தர்மயுக முரசு மே 2023

அய்யாவின் அருளால் எந்நாளும்நன்னாளே

-அசோக்குமார் அய்யா – 009607704901, 8012174032.

“ஒன்றுக்கு மலைய வேண்டாம் உகபர நாதனாணை
என்றுக்கு மலையின் மீதில் ஏற்றிய தீபம் போலே
கன்றுக்குப் பாலு போலும் கண்ணுக்குப் புருவம் போலும்
என்றுக்கு மக்கா வுங்களிடமிருந் தரசு ஆள்வேன்”

எந்த விதமான இடையூறுகள் வந்தாலும், வேதனைகள் வந்தாலும் அதையெல்லாம் அய்யாவின் துணை கொண்டு எதிர்நீச்சல் போட்டு ஆன்மிக தொண்டாற்றும் அடியாளர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம்

அய்யாவின் தொண்டர்களே: ஆன்மிக பயணமே வாழ்வியல் நெறிமுறை. அப்பயணத்தில் கொள்கை கோட்பாடே நம் நாடி துடிப்பாக இருக்க வேண்டும். யாருக்காகவும், எதர்காகவும் கொள்கை கோட்பாட்டில் சமரசம் செய்து விடக் கூடாது. அய்யா வகுத்து தந்த கொள்கை கோட்பாட்டில் உறுதியாக இருந்தால் மட்டுமே பிறவி பெருங்கடலைக் கடந்து நமது இலக்கை அடைந்து பிறவா நிலை பெற்று தர்மயுக வாழ்வு பெற முடியும்.

இன்றைய கால கட்டத்தில் பெரும்பாலானோர் கொள்கை கோட்பாடுகளை மறந்து நிரந்தரமற்ற சுகபோகத்தில் ஒன்றி தவறாக வழிநடந்து தவறான வழிகாட்டிகளாகத் திகழ்வது வேதனையிலும் வேதனை. இந்த தவறான செயலுக்குக் காரணம் புகழ்ச்சிக்கு அடிமை ஆவது ஆகும்.

கொள்கை கோட்பாட்டில் உறுதியும், செயல்பாட்டில் வேகமும் இருக்க வேண்டுமென்றால் பெயர் புகழுக்கு அடிமை ஆகாமலும், அறியாமை பொறாமை போன்ற கெட்ட எண்ணங்களில் சிக்கி விடாமல் இருக்க வேண்டும்.

அறியாமை இல்லை என்றால் கொள்கை கோட்பாட்டில் உறுதியாக இருக்க முடியும். அறியாமையை அகற்றுவது எப்படியென்றால் ஆன்மிக ஞானம் இருக்க வேண்டும். ஆன்மிக ஞானம் இருக்க வேண்டுமென்றால் ஆகம அறிவு இருக்க வேண்டும். ஆகம அறிவு பெருக வேண்டுமென்றால் ஆகமத்தைத் தினந்தோறும் படிக்க வேண்டுமென்ற நாட்டம் இருக்க வேண்டும். ஆகம நாட்டம் பெருக வேண்டுமென்றால் இறை தேடல் இருக்க வேண்டும். இறை தேடல் திழைக்க வேண்டுமென்றால் முச்சந்தி வழிபாடுகளைச் சிறப்பாக செய்ய வேண்டும். இப்படி ஒவ்வொன்றையும் நாம் சிறப்பாக செய்தால் அறியாமை இருள் அகன்று ஆன்மிக ஞானம் பெருகி உலகத்தின் ஒளிச்சுடராக விளங்க முடியும்.

பொறாமை என்கிற மன அழுக்கு இருக்கும் வரை உலகத்தின் முன்னோடிகளாக விளங்க முடியாது. இந்த பொறாமை என்னும் கலித் தீயை அணைக்க வேண்டுமென்றால் பிறருடைய நல்ல செயல்பாட்டை ஊக்கப் படுத்துவதும், அச்செயல்பாட்டில் மனமகிழ்வதும், அச்செயலை நாமே செய்தது போல் எண்ணிக் கொள்கின்ற நல்ல குணத்தை வளர்த்து கொண்டால் மட்டுமே பொறாமை என்கிற மன அழுக்கை துடைக்க முடியும். இப்படி பொறாமை என்கிற கெட்ட எண்ணத்தை களைந்தால் மட்டுமே நமக்கும் நல்ல செயல் புரிகின்ற பாக்கியம் கிடைப்பது மட்டுமல்லாமல் உலகத்தின் முன்னோடிகளாகத் திகழ முடியும்.

மேலும் எச்செயல் புரிந்தாலும் அச்செயலில் பற்று வைக்காமல். அச்செயலால் விளைந்தவை என்னால் விளைந்தது என்று எண்ணிக் கொள்ளாமல் எல்லாம் வைகுண்டத்தின் செயல் என்கிற உண்மையை உணர்ந்தால் நமது செயல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளரும்.

மேலும் நமது செயலால் ஒன்றும் விளையவில்லை என்றால் அதை அய்யா நிச்சயிக்க வில்லை என்ற உண்மையை எண்ணி அடுத்த செயலை நோக்கி நகர வேண்டும். இப்படி நமது செயலைத் தொடர்ந்து கொண்டு போகும் போது பலரால் பல தடங்கல்கள் வரலாம். அப்படி இடையூறுகள் வரும்போது மேற்சொன்ன கெட்ட எண்ணங்கள் இல்லாமல் இருந்தாலும், செயலில் பற்று வைக்காமல் இருந்தால் எளிதாக தடைக்கற்களை உடைத்தெறிந்து வீர சான்றோராக வெற்றி நடை போட முடியும்.

அன்பு சொந்தங்களே: கெட்ட எண்ணங்களை அகற்றி, செயலில் பற்று வைக்காமல், பொறாமை, அறியாமை போன்ற தீயசக்திகளை வேரறுத்து, கொள்கை கோட்பாட்டில் உறுதியாக இருந்து சமத்துவ சமதர்மத்தோடு செயல் பட்டு, தர்மத்திற்காக போராடி ஆண்டவனின் அருளைப் பெற்று தர்மயுக வாழ்வு பெறுவோம்

“செல்லுங்கப்பா அன்பருக்கு துணையாக இருந்திடுங்கோ”

அய்யா உண்டு

அகில கேள்வி

1. மூரன் என்பது யாரை குறிக்கும்?

2. மாமறலி மூவர் யார்?

3. நெட்டை (நிஷ்டை) என்பதின் பொருள்?

5. தினகரராய் பிறந்த முனிவர் யார்?

5. இராவணன் பெற்ற மூன்றரை கோடி வரத்தை நாராயணர் எத்தனை கோடி வரமாக ஆக்கினார்?

விடை ……… பக்கம் பார்க்கவும்

அகிலதிரட்டு அம்மானை மூலமும், உரையும்

-க. ரீகன் அய்யா- 0096893145654 டே. பிரபின்குமார் அய்யா

“சூரனவன் செய்த துட்டம் பொறுக்காமல்
வீரமுள்ள தேவர் விரைந்தே முறையமிட
தேவர் முறையஞ் சிவனார் மிகக்கேட்டு
காவலாய் நித்தங் கைக்குள் ளிருக்குகின்ற
பெண்ணமுதைப் பார்த்துப் புகல்வாரங் கீசுரரும்”

