தர்மயுக முரசு மே 2022
அய்யாவின் அருளால் எந்நாளும் நன்னாளே
அசோக்குமார் அய்யா -009607704901, 8012174032.
என்றைக்கும் நான் இருப்பேன் என் மக்கள் தங்களிடம்
ஆளுவேன் ஓர் குடைக்குள் ஆன வைகுண்டமாய்
வாழுவோம் மக்கா வையகத்தை நாமாக”
எந்த தடைக்கற்கள் வந்தாலும் அதை அன்பால் உடைத்தெறிந்து ஆன்மிக பணியாற்றி வரும் அன்புக்கொடி சொந்தங்கள் அனைவருக்கும் அன்பான இறை வணக்கம்.
உலகத்தின் முன்னோடிகளே: உலகத்தின் முன்னோடிகளாக திகழ்வது சாதாரண விஷயமல்ல. அதற்கு பொறுமை, தன்னடக்கம், சமத்துவ உணர்வு, எளிமை, விடாமுயற்சி, பிறர் பணிகளை ஊக்கபடுத்துதல், நேர்மை, ஒழுக்கம், தவறுகளை பொறுமையோடும் அன்போடும் சுட்டி காட்டுதல், விட்டுக் கொடுக்கும் மனம், மன்னிக்கும் குணம், பிறர் கருத்துக்களை உன்னிப்பாக கேட்கும் பண்பு, பொறாமையின்மை போன்ற நற்பண்புகள் எப்போதும் நம்மிடம் இருந்தால் மட்டுமே அது சாத்தியப்படும்.
இத்தனை நற்பண்புகளும் சேர்ந்து ஒருமித்து பயணித்தாலும் காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் போன்ற கெட்ட எண்ணங்களை துறந்து பயணித்தாலும் நாம் இருப்பது கலியுகம் எனவே கலி திரும்ப திரும்ப கெட்ட எண்ணங்களை திணிக்க முற்படும். எனவே ஒருபோதும் நமது செயல்பாடுகளில் பற்று வைக்காமலும் “எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது” என்ற இறைவனின் வாக்குக்கு இணங்க செயல்படுவோம் என்று சொன்னால் அச்செயல்பாடு சிறப்பாக விளங்கும். மாறாக நான் செய்தேன், நான் செய்தேன் என்று இறுமாப்பு கொண்டோமே என்றால் அச்செயல்பாடு வளராது.
மேலும் இன்னொருவர் செயல்பாடுகளில் நாம் மனம் மகிழ்வதும், அவர்களை ஊக்கப்படுத்தியும், நம்மால் இயன்ற ஒத்துழைப்பை கொடுப்போமே என்று சொன்னால் நிச்சயமாக நமக்கு பல நற்பணிகளை செய்ய அய்யா அருள் பாலிப்பார். பிறர் நம்மை ஒதுக்குவது போல் இருந்தாலும், ஒரம்கட்ட நினைப்பது போல் இருந்தாலும் அதில் நாம் கவனம் செலுத்தி துவண்டு போகாமல், அவர்கள் அப்படித்தான் நினைக்குறார்கள் என்று கூட நினைக்காமல் புன்சிரிப்போடும் மனமகிழ்ச்சியோடும் நம் நற்பணிகளில் கவனம் செலுத்தி செயல்படுவோமே என்று சொன்னால் நிச்சயமாக உலகத்தின் முன்னோடிகளாக திகழ முடியும்.
மேலும் செயல்பாடுகளில் எப்போதும் நம்மை தனிமைபடுத்தி கொள்ளாமல், எல்லோரோடும் சேர்ந்து பயணிக்கின்ற நற்பண்புகளை வளர்த்து கொண்டோம் என்று சொன்னால் அச்செயல்பாட்டில் நமக்கு பற்றும் வராது. அச்செயல்பாடோ நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்துகொண்டே இருக்கும். அதுமட்டுமல்லாமல் தெரியாத அன்பர்களுக்கு நமக்கு தெரிந்தவற்றை சொல்லி கொடுப்பதற்கும் மறந்து விட கூடாது. அதுபோல் நமக்கு தெரியாதவற்றை பிறரிடம் இருந்து தெரிந்து கொள்ள ஒருபோதும் தயங்கி விடக் கூடாது. மேலும் சிலசமயங்களில் ஆசிரியர் என்கிற கதாபாத்திரத்தை கையாண்டாலும் எப்போதும் நாம் ஒரு மாணவன் இன்னும் கற்று கொள்ள நிறைய இருக்கிறது என்ற உண்மையை மறந்துவிடக் கூடாது.
மேலும் எப்போதும் அய்யாவிடம் பகவானே உமது திருவிளையாடல்களில் எங்களை நேர்மறையான செயல்பாடுகளில் பயன்படுத்தி கொள்ளும் அய்யா, எங்களுக்கு அந்த பாக்கியத்தை தாரும் அய்யா என்று கேட்டு கொண்டே வாழ்க்கை பயணத்தை முன்னெடுப்போம்.
செயல் படுவோம்
உலகத்தின் முன்னோடிகளாக திகழ்வோம்
தர்மயுக வாழ்வு பெறுவோம்
“சொல்லுங்கப்பா அன்பர்களுக்கு துணையாக நின்றிடுங்கோ”
– அய்யா வைகுண்ட பரம்பொருள்
அகில கேள்வி
1.”துங்கணங் களாகச் சூரர் ரடந்தேறி”, இவ் அகில வரியில் வரும் “துங்கணங்களாக” என்னும் வார்த்தையின் பொருள் என்ன?
2.”வண்கவிழ்ந்த மாமுனியை வாரி யெடுத்தவர்கள்” இவ் அகில வரியில் வரும் “வண்கவிழ்ந்த” என்பதின் பொருள் என்ன?
3.சுருதி முனிவர் அசுரர்களிடம் உங்களை அழிக்க நான் எதுவாக உருவெடுப்பேன் என கூறினார்?
4.”மலரோ னடிபணிந்து வைகுண்டம் கேட்டிடவே” இவ் அகில வரியில் எம்பெருமான் மகாவிஷ்ணுவை “மலரோன்” என வர்ணிக்கும் காரணம் என்ன?
5. “செவ்வாக நின்று செப்பினா ரீசரிடம்” இவ் அகில வரியில் வரும் “செவ்வாக” என்னும் வார்த்தையின் பொருள் என்ன?
விடை ……… பக்கம் பார்க்கவும்
காமனை எரித்த ஈசன் கழலிணை மறவாவண்ணம்
பூமணக்குழலாள் கன்னி பொருந்திடும் நகரியான
சீமையின் குணமும் சொல்லிச் சிறந்திடும் பூமிதன்னில்
நேமவர் தர்ம ஞாய நிலை தனை நிகழ்த்துவாரே
விளக்கம் ……… பக்கம் பார்க்கவும்
உகப்பெருக்கு விளக்கம்
‘உச்சிபடிப்பு‘ எனும் வழிபாட்டு மந்திரம், எல்லாம் வல்ல பரம்பொருள் அய்யா வைகுண்டம் தன் அவதாரக் காலத்தில் ‘துவையல் தவசு’ மூலம் துவையல் தவசு செய்த அன்பர்களின் வாயிலாக நமக்கு அருளப்பட்டது. அதன்படியே உச்சி நேர பணிவிடையின் போது ஒவ்வொரு வரிகளாக சந்தத்தோடு முதலில் ஒருவர் படிக்க, மற்ற எல்லா அன்பர்களாலும் திரும்ப சொல்லப்படுகிறது. தினமும் படிக்கும் போது, மதிய உணவிற்கு முன்பாக ஒருமுறை படித்தல் வேண்டும். தினமும் படிக்க முடியாதவர்கள், ஞாயிற்றுக்கிழமை தோறும் 7 முறை படிக்க வேண்டும். முதல் முறை நின்று கொண்டும், மற்ற 6 முறை உட்கார்ந்து கொண்டும் படித்திடல் வேண்டும்.
இதை அகிலத்திரட்டின், “…அந்தி சந்தி உச்சி ஆதிதனை துதித்து தந்திரமதாக தவசு மிகப்புரிந்தார்…” என்னும் வாசகத்தின் மூலம், காலை – மாலை உகப்பாட்டும், மதியம் உச்சிப்படிப்பும் படிக்க வேண்டும் என்பதை நாம் உணர்ந்து கொள்கிறோம்.
அதுபோல, உச்சிப்படிப்பு படிக்கும் நேரம், பகல் 12 மணி முதல் 1 மணிக்குள் என்றும் 11 மணி முதல் 1 மணிக்குள் என்றும் இரு வேறு கருத்துக்கள் உண்டு. அய்யா தன்னுடைய அவதார காட்சியை நிறைவு செய்து வைகுண்டம் ஏகிய நேரம் சரியாக பகல் 12 மணி என்பதாலும், அது முதல் அய்யாவை நாம் நம் மனத்திலே உள்ளடக்கி உச்சிப்படிப்பின் மூலம் தேட வேண்டும் என்பதாலும் சாமிதோப்பு முதலாய் பெரும்பாலான பதிகளில் 12 மணிக்கே நடத்தப்படுகிறது.
“…பகல் பனிரெண்டு மணி பாவிக்கும் நேரமதில்
மெய்கொண்ட சான்றோர் மேல் ஆசை உள்ளிருத்தி
வைகுண்டம் ஏக வழிகொண்டார் நம்மளய்யா…”
“…இன்னமும் சிலநாள் பாரில் தினதுடல் வாடி நீங்கள் தேடுவீர் என்னைத் தானே…” என்னும் அகில வாசகங்களை இங்கு ஓப்பு நோக்குவோம்.
