திருப்பதிகள்

அவதாரப் பதி

அய்யா வழிபாட்டு இந்து மக்களின் புனிதத் தலங்களில் வரிசையில் அமைந்த அவதாரப் பதியானது திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தெற்கே ஒரு கி.மீ தொலைவில் கடல் கரையில் அமைந்துள்ளது. திருச்செந்தூர் திருப்பாற் கடலுக்குள் நாராயணர் வைகுண்டமாய் அவதரித்த சிறப்பை பிரதிபலிக்கும் விதமாக கடற்கரையில் அன்புக் கொடி மக்களால் அமைக்கப்பட்டதே அவதாரப் பதியாகும்.

வைகுண்ட அவதாரம் நிகழ்ந்த மாசி மாதம் 20 ஆம் தேதி அதிகாலை திருச்செந்தூர்க் கடலில் பதமிட்டு, பரம்பொருளை வணங்கி அருளாசி பெறுவது அன்புக்கொடி மக்களுக்கு பேரானந்தம் ஆகும். அவதார திருநாள் விழா இங்கு வெகு சிறப்பாக ஒவ்வொரு ஆண்டும் நடைப்பெறுகிறது.

அம்பலப் பதி

அம்பல பதியானது பள்ளத்து பதி என்றும் மூலகுண்ட பதி என்றும் அழைக்கப்படுகிறது. கன்னியாகுமரியில் இருந்து மேற்காக 13 கிலோமீட்டர் தொலைவிலும், நாகர்கோவிலில் இருந்து தென்கிழக்கு திசையில் 14 கிலோமீட்டர் தொலைவிலும் கடற்கரைக்கு அருகில் அமைந்த பதி ஆகும். “இப்பதியில் வந்தால்
எள்ளளவுந் தோசமில்லை

எப்பதியும் இப்பதிக்கு ஒவ்வாது” என அகிலத்திரட்டு அம்மானையில் அய்யா கூறுவதிலிருந்து இந்த பதியின்
புனிதத்தை அறிய முடிகிறது. அய்யாவின் அனைத்து பதிகள் மற்றும் நிழல் தாங்கல்களில் ஞாயிற்றுக்கிழமை அன்று சிறப்பு வழிபாடு நடைப் பெற்று வருகின்றன. ஆனால் அம்பலப் பதியில் மட்டும் செவ்வாய்க்கிழமை அன்று நடைப்பெறுகிறது. அம்பலபதியில் 96 தத்துவத்தை குறிக்கும் வகையில் அமைந்த தத்துவக் கொட்டைகை சிறப்பு வாய்ந்தது ஆகும்.

 வைகுண்டர் சுவாமி தோப்புக்கு செல்லும் முன்பாக மூலகுண்டபதிக்கு சென்று சிவலிங்கம் அமைத்து பின் மண்ணுக்குள் மறைத்து வைத்துவிட்டு மீண்டும் வருவேன் என அதற்கு வாக்குறுதி கொடுத்திருந்தார். அதன்படி மீண்டும் அம்பலபதிக்கு வந்த வைகுண்டர் சிவனாக இருந்து அன்னை பகவதி, பார்வதி, உமையவளையும், பிரம்மதேவராக இருந்து சரஸ்வதியின் அம்சமான அன்னை மண்டைகாட்டாளையும், முருகனாக இருந்து வள்ளி, தெய்வானையையும் இகனை திருக்கல்யாணம் செய்தார்.  இப்படியான திருக்கல்யாணங்கள் மூலம்  ஏகப்பரம் பொருள் ஒன்றே என்பதை காட்டினார்.

தாமரைக் குளம்பதி

அய்யா வைகுண்டரின் பக்தரான அரிகோபாலன் பிறந்த ஊர் தாமரைக்குளம். அவரை சகாதேவன் என்றும் கூறுவார்கள். அவர்தான் அகிலத்திரட்டு என்ற புனித நூலை அய்யா வழி காட்ட எழுதி முடித்தார். அதனால் அவர் அய்யா வைகுண்டருடைய பக்தர்கள் மத்தியில் பிரபலமானவர்.