தில்லை மல்லாலன் மல்லோசி வாகனன் என்ற இரு அசுரர்களும் தாங்கள் சிவபெருமானிடமிருந்து பெற்ற வரங்களைக் கொண்டு முறையாக ஆட்சி புரியாமல் தாங்கள்தான் எல்லாவற்றையும் விட பெரியவர்கள் என்று எண்ணிக் கொடுமைகளைப் புரிய தொடங்கினார்கள். தேவர்களுக்கு இவர்கள் செய்கின்ற கொடுமையைப் பொறுக்க முடியாமல் சிவபெருமானுக்குத் தேவர்கள் முறையமிட்டார்கள். எப்போதெல்லாம் தேவர்கள் அபயம் எழுப்புகின்றார்களோ அப்போதெல்லாம் இறைவன் தேவர்களின் துன்பத்தைத் துடைக்க கருணை புரிவார். அப்படித்தான் தேவர்களுடைய அபயக் குரலை கேட்ட சிவபெருமான் இப்போது இந்த அசுரர்களிடமிருந்து தேவர்களைக் காக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டார். ஆனால் சூரர்களுக்கு அதிகமான வரங்களைக் கொடுத்து விட்டோமே எப்படி இந்த அசுரர்களை அழிப்பது என்று ஆலோசனையாகி அருகில் இருக்கக்கூடிய அம்மை உமையவளிடம் சூரர்களை வதைக்க ஆலோசித்தார்.
“கண்ணே மணியே கருத்தினுள் ளானவளே
பூலோகந் தன்னிலுள்ள புருடரா யுதத்தாலும்
மேலோகம் வாழும் விமலரா யுதத்தாலும்
மலைமேலே வாழும் மாமுனிவர் தன்னாலும்
அலையா வரம் அச்சூரனுக்கே கொடுத்தோம்”
சிவபெருமான் அம்மை உமையவளிடம் இந்த சூரர்களுக்குப் பூவுலகில் உண்டு பண்ணப்பட்ட ஆயுதங்களால் அழிவு என்பது வரக்கூடாது என்ற வரத்தினைக் கொடுத்தோம். அதுபோலே மேலோகம் என்று சொல்லக்கூடிய தேவலோகத்தில் உள்ள தேவர்களிடம் இருக்கக்கூடிய ஆயுதத்தாலும் அழிவு வரக்கூடாதபடி வரத்தினைக் கொடுத்தோம். மேலும் மலையின் மீது தவம் மேற்கொண்டு அதன் மூலம் தவ வலிமை அடைந்த முனிவர்களின் பராக்கிரம சக்தியால் கூட அழிவு வரக்கூடாது என்று இந்த சூரர்கள் கேட்டபடி அவர்களுக்கு வரங்களைக் கொடுத்து விட்டோம். இப்போது இவர்களை அழிப்பதற்கான வழி என்ன என்று சிவபெருமான் அருகில் இருக்கக்கூடிய அம்மை உமையவளைப் பார்த்துக் கேட்டார்.
“என்றீசர் சொல்ல இயல்கன்னி ஏதுரைப்பாள்
மலைலோகம் மேலோகம் வையமதி லாகாட்டால்
அலைமேல் துயிலுமொரு ஆண்டி உண்டு கண்டீரே”
இப்படி ஈசுரனார் அம்மை உமையவளிடம் சூரர்களை அழிப்பதற்கான ஆலோசனையைக் கேட்டு நிற்க, அம்மை உமையவள் சிவபெருமானிடம், தாங்கள் கூறியது போல இந்த சூரர்களை அழிப்பதற்குப் பூலோக ஆயுதத்தாலோ மேலோக ஆயுதத்தாலோ அல்லது முனிவர்களுடைய தவ வலிமையோ போதாது ஆனால் இவர்களை அழிப்பதற்கான வழி உண்டு. அது பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கக் கூடிய என் அண்ணர் நாராயணர் நினைத்தால் இவர்களை அழிப்பதற்கான வழி உண்டு என்று அம்மை சூரர்களை அழிப்பதற்கான வழியை மேலும் கூறுகின்றார்

“முன்னேயச் சூரனுக்கு முற்சாபமிட்டதொரு
வன்னச் சுருதிமுனி மந்திர புரக்கணையாய்
வளர்ந்தங்கிருப்பான் காண்மாயருட பக்கலிலே
கிளர்ந்த மொழிகேட்டுக் கிருபைகூர்ந்தே ஈசர்
மாலை வரவழைத்து வளப்பமெல் லாமுரைக்க”

முன்பு ஆதி கைலையிலே சுருதிமுனி என்ற முனிவர் திருமாலை நினைத்து தவம் இருக்கின்ற போது இந்த இரு அசுரர்களும் நியாயம் இல்லாமல் சுருதிமுனியை எடுத்துக் கடலிலே போட்டார்கள். அப்போது சுருதி முனி, தன் தவத்தை அழித்து தன்னைக் கடலில் எடுத்துப் போட்ட இரு அசுரர்களுக்கும் தான் ஒரு மந்திரப் புரக்கணையாக திருமால் இடத்திலே சேர்ந்து வளர்ந்திருப்பேன். தக்க சமயம் வரும்போது உங்களை அந்தக் கணை மூலமாக நான் வதைப்பேன் என்று சாபமிட்ட நிகழ்வை அம்மை உமையவள் சிவபெருமானுக்கு நினைவு படுத்த, இதுதான் தக்க தருணம் என்று சிவபெருமான் உடனே திருமாலை வரவழைத்துத் தேவர்களுடைய துயரத்தைப் போக்கும் விதமாக இந்த தில்லை மல்லாலன், மல்லோசிவாகனன் என்ற இரு அசுரர்களையும் அழிக்க வேண்டும் என்று கூறினார்.
“சாலப் பொருளும் சம்மதித்தாங் காரமுடன்
அலையில் வளர்ந்த அதிகக் கணையெடுத்து
சிலையேற்றி யம்பைச் சிரித்து மிகத் தொடுக்க
அம்புப் பகையாலும் அதிகமால் பகையாலும்
பம்பழித்துச் சூரனூர் பற்பம் போல் தானாக்கி”
இப்படி சிவபெருமான் இரு அசுரர்களையும் அழிக்க திருமாலை வேண்டி நிற்க, திருமாலும் சிவபெருமானின் வேண்டுகோளை ஏற்று அதிக கோபத்துடன் முன்பு சுருதிமுனி மந்திரபுரக்கணையாக வளர்ந்திருந்த கணையை எடுத்து அதை வில்லிலே தொடுத்து சூரர்களை நோக்கி எய்தார். இப்போது அம்பு பகையாலும் அதிகமால் பகையாலும் என்று அய்யா குறிப்பிடுகின்றார். அதாவது அம்பு பகை என்பது சுருதிமுனியின் தவத்தை அழித்து கடலிலே போட்டதால் சுருதிமுனி கொடுத்த சாபத்தின்படி நான் பகையாக இருந்து உங்களை அழிப்பேன் என்று சொன்ன அந்தப் பகையாலும், அதுபோல அதிகமால் பகையாலும் என்று சொல்லும்போது குறோணியை ஆறு துண்டுகளாக வெட்டி அழிக்க சிவபெருமானிடம் வரத்தைக் கேட்டு நிற்கும்போது சிவபெருமான் திருமாலிடம் குறோணியை ஆறு துண்டுகளாக வெட்டி அழித்தாலும் அவனுடைய ஒவ்வொரு துண்டும் உனக்கு எதிரியாக வந்து பிறப்பார்கள். அவர்களையும் நீர்தான் அழிக்க வேண்டும் என்று சொன்ன சிவபெருமானின் மொழிப்படி திருமாலினுடைய ஆதிப்பகையாலும் சூரர்களுடைய கோட்டை கொத்தளங்ளையும் அழித்து சூரர்களை அழிக்க மந்திரபுரக்கணை முற்பட்டது.
“சூர ரிருவருட சிரசை மிக அறுத்து
வாரிதனில் விட்டெறிந்து வைகுண்டங் கேட்டிடவே
பலமான குண்டப் பதவிமிகக் கொடுத்தார்
அவ்வுகத்தை மாயன் அன்றழித்து ஈசரிடம்
செவ்வாக னின்று செப்பினா ரீசருடன்”
இப்போது திருமால் தொடுத்த மந்திரபுரக்கணை தில்லை மல்லாலன் மல்லோசி வாகனன் என்ற இரு அசுரர்களின் சிரசை அறுத்து அதைக் கடலிலே எறிந்து விட்டு தனக்கு வைகுண்ட பதவி வேண்டும் என்று அய்யாவை பணிந்து நின்றது. நாராயணரும் இந்த மந்திரபுரக்கணை முன்பு சுருதிமுனியாக இருந்து ஆதிக் கைலையிலே தவமாக இருந்தது. மேலும் தற்போது இந்த சூரர்களைக் கொல்லும் கருவியாக இருந்தது என்று எண்ணி மந்திரபுரக்கணையாக இருந்த சுருதிமுனிக்கு வைகுண்ட பதவியைக் கொடுத்தார். இப்போது அய்யா நெடு யுகத்தை அழித்துவிட்டு சிவபெருமானிடம் இனி அடுத்துச் செய்யக்கூடிய முறைமைகளைக் கூடி ஆலோசித்தார்.
“இன்னமொரு யுகத்தை இப்போ படைக்கவென்று
மன்னதியத் திருமால் மனமே மிகமகிழ்ந்து
சொன்னவுட னீசுரரும் தொன்னூல் மறைதேர்ந்து
முன்னே குறோணி முடிந்த துண்டமாறதிலே
ஓரிரண்டு துண்டம் யுகமாய்ப் பிறந்தழிந்து
ஈரிரண்டு துண்டம் மிருக்குதுகாண் மாயவரே”
நாராயணர் சிவபெருமானிடம் நெடுயுகம் அழிந்து விட்டதால் இனி அடுத்த யுகத்தைப் படைக்க வேண்டும் என்று கூறினார். அப்போது சிவபெருமான் ஆகமத்தின் படி குறோணியினுடைய இரண்டு துண்டு பிறந்து அழிந்துவிட்டது. இனி குறோணியின் ஆறு துண்டுகளில் நான்கு துண்டுகள் மீதம் உள்ளன. அதிலிருந்து ஒரு துண்டினை எடுத்து அடுத்த யுகத்தில் படைக்கலாம் என்று ஆலோசித்திருந்தார்கள்.
(தொடரும்)

அய்யா உண்டு

தர்மயுக முரசு வாசகர்களே:

அய்யாவின் பேரருளால்….

