் கண்டயிட மன்றல்லவோ
ஆவலது கொண்டயிடம் அச்சுதரே சம்மதங்காண்
எந்தவித மாகிடினும் யெனக்கந்தப் பெண்கொடியை
தொந்தமா யெந்தனக்குத் தொலையாத ஆசையதும்
தந்தருளி வைத்தால் தர்மமுண் டுங்களுக்கு
எந்தன் பிரானே யினிமாத்திச் சொல்லவேண்டாம்”
அதற்கு அய்யா நாராயணர் அவனிடம் “நான் சொல்கின்ற ஓன்றையும் நீ கேட்கவில்லையே, உன் மனம் ஒத்துக்கொள்ளவில்லையே” என்றுக் கூறி, “கீழுள்ள பெண்னை மேலாக்க வேணுமென்று தவம் செய்திடுநீ, அத்தோடு மேலோகம் வேணுமென்று பரதேவதையும் தவம் செய்ய சொல்” என்றார். மேலும் “அவ்வாறு நின்ற தவத்தில் வெற்றிப் பெறும் போது நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேற்றித் தருவேன்” என்று உறுதி சொன்னார். இவ்வாறு மகாவிஷ்ணு கூறியதை கேட்ட தேவன், சிரித்து மனம் மகிழ்ந்து, பரதேவதையை கூட்டிக் கொண்டு விறுமா பதம் சேவித்து, பரதேவதையுடன் தவத்தில் உறுதியாக நின்றான். இதனை அகிலம் பின்வரும்மாறு கூறுகின்றது.
“என்றுரைக்கத் தேவன் யெடுத்துரைப்பா ரெம்பெருமாள்
ஒன்றுநீ கேட்டிலையே வுன்மனது வொத்திலையே
கீழுள்ள பெண்ணை மேலாக்க வேணுமென்றால்
வேழமொத்த தேவா மிகுத்ததவஞ் செய்திடுநீ
மேலாக வேணுமென்று மெல்லியரும் நல்தவசு
காலால் கனலெழுப்பிக் கடுந்தவசு செய்திடச்சொல்
தவசு யிருபேரும் தாற்பரிய மாகநின்று
சிவசுவா சம்பெருக்கிச் சிறந்ததவஞ் செய்திடச்சொல்
நின்ற தவத்தில் நிலையாய் நினைத்ததெல்லாம்
அன்றுங் களுக்கு அருளுவே னானுமென்று
சொல்லிடவே தேவன் சிரித்து மனமகிழ்ந்து
நல்லதுதா னென்று நாட்டமுற்றுத் தேவனுந்தான்
பரதே வதையான பைங்கிளியைத் தான்கூட்டி
விரைவா கத்தேவன் விறுமா பதஞ்சேவித்து
நின்றான் தவசு நெடியோ னுறுதியென்று
நன்றான நன்னுதலும் நல்லசம் பூரணனும்”
(குறிப்பு: இங்கு அய்யா “நின்ற தவத்தில் நிலையாய் நினைத்த தெல்லாம்” என்று குறிப்பிடும் வாசகமானது பூலோகத்தில் தங்களை கணவன் மனைவியாக பிறவி செய்ய வேண்டி அவர்கள் நினைத்ததை குறிக்கிறதே அன்றி, இனி அவர்கள் புதிதாக நினைக்க போகின்றதை இவ்வார்த்தை குறிக்கவில்லை என்பதை அறிக. எனெனில் “நினைத்தது எல்லாம்” என்னும் வார்த்தையானது இறந்தக் காலத்தை குறிப்பது ஆகும். இதுவே இனி புதிதாக தவத்தில் அவர்கள் நினைப்பதை நிறைவேற்றி தருவதாக சொல்லி இருந்தால் “நினைக்க போகிறதை” அல்லது ‘நினைக்க இருக்கின்றதை” என்று தான் அய்யா நாராயணர் குறிப்பிட்டு இருப்பார்).