சாமித்தோப்பில் இருந்து ஒரு கிலோ தொலைவில் தெற்கு பகுதியில் உள்ள தாமரைக்குளத்தில் இந்தப்பதி அமைந்து உள்ளது. கன்னியா குமரி மற்றும் நாகர்கோவிலில் இருந்து அந்த இடத்திற்கு பஸ் மூலமும் செல்ல முடியும். நாகர்கோவிலில் இருந்து பதினாலு கிலோ தொலைவில் உள்ளது இந்தப்பதி. ஒரு முறை அய்யாவை அந்த இடத்திற்கு வருமாறு பக்தர்கள் அழைத்தனர். அவரும் அவர்களுடைய அழைப்பை ஏற்று அங்கு சென்று ஒருநாள் தங்கி விட்டு சாமித்தோப்பிற்குத் திரும்பினார். அங்கு வந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பூப்பதி

பூப்பதி நாகர்கோவிலில் இருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஈத்தமொழி என்ற இடத்தில் பூமதன்தாய் என்ற உருவில் ஆறு வயது சிறுமியாக பூமாதேவி இருந்தாள். தெய்வீகத் தம்பதிகளான அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்விக்க சிலர் விரும்பினாலும் அந்த சிறுமியின் உறவினர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால் அந்தச் சிறுமியோ அய்யா வைகுண்டரின் புகழைப் பாடிக்கொண்டே இருந்து அவள் சாதாரணப் பெண் அல்ல என்பதை அவர்களுக்கு எடுத்துக் காட்டினாள். அதன்பின் அவளுடைய உறவினர்கள் அய்யா வைகுண்டரை தங்களுடைய ஊருக்கு அழைத்து அவருடன் அவளைத் திருமணம் செய்து வைத்தனர்.
அதன் பின் அந்த இடத்தில் இருந்த குளிர்ந்த காற்று வீசிக் கொண்டு இருந்த புன்னை மரத்தோப்பில் சென்று அய்யா தங்கினார். அந்த இடத்தில்தான் பின்னர் பூப்பதி என்ற பதி நிறுவப்பட்டது.

சுவாமிதோப்பு பதி

அய்யா வைகுண்ட பரம்பொருளின் தவப்பதியாகும். அய்யா வைகுண்டரின் அவதார இகனைகளுடன் தொடர்புள்ளவைகளான பதிகளுள் சுவாமிதோப்பு பதி மிக முக்கியமானதாகும். அய்யா வைகுண்டர் ஆறு ஆண்டுகள் தனது தவ சொரூபத்தை காண்பத்தது இத்தலத்தில் ஆகும்.
மக்கள் தன்னை வழிபாடு செய்வதற்காக அய்யா ஐந்து பதிகளை நிறுவினார். இதில் முக்கிய பதி அய்யா வழிபாட்டின் இடமான சாமித்தோப்பில் அமைந்து உள்ளது

முட்டப்பதி

கன்னியாகுமரி கடலில் இருந்து இரண்டு கிலோ தொலைவில் உள்ளது முட்டப்பதி. அய்யா வைகுண்டருடைய பக்தர்கள் துவையல் பதியின் கடைசி கட்டத்தை நடத்தியது இங்குதான். அந்த ஊரில் எழுநூற்று குடும்பங்கள் ஒன்றாக வசித்தனர். சைவ சமையல் அருந்தி எளிமையாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தனர்.
அங்கிருந்தவர்களுடைய வாழ்க்கை முறையைக் காண பலர் அங்கு வந்து சென்றனர். துவையல்பதி நடந்த இடமான தேங்காய்த் தோப்பு கன்னியாகுமரியில் இருந்த ஒரு ஆசார பிராமணர் ஒருவருடைய இடமாகும். அந்த இடத்திற்கு வந்து அங்கிருந்தவர்களுடைய வாழ்க்கை முறையைப் பார்த்த அவர், அய்யா வைகுண்டரின் பக்தராகவே மாறி அந்த இடத்தை அவருக்கே தானமாகக் கொடுத்து விட்டார்.
அய்யா வைகுண்டர் கடலுக்குள் நுழைந்து விஷ்ணுவைக்கண்டு ஆசி பெறச் சென்ற கடல் பால் கடல் ஆகும். அது இந்த பதியின் பக்கத்தில்தான் உள்ளது. அந்த கடலில் சென்று குளித்தால் புண்ணியம் கிடைக்கும் என மக்கள் நம்புகிறார்கள். எனவே ஒவ்வொரு வருடமும் பங்குனி மாத கடைசி வெள்ளிக் கிழமைகளில் சாமித் தோப்பில் இருந்து ஆயி ரக்கணக்கான பக்தர்கள் முட்டப்பதிக்கு நடந்தே வந்து அந்த இடத்தில் உள்ள கடலில் குளிக்கின்றனர்.