அய்யா துணை

ஸ்ரீமன் நாராயணரின்

வைகுண்ட அவதார வரலாறு

அய்யா வைகுண்ட சுவாமி (C.1833 – C.1851):

“ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டமாய்த் தோன்றினார்” – அகிலத்திரட்டு

அன்பானவர்களே! அதர்மம் தலைதூக்கும் போதெல்லாம் தர்மத்தை நிலைநாட்ட ஆண்டவன் பல்வேறு அவதாரங்களை எடுத்து வந்து தர்மத்தைக் காப்பதுண்டு. கலியுகத்திலும் அதர்மம் தலை தூக்கியபோது, அதை அழித்து தர்மத்தை நிலை நாட்ட ஸ்ரீமன் நாராயணர் அவதாரம் எடுத்தார். இந்த அவதாரத்தில் அவரை ‘அய்யா’, ‘ஸ்ரீமன் வைகுண்ட சுவாமி‘ மற்றும் ‘ஸ்ரீமன் நாராயண சுவாமி‘ என்று அன்போடு மக்கள் அழைத்து வணங்க, அகிலத்திரட்டு எனும் வேதநூலோ ஸ்ரீ வைகுண்டரை ‘அய்யா’, ‘வைகுண்ட சுவாமி’, ‘வைகுண்டர்’, ‘வைகுண்டராசர்’, ‘ஸ்ரீ பண்டாரம்’, ‘ஆண்டவர்’, ‘கடவுள்’, ‘கர்த்தன்’, ‘இறைவன்’, ‘மாயோன்’, ‘நாராயணர்’, ‘விஷ்ணு’, ‘திருமால்’, ‘பெருமாள்’, ‘அய்யா நாராயணர்’, ‘சிவ நாராயணர்’, மற்றும் ‘சூரிய நாராயணர்’ என்று பல்வேறு நாமங்களில் குறிப்பிட்டு உள்ளது. ஸ்ரீமன் வைகுண்ட சுவாமியின் கோவிலை “பதி” என்றும், “திருநிழல் தாங்கல்” என்றும், “ஸ்ரீமன் நாராயண சுவாமி கோவில்” என்றும், “இணல் தாங்கல்” என்றும் அழைக்கின்றனர்.

புனித அகிலத்திரட்டு வேதநூலின்படி, பிரபஞ்சத்தைப் படைத்து, உலகெங்கும் வியாபித்துள்ள இறைவன், தீய சக்திகளை அழித்து மனித குலத்தைக் காப்பாற்ற ஒவ்வொரு யுகத்திலும் அவதரித்தார். கலியுகம் தோன்றுவதற்கு முன்னர் நீடிய யுகம், சதுர் யுகம், நெடு யுகம், கிரேதா யுகம், திரேதா யுகம், துவாபர யுகம் ஆகிய யுகங்களில் பகவான் நாராயணன் வெவ்வேறு வடிவங்களில் அவதாரம் எடுத்து குறோணி, சிங்க முக சூரன், துரியோதனன் போன்ற அசுர சக்திகளைக் கொன்றார்.

குரு முனிவர் மற்றும் வானோர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, சிவபெருமான் ஆதி ஆகமத்தில் கூறி இருந்தவாறே கலியுகம் தோன்ற வேண்டிய தருணம் வந்து விட்டபோது குறோணியின் கடைசி சதை பிண்டத்திற்கு உயிர் கொடுத்து தீய கலியனை தோற்றுவித்தார். பல்லாயிரக்கணக்கான வருடங்கள் கொடுங்கோல் ஆட்சியை நடத்திய கலிநீசனின் ஆட்சியில் மக்கள் பட்ட கஷ்டங்களை சகித்துக் கொள்ள முடியாத ஸ்ரீ மஹாவிஷ்ணு, சமூகத்தில் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் துயர் தீர்க்க ஆதி ஆகமத்தில் கூறப்பட்டு இருந்ததை போலவே கலிநீசனை கலியுகத்தோடு அழிக்க வேண்டிய தருணம் கனிந்து விட்டது என்பதை வேத வியாசர் மூலம் அறிந்து கொண்டு கலி நீசனை எதிர்கொள்ள பூலோகத்தில் திருச்செந்தூருக்கு வந்தார். திருச்செந்தூர் கடற்கரைக்கு வந்து சேர்ந்தவரை ரிஷ்யசிங்கர் எனும் கலைமுனி மற்றும் பதஞ்சலி எனும் ஞானமுனி இருவரும் வரவேற்று அவர் பாதத்தில் விழுந்து வணங்கினார்கள். ஸ்ரீ மஹாவிஷ்ணுவும் அவர்களை தன்னோடு கூட வைத்துக் கொண்டார். சான்றோர்களுக்காக மனம் இரங்கி மஹாவிஷ்ணு இந்த பூமியில் வந்தார் என்பதை அகிலத்திரட்டு கீழ் கண்டவாறு கூறி உள்ளது.