அவர்கள் இருவரையும் தவத்துக்கு அனுப்பிவிட்டு மேல் எழுலோகத்தாரையும் பூமியில் சான்றோர் வழியில் பிறவி செய்கிறார் அய்யா நாராயணர். பிறவி செய்கின்ற போது அவர்களிடம் “நீங்கள் போய் மங்களமாய் தோன்றி வாழுங்கோ என்மகவாய், வாழுகின்ற நாளையில் நான் உங்களிடம் வருவேன், வந்து உங்களுக்காய் சிவனை நினைத்து தவசிருந்து, நாட்டமுடன் உங்களை எடுத்து தர்ம வையகத்தில் வாழவைப்பேன்” என்று கூறி பிறவி செய்தார். இவ்வாறு ஸ்ரீமன் நாராயணர் தாமே கலியுகத்தில் “அய்யா வைகுண்டர்” என்னும் பெயரில் அவதரித்து காப்பதாக மேலோகத்தாருக்கு வாக்குக் கொடுத்து பிறவி செய்து அனுப்பிய வாசகத்தை அகிலத்திரட்டு அம்மானை பின்வருமாறு கூறுகிறது.
“மங்களமாய்த் தோன்றி வாழுங்கோ யென்மகவாய்வாழுகின்ற நாளையிலே வருவே னானுங்களிடம்”
“ஆனதால் நீங்கள் அவனியி லென்மகவாய்
ஈனமில்லா துங்கள் யினத்தில் பிறந்திருங்கோ
வாழுங்கோ கலியன் மாய்கையால் சாவுவந்தால்
பாழுபோ காதேவுயிர் பதியுமுங்கள் தம்வழியில்
நான்வந் துங்களையும் நாட்ட முடனெடுத்து
மானொத்த தர்ம வையகத்தில் வாழவைப்பேன்”
“என்மக்க ளேழும் யியல்கலியில் பட்டுழன்று
வன்மக் கலியதனால் மாறிமிகச் செய்ததெல்லாம்
நான்பொறுத் துங்களுக்காய் நானே தவசுபண்ணி
வான்சிவனுக் கேக்க வாய்த்த தவமிருந்து
மக்களேழு பேர்கள் வம்மிசங்க ளுள்ளதெல்லாம்
ஒக்கவொன்று போலே வுகந்தெடுத் துண்மையுடன்
நாடாள வைப்பேன் நல்லமக்க ளேழ்வரையும்”
“எல்லோரு மென்மகவா யினத்தில் பிறந்திருங்கோ
வல்லோரே யுங்களைநாம் வந்தெடுப்போ மஞ்சாதே
என்மக்க ளேழும் ஈன்றவழிச் சான்றோரை
பொன்மக்க ளான பூமக்கள் தங்களுக்கு
என்சொத்து மீந்து யென்பேரையுங் கொடுத்து
தன்சொத்தோ டேயிருந்து தற்சொரூபங் கொண்டிருப்பேன்
இறப்பு பிறப்பு யில்லாம லென்மகவை
பிறப்பிறப் பில்லாமல் பெரும்புவியை யாளவைப்பேன்
ஆனதால் தர்மயுக அரசுங்க ளுக்கருளி
மானமாய்த் தந்தோம் மாயாண்டி தன்னாணை”
தவத்தை காண செல்லுதல்:
சம்பூர்ண தேவன் மற்றும் பரதேவதையின் தவத்தைப் பார்த்து, அவனை ஈனமாய் பிறவி செய்வதற்காக சிவனும், நாராயணரும் அவர்கள் தவம் செய்யும் இடத்தை நோக்கி சென்றனர். அப்போது சிவனை காண்பதற்காக இந்திரனும் நாராயணரின் தங்கசரம் போல் உள்ள தங்க நவரத்தினத்தினால் ஆன எங்கும் ஒளிவீசும் இரத்தின திருமுடியை(கிரீடம்) சூடி அங்கு வருகின்றான். அந்நேரம் தேவேந்திரனின் திருமுடியைக் பார்த்த சம்பூரண தேவன் அதன் மேல் ஆசை கொண்டு தவத்தை தவற விட்டான். மேலும் அவன் பரதேவதையிடம் “தெய்வேந்திரனின் சிரசில் உள்ள சங்குசர தங்கமுடியை தனது தலையில் சூடி, பரதேவதையே உன்னோடு இரத்தின சிங்காசனத்தில் துரைத்தனமாய் இருந்து நாராயணருக்கும் தெய்வ கன்னியருக்கும் பிறந்த சான்றோர் வழி மக்களை அருகிருத்தி ஏற்ற ஒரு சொல்லுக்குள் தர்மநீத வையகத்தை மகிழ்சியுடன் ஆண்டிருக்க ஏற்ற திருமுடி இதுவல்லவோ” என்று தனது ஆசையை சொன்னான். அவன் கூறியதைக் கேட்டு ஆசைக் கொண்ட பரதேவதையும் “அப்படித்தான் நம்மை ஆதி சிவன் படைத்தாலும், இப்படி படைக்கப்பட்டோரால் இறவாமல் இருக்க முடியுமா? என்றாள். அவள் கூறியதைக் கேட்டு தேவன் பெருமூச்சி விட்டபோது அங்கு வந்த ஆதிசிவத்தையும், திருமாலையும் கண்டான். உடனே தேவனும், பரதேவதையும் அவர்களின் பாதத்தை பணிந்து, எங்களின் தவத்துக்கு இறங்கி வந்தீர்களோ? என்று கேட்டனர்.
