தர்மயுக முரசு அக்டோபர் 2022

அய்யாவின் அருளால் எந்நாளும்நன்னாளே

-அசோக்குமார் அய்யா – 009607704901, 8012174032.

நாளும் பல ஊழியங்கள் நமக்கு மிக செய்திடுங்கோ,

ஏவல் கண்டு உங்களை நான் இரச்சித்து ஆண்டு கொள்வேன்

யார் என்ன சொன்னாலும் துவண்டு போகாமல் எந்த தடைக்கற்கள் வந்தாலும் அதை உடைத்தெறிந்து தினமும் ஆன்மிக தொண்டு ஆற்றிக் கொண்டு இருக்கும் ஆன்மிகவாதிகள் அனைவருக்கும் அன்பு வணக்கம் 

 ஆகம பாராயணக்காரர்களே! அகிலத்திரட்டு அம்மானை அழகாக சொல்கிறது “சாஸ்திர வேத நூலுக்கு சரியொத்த பேருக்கு உபகாரம் செய்யவும்”. அதாவது அய்யா தந்த ஆகம நூல் முறைப்படி வாழ்பவர்கள் சகல செளபாக்கியங்களும் பெற்று பிறவா நிலை பெற்று தர்மயுக வாழ்வு பெறுவர் என்று. இதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. 

 நாம் ஆன்மிக தொண்டாற்றுகின்ற போது பல கதாபாத்திரங்களைக் கையாளுகிறோம். எப்படியென்றால் அறப்பாடசாலை ஆசிரியராக, திருஏடு வாசிப்பாளராக, விளக்கவுரையாளராக, பாடசாலைகளாக விளங்கும் தாங்கலை முன்னெடுப்பவராக, சொற்பொழிவாளராக போன்ற அனைத்துவிதமான கதாபாத்திரங்களைக் கையாளுகிறோம். இந்த அனைத்துவிதமான கதாபாத்திரங்களே ஒரு வழிபாட்டை சிறப்பான முறையில் முன்னெடுத்துச் செல்லும். எனவே இந்தக் கதாபாத்திரங்களை கையாளுகின்ற போது மிகுந்த கவனம் தேவை. இதில் குறிப்பாக பாராயண உரையாளராக நமது பணியை கையாளுகின்ற போது சின்ன சின்ன தவறுகளையும் ஆகம சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு மாற்றி அமைக்க முடியும். 

 விளக்கவுரையாளர்களே! இப்பணி கிடைப்பதற்கு நாம் மாதவம் புரிந்திருக்க வேண்டும். இந்தப் பாக்கியம் அய்யா நமக்குத் தந்திருக்கிறார் என்றால் அதை பயபக்தியோடு கையாண்டு அச் சிறப்பை நாம் தக்கவைத்துக் கொள்ள வேண்டும். எப்படியென்றால் ஒரு தாங்கலை சார்ந்த அன்பர்கள் விளக்கவுரையாளரை அணுகி தங்கள் தாங்கலுக்கு விளக்கவுரை ஆற்ற வரவேண்டும் என்று விண்ணப்பிக்கின்ற போது விளக்கவுரையாளர் என்ன செய்ய வேண்டும், என்ன சொல்ல வேண்டுமென்றால், அன்பரே! நமது மரபுபடி பதினேழு நாட்கள் திருஏடுவாசிப்பு விழா நடத்த வேண்டும். திருஏடுவாசிப்பு நடைபெறுகின்ற போது முச்சந்தி வழிபாடுகள் தடைபட்டுவிடக் கூடாது. அது சரியான நேரத்தில் நடந்து கொண்டே இருக்க வேண்டும்.

 அறப்பாடசாலைகளும் அந்தந்த நேரத்துல நடந்து கொண்டே இருக்க வேண்டும். ஏடுவாசிப்பு விழாவின் போது இரவு தர்மகாரியங்கள் உண்டென்றால் சமையல் பணிகள் முன்கூட்டியே நிறைவு பெற்றிருக்க வேண்டும். ஏடுவாசிப்பு துவங்கின பிறகு எந்தவிதமான இடையூறும் நடந்துவிடக் கூடாது. அகிலத்திரட்டு அம்மானையின் ஒரு வரியும் விடாமல் வாசிப்போம். முடிந்த அளவிலான விளக்கத்தை விரிவாகச் சொல்வோம். எனவே நேரம் இல்லை நேரம் இல்லை என்று அவசரப் படுத்தக் கூடாது. மேலும் வாசிப்பு ஆரம்பித்த உடன் எல்லோரும் வரிசையாக அமர்ந்து கைகளில் அகிலத்திரட்டு அம்மானையை ஏந்தி உன்னிப்பாக கவனித்த வண்ணம் இருக்க வேண்டும். திருஏடுவாசிப்பு விழாவின் போது கொடி ஏற்று திருவிழாவை சேர்த்து வைத்து ஆகமத்திற்கு முக்கியத்துவம் இல்லா வண்ணம் செய்துவிடக் கூடாது. என்று, இதுபோன்ற சட்டதிட்டங்களைத் தங்களை அணுகின அன்பர்களிடம் எடுத்துரைத்து செயல்பட வேண்டும். 

 மேலும் திருஏடுவாசிப்பு ஆரம்பித்த முதல்நாளில் அங்கு வந்திருக்க கூடிய அனைத்து அன்புக்கொடி சொந்தங்களுக்கும் இந்தச் சட்டத்திட்டங்களைச் சொல்லி ஆரம்பிக்க வேண்டும். 

