தர்மயுக முரசு மார்ச் 2023
அய்யாவின் அருளால் எந்நாளும்நன்னாளே
-அசோக்குமார் அய்யா – 009607704901, 8012174032.
தோரணர்க் கேயபயம் சுவாமி யுமக்கபயம்”
செயல்வீரர்களே: எந்த பதி அய்யாவழிபாட்டு இந்து தர்மத்தை முன்னெடுக்க வேண்டுமோ, எந்த பதி அய்யா வைகுண்ட அவதாரத்தை உலகெங்கும் பறைசாற்ற வேண்டுமோ அந்த பதி தவறான பாதையில் செல்லுகிறது என்பது நம் எல்லோருக்கு தெரியும். ஆம் அது நமது பஞ்சபதிகளில் ஒன்றான சுவாமிதோப்பு பதி. அங்கே என்ன என்ன தவறுகள் அரங்கேறி இருக்கின்றன என்பதை நினைவு கூறி, என்ன என்ன வற்றை சரி செய்ய வேண்டும், எப்படி சரி செய்ய வேண்டும் என பார்ப்போம்.
அய்யா வைகுண்ட பரம்பொருளின் அவதார காலம் பதினெட்டு ஆண்டுகள், ஆனால் பதியின் முன் வாசலில் வைக்க பட்டுள்ள கல்வெட்டில் நாற்பத்தி இரண்டு வயதில் அவர் வைகுண்ட லோகம் சென்றார் என்று தவறாக சித்தரிக்க பட்டுள்ளது. அதுமட்டுமா பதியின் உள்ளே இடதுபக்கமாக செல்லும் போது அங்கே ஒரு கல்வெட்டில் அய்யாவின் இல்லற புதல்வன் பொதுக்குட்டி உறைவிடம் என்று தவறாக வைக்க பட்டுள்ளது. தொடர்ந்து பதியை சுற்றி வருகின்ற போது அய்யாவின் இல்லற துணைவி திருமாலம்மை உறைவிடம் என்று தவறாக இன்னொரு கல்வெட்டு வைத்துள்ளனர். இப்படி வைகுண்ட அவதாரத்தையும், அய்யா வழிபாட்டையும் கொச்சை படுத்தி உள்ளனர் சுயநலவாதிகள். மேலும் சற்று விரிவாகவும் இதனை சரிசெய்ய என்ன செய்யலாம் என்றும் பார்ப்பொம்.
வரலாற்றுச் சிறப்புமிக்க நமது சுவாமி தோப்பு அய்யா வைகுண்டர் திருப்பதியில் வரலாற்றைப் பிரதிபலிக்கும் ஞானமுனி கலைமுனி மேடையைப் போலி சமாதிகளாக மாற்றி வைகுண்ட அவதாரத்தைத் தவறாக சித்தரித்தும், அய்யாவழிபாட்டிற்குக் குந்தகம் விளைவிக்கும் தற்போதைய சுவாமிதோப்பு பதி பணிவிடையாளர்கள் திருந்தி அவ் தவறுகளை அப்புறப்படுத்த எல்லாம் வல்ல வைகுண்ட பரம்பொருளிடம் எல்லோரும் முறையம் இடுவோம்
மேலும் தவப்பதியாம் சுவாமிதோப்பு பதியில் பள்ளியறைக்குள்ளே பனை ஏறுபவர் பயன்படுத்தும் பொருட்களை வைத்து அய்யா அவதாரத்தைத் தவறாக சித்தரிக்க முயற்சிக்கிறார்கள் நாராயணா! அப் பொருட்களை அப்புறப்படுத்த அருள்புரியும் தாய் தந்தையே என்று எல்லோரும் முறையம் இடுவோம்.
சுவாமிதோப்பு பதியில் வைக்கப்பட்டுள்ள தவறான மூன்று கல்வெட்டுகளை அகற்றித் தாரும் அய்யா வைகுண்ட பரம்பொருளே என்று எல்லோரும் வேண்டுவோம்.
எல்லோரும் தவறாது முச்சந்தி வழிபாடு செய்யும் போது அய்யா வைகுண்ட பரம்பொருளை நோக்கி முறையம் இடுவோம். கைகளில் தீபங்களை ஏந்தி வீதியில் நின்று அய்யா வைகுண்ட பரம்பொருளை நோக்கி முறையம் இடுவோம்.
வருகிற அகிலத்திரட்டு அம்மானை உதயதின விழாவை முன்னிட்டு திருஏடுதந்த தென்தாமரை குளம் பதியில் இருந்து ஆகமத்திற்கு எதிராக செயல் படும் தற்போதைய சுவாமிதோப்பு பணிவிடையாளர்கள் திருந்தி அத் தவறுகளை எல்லாம் அப்புறப்படுத்த பகவானை நோக்கியும் அறநிலையத்துறையின் கவனத்தில் வரும்படியும் முறையம் இட்ட வண்ணம் அகில ஊர்வலமாக சுவாமிதோப்பு பதியில் வந்தடைந்து ஓம்கார நாயகனை நோக்கி முறையம் இடுவோம். நிச்சயமாக அய்யா நமது முறையத்திற்குச் செவிசாய்த்து தவறுகளை அகற்றி உண்மையை மலரச் செய்வார்.
சிவசிவ சிவசிவா அரகர அரகரா
அய்யா உண்டு
அகில கேள்வி
1. கன்னல் என்பது எது?
2. ஆனைதனை யுரித் தங்கமெல்லாம் புனைந்தவர் யார்?
3. ஆறுமுகப் பெருமான் சூரரை வதைப்பதற்காக யாரை வேலாயுதமாய் கொண்டார்?
4. மானேந்தியது யார்?
5. மழுவேந்தியது யார்?
விடை ……… பக்கம் பார்க்கவும்
அகிலதிரட்டு அம்மானை மூலமும், உரையும்
-க. ரீகன் அய்யா- 0096893145654 டே. பிரபின்குமார் அய்யா
வீணடா செய்தாய் விழலா யறமோடா
என்னை எடுத்து இக்கடல்மேல் போட்டாலும்
உன்னை அறுக்க ஓர்அம்பா யுருவெடுத்து”
ஏனென்றால் சுருதி முனி எந்த விதமான துன்பத்தையும் அசுரர்களுக்குக் கொடுக்கவில்லை. அப்படி யாருக்கும் எந்தத் துன்பத்தையும் கொடுக்காமல் தனது தவம் ஒன்றே குறிக்கோளாக இருக்கக்கூடிய சுருதி முனியினை கடலிலே எடுத்துப் போடுவது அசுரர்கள் தாங்களாகவே பாவத்தை ஏற்பது போலாகியது. சுருதிமுனி அசுரர்களைப் பார்த்து என்னை இந்த கடலிலே நீங்கள் தூக்கிப் போட்டால் உங்களை அழிப்பதற்காக ஓர் அம்பாக உருவெடுப்பேன் என்று கூறினார்.