நமது அகில உலக அய்யாவழி சேவை அமைப்பின் “முப்பெரும் விழா” (அறப்பாடசாலையின் 4 – ம் ஆண்டு பரிசளிப்பு விழா, அமைப்பின் 8 ஆம் ஆண்டு விழா, தர்மயுக முரசின் 4 ஆம் ஆண்டு விழா) மே மாதம் 20 ஆம் தேதி சிறப்பாக நடந்தது என்பதை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்.

சிவகாண்ட அதிகார பத்திரம்

– மாடசாமி அய்யா 8973349046

சூத்திரம்:
“கும்பகோணப்‌ பாதையாக குறிகள் சொல்லி வந்தேனப்பா”

அருஞ்சொற் பொருள்:
1.கும்பகோணம்- ஆக்ஞை (கும்பம்- நெற்றி, கோணம்- குருகியதெரு , ஆக கும்பகோணம் என்பது ஆக்ஞையைக் குறிக்கும்)
2.கும்பம்- மாசி மாதம்
3.கும்பம்- கும்பக் கலசம்
4. கோணம்- தெரு

பொருள்-1: கும்பம் என்ற‌ சொல் பல பொருளைத்‌ தரும். கும்பம் என்பதற்கு நெற்றி, மாசிமாதம், கும்பக் கலையபம் என்பது அகராதிப் பொருள். கோணம் என்பதற்குத் தெரு என்பது பொருள். கும்பம் என்பதை நெற்றியென எடுத்துப் பொருள் கொள்ளும் போது நெற்றியில் அமைந்த தெரு ஆக்ஞை சக்கரம் ஆகும். இந்த ஆக்ஞை என்னும் இடத்தில் உயிர் சக்தியை வைத்துக் கொண்டே ஞானிகள் இறைதரிசனம் பெற்று முற்றும் உணர்ந்தவர்களாய் ஞானத்தை (குறிகளை) உபதேசிக்கின்றனர். அந்த பேசாத ஞானமானது ஆக்ஞையில் அவர்களுக்கு சதாசிவத்தால்‌ தோற்றப்படுவது. எனவே அய்யா “கும்பகோணப் பாதையாக குறிகள் சொல்லி வந்தேனப்பா” என்கிறார்.

பொருள்-2: கும்பம் என்பது மாசிமாதத்தைக் குறிக்கும். கோணம் என்பது தெருவைக் குறிக்கும். அய்யா வைகுண்டர் மாசிமாதம் மகர வயிற்றில் அகரத்தெருவில் அவதாரமாகி நாடழிய போறதுவும் நன்னாடு தோன்றும் செய்தியையும், ஒப்பற்ற‌ ஞானத்தையும் குறிகளாகச் சொல்லி வந்ததைக் குறிக்கும்.

சூத்திரம்:
“விள்ளூர் தனிலிருந்து விரைந்துவந்தேன் வையகத்தில்”

அருஞ்சொற் பொருள்:
1.விள்ளூர்- சகஸ்ரம், பிரம்ம லோகம்.
2. வையம்- உலகம், உடல்

பொருள் 1: விள்ளுதல் என்றால் மலர்தல் என்பது பொருள். விள்ளூர் என்பது 1000இதழ் கொண்ட தாமரை மலர் மலர்ந்து இருக்கும் ஊரான சகஸ்ரத்தைக் குறிக்கும். இந்தப் புண்ணிய பூமியான சகஸ்ரத்தில் இருக்கும் நான் உங்களுக்காக, விரைவாக உங்கள் உள்ளத்துள்ளும் ( பகவான் உள்ளத்துள் வருவதற்கு 1000 கோடி சென்ம புண்ணியம் வேண்டும் ஆனால் பகவான் நம் மீது கொண்ட இரக்கத்தினால் அவதாரம் ஆகிவந்து நம் உள்ளத்துள் நிறைந்தார்) இந்த உலகத்துள்ளும் வந்தேன்.

பொருள் 2: பிரம்ம லோகத்தில் பிரம்மதேவரின் மூக்கில் தோன்றிய ஆதி வராக மூர்த்தி விரைந்து நம்மைக் காக்க புவியில் வந்துள்ளார்‌.

சூத்திரம்:
“ஏகன் போகனப்பா நான் இருப்பதை அறிவாரில்லை”

அருஞ்சொற் பொருள்:
1. ஏகன்- ஒருவன்
2. போகன் – அனைத்தையும் அறிபவன், அனுபவிப்பவன்

பொருள்: நான் ஒருவனே அனைவரின் உள்ளும் புறமுமாய் இருக்கிறேன். நானே அனைத்தையும் அறியும் பரமாத்மா, நானே அனைவரின் சுக துக்கங்களை அறியச் செய்பவன். இவ்வாறாக அனைவரின் உள்ளும் புறமும் இருந்தாலும், நான் இவ்வாறாக இருப்பதை மனிதர்கள் அறிவதில்லை.

சூத்திரம்:
” கருவூர் தனிலிருந்து கனவருத்தப் பட்டுவந்தேன்”

அருஞ்சொற் பொருள்:
கருவூர்- சகஸ்ரா, வைகுண்டம், தாயின் கருவறை, உடம்பு( கரு – உடம்பு)

பொருள் 1: அனைத்துயிர்க்கும் மூலமாய் ஆதிக் காரணமாய் இருக்கும் இடம் வைகுண்டம். எனவே வைகுண்டம் என்பது கருவூர். மேலும் வைகுண்டத்தில் அமர்ந்திருக்கும் பகவான் பள்ளிகொண்டு இருக்கும் கருவறை பாற்கடல். பாற்கடலிலும் வைகுண்டத்திலும் இருக்கும் பகவான் சான்றோரின் துயர் கண்டு பொறுக்க இயலாத வருத்தம் அடைந்து அவதாரம் எடுத்தார் என்பது சூத்திரத்தின் பொருள்.

பொருள் 2: உடம்புக்குள் உயிருக்கு உயிராய் நின்ற பகவான், சீவர்களின் துன்பத்தைக்கண்டு மிகுந்த இரக்கத்தோடு திருவவதாரம் கொண்டார் என்பது கருத்து.

பொருள் 3: அன்னை மகாலெட்சுமியின் கருவில் வந்தவனாகிய‌நான் என் அன்னைத் தந்தையை பிரியும் வருத்தத்துடன் இந்த உலகில் வந்தேன்.

சூத்திரம்:
“பாலன் சிறுகுழந்தை வந்த பாதை அறிவீர் மக்காள்”
பொருள்: நான் இந்த‌ வையகத்தில் எத்தனை எத்தனை பாதைகளில் வந்துள்ளேன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
தொடரும்

அய்யா உண்டு

தன்னை அறிதல் என்றால் என்ன?

– S. அன்ன செல்வம் அம்மா – 9443622222

தன்னை அறிதல் என்பது நான் யார் என்பதைப் பற்றி அறிகின்ற நிலை. நான் யார்? என்னைப் படைத்தது யார்? நான் எங்கிருந்து வந்தேன்? இனி எங்கே போவேன்? மரணத்திற்குப் பின் நடப்பது என்ன? இது போன்ற கேள்விகளைக் கேட்டு அதற்குரிய விடையை அறிந்து கொண்டவர்களுக்கு மரண பயம் என்பது இல்லை. நான் யார்? அதாவது தன்னை அறிதல் என்பது இந்த உடல் வேறு உயிர் வேறு என்பதை அறிகின்ற நிலை ஆகும். உயிரும் உடலும் வேறு வேறாக இருந்தாலும் இரண்டும் தன்னோடு ஒன்றி பிணைந்துள்ளது. நாம் நம்முடைய உண்மையான நிலையைப் பற்றி அறிந்து கொள்ள ஆசைப்படுவதில்லை. அதைப்பற்றி திருமூலர் கூறுகிறார்.
“தன்னை அறிய தனக்கொரு கேடில்லை,
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்க தான் இருந்தானே”
என்று பாடுகிறார். மனிதப்பிறவி என்பதே தன்னை அறிந்து கொள்வதற்காகத்தான். ஆனால் மனிதன் அதைப்பற்றி சிந்திக்காமல் எதை எதையோ தேடி எங்கெங்கோ அலைகிறான். தேடுபவன் கண்டு கொள்வான் என்பதைப் போன்று இறுதியில் இறைவன் தனக்குள் ஆன்மாவாக இருப்பதை அறிந்த பிறகு தன்னை தெய்வீகமாக பேணி பாதுகாக்கின்றான். இறைவன் எங்கும் நிறைந்த ஏகப்பரம்பொருள். மனித மனம் எதை எதிர்பார்க்கின்றதோ அதை செய்து முடிக்கும் ஆற்றல் நம்முடைய எண்ணங்களுக்கு இருக்கிறது.