 அதுபோல திருஏடுவாசிப்பு நிறைவு நாளில் தாங்கலை முன்னெடுக்கும் அன்பர்களை முன்னே வரவழைத்து அத்தாங்கலின் நிறை குறைகளை அன்பாக எடுத்துரைத்து குறைகளைக் களைந்து நிறைகளைப் பெருக்கிச் செயல்படுங்கள் என்று வழிகாட்ட மறந்துவிடக் கூடாது. மேலும் திருஏடுவாசிப்பைக் காண வந்திருக்கும் சொந்தங்களுக்கும் ஏதோ வந்தோம் ஏதோ கேட்டோம் என்றில்லாமல். கேட்டதை உணர்ந்து, அதன்படி நடந்து, வாழ்ந்து காட்டுங்கள் என்று சொல்லிக் கொடுக்கவும் மறந்துவிடக் கூடாது. 

 இப்படி எல்லா விளக்கவுரையாளர்களும் ஆகம சட்டத்திட்டத்தின் படி செயல்பட ஆரம்பிக்கின்றன போது வழிபாடு சிறப்பாக ஜொலிக்கும். நம் வாழ்க்கை தரம் பிரகாசிக்கும். அய்யாவழி மக்கள் உலகத்தின முன்னோடிகளாக விளங்குவர். கலியுகம் அழியும். தர்மயுகம் மலரும். 

 சொல்லுங்கப்பா அன்பருக்கு துணையாக இருந்திடுங்கோ

அய்யா உண்டு

 

அகில கேள்வி

1 .கலியுகத்தின் மிகப்பெரிய தர்மம் எது?

2.காமனை எரித்தது யார்?

3.தம்பிரான் என்பவர் யார்?

4.தனுவறியாத பாவி யார்?

5.கச்சணி தனத்தாள் யார்?

 விடை ……… பக்கம் பார்க்கவும்

அன்புக்கொடி சொந்தங்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம்: அன்பானவர்களே: தாங்கள் சார்ந்துள்ள தாங்கல் வரலாற்றை நமது தர்மயுக முரசு பத்திரிகையில் வெளியிட வேண்டும் என்றால் உங்கள் தாங்கலின் வரலாற்றை அழகாக எழுதி 0096893145654 என்ற வாட்சப் எண்ணிற்கு தாங்கலின் புகைப்படத்தோடு சேர்த்து அனுப்பி தாருங்கள். அதனை வருகின்ற மாதங்களில் நமது தர்மயுக முரசு பத்திரிகையில் பதிவு செய்து வெளியிடலாம்.

உச்சிப்படிப்புவிளக்கம்

        கா.த.லிங்கேஷ் அய்யா –  9842679780

“நிறஞ்சி நிறைந்தவர் ஏகமெல்லாம் நிறைந்தவர்
எங்கும் நிறைந்தவர் ஏகமாய் நின்றவர்
மண்டலம் புகழ் படைத்த மாயன் குரு சன்னாசி”

 ‘நிறஞ்சி நிறைந்தவர்’ எனும் பதம், இறைவன் இவ்வுலகையும், உயிரினங்களையும் படைத்து, காத்து, இரட்சிக்கும் காரண காரியத்தை முழுமையாக விளக்குவதை உணரலாம். அதாவது, முதலில் தேவர்களை மேலோகத்தில் படைக்கிறார். பின் தேவர்களின் அம்சத்திலிருந்தே நான்கு வகை பிறப்புகள் மூலம் மனிதன் முதலான அனைத்து உயிரினங்களையும் பூமியில் படைக்கிறார். அவ்வாறு தான் படைத்த உயிரினங்களைப் பார்த்தே ஆனந்தம் கொள்கிறார். அத்தோடு நின்று விடாமல், அவை அனைத்தும் தன்னை உணர்ந்து தலைவனாகிய என்னை உணரும் பொருட்டு, வேதங்களை உருவாக்கி சதாசர்வ காலமும் உலகை இயக்கி, அவதாரங்களை மேற்கொண்டு ஆனந்தம் கொள்கிறார். இறுதியாக அனைத்து உயிர்களையும் பூரணத்துவத்தை உணரச் செய்து அவர்களுக்குத் தர்மயுக வாழ்வு எனும் பேற்றைக் கொடுத்து ஆனந்தம் கொள்கிறார். இதுவே இறைவனின் மேலான ஆனந்த நிலை. இவ்வாறு நாமமெல்லாம் இறைவனின் ஆட்சியின் கீழ் தர்மயுக வாழ்வை இன்பமாக அனுபவிப்பதைப் பார்த்து, மன நிறைவு கொள்கிறான். மன திருப்தி கொள்கிறான். தனது காரண காரியங்கள் அனைத்தும் நிறைவேறி விட்டதாக போரானந்தம் கொள்கிறான். அதனால் தான் ‘நிறைந்தவர்’ பதம் இறைவனை இங்குச் சிறப்பித்துச் சொல்கிறது.

“ஈதுதித்த காலம் ராச்சிய மொன்று உண்டு கண்டாய்
அவ்வுகத்தைக் கண்டு ஆதி பிரமா மகிழ்ந்து”
“இனிமேலும் எனக்கெதிரி யில்லை மானே
எமது மக்களோடும் கூடியிருந்து வாழ்வோம்
மனுவோரும் முனிவோரும் வானலோக
மாலோரும் என் வாக்கு வழியே வாழ்வார்”
“ஆகாத வஸ்து வெல்லாம் அழித்து நரகிலிட்டு
வாகாய்க் குழி மூட வந்ததோ சாகாத
சனங்கள் பலவஸ்துவையும் தர்மபதி ராக்ஷீயத்தில்
இனங்கள் ஒன்றாய் ஆழ ராஜா வென்று ஆகுதோ”

மேற்கண்ட அகிலத்திரட்டு வாசகங்களை இங்கு ஒப்புநோக்குவோம்.