உங்க ளிருபேரை ஊடுருவ நானறுத்து
இந்தக்கடலி லெடுத்து உங்களை எறிந்து
உங்களுட வூரை ஒக்கக்கரிக் காடாக்கி
நானும் வைகுண்டம் நற்பேறு பெற்றிருப்பேன்
வானுதிரு வாணையென்று மாமுனியுஞ் சாபமிட்டான்”
கடல் மேலெறிந்தார் கர்ம விதிப்படியே
அந்த முனியும் அரனா ரருளாலே
மந்திரபுரக் கணையாய் வாரியலைக் குள்ளிருந்தான்”
நாம் நன்மையைச் செய்யும்போது நமக்கு நன்மையே நடக்கும் படி கர்மம் அமைகின்றது. அது போல நாம் ஒரு தீமையை செய்யும்போது அந்த தீய செயலுக்கு ஏற்றபடி நமக்குத் தீமையே நடக்கும்படி நமது கர்மா அமைகின்றது. இங்கே யாருக்கும் எந்தவிதமான இடையூறும் இல்லாமல் சுருதிமுனி ஆதி கைலாயத்தில் தவம் செய்கின்றார். அப்படி தவம் செய்து கொண்டிருக்கக் கூடிய சுருதி முனியின் தவத்தைக் குலைத்ததோடு அவரையும் கடலிலே தூக்கி எறிந்து மாபாதகத்தை இந்த அசுரர்கள் செய்தார்கள்.
அதனால் அந்த அசுரர்களுக்கு அந்தத் தீமையான செயலே கர்மமாக அமைகின்றது. இந்தக் கருமமே அவர்கள் பிற்காலத்தில் அழிவதற்கான ஒரு காரணமாக அமைகின்றது. இப்படி அசுரர்களால் கடலிலே எறியப்பட்ட முனிவர் சிவபெருமான் அருளால் ஒரு மந்திரபுரக்கணையாக வடிவெடுத்து நாராயணர் பள்ளிகொண்டிருக்கக் கூடிய வாரியிலே இருந்தார்.
உறுதிக் குடிசூரர் ஓடிவந்தே கயிலை
வேக முடன்வந்த முழுநீசப் பாவியர்கள்
ஈசன் தனைத் தொழுது இறைஞ்சி நின்றாரம்மானை”
“சுருதிமுனியுட நெட்டை தொலைத்தவர்
கருதிய சூரர் கைலை மேவியே
பரிதி சூடும் பரமனைப் போற்றியே
வருதி கேட்டு வருந்தினர் சூரரே”
இப்படியாகச் சுருதி முனியின் தவத்தை அழித்து அவரை கடலில் தூக்கி எறிந்து விட்டு இரு அசுரர்கள் ஓடி கயிலைக்குச் சிவபெருமானைக் காண வந்தார்கள். சுருதி முனியின் தவத்தை அழித்து அவரைக் கடலில் தூக்கி எறிந்தால் உங்களுக்கு வேண்டிய வரங்களை தருவேன் என்று சொன்னதால் இப்போது சிவபெருமானை போற்றித் தொழுது எங்களுக்கு வேண்டிய வரங்களைத் தர வேண்டும் என்று இரு அசுரர்களும் சிவபெருமானிடம் வேண்டி நின்றார்கள்.
பொருகிக் கடல்மீதில் போட்டெறிந்து வந்தவர்கள்
ஈசன் தனைத்தொழுது ஏற்ற வரம் கேட்டதினால்
வாசமுள்ள ஈசன் மாதுமையைத் தானோக்கி
தூயவளே மாயவளே சூர ரிருவருக்கும்
நேயமுள்ள தோர் வரங்கள் நீ கொடுக்க வேணுமென்றார்”
சிரசன்பதோனுடைய சீர் சூரனை நோக்கி
ஏதுவர முங்களுக்கு இப்போது வேணுமென்றார்
தீது குடிகொண்ட சிர சன்பதோனுரைப்பான்
மாயவரே தேவர்களே மறையவரே மூவர்களே
ஆதவரே எங்களுக் கதிய வரம் வேணுமென்றான்”
அதுபோல உலகிற்குக் கேடும் விளைவிக்கலாம். இது வரத்தினை பெறக் கூடியவரின் தன்மையை பொறுத்து அமைகின்றது. தேவர்களும் முனிவர்களும் சிவபெருமானை நினைத்து தவம் இருப்பார்கள். அவர்கள் தவம் உலகம் நன்மை பெற வேண்டும் என்பதற்காக இருக்கும். ஏனென்றால் அவர்கள் நன்மையைச் சிந்திப்பவர்கள். அதனால் உலகம் நன்மையைப் பெறும். அவர்களும் நற்பேறினைப் பெற்று இறைவனின் அன்பிறகுப் பாத்திரமாகி நிற்பார்கள். ஆனால் தீய எண்ணத்துடன் இருப்பவர்கள் இறைவன் மூலம் வரத்தினைப் பெற்றால் கூட அவர்கள் மூலம் எந்த வித நன்மையும் உலகிற்கு அமைவதும் இல்லை. அவர்களும் வாழாமல் இறைவனால் தண்டிக்கவேப் படுகிறார்கள். அதற்கு அசுரர்களும் அவர்கள் பெறக்கூடிய வரங்களுமே சாட்சியாக அமைகின்றது.
இங்கே சிவபெருமான் அசுரர்களிடம் உங்களுக்கு வேண்டிய வரத்தைக் கேட்டு பெற்றுக் கொள்ளச் சொல்லும் போது அவர்கள் மனத்தைப் பற்றி அய்யா *தீது குடிகொண்ட சூரர்கள்* என்று சொல்லுகின்றார். அதாவது இந்த அசுரர்களின் குணம் என்பது தீமையே நிறைந்திருக்கின்றது. அப்படி தீது நிறைந்திருக்கக்கூடிய இரு அசுரர்களும் எங்களுக்கு அதிக வரங்களைத் தர வேண்டும் என்று சிவபெருமான் மட்டுமல்லாமல் அங்கு இருக்கக்கூடிய தேவ சங்கங்களையும் பார்த்து கேட்கின்றார்கள்.
(தொடரும்)
அய்யா உண்டு
இதில், ‘பஞ்சதேவர் உற்பத்தி’ மற்றும் ‘சப்தகன்னிமார் பாடல்’ மட்டும் புராண வரலாறாக சொல்லுகிறது. பொதுவாக நாம் ஆராய்ந்து பார்க்கும் போது, அகிலத்திரட்டில் புரிந்த கொள்ள முடியாத கருத்தை அருள்நூலும், அருள்நூலில் புரிந்து கொள்ள முடியாத கருத்தை அகிலத்திரட்டும் விளக்குவதை கண்டுணர முடியும். ஆக இரு ஆகமங்களும் இணைந்து நமக்குப் பரிபூரணமான ஞானத்தை நல்கும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
இப்போது நாம் பார்க்க போகும் சப்தகன்னிமார் பாடலில் கூட, அகிலத்திரட்டில் சுருக்கமாக சொல்லப்படும் வரலாறு, இங்கு விரிவாக எடுத்துரைக்கப் பட்டுள்ளதோடு, கதைக்கான காரண சூட்சுமம் இங்கு தெளிவாக்கப் பட்டுள்ளது. இதை யார் எழுதினார்கள் என்பதை நாம் கண்டறிய முடியவில்லை. அரிகோபாலன் சீசரோ (அ) வேறு சீசரோ (அ) துவையல் பண்டாரங்களில் ஒருவராகக் கூட இருக்கலாம். பொதுவாக, சித்தாந்தமான ‘அருள்நூல்’ முழுப் பகுதியையும் யார் எழுதினார்? தொகுத்தது யார்? என்பதை அறிய முடியவில்லை.