அது போல், நம்முடைய முந்தைய ஆகமங்கள் முச்சந்தி வழிபாட்டை முன்னிறுத்துகிறது. அதாவது, காலை 5 – 7 மணி, மதியம் 11 – 1, இரவு மீண்டும் 5 – 7 மணி போன்ற நேரங்களே ஆகும். அய்யாவும் பழைய முச்சந்தி வழிபாட்டையே மீண்டும் முழுமையாக தமிழ் மொழியில் உகப்படிப்பு மற்றும் உச்சிப்படிப்பாக தந்துள்ளார் என உணர்ந்து அம்பலபதியில் 11 மணிக்கே இன்றைக்கும் ஆரம்பிக்கிறார்கள். அகிலத்திரட்டிலோ, அருள்நூலிலோ உச்சிப்படிப்பு படிக்கும் நேரம் சரியாக குறிப்பிட படாததால் மேற்கண்ட இரு நேரங்களில் எந்த நேரத்தை தேர்ந்தெடுத்தாலும் சிறப்பானதே.
‘உச்சிப்படிப்பு’ எனும் பதத்தில் ‘உச்சி’ என்பது, உயர்ந்த இடம்/உச்சந்தலை/நண்பகல் என பலவாறு பொருள் கொள்ளலாம். உயர்ந்த நிலையான தர்மயுகத்திற்கு நம்மை தயார் படுத்தும் உயர்ந்த வழிபாட்டு மந்திரத்தை நண்பகல் வேளையில் சொல்லி உச்சந்தலை எனும் ‘உம்பர் கோன் ஊரில்’ உறையும் இறைவனை துதிப்பது என கொள்ளலாம்.
உச்சிப்படிப்பு படிப்பதால் என்ன நடக்கிறது என்பதை நேரடி பொருளாகவும் உடற்க்கூறு தத்துவ ரீதியாகவும் இரு நிலைகளிலும் நாம் புரிந்து கொள்ள முடியும். நேரடி பொருளாக பார்த்தால், நம்மை ஆன்மீகத்தில் மேல்நிலையை அடைய விடாமல் தடுப்பவை, காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் எனும் 6 அகப்பகைகளே ஆகும். இவற்றை நாம் ஆரம்பத்திலே கட்டுப்படுத்தாவிட்டால், அவை நம் உடலில் கடுமையான உஷ்ணத்தை ஏற்படுத்தும். இதுவே தொடர்ந்து பல காலம் நீடித்தால், அந்த உஷ்ணமே, மாநெருப்பாய் [கனல் (அ) அனல்] நம் உடலளவிலும் மனதளவிலும் நிரந்தரமாக தங்கி நம்மிடம் உள்ள தர்ம சிந்தனைகளை முழுமையாக நீறாக்கி, முழுநீச பாவியாக்கி இறப்பு – பிறப்பு என்கிற துன்ப நிலைக்கு ஆட்படுத்தி விடும். அப்படி பட்ட அனல் நம்மை பற்றாமல் இருப்பதற்கு தான் அய்யா நண்பகல் நேரத்தில் நம்மை உச்சிப்படிப்பு சொல்ல வைத்திருக்கிறார் எனலாம். இதை மெய்பிக்கும் விதமாய், ‘உச்சி நேரம் பாடச்சொல்லு அகமகிழ்ந்து என் பேரில்
அச்சமயம் நான் வருவேன் அனல் மாற்ற என் மகனே’ என்று அய்யா சொன்ன வாய்மொழி உத்தரவை செவிவழி செய்தியாக அறிகிறோம்.
அதுபோல், உடற்கூறு தத்துவ ரீதியாக பார்த்தால், உச்சிபடிப்பு படிக்க படிக்க மூலாதாரம் முதலாய் ஆக்ங்கை முதலான 6 ஆதாரங்களும் விழிப்பு நிலையான ஞான முதிர்ச்சி பெற்று, 10 -ம் வாசல் எனும், சகஷ்ரார தாமரையில் எங்கும் எதிலும் நிறைந்திலங்கும் இறை ஜோதியை கண்டுணரும் பேறு கிடைக்கும். இந்த சகஸ்ரார தாமரையையே அகிலத்திரட்டு ‘உம்பர் கோன் ஊர்’ என்று சொல்கிறது.
இனி அடுத்த இதழில் இருந்து, உச்சிபடிப்பின் ஒவ்வொரு வரிக்களுக்கான விளக்கத்தை ஆராய்வோம்!
(தொடரும்….)
அகிலதிரட்டு அம்மானை மூலமும்,உரையும்
க.ரீகன் அய்யா- 96890418976
முன்பான ஜோதி முறைபோ லுறவாடி
போற்றியே நித்தம் பூசித் தனுதினமும்
சாற்றிய சொல்லை தவறாமலே மொழிவாள்”
தெச்சணா பூமியில் சோழமன்னன் அரசாட்சியில் தெய்வ நீதத்தினுடையை சிறப்புகளை சொல்லி, அதன் பிறகு அங்கு வாழ்ந்து வந்த பெண்களுடைய சிறப்புகளை அய்யா மனு நெறியில் மீண்டும் சொல்லி வருகின்றார்.
தெட்சணா பூமியில் வாழ்ந்து வந்த பெண்கள் கணவனுடைய சொல்லைக் கேட்டு அதன் படி பணிந்து வாழ்ந்து வந்தார்கள். கணவனுடைய சொல்லைக் கேட்டு நடப்பதால் ஒரு பெண் அடிமை என்று ஆகி விட முடியாது. தற்காலத்தில் பெண்கள் கணவனுக்கு பணிந்து வாழ்வதை இந்த உலகம் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றது. அதை அடிமைத்தனம் என்று சாடுகிறது. ஆனால் அது அறியாமையின் வெளிப்பாடு. ஆணுக்கு சரிசமம் பெண் என்று தற்கால புதுமை சமூகம் நமக்கு கற்பிக்கும் வேளையில் நாம் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். ஒரு காலத்திலும் ஆணுக்கு நிகராக பெண் வர இயலாது. அதுபோல் பெண்ணுக்கு நிகராகவும் ஆண் வரமுடியாது. இதுதான் சமத்துவம். இதுதான் இயல்பு. இந்த இயல்பை மாற்ற தற்கால சமூக முயற்சி மேற்கொண்டு ஆண் போல பெண்களும் தங்களை பாவித்துக் கொண்டு தங்கள் நடை உடை பாவனைகளை மாற்றிக் கொண்டு ஆண் போல் வேடமிட்டு பெண்களும் அலைகின்றார்கள். அப்படிப்பட்ட பெண்கள் ஒன்றை உணர்ந்து கொள்ள வேண்டும். ஆணுக்கு நிகராக தங்களை பாவித்து இயற்கையாக தந்த பெண்மை எனும் அற்புதத்தை அவர்கள் துறக்கின்றனர் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
இப்படி தற்காலப் பெண்கள் இருந்தாலும், சோழ தேசத்தில் வாழ்ந்து வந்த பெண்கள் இவ்வாறு இல்லாமல் சிறப்போடு வாழ்ந்து வந்தார்கள். தாங்கள் எந்த காரியம் செய்தாலும் அதை கணவன் மொழிப்படி செய்து வந்தார்கள். திருமணம் என்ற பந்தத்தில் கணவனோடு வாழ்ந்தாலும் அவர்கள் தங்களை பெற்ற தாய் தந்தையர்களை மறவாமல் இருந்தார்கள். அவர்களுக்கு வேண்டிய பணிவிடைகளை செய்து, அவர்கள் சொல்படியும் மதித்து நடந்தார்கள்.
கரமானதை தடவி கால்தடவி நின்றிடுவாள்
துயின்ற தறிந்து துஞ்சுவாள் மங்கையரும்”
அகிலத்திரட்டில் அய்யா பல இடங்களில் கணவன், மனைவி எப்படி இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளார். அதுபோலவே இவ்விடத்தில் மனைவி கணவனுக்கு சோழராச்சியத்தில் எப்படி பணிபுரிந்தார்கள் என்று சொல்லுகின்றார். ஒரு நாட்டை வழிநடத்தக்கூடிய அல்லது அரசாட்சி புரிபவர்களை அரசன் என்று சொல்வது போல, ஒரு குடும்பத்தை வழி நடத்தக்கூடிய குடும்பத் தலைவரை அந்த குடும்பத்திற்கான அரசன் என்று அய்யா சொல்லுகிறார். இப்படி ஒரு குடும்பப் பொறுப்பை நடத்துகின்ற கணவனுக்கு உதவி செய்யும் பொருட்டு மனைவி இருக்க வேண்டும். கணவன் துயில ஒரு குழந்தையை தூங்க வைப்பது போல அன்பாக ஆராட்டி ஓராட்டி தூங்க வைப்பாள். அதுபோல அவன் கை கால்களை பிடித்து விட்டு அவர் அசதியை களையும் பொருட்டு உதவி செய்து கணவனை தூங்க வைப்பாள். பொதுவாக பெண்களின் நிலையை சொல்லும் போது அவர்களை “பின் தூங்கி முன் எழுபவள்” என்று சொல்வார்கள். அதாவது தனது குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் வேண்டிய அத்தனையும் செய்து அவர்கள் தூங்கிய பின்பு அந்த இல்லத்தரசி தூங்குவாள். அதுபோல காலையில் அனைவருக்கும் முன்பு எழுந்து அன்றைய பொழுதுக்கான வேலைகளை குடும்பத்தலைவி செய்துவிடுவாள். இப்படிப்பட்ட நற்குணத்தோடு பெண்கள் இருந்தார்கள்.