‘நிறஞ்சி’ என்பதற்கு, அவன் படைத்த உயிருள்ள மற்றும் உயிரற்ற என அனைத்திலும் அவனே நீக்கமற ஜீவனாகவும் இயக்கமாகவும் கருப்பொருளாகவும் நிறைந்திருக்கிறான் என்பதே பொருளாகும். அதுபோல முதன்முதலில் தோன்றிய அசுர வித்தான குறோணியின் உயிரிலும் அவனே நீக்கமற நிறைந்திருக்கிறான். இதை, “பிண்டம் நிறையும் பொல்லாதான் தன் உடம்பு” “அண்டம் அமைய அவன் பிறந்தான் அம்மானை” எனும் அகில வாசகத்தின் மூலம் உணர்ந்து கொள்ளலாம்.

 “ஏகம் படைத்தவன் எங்கும் நிறைந்தவன்” “ஜீவஜெந்துக்கெல்லாம் ஜீவனும் நானல்லவோ” எனும் அகில வாசகத்தையும் இங்கு ஒப்பு நோக்குவோம். ‘ஏகமாய்’ எனும் பதம், இவ்வுலகின் நிகழ்ந்த, நிகழ்ந்து கொண்டிருக்கிற, நிகழப்போகிற என அனைத்து இயக்கத்திற்கும் இறைவனே காரண மூலமாகிறான் என்பதாகும். அவனுக்கு மேலான ‘மூப்பு’ என்று எதுவுமே இல்லை. ஒவ்வொரு உயிர்களின் கர்மவினைகளைப் பொறுத்து அவைகளுக்கு மேலும் மேலும் பிறவிகள் கொடுத்து 9 நவகிரகங்களின் சுழற்சியின் படி நன்மை தீமைகளைத் துய்க்க செய்து, ஞானத்தை உணரச் செய்து மேலான தர்மயுக வாழ்வை அருளும் நிலையையே ‘ஏகமாய் நின்றவர்’ எனும் சொல் மூலம் சிறப்பித்துச் சொல்லப்படுகிறது.

 “என்னை அறியாமல் ஏதும் வகை உலகில் இல்லை” “கூடியிருந்து கொலைகள் செய்வேன் பின் கொலை கழுவில் போட்டிடுவேன்” எனும் அருள்நூல் வாசகங்களை இங்கு ஒப்பு நோக்குவோம்

பொருள்: அங்கும் இங்கும் எங்கும் என உலகம் முழுதும் நீக்கமற நிறைந்திருப்பவரே, அனைத்து ஜீவராசியினுள்ளும் ஜீவனாக உறைந்து பின் அவைகள் மேலான தர்மயுக வாழ்வை அடையும் போது, அளாவிலா ஆனந்தத்தில் மனநிறைவு கொள்கிறான் என உணர்ந்து உம்மையே போற்றுகின்றோம். நாராயணருக்கு மேல் வேறொரு மூப்பு இல்லாமல், அவனே உலகின் அனைத்து இயக்கத்திற்கும் காரண மூலமாக அமைந்து, எங்கும் நிறைந்திருக்கிறான் என உணர்ந்து போற்றுகின்றோம்.

 நாராயணம் என்றும், சிவம் என்றும், பிரம்மம் என்றும் பல்வேறு நாம காரணங்களால் அண்ட-புவன சராசரம் முழுதும் போற்றுதலுக்குரிய புகழ் பெற்ற இறைவன் உண்மையில் எந்த வித ரூபத்திலோ நிறத்திலோ சூட்சுமத்திலோ அடங்காதவன். அப்படி வேதங்களால் கூட வரையறுக்க முடியாதவனே நம்மை கலிமாய இருளிலிருந்து மீட்டெடுக்க ஞானாசிரியனாக பண்டார கோலத்தில் அய்யா வைகுண்டமாக அவதரித்தார் என உணர்ந்து உம்மையே போற்றுகின்றோம

 தொடரும்…

அய்யா உண்டு

 அன்புக்கொடி சொந்தங்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம்: அன்பானவர்களே: தாங்கள் சார்ந்துள்ள தாங்கல் வரலாற்றை நமது தர்மயுக முரசு பத்திரிகையில் வெளியிட வேண்டும் என்றால் உங்கள் தாங்கலின் வரலாற்றை அழகாக எழுதி 0096893145654 என்ற வாட்சப் எண்ணிற்கு தாங்கலின் புகைப்படத்தோடு சேர்த்து அனுப்பி தாருங்கள். அதனை வருகின்ற மாதங்களில் நமது தர்மயுக முரசு பத்திரிகையில் பதிவு செய்து வெளியிடலாம்.