நாம் என்ன நினைக்கின்றோம் என்றால் நான் என்பது இந்த உடலும் உடல் சார்ந்ததும் என நினைத்து வாழ்கின்றோம். உடல் சார்ந்த உலகியல் வாழ்க்கையை இன்பம் என்று நினைத்து முக்கியத்துவம் கொடுத்து நிம்மதியற்ற நிலையை அடைகிறோம்.

இன்றைய மனிதன் விஞ்ஞானம் என்கிற பெயரில் கல்வி அறிவில் மூழ்கி இருக்கின்றான். மெய்ஞானத்தைப் பற்றி அறியும் நாட்டம் இல்லை. பக்தி என்கிற பெயரில் சுயநலவாதியாகவே இருக்கின்றான். மெய்ஞானத்தின் மூலம் ஆழ் மனதின் ஆற்றலையும் பஞ்சபூதங்களின் ஆற்றலையும் அறிந்து இறை தரிசனம் வரை நாம் செல்ல முடியும். இது முப்பொருளும் ஒரு பொருளாய் இருக்கின்ற அய்யா வைகுண்ட நாராயணர் நமக்கு அருளிய வரம் நம்முடைய உடலில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் இறை அம்சம் என்ற தெய்வீக பேர் உணர்வு நிரம்பி இருக்கிறது. தன்னை அறிய வேண்டும் என்று நினைக்கும் போதும் இறை அருள் கொண்டு தேடும் போதும் அது நம்முடைய ஞானக் கண்களுக்குப் புலப்படுகிறது.

பகவத்கீதையில் கண்ணன் கூறுவான் இந்த உடல் அழியக்கூடியது இந்த ஆன்மா அழியாதது என்பார். எனவே நாம் இதிலிருந்து விடுபட்டு தர்மயுக வாழ்வை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் அதற்கான வழிமுறைகள் என்ன என்பதை வைகுண்டர் அருளிய ஆகமங்களைப் படித்து அய்யா கூறிய உபதேசங்களை கருத்தில் கொண்டு சரணாகதி அடைய வேண்டும். பொற்காலத்தைப் பற்றிய அனைத்தையும் அய்யா நமக்குத் தந்திருக்கிறார். உண்மையான இறை தேடல் மட்டுமே தன்னை அறியும் மெய் அறிவைத் தரும் முழு நம்பிக்கையோடும் மனதில் உறுதியோடும் இறைவனை நமக்குள் தேடும் போதும் நாம் இறைவனின் அம்சமாக இருக்கிறோம் என்பதை அறிந்து கொள்ள முடியும்.

“எந்தன் மொழியும் என் எழுத்தும் ஏடாய் சேர்த்து இவ்வுலகில்
சிந்தை மகிழ்ந்த அன்பருக்குத் தெரிய திறமா எழுதி வைத்தேன்
எந்த பேரும் என் திருமொழியை எடுத்தே வாசித்து உணர்ந்தோறும்
சந்த முடனே வாழ்ந்து மிக தர்மப்பதியும் காண்பாரே”
-அகிலத்திரட்டு அம்மானை
அய்யா அருளிய வேத உபதேசங்களின் மெய் கருத்தை உணர்ந்து மெய் ஆகிய இந்த உடலுக்குள் மெய்ப்பொருளாகிய இறைவன் ஆன்மாவாக இருந்து அருள் பாலிப்பதை உணர்ந்து ஞானமாக வாழ்வோம்.

அய்யா உண்டு

அகில விருத்தமும் விளக்கமும்

– பா. அசோக் குமார் அய்யா 009607704901, 8012174032

விருத்தம்: 13

“வாடியே மடவார் தானும் மார்பதில் துயிலை மூடி
தேடியே அயர்ந்துயேங்கிக் குருவதை பாராவண்ணம்
நாடியே தாழ்ந்து பெண்கள் நாணியே நின்றதண்மை
தேடியே மாயன் செய்த செயலென அறிந்தாரீசர்”

விளக்கம்: தங்கள் நிலை மாறியதை உணர்ந்த இரு மாதர்களும் தங்கள் தேகத்தைத் துணியால் போர்த்திக் கொண்டு தங்கள் குருவான சிவபெருமானை மறக்காமல் அவரைத் தேடி மனம்சோர்ந்து ஏங்கி நின்றார்கள். இப்படி தன்னை நாடி வெட்கப்பட்டு நின்ற இரு மாதர்களின் நிலையை அறிந்து இது திருமாலின் செயல் என அறிந்து கொண்டார் சிவ பெருமான்.

அய்யா உண்டு

மனக்கண்

– ஹரி வெங்கடேஷ் அய்யா 8508518505

“கண்ணாலே மனக் கண்ணாலே காணுமப்பா வழியதுதான்”
-அய்யா வைகுண்ட பரம்பொருள்
பண்பட்ட மனம் நற்செயல்களை மேற்கொண்டு நல்ல கர்மபலனை உருவாக்குகிறது. பண்படாத மனம் தீயசெயல்களை மேற்கொண்டு நமக்கு துயரத்தைக் கொடுக்கும் கர்மபலனை உருவாக்குகிறது.
“பணமும் மனமும் நல்ல சேவகர்கள்
ஆனால் ஆபத்தான எஜமானர்கள்”
நம் கட்டுக்குள் மனம் இருந்து நல்ல செயல்களில் ஈடுபட்டால் நமக்கு நன்மை ஏற்படும். இல்லையெனில் மனமே நமக்குத் துயரத்தை உருவாக்கும். ஒவ்வொரு செயலும் அதற்குரிய விளைவைக் கொடுக்கும். நற்செயலின் விளைவு புண்ணியம் என்றும் தீயசெயலின் விளைவு பாவம் என்றும் அழைக்கப்படுகிறது. புண்ணியம் இன்பகரமான அனுபவத்தைத் தருகிறது. பாவம் துன்பகரமான அனுபவத்தைத் தருகிறது. இன்பதுன்பங்களை அனுபவிப்பதும் மனம்தான். இன்பதுன்ப அனுபவத்திற்குக் காரணமாக இருப்பதும் மனம்தான். நமது மனதை சரியான செயலை செய்யும் வகையில் மாற்றுவதே நமது லட்சியம். அதை விடுத்து துயரம் கொடுக்கும் கருவியாக மனம் உள்ளது என்பதற்காக நாம் அதனை அழித்து விட முடியாது.

தலைவலியை அனுபவிக்கிறோம் என்பதால் தலையை அழிக்க யாரும் முற்படுவதில்லை அதுபோல் மனதால் துயரத்தை அனுபவிக்கிறோம் என்பதால் மனதை அழிக்க முற்படக் கூடாது, மனதை அழிக்க முற்படுவது நமது இலக்கு அல்ல. மனம் நமக்குத் தேவையான ஒரு கருவி. மனதை வைத்துத்தான் நாம் அடைய வேண்டியதை அடைய முடியும். நாம் நம் மனதால் கட்டுண்டு இருக்கிறோம். அதே மனதால்தான் விடுதலையும் அடைய முடியும். துயரத்தை அனுபவிப்பதும் இன்பத்தை அனுபவிப்பதும் மனமே. எவ்விதத்தில் கட்டுண்டோமோ அவ்விதத்தில் விடுவித்துக்கொள்ள வேண்டும்.

ஓர் ஆசிரமத்தில் இருந்த பசுவை ஒவ்வொரு நாளும் மாலை நேரத்தில் கயிற்றால் கட்டுவது வழக்கம். ஒரு நாள் பசுவைக் கட்டும் கயிறு காணாமல் போகவே குருவிடம் பசுவை எப்படிக் கட்டுவது என சிஷ்யன் கேட்டான். குருவானவர் பசுவைக் கட்டும் இடத்திற்கு அழைத்துச் சென்று கயிற்றால் கட்டுவது போல பசுவின் முன் பாசாங்கு செய் என்றார். சிஷ்யனும் அவ்வாறே செய்தான், பசு, தான் வழக்கம் போல் கட்டுண்டேன், என்று எண்ணி அமர்ந்து கொண்டது.

அடுத்த நாள் காலை அவன் பசுவைக் கையால் தட்டியும் எழுந்திருக்கவில்லை. சிஷ்யன், எழவில்லை எனக் கூறினான். குருவானவர், கட்டுண்டு உள்ளதாக எண்ணுகிறது. நீ எப்படிக் கட்டினாயோ அப்படியே விடுவி, என்றார். சிஷ்யனும் கட்டை விடுவிப்பது போல் பாசாங்கு செய்தான். உடனே பசு எழுந்து கொண்டது. பசு, நான் கட்டுண்டேன் என்ற எண்ணத்தால் கட்டுண்டிருந்தது. அதன் விடுதலையும், நான் விடுவிக்கப்பட்டேன், என்ற எண்ணத்தால்தான் நடந்தது.