“பாண்டவர் தமக்காய்த் தோன்றி பகைதனை முடித்து மாயோன்
வீன்றிய கலியன் வந்த விசனத்தால் கயிலை யேகி
சான்றவர் தமக்கா யிந்தத் தரணியில் வந்த ஞாயம்
ஆண்டவர் அருளிச் செய்ய அம்மானை எழுதலுற்றேன்” – அகிலத்திரட்டு

 

ஸ்ரீ மஹாவிஷ்ணு வைகுண்டராக அவதரிக்க வரும் முன் கலிநீசனுக்கு புத்தி கூறச் செல்லும் வழியில், அவரை வேண்டி தவமிருந்த 55 பிரும்மரிஷிகள், எக்காள துர்கை இன்னொரு ரிஷியின் மனைவி மற்றும் ஒரு பசுவின் சாபங்களையும் விலக்கினார். இதைப்போலவே ஸ்ரீ வைகுண்டராக அவதரிக்க திருச்செந்தூர் கடலுக்கு வரும் வழியில் ‘கலியுகத்தில் தான் அவதரிக்க வரும்பொழுது பாவ விமோசனம் தருவேன்’ என்று ஏற்கனவே தந்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் கடற்கரையில் நோய்வாய்ப்பட்டு வந்த சம்பூரணத் தேவனுக்கு பாவ விமோசனம் அளித்து நற்பேறு அருளினார். பூலோகத்தார் இந்த சம்பூரணத் தேவனை முத்துக்குட்டி என்று அன்பாக அழைத்தார்கள்.

ஆதி வேத ஆகமத்தில் முன்னர் கூறப்பட்டு இருந்ததை போலவே, பூமிக்கு வந்த ஸ்ரீ மகாவிஷ்ணு திருச்செந்தூர் கடலில் உள்ளே சென்றார். அங்கு அவருக்காக காத்திருந்த லக்ஷ்மி தேவியின் மனதை மோக நிலைமையில் தள்ளி, அவளுடன் ஒன்றிணைந்து, கொல்லம் வருடம் 1008- ஆம் ஆண்டு, மாசி மாதம், 20 ஆம் தேதி, (அதாவது கி.பி. 1833 மார்ச் மாதம் 1- ஆம் தேதி) வெள்ளிக் கிழமை அன்று அவரே ஒரு உருவமற்ற குழந்தையாக அவளது உடலிலிருந்து வெளியே வந்தார். உருவமற்ற ஸ்ரீ மஹாவிஷ்ணு கடற்கரையை அடைந்தபோது, தனது உருவை சந்நியாசி வடிவிலான ‘ஸ்ரீ பண்டாரம்’ எனும் ஸ்ரீ வைகுண்டராக மனித சொரூபத்தில் காட்சி அளித்தார். அதுவே மகாவிஷ்ணுவின் பத்தாவது அவதாரம், பண்டார தோற்றத்திலான வைகுண்டர் அவதாரம் ஆகும். இப்படியாக ஸ்ரீ வைகுண்டர் திருச்செந்தூர் கடலில் அவதரித்து கடற்கரையில் வந்த புனித இடத்தையே ‘அவதார பதி’ என்று அழைக்கின்றார்கள். இது ‘நாராயணசுவாமி வழி’ என்றழைக்கப்படும் ‘அய்யா வழி’ புனிதத் தலங்களுள் ஒன்றாகும்.