அப்போது சிவப்பெருமான் நாராயணரிடன் “கேட்டீரோ இவன் சொன்னதை, நின்ற தவத்தை முடித்தானில்லை, தவம் நிறைவேறும் தருவாயில் சிற்றின்பமாகிய திருமுடி மேல் ஆசைக்கொண்டு தவத்தை தொலைத்து விட்டனர் இருவரும், இருப்பினும் பூலோக நல்வளமையை சொல்லி பிறவி செய்யும்” என்றார். அதனைக் கேட்டு மகிழ்ந்த நாராயணர் சிவனிடம் தவத்துக்கு குறைவு வந்ததுக்கான காரணத்தை கேட்க, சிவன் தேவனிடம் இப்போது உன் சிந்தையில் தோன்றிய எண்ணத்தை எல்லாம் சொல் என்றார். இதனைக் கேட்டு பயந்து சிந்தை கலங்கிய தேவன் “நாங்கள் நினைத்தது உங்களுக்கு தெரிந்து விட்டதா?, பரதேவதையோடு அல்லவா நான் சொன்னேன், அப்போது அங்கு யாரும் இல்லையே? யாருக்கும் தெரியாது என்று இருந்தேனே” என்று கூறி பணிந்தான். பூரணனே, நாரணனே, வாசவனே, என் சிவனே நான் நினைத்ததை பொறுத்து மன்னித்து காப்பாற்றுமையா என்று வேண்டி நின்றான். இதனை அகிலத்திரட்டு அம்மானை வசகமானது
“பூரணனே வாசவனே பொறுத்தினிக் கொள்ளுமையா
நாரணரே யென்சிவனே நாடிப் பொறுவுமையா
என்று சொல்லித் தேவன்……” என்கிறது.
மேலும் இருவரும் தங்களின் தவறுக்கு வருந்தி, இறைவனை போற்றி விருத்தம் ஒன்று பாடினார்கள். அந்த பாடலில் “தெய்வ கன்னிகள் பெற்ற மனு வழியை வைத்து தர்மயுகத்தை ஆள வேண்டியது அய்யா நாராயணர் என்கின்ற முடிவான உண்மையை அறியாமல், நாங்கள் அந்த மக்களை வைத்து ஆள நினைத்து தவங்குளறி தவறு செய்து விட்டோம், சிறியார் அறியாமல் செய்ததை பெரிதுப்படுத்தாமல் மன்னிக்க வேண்டும்” என்று கூறி, நாராயணரை பணிந்து நின்றனர். இதனை அகிலம்….
“சிறியார்மிக அறியாச்செய்த வெறியானதைச்
சிறிதாக்கியே சேர்ப்பாய் முகம்பார்ப்பாய்
முடிவானதை யறியாமலே மோகமாய்
வெகுதாகமாய் வுளறித் தவங்குளறியே” என்கிறது.
பரதேவதை பிறவி செய்யப்படுதல்:
பரதேவதையை பிறவி செய்ய எண்ணிய அய்யா நாராயணர், அவளின் பூலோக பிறவி எந்த விதத்தில் இருக்கும் என்பதை கூறுகிறார். “பெண்ணே உன்னுடைய கணவன் எமலோகத்தில் வாடி ஏங்கித் தவிப்பதாலும், நீ உன் கணவனை மறந்து சம்பூரண தேவனை விரும்பியதாலும், கேடான நினைவினால் இருந்த தவமும் நிறைவேறாமல் போய்விட்டதால் பூமியில் எம வழியாய் பிறந்துள்ள எனது பிள்ளையின் வம்சா வழியில் சான்றோர் இனத்தில் பிறப்பாய்” என்றார். மேலும் “அப்போது இந்த தவக் குறைவின் காரணமாக உன்னுடைய முன் புருஷனுக்கு எல்லா விதமான வேலைகளையும் செய்து, அழுந்த துயரப்பட்டு, அவனிடமிருந்து எந்த விதமான அன்பான ஆறுதலான பேச்சு இல்லாமலும், அவனோடு சரசமுடன் கூடுகின்ற உறவு இல்லாமலும், அதனால் எந்நேரமும் ஏக்கமுடன் இருப்பாய்” என்றார்.