முகத்து நீரிட்டு நான்முகத் தோனையும் தொழுது
அகத்து தெருமுத்தம் அலங்காரமாய் பெருக்கி
பகுத்தாக நித்தம் பாரிப்பார் பெண்ணார்கள்”
சாமம் என்பது ஒரு கால அளவு ஆகும். சாமம், நாழிகை, முகூர்த்தம் என்பது குறிப்பிட்ட கால அளவை குறிப்பிட நம் முன்னோர்கள் பயன்படுத்திய சொல்லாடல் ஆகும். அதன்படி இரண்டு முகூர்த்தங்கள் சேர்ந்தது ஒரு சாமம் ஆகும். அதாவது மூன்று மணி என்பதை குறிக்கும். இங்கே மயன்ற ஒரு சாமம் என்று குறிப்பிடுவதால் அதிகாலையில் வரக்கூடிய மூன்று மணி என்ற அளவை குறிக்கும். அப்படிப்பட்ட காலை மூன்று மணிக்கே பெண்கள் எழுந்திருந்து அவர்கள் உடனே நீராடிவிட்டு பின்பு இறைவனைத் தொழுது தங்கள் வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுத்தப்படுத்தி அதன் பின்பு இறை நாமத்தால் தங்கள் உள்ளத்தையும் இறை அருள் குடி கொள்ள வைத்து சிறப்போடு பெண்கள் தெச்சணத்தில் வாழ்ந்து வந்தார்கள்.
மனுநீதஞ் சொல்லி வகுக்க முடியாது
கனியான பெண்கள் கற்பு நிலை மாறாமல்
வழியான சாதி வளமை கேளம்மானை”
அகிலத்திரட்டிலே தவம் என்பதற்கு பல இடங்களில் சிறப்பாக அய்யா சொல்லி வருகின்றார். முனிவர்கள் இறைவனை காண இருப்பது தவம் என்றும் அகிலத்திரட்டு சொல்லுகின்றது. அவர்கள் தங்கள் விரும்பிய வரம் வாங்க நிற்பதும் தவமாகும். விரும்பியதை அடைவதற்கு செய்யக் கூடியதும் தவம் ஆகும் என்று அகிலம் சொல்லும். கலியுகத்திலே இல்லறம் என்பது தவம் என்று அய்யா சொல்லுகிறார். அதன்படி வாழ்ந்து வந்த பெண்கள் மனு நீதிப்படி காலையில் எழுந்து இரவு தூங்க செல்வதுமாக மிகவும் கவனத்தோடு முழுமனதோடு செய்யும் செயல் மிகப் பெரிய தவச் செயல் என்று அய்யா சொல்லுகிறார். இப்படியாக தெச்சணத்தில் வாழ்ந்து வந்த பெண்களுடைய உயர்ந்த தன்மையை சொல்லிக் கொண்டே போகலாம் என்று அய்யா சொல்லி இனி இந்த சோழ தேசத்தில் சாதி முறைகள் எப்படி இருந்தன என்று அய்யா மேலும் வாசகத்தில் சொல்லி வருகின்றார்
உண்டான சாதி ஒக்கவொரு இனம் போல்
தங்கள் தங்கள் நிலைமை தப்பிமிக போகாமல்
திங்கள் மும்மாரி சிறந்தோங்கியே வாழ”
தெச்சணத்தில் வாழ்ந்த பெண்கள் நிலையை எடுத்துச் சொல்லி இனி சமூகத்தில் இருந்த ஜாதி நிலையை அய்யா சொல்லி வருகின்றார். சாதி என்பது சமுதாயத்தின் கட்டமைப்பு சுழற்சிக்காக அமைக்கப்பட்டு அவை சிறப்போடு இயங்கி வந்தன. கலியுதத்திற்கு முன்புவரை ஜாதி என்பது எந்த விதமான ஏற்றத்தாழ்வுகளும் இல்லாமல் அவரவர்கள் பணிகளை அவரவர்கள் தங்கள் தங்கள் சமுதாயம் சார்ந்து மிகவும் மகிழ்ச்சியோடு செய்து வந்தார்கள். ஆனால் கலியன் பிறந்த பின்பு அவன் ஆளுகைக்கு இந்த உலகம் வந்த பின்புதான் ஜாதி இனம் பிரித்து உயர்வு, தாழ்வு பேதமைமையை புகுத்தி பிரிவுகளை கலியன் உண்டாக்கினான். ஆனால் சோழ தேசம் என்பது கலியுகம் பிறந்த பின்பும் கலியின் ஆளுமை உட்படாமல் தர்மநெறியோடும், நீதத்தோடும் இருந்த காரணத்தால் அங்கே இருந்த சமுதாயம், சாதி வேற்றுமை இல்லாமல் எல்லாவற்றுக்கும் ஒன்று போலவே வாழ்ந்து வந்தார்கள். இவர்கள் தங்களுடைய இயல்புநிலை மாறாமல் அதே நேரத்தில் எல்லாரிடமும் அன்பு பாராட்டி அவரவர் சமுதாயத்தில் சிறந்தோங்கி வாழ்ந்து ஒற்றுமையாக வாழ்ந்து வந்தார்கள். இப்படி இவர்கள் ஒற்றுமையாக வாழ்வதும் அதே நேரத்தில் தங்கள் இயல்பு நிலையில் மாறாமல் வாழ்வதைக் கண்டு இயற்கையும் மாதம் மூன்று முறை மழை பொழிந்து சோழதேசம் செழிப்போடு இருந்தது.
(தொடரும்)
விருத்தத்தின் விளக்கம்:
ஞான நிஷ்டையில் இருந்த சிவபெருமானின் தவத்தை கலைக்கும் பொருட்டு காமபாணங்களை எய்த காமனை தன் நெற்றி கண்ணால் எரித்த சிவனின் திருவடியை மறவாத வண்ணம் தவத்தில் இருந்துக் கொண்டிருக்கும் பூமணம் வீசுகின்ற கூந்தலை உடைய குமரி பகவதி என்றும் அருளாட்சி புரிகின்ற நகரான இந்த தெச்சணாபூமியின் குணத்தை சொல்லி சிறப்பான இந்த தெச்சணாபூமியில் இறைவனால் அருளப்பட்ட தர்ம நியாயங்களை முறையாக அன்பர்கள் கடைப்பிடிக்கின்ற நிலைகளை இனி அய்யா சொல்கிறார்.
சிவகாண்ட அதிகார பத்திரம்
மாடசாமி அய்யா – 8973349046
சூத்திரம்:“கள்ளனானேன் வெள்ளனானேன் என் காரணத்தை அறிவாறில்லை”
பொருள்: “நானே கபடு கொண்டவனாகவும் தூயவனாகவும் இருக்கிறேன் இதன் காரணத்தை அறிவாறில்லை”.
விளக்கம்: பகவான் இங்கே தன்னைத் திருடன் என்றும் வெள்ளன் என்றும் குறிப்பிடுகிறார். இதன் காரணம் யாதெனில் பகவான் திருடனுள்ளும் யோகியினுள்ளும் பரமாத்மாவாக அதாவது உயிருக்கு உயிராக இருக்கிறார். அவனின்றி ஓர் அனுவும் அசைவதில்லை. எனவே அய்யா கள்ளனானேன் அதாவது நானே திருடனாகவும் நல்லவனாகவும் இருக்கிறேன். அதை யாரும் அறிவதில்லை என்கிறார். அதாவது திருடனுக்குள்ளும் யோகிக்குள்ளும் அவர் சமமாகவே இருக்கிறார். அவர் நமக்குள் இருப்பதை அறிந்து அவரை நாம் அகத்துள் தியானித்தால் இறைநிலையை அடையலாம். கள்ளனாகிய வான்மீகி, முனிவராகி இராமாயணம் இயற்றியதைப்போல. அனைத்தாகவும் அவரே இருக்கிறார் என்பது சூத்திர கருத்து. அனைத்துக்ககுள்ளும் அனைவருக்குள்ளும் புனிதம் இருக்கிறது. பகவானே எல்லார் உள்ளும் இருக்கிறார் என்பதை சூத்திரம் விளக்குகிறது.
சூத்திரம்:“ஆலிலைமேல் பள்ளிகொண்ட அருமைசற்றும் சொல்வாரில்லை “
பொருள்: நான் ஆல மரத்தின் இலையில் பள்ளிகொண்ட அதிசயத்தை எடுத்து சொல்வாரில்லை.
விளக்கம்: தனது வடிவங்களை விளக்கிய பகவான் இனி அவற்றின் சக்திகளை விளக்குகிறார். தானே மாயையாக இருப்பதாக கூறிய பகவான், இனி தன்னுடய மாயையின் வலிமையை இச்சூத்திரத்தில் விளக்குகிறார். இனி பகவான் ஆலிலை மேல் பள்ளி கொண்ட வரலாறை காண்போம். மிருகண்டு முனிவரின் புதல்வர் மார்க்கண்டேய முனிவர். இவர் தனக்கு பூனூல் அணிவிக்கப்பட்ட காலம் முதலே கடுமையான பிரம்மச்சரிய விரதத்தை கடைபிடித்து ஒழுகினார். இளமை முதலே தவத்திலும், தியானத்திலும் ஈடுபட்டார். உள்ளத்தின்கண் பகவான் நாராயணரையே தியானித்து மகிழ்ந்தார். பரம்பொருளை நினைந்து அவருடன் கலந்தே எப்பொழுதும் இருந்தார்.