அகிலதிரட்டு அம்மானை மூலமும், உரையும்         

-க. ரீகன் அய்யா- 0096893145654

“கடல்நீ ரத்தனையும் கடவாய் நனையாமல்
குடலெல்லா மெத்தக் கொதிக்குதென வெகுண்டு
அகில முழுங்க ஆர்ப்பரித்து நிற்பளவில்
கைலைதனைக் கண்டு கண்கள் மிக கொண்டாடி”

இப்படியாக இந்த உலகம் படைக்கப்பட்டு தெய்வ சக்திகள் தோன்றி, நீடிய யுகம் என்று இறைவனால் பெயரிடப்பட்டு அங்குக் குறோணி என்ற அசுரனும் பிறவி செய்யப்பட்டு அனுப்ப படுகிறான். இப்படி அனுப்பபட்ட குறோணிக்குப் பசி ஏற்பட்டுத் துடிக்கின்றான். நல்லது கெட்டது என்று பாகுபாடு அறியாத குறோணி, இறைவனால் உண்டாக்கப்பட்ட இந்த உலகினையே தன்னுடைய பசிக்காக எடுத்து விழுங்க முற்படுகிறான்.

 அப்படி உலகை அழிக்க முற்பட்டு நிற்கும்போது தேவலோகமான கைலையங்கிரி அவன் கண்களுக்குத் தெரிகின்றது. சிவபெருமான் வீற்றிருக்கக்கூடிய கைலை அழகு அவனுக்குச் சிறப்பாக தெரிந்ததால் அதை எடுத்து விழுங்க முற்படுகின்றான்.

“ஆவி எடுத்து அவன் விழுங்கு மப்போது
தாவிக் குதித்துத் தப்பினார் மாயவரும்
மாயவரும் ஓடி மண்ணுலகம் புகுந்து
தூயவரு மங்கே சிவனை மிகநினைத்து”

 கைலையங்கிரியை கண்டவுடனேயே அவன் அதை எடுத்து அப்படியே விழுங்குகின்றான். அதுபோலவே மேலுலகங்களை எடுத்து விழுங்க இருக்கின்ற வேளையிலே, நாராயணர் அதிலிருந்து அவனுக்கு அகப்படாமல் நேராக பூவுலகிற்கு வருகின்றார்.

நாராயணர் பூவுலகிற்கு வருவதற்கான காரணம் தவம் புரிவதற்காக ஆகும். எந்தவிதமான கர்மாக்களையும் தீர்ப்பதற்கான இடமாகவே பூவுலகு இருக்கின்றது. அப்படி நாராயணர் மண்ணுலகில் சிவபெருமானை நினைத்து தவம் இருக்கின்றார்.

“தவசியிருந்தார் காண் தாமோ தரனாரும்
தவசு தனிலீசன் சன்னாசி போலே வந்து
ஆருநீ யிந்த ஆழ வனந்தனிலே
ஏதுநீதவசு யெனை நினைந்த வாறேது
என்று சன்னாசி இதுவுரைக்க மாயவரும்
பண்டுபட்ட பாட்டைப் பகர்ந்தா ரவரோடே”

 இப்படியாக சிவபெருமானை நினைத்து தாமோதரன் என்று அழைக்கப்படும் நாராயணர் வனத்திலே தவம் இருக்கின்றார். இப்படி தவம் இருக்கக்கூடிய நாராயணரிடத்தில், எங்கும் நிறைந்து இருக்கக்கூடிய சிவபெருமான் ஒரு சன்னாசி வடிவம் கொண்டு அவர் முன்னே காட்சிக் கொடுக்கின்றார்.

 இப்படி காட்சி கொடுத்த சிவபெருமான், நாராயணரிடத்தில் இந்த அடர்த்தியான வனத்திலே யாரை நினைத்துத் தவம் புரிகின்றீரோ அது நான்தான். நீர் எதற்காக இந்த தவத்தைப் புரிகின்றீர் என்று விளக்கமாகக் கூறவும் என்று கேட்க, நாராயணர் முன்பு நடந்த நிகழ்வுகளை சன்னாசி வடிவத்தில் இருந்த சிவபெருமானோடு கூறுகின்றார். குறோணி பிறந்ததுவும் அவன் கையிலையை எடுத்து விழுங்கியதுவும் என்று அத்தனையும் நாராயணர் கூறுகிறார்.

“கைலை எமலோகம் கரைக்கண்டர் சக்திவரை
அகிலமதைக் குறோணி அசுரனென்ற மாபாவி
விழுங்கினான் நானும் உபாயமாய்த் தப்பி வந்தேன்”

குரோணி என்ற கொடும்பாவி கையிலை முதல் அனைத்து தேவலோகத்தையும் விழுங்கிவிட்டான். எனவே தேவலோகம் முன்பு போல் இல்லாமல் அவன் பிடியில் உள்ளது. மீண்டும் கயிலயங்கிரி சிறப்புற்று விளங்க வேண்டும். அதில் பளிங்கு மலை நாதன் என்று சொல்லக்கூடிய சிவபெருமான் சிறப்பாக ஆட்சி புரிய வேண்டும். தேவ சங்கங்கள் எல்லாம் முன்பு எப்படி தங்கள் தங்கள் நிலைமையில் இருந்தார்களோ, அப்படியே அவர்களும் இருக்கவேண்டும். மேலோக துன்ப நிலைக்குக் காரணமான குறோணியை ஆறு துண்டுகளாக வெட்டி பூலோகத்தில் போட எனக்கு வரம் வேண்டும் என்று சன்னாசி வடிவில் வந்திருந்த சிவபெருமானிடம் நாராயணர் கேட்கின்றார்.