மேலும் “அப்போது இந்த சம்பூர்ண தேவன் மீது கொண்ட ஆசையாலும், விதியாலும் ஒருவரோடு ஒருவர் இச்சைக் கொண்டு, அவருடைய இளமைப் பருவத்தில் இருவரும் ஒருவர் என கருத்தொருமித்து இருப்பீர்கள், அதனால் நீ உன் கணவனையும், தாய் தந்தையையும், உறவுகளையும் மறந்து, சொந்த வீட்டையும், சுகத்தையும் மறந்து சந்தோஷம் என்பதே இல்லாமல், எல்லோரையும் கண்டு வெட்கப்படும் நிலையில் இருப்பாய் என்றும், பின்பு முன் புருஷனுக்கு மூலகரு கேடணைத்து, உலகோர் அறியும் படியாக சம்பூர்ண தேவனையே கணவனாக நினைத்து கொண்டிருப்பாய், அப்போதும் உன் முன் கணவன் கட்டிய மாங்கலியம் உன்னுடைய கழுத்தில் இருக்கும், அந்த வேளையிலே உனக்கு பலவிதமான தொந்தரவுகள் ஏற்படும், அதனை பலர் கேலி செய்வார்கள், அதனால் உனக்கு கவலை உண்டாகி, மேலும் மேலும் துன்பங்களை அனுபவிப்பாய், இரத்தப் போக்கு என்னும் பெரும்பாடு நோய் உண்டாகும், விக்கலும் இருமலுமாய் தீராத நோய் உடையவளாகவே இருப்பாய், இதனால் உனக்கு இறை நாட்டம் ஏற்பட்டு இறைவனை அடைவாய்” என்று கூறி சான்றோர் குலத்தில் எம வழியில் பிறவி செய்தார்.
சம்பூர்ண தேவன் பிறவி செய்யப்படுதல்:
பரதேவதையை தொடர்ந்து சம்பூர்ண தேவனை பிறவி செய்ய எண்ணிய நாராயணர், அவனிடம் பூவூலகில் நீ விரும்பிய பெண் பிறக்க போனதினால் இனி நீ என்ன சொல்ல போகிறாய் என்று கேட்டார். அப்போது தேவன் அய்யா நாராயணரையும், சிவனையும் புகழ்ந்து பாடி, பொய்யான மாய்கையினால் இந்திரனின் பொற்ப கிரீடம் மீது ஆசைக் கொண்டு மெய்யான தவத்தில் தவறிவிட்டேன், உங்கள் மனதிரங்கி நான் செய்த பாவத்தை மன்னிக்க வேண்டும் என்று பணிந்தான். இதனை அகிலத்திரட்டு….
“அய்யனேதவம் யானிற்கும் போதிலே
இந்திராணி மன்னனிந்திர னானவன்
பொய்யின் மாய்கைநினை வதினாலவன்
பொற்பக்கிரீடமீ துற்பனத் தாசையால்
மெய்யின்ஞா னத்தவம் விட்டுவாடினேன்
வித்தகாவுன் சித்த மிரங்கியே
செய்யும் பாவவினை தவிர்த்தாண்டருள்
சிவசிவா சிவசிவா சிவாபோற்றியே” என்கிறது.
தேவன் வணங்கி போற்றுவதைக் கண்ட சிவப் பெருமான் நாராயணரிடம் தேவனுக்குரிய வளமையை சொல்லி பிறவி செய்ய சொல்கிறார். அதனைக் கேட்டு நாராயணர் மகிழ்ந்து தேவனை பார்த்து “கீழான மங்கையரை மேலாக்க எண்ணி தவத்தில் நிற்கின்ற போது சண்டாளா நீ நினைத்தது தவத்துக்கு ஏற்றது ஆகுமா?, நினைவோன்றாக்கி தவசுக்கு நிற்கையிலே ஆசை நினைவு வரலாமா அறிவுக் கெட்ட மாதேவா?, பாசம் அறுத்து அல்லவா பரகதியை அடைய வேண்டும்” என்று அறிவுரை கூறினார். மேலும் அவனிடம் “இந்த நினைவு உனக்கு வந்ததினால் அந்த பெண்னை போன்றே நீயும் பூமியில் பிறப்பாய்” என்று சொல்லி, அவனுக்கான பூலோக பிறவி அமைப்பையும் கூறுகின்றார்.