இப்படி முனிவர் ஏழு யுகங்கள் தவமியற்றினார். ஏழாவது யுகத்தில் முனிவர் இந்திரப் பதவிக்கு ஆசைகொண்டாரோ என ஐயம் கொண்டான் இந்திரன். தேவ மங்கயரையும், மதனையும், வர்ணனையும் அணுப்பி முனிவரின் தவத்தை கலைக்க சொன்னான் இந்திரன். இவர்கள் அனைவரும் முனிவரின் ஆசிரமத்திற்கு சென்றனர். முனிவர் தவ அக்கினியாய் தவம் இருந்தார். முனிவரின் தவ அக்னியின் வெம்மைத் தாங்காமல் தேவ கணங்கள் ஓடி மறைந்தனர். முனிவர் இவர்கள் யாரையும் அறியாதவராய் தவத்தில் தொடர்ந்தார். ஶ்ரீ மந் நாராயணரையே இதய கமலத்தில் தியானித்தார். முனிவரின் தவத்திற்கு இரங்கிய பகவான் நரன், நாராயணன் என்னும் இரு வடிவில் முனிவரின் முன் தோன்றினார். முனிவர் பகவானை கைகூப்பி தொழுது ஆனந்த கண்ணீர் உகுத்தார். பகவான் முனிவரிடம் என்ன வரம் வேண்டும் என கேட்க, சீவ முத்தரான முனிவர், பகவானே தங்களின் மாயா சக்தியை நான் அறியவேண்டும் எனக்கேட்டார்.
நர நாராயணனாக வந்த பகவான் அப்படியே நடக்கும் எனக்கூறி மறைந்தார். முனிவர் அப்படியே பல நாள் தவமியற்றிக் கொண்டிருந்தார். ஒருநாள் முனிவர் தண்ணீர் துறையில் அமர்ந்த போது பயங்கர காற்று வீசியது, பேய் மழை பொழிந்தது, உலகை ஊழித்தீ சுட்டது, கற்போதகம் எனும் கடல் உலகைச் சூழ்ந்தது. அதில் பயங்கர நீர்வாழ் மிருகங்கள் ஒன்றுக்கொன்று சண்டை இட்டன. இதில் முனிவர் மட்டும் தத்தளித்துக் கொண்டு இருந்தார். பசி அவரை வாட்டியது. சில மிருகங்கள் அவரை உண்டன. மீண்டும் கடலில் தோன்றினார். இந்த நிகழ்ச்சி மீண்டும் மீண்டும் தொடர்ந்தது.
யுகங்கள் பல சென்றது. முனிவர் அந்த கடலின் நடுவில் ஒரு சிறிய மண் திட்டைக் கண்டார். அந்த திட்டின் வடகீழ் மூலையில் பழம் நிறைந்த ஆலமரத்தைக் கண்டார். அதன் அருகில் சென்றார். அந்த ஆல மரத்தின் ஓர் இலை மட்டும் கிண்ண வடிவில் இருப்பதைக் கண்டு அதன் அருகில் சென்றார். அந்த ஆலிலையின் மேல் நீலவர்ண குழந்தை ஒன்று படுத்து இருந்தது. அது தனது வலது காலை தனது வாயில்வைத்து சுவைத்தது. முனிவர் திகைத்து நின்றார். அந்தக் குழந்தை மூச்சை உள்ளிழுக்கும் போது முனிவர் குழந்தையின் மூச்சுக் காற்றில் கலந்து குழந்தையின் மூக்கில் நுழைந்து குழந்தையின் வயிற்றை அடைந்தார். வயிற்றில் அண்ட சராசரம் அத்தனையும் கண்டார். குழந்தையின் அடுத்த மூச்சுக் காற்றில் மீண்டும் கடலில் வந்து பல யுகங்கள் தத்தளித்தார். மீண்டும் ஆல மரத்தையும் அதில் பள்ளி கொண்ட குழந்தையையும் கண்டார்.
அந்த ஆதி நாராயணரை அள்ளி அணைக்க குழந்தையின் அருகில் சென்றார். குழந்தை மறைந்தது. கற்போதக கடல் மறைந்தது. பிரளய சலம் வற்றி கண நேரத்தில் பழைய படியே முனிவர் தண்ணீர் துறையில் அமர்ந்தபடி ஆனார். பகவானின் சக்தியான மாயையின் வல்லமையை முனிவர் அறிந்தார். இதன் மூலம் பகவானின் மாயையை யாராலும் கடக்க முடியாது என்பதையும், சீவ முக்தரான ஞானிகளையும் கண நேரத்தில் மயக்கி பல யுகங்கள் போராட வைக்கும் என்பதையும். அனைத்தையும் படைக்க வல்லது என்பதையும், வாக்கு புத்தி இவற்றிற்கு அப்பாற்பட்டது என்பதையும் அறியலாம். இனி இதைக்(மாயையை) கடந்து பகவானை அடையும் வழியை அடுத்த சூத்திரத்தில் விளக்குகிறார்.
சூத்திரம்:
வாரிதனை அடைத்தருமை சற்றுமில்லை என் மகனே
பொருள்: நான் கடலை அடைத்த பெருமையையும் அதன் தத்துவத்தையும் அறிந்தவர்கள் இல்லை
விளக்கம்: முந்தைய சூத்திரத்தில் மாயையின் வலிமையை கூறிய பகவான் இந்த சூத்திரத்தில் அதைக்கடப்பதற்கான வழியையும் கூறுகிறார். திரேதா யுகத்தில் இராமனாக பகவான் தோன்றிய போது, இலங்கையை அடைய கடலை அடைத்தார் அதாவது கடலில் பாலம் கட்டினார். அந்த பாலம் கட்ட பயன்படுத்திய கற்களில் இராம என்னும் திருநாமம் எழுதப்பட்டிருந்தது. பகவான் பெயரைத் தாங்கிய கற்கள் கடலில் மிதந்தன. இவ்விதமாக பகவான் வானர சேனைக்கொண்டு கடலை அடைத்தார். இந்த நிகழ்ச்சி மறைபொருளாக ஒன்றை உணர்த்துமா. அது யாது என்றால் சம்சார சாகரம் என்னும் பிறவிக்கடலை கடக்க இறைவனின் திருநாமம் துணை செய்யும் என்பதாம். மேற் சுலோகத்தில் தன்னுடய மாயையின் வலிமையை சொன்ன பகவான் இந்த சுலோகத்தில் அந்த மாயையை அவருடைய திருநாம செபத்தாலும், தக்வத்தாலும் கடக்கலாம் என திரு நாமத்தின் மகிமையைச் சொல்கிறார்.
சூத்திரம்:” அண்டமெல்லாம் பிண்டமதாய் ஐந்தறைக்கு ளடக்கி விட்டேன்”
பொருள்: “ஈரெழு பதினான்கு உலகையும், ஐந்து பூதங்களால் உண்டான அறையான உங்கள் உடலுக்குள் அடக்கிவிட்டேன்”
விளக்கம்: மனித உடல் பதினான்கு உலகங்களின் தத்துவங்களையும் உள்ளடக்கியது. அவற்றின் அமைவிடம் யாதெனில்
- பாதாளம்- உள்ளங்கால்
- ரசாதலம்-பாதம்
- மகாதலம்-கணுக்கால்
- தலாதலமா- முன்னங்கால்
- சதலம்-மூட்டு
- அதலம் – கீழ் துடை
- விதலம்- மேல் துடை
- பூதலம் – இடுப்பு
- ஆகாயம் – தொப்புள்
- நட்சத்திர தலம்- திரு மார்பு
- மஹர் உலகு – கழுத்து
- சன லோகம்-முகம்
- தேவலோகம் – நெற்றி
- தலை- சத்ய லோகம்.
மேலும் இரு கண்களும் சூரிய சந்திரரின் வடிவம். அக்னி உடம்பில் உள்ளசூடு. எண்ணடங்கா கோடி உலகுகளும் உடம்பில் உள்ள துடிப்புகள் என்று வேதநூல்கள் கூறுகின்றன. மேலும் கைலையும், வைகுண்டமும், பாற்கடலும் இதயமே. இப்படி அண்ட சராசரம் அத்தனையும், ஐந்து பூதங்களால் உண்டான அறையான இந்த உடலில் அடக்கியுள்ளார் நமது அய்யா.
சிவகாண்ட அதிகாரப் பத்திரம் தொடரும்..
தர்மயுக முரசு வாசகர்களுக்கு அன்பான வேண்டுகோள்
நமது தர்மயுக முரசில் “கேள்வி பதில்“ என்கிற பகுதியில் கேள்வி கேட்க நினைப்பவர்கள் கீழ் கண்ட விலாசத்திற்கு கடிதம் மூலமாக கேட்கலாம் அல்லது கீழ் கண்ட வாட்சப் எண்ணிற்கு டைப் செய்தும் அனுப்பலாம். அதன் விடைகளை உங்கள் கேள்வியோடும் உங்கள் பெயரோடும் நமது தர்மயுக முரசில் பதிவாகும்
விலாசம்:அகில உலக அய்யாவழி சேவை அமைப்பு
அய்யா வைகுண்டர் வளர்பதி, கைலாசக் கோனார் காம்பவுண்ட்,
வடக்கு மெயின் ரோடு, வள்ளியூர் 627117, திருநெல்வேலி மாவட்டம்
வாட்சப் எண்: 8903201008
அய்யா வைகுண்டர் அருளிய வாழ்வியல் நெறி முறைகள்
த.சீதா லெட்சுமி அம்மா -9486880072
“எண்ணம் போல் வாழ்வு”
நம் முன்னோர்கள் பல நூறு வருடங்களுக்கு முன்னரே “எண்ணம் போல வாழ்க்கை, நல்லதே நினை, நல்லதே பேசு” என்ற நல்ல விஷயங்களை சொல்லி வைத்து சென்றுள்ளனர்.