“என்று திருமால் எடுத்துரைக்கவே ஈசர்
மன்று தனையளந்த மாலோடு ரைக்கலுற்றார்
கேளாய்நீ விஷ்ணுவே கேடன் குறோணிதனை
தூளாக்கி ஆறு துண்ட மதுவாக்கி
விட்டெறிந்தால் அவனுதிரம் மேலு மொருயுகத்தில்
கெட்டுக் கிளையாய்க் கொடிய கூரக்குலமாய்
பிறக்கு மவனுதிரம் பொல்லாதான் தன்னுடம்பு”

இப்படி குறோணியை ஆறு துண்டுகளாக வெட்டி அழிப்பதற்காக சிவபெருமானிடம் நாராயணர் வரம் கேட்ட உடனே சிவபெருமான் நாராயணரைப் பார்த்து இந்த உலகத்தை அளந்த திருமாலே என்று அழைத்து, குறோணியை ஆறு துண்டுகளாக வெட்டினால் இனி நடக்கும் நிகழ்வுகளைக் கூறுகின்றார். அதாவது நாராயணரே! நீர் இப்போது இந்தக் குறோணியைஆறு துண்டுகளாக வெட்டினால் அவனுடைய ஒவ்வொரு துண்டும் அடுத்தடுத்த யுகத்திலே பிறக்கும். மேலும் அவன் உதிரமெல்லாம் அடுத்து வரக்கூடிய யுகங்களில் சூரக்குலங்களாக பிறக்கும் என்று சிவபெருமான் கூறுகின்றார்.

“துண்ட மொன்றுதானும் தொல்புவியி லேகடிய
குண்டோம சாலியனாய்க் குவலயத்திலே பிறப்பான்
அப்படியே குறோணி அவனுதிர மானதுவும்
இப்படியே ஆறு யுகத்துக் கவனுடம்பு
வந்துபிறப்பான் காண் மாற்றானா யுந்தனுக்கு”

 அதன்படி அடுத்த யுகத்தில் குறோணியினுடைய முதல் துண்டு குண்டோமசாலி என்னும் பெயர் கொண்டு இந்த உலகத்திலேயே பிறப்பான். அவன் உதிரங்கள் சூரக்குலங்களாக பிறக்கும். அதுபோலவே அடுத்தடுத்து வரக்கூடிய யுகங்களிலும் நீர் இப்போது இவனை வெட்டி அழிக்கக் கூடிய துண்டுகள் ஒவ்வொன்றும் பிறவி எடுக்கும். அவைகள் அத்தனையும் உமக்கு எதிரியாக வந்து பிறக்கும். என்று சிவபெருமான் நாராயணனிடம் கூறுகின்றார்.

“யுகத்துக் குகமே உத்தனாய் நீபிறந்து
அகத்துக் கவன்பிறப்பு ஆறு யுகமதிலும்
உண்டு மவன் சீவன் உயிரழிவு வந்து அன்னாள்
பண்டு நடுக்கேட்டுப் பாவி யவனுயிரைக்
கொன்று போட்டே நரகக் குழிதூக்க நாள்வருங்காண்
என்று விடைகொடுத்தார் ஈசுரர் காணம்மானை”

 இப்படி ஒவ்வொரு யுகமாக ஆறு யுகத்திலும் குறோணியினுடைய உயிர் பிறந்திருக்கும். அப்படி பிறவி செய்யப்பட்ட அந்த அசுர உயிரை வதைப்பதற்காக ஒவ்வொரு யுகத்திலும் உத்தமனாக நீரே பிறந்து அவனை அழிக்க வேண்டி வரும். ஒவ்வொரு யுகமாக நீர் அவன் யுகப்பிறப்பை வதைத்து இறுதியாக அவன் உயிருக்கு நடு கேட்க நாள் ஒன்று வரும். அப்போது அவன் செய்த குற்றங்களுக்கு நடு கேட்டு அவன் உயிரை நரகக் குழியில் தள்ள வேண்டிய காலம் வரும் என்று சிவபெருமான் இனி குறோணியை வதைத்த பின்பு நடக்கக்கூடிய நிகழ்வுகளை அய்யா நாராயணரிடம் கூறுகின்றா

 (தொடரும்)

   அய்யா அருளிய வாழ்வியல் நெறி முறைகள்

                         -த. சீதா லெட்சுமி அம்மா 949655691

இறைவனை அடைய தடையாக இருக்கும் பகைகள்

 இறைவனை அடைய தடையாக இருக்கும் பகைகளை நாம் அகப்பகை என்கிறோம். நாம் ஆத்மஞானம் பெறுவதற்குத் தடையாக இருப்பவை இந்த அகப்பகைகள். இந்த அகப்பகைகள் தான் புற பகைகள் உருவாவதற்கு காரணமாக அமைகிறது. அது மட்டுமல்ல நம்முடைய பிறவிப் பிணி தொடர்வதற்கும் காரணமாக அமைகிறது. இந்த அகப்பகைகளை அழிப்பதற்கு இறைவன் பல அவதாரங்களை மேற் கொண்டுள்ளார். இந்தக் கலியுகத்தில் இந்த அகப்பகைகள் எல்லோர் உள்ளிலும் நிறைந்துள்ளது. இதை விலக்க வேண்டும் என்றால் நாம் நம் வாழ்வில் ஒழுக்கநெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

அகப்பகைகள் எவை? நம் உள்ளத்தை எவ்வாறு சீர்கெட செய்கிறது என்பதை பார்போம்.

அகப்பகைகள் காமம், குரோதம், லோபம், மதம், மாச்சரியம், மோகம் என்பன.