யார் எழுதி இருந்தாலும், அது வைகுண்டரால் உணர்த்தப்பட்டு (அ) வாய்மொழியால் சொல்லப்பட்டு, அவர் உத்தரவால் எழுதப்பட்டது என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. இங்கு நாராயணராகிய வைகுண்டரே சொல்வது போல் தான் இந்தப் பாடலின் முதல் விருத்தம் எடுத்துரைக்கிறது. மேலும், இதை அகிலத்திரட்டுப் போலவே அரிகோபாலன் சீசர் வழியாக நமக்கு அருளப்பட்டிருக்கும் என்பது அடியேன் புரிதல்.
இனி, சப்தகன்னிமார் பாடலின் விளக்கத்தை எம்பொருமானின் திருத்தாள் பணிந்து துவங்குகின்றேன்.
மூவரிய தெய்வ கன்னி ஏழு பேரும்
தன்னரிய நாரணரைத் தேடித்தேடி
தவமிருந்து நிறைவேற்றித் தவத்தால் இந்த
தென்னிலங்கை மணவை நகர் பதியிதான
சீமை பதி தெட்சணத்தில் சென்று கண்டு
மன்னவனும் தேவியுமாய் மகிழ்ந்த ஞாயம்
வளமையுடன் கதையாய் வகுக்கலுற்றார்
“என்னை அறியாமல் ஏதும் வகை உலகில் இல்லை. “எனும் சிவகாண்ட அதிகாரப் பத்திர வரிகளின் கருப்பொருளும் இதுவே.
‘மூவரிய தெய்வ கன்னி’ என்பதில் ‘மூ’ என்பது மூன்று எனும் எண்ணைக் குறிக்கும். இங்கு சிவப்பொருள், நாராயணப்பொருள், பிரம்மப்பொருள் ஆகிய முப்பொருளைக் குறிக்கும். அதாவது, முப்பொருளில் இருந்து பிரிந்து நிற்கும் தேடுவதற்கு அரிய திருவருள் சக்திகளே! இந்த சப்த மாதர்கள் என்பதே இதன் விளக்கம். ‘தன்னரிய நாரணர்’ என்பது, தன்னைத் தானே பிரணமித்துக் கொண்ட, கற்பனையிலும் எட்டாத மூலமுதற் பொருளான வைகுண்ட பெம்மானையே குறிக்கும். ‘இலங்கை’ என்பது இனி துலங்கப் போகும் துவரயம்பதி இருக்கும் இடத்தைக் குறிக்கிறது. இதற்குத் தென்பகுதியில் தான் அய்யா அவதார இகனைகளைப் புரிந்தார். ‘மணவை’ என்றால், தோசம் அகலுதல்! ஞானம் வளருதல்! எனும் சிறப்பு படுத்தும் பொருள் கொள்ளலாம். அதாவது அய்யா தவமிருந்த சாமிதோப்புப் பதியே இங்குச் சொல்லப்படுகிறது.
மேலும், இவ்விருத்தம் முழுமையும் நமக்கு உணர்த்துவது, மன்னவனாகிய நாராயணனும், தேவிமாராகிய ஏழு மாதர்களும் முறையே சிவ – சக்தி சொரூபமே என்பதாகும். மேலும் இவர்கள் சாதாரண மனித குலப் பெண்கள் கிடையாது என்பதையும் உணர வேண்டும். மேலும் அம்மைமார்கள், சிவபெருமானும் நாராயணரும் ஒன்றாகிய இறைவன் தான் என்பதை அறியாதவர்கள் அல்ல. ஆனால் மேலோகத்தில் இருந்த நம்மையெல்லாம், இந்தப் பூலோகத்தில் அவர்கள் வாயிலாக பிறக்க வைத்து, கர்மக்கடனை துய்க்கச் செய்து, தர்மயுக வாழ்வை பெற வைப்பதற்காக, இறைவரின் கட்டளையை ஏற்று இங்கு புரிந்த திருவிளையாடல் தான் அத்தனையும் என்பதே சூட்சும உண்மை. இதனால் தான் ‘மன்னவனும் தேவியுமாய் மகிழ்ந்த ஞாயம்’ என்று இங்கு குறிப்பிடப் படுகிறது.
பொருள்: இறைவனால் ஆதியில் எழுதப்பட்ட விதியின் படி, திருவருள் சக்திகளான சக்திகளான சப்த மாதர்கள் ஏழு பேரும், ஆதி பரமாய் விளங்கும் நாராயணரைத் தவத்தால் தேடி, அதன் பயனாக துவரயம்பதிக்குத் தெற்காக தெட்சணத்தில் உள்ள தோப்புப் பதியில் வைகுண்டராக கண்டு, சப்த மாதர்களும் வைகுண்டரும் சேர்ந்து நிகழ்த்திய புராண வரலாற்றைச் சந்தமாக வைகுண்டமே இங்குச் சொல்லி வருகிறார்.
[அய்யா நிச்சயித்தபடி தொடரும் ….]
(தொடரும்)
அய்யா உண்டு
சிவகாண்ட அதிகார பத்திரம்
– மாடசாமி அய்யா 8973349046
“குருபுத்தி யார்க்குமுண்மை சொல்லுகிறேன் கேள் மகனே”
“அப்பூவை தானெடுத்து அணிந்திடுங்கோ”
பொருள்: இடகலை, பிங்கலை, சுழிமுனை ஆகியவற்றை நீங்கள் அணிந்து கொள்ளுங்கள்.
விளக்கம்: பொதுவாக அணிதல் என்பது, வரிசைப்படுத்தி ஓர் ஒழுங்காக அமைத்து அழகுறச் செய்தல். இங்கே அய்யா மூப்பு எனப்படும் மூன்று சுவாசங்களையும் அணியச் சொல்கிறார் . அதன் பொருள் என்னவெனில் இடைகலை, பிங்கலை, சுழிமுனை ஆகிய மூன்றும் இந்த உடலில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தனித்தனியே நடைபெற வேண்டும். அப்படி நடைபெற்றால் உடல் பல ஆயிரம் ஆண்டுகள் நிலைக்கும். இதை யோக நூல்களில் காண்க. எனவே அய்யா சுவாசத்தை சீர் படுத்தச் சொல்கிறார்.
“மூன்று நாமம் ஒன்றுபாம்பு -அது மூன்றும் ஆடுதடா
அருஞ்சொற் பொருள்: மூன்று நாமம் – இடைகலை, பிங்கலை, சுழுமுனை என்ற மூன்று, அதாவது சுவாசத்தின் மூன்று பெயர்கள். ஒன்று பாம்பு- குண்டலினி என்ற ஒரே பாம்பு
பொருள்: இந்த உடலில் ஓடும் சுவாசமானது மூன்று பெயர்களைக் கொண்டது. இந்த உடலில் மூலாதாரப்பகுதியில் ஒரு பாம்பு தூங்குகிறது. இந்த சுவாசங்கள் மூன்றும் உடலில் மாறிமாறி ஆடுகிறது.