சப்த கன்னிமார்கள் பெற்ற மக்களை வைத்து ஆள வேண்டும் என்று நினைத்த நினைவுக்காகவே நீ பூமியில் பிறந்து, அங்கு சிலநாள் துயரப்பட்டு, அத்துயரத்தை தொலைத்து, பின்னர் பரதேவதையைக் கண்டு கருவால் அவளை வசமாக்கி, எப்போதும் அவள் நினைப்பாகவே இருந்தது, நஞ்சு தின்றோ அல்லது நாண்டு கொண்டோ சாக வேண்டும் என்ற மனமாகி, பின்னும் சில நாள் கழித்து அந்த பெண்ணோடு உறவாடி தன்னோவியம் போல் தானிருக்கும் நாளையிலே உன் துயரத்தை தீர்த்து, என் மகவாய் உனையெடுத்து உனக்கு நற்கதி கொடுத்து, என்வரிசை தானமெல்லாம் உனக்கு தந்து, தர்மயுக வாழ்வை கொடுப்பேன் என்கிறார்.
அய்யா நாராயணர் சொல்லியதைக் கேட்ட சம்பூர்ண தேவன் அய்யாவின் பாதத்தை பணிந்து போற்றி “அய்யாவே பொய்யான கலியில் பிறக்கப்போ என்று சொன்னீரே, அவ்வாறு நான் பிறக்க இருக்கின்ற பிதிருக்கும், குலத்துக்கும் என் மூலமாக உயர்வு கிடைக்கும் படியான புத்தியை கொடுத்தும், அத்தோடு தம்மை ஆட்கொள்ளும் (முக்தி, தர்மயும வாழ்வு) தருணத்தையும் உரைக்க வேண்டும்” என கேட்கிறான். இதனை அகிலம் கீழ்கண்டவாரு சொல்கிறது.
“அய்யாவே பூமிதனில் அவதரிபோ யென்றீரே
பொய்யா னகலியன் பூமிதனி லேபிறந்தால்
பிறந்த வழியும் பிதிருமந் தக்குலமும்
அறந்தழைக்கு மாலே அதுவுமென் னாற்கெதிதான்
பெற்றுக்கொள் ளும்படியாய்ப் புத்தி கொடுத்தருளி
பற்றுத லாகப் பலன்கொடுப்போ மென்றுசொல்லும்
அல்லாம லென்னைவந்து ஆட்கொள்ளும் நாளதுதான்”
எல்லாம் விவரமதாய் இயம்பி யனுப்புமையா”
(குறிப்பு: இங்கு வைகுண்ட அவதாரம் நிகழும் முன்பே நாராயணரைப் பார்த்து சம்பூரண தேவன் “அய்யா” என அழைப்பதில் இருந்தே அய்யா வைகுண்டராக அவதரித்தது மகாவிஷ்ணு என்பது தெளிவாகிறது)
தேவனின் விண்ணப்பத்தை கேட்ட நாராயணர் அவனிடம் “தெச்சணா பூமியில் தான் (அய்யா வைகுண்டமாக) தேசபர சோதனைக்கு வருவேன், அப்போது உன்னை ஆட்கொள்வேன்” என்று கூறியதோடு, அப்போது பூமியில் என்ன என்ன நிகழ்வுகள் நடக்கும் என்கின்ற அடையாளத்தையும் எடுத்துரைக்கிறார்.
“எல்லாம் விவரமதாய் இயம்பி அனுப்புமையா
அப்பொழு தந்த ஆதிநா ராயணரும்
செப்புகிறார் அந்தத் தேவன் தனக்குத்திடம்
தெச்சணா பூமிதனில் தேசபர சோதனைக்கு
நிச்சயமாய் நான்வருகும் நிசத்துக் கடையாளம்”
(குறிப்பு: திரு.பொ.முத்துக்குட்டி அவர்கள் தான் கடலிலே மூன்று நாள் விஞ்சை பெற்று வைகுண்டமாக மாறிவிட்டார் என்று கூறும் அன்பர்கள் இங்கு நன்கு சிந்திக்கவும். ஏனெனில் நீங்கள் வைகுண்டமாக மாறிவிட்டார் என்று சொல்லும் சம்பூரண தேவனிடமே (முத்துக்குட்டி) அய்யா நாராயணர் “நான் தான்” தெட்சணா பூமியில் தேச பரசோதனைக்கு வருவேன் என்கிறார்).