நம் நிலையும் இதுபோலவேதான் உள்ளது. நாம் நம் மனதால் கலியில் கட்டுண்டு இருக்கிறோம். அதே மனதால்தான் நாம் கலியில் இருந்து விடுதலையும் அடைய முடியும். அதை எப்படி விடுதலை அடையச் செய்வது.?

“என்னை கண்ணாலே கண்டதுண்டால் கலிதீரும் என்மகனே” என்கிறார் அய்யா.

அய்யா உண்டு

அய்யாவின் உபதேசங்கள்

– பா. கிருஷ்ணமணி அப்புகுட்டி அய்யா 9841933992

“உன்னருள் தான் என்று சொல்லி உகந்திடாதே மகனே
என்னருள் அல்லாதே எதும் நடவாது மகனே”
உனக்கு இந்த பூலோக வாழ்வில் கிடைக்கின்ற எல்லா விதமான உயர்வுக்கும், செல்வ சிறப்புக்கும், புகழுக்கும், திறமைக்கும், நன்மைக்கும், பதவிக்கும், சக்திக்கும் நீயே தான் காரணம் என்று எண்ணி மகிழ்ந்து பெருமை கொண்டு விடாதே என் மகனே. நான் நினைக்காமலும் என்னுடைய அருள் ஆசி இல்லாமலும் இந்த உலகில் ஏதும் நடக்காது. உலகிலுள்ள உயிருள்ள மற்றும் உயிரற்ற அனைத்து வகையானவற்றின் இயக்கத்துக்கும் காரண கர்த்தாவாக நானே இருக்கின்றேன் என்பதை உணர்ந்து மனதில் பணிவு கொள் என் மகனே.
“நிலையழி யாதிருங்கோ நீதியாய் நின்றிடுங்கோ
நல்லோரே ஆகவென்றால் ஞாயமதிலே நில்லும்”
எந்த ஒரு சூழ்நிலையிலும் அவரவருக்கு உரிய தர்ம நிலையில் இருந்து தவறி விடாதீர்கள், எப்போதும் தர்ம நீதியுடன் வாழுங்கள். நல்லவராக இருக்க வேண்டும் என்றால் எப்போதும் நியாயமாக நடக்க வேண்டும், நியாயத்தின் பக்கம் இருக்க வேண்டும்.
“என் பேரைச் சொல்லி எவரெவர் வந்தாலும்
அன்பாக அன்னமிட்டு ஆதரித்த பக்தருக்கு
என்னஎன்ன அபாயம் இடுக்கமது வந்தாலும்
அந்நேரம் நாரணன் நான் ஆயனங்கே வருவேன்”
இறைவனாகிய என்னுடைய பெயரைச் சொல்லி யார் ஒருவர் வந்தாலும் அவர்களை வேண்டா வெறுப்புடன் ஆதரித்து தர்மம் செய்யாமல், அவர்களிடம் அன்போடு நடந்தும், தர்மம் செய்ய கிடைத்த மிகப் பெரிய பாக்கியமாக கருதியும் அவர்களுக்கு வேண்டிய உணவை நிறைவாக கொடுத்தும், வேண்டிய உபகாரங்களைச் செய்தும் ஆதரவு கொடுக்கின்ற பக்தர்களுக்கு எப்பேர்பட்ட பேர் ஆபத்துக்கள், துன்பங்கள் ஏற்பட்டாலும் அந்த நேரம் அவர்களைக் காப்பதற்காக நாராயணனாகிய நான் அங்கு வருவேன்.
“அன்னம் அளக்கும் ஆதித் திருநெடுமால்
முன்னவன் தன்பேரால் முத்திரிகள் இட்டதினால்
சென்ற இடமெல்லாஞ் சிறப்பதிகம் உங்களுக்கு”

இறை தண்டனை

– ஹரி வெங்கடேஷ் அய்யா 8508518505

“அவரவர் செய்த அக்குற்றம் தான் கேட்டு
எவரெவர்க்கும் தக்க இயல்பே அருள்வோம்”
-அகிலம்
இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் உணவளித்து காக்கின்ற பரம்பொருளாகிய திருமாலின் அடையாளங்களான திருநாமம், காவி, துளசி, ருத்திராட்சம் போன்றவைகளை இறைவன் பெயரால் அணிவித்து எங்கு சென்றாலும் உங்களுக்கு வெற்றியும், சிறப்பும், மரியாதையும் கிடைக்கும்.

தொடரும்

அய்யா உண்டு

புண்ணிய செயல்களின் முக்கியத்துவம்

– மீனா சுகின் அம்மா- 9344813163

ஒரு காலத்தில் கௌதாமன் என்ற அரசன் வாழ்ந்து வந்தார். அவருக்கு விருப்பமான ரிசியாக விசுவாமித்திரர் இருந்தார். கௌதாமன் அனைத்துச் செயல்களையும் விசுவாமித்திரிடம் கலந்து ஆலோசித்துச் செய்வார். அதன்படி நாட்டின் நலனுக்காக ஒரு வேள்வி நடத்த வேண்டும் என்று முடிவு செய்து விசுவாமித்திரரை அழைத்தார். கௌதாமன் நாட்டில் உள்ள அனைத்து ரிஷிகளும் அந்த வேள்வியில் பங்கேற்க வந்தனர். குறிப்பாக வசிஷ்டரின் மகனான சக்தியும் அந்த வேள்விக்காக வந்திருந்தார்.

வேள்வியினைக் குறித்து பேசும்போது விசுவாமித்திரருக்கும் சக்திக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் வலுத்து சக்தி ரிசி விசுவாமித்திரரின் பேச்சுத்திறன் இழக்கும்படி சபித்துவிட்டார். இதனால் வேள்வி தடைபட்டது. மற்ற ரிஷிகள் விசுவாமித்திரரின் இந்த நிலையைக் கண்டு வருந்தி இவருக்கு எப்படியாவது பேச்சுத் திறமையை திருப்பிக் கொண்டு வர வேண்டும் என ஆலோசித்தனர். அப்போது இவர்கள் சூரிய புத்திரர் பேச்சுத் திறனுக்கு அதிபதி அவரிடம் வேண்டலாம் என முடிவு செய்தனர். அது போல் இவர்களின் வேண்டல் பலனாக சூரிய புத்திரனின் அருளால் விசுவாமித்திரருக்குப் பேச்சுத் திறன் வந்தது. நடந்தவற்றை உணர்ந்த விசுவாமித்திரர் சக்திரிசியை மாறி சபித்து விட்டார். இதற்கு முன்பும் விசுவாமித்திரருக்கும் வசிஸ்டருக்கும் இடையே சிறிய வாக்குவாதம் ஏற்படுவது உண்டு.

ஒரு நாள் வசிஷ்டர் விசுவாமித்திரரைச் சந்திப்பதற்காக அவருடைய ஆசிரமம் வந்திருந்தார். இவர்கள் இருவரும் பேசிவிட்டு வசிஷ்டர் புறப்பட தயாரானார். அப்போது விசுவாமித்திரர் தான் ஒரு சிறந்த பிரம்மரிஷி என்று காட்ட வேண்டும் என்பதற்காக வசிஷ்டருக்கு ஒரு பரிசு கொடுப்பதாகக் கூறினார். அது என்னவென்றால் விசுவாமித்திரர் 1000 ஆண்டுகள் செய்த தவப் பலனைப் பரிசாக அளித்தார். வசிஷ்டரும் சிரித்துக்கொண்டே சென்றார்.

அதேபோல் வசிஷ்டர் உடைய ஆசிரமத்திற்கு விசுவாமித்திரர் வந்தார். இவர்கள் புண்ணியம் தரும் செயல்களைப் பற்றி அரை நாள் பேசினார். பின்பு விசுவாமித்திரர் புறப்படும் போது வசிஷ்டர், இருவரும் பேசிய அந்த அரை நாள் புண்ணிய செயலின் பலனைப் பரிசாக அளிப்பதாகக் கூறினார். அதனால் விசுவாமித்திரர் முகம் வாடி இருந்தது. உடனே வசிஷ்டர் நீங்கள் எனக்கு ஆயிரம் ஆண்டு தவப் பலனைப் பரிசாக அளித்தீர்கள். ஆனால் நானோ இந்த அரைநாள் நாம் பேசிய புண்ணியம் தரக்கூடிய செயலுக்கான பலனை பரிசளித்தேன். அதனால் தானே நீங்கள் இப்படி முகம் சோர்ந்து இருக்கிறீர்கள் என்றார். இதற்கான விளக்கத்தைப் பிரம்மாவிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று வசிஷ்டர் கூறினார். உடனே இருவரும் பிரம்மலோகம் சென்று பிரம்மாவிடம் கேட்டனர்.