கடற்கரைக்கு வந்த ஸ்ரீ மஹாவிஷ்ணு, கந்தை காவி வண்ண ஆடை உடுத்தி, கழுத்தில் பெரிய ருத்ராக்ஷ மாலை அணிந்து, கையில் மாத்திரைக்கோல் ஏந்தி, உச்சியிலே கொண்டையுமாக பண்டார உருவில் காட்சி அளிக்க, அவர் வரவை எதிர்நோக்கி காத்திருந்த தேவர்கள், மாமுனிவர்கள் மற்றும் பிறர் எல்லோரும் பாடல்களை பாடி, ஆடி மகிழ்ச்சியாக வரவேற்று காலில் விழுந்து வணங்கினார்கள். அங்கிருந்தவர்களுக்கு உபதேசம் செய்த பின் திருச்செந்தூரில் இருந்து கிளம்பி சுவாமிதோப்பிற்கு சென்ற ஸ்ரீ மஹாவிஷ்ணு, போகும் வழியில் ‘அம்பலப்பதி’ இருக்குமிடத்தில் சிவலிங்கம் ஒன்றை ஸ்தாபித்து வணங்கிய பின் மீண்டும் அங்கு வருவதாக உறுதி மொழியை எடுத்துக் கொண்டு சுவாமிதோப்பு மணவைபதியை அடைந்தார். இதை நல்ல நாராயணரும் வைகுண்டராய் மனிதவதாரம் எடுத்தார் என அகிலத்திரட்டு கீழ் கண்டவாறு கூறி உள்ளது.

“நல்லநா ராயணரும் நாமமணி வைகுண்டராய்ச்
செல்லத் திருவுளமாய்ச் சீமைக் குறுதியுமாய்
மனிதவதா ரமெடுத்து வைகுண்ட வாசவனும்
பனிதவழும் பத்தினியாள் பாலருட வங்கிசத்தில்” – அகிலத்திரட்டு

 

சுவாமிதோப்பு மணவைபதிக்கு வந்த ஸ்ரீ மஹாவிஷ்ணு பத்து மாதங்களாக அங்கே இருந்து, முன் யுகங்களில் நடைபெற்ற சம்பவங்களையும், வருங்கால நிகழ்வுகளையும் குறித்து கூறினார். இச்சமயம் அங்கிருந்த ரிஷியஷிங்கர் எனும் கலை மாமுனியை அழைத்து தனது அவதார உண்மையை கலிநீச அரசனுக்கு தெரியப்படுத்துமாறு கூற, உடனடியாக அந்த மாமுனிவரும் அனைத்து மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் ’ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டமாய்த் தோன்றினார்’ என்றும், ‘ஸ்ரீமன் நாராயணரே, தென் பகுதியில் மாசி மாதம் 1008-ஆம் ஆண்டு ஸ்ரீ மகாவிஷ்ணுவே, ஸ்ரீ வைகுண்டராக அவதரித்து விட்டதினால், இனி மக்கள் எவருக்குமே காணிக்கை கொடுக்கத் தேவை இல்லை, வேறெந்த தெய்வத்துக்கும் பயப்படத் தேவை இல்லை, காவடி எடுக்கவோ, காணிக்கை, லஞ்சங்கள் கொடுக்கவோ தேவை இல்லை. ஆனால் நேர்மையான வழியில், தெய்வ பக்தியோடு வாழ வேண்டும்’ என ஒரு பிரகடனத்தை வெளியிட்டார்.