  1. காமம்: காமம் என்பது ஆசை. நாம் எந்தப்பொருள் மீதும் ஆசை வைத்தால், அந்தப் பொருளின் நினைவாகவே ஆகிவிடுகின்றோம். நம் உள்ளத்தில் எந்த நேரமும், அந்தப் பொருள் மீதே ஞாபகமாக இருப்போம். அதை அடைவதற்கு முயற்சி செய்வதும், அலைவதுமாக இருப்போம். அந்தப் பொருள் கிடைத்து விட்டால், மனதில் சந்தோசம் உண்டாகும், இல்லையென்றால் மனதில் சதா வேதனை ஏற்படும். இப்படிப்பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றி சிந்தனைச் செய்ய முடியாது. இதனால் தான், ஆசைக்கு அடிமை ஆகாதே என்கிறார்கள்.
  1. குரோதம்: குரோதம் என்பது கோபம். யாராக இருந்தாலும் கோபம் வந்துவிட்டால், முன் பின் பாராமல், தாய், தந்தையர், சகோதரர்கள், உறவினர்கள் என்றும் சிந்திக்காமல், கொடூரமாகப் பேசுவதும், கேவலமான நிலைக்கு ஆளாக்குவதும் நேர்கின்றன. சிலர் கோபத்தில் கொலை கூடச் செய்துவிட்டு ஆயுள் முழுவதும் துன்பம் அனுபவிப்பார்கள். கோபத்தைப்போல் கொடியது உலகத்தில் வேறு எதுவும் இல்லை. கோபத்தால் அழிந்தவர்கள் கோடான கோடி பேர். கோபம் எழும் பொழுது நம் உடலில் உள்ள எத்தனையோ ஜீவ அணுக்கள் செத்து மடிகின்றன. நம் ஆயுளும் குறைந்து விடுகிறது. கோபத்தால் உணர்ச்சி வசப்பட்டவர்கள் எதையுமே செய்யத் துணிவார்கள். இவர்களால் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியாது. இதனால் தான் கோபத்திற்கு அடிமை ஆகாதே என்கிறார்கள்.
  1. லோபம்:லோபம் என்பது சுயநலம், பிறரைப் பற்றிச் சிந்திக்காமலும், இரக்கம் என்பதே இல்லாமலும், சுயநலத்துடன் பொருள்களைச் சேர்த்துவைத்து அழகு பார்ப்பதும், கஞ்சத்தனமும், எல்லாவற்றையும் தானே அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணமும், தீய வழியில் பொருள்களைச் சம்பாதிக்கக் கூடிய நோக்கமும், வஞ்சனை செய்து, பிறர் பொருளை அபகரித்துத் தானே வாழ நினைக்கும் குணமும், எப்பொழுதும் தன் பொருள்களைப் பற்றுடன் பாதுகாப்பதும் எல்லாம் சுயநலமே. இப்படிப் பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியாது. அதனால் தான் சுயநலத்திற்கு அடிமை ஆகாதே என்கிறார்கள்.
  1. மதம்:மதம் என்பது கர்வம் (ஆணவம்). ஒருவரையும் மதிக்காத மமதையோடு இருக்கும் நிலை. எதையும் தான் ஒருவரால் மட்டுமே சாதிக்க முடியும் என்ற கர்வம் கொள்ளச் செய்யும். தான் என்னும் அகந்தையால் திமிர் பிடித்து அலைவதும் உண்டு. ஆணவ நெறியால் யாவரையும் துன்பப் படுத்தித் தான் மகிழ்ச்சி அடைவதும் உண்டு. இப்படிப்பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியாது. இதனால் தான் கர்வத்திற்கு அடிமை ஆகாதே என்கிறார்கள
  1. மாச்சரியம்:மாச்சரியம் என்பது பொறாமை. பிறர் வாழ்வதைக் கண்டு பொறுக்க முடியாமல் வேதனைப்படுவது, எந்த நேரமும் நாம் நல்லபடியாக இல்லையே என்று தன்னையே நொந்து கொள்வது, எல்லாரும் சுகமாக இருக்கின்றார்களே, இவர்கள் எப்பொழுது கஷ்டப் படுவார்கள் என்று எண்ணுவது, இவை அனைத்தும் மாச்சரியம். தான் மட்டும் சுகமாக இருக்கவேண்டும் என்பதே இவர்கள் எண்ணம். பிறரைப் பார்க்கும் பொழுது தீய எண்ணங்களுடன் பெருமூச்சு விடுவார்கள். தாழ்வு மனப்பான்மையோடு, யாரைப் பார்த்தாலும் சகிக்க முடியாமல் எரிச்சலோடு இருப்பார்கள். இப்படிப் பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியாது. இதனால் தான் பொறாமைக்கு அடிமை ஆகாதே என்கிறார்கள்.
  1. மோகம்:மோகம் என்பது ஒரு மாயை. பிறருடைய பொருளுக்கு ஆசைப்படும் ஒரு பழக்கம். பிறரைப் போல் நாமும் அதேபோல் வாழவேண்டும் என்ற மாயையால் ஏற்படுகின்ற ஒரு மயக்கம். பிறர் அனுபவிப்பது போல் நாம் அனுபவிக்க வேண்டும் என்ற ஒரு மாய மயக்கம் தான் மோகம். இந்த மாய மயக்கத்தினால் நாம் நம்முடைய மனத்தைச் செலுத்தி வாழும் போது இறைவனை அடைய முடியாத ஒரு நிலைக்குத் தள்ளப்படுகிறோம்.