விளக்கம்: இந்த உடலில் உள்ளும் புறமுமாக சுவாசம் ஏற்படுகிறது. சுவாசம் உண்டாகும் இடத்தைப் பொறுத்து சுவாசம் மூன்று பெயர்களைப் பெறும் என்பதை முந்தைய சூத்திரத்தில் கண்டோம். அதைப் பகவான் விளக்குகிறார் . மேலும் மூலாதாரத்தில் தூங்கும் பாம்பு வடிவான சக்தியை “ஒன்று பாம்பு” என்று கூறுகிறார் நாகவடத்தில் துயிலும் நாதன். மேலும் இந்த சுவாசமானது மாறி மாறி ஏற்படும். இந்த சுவாசம் தறிக்கெட்டுப் பாய்வதால் தேகத்தில் பல தீய மாறுதல்கள் ஏற்படுகின்றன. இந்தச் சுவாசங்கள் முறையே சரியான காலத்தில் சரியான நேரத்தில் ஏற்படுமாயின், தேகம் ஆண்டு பல ஆயிரம் சீவிக்கும். இந்த மூன்று விதமானசுவாசங்களே மாறி மாறி ஆடுவதால் மனிதனை ஆட்டுகிறது. எனவே பகவான் “அது மூன்று ஆடுதப்பா” என்கிறார்.
“கொத்தினால் திரும்பாதப்பா குடிகெடுத்த பாம்பு விஷம்”
பொருள்: இந்த குண்டலினி சக்தி சகஸ்ரத்தைத் தீண்டினால், அது தானாகவே கீழே மூலாதாரம் நோக்கித் திரும்பி வராது. அதே நிலையில் 21நாட்கள் இருந்தால் ஆன்மா குடியிருக்கும் வீடான உடல் கீழே விழும்.
விளக்கம்: குண்டலினி சக்தியானது மூலாதாரத்தில் இருந்து சுழிமுனையைப் பற்றி மேல் நோக்கி ஏறும். இந்த குண்டலினி உடலின் ஒவ்வொரு ஆதாரத்தையும் கடந்து யோக நிட்டையின் உதவியால் மேல்நோக்கி ஏறும்போது, சாதகன் நிட்டை கலைந்தால் சக்தி கீழே மூலாதாரம் நோக்கி இரங்கும். ஆனால் இந்த குண்டலினி ஆக்ஞையைக் கடந்து சகஸ்ரத்தை அடையும் போது சாதகனின் நிட்டை எது ஒன்றாலும் கலையாது. குண்டலினி மீண்டும் கீழ்நோக்கி இறங்காது, பரமான வெளியில் சுரக்கும் ஞான அமுதத்தை (கொண்டை அமுது) உச்சி மண்டை வழியே சாதகன் சுவைத்து மயங்கி நிற்பான். இந்நிலையை விட்டு சாதகன் இறங்க இயலாது. இதே நிலையில் சாதகன் 21 நாட்கள் இருந்தால் அவனுடைய உடல் பஞ்சப் பூதத்தில் கலக்கும். ஆனால் குருவின் உதவியால் மட்டுமே சக்தி மேலிருந்து கீழிறங்கும். குருமுகமாகவே இச்சக்தியை ஏற்றவும் இறக்கவும் முடியும். எனவே பரம குருநாதர் “கொத்தினால் திரும்பாதப்பா குடிகெடுத்த பாம்பு விஷம்” என்கிறார்
அய்யா உண்டு
அகில விடை
1. கரும்பு
2. அரன் (சிவன்)
3. சக்தி
4. அரன் (சிவன்)
5. அரன் (சிவன்)
அய்யா உண்டு
ஞானம் என்றால் என்ன?
– S. அன்ன செல்வம் அம்மா – 9443622222
“தன்னை அறிந்து கொண்டால் தலைவனை நீ அறிவாய் மகனே”
“கண்ணால் மனக்கண்ணாலே காணும் அப்பா வழியதுதான்”
“என்னை அறிந்தவருக்கு ஈசன் வழி சொல்லுகிறேன்”
மேலும் ஆழ்ந்த உணர்வு சக்தியின் மூலம் நான் என்பது இந்த உடலல்ல என்னை இயக்குவது ஆன்மா என்பதை அறிய முடிகிறது. ஒருவன் தன்னை தெய்வீகமானவன் என்று உணரும் நிலையே ஞானமாகும். தனக்குள் இருப்பது ஜீவாத்மா என்றும், தான் பரமாத்மாவின் அம்சம் என்றும், தனக்குள் மாபெரும் இறை சக்திகள் இருக்கிறது என்றும், தனக்குள் ஞான ஒளி பிரகாசித்துக் கொண்டிருக்கிறது என்று உணர்கின்ற தெய்வீக நிலையே ஞானமாகும். இறை ஞானம் அடைந்தவர் அன்பும் அமைதியும் ஆனந்தமும் கருணையும் கொண்டவராக இருப்பார்.
இறைவன் மீதும் தன் மீதும் நம்பிக்கை உள்ளவன் ஞானத்தின் மூலம் ஞானி ஆகிறான். ஞானமே மிகவும் உயர்ந்த நிலையாகும். ஞானிகளே மிகச் சிறந்தவர்களாக இருக்கின்றார்கள். உலக ஆசைகளுக்கு மயங்காமல் அப்பொருளின் மெய்ஞான இயல்பைக் கண்டு செயல்படுவதே மெய்ஞானத்தின் சிறப்பாகும். உண்மையை உணர்ந்த தத்துவ ஞானிகள் தன்னுடைய முன் ஜென்ம கர்மவினைகள் அண்டாதபடி வென்று முக்திபேறு அடைகிறார்கள். மரணம் இல்லா பெருவாழ்வு பெறுகின்றார்கள். அதை திருமூலர் திருமந்திரத்தில் பாடுகிறார்
ஞானத்தின் மிக்க சமயமும் நன்றன்று
ஞானத்தின் மிக்கவை நன்முக்தி நல்குவா
ஞானத்தின் மிக்கார் நரரின் மிக்காரே
-திருமூலர் பாடல்
அய்யா வைகுண்டர் பக்தி மார்க்கமாக இருந்த இந்த உலகத்தை மீட்டு ஞானமார்க்கமாக மாற்றி தர்மயுக வாழ்வு அளிக்கவே வைகுண்ட அவதாரமாக வந்தார். அய்யா வைகுண்டர் தன்னுடைய பக்தர்களுக்கு மோட்ச வாழ்வு கொடுக்க ஞானத்தைக் கொடுக்கிறார். அதற்கு ஊற்றுகோலாக இருப்பதே தியானம். கலியை வெல்ல வேண்டும் என்றால் அதற்கு கொடுக்கப்பட்ட ஆயுதம் தான் தியானம். “மானமாய் வாழ்ந்தாலே மாழும் கலி தன்னாலே” ஞானமாய் வாழ்வோம் கலி மாய்கையை வெல்வோம். சிவஞான தந்தையாக இருக்கின்ற அய்யா வைகுண்டர் ஞான ஊற்றாக, ஞானப்பாலாக, ஞான பொக்கிஷமாக இருந்து ஞானத்தை அருள் புரிவார். உள்ளதை உள்ளபடி அறியும் அறிவே ஞானமாகும்.