ஸ்ரீ மஹாவிஷ்ணுவே தென் பகுதியில் ஸ்ரீ வைகுண்டராக அவதரித்து உள்ளார் என்று உலகிலுள்ளோர் அறிந்து கொண்டனர். இந்நேரம் கலியனை அழித்து, நல் மக்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வளமிக்க வாழ்வளிக்க விரும்பிய ஸ்ரீ வைகுண்டர், சிவபெருமானை நினைத்தபடி ஆறு ஆண்டுகள் தவத்தினை மேற்கொண்டார். அவர் தவமிருந்த புனித இடமே சுவாமித்தோப்பில் உள்ள மணவைபதி வடக்கு வாசல் ஆகும். அதனால் வடக்கு வாசல் அய்யாவின் ‘தவ வாசல்’ எனப் போற்றப்படுகிறது.

தவம் புரிந்த கால கட்டத்தில் பச்சரிசிப் பால் ஏற்று கொண்டார். வெகுக் குறைவாகவே பேசினார். இளம் வயது முதல் முதியோர் வரை பதினெட்டு ஜாதியையும் சேர்ந்த அனைவரும் ஒன்று சேர்ந்து ஸ்ரீ வைகுண்டரிடம் வந்தபோது பண்டார உருவில் இருந்தபடி அவர்கள் அனைவரையும் ஒரே தலத்தில் தங்க வைத்திருந்து தண்ணீர், திருமண் கொடுத்தே வந்தவர்களது தீராத நோய்களை விலக்கினார். அவரிடம் வந்த மழலை செல்வம் அற்றவர்கள் மழலை செல்வங்களை பெற்றார்கள், பிறவிக் குருடர்கள் கண் பார்வையும், உமைகள் பேசும் திறனையும் பெற்றார்கள். தீண்டாமை கொடுமைகளினால் அவதியுற்றவர்களது குறைகளை களைந்தார். மூடநம்பிக்கைகளை முற்றிலும் துறக்க உபதேசித்தார். ஒரே இடத்தில் கூடிய பதினெட்டு ஜாதியினரும் ஜாதி பேதம் இன்றி ஒன்றாக அன்புடன் பழக வழி வகுத்தார்.

ஸ்ரீ வைகுண்டரின் அருள் மொழிகள் உலகெங்கும் பரவ, சாதி, சமய பேதங்களை கடந்த மக்கள் அனைவரும் அவரே சரணாகதி என வணங்கி வளமான வாழ்வு பெற்றார்கள். ‘ஆதி ஆகமமான வேதத்தில் கூறி இருந்தபடி, தர்மத்தை நிலைநாட்ட, தான் பூமியில் அவதரித்து உள்ளதாகவும், அதை உலகில் பிறப்பெடுக்கும் நல்லோர்கள் காண்பார்கள்’ என்று ஸ்ரீ மஹாவிஷ்ணு போதனை செய்தார். ‘இந்த பிரபஞ்சத்தை படைத்து காக்கும் தன்னிடம் சரண் அடையுமாறு’ கூறியவர், ‘அனைவரும் ஜாதி மத பேதம் இன்றி ஒற்றுமையாக, ஒரே மனநிலையில் இருந்தவாறு, தனக்கு தொண்டுகளை செய்யுமாறு’ போதனை செய்தார். அவர் கொடுத்த தர்ம போதனை மக்களுக்கு மட்டும் அல்ல புல் பூண்டுகளுக்கும், ஊர்வன, மற்றும் அனைத்து உயிர்களுக்கும் சேர்த்தே கொடுத்த போதனையாகவே அமைந்து இருந்தது. தவ முடிவில், யுகத்தின் நிலையை ஆராய்ந்து பார்த்த ஸ்ரீ வைகுண்டரிடம் சென்ற மக்கள் கலிப் பேய்களின் அட்டகாசங்களை பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்று புலம்ப, உடனே ஸ்ரீ வைகுண்டரும் ஆகமக் கணக்கின்படி அந்த தீயப் பேய்கள் முன்னர் செய்து இருந்த அனைத்து அட்டூழியங்களையும் ஆராய்ந்து பார்த்தப் பின், அவற்றின் சக்திகளை அழிக்கும் தருணம் வந்து விட்டதை அறிந்து கொண்டு, சற்றும் தாமதிக்காமல் அந்தப் பேய்களோடு அவற்றின் சக்திகளையும் அழித்தார்.