அதற்குப் பிரம்மா படைத்தல் மட்டுமே என் வேலை நீங்கள் நாராயணனரிடமே சென்று கேளுங்கள் என்று கூறினார். இருவரும் நாராயணர் இடத்தில் சென்று கேட்டனர். நாராயணரும் காப்பது என்னுடைய வேலை நீங்கள் ஈசரிடம் கேட்டால் தெளிவு பெறலாம் என்று கைலாசத்திற்கு அனுப்பி வைத்தார். ஈஸ்வரர் இவர்களைப் பார்த்துக் கூறினார் ஆதிசேஷன் தலையில் பூமி பந்தை சுமத்துக் கொண்டிருக்கிறார் அவரிடம் சென்று கேட்டால் உங்கள் கேள்விக்கான சரியான பதில் கிடைக்கலாம் என்று கூறினார். இருவரும் பாதாள லோகத்தில் ஆதிசேஷன் இருக்கும் இடத்திற்குச் சென்று தங்கள் சந்தேகத்தைக் கூறினர். எப்படி என்றால் ஆயிரம் ஆண்டுக்கான தவப்பலன் சிறந்ததா? இல்லை அரை நாளாக பேசிய புண்ணியம் தரும் செயலின் பலன் சிறந்ததா? என்று கேட்டனர்.

அதற்கு என்னிடம் நீங்கள் கேட்டது சரியான கேள்வி தான் உங்களுக்கான பதிலை நான் கூறுகிறேன் என்று மகிழ்வாக ஆதிசேஷன் கூறினார். ஆனால் ஒரு நிபந்தனை என் தலையில் சுழலும் பூமிப்பந்தை நான் விடை கூறும் வரை உங்களில் ஒருவர் அந்தரத்தில் சுழல வைக்க வேண்டும் என்றார். உடனே விசுவாமித்திரர் நான் செய்த ஆயிரம் ஆண்டு தவப்பலனாக இந்த பூமி அந்தரத்தில் சுழலட்டும் என்றார். ஆனால் எந்த மாற்றமும் இல்லை. அடுத்ததாக வசிஷ்டர் கூறினார் புண்ணியம் தரும் செயல்களைப் பற்றி அரைநாள் பேசியதன் பலனாக பூமிப்பந்து சுழலட்டும் என்றார். அந்த நொடியே பூமிப்பந்து அந்தரத்தில் சுழண்டது உடனே இருவரும் வியந்தனர் ஆதிசேஷன் இந்த செயலின் மூலம் நீங்களே விடையை அறிந்திருப்பீர்கள் என்று கூறினார். இருவரும் மகிழ்வாக தங்கள் ஆசிரமத்திற்குச் சென்றனர்.

ஆம் நண்பர்களே! இந்த உலகில் நாம் எவ்வளவு தவம் செய்தாலும் அதைவிட சிறந்தது புண்ணியம் தரும் செயல்களைப் பற்றி பிறரிடம் பகிர்ந்து கொள்வதாகும். அதுமட்டுமின்றி நல்லவர்களுடன் சேர்ந்தால் நல்ல செயல்கள் நம்முடன் இருக்கும். மேலும் அவர்களுடன் புண்ணிய செயல்களைப் பற்றி பேசினால் அது மேலும் மேலும் சிறப்பை நமக்குத் தரும்.

அய்யா உண்டு

அய்யா அருளிய வாழ்வியல் நெறி முறைகள்

-த. சீதா லெட்சுமி அம்மா 949655691

“ஈனமில்லாத ரோடு எமக்காகும் சாதியின்மேல்
மானமாய் வருந்தி மகிழ்ந்திரு என் மகனே”
கலியுகத்தில் நாம் எப்போதும் நல்லதையே செய்ய வேண்டும். நல்லதையே நினைக்க வேண்டும். நல்ல சிந்தையோடே செயல்பட வேண்டும் என்று கூறுகிறார் அய்யா. ஆனால் இந்தக் கலியுகத்தில் நல்லவர்களைப் பார்ப்பதே கடினம் ஆகிவிட்டது. ஏன் என்றால் மக்கள் அனைவரும் கலியில் அகப்பட்டு அதிலிருந்து கரையேற வழி தெரியாமல், துன்பப்பட்டுக்கொண்டும், கலியின் தன்மையினால் பிறருக்கு பல இன்னல்களைக் கொடுத்துக்கொண்டும் இருக்கிறார்கள். இந்த நிலை வரக் காரணம் என்ன? இதற்குக் காரணம் கலிதான்.

அப்படி என்றால் அந்தக் கலியை அழிக்க நாம் பாடுபட வேண்டும். அதற்கு நம்மை நாமே செம்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். நாம்நல்ல மன நிலையில் இருக்கிறபோது சிந்தனை ஓட்டம் நன்றாக இருக்கும். நம் மனம் ஓட்டம் நன்றாக இருக்கின்ற போது தான் பிறருடைய எண்ண ஓட்டங்களை நல்ல கண்ணோட்டத்தோடு நாம் புரிந்து கொள்ள முடியும். அது மட்டுமல்லாமல் சூழ்நிலையின் காரணத்தால் பிறர் நமக்குத் துன்பம் செய்தாலும் பொறுத்துக் கொள்ள முடியும்.

நாம் வாழ்ந்து கொண்டிருப்பது நன்றி கெட்ட உலகம். மக்களிடம் அன்பு, இரக்கம், கருணை, தியாகம் போன்ற நல்ல எண்ணங்கள் குறைந்து போய் விட்டது. அப்படி நல்ல எண்ணங்கள் இல்லாத காரணத்தினால்தான் கலி வளர்ந்துக் கொண்டே செல்கிறது. இதனால்தான் நாட்டில் குற்றங்களும் கொடுமைகளும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இந்நிலை மாறவேண்டும் என்றால் ஒவ்வொரு தனிமனிதரும் செம்மைப்பட வேண்டும். அப்படி செம்மைப்பட்டால் தான், நம்மை போன்றுதான் பிறரும் இருப்பார்கள் என்று எண்ணம் வரும்.நல்லக்கண்ணோட்டத்தோடு பிறரைப் பார்க்கின்ற போது கலி அழிவதற்குரிய வழி நமக்குத் தோன்றும்.

தன்னை அறிந்ததுண்டால் தலைவனை நீ அறியலாம் என்பதை இதற்குத் தானே அய்யா கூறியிருக்கிறார். இந்த உலகில் நான் என்ற ஆணவம் எதனால் வருகிறது? தான் யார் என்பதை சரியாக புரியாததால், கோபம் எதனால் வருகிறது? தான் நினைத்தது நடக்கவில்லையே என்ற மனக்கொந்தளிப்பால்தான். இப்படி இவைகளின் தொடர்ச்சி தான், நன்றிகெட்டத் தன்மை, தாழ்வு மனப்பான்மை, பழிவாங்கும் குணம், பொறாமை, பேராசை, கொலை, களவு போன்ற அத்தனை தீமைகளும் வருகிறது. ஆகவே நாம் முதலில் இதில் இருந்து விடுபட வேண்டும். அப்போது தான் பிறருக்கு வழிகாட்டியாக இருந்து அவருடைய நலனுக்குப் பாடுபட முடியும்.

இதற்குத் தான் அய்யா ஈனமில்லா தாரோடும் எமக்காகும் சாதியின் மேல் மானமாய் வருந்தி மகிழ்ந்து இரு நீ என் மகனே என்றார். அதாவது எவ்வளவுதான் நன்றி உணர்வு இல்லாமல் தீமையான சிந்தனையோடு வாழ்கிறவர்களையும் அவர்கள் மனதில் மாற்றத்தைக் கொண்டுவர முடியும். அதற்கு நாம் ஒவ்வொருவரும் நல்லவர்களாக அய்யா கூறிய சட்டத் திட்டத்திற்குக் கட்டுப்பட்டவர்களாக மாற வேண்டும்.

அப்படி எல்லோரும் மதிப்பும், மரியாதையும் பொருந்தியவர்களாக, அன்பு உள்ளம் படைத்தவர்களாக, இந்தக் கலியை அழிப்பவர்களுக்கு வலிமை உடையவர்களாக இருக்க வேண்டும். அதற்காக நான் பிறரையும் மதித்து, அவர்களிடமும் தீமை அழித்து, அவர்கள் நல்ல சிந்தனையாளர்களாக வளர்வதற்கு துணைபுரிய வேண்டும் என்கிறார்.

அய்யா உண்டு

தர்மயுக முரசு வாசகர்களுக்கு அன்பான வேண்டுகோள்

நமது அகில உலக அய்யாவழி சேவை அமைப்பு (IASF)
நடத்தும் கூகுள் மீட் அகிலத்திரட்டு அறப்பாட சாலை எல்லா சனிக்கிழமையும் இரவு 8 மணி முதல் 9 மணி வரை நடைபெறுகிறது

எனவே அப் அறப்பாடசாலையில் கலந்து கொள்ள எல்லா சனிக்கிழமையும் கீழ் கண்ட லிங்கை கிளிக் செய்து இணைந்து பயன் பெறுங்கள் https://meet.google.com/btd-zzjs-uph

இந்த வகுப்பில் திருஏடு வாசிப்பு, பாராயணம், ஆன்மிக கதை, அய்யா பாடல், அய்யாவின் உபதேசங்கள் போன்றவை அன்பர்களால் சிறப்பாக வழங்கப்படுறது.