   இந்த அகப்பகைகளையுடைவர்கள் இறைவனை வழிபட முடியாது. இதையே அகத்தீட்டு என்றும் கூறுகிறோம் இறைவனோ நம் உள்ளத்திலேயே உறைந்திருக்கிறான்.. அகப்பகைகள் இருக்கும் இடத்தில் இறைவன் இருப்பதில்லை. எப்படி துர்நாற்றம் வீசுகின்ற இடத்தில் இருக்க முடியாதோ அதுபோல அகத்தீட்டு என்று சொல்லக்கூடிய எண்ணம் உடையவர்களுடைய உள்ளத்திலும் இறைவன் இருப்பதில்லை. இறைவனை நம் உள்ளத்தில் நாம் காண வேண்டும் என்றால் நம்முடைய மனம் தூய்மையானதாக இருக்க வேண்டும்.

 

அய்யா சொன்ன முன் அறிவிப்புகள் எவை?

– S. அன்ன செல்வம் அம்மா 9443622222

சென்ற மாத தொடர்ச்சி….

அய்யா வைகுண்டர் எட்டாவது யுகமாக தர்மயுகம் தோன்றும் என்றும், அதற்கு முன் அடையாளமாக பத்து முக்கிய சம்பவங்களைக் கூறி உள்ளார் அதில் ஒன்பது அடையாளங்களை முன்புள்ள தொடர்களில் பார்த்தோம். பத்தாவது அடையாளமாக அய்யா கூறும் சம்பவம்.

பூமி அதிரும் ஓசையினால் ஒரு பெருமூச்சு உண்டாகும்: 

 பூமி அதிர்ந்தது என்றால் என்ன? பூமி அதிர்தல் என்றால் நிலநடுக்கத்தைக் குறிக்கிறது. இங்கே அய்யா மிகப்பெரிய அபாய எச்சரிக்கை கூறுகின்றார். பூமி அதிரும் ஓசையின் ஒரு பெருமூச்சு உண்டாகும். இந்த வாசகத்தை நாம் சற்று ஆழமாக சிந்திக்க வேண்டும். நில நடுக்கம் என்றால் பூகம்பம் என்றும் சொல்வர். பூகம்பம் என்பது ஏதோ ஒரு நாட்டில் அல்லது ஏதோ ஒரு இடத்தில் நடக்கும். அதை நாம் அடிக்கடி செய்திகளாக அறிவோம். நிலநடுக்கம் பூகம்பம் என்பது ஓரளவுக்கு நாம் அறிந்த விஷயம். ஆனால் இங்கே அய்யா ஒட்டு மொத்த பூமியும் அதிரும் என்கிற விதமாகக் கூறுகின்றார். இதுவரை எவரும் காணாத சிந்தித்துப் பார்க்க முடியாத அளவுக்குப் பூமி அதிரும் என்பதைக் குறிக்கிறது. அப்படி இந்த பூலோகமே நடுங்கும் போது மாபெரும் அழிவு உண்டாகும். அந்த மாபெரும் அழிவின் ஓசையை மக்களால் தாங்கிக்கொள்ள முடியாது. மக்கள் உயிர் பயத்தால் அங்கலாய்த்துப் போவார்கள். மரணத்தைக் கேட்டு உலகமே பெருமூச்சுவிட்டு தவிக்கும் படியாக அமையும் என்கிறார்.

நம்மை வாழ வைத்துக் கொண்டிருக்கும் பஞ்சபூதங்களில் முதன்மையானது நிலம். அந்த நிலமே நடுங்கினால் நம்முடைய நிலை என்ன? இயற்கையாக இறைவன், நமக்குத் தந்த பஞ்சபூதங்களே இயற்கைக்கு மாறாக செயல்பட்டால் அதைத் தாங்கிப் பிடிக்க முடியுமா? ஏன்? எதற்கு? என்பதை நாம் சிந்திக்க வேண்டும். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இவைகள் மூலம் பல இயற்கை அழிவுகளை நாம் கண்ணால் கண்டு கொண்டு இருக்கிறோம். இவைகள் அனைத்தும் காரண காரியத்திற்காகவே நடக்கிறது.

“பொறுதி யென்ற தீயாலே பூலோகம் அழியுதடா
பதினெட்டு துர்க்கையாலே பாழாகும் லோகமெல்லாம்
வடகடலும் அழிக்கிறதே வானம் இடியுதடா
பூமி வெடிக்கிறதே மலைகள் இளகுதடா
சுழல்காற்று வருதப்பா தேசம்விட்டு ஜனம் ஓடுதடா” 

 அய்யா நடத்தும் சூட்சமங்களை இங்கே வெளிப்படுத்துகிறார். நான் பொறுமை என்கிற சக்தியால் கலியுகத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக பலவிதமாக இயற்கை மூலம் இவ்வுலகை அழிக்கிறேன். பதினெட்டு கரங்களைக் கொண்ட துர்க்கை மூலமாக கலியுகத்தை முடிக்க போகிறேன். துர்க்கை என்றால் எவராலும் வெல்ல முடியாத வெற்றிக்கு உரியவள். பதினெட்டுக் கரங்களில் பதினெட்டு ஆயுதங்களை ஏந்தி நிற்பவள். காளியின் அம்சம். வீரத்தாய். தீமையை அழிப்பவள்.