அடுத்து சிறு தெய்வங்களாக மிருக பலி கொடுத்து வணங்கப்பட்டு வந்திருந்த சுடலைமாடன், கட்டையேறி, பலவேசம், மாசானம், காத்தவராயன் ஆகியோரது பெயர்களை கருடராசன், சிமிளராசன், தேர்தகன், துட்டிவீரன், தேர்குடையோன் என்று மாற்றி அமைத்து, அவர்களிடம் இருந்த முந்தைய வரங்களையும் பறித்து, மாற்று வரமும் கொடுத்து, தனது வலது பக்கத்தில் ‘ஏவல் சீவாய்’ (அதாவது தம்முடைய கட்டளைகளை ஏற்று நடப்பவர்கள்) எனும் பெயரில் வைத்துக் கொண்டார். இதனைத்தான் அகிலத்திரட்டு ‘வரமுள்ள தேவதைக்கு மாற்றி வுருக்கொடுத்து’ அதாவது ‘சக்தி பெற்றிருந்த சிறு தெய்வங்களின் முந்தைய சக்திகளை மாற்றி அமைத்த நிலை’ என்கிறது. அடுத்து மந்திர மாயம், பில்லி, சூனிய வினைகள் மூலம் மன மற்றும் உடல் கேட்டையும், மரணத்தையும் தந்திடும் தீய செயல்களை செய்து வந்த அனைத்து மந்திரவாதிகளிடமிருந்து மந்திர தந்திர சக்திகளையும், பாவி மாமுனிவர்களிடம் இருந்த மாயாஜால சாஸ்திர வித்தைகளையும் பறித்து விட்டார். பொய், பொல்லாங்கு செய்தவர்களையும் அழித்தார்.

ஸ்ரீ வைகுண்டர் தர்ம நெறிகளை பின்பற்றவும், ஒடுக்கப்பட்ட மக்களை மேம்படுத்தவும் ஆடவர்கள் தலைப்பாகை அணிந்து கொள்ள வேண்டும் என்றும், பெண்கள் தோள் சீலை அணிய வேண்டும் என்றும் கட்டளை இட்டார். அனைவரும் ஒன்றே என்ற நிலையை நிலைநாட்ட அனைவருமே ஒரே கிணற்று நீரை குடிக்கவும், ஒரே கிணற்று நீரில் குளிக்கவும் ஏற்பாடு செய்தார். அந்த கிணறே ‘முத்திரி கிணறு’ என்றழைக்கப்படுகிறது. மானமாக வாழ்ந்தால் கலி தானாகவே அழியும் என்று கூறி, சான்றோர்களுக்கு தன்மான உணர்வை ஊட்டி, சுய மரியாதை மிக்கவர்களாக, மானமுடையவர்களாக, அச்சமற்றவர்களாக வாழ உபதேசித்தார்.

ஸ்ரீ வைகுண்டரிடம் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் செல்வது பெருகிக் கொண்டே இருந்ததினால் தனி ‘சமதர்ம சாம்ராஜ்யம்’ உருவாகிறதே என பயந்து போன மன்னன், பூவண்டர் கூறிய அறிவுரையும் ஏற்காமல் “நன்கு கற்ற மேல்குலம் அதிலே மாயன் நற்குணமாகப் பிறக்காமல், சிறுகுலம் புக்குவாரோ? என நினைத்து ஸ்ரீ வைகுண்டரை கைது செய்து அவரை பலவிதங்களில் துன்பப்படுத்தினான். ஆனால் அவரோ தனது தெய்வீக லீலைகளை வெளிப்படுத்தி தமக்கு அவற்றினால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதைக் காட்டினார். ஸ்ரீ மகாவிஷ்ணு சாணார் குலத்தில் மட்டும் அல்ல வேறு எந்த குலத்தில் வேண்டுமானாலும் தோன்றுவார் என பூவண்டர் மன்னனுக்கு கூறிய அறிவுரையை கீழ் கண்டவாறு அகிலத்திரட்டு விவரிக்கின்றது.