சம்பூர்ண தேவனின் பூலோக வரலாறு:
சம்பூர்ண தேவன்(திரு.பொ.முத்துக்குட்டி) வல்லவனாகவும், நல்லவனாகவும், எல்லோருக்கும் ஏற்றவனாகவும், பெருமையோடும் தாமரையூரில் வளர்கிறார். பூலோகத்து மனுக்களின் பிள்ளை போலே வாழ்ந்து வளர்ந்து வரும் சம்பூர்ண தேவன் தன்னுடைய வீட்டில் உயர்ந்த ஒரு பீடம் அமைத்து விஷ்ணுவை போற்றி வணங்கி வந்தார். ஒருவருக்கு கூட எந்த விதமான தீங்கும் செய்யாமல், குருவை குரு கண்டு கொக்கரித்தே வளர்ந்து வந்தார். ஆனால் தம்மை எதிர்த்தவரின் பெலத்தை அடக்கி, எல்லோருக்கும் நல்லவராகவும், எல்லா ஜாதி மக்களுக்கும் விரும்புகின்றவராகவும் இருந்தார். தன்னோடு முன்னுடன் பிறந்தவர்களை காட்டிலும் பெரியோனாகவும் பெருமையுடையவனாகவும் வளர்ந்தார். ஊருக்கு தலைவன், உடையவனுக்கும் தலைவன், யாருக்கும் தலைவன் என சொல்லி அன்னையும் பிதாவும் வளர்த்தனர். நியாயம் இருப்பதினால் நாடாள்வான் என்று சொல்லி தாய் தந்தையரும், சொந்த பந்தங்களும் தாங்கி வளர்த்து வந்தனர்.
அவர் சொன்ன சொல்படி நடப்பவராகவும், பிறருக்கு உதவுவதில் உயர்ந்தவராகவும், சண்டை செய்வதில் வீரனாகவும். மங்கையர்க்கு ஏற்றவராகவும், மாமோக காமீகனாகவும், எல்லா இடங்களிலும் இவரின் புகழ் சொல்லும் விதத்தில் நல் வளமையோடு வாழ்ந்து வந்தார். பல்லாக்கு ஏறிடுவான், பார்முழுதும் ஆண்டிடுவான், எல்லோருக்கும் வல்லவனாய் இவன் இருப்பான் என்று சொல்லி எல்லோரும் கொண்டாடும் வகையில் வளர்ந்தாலும் பத்து வயது பண்போடு இருபது வயதிலும் இருந்து, மற்றொருவர் இவருக்கு நிகரில்லாமல் மன்னன் போல் வாழ்ந்தார். எல்லாவிதமான தொழில்களையும் கற்று தேர்ந்து, கெட்டவர்களை எதிர்ப்பவனாகவும், நல்லோரை மறக்காமலும், எளியோருக்கு உதவி செய்யும் தர்மவானாகவும், மொத்தத்தில் நல்லவனாக வாழ்ந்து வந்தார்.
இவ்வாறு சிறப்புடன் வாழ்ந்து வரும் போது விதி வசத்தால் தன்னுடைய பதினேழாவது வயதில் பரதேவதை(பாலம்மை என்பது பூலோக பெயர் என சொல்லப்படுகிறது) மீது ஆசைக் கொண்டார். இதன் காரணமாக அவளும் தேவன் மேல் ஆசைக் கொண்டு தன்னுடைய கணவனை விலக்கிவிட்டு தேவனை தேடி வந்து இருவரும் செய்ய இரசமாய் இருந்தனர். இருவரும் சேர்ந்து நலமாக வாழ வேண்டும் என்று இறைவன் மீது ஆணையிட்டு, இருபேரும் அகமகிழ்ந்து வெட்கமில்லாமல் நாயகன் போல் வாழ்ந்து வந்தார்கள். பரதேவதையை காணாமல் ஒரு நாள் கூட வேறு ஊரில் அவனால் தங்க முடியாதப்படியும், அவளும் தேவனை பிரிந்து இருக்க முடியாதவளாகவும் ஒருவர் மீது ஒருவர் அன்புடன் வாழ்ந்து வந்தனர். இப்படியாக இவர்கள் வாழ்ந்து வருவதை கண்ட ஊரார் இவர்கள் இருவருக்கும் இடையே ஏதோ ஜென்மாந்திர பந்தம் இருக்கிறது, இது இறைவன் வகுத்தது தான் என்று சொல்லி வந்தார்கள்.