அய்யா உண்டு
தர்மயுக முரசு வாசகர்களுக்கு அன்பான வேண்டுகோள்
விலாசம்:
அகில உலக அய்யாவழி சேவை அமைப்பு
அய்யா வைகுண்டர் வளர்பதி, கைலாசக் கோனார் காம்பவுண்ட்,
வடக்கு மெயின் ரோடு, வள்ளியூர் 627117, திருநெல்வேலி மாவட்டம்
வாட்சப் எண்: 8903201008
அய்யா உண்டு
மாய நிறமானவர்
– ஹரி வெங்கடேஷ் அய்யா 8508518505
இன்றும் புதிய புதிய நட்சத்திரங்கள், கோள்கள், உயிரினங்கள் எங்கோ தோன்றிக் கொண்டுதான் இருக்கின்றன. பொருள்-ஆற்றல்-காலம்-இடம் இவற்றில் பொதிந்திருக்கும் வாய்ப்புகள்தான் புதிதுகளை இடைவிடாது பிறப்பித்து கொண்டேயிருக்கின்றன. விஞ்ஞானிகள் கொடுக்கப்பட்ட வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கண்டுபிடிக்கிறார்கள், புனைகிறார்கள். இயற்கையில் இல்லாததை, இயற்கை வாய்ப்பளிக்காததை மனிதனால் உண்டாக்க முடியவே முடியாது. அறிவியல் இந்த உண்மையை அதாவது ‘யாவும் கொடுக்கப்பட்டவை’ என்பதைத் தினமும் நிரூபித்துக்கொண்டிருக்கிறது. சோதனைக் குழாய் குழந்தைகளை விஞ்ஞானிகள் உண்டாக்க முடிகிறது என்றால்கூட அதற்கான வாய்ப்புகள் இருப்பதால்தானே! இயற்கையில் வாய்ப்பே இல்லாததை யாராலும் உண்டாக்க முடியாது.
மனிதன் இனி கண்டுபிடிக்கப் போகும், உருவாக்கப்போகும் செயற்கை அறிவு, வெளிக் கிரகப் பயணம், நரம்பியல் கண்டுபிடிப்புகள்யாவும் இயற்கை அளிக்கும் வாய்ப்புகளே. பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் ஜகத் என்று அழைப்போம். இந்த ஜகத் எதிலிருந்தோ வெளிப்பட்டிருக்கிறது. இன்னும் வெளிப்பட வேண்டியன உள்ளன. ஜகத்தின் இயல்பு அப்படி! அது வெளிப்படுத்திய அதிசயங்களில் ஒன்று நமது மனம், புலன், உடல் யாவும். அப்படியெனில் எல்லாம் வெளிப்பட்டுள்ளன, இனியும் வெளிப்பட உள்ளன என்பது உண்மையானால் வெளிப்படுத்துவது எது? அல்லது யார்? திட்டமிட்டுக், கச்சிதமாகப் பொருத்தப்பட்டிருக்கும் எந்தக் கருவியும் தானாக வந்துவிடுவதில்லை. திட்டமிட்டுப் பொருத்தும் அறிவு இவற்றிற்கு முன் காரணமாக இருக்கிறது.
முன் காரணமாக அறிவு இருந்தது என்றால் அந்த அறிவு ஒரு பிரஜ்ஞையில்தான் நிலைபெற்றிருக்க வேண்டும். பிரஜ்ஞையில்தான் அறிவு இருக்க முடியும். ஜகத் முழுவதையும் கட்டமைத்த முன்னறிவும் பிரஜ்ஞானமும் அந்த அளவுக்கு முழுமையாகவும் முடிவிலா ஆற்றல் பொருந்தியதாகவும் இருந்தாக வேண்டும். அது முழுமை, பூர்ணம், முடிவிலாத பிரஜ்ஞான இயல்பினதாக இருக்கவேண்டும். அதற்கு அறியாமை, குழப்பம், மறைப்பு, மறதி போன்ற குறைகள் இருக்கவே முடியாது. முடிவிலா அறிவும் முடிவிலா சக்தியும் உடையதை நாம் இறைவன் என்கிறோம்.
கடவுள் என்று நாம் குறிப்பிடுவதும் முடிவிலா பிரஜ்ஞானத்தைத்தான். இங்கே கடவுள் எங்கே இருக்கிறார் என்கிற கேள்விக்கே இடமில்லை. இடமாகவும், காலமாகவும் இருப்பதே கடவுள்தான். காலத்தையும் இடத்தையும் பிறப்பித்த கடவுளுக்குக் காலம் – இடம் எதற்கு? கடவுளைக் காட்டு என்று யாராவது கேட்டால் இறைவனது உடம்பாகிய இந்த ஜகத்தைத்தான் காட்ட வேண்டும். உடம்பு ஜகத் என்றால் அவரது அறிவு எங்கே என்று கேட்டால் கேட்பவரது அறிவுணர்வைத் தான் சுட்டிக்காட்ட வேண்டும்.
ஜகத்தை இறைவன் படைத்தவர் மட்டுமல்ல; அவர் ஜகத்தாக வெளிப்பட்டுத் தோன்றுகிறார் என்றுதான் சொல்ல வேண்டும். ஆகவேதான் அவர் படைத்து நிறைந்தவர். உலகம் படைக்கப்பட்டது, உயிர்கள் படைக்கப்பட்டன என்று சொல்வதற்கே வாய்ப்பில்லை. இறைவன் இவ்வாறாக வெளிப்படுகிறார், வெளிப்படாமல் தன் பிரஜ்ஞானத்தில் லயமாகிறார் என்றுதான் புரிந்துகொள்ள வேண்டும். ஜகத்தில் உள்ள ஒவ்வொன்றும் இறைவனின் பேரறிவின் கட்டமைப்பே என்று அறிய வேண்டும்.
பானை சிருஷ்டிக்கப்பட்டது என்று சொல்லும் போது, களிமண், பானையாக வடிவெடுத்தது என்றுதான் சொல்ல வேண்டும். பானை வடிவம் அறிவு பூர்வமான கட்டமைப்பு. வாய், கழுத்து, வயிறு போன்ற உறுப்புகள் பொருத்தமாகக் கட்டமைந்துள்ளன. களிமண், பானை வடிவத்தை எய்திட யாரோ ஒருவர் உதவியிருக்கிறார். அவர் பானைக்கு வேறானவர். பானைக்குக் காரணமான களிமண் வேறு, அதை வடிவமைத்த வனைஞன் வேறு. இறைவன் விஷயத்தில் இந்த வேறுபாடு இல்லை.
பானை – வனைஞன் இரண்டுக்குமிடையே இடைவெளி இருப்பதுபோல ஜகத்துக்கும் இறைவனுக்கும் இடையே இடைவெளியே கிடையாது. ஏனெனில் இடைவெளியும் ஜகத்தின் ஒரு பகுதிதான். ஜகத் உருவாகக் காரணமான பொருள் இறைவனிலிருந்து வேறானதாக இல்லை. இது புரிந்துவிட்டால் நமது உடல், புலன், மனம் யாவும் இறைவனினிலிருந்து வேறில்லை என்பது புரியும்.
அய்யாஉண்டு
அய்யாவின் அருளால் எந்நாளும்நன்னாளே
-த. சீதா லெட்சுமி அம்மா 949655691
“சாரம் அறிந்துதான் உரை நீ சொல்லுரைகள்
ஆய்ந்து தெளிந்து அருளுநீ என்மகனே”
அப்படி இருக்கின்ற மக்களிடம் பிறருக்குப் பயன் தரக்கூடிய ஆற்றல் கொண்டச் சக்தி என்ன என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டு அதன் பின்னர் அவர்களுடைய மனதில் இருக்கின்ற தீமைகளையும் வரிசைப்படுத்த வேண்டும். அப்படி வரிசைப்படுத்தப்பட்ட குணநலன்களில் எது அதிகமாக இருக்கிறது நன்மையா? தீமையா? என்பதை நாம் அறிய வேண்டும் . அதன் பின்னர் அவரிடம் நன்மை அதிகமாக இருப்பின் அதை மேலும் மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் அவருக்கு எடுத்துக் கூறியும் அவரிடம் இருக்கின்ற ஒரு சில தவறுகளைச் சுட்டிக் காட்டியும், அதைப் போக்குவதற்கு உரிய வழிகளையும் எடுத்துரைக்க வேண்டும்.