“சாணெனக் குலத்தில் மாயன் சார்வரோஎன் றெண்ண வேண்டாம்
பாணனாய்த் தோன்றி நிற்பார் பறையனாய்த் தோன்றி நிற்பார்
தூணெனத் தோன்றி நிற்பார் தோலனாய்த் தோன்றி நிற்பார்
ஆணெனத் தோன்றி நிற்பார் அவருரு கேட்டி லீரோ” – அகிலத்திரட்டு

 

உலகளந்த ஆண்டவனுக்கு சாராயத்தில் விஷத்தைக் கலந்து குடிக்கக் கொடுத்தான். சுண்ணாம்பு களவாயில் வைத்து நீற்றினான். விறகுகளை அடுக்கி கொளுத்தி நெருப்பாக்கி அந்த நெருப்பிலே நடந்து வர செய்தான். ஆனால் ஸ்ரீ வைகுண்டரை விஷமோ, நெருப்பின் கொடிய நாக்குகளோ எதுவுமே செய்யவில்லை. அதைக் கண்டு மிரண்ட போன மன்னன் மூன்று நாட்கள் பட்டினி போடப்பட்டு இருந்த காட்டுப் புலியை பிடித்து வரச் செய்து அந்த புலியை ஒரு கூண்டில் அடைத்து வைத்து அந்த கூண்டிற்குள் ஸ்ரீ வைகுண்டரை தள்ளி புலிக்கு இரையாக்க எண்ணினான். அதைக் கண்டு பதறிய சான்றோர்கள் ‘சுவாமி இனி நாங்கள் என்ன செய்வோம்’ எனக் கதறியபோது, அமைதியாக ஸ்ரீ வைகுண்டர் கூறினார் ‘நானே உலகைப் படைத்தவன், உலகெங்கும் வியாபித்து உள்ளவனும், அனைத்து உயிர் இனங்களுக்கும் உள்ளே உள்ள ஜீவனும் நானேதான் என்பதினால் விலங்கினத்திற்கு என்னை தெரியாதா? ஆகவே கலங்கி நிற்கும் சான்றோர்களே, நீங்கள் மனம் தளர வேண்டாம்’ என ஆறுதல் கூறினார்.

தனது கூண்டில் தள்ளிவிடப்பட்ட ஸ்ரீ வைகுண்டரை பசியோடு இருந்த புலியும் நோக்கியது. கூட்டில் இருந்தவர் இறைவனே என்பதை அறிந்து கொண்ட புலியும் அவரைக் கொல்லாமல், அவர் அருகில் சென்று அவர் பாதத்தை தொட்டு வணங்கியபடி அமர்ந்து கொண்டது. அதைக் கண்ட மன்னனும், மன்னனின் படைகளும் திகைத்தனர். மன்னனின் படை வீரர்களும் ‘இவரே கலியுகத்தை முடிக்க வந்துள்ள கடவுளின் அவதாரமாக இருக்கலாம்’ என எண்ணலாயினர். உடனே உலகளந்த மாயனாகிய வைகுண்டரை சிறை தண்டனையிலிருந்து விடுதலை செய்தனர்.
சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ஸ்ரீ வைகுண்டரை சான்றோர் தொட்டில் ஒன்றில் அமர வைத்து தாமரையூர் நற்பதி இருக்கும் இடமான சுவாமிதோப்பிற்கு கொண்டு சென்றார்கள். சான்றோர்களின் புற மற்றும் அகத் தூய்மையை அதிகரிக்கும் வகையிலான ‘துவையல் தவசு’ எனப்படும் தவத்தை செய்ய சான்றோர்களுக்கு உத்தரவிட்டார். சான்றோர்களும் ஆண்டவரின் உத்தரவின்படி ‘வாகைப்பதி’ மற்றும் ‘முட்டப்பதி’ எனும் இடங்களில் தவத்தை நடத்தினர், தவநிறைவில் நல்ல உபதேசங்களை தந்தப் பின் அவரவர்களது வீடுகளுக்கு திருப்பி அனுப்பினார். அதை கீழ் கண்டவாறு அகிலத்திரட்டு விவரிக்கின்றது.