இன்று நாம் இருக்கக்கூடிய நிலைக்கு காரணம் நம்முடைய முந்தைய எண்ணங்கள் தான் காரணம். நம் எண்ணங்கள் நல்லதாகவும், பேச்சு நல்லதாக இனிமையானதாக, முன்னேற்றத்திற்குரிய சிந்தனை இருந்தால் நம்முடைய வாழ்க்கையில் முன்னேற்றம் தேடி வரும்.
நம் எண்ணங்கள் எல்லாம் வெளிப்பாடாக ஆகின்றன. நாம் இப்பொழுது இருக்கும் நிலைக்கு நம் எண்ணங்களே காரணம். நாம் நம் ஆழ்மனதில் எப்பொழுதும் எதையாவது சிந்தித்துக்கொண்டே இருக்கிறோம். ஆனால், நாம் நமக்கு என்ன வேண்டும் என்பதை விட நமக்கு என்ன வேண்டாம் என்பதை பற்றித்தான் அதிகம் சிந்திக்கிறோம்.
ஆனால், இந்த பிரபஞ்சம், நாம் என்ன எண்ணுகிறோமோ, அதை நம்மிடம் தவறாமல் கொண்டு வந்து சேர்க்கிறது என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். மனத்தின் முதன்மையான நிலையே இப்பொழுது வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கை. இந்த நிலையே நம்முடைய எதிர்காலத்தை உருவாக்குகிறது.
கடந்த காலத்தில் வாழ்வது எந்தவித பயனும் அளிக்கப்போவதில்லை. அது நம்மில் மேலும் மேலும் எதிர்மறை எண்ணங்களைத்தான் தோற்றுவிக்கும். நம் எதிர்காலமும் அதுபோலவே அமையும். ஆகவே ஒரு மகிழ்வான எதிர்காலம் அமைய, நம்முடைய இன்றைய நிலை மிகவும் முக்கியமானதாக ஆகிறது.
இன்று நம் மனதில் முதன்மையாக நேர்மறை எண்ணங்களுடன் ஒரு மகிழ்வான மனநிலையில் வாழ்ந்தால், அதே போன்ற ஒரு எதிர்காலத்தை உருவாக்க முடியும். இதையே அய்யா, “அவரவர் நினைக்கின்ற நினைப்புக்குத் தக்கவாறு இருந்து விளையாடினேன் சிவனே அய்யா” என்றுக் கூறினார். நல்ல எண்ணத்தைக் கொண்டு நம் வாழ்வில் எதை வேண்டுமானாலும் பெறலாம்;
- மகிழ்ச்சி
- செல்வம்
- ஆரோக்கியம்
- அன்பு
- உறவுகள்
நாம் ஒரு எல்லையற்ற ஆற்றல் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நமக்குள் எல்லையற்ற ஆற்றல் இருக்கிறது என்பதைப் புரிந்துக் கொண்டால் எதிலும் வெற்றியே! அந்த ஆற்றல் நல்லனவற்றையே சிந்திக்க வேண்டும். அப்போது அது அது நல்வாழ்விற்கு வழிவகுக்கும். இதையே அய்யா,
“நல்ல நினைவோருக்கு நாள் எத்தனை ஆனாலும்
பொல்லாங்கு வராது புவி மீது வாழ்ந்திருப்பார்” என்றுக் கூறினார்.
நம் உடல், மனம், உணர்வு எல்லாமே எல்லையற்ற ஆற்றல் கொண்ட பெரும் சக்தி. அதுபோலவே, இந்த பிரபஞ்சத்தில் எல்லாமே ஆற்றல் கொண்ட பெரும்சக்திதான் என்பதை நாம் புரிந்து கொண்டால், நம் வாழ்வில் எதை வேண்டுமானாலும் இந்த ப்ரபஞ்சத்திடம் கேட்டுப்பெறலாம்.
நம் மனம் நம் வசமாகிவிடும். நாம் சொன்னதை கேட்கும். நம்மில் பல பேர் இரு வித மனநிலையில் வாழ்கிறோம். சில நேரங்களில் நிறைவாகவும் சில நேரங்களில் குறைவாகவும் உணர்கிறோம். இப்பொழுது, இந்த பிரபஞ்ச விதிகளைப்பற்றி தெரிந்துக் கொண்டுள்ளதால், நம் மனதை எப்படி கட்டுக்குள் வைத்திருந்து நம் விரும்பிய வாழ்வை அமைத்துக்கொள்வது என்பது நமக்கே தெளிவாகப் புரியும்.
தொடரும்….
– பா. கவிதா அம்மா 009609805601
சென்ற மாத தொடர்ச்சி….
அன்புடையீர் இப்படியாக அம்மைமார்கள் “துறையறியாக் களவாண்டு தோய்ந்த கள்வா தொல்புவிகள் அறியாதோ உன் சுத்தக் கள்ளம் இறையளவு மெய்யில்லாப் பொய்யே சொல்லும் ஏமாளிக் கள்ளரென எவரும் சொல்வார். இதன் பொருள் யாதெனில் இவ்வுலகில் பிறப்பு எடுத்து ஞான வழிகளில் நாட்டம் வைத்து துறை (சகஸ்ராரம்) அறியாமல் தவிக்கும் பக்தர்களை அவர்கள் அறியாமலேயே அவர்களின் உள்ளத்தைக் கவர்ந்து அவர்களோடு கலந்துரையாடி பேரின்பப் பெருவாழ்வை அருளும் கருணையை மேவலர்கள் (தொல்புவியோர்) அனைவரும் அறிவர் என்பதாகும். மேலும் இறையளவு மெய்யில்லா பொய்யே சொல்லும் என்பதும் வெளிப்படையான பொருள் கொள்ளக்கூடாது. வேத ஆகமங்கள் உவமைகளாகவும் குழுஉக்குறிகளாகவும் தான் சொல்லப்பட்டிருப்பதால் இங்கு வஞ்சப்புகழ்ச்சி அணியாக அயயாவை குறை சொல்வது போல் பெருமைப்படுத்தி பேசுகின்றனர்.
மேலும் ஏமாளிக் கள்ளர் என்பதன் உட்பொருள் என்ன வென்றால் அகண்ட ஜோதி சொரூபமாய் அருவ நிலையில் அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் எம்பெருமான் மக்களை ஆட்கொள்ளும் பொருட்டு மனுநிறம் காட்டிய திருக்கோலத்தை ஒரு கள்ளனைப் போன்று திடீரென மறைந்து விடுகிறான். பரம்பொருளின் இந்த திருவிளையாடல்களையே அம்மைமார்கள் ஏமாளிக் கள்ளர் என குறிப்பிட்டனர்.
உடனே எம்பெருமான் அவர்களிடம் கள்ளர் எனச் சொல்லி வந்த இளம் பாவை மாரே! நீங்கள் களவாண்டீர் கயிலையதில் ஈசர் முன்பில் என்றார்
அதாவது ஞானத்தை பெற முயற்சித்து அதில் வெற்றி பெற முடியாமல் நிலை தடுமாறினர் என்பதே இதன் பொருள். அதனால் வெள்ளமது திரளாமல் கலங்கி நின்றனர். இதனை பார்த்த ஈசன் அவர்களை சான்றோர் வழியில் போய் பிறக்கும்படி சபித்தார் என்றும் உள்ளதெல்லாம் சொல்லிடுவேன் ஓடிப்போங்கோ ஓகோகோ என்று உறுக்கினார்.
உடனே அம்மைமார்கள் உறுக்கி நீர் உரைத்த சுனை உமக்கே அல்லாது எங்களுக்கு இல்லை. உமது மாயையால் எங்களை ஏமாற்றி இறக்கி வைத்த நீர் இளகும்படியாக கள்ளம் செய்தீர். இதனை ஈசர் முதல் வானோர்கள் எல்லோரும் அறிவார்கள். சிறுக்கும் இடை மாதருட வீட்டில் வெண்ணெய் திருடி உண்ட கள்வர் என்று எவரும் சொல்வார். இனி பொறுக்க மாட்டோம் அண்டம் பொடியும்படியாக புகல்வோம் என்றார்கள்.