ஏனென்றால் நாம் வாழ்வதோ கலியுகம் யாரும் யாருக்கும் உபதேசம் செய்தாலும் பிடிக்காது. ஆனால் ஒருவருடைய மனதில் இருக்கின்ற தீமையைக் களைய வேண்டும் என்றால் அவருடைய மனதின் தன்மையை நன்கு ஆராய்ந்து அதன் பிறகுக் குறைகளைக் களைய முற்பட வேண்டும். மேலும் ஒரு சிலரிடம் தீமைகள்தான் அதிகமாக இருக்கும். அப்படி இருக்கின்ற பேரிடமும் அவருடைய மனதில் நன்மையை விதைக்க வேண்டும். நல்ல மன ஓட்டம் மனதில் வருகின்ற போது மனதில் இருக்கின்ற தீய எண்ணங்கள் தானாக மறைந்து விடும். இப்படியாக நல்ல எண்ணங்களை விதைப்பதற்குப் பயன்படுவது தான் அய்யா காட்டிய வாழ்வியல் நெறிமுறைகள்.
இப்படி சிறிது சிறிதாக மனதில் மாற்றத்தைக் கொண்டுவர முற்பட வேண்டும். இதற்குத் தேவை ஒருவரைப் பற்றி அவருடைய மன நிலையைச் சரியாக அறிந்து கொள்வதுதான் சிறப்பு. ஏனென்றால் கலியுக வாழ்வில் தீமைகள் அதிகரிக்கக் காரணம் மனதில் எழுகின்ற தீய எண்ண ஓட்டங்களே. அய்யா கூறுவார், “அவரவர் நினைப்புக்குத் தக்கதாக இருந்து விளையாடுகிறேன் சிவனே அய்யா “என்று கூறுவார். அதன்படி நாம் நல்லதே நினைக்கும் போது நன்மையும், தீமையே நினைக்கும் போது தீமையும் ஏற்படுகின்றது. ஆகையால் நல்லதை நினைத்தால் நல்லது நடக்கும் .
ஆகவே நடுநிலையாக இருப்பவர்கள் நன்மைத் தரக்கூடியச் செயல்கள் யாரிடம் இருக்கிறது என்பதை அறிந்து, அவர்களின் எண்ண ஓட்டத்தின் தன்மையை ஆராய்ந்து அதன் பிறகு அதற்குச் சரியான ஒரு வழிமுறையை தருகின்ற விதத்தில் செயல்படுத்த வேண்டும். மேலும் ஒருவரிடம் மறைந்து இருக்கின்ற ஆற்றல் வெளியில் கொண்டு வரவேண்டும். அய்யா நமக்குச் சாரம் அறிந்து தான் உரை நீ சொல்லுரைகள் என்று கூறியிருக்கிறார். ஒருவர் ஒரு விஷயத்தைக் கூறினால் அவர் ஏன் எதற்காகக் கூறுகிறார் என்பதைத் தெரிந்து , அதனுடைய சராம்சத்தை உணர வேண்டும்.
உதாரணமாக, ஒரு சண்டை நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இடத்தில் அங்கே நாம் நம்முடைய மனதில் எழுகின்ற எண்ணத்தையும் உடனடியாகக் கூறி விடக்கூடாது. காரணம் என்னவென்றால் மாற்றுக்கருத்துடையோர் இரண்டு பேர் எதிரெதிராக இருந்து ஒரு பிரச்சனையை உருவாக்கும் போது எந்த நோக்கத்திற்காக அந்த இடத்தில் பிரச்சனை உருவாகியது, ஏன் ?எதற்கு? என்று அந்தச் சூழ்நிலைக்குத் தக்கவாறு நாம் அதை அலசி ஆராய்ந்து அதன் பிறகு இருவருடைய தரப்பிலும் இருக்கும் நன்மை, தீமைகளை ஆராய்ந்து அதன் பிறகு யாருக்கும் பாதிப்பு இல்லாத வண்ணம் நடுநிலையாகச் செயல்பட வேண்டும்.
இருவரிடம் இருக்கின்ற நியாயங்களையும் அவர்கள் என்ன என்ன காரண கரியங்களை எதிர் பார்த்து இங்கே பிரச்சனைகளை உருவாக்கி இருக்கிறார்கள் என்பதை அவர்கள் கூறுகின்ற பதிலிருந்து தெரிந்துக் கொண்டு அதன் பின் நல்ல ஒரு நீதியைத் தீர்ப்பாக வழங்க வேண்டும். ஆனால் நாம் வழங்குகின்ற தீர்ப்பானது எந்தச் சூழ்நிலையிலும் பிறரைப் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும்.
ஒவ்வொருவரிடமும் இருக்கும் நன்மை தீமைகளை ஆராய்ந்து அவரவருக்கு ஏற்ற வகையில் பிறருக்குத் தீங்கு இல்லாமல் நடுநிலையாக இருந்து ஒவ்வொருவருக்கும் நல்லுரைகள் கூற வேண்டும் என்று கூறிய அய்யா, எந்தச் செயல் செய்தாலும் முதலில் அதன் நன்மை தீமைகளைப் பற்றி அறிந்து கொண்டும், பேசுகிறவர்களின் உண்மை நிலையை ஆராய்ந்து செயல்பட வேண்டும் என்கிறார்.
நாம் எந்தச் செயல் செய்தாலும் நல்ல வழிகளை ஆராய்ந்து அறமுடையவர்களாக விளங்க வேண்டும். எந்த ஒரு சூழ்நிலையிலும் அறநெறி தவறி விடக்கூடாது. அதாவது நம்முடைய வாழ்க்கையானது எந்த வழியில் சென்றாலும் அங்கு அறம் சார்ந்த செயல்கள் இருக்கின்றதா என்பதை அறிந்து தெரிந்து அதன் பிறகு நம் கருத்துக்களைக் கூற வேண்டும்.
நம்முடைய வாழ்க்கையானது மலர்ப் பாதை அல்ல. வாழ்க்கையானது கரடு, முரடான, மேடுப் பள்ளங்களை உடையது. அது மட்டுமல்லாமல் மனித உருவில் கொடிய விலங்குகள் மறைந்து வாழ்ந்துப் பிறருக்குத் தீமை செய்யும் வாழ்க்கைதான் இன்று இந்தக் கலி வாழ்வில் இருக்கிறது .இப்படிப்பட்ட இந்த வாழ்வில் வெற்றி பெறுவது எளிதானது அல்ல. நாம் நல்லவர்களாக வாழ்ந்து செல்ல வேண்டுமென்றால் ஒவ்வொருவரின் உள்ளுக்குள் இருக்கும் அக நிலையை அறிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் இன்று நம்மோடு அன்பு பாராட்டுபவர்களில் உண்மையாக இருக்கின்ற நண்பர்கள் யார்? வேண்டிய வர்கள் யார்? உறவினர் யார்? தெரிந்தவர் யார்? யார்? என்பதெல்லாம் இந்தக் கலியுக வாழ்வில் தெரிந்துகொள்ள முடிவதில்லை. ஏனென்றால் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி இலாப நோக்கோடு வாழ்க்கை நடத்துவதுதான் இந்தக் கலியுக வாழ்க்கை.