“நாரா யணக்குருவை நாளு மறவாமல்
பேராக வேயிருந்தால் பேறுங்களுக் கேகிடைக்கும்
அன்ன மளக்கும் ஆதித் திருநெடுமால்
முன்னவன் தன்பேரால் முத்திரிக ளிட்டதினால்
சென்ற இடமெல்லாம் சிறப்பதிக முங்களுக்கு” – அகிலத்திரட்டு

 

மேலும் பல தெய்வீக லீலைகளை நடத்திக் காட்டினார். ஸ்ரீ வைகுண்டர் சாஸ்திரக்கன்னி, கமலக்கன்னி, மோகக்கன்னி, மூலக்கன்னி, கடுங்சக்தி, தெய்வக்கன்னி, அரிமடவை எனும் ஏழு சப்த கன்னியரையும் மணந்து கொண்டார். சப்த மாதர்களை வைகுண்டர் திருமணம் செய்த இடம் ‘தாமரையூர் பதி’ என்றழைக்கப்படும் ‘சுவாமிதோப்பு பதி’ ஆகும். சப்த மாதர்கள் வாழ்ந்த இடத்தை ‘தொட்டில் பதி’ என அழைக்கின்றார்கள். மேலும் அவர் லெட்சுமி, பார்வதி, பகவதி, மண்டைக்காட்டாள், வள்ளி, தெய்வானை எனும் தெய்வ மாதர்களையும் திருக்கல்யாணம் செய்து கொண்டார். பூமாதேவியானவள், பூமடந்தை என்ற பெயருடன் பிறந்து வாழ்ந்து கொண்டிருந்த சூரங்குடி எனும் ஊருக்கு மக்களுடன் சென்று உலகறிய திருமணம் செய்தார். ஸ்ரீ வைகுண்டர் பூமடந்தை அம்மையை திருமணம் புரிந்து திரும்பி வரும் வழியில் தேவர்கள் பூ தூவி வணங்கிய இடம் இன்று ‘பூப்பதி’ என்று அழைக்கின்றார்கள். ஸ்ரீ வைகுண்டர் தான் அனைத்து மாதர்களுடன் சேர்ந்து விருந்து உண்ட இடத்தை ‘விருந்தேற்றப்பதி’ என்று அழைக்கின்றார்கள். இப்பதியே ‘தென்தாமரைக்குளம் பதி’ ஆகும். இப்பதிக்கு ‘திருஏடு’ தந்த பதி என்ற பெயரும் உண்டு.

“துடியிடைக் கன்னி மாரைத் திருமணந் திருமால் செய்து
குடிபுகழ்ச் சான்றோர் மக்கள் குரவைகள் முழக்கத் தோடு
திடிரெனத் தெருக்கள் சுற்றித் தேவியு மன்ன ராகப்
படிமிசைப் பதியி னுள்ளே பதிந்துவந் திருந்தா ரன்றே” – அகிலத்திரட்டு

 

முன் யுகத்தில் பாண்டவர்களாக இருந்த ஐந்து சகோதரர்களையும் மீண்டும் திரு. சிவனான்டி, திரு. முகுந்தன்பண்டாரம், திரு. அழகேசன், திரு. சுப்பையா, திரு. அரிகோபாலன் என்பவர்களாக பிறவி எடுக்க வைத்து தம்முடைய சீடர்களாக ஸ்ரீ வைகுண்டர் வைத்துக் கொண்டார் என்பதாக அகிலத்திரட்டு கூறுகிறது. அவர்களுள் ஒருவரான அரிகோபாலன் எனும் சீடர் மூலமாகவே அய்யா வழியின் போதனை நூலாகிய அகிலத்திரட்டு அம்மானை வெளிப்படுத்தப்பட்டது. அந்த புனித வேதநூல் எழுதப்பட்ட இடமே ‘தென்தாமரைக்குளம் பதி’ என்றழைக்கப்படுகிறது. ‘பதி’ என்பது ‘நாராயணசுவாமி வழி’ என்றழைக்கப்படும் அய்யா வழிபாட்டு தலங்களில் முதன்மையான வழிபாட்டு மையமாகும். பதிகள், பிற ஆலயங்களை போலவே கருதப்படுகின்றன.