சிறுக்குமிடை என்றால் தெய்வீக பெண்களின் தன்மை. இங்கு பரபக்தியுடைய ஆன்மாக்களுக்கு அவர்களுக்கு தெரியாமலேயே அவர்களின் மனதை திருடி நற்பேறு அருளும் கருணை உடையவர் என்று பழிப்பது போல் புகழ்கின்றனர்
மேலும் அவர்கள் சொல்வார்கள் பிட்டுக்காய் மண் சுமந்து வைகைதனில் பிரம்படிகள் பட்டதுவும் போதாதென்றோ இடைச்சி (யசோதை) கையால் உரலில் கட்டி வைக்கப்பட்டீர். அது மட்டுமா முப்புராதிகளை அழிப்பதற்காக கிழவன் வேஷமிட்டு சென்ற உம்மை அவர்கள் மீசையில் கண்ணிட்டு இழுத்து குனிய விட்டார்கள். நீர் இப்படி பக்தர்களைக் காப்பதற்காக பெருமை குலைந்து பாடுபட்டீர் என்பதை மக்கள் அறியும்படி சொல்லிவிடுவோம். அதாவது இங்கு கலியழித்து மக்களுக்கு பேரின்பம் அருளும் நோக்கத்தோடு ஒரு சாதாரண மனிதனைப் போல் இருந்து கொண்டு லீலைகள் நடத்தும் உமது ரகசியங்களை எல்லாம் வெளிப்படுத்தி விடுவோம். ஆதலால் அது அறிந்து உடனே எங்கள் மக்களை தந்து ஆளுவீர் என்றனர்.
“ஆடெடுத்த கள்வரல்லோ உமக்குச் சூடு அணு அளவும் தோற்றாமல் அலைந்து எந்த”
இந்த பிரபஞ்ச இயக்கம் – உடல் இயக்கம் – அனு இயக்கம் ஆகிய அனைத்து இயக்கங்கள் அல்லது ஆட்டங்களையும் யாரும் அறியாமல் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து ஆட்டுகின்ற கருணையுடையவன் இறைவன்.
நாடெடுத்த இடம் எல்லாம் வேஷம் போட்டு என்பது உலகில் அதர்மம் தலை தூக்கும் போது திருஅவதாரம் செய்து தர்மத்தை நிலைநாட்டுகிற கருணையை விளக்கப்படுகிறது.
“நாணமதொன்றில்லாமல்” என்றால் மான அபிமானம் கடந்த எம்பெருமானின் பெரு நிலையை குறிக்கிறது. இறைவன் பக்தர்களைக் காப்பதற்காக எந்த நிலைக்கும் இறங்குபவன். அவன் விலங்காக, விறகு விற்பவனாக, மண் சுமப்பவனாக, பல லீலைகளை புரிந்ததை சொல்கின்றார்கள்.
அடுத்து நாரிமார்தன் வீடெடுத்த மனைதோறும் மிரட்டிக் கொஞ்சி வேசையோடு கூடி விளையாடும் கள்ளன் என்று திட்டி தீர்க்கிறார்கள். இங்கு மிரட்டி கொஞ்சி என்பது அடியார்களை ஆட்கொள்ளும் பொருட்டு அவர்களை சோதனைக்கு உட்படுத்துவதைக் குறிக்கிறது. இப்படி அய்யாவின் அவதார ரகசியங்களை வெளிப்படுத்திய அம்மைமார்கள் அய்யாவிடம் முன்னமைத்த பாலர்களை இனத்தோடு சேர்த்து இப்பொழுது தந்து தருமபுவியாள வைக்கவில்லை என்றால் உம்மை அமுதேற்றுக் கொண்டு பேரானந்தத்தில் திளைத்திருக்க விடமாட்டோம் அன்னமது அருந்தாமல் மறித்துக் கொள்வோம் அது அறிந்து பாலரைத் தந்தாளுவீர் என்றார்.
அவர்களிடம் அய்யா நீங்கள் இன்று பகற் பொழுது கழிந்துக் கதிரவன் போய் அடைந்து மீண்டும் வெள்ளிக்கிழமை அதிகாலை விடிவெள்ளி உதிக்கும் நேரம் அதாவது பிரம்ம முகூர்த்ததில் வாருங்கள் என்றார்.
மேலும் கோலம் உங்களை நான் புரிந்துகொள்வேன் குடிலதுக்கு போய் அமுது குடித்து வாரும் என விடை அருளினார். இங்கு கோலமணம் என்பது ஆத்ம விவாகம் அல்லது ஜீவபிரம்ம ஐக்கியம். குடிலதுக்கு போய் அமுது குடித்து வாரும் என்பதில் குடில் என்பது சகஸ்ராரத்தையும் அமுது என்பது ஞானப்பால் ஆகிய கொண்டை அமுதையும் குறிக்கும்.
இதனால் அம்மைமாரிடம் அய்யா நீங்கள் இரவுபகலற்ற அனுபூதி நிலையடைந்து உங்கள் ஆன்மாவை ஒளிபெறச் செய்து வாருங்கள் என்றார். அதன் பிறகு என்ன ஆயிற்று என்பதை அடுத்த இதழில் பார்க்கலாம்…
தொடரும்….
அய்யா உண்டு
அய்யா சொன்ன முன் அறிவிப்புகள் எவை?
– S. அன்ன செல்வம் அம்மா 9443622222
சென்ற மாத தொடர்ச்சி….
அய்யா வைகுண்டர் தர்மயுகம் தோன்றுவற்கு முன் இவ்வுலகில் என்னென்ன சம்பவங்கள் நடக்கும் என்று கூறுகின்றார். அய்யா சீசருக்கு சொன்ன சிவகாண்ட அதிகார பத்திரத்தில் முக்கியமாக பத்து அடையாளங்களை கூறியுள்ளார். அதில் நான்காவது அடையாளமாக பெருஞ்சுரத்தால் அழிவு என்று சொல்லப்பட்டுள்ளது. அதன் விவரம் பற்றி தெரிந்து கொள்வோம்.
பெரும் சுரத்தால் அழிவு: சுரம் என்றால் காய்ச்சல் பெரும் சுரம் என்றால் மருந்து மாத்திரைகளுக்கு அடங்காமல் உயிர் ஆபத்துக்களை விளைவிக்கும் அளவிற்கு ஏற்படும் மிகப்பெரிய நோய்களாகும். உடலின் சீரான வெப்ப நிலையை தாண்டி உஷ்ணம் அதிகரிக்கும். உடலுக்கும் உயிருக்கும் ஆபத்து என்பதை முன் அறிவிக்கும் செயலே பெருஞ்சுரம் ஆகும். காய்ச்சல் விடவே இல்லை என்பார்கள். மாத்திரை சாப்பிட்டாலும் சிறிது நேரம் தான். விடாப்பிடியாக காய்ச்சல் விட்டு விட்டு வந்தாலே அது அபாயம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
நோய்கள் இரண்டு வகைப்படும் பிறவிப் பிணி நோய் மற்றும் உடல் சார்ந்த நோய்
பிறவிப் பிணி நோய்: இது அவரவர் முன்ஜென்மத்தில் செய்த கர்மாக்களின் அடிப்படையில் இறைவன் கொடுக்கும் தண்டனையாக அமைகிறது. நாம் செய்த நன்மை தீமைகளுக்கு ஏற்ப புண்ணியமும் பாவமும் தொலைகிறது. நாம் நம் கண் முன்னால் பலரைப் பார்க்கின்றோம் மிகவும் நல்லவராக இருக்கின்றார்கள், மிகப்பெரிய நோயால் கஷ்டப்படுகிறார்கள், சிலர் நம்முடைய பார்வையில் அயோக்கியர்களாக இருப்பார்கள் ஆனால் சந்தோசமாக வாழ்வார்கள் இப்படி நல்லவர்கள் துன்பப்படுவதும் தீயவர்கள் இன்பமாக வாழ்வது நம் கண்முன்னால் நடக்கிறது. காரணம் நாம் செய்யும் நல்லது கெட்டதுக்கான பலன்கள் நம்மை வந்து சேரும் என்பதாகும். எனவே நாம் பிறவிப் பிணியிலிருந்து விடுபட வேண்டும். அதற்கு அய்யா வைகுண்டர் சொன்ன உபதேசங்களை கையாளவேண்டும்.
“காய்ச்சல் வந்தால் உன்னை காணாது கற்பித்தேன் நான் மகனே பயந்து இருந்து நீ பணிவிடைகள் செய்வாயானால் உயர்ந்த குடியாவாய் மகனே” என்று அய்யா அருள் நூலில் கூறுகிறார். உன்னை பிடிப்பதற்குள் நீ என்னை பிடித்துக்கொள் என்று மாபெரும் ரகசியத்தை சொல்லித் தருகிறார். அவரே தஞ்சம் என்று சரணாகதி அடைவோமாக.
உடல் சார்ந்த நோய்: உடல் சார்ந்த நோய்கள் 4448 நோய்கள் உண்டு என்று சொல்லப்படுகிறது. அத்தனைக்கும் மூலமாக இருப்பது பெருஞ்சரமே. நாம் சமீபகாலமாக மருத்துவ துறையால் கட்டுப்படாத நோய்களை கண்டு கொண்டும் அனுபவித்துக் கொண்டும் இருக்கின்றோம். புத்தம் புது நோய்கள் புது புது விதமாக படையெடுத்து வந்து நம்மை தாக்குகின்றது. இந்த உலகமும் விஞ்ஞானமும் நடு நடுங்குகிறது. வாய்பொத்தி வாயில் முகமூடியைப் போட்டுக் கொண்டு முடங்கிக் கிடக்க காரணம் எத்தனையோ நோய்களை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். பன்றிக்காய்ச்சல், எய்ட்ஸ் நோய், சிக்குன்குனியா, டெங்கு காய்ச்சல், இறுதியாக கொரோனா வைரஸ் தொற்று நோய் கிருமிகள் நம்மை மிரட்டுகிறது.