அன்புக்கொடி சொந்தங்கள் இந்த ஆன்மிக வகுப்பில் கலந்து பயனடைய அன்போடு வேண்டுகிறோம்.

அய்யா உண்டு

யுகதர்மம்

– ஹரி வெங்கடேஷ் அய்யா 8508518505

“வைந்தரின் உவமை சொல்ல யுகதர்மம் ஆகுமே”

என்னதான் அய்யாவழி என்பது கலியுகத்தில் தர்மயுகத்தை அடைய உதவும் ஒரே வழியாக இருந்தாலும், உலகின் உயர்ந்த வழியாய் இருந்தாலும் அதை அறிந்த நமக்கு மட்டுமே அதன் மேன்மை மற்றும் அருமை தெரியும். ஆனால் அய்யாவழி என்றால் என்னவென்று தெரியாத மற்ற மக்கள் அவரவர்கள் வளர்த்து வைத்துள்ள அறிவுக்கு ஏற்றார்போல் அய்யாவழியைப் போற்றலாம் அல்லது தூற்றலாம். எது எப்படி இருந்தாலும் அய்யாவழியினராகிய நமக்கு மற்றவர்கள் அய்யாவழியைப் பற்றி தூற்றுதலான வார்த்தைகள் பேசும் போது நிச்சயமாக கோபம் வருவது இயல்புதான். ஆனால் அது போன்ற சூழ்நிலைகளில் கோபத்தை வெளிப்படுத்துவதா அல்லது அடக்குவதா? எது உயர்வானது. கோபத்தை வெளிப்படுத்துவதுதான் உயர்வானது என்பது நமது பதிலாக இருந்தால் நமது பதில் தவறானது.
ஏனெனில் அய்யா பொதுக்கென்ற கோபமதை புத்திதனில் அடக்கி “பொறுத்து இருந்தவரே பெரியவராய் ஆகுவீர் மக்காள்” என்று சொல்கிறார். பொறுத்து இருந்தவர்தான் கோபத்தை வெளிக்காட்டுபவரை விட உயர்வானவர் என்கிறார் அய்யா.
அப்படி என்றால் தூற்றுவார் தூற்றட்டும் என்று கண்டு கொள்ளாமல் இருப்பது சரியா என்றால் அதுவும் தவறுதான். ஏனெனில் இந்த கலியுகத்தில் வைந்தரின் உவமை சொல்வது யுகதர்மம் ஆகும்.
எப்படி எடுத்துச் சொல்வது? “பொல்லாதாரோடும் பொறுமை உரைமகனே” என்று சொன்ன அய்யாவின் ஆழ்ந்த கருத்தை நாம் மீண்டும் மீண்டும் சிந்தித்துப் புரிந்து கொள்ள வேண்டும். அதை அடுத்து அடுத்த வரியில் தொடர்ச்சியாக
“தன்னாலே ஆகும் மட்டும் சாற்றி இரு என்மகனே
வந்தால் அறிவார் வராதார் நீறாவார்” என்கிறார்.
அது போன்ற சூழ்நிலைகளில் விலகி செல்வதை தவிர்த்து நம்மால் முடிந்த வரை பிறருக்கு எடுத்துச் சொல்வது நமது கடமை ஆகும். பொல்லாத பேராகவே இருந்தாலும் அவருடன் மோதி பேசி தனது எதிர்வாதத்தை வைப்பதை தவிர்த்து பொறுமையான முறையில் பதில் மொழி சொல் என்று அன்பு கட்டளை இடுகிறார் அய்யா.
ஆகவே இது போன்ற சூழ்நிலைகளில் எல்லாவற்றையும் அய்யா பார்த்துக் கொள்வார் என்று நாம் கடந்து பயணித்தாலோ அல்லது கடுமையான வார்த்தைகள் பேசி எதிர்தரப்பினரைக் காயப் படுத்தினாலோ நாம் நமது கடமையைச் செய்ய தவறியவர்கள் ஆகிறோம்.
சிலர் எதிர்தரப்பினரின் தூற்றுதலுக்குப் பதிலளிக்க வேண்டும் என்று தனக்கு ஏற்படும் கோபத்தால் “நீ நரகம் செல்வாய்” “உன்னை புழுக்கள் கொத்தி தின்னும்” “நீ விளங்காமல் போவாய்” என்று சபிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.
அகிலத்திரட்டு ஆகமத்தின் மேன்மையை உணர்த்துவதின் பொருட்டுதான் அய்யா, அகிலத்திரட்டில் இது போன்ற கடுமையான வார்த்தைகளை சில இடங்களில் பயன்படுத்தி இருக்கிறாரே தவிர நாம் பயன்படுத்துவதற்காக அல்ல.
ஆகவே அந்த வார்த்தைகளைத் துணையாகக் கொண்டு நாம் மற்றவர்களைச் சபித்தால் அதுவும் தவறுதான். ஏனெனில் அய்யா “சாபத்தைக் கூறாதே தன்னளவு வந்தாலும்” என்கிறார்.
மற்றவர்கள் கெட்டு போக வேண்டும் அல்லது அழிந்து போக வேண்டும் என்ற எண்ணம் நம் அகத்தில் அணு அளவும் தோன்றக் கூடாது.. ஏனெனில் நாம் அன்பு வழியினர். அடுத்த யுகம் காணும் அய்யாவழியினர். அவரவர்கள் செய்யும் குற்றம் அனைத்தையும் அரியோன் அறிவார். நாம்
அன்பை விதைப்போம்! அன்பை பெறுவோம்!

அய்யாஉண்டு

1. தாண்டவ சங்காரன் யார்?

2. அரிகோபால சீசர் எப்படிப்பட்ட நித்திரையில் இருந்தார்

3. பருதி சூடும் பரமன் யார்?

4. மள்ளர் என்பவர் யார்?

5. நால் வேதம் எது?

அய்யா உண்டு

அய்யாவழி என்பது என்ன?

-த. சீதா லெட்சுமி அம்மா 949655691

அய்யாவழி என்பது ஒரு மனிதன் தன்னை அறிந்து, தன்னுடைய குறைகளைக் களைந்து தான் ஞானத்தைப் பெற்று பிறவி என்ற பெரும் பிணியிலிருந்து விடுபடுவதற்கு வழிகாட்டுகின்ற உன்னத வழிபாட்டு முறைகளையும் தந்து கலியுகத்தில் ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்ற வாழ்வியல் நெறிகளையும் வகுத்து தந்த ஒரு வழிமுறை ஆகும்.

அதர்மம் தலை தூக்கும் போது அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்ட இறைவனுடைய அவதாரம் நிகழும். அதன்படி எட்டு யுகச் செய்திகளையும் சொல்லி நாராயண மூர்த்தி எடுத்த 10 அவதாரங்களையும் எடுத்துக் கூறி, கலியுகத்தில் சிவன், பிரம்மா, விஷ்ணு என்ற மும்மூர்த்திகளும் இணைந்து ஒரு மூர்த்தியாக அய்யா வைகுண்டர் என்ற திருநாமத்தோடு இறைவன் அவதாரம் எடுத்த நிகழ்வுகளைப் பற்றி எடுத்துக் கூறிய வழி அய்யாவழி ஆகும்.

யார் உண்மையான அய்யாவழி காரர்கள்?

அய்யா வழியை பின்பற்றுபவர்களுக்கு இருக்க வேண்டிய அடிப்படை தகுதி நிலைகள் என்ன? கோயில்கள் வைத்து குரு பூஜை செய்ய மாட்டார்கள். அதாவது கோயில்களிலோ அல்லது வீடுகளிலோ இறை வழிபாடு என்ற பெயரில் இறந்தவர்களுக்கு வழிபாடு செய்கின்ற முறையைப் பின்பற்ற மாட்டார்கள்.

பூக்களைப் போட்டு வழிபட்டு நிற்கக்கூடிய அந்த வழிமுறைகளைச் செய்ய மாட்டார்கள். ஓர் உருவத்தை வைத்து அதில் இறைவன் இருக்கின்றார் என்ற நினைப்போடு அந்த உருவத்தில் பூக்களை எடுத்துப் போட்டுப் பூசை செய்கின்ற முறையைச் செய்ய மாட்டார்கள்.

பூஜை புனஸ்காரங்கள் போன்றவை எல்லாம் செய்ய மாட்டார்கள். பூஜை, புனஸ்காரங்கள் மூலம் வழிபாடு நடத்துகின்ற இடங்களிலும் கலந்து கொள்ள மாட்டார்கள். ஏனெனில் இந்தக் கலியுகத்தில் இந்த வழிபாட்டு முறைமைகள் வேண்டாம் என்று இறைவனால் தடுக்கப்பட்ட வழிபாட்டு முறைகள் ஆகும். ஆகவே அய்யா வழிக் காரர்களுக்கு இது உகந்தது அல்ல.