உலகம் ஈரேழு பதினான்கும் அறிய பரதேவதையோடு வாழ்ந்து வருகின்ற நாளிலே 22 வயது இருக்கும்போது அவருடைய எதிரி ஒருவன் செய்த தப்பான செயலால் இடரு ஏற்பட்டு பிணிக்கு உள்ளானார். அதனால் தன்னுடைய சக்தியை இழந்து, நொம்பலத்தால் நொந்து எப்போதும் புலம்பிக் கொண்டிருந்தார். தாம் பிறப்பதற்குக் காரணமான கர்ம தோஷத்தை கழித்து சிவ ஞானத்தை பெற்று சிவ அருளை பெற வேண்டி மகாவிஷ்ணுவை நினைத்து தினமும் வணங்கி வந்தார். தன்னுடைய கர்மபலன் காரணமாக உடலில் ஏற்பட்ட நோயை ஓராண்டு காலமாக அனுபவித்து கழித்து, இறைவனை நாடி இகபரா தஞ்சமென்று இருந்து வந்தார்.
இவ்வாறு மாயவரை மனதில் வைத்து தீனம் எனவே இருக்கும்போது ஒருநாள் சம்பூர்ண தேவனின் தாயாரின் கனவில் மகாவிஷ்ணு தோன்றி உத்தரவு சொன்னார். அப்போது தாயிடம் திருச்செந்தூரில் மாசி மாதம் 19ஆம் தேதி கொடியேற்றி திருவிழா நடக்கிறது, அங்கு உனது மகனை கூட்டி வந்தால் அவனின் பிணியை எல்லோரும் அறியும்படி தீர்த்து, நல்லபேறும் கொடுப்போம் இது நம்மாணை தப்பாது என்றார். கருமேனி சுவாமி சொப்பனத்தில் சொன்னது நழுவி போகாது என்று நம்பிய தாய் தான் கண்ட சொப்பனத்தை சொந்த பந்தங்களிடம் சொல்லிய அங்கு அழைத்துச் சென்றால் தனது மகனின் நோய் தீர்ந்துவிடும் என்று மகிழ்ந்தாள். தானம் தர்மம் செய்வதற்கான பலகாரம், கருப்புக்கட்டி போன்ற பொருட்களையும் சேகரித்து, திருச்செந்தூர் செல்வதற்கான ஏற்பாட்டை சொந்த பந்தங்கள் செய்தனர். நோயினால் பாதிக்கப்பட்ட திரு.முத்துக்குட்டி அவர்களை தொட்டிலில் அமரவைத்து நாள் கடத்தாமல் உடனே திருச்செந்தூருக்கு தூக்கி சென்றனர். செல்லும் வழியில் கூடங்குளம் போன்ற பல ஊர்களையும், காட்டு பகுதியையும் கடந்து ஒரு நல்ல தண்ணீர் கிடைக்கும் இடத்தில் பசியாறி கொண்டிருந்தனர்.
ஏற்கனவே மகாவிஷ்ணுவும் தன்னுடைய கலியுக அவதாரத்தை நிகழ்த்துவதற்காக தேவ சங்கத்தாருடன் திருச்செந்தூருக்கு வந்திருந்தார். அப்போது தேவ சங்கத்தாரிடம் தான் வைகுண்ட அவதாரத்தை நிகழ்த்துவதற்காக வரும்போது சம்பூர்ண தேவனை ஆட்கொள்வதாக வாக்கு கொடுத்து பிறவி செய்திருந்தேன் என கூறி, சம்பூர்ண தேவன் தாமரையூரில் பிறந்து வாழ்ந்து வந்த விதத்தையும் சொன்னார். எனவே தாம் முன்பே நியமித்திருந்த நல்ல உயிரான சம்பூர்ண தேவனுக்கு முக்தி கொடுக்க வேண்டுமென்று எண்ணி சம்பூர்ண தேவனை அழைத்து வருமாறு கலை முனி, ஞான முனி என்னும் இரு முனிவர்களுக்கு ஆணையிட்டார். இரு முனிவர்களும் அய்யா சொன்னபடியே திரு.பொ. முத்துக்குட்டி அவர்களை தேடி சென்று, அவரைக் கண்டு, அவரின் கைகளை தங்களின் தோள் மீது வைத்து குதிரை நடை கொண்டால் போல் தூக்கி திருச்செந்தூரர் கடற்கரையில் கொண்டு வந்து நாராயணர் முன் நிறுத்தினர். அப்போது அய்யா நாராயணர் அவர்களிடம் சம்பூர்ண தேவனின் பெருமையை கேட்க, அவர்களும் தேவனின் தேவலோக கதை முதல் தாமரையூரில் பிறந்தது வரை சொல்லி முடித்தார்கள்.