எவ்வளவு சொந்த பந்தங்களை இழந்தோம் என்பது அனைவருக்கும் தெரியும். விஞ்ஞானம் நம்மை காப்பாற்றுமா அல்லது மெய்ஞானம் நம்மைக் காப்பாற்றுமா என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அய்யா நடுத்தீர்வை உலாவில்
“வஞ்சபெருங் காற்றால் வையகத்தில் சஞ்சல நோய்
தீ நரகக்காந்தல் செகத்தோர்க்கு தான் வயிற்றில்
மாநெருப்பாய் தங்கி வயிறு கழிந்து தீனமுடன்
மாழ்வார் சிலபேர்கள் மாறாமலே சிலநாள்”
அய்யா வைகுண்ட பரம்பொருள் இனி நடக்கப்போவதை முன்கூட்டியே சொல்லி நம்மை எச்சரிக்கை செய்கிறார்.
“சத்துள்ள முத்தப்பா அது உங்கள் சகல வினைதீர்க்கும் முத்து
பக்தியுள்ள முத்தப்பா அது உங்கள் பதியேறும் அந்த முத்து
கண்டவர் எடுத்திடுங்கோ உங்கள் காரண தெய்வம் அப்பா”
அன்பானவர்களே: பெருஞ்சரத்தால் அழிவு என்று அய்யா ஏன் சொன்னார். எதற்காக இப்படி நடக்கிறது என்பதை எல்லாம் ஒவ்வொருவரும் உணர்ந்து அய்யா சொன்ன உபதேச வழி நடப்போம்
…… மீண்டும் தொடரும்
அய்யா உண்டு
தர்மம் செய்வோம்
– ஹரி வெங்கடேஷ் அய்யா 8508518505
“தாழகிடப்பாரை தற்காப்பதே தர்மம்“
தர்மம் என்பது எந்தவிதமான பிரதிபலனும் இல்லாமல் செய்வது.
நமக்கு என்ன பலன் கிடைக்கும் என்ற எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வாழ்க்கையில் தாழ்வடைந்தவர்களை தற்காப்பதற்காக தன்நலமின்றி செய்யும் செயலே தர்மம் என்று அழைக்கப்படுகிறது.
தாழகிடப்பாரை தற்காப்பதே தர்மம் என்ற அய்யாவின் ஒருவாசகத்தை கடைபிடித்து வாழ்ந்தாலே பல்வேறு தீயகுணங்கள் நம்மை விட்டு நீங்கிவிடும்.
மனித இனத்தில் இருக்கும் மிகபெரிய பலவீனம் லோபம் என்ற உணர்வு. லோபம் என்றால் தன்னிடம் இருக்கும் பொருட்களை தான் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்ற குறுகிய எண்ணம். தன்னிடம் எல்லா செல்வமும் இருந்தாலும் கூட சிலர் யாருக்கேனும் ஏதாவது கொடுத்து இருந்தால் இக்கட்டான சூழ்நிலையிலும் கூட தான் கொடுத்ததற்கு சமமாகவோ அல்லது அதற்கு அதிகமாகவோ திரும்ப பெறாவிட்டால் அவர்கள் மனம் ஆறுவதில்லை. லோபம் என்ற தீயகுணம்தான் நம்மை இவ்வாறு எல்லாம் எண்ண வைக்கிறது. அது மட்டும் இன்றி சிந்தித்து பார்த்தால் லோபம் என்ற தீயகுணம் பொறாமை பயம் வெறுப்பு அகங்காரம் ஆணவம் கோபம் போன்றவற்றிற்கு முக்கிய காரணமாக அமைகிறது. ஆகவே தர்மம் செய்வதன் மூலம் லோபம் என்ற தீய பண்பை ஒழிக்க முடியும்.
ஏன் தர்மம் செய்வது கட்டாயம்? ஏனெனில் நாம் அனைவருமே இந்த உலகிற்கு ஏதேனும் ஒரு வகையில் கடன்பட்டுள்ளோம். பல சமயங்களில் நாம் பலரிடம் இருந்து பல்வேறு உதவிகளை பெற்று இருப்போம். ஆனால் அவர்களுக்கு நேரடியாக நாம் எந்தவிதத்திலும் உதவும் வாய்ப்பு கிட்டாமல் போய் இருக்கும். நாம் வைத்த மரத்தின் நிழலில் நாம் இளைப்பாறியதை விட அடுத்தவர்கள் வைத்த மரநிழலில் நாம் அதிக நேரம் தங்கி இருப்போம். பலரது சேவையை எந்த செலவுமின்றி இலவசமாக பெறும் வாய்ப்புகளை இவ்வுலகம் நமக்கு வழங்கி இருக்கும். அதற்கு கைமாறாக உலகத்துக்கு நாம் என்ன செய்து வருகிறோம்? நாம் ஒருவரிடம் இருந்து இலவசமாக ஒரு பலனை அடைந்திருக்கும் பொழுது மற்றவர்களுக்கு ஒரு பலனை இலவசமாக கொடுக்க வேண்டியது நமது கடமை. ஆகவே இந்த உலகிற்கு நாம் கடமை பட்டுள்ளோம் என்ற முறையில் பார்த்தாலும் தர்மம் செய்வது கட்டாயமாகிறது. பணம் மற்றும் பொருள்கள் கொடுத்து உதவுவது மட்டுமே தர்மம் அல்ல. பணம் பொருள் இல்லாதவர்கள் கூட அறிவு ஆற்றல் உழைப்பை கொடுத்தும் கூட இவைகள் இன்றி தாழ்வடைந்தவர்களை தற்காக்கலாம்.
அய்யாவின் தாழகிடப்பாரை தற்காப்பதே தர்மம் என்ற உபதேசம் மிகவும் அற்புதம் வாய்ந்தது. நமது சிந்தனை முழுவதும் தாழகிடப்பாரை தற்காப்பது என்பதாகவே இருந்தால் தாழ்வடைந்தவர்களை உயர்த்துவதே நமது லட்சியமாக அமையும். ஆகவே உயர்வு அடைந்தவர்களே கண்டு நமக்கு பொறாமை ஏற்படாது. காரணம் பிறரை உயர்வடையச் செய்வதே நமது லட்சியம். பிறரைக் கண்டு கோபம் ஏற்படாது காரணம் தயவுகாட்டும் குணமே நமது பண்பாக அமையும். இது போன்ற பல நற்பண்புகளை அடைய வைக்கும் தகுதி தாழகிடப்பாரை தற்காப்பதே தர்மம் என்ற வாசகத்தில் உள்ளது. ஆகவே தாழகிடப்பாரை தற்காப்போம் தர்மம் செய்து உயர்வடைவோம்
அய்யா உண்டு
இறை நாமத்தின் மகிமை
– அ. ஐவி அம்மா, திருவண்ணாமலை, 9444741707
“மனிதன் எதை எதையோ கண்டுபிடித்து விட்டான்
அவன் கண்டுபிடிக்காதது “அவனை” மட்டும் தான்
அவன் ஆத்மாவை மட்டும் தான்
அவன் அற்புதத்தை மட்டும் தான்
அவன் ஆற்றலை மட்டும் தான்”
என்பர் சான்றோர்.
ஒரு மனிதன் தன்னை உணர்ந்து கொள்ள உதவக்கூடியது இறைநாமம். அதுமட்டுமின்றி மனிதனை மகானாக மாற்றக்கூடிய சக்தி இறை நாமத்திற்கு மட்டுமே உண்டு. இறை நாமத்தின் மகத்துவம் அறிந்து ஸ்ரீ ராமானுஜர் தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்னும் உயர்ந்த எண்ணம் கொண்டு திருக்கோட்டியூர் கோபுரத்தின் மேல் எறி நின்று “ஓம் நாராயணாய நமக” என்னும் மந்திரத்தை மக்களுக்கு உபதேசித்தார்.
திருமங்கை ஆழ்வார் இறை நாமத்தை உச்சரிப்பதால் பெரும் பயன்களை
“குலம் தரும் செல்வம் தந்திடும்
அடியார் படுதுயர் ஆயின எல்லாம்
நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும்
அருளோடு பெருநிலம் அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும்
பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமம்
என்ற பாடல் வழி உலகுக்கு எடுத்து வைத்தார். ஆகவே ஈடு இணையற்ற நன்மைகளை தரவல்லது இறைநாமம் என்பதை நாம் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
கற்றோரால் மட்டுமே கூறக்கூடிய இறை நாமங்கள் இருக்க மக்களை வழிப்படுத்த வந்த எம்பெருமான் அய்யா வைகுண்டர் பரம்பொருள், பாமரனும் வாயார பாட “அய்யா சிவசிவ சிவசிவ அரகரா அரகரா” என்னும் திருநாமத்தை நமக்கு அளித்துள்ளார்.
மனதை பக்குவப்படுத்த தீய சிந்தனைகளில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள கலியுகத்தில் நம்மை வழிநடத்த அய்யாவின் நாமமே நமக்குத் துணையாகும். அய்யாவின் திருநாமத்தை கூறக் கூற மன மாசுகளை அஞ்ஞானம் விலகி மெய்ஞானம் மேம்படும். நம்மை சுற்றி நடக்கும் எந்தவித தீமைகளும் நம்மை அண்டாது பாதுகாக்கும். அய்யாவின் திருமந்திரம் நம்மை பக்குவப்படுத்தி தர்மத்திற்கு அழைத்துச் செல்லும். எந்நாளும் என்நேரமும் “அய்யா சிவசிவ சிவசிவ அரகரா அரகரா என்ற திருநாமத்தை கூறுவோம் இறையருள் பெறுவோம்.