இந்தக் கலியுக வாழ்க்கையை வெல்ல வேண்டுமென்றால், நாம் நம்மை முதலில் மௌனம் காத்து, நம்மிடம் பேச வந்திருப்பவர்களுக்கு வாய்ப்பளித்து, அவர்களின் பேச்சு மூலம் இவர்கள் நல்லவர்களா? இவர்களின் பேச்சில் புகழ்ச்சி இருக்கிறதா? முகஸ்துதி செய்கிறார்களா? அவர்கள் புறம் கூறுகிறார்களா? இவர்கள் தாங்கள் நினைப்பது எல்லாம் நடப்பது போல் பேசுகிறார்களா? என்பதை அவர்களின் பேச்சின் மூலம் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் இத்தகைய இயல்பு உடையவர்கள் மற்றவர்களைப் பற்றிக் கவலைப் பட மாட்டார்கள். இவர்கள் பரப்பும் தீமை இருக்கிறதே அது ஒவ்வொருவரையும் தற்கொலை செய்யக்கூடிய அளவிற்குக் கொண்டு போய் விடும்.
ஆகையால் இத்தகைய தன்மை உடையவர்களுடன் கவனமாக இருக்க வேண்டும். அவருடைய பேச்சின் சாராம்சம் அறிந்து கொள்ள வேண்டும். ஏன்? எதற்கு? என்று சிந்திக்க நாம் தெரிந்து இருக்க வேண்டும். சிந்திக்கத் தெரிந்தவர்கள் தான் சான்றோர்கள். இதைத்தான் சிந்தித்துச் செயல்படுங்கள் என்று அய்யாவும் கூறி இருக்கிறார். ஞானம் பெற்றவர்கள் தான் சான்றோர்கள்.ஞானம் என்பது இல்லையென்றால் வாழ்க்கை முழுவதும் நமக்கு மாயைதான். மாயையிலேயே வாழ்க்கை நடந்து முடிந்து போகும். பிறருடைய கவர்ச்சிகரமான வார்த்தைகளை நம்பி நாம் ஏமாந்து விடக்கூடாது. சரியான பாதையில் நம்முடைய வாழ்க்கையை நடத்த வேண்டும் என்றால் அதற்குத் தேவை ஞானம்.
அந்த ஞானத்தைப் பெறுவதற்கு அகிலத்திரட்டு வழிகாட்டுகிறது. அப்படி ஞானிகளாக நாம் மாறுகின்ற போது கலி என்ற மாய்கை நம்மை அண்டாது. நாமும் தெளிவு பெற்றவர்களாக ஞானம் பெற்றவர்களாகத் திகழ, குறைகளை களைந்து நிறைகளைப் பெற, ஆராய்ந்து தெளிந்து அருளு என் மகனே என்று அய்யா கூறுகிறார். அய்யாவின் பிள்ளைகள் ஞானம் பெற்றவர்களாகத் திகழ வேண்டும்.
அய்யா உண்டு
அய்யா உண்டு
ஆலிலையில் அய்யா நாராயணர்
– பா. கிருஷ்ணமணி அப்புகுட்டி அய்யா 9841933992
“ஆலிலை மேல் பள்ளி கொண்ட அருமை சற்றும் சொல்வாரில்லை”
என்கிறார். அய்யாவின் பிள்ளைகளாகிய நாம் அப்படி இல்லாமல், ஆலிலை மேல் பள்ளி கொண்ட அற்புத லீலையை உலகிற்குச் சொல்லும் வகையில் அறிந்து கொள்வோம்.
ஊழிக்காலம்(பிரபஞ்சத்தின் அழிவு) நெருங்கிய வேளையில், பூமியில் பல ஆண்டுகள் மழையில்லாமல் போனது. அதனால் நதியும் கடலும் கூட வற்றிப் போகும் நிலை ஏற்ப்ட்டது. அதன்பின் காற்றோடு சேர்ந்து வரும் அக்னி உலகங்களை உலர்த்தியது. கொடூர வடிவம் கொண்ட பற்பல மேகங்கள் இடி மின்னலோடு வானில் எழுந்தன. அந்த மேகங்கள் பொழியும் மழையால் உலகெங்கிலும் வெறும் பிரளய வெள்ளம் மட்டுமே காணப்பட்டது.
அப்போது திடீரென அந்த ஊழி வெள்ளத்தில் ஒரு குழந்தை தனது தாமரை போன்ற திருக்கரத்தால், தனது தாமரை போன்ற திருவடியின் கட்டைவிரலை எடுத்து, தனது திருவாயில் வைத்தபடி ஆல மர இலையில் சயனித்திருந்தது.
“உலகமே நாசம் அடைந்து அழிந்து போன நிலையில் இந்த ஆலமரம் மட்டும் இங்கே எப்படி இருக்கிறது? இந்தக் குழந்தை மட்டும் ஏன் அழியவில்லை?” என்று மார்கண்டேய மகரிஷி சிந்தித்தார். அவர் தனது தவ வலிமையைப் பயன்படுத்தி அக்குழந்தை யார் என்று அறிய முயன்றான். ஆனால் அவரின் தவ வலிமையால் அக்குழந்தையைப் பற்றி அறிந்து கொள்ள முடியவில்லை.
அக்குழந்தை பள்ளி கொண்டிருந்த ஆலிலை மெல்ல மெல்ல ஊழி வெள்ளத்தில் மிதந்து அவரை நோக்கி வரவே, அந்தக் குழந்தையை நன்றாக கவனித்தார். தாமரைப் போன்ற திருக்கண்கள், காயாம்பூ போன்ற திருமேனி நிறம், மார்பிலே ஸ்ரீவத்சம் என்ற மறு ஆகியவற்றை உடைய அந்தக் குழந்தை திருமாலைப் போல இருக்கிறதே என்று எண்ணினார்.
அருகில் வந்த அந்தக் குழந்தை, “முனிவரே! என் உடலுக்குள் நீங்கள் இப்போது புகுந்துவிடுங்கள்!” என்று சொல்லிவிட்டு, தனது வாயைத் திறக்க, அவர் வாய்க்குள்ளே புகுந்தார். அதன் வயிற்றுக்குள் பூமியில் உள்ள கண்டங்கள், கடல்கள், நாடுகள், நகரங்கள், நதிகள், மலைகள், காடுகள் அத்தனையும் அங்கே கண்டார். அக்குழந்தையின் திருமேனி முழுவதும் அவர் சுற்றிச் சுற்றிப் பார்த்தும், அந்தத் திருமேனியின் எல்லையை அவரால் காண முடியவில்லை.
அந்தத் திருமேனியிலிருந்து எப்படி வெளியே வருவது எனத் தெரியாமல் பலகாலம் தவித்த மார்க்கண்டேயர், அந்தக் குழந்தையிடமே சரணாகதி அடைந்தது. உடனே வாயு வேகத்தில் அதன் திருவாய் வழியாக வெளியே வந்தார். அந்தக் குழந்தை திவ்வியமான பார்வையையும் தத்துவ ஞானத்தையும் அருளியது. அதன் விளைவாக, அவர் திருமாலின் அவதாரமான ஆலிலைக் கண்ணன் என்பதையும், ஊழிக் காலத்தில் உயிர்களையும் உலகங்களையும் உண்டு தன் வயிற்றில் வைத்துக் காக்க அவதரித்தவர் என்பதையும் உணர்ந்தார். மீண்டும் படைக்கும் காலம் வந்தபோது, தான் உண்டவற்றை எல்லாம் வெளிப்படுத்தி உலகைப் படைத்ததையும் கண்டார்.