“மாடு மண்ணுருவை வணங்கித் திரிய மாட்டார்கள்” அதாவது உருவ வழிபாடு செய்ய மாட்டார்கள். எங்கும் நிறைந்து ஏகமயமாக இருக்கின்ற இறைவனை ஓர் உருவத்திற்குள் பார்க்கின்ற நிலையை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

மேலும் ஆடு கிடாய், கோழி, பன்றிகளை அறுத்துப் பலியிட்டு இறைவழிபாடு செய்ய மாட்டார்கள். செய்யும் இடங்களில் கலந்து கொள்ள மாட்டார்கள். இறைவனுக்குப் பலி கொடுக்கின்றோம் என்ற பெயரில் இறைவனால் படைக்கப்பட்ட உயிரினங்களை அழித்து அதை இறைவனுக்குப் படையல் செய்கின்ற அந்த வழிபாட்டு முறையைப் பின்பற்ற மாட்டார்கள்.

இறைவனுடைய பெயரைச் சொல்லி யார் வந்தாலும் அவர்களை அன்போடு ஆதரித்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து வாழ்பவர்கள் சிறந்த பேறினைப் பெறுவார்கள். ஆனால் இரப்போர் முகம் பார்த்து ஈவதுவே நன்றாகும். இறைவன் பெயரால் தர்மம் கேட்டு வந்தாலும் சரி வேறு வாழ்வியல் காரணமாக உதவி நாடி வந்தவர்களுக்கு ம் உண்மையான காரணம் அறிந்து தர்மம் உவந்து அளிக்க வேண்டும்.

அய்யாவழிக்காரர்கள் எளிமையான நிலையில் வாழ்ந்து தன்னைவிட தாழ்ந்த நிலையில் இருப்பவர்களுக்கு அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து அவர்களை மேன்மைப்படுத்த வேண்டும் என்று நினைத்து தாழ்ந்த நிலையில் இருப்பவர்களை உயர்ந்த நிலையில் உயர்த்த பாடுபட வேண்டும்.

“நாம் வந்தோம் என்ற நாமம் கேட்டவுடன்
தாம் வந்து வேடமிட்ட சாதியது நன்றாகும்”
ஓரிடத்தில் அய்யாவினுடைய வழிபாட்டு முறைப்படி மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள் என்றால் அந்த இடத்தில் நாமும் சென்று சேர்ந்து அந்த முறைப்படி வாழ்வதற்குரிய வழிவகைகளைப் பின்பற்ற வேண்டும். அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்ய வேண்டும். நாமும் அந்த நிலைக்கு மாறுவதற்கு பாடுபட வேண்டும். அப்படி வாழுகின்ற போது நாம் பிறவிப்பிணியிலிருந்து விடுபடுவதற்குரிய வழிகள் நமக்குத் தோன்றும்.
“எவருக்கும் மிக ஈந்து இருப்போரே நன்றாவார்
அவருக்கு உதவி செய்த அவ் வினமும் நன்றாகும்”
ஒரு தர்ம காரியம் செய்கின்ற போது அந்த தர்ம காரியங்களுக்கு எந்த இடையூறும் செய்யாமல் நம்மால் இயன்ற உதவிகளை எவர் ஒருவர் செய்து வருகின்றாரோ அவருடைய குலமும் அவருடைய இன வழியும் சிறக்கும் அந்த வழியை யார் பின்பற்றுகின்றார்களோ அவர்கள் அய்யா வழிக்காரர்கள்.

யார் யார் அய்யா வழிக்கு உகந்த வர்கள் அல்லர்:

காரணம் இல்லாமல் கோபம் கொள்கிறவன். பொய் பேசுகிறவன். கோள் மூட்டிக் குடும்பத்தில் பிரச்சினை உருவாக்கும் செயல்களைச் செய்பவர்கள் ஒற்றுமையைச் சீர்குலைக்க கோள் மூட்டி துரோகம் செய்பவர்கள் அய்யாவின் பிள்ளைகளாக இருக்க தகுதி யற்றவர்கள்.

ஒருவரின் வளர்ச்சியை அவர்களின் வாழ்க்கையை அழிக்கத் துடிக்கும் பொறாமை குணம் கொண்ட நபர்கள். ஒருவரைப் பழிவாங்க வேண்டும் என்று எண்ணி வஞ்சகம் கொண்டு வாழ்பவர்கள்.

ஆணவக்காரர்கள் மற்றும் தான் சொல்வது மட்டுமே சரி என்று சொல்லி விட்டு ஆணவத்தோடு பிறரைத் துன்புறுத்தும் அறிவிலிகள். பேராசைக்காரன். மது அருந்துபவன். பெண்களுக்குத் துரோகம் செய்பவர்கள்

பிறருடைய உழைப்பில் தனக்கு பெருமை வர வேண்டும் என்று எண்ணுபவன், பிறருடைய பொருளுக்கு ஆசைப் படுபவர்கள். உயிர்களைக் கொன்று உண்பவர்கள். உயிர்களைக் கொன்று பணம் சம்பாதிக்க நினைப்பவர்கள் மற்றும் பணம் சம்பாதிப்பவர்கள் – உயிர் களை கொல்பவர்கள் (உயிர்களைக் கொல்பவன்-விற்பவன்- தின்பவன் மூவரும் கொலையாளிகளே)

தன்னுடைய பெயரை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணிப் பிறருக்கு அவப்பெயர் ஏற்படுத்தி உண்மையான வழி யில் வாழ்பவர்களுக்குத் துரோகம் செய்பவர்கள்.

இங்கொன்று அங்கொன்றும் பேசும் நயவஞ்சகர்கள். தவறுகள் நடைபெறும் போது அதை தட்டிக் கேட்காமல் வேடிக்கைப் பார்ப்பவர்கள். பிறரை ஏவிவிட்டு பிறருக்குத் துன்பங்களை உருவாக்குபவர்கள். மனதில் நயவஞ்சக எண்ணங்களை வைத்து வெளியே நல்ல வர்களைப் போல் வாழ்பவர்கள்

பிறருடைய துன்பங்களையும் அழிவையும் பார்த்து சந்தோஷம் கொள்ளும் ஈனப்பிறவிகள். தர்ம காரியங்களுக்குத் தடை செய்ய வேண்டும் என எண்ணுபவர்கள். மேலும் பல தீயகாரியங்களில் ஈடுபட்டு பிறருக்குத் துன்பங்களை உருவாக்குபவர்கள்

“மாபாவி போடுகின்ற திருமுத்திரியவனுக்கு
வாச்சியாய் இருக்கக் கண்டேன் சிவனே அய்யா”

இப்படி தேவர்கள் இனி படைக்கக்கூடிய யுகத்தினைப் பற்றி சிவபெருமானுடன் வேண்டுகோள் விடுத்தவுடன் சிவபெருமான் மன மகிழ்ச்சிக் கொள்கின்றார். அவர் வேதியரை அழைத்து படைக்கக்கூடிய யுகத்தை பற்றிக் கூறுகின்றார். இப்போது தேவ சங்கங்கள் கூடி இனி படைக்கக்கூடிய யுகத்தைப் பற்றியும் அதில் படைக்க வேண்டிய அசுரர் பற்றியும் ஆலோசிக்கின்றார்கள்.

“எவருக்கும் மிக ஈந்து இருப்போரே நன்றாவார்
அவருக்கு உதவி செய்த அவ் வினமும் நன்றாகும்”
அய்யாவின் முத்திரியாகிய நாமத்தை அணிந்து கொண்டும், காவியுடைத் தரித்துக் கொண்டு மேற்கூறிய அய்யா வழி பாட்டிற்கு எதிரான செயல்களைச் செய்பவர்கள் இறை தண்டனைக்கு ஆளாவார்கள். அய்யாவின் பிள்ளைகள் அய்யா வகுத்து தந்த நெறியைப் பின் பற்றி வாழ்ந்து தர்மயுக வாழ்வு பெற முயற்சி மற்றும் பயிற்சி செய்வோம்.
அன்புக்கொடி சொந்தங்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம்: அன்பானவர்களே, தாங்கள் சார்ந்துள்ள தாங்கல் வரலாற்றை நமது தர்மயுக முரசு பத்திரிகையில் வெளியிட வேண்டும் என்றால் உங்கள் தாங்கலின் வரலாற்றை அழகாக எழுதி 0096893145654 என்ற வாட்சப் எண்ணிற்கு தாங்கலின் புகைப்படத்தோடு சேர்த்து அனுப்பி தாருங்கள். அதனை வருகின்ற மாதங்களில் நமது தர்மயுக முரசு பத்திரிகையில் பதிவு செய்து வெளியிடலாம்.

அய்யா உண்டு

CONTACT
close slider

    Please feel free to get in touch, we value your feedback.