அகிலவழி அய்யாவழி
– ரா. கோபாலகிருஷ்ணன் அய்யா 7200031169
நாராயணரின் கலியுக அவதாரமான வைகுண்டரை அறிந்து உணர்ந்து போற்றி வாழும் அய்யா வழி மக்களின் ஆகமம் அகிலத்திரட்டு அம்மானை. இதை எழுதியவர். அய்யா நாராயணர் சான்றோர்களுக்கு நேரடியாக சொல்வது போன்று அம்மானை பாடல் வரிகளாக அகிலத்திரட்டு அய்யா வைகுண்டரின் 5 சீடர்களுள் ஒருவரான அரிகோபாலனால் எழுதப்பட்டது.
கொல்லம் ஆண்டு 1016 கார்த்திகை மாதம் 27ம் நாள் வெள்ளிக்கிழமை அன்று இரவில் அரிகோபாலன் கனவில் தோன்றிய அய்யா நாராயணர் ‘ஏர்’ என்ற முதற்சீரை எடுத்துக் கொடுத்தார். அரிகோபாலன் தம்முள் இறைவன் உறைந்திருப்பதை உணர்ந்த அந்நேரம் மகாவிஷ்ணு, மகாலட்சுமியிடம் உலக வரலாற்றை கூறுவதைப் போன்ற ஒரு தெய்வீக உரையாடல் அவரது காதுகளில் இனிமையாய் ஒலித்தது. அவர் கேட்டவை அனைத்தையும் அப்படியே அம்மானை ராகத்தில் பனை ஓலைகளில் எழுத ஆரம்பித்தார். இறைவன் இறைவிக்குச் சொன்ன செய்தி ஆகையால், அந்த ஆகமத்திற்கு ‘அகிலத்திரட்டு அம்மானை’ என்று நாராயணர் அருளால் பெயர் சூட்டினார்.
அகிலத்திரட்டை எழுத சீடர் அரிகோபாலனை, வெறும் கருவியாக அய்யா பயன்படுத்திக் கொண்டார். முக்காலப் பெட்டகமாக விளங்கும் அகிலத்திரட்டு அம்மானையை சாமித்தோப்பு அருகே உள்ள தாமரைக்குளம் பதியில் வைத்து அரிகோபாலன் எழுதி முடித்ததார்
“தரும யுகமாக்கி தரணியை ஆளுதற்கு கர்மக் கலியில் கடவுளர் வந்த கதை” என்று அகிலத்திரட்டு பற்றி அந்த நூலிலேயே அய்யா குறிப்பிடுகிறார்,
அகிலத்திரட்டு அம்மானை இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. உலகம் தோன்றியது முதல் வைகுண்ட அவதாரத்திற்கு முன்பு வரையிலான சம்பவங்கள் முதல் பகுதியாகவும், வைகுண்டர் அவதாரம் முதல் தர்மயுகம் வரை உள்ள நிகழ்வுகள் இரண்டாவது பகுதியாகவும் அமைக்கப்பட்டுள்ளன.
உலகத்தின் தோற்றம் உயிர்களின் படைப்பு, குறோணி என்னும் அசுரன் படைக்கப்பட்ட வரலாறு, தருமத்தை நிலைநாட்ட நீடிய யுகம், சதுர யுகம், கிரேதா யுகம், திரேதா யுகம், துவாபர யுகம் ஆகிய 5 யுகங்களில் நடந்த சம்பவங்கள், மகாவிஷ்ணுவின் திருவிளையாடல்கள், சான்றோர்கள் பிறவி செய்யப்படுதல், சான்றோர் பெருமைகள், கலியுக தோற்றம், கலியனின் கொடுமைகள், ஶ்ரீபத்மநாபராக இறைவன் திருவனந்த புரத்தை ஆண்ட கலியரசனுக்கு அறிவுரை வழங்குதல் , நாராயணர் வைகுண்டராக பூமியில் அவதாரம் எடுத்தல், கலிநீச மன்னன் வைகுண்டரை ஆண்டியென்றும்பாராது கொடுமைகள் செய்து சிறையில் அடைத்தல் , கலிநீசனை வென்று தர்மத்தை நிலைநாட்டுதல்,இகனைத் திருமணங்கள் மூலம் ஏகம் ஒருபரம் என உலகிற்கு உணர்த்தல், அய்யா வைகுண்டர் வைகுண்டம் ஏகல்… என்று விரிகிறது அகிலத்திரட்டு அம்மானை.
கொல்லம் ஆண்டு 1026 வைகாசி மாதம் அய்யா வைகுண்டம் சென்ற பிறகுதான் அகிலத்திரட்டு எழுதப்பட்ட ஏடு கட்டவிழ்க்கப்பட்டு, அதில் அய்யா கூறிய வழிமுறைகள் அன்பர்களால் பின்பற்றப்பட்டன.
ஆன்மிக மார்க்கத்தில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்திய வள்ளலாருக்கு முன்பாகவே, கன்னியாக குமரி பகவதி தவமிருக்கும் நாஞ்சில்வளநாட்டில் பாமர மக்களுக்கும் ஆன்மிகவழி காட்டினார். அய்யா வைகுண்டர். வைகுண்டர் உருவாக்கிய கோவில்களில் (தாங்கல்கள்) சிலைகள் இல்லை. உருவ வழிபாடும் இல்லை. தீப ஆராதனைகள், சூடம், சாம்பிராணி, ஊதுபத்தி போன்றவைகளும் கிடையாது. தேங்காய் உடைக்ககூடாது.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் கொண்டு வரும் வெற்றிலை, பாக்கு, மல்லிகைப்பூ, துளசி, பிச்சிப்பூ, பன்னீர், முழு எலுமிச்சம்பழம் ஆகியன எல்லாப் பக்தர்களுக்கும் ஆண்டிகள் ஆண்டிச்சிகளுக்கும் பிரசாதமாக பகிர்ந்தளிக்கப்படுகிறது. ‘காணிக்கை கூடாது’ என்று அகிலத்திரட்டில் சொல்லி இருப்பதால், தாங்கல்களிலும் பதிகளிலும் உண்டியல்கள் கிடையாது.
இல்லறமே தவம் என்று விளக்கி, ஆன்மிகம் குடும்ப வாழ்க்கையின் ஒரு அங்கம் என்பதை அய்யா அகிலத்திரட்டில் குறிப்பிடுகிறார். வெறும் சம்பிரதாயங்களாக விளங்கிய அன்றைய வழிபாட்டு முறைகளை கண்டித்ததோடு, இறைவனுக்கு உயிர்ப்பலி கொடுக்கும் இரக்கமில்லாத கொடிய பழக்கத்தையும் வெறுத்து ஒதுக்கினார். தருமம் பற்றி அகிலத்திரட்டு அம்மானைஅதிகமாக வலியுறுத்துவதால், பதிகளுக்கும் தாங்கல்களுக்கு வரும் அன்பர்கள் தங்களால் முடிந்ததை மனமுவந்து தானதர்மமாக வழங்குகிறார்கள்.
அன்பர்கள் எந்தவொரு செயலைச் செய்தாலும், சந்திப்புகளின் போதும் “அய்யா உண்டு” என்று சொல்லும் வழக்கம் இறைவன் மீது அவர்கள் கொண்டுள்ள பற்றுதலையும் பகதியையும் நம்பிக்கையையும் தைரியத்தையும் காட்டுகிறது
அய்யா… நாங்கள்… அறிந்து அறியாமல் செய்ததெல்லாம்… அய்யா பொறுக்கணும்…’ என்று அன்பர்கள் வழிபடுவது, சமூகத்தின் குற்றங்களும் பிழைகளும் தவறுகளும் பாவங்களும் தனிமனிதனின் மனமாற்றத்தால் மட்டுமே ஓழியும் என்பதை அய்யாவழி ஆணித்தரமாக நம்புகிறது என்பதில் ஆச்சரியமில்லை.
“தேசம் மயம் ஏகம் சிருஷ்டித்த மகாபர இந்திர நாராயணர் அய்யா நிச்சயித்தபடியல்லாது மனுஷன் நிச்சயித்தபடியில்லை” என்று உகப்படிப்பில் ஓதும் ஒவ்வொரு உள்ளமும் அகந்தை ஆணவம் செறுக்கு தலைக்கனம் ஒழித்து பணிந்திருந்து பணிவிடைகள் செய்தால் நாராயணர் அருளால் மாசுஅகலியை வென்று தர்மயுக வாழ்வு பெறுவது திண்ணம்.
சர்வமும் வைகுண்ட மயம்.
அகில விடை
- தலை நிமிர்ந்து மிகுந்த ஆணவத்தோடு செல்லுதல்
- ஐம்புலன்களையும் அடக்கி கடும் தவம் புரிதல்
- மந்திரபுரக்கணை (அம்பு)
- மலர்களை போன்று மென்மையானவன், அதாவது கருணையானவன்.மலர் பாதங்களை கொண்ட இறைவனை நாடுகின்றவர்களுக்கு நன்மை பயக்கின்றவன். அதனால் தான் அனைத்து ஜீவாத்மாக்களும் அவரின் மலர் பாதங்களை நாடுகின்றன. அங்கையே முத்தி பெற்று இளைப்பாறுகின்றன,
- செம்மையாக, சிறப்பாக, நன்மை பயிக்கும் விதமாக, பரிபக்குவம் அடைந்த
அய்யா உண்டு