அதன் பின்னர் நாராயணர் அந்த இரு முனிவர்களிடமும் தேவனின் உடலை(மேலுள்ள சடலம்)தரையில் லூட்டி(புதைத்தல்) விட்டு ஆன்மாவின் பழவினைகளை போக்கி மால் உள்ளத்தில் புகும்படி உடனே கொண்டு வரும்படி கூறினார். அதாவது தேவனுக்கு இனி ஒரு பிறவி இல்லாமல், முக்தி கொடுக்க தகுந்த வகையில் பழைய கர்மவினைகளை போக்கி ஆன்மாவை பரிசுத்தமாக்கி வர சொன்னார். அப்படியே அவர்களும் செய்ய, சம்பூர்ண தேவனுக்கு(முத்துக்குட்டி) அய்யா நாரயணர் முத்தி கொடுத்து தன்னோடு ஐக்கியப்படுத்துகிறார். இத்தோடு அகிலத்திரட்டு அம்மானையில் பொ. முத்துக்குட்டி அவர்களின் கதை முடிகிறது. ஒரு ஆன்மா எவ்வாறு இறைவனால் ஆட்கொள்ளப்படுகிறது என்பதை காட்டுவதற்கும், நாராயணரின் அவதார சூட்சுமத்துக்கும் சம்பூர்ண தேவனின் வரலாறு அகிலத்திரட்டு அம்மானையில் அய்யாவால் தரப்பட்டுள்ளது. எவ்வகையிலும் முத்துக்குட்டி என்பவர் அய்யா வைகுண்டர் இல்லை என்பதை அறிவோம், திரு. பொ.முத்துக்குட்டித்தான் அய்யா வைகுண்டர் என்று சொல்வது பாவச் செயல் என்பதையும், அகிலத்திரட்டு அம்மானைக்கு விரோதமானது என்பதையும் உணர வேண்டும்.
கலைகோட்டு முனியிடம் நாராயணர் தன்னுடைய கலியுக அவதாரம் எப்படி இருக்கும் என்று கூறும் போது “சூசகமான முறையில் கலியுகத்தில் அவதாரம் எடுப்பதால் எனது வைகுண்ட அவதாரத்தை எளிதில் மக்கள் கண்டு கொள்ள மாட்டார்கள்” என்கிறார். “ஆததால் நாராயணனாகிய நான் வந்துவிட்டேன் என சொல்வார்கள், பின் இல்லை அவர் வரவில்லை என்று சொல்லிடுவார்கள், என்னுடைய பெயரே அகிலத்திரட்டு அம்மானை நூலில் காணப்படுகின்ற போதும், யாரோ என சொல்லுவார்கள், இருப்பினும் எப்படியும் உள்ளறிவோர் நாராயணனாகிய நான் தான் வைகுண்டமாக அவதரித்துள்ளேன் என்பதை அறிந்து கொள்வார்கள், அவ்வாறு என்னை அறிந்தவர்கள் நன்றாக வாழ்வார்கள், அறியாதவர்களோ அழிந்து போவார்கள்” என்கிறார். இதனை அகிலத்திரட்டு அம்மானை
“இதோவந்தா னென்பார் யிவனில்லை யென்றிடுவார்
அதோவந்தா னென்பார் அவனில்லை யென்றிடுவார்
இப்படியே சூட்சமொன்று யெடுப்போம்நாம் மாமுனியே
எப்படியு முள்ளறிவோர் யெனையறிவார் மாமுனியே
அறிந்தோ ரறிவார் அறியாதார் நீறாவார்
செறிந்தோர்கள் வாழ்வார் சேராதார் போய்மாழ்வார்” என்கிறது.
அகில விடை:
- இறைவனைமறந்து, தர்மத்தைமறந்து
- ஆணவம், கர்வம்கொண்டு
- மனிதர்கள்
- முத்துயரம்என்றால்மூன்று விதமான துயரங்களை குறிக்கும், அவை பிணி, மூப்பு, சாக்காடு.
- முத்தீஎன்பதுமூன்று விதமான தீய குணங்களை குறிக்கும், அவை காமம், வெகுளி, மயக்கம் எனப்படும்.