என்றும் வயது 16 எனும் வரத்தைப் பெற்றவர் மார்க்கண்டேய முனிவருக்குத் திருமால் காட்சி தந்த கோலமே ஆலிலைக் கண்ணன் கோலம் ஆகும். வில்லிப்புத்தூரில் இக்காட்சி காணக் கிடைத்ததாகச் சொல்லப்படுகின்றது. ஆலிலையின் மீது திருமால் படுத்திருப்பதால், ஆலிலை ஆதிசேஷனது அம்சமாகக் கருதப்படுகிறது.
அய்யா உண்டு
அய்யா உண்டு
பக்தர்களும் இறைவனும்
– மீனா சுகின் அம்மா- 9344813163
இறைவன் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்”
ஒரு ஊரில் கிரிதரலால் என்ற ஒரு கிருஷ்ண பக்தர் இருந்தார். இவர் கிருஷ்ணர் மீது அளவுகடந்த அன்பு கொண்டிருந்தார். இவர் ஆடல் மற்றும் பாடல் ஆகியவற்றில் சிறந்தவராக இருந்தார். இவர் வாழ்ந்த ஊரில் ஒரு பெரிய கிருஷ்ணர் ஆலயம் இருந்தது. அங்கு ஆடல் மற்றும் பாடலுடன் பஜனை செய்வது இவருடைய இறைபணியாக இருந்தது.
கிரிதரலால் அவர்களின் பக்தி பஜனையைப் பார்ப்பதற்காகவே வெளியூர்களில் இருந்து பெருமளவில் மக்கள் கூட்டம் வரும். கிரிதலால் பக்தர்களை மிகவும் மதிப்பவர். இவரின் ஊருக்கு வரும் பக்தர்களைத் தன் வீட்டுக்கு அழைத்து வந்து அவர்களுக்கு உணவு அளித்து அவர்களுக்குப் பாத பூஜை செய்து அந்த நீரை தன் தலையில் தெளித்துக் கொள்வார். இதனையே தன் உயர்ந்த பணியாகச் செய்தார். இவருடைய உயர்ந்த நோக்கம் இறைவனை மகிழ்விக்க. இறைத்தொண்டர்களை மகிழ்விப்பதே சிறந்த வழியாகும்.
ஒரு நாள் இவர் வசிக்கும் ஊரில் ஒரு துறவி உடலில் நாமத்தை பூசிக்கொண்டும் அழுக்கான உடலுடனும் வாயில் இறை மந்திரங்களை உச்சரித்தும் பார்ப்பதற்கு வித்தியாசமான தோற்றத்தில் வந்து கொண்டிருந்தார். இவரின் உடல் அழுக்காக இருந்தாலும் முகத்தின் அழகு, இறை அருள் இருப்பது கிரிதலாலைக் கவர்ந்தது. மற்ற பெரியவர்களுக்குச் செய்கின்ற பணிவிடையைப் போல் இந்த நபருக்கும் அனைத்துப் பணிவிடைகளும் செய்து கிரிதலால் உபசரித்து பாத பூஜை செய்தார்.
இதை பார்த்தவுடன் அவ் ஊரில் உள்ள மக்கள் கிரிதலாரிடம் கோபம் கொண்டனர். அவர்கள் அந்தத் துறவியைப் பார்த்து இவன் கீழ் ஜாதியைச் சேர்ந்தவன். தோற்றம் சரியாக இல்லை. எந்த இனத்தை சார்ந்தவனோ என்று கோபத்துடன் கேட்டனர். அதற்குக் கிரிதலால் இவர் இறை பக்தர் இவரை தவறாக பேசாதீர்கள் என்று கூறினார். துறவி இவற்றை பொருள்படுத்தாமல் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். மற்றவர்கள் செய்த வாக்குவாதத்தில் கிரிதலால் அமைதியாகவே பதில் கூறினார். இவர் ஒரு மகான் என்றார். உடனே மகான் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்வாரா என்று நகைத்து விட்டுச் சென்றனர். கிரிதலால் அனைத்தையும் பார்த்து மன வருத்தத்தில் இருந்தார்.
சிறிது நேரத்தில் சென்றவர்கள் ஒரு பிணத்துடன் வந்து இந்த துறவி மகான் என்றால் இவரை உயிர் பிழைப்பதற்குச் செய்யக் கூறுங்கள் என்று ஏளனமாக கூறினர். உடனே கிரிதலால் இறைவா இது என்ன சோதனை, எல்லாம் உனது லீலைகளே என்று மனத்தில் நினைத்துக் கொண்டு கண்களை மூடி இறைவனை தியானித்து சிறிதளவு நீரை அந்தப் பிணத்தின் மீது தெளித்தார். உடனே பிணமாக இருந்தவர் தூங்கி எழுந்தவர் போல் எழுந்து அமர்ந்தார்.
பின்பு கிரிதரலாலின் காலில் விழுந்து ஐயா உங்களின் கருணையினால் நான் இன்று உயிர் பிழைத்தேன் என்று நன்றி கூறினார். அனைவரும் இதனைப் பார்த்து வியந்தனர். தங்களின் தவறை உணர்ந்து கிரிதரலாலிடம் மன்னிப்பு கேட்டனர். நாங்கள் துறவியை மகான் என்று ஏளனம் செய்தோம். ஆனால் நீங்களே மிகச் சிறந்த மகான் என்பதை உணர்த்தி விட்டீர்கள் என்றனர்.
அதற்கு கிரிதலால் அவர்களைப் பார்த்து உருவத்தைக் கண்டு யாரையும் எடை போடக்கூடாது. உடல் சுத்தத்தை மட்டும் பார்க்காமல் ஒருவரின் மனத் தூய்மையும் பார்க்க வேண்டும் என்று கூறினார். மேலும் இறைவன் தன்னுடைய பக்தர்களுக்கு வரும் தீங்கினை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார். இறைவனின் அடியார்களை அவமதிக்கக் கூடாது. துறவிகளுக்கு உதவியைச் செய்ய வேண்டும் என்று கூறினார். தன்னுடைய வாழ்நாள் முழுவதும் பஜனை, இறைத்தொண்டு செய்து இறைவனின் பாதத்தை அடைந்தார். நாமும் நம்முடைய வாழ்க்கையில் இறைதொண்டர்களை அவமதிக்காமல் பிறரைப் பார்த்து குறை கூறாமல் இறைவனின் பிள்ளைகளாக வாழ்வோம்
அய்யா உண்டு
அகில விருத்தமும் விளக்கமும்
– பா. அசோக் குமார் அய்யா 009607704901, 8012174032
“உன்னுடைய தம்பியாலே வுயிர் நிலையறிந்து யானும்
என்னுடைய சரத்தால்க் கொன்றேன் என்றியம்பிய அரக்காவுன்னை
பின்னுகப்பிறப்பு தன்னில் பிறப்பு நூறோடுங்கூடி
அன்னுகந் தன்னில் தோன்ற அருளுவேனுன்னை நானே”