ஸ்ரீ வைகுண்டராக அவதாரம் எடுத்த ஸ்ரீ மகாவிஷ்ணு ‘கலிநீசனிடம் இருந்த அனைத்து வரங்களும் அழிக்கப்படும், தவறு செய்தவர்கள் நரகத்திற்கு அனுப்பப்படுவார்கள், அவர்கள் தப்பிச் செல்ல முடியாதவாறு நரகத்தின் கதவுகள் பூட்டி வைக்கப்படும். பக்திமான்கள் விழித்தெழுவார்கள், நாட்டை ஆள சக்தி வாய்ந்த வரங்கள் வழங்கப்படும், புதிய தர்மயுகம் பிறக்கும், மக்கள் தத்தம் குடும்பங்களுடன் என்னுடைய ஒரே ஆளுமையின் கீழ் வாழ்வார்கள், துவரயம் பதியிலிருந்து அரசாட்சி செய்வேன் என்று பிரகடனம் செய்தார். இவ்வாறாக பல திருவிளையாடல்களை நடத்திய பின்னர் கொல்லம் 1026 ஆம் ஆண்டின் 21 ஆம் வைகாசி நாளான திங்கட்கிழமை நண்பகல் 12 மணிக்கு (1851 ஆம் ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி) ஒடுக்கப்பட்ட சான்றோர்களை பாதுகாத்து மேன்மை தர ஸ்ரீ வைகுண்டராக வெளிப்பட்ட ஸ்ரீ மகாவிஷ்ணு, தனது அவதாரத்தை முடித்துக் கொண்டு வைகுண்டத்திற்குத் திரும்பினார்.

ஸ்ரீ வைகுண்டர் மீது வான்லோகத்தார் மலர் தூவ, தேவாதி தேவர்கள் திருப் பாட்டு பாட, தெய்வ ரம்பையினர் குரவை ஒலி எழுப்ப, முனிவர்கள் பெரும் மகிழ்வோடு டம்மான மேளங்களை முழங்கிட, ஆதி மறையில் கூறப்பட்டு இருந்ததை போலவேதான் வைகுண்டராஜர் உலகை ஆள வந்தார் என தெய்வ சக்திகள் போற்றி அவரை வரவேற்றனர். பின் அவருக்கு பெரிய கிரீடமும், செங்கோலும் கொடுத்து, வைகுண்ட மாமுனி என பட்டமும் சூட்டி, சிங்க சிம்மாசனத்தில் அமர்த்தினார்கள். தர்ம சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு, மக்களை பரிசோதனையும் செய்து கொண்டு, பொய் வேடதாரிகளிடம் மயங்காமல், தான் உரைத்த அகிலத்திரட்டு வேத நூலின்படி வாழ்ந்திடும் மக்களுக்கு, தர்ம யுக வாழ்வு கொடுப்பதற்காக பார்த்துக் கொண்டிருக்கின்றார்.

‘யுகம்தோறும் அவதரித்த நாராயணர் கலியுகத்தை அழித்து தர்மயுகமாக பூமியை அரசாள வருகிறார்’. ஆகையால் நாமும் தர்மத்தை பின்பற்றி ஆண்டவனின் வழி நடப்போம், வாழ்வில் வெற்றிப் பெற்று தரும யுக வாழ்வை பெறுவோம்.

அய்யா உண்டு

என்றும் இறைபணியில்,
அகிலஉலக அய்யாவழி சேவை அமைப்பு
INTERNATIONAL AYYAVAZHI SERVICE FOUNDATION