 மேலும் வட எல்கையாக இருக்கின்ற இமயமலை பனிப்பாறைகள் பூமியின் வெப்பத்தால் உருகி கடல் மட்டம் உயர்வடையும். இதனால் நீர் ஓட்டம், காற்று ஓட்டம் இரண்டும் மாறுபடும். ஆகவே வானிலையில் பல மாற்றங்கள் உண்டாகும். எனவே வானத்தில் இடியும் மின்னலும் தோன்றி மாபெரும் மாற்றங்களை உண்டு பண்ணும். அப்போது மழை வெள்ளத்தால் அழிவு. நிலநடுக்கத்தால் அழிவு. நிலச்சரிவினால் மலைகள் சரிந்துவிடும். சுழல் காற்று என அனைத்தும் ஒன்று சேர்ந்து மக்களை திக்குமுக்காட வைக்கும்.

 மக்கள் உயிர் பிழைப்பதற்காக தேசம் விட்டு தேசம் ஓடுவார்கள். இப்படி இயற்கையால் பலவிதமான அழிவுகள் நேரிடும் போது கலியுகத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட நான் காட்சி தருவேன். 

தர்மயுகமாக்கி தாரணியை ஆளுதற்கு
கர்கக் கலியில் கடவுளர் வந்த கதை
சாகாதிருக்கும் தர்ம அன்புள்ளோர் முன்
வாகாகத் தர்ம அம்மானை தான் வகுத்தார்”

அய்யா வைகுண்டர் கூறும் ஆகமச் செய்திகளை ஆராய்ந்து அறிந்து செயல்படுவோமாக. அய்யா கூறும் முன் அறிவிப்புகளை ஏன்? எதற்கு? என்று அறிந்து செயல்படுவோம்.

                                                 …… மீண்டும் தொடரும்

அய்யா உண்டு

அகில விடை

1.நாராயணரின் வைகுண்ட அவதாரத்தைச் சொல்லுவது

2.ஈசன்

3.இறைவன்

4.அம்மை உமையவள்

அய்யா உண்டு

நிலை அழியாமை

– ஹரி வெங்கடேஷ் அய்யா 8508518505

 

நிலை அழியாதிருங்கோ நீதியாய் நின்றிடுங்கோ

 நம்மை சுற்றி நிகழும் நிகழ்வுகள் நாம் விரும்பத்தக்க நிகழ்வாக இருந்தாலும் விரும்பத்தகாத நிகழ்வாக இருந்தாலும் இரண்டையும் சமமாக நிறுத்தி ஏற்றுக்கொள்ளும் மனோபாவம்தான் நிலை அழியாமை. நிலை அழியாத மனம் என்பது அப்படிப்பட்ட ஒரு சமநிலையில் இருக்கும் “ஏற்பு மனம்”. நாம் விரும்பியபடி நிகழும்போது மகிழ்ச்சியில் துள்ளவும் கூடாது. விரும்பியபடி நிகழாவிடில் துக்கத்தில் துவளவும் கூடாது. வருவதை வந்தவாறு ஏற்றுக்கொள்ள வேண்டும்.

 அந்தந்த சூழ்நிலையில் எதைச் செய்வது நமது கடமையோ அதைச் சரியாக செய்ய வேண்டும். செய்த காரியம் தோல்வியுற்றால், அதில் உள்ள உண்மையைப் பார்க்க வேண்டும். அதன் மூலம் அனுபவத்தைப் பெற வேண்டும். கற்றுக்கொள்ள வேண்டும். எதைச் செய்வது தர்மமோ எதை செய்வது நீதியோ அதனை செய்ய வேண்டும். மனதின் உணர்வுகளுக்கு இடம் தராமல் அறிவுக்கு இடம் தந்து ஒரு விஷயத்தை அறிவுடன் பார்க்க வேண்டும். சம மனநிலையில் பார்க்கும் போதுதான் உள்ளது உள்ளபடி தெரியும்.

சான்றோன் ஒருவர் வீட்டுக் கதவை ஒரு தூதுவன் தட்டுகிறான். சான்றோன் கதவைத் திறந்து ‘என்ன நடந்தது’ என்று கேட்கிறார். “ஐயா உங்கள் பொன் உடைமை ஆடுமாடு செல்வங்கள் ஆகியவற்றைச் சுமந்துவந்த கப்பல் கவிழ்ந்துவிட்டது”

 “என்ன!”

“கப்பல் கவிழ்ந்துவிட்டது”

“அதனால் என்ன!”

“ஐயா! உங்கள் செல்வம் தொலைந்துவிட்டது”

“எதையும் மீட்க முடியவில்லை”

“என்ன!”

 “அதாவது நீங்கள் பரம ஏழையாகி விட்டீர்”

“அதனால் என்ன?”

 ஒவ்வொரு முறையும் உண்மை அவர் காதில் விழும்போதும் இயல்பான அதிர்ச்சியும், வருத்தமும் ஏற்படுவதால் ‘என்ன!’ என்று திடுக்கிடுகிறார். ஆனால் உடனே மனச்சமநிலை பெற்று ‘அதனால் என்ன?’ என்றுரைக்கின்றார். ஏழையாகிவிடுவதால் ஏதும் கெட்டுவிடவில்லை, மீண்டும் பொருள் ஈட்டலாம். பொன் உடைமை ஆடு மாடுகளை இழந்தது என்னவோ உண்மைதான், ஆனால் இழந்தவை மீண்டும் வருவதில்லை, அதற்காக வருந்திப் பலனில்லை. வருந்துவதால் இழந்தவை திரும்ப கிடைக்கப் போவதில்லை. உண்மை எப்படி இருந்தாலும் மாற்ற முடியாத ஒரு சூழ்நிலை என்று தெரிந்ததும் அதை மறுக்காமல் ஏற்றுக்கொள்ளும் பண்பே அறிவுடமை.

  இந்தச் சான்றோன் அதனைக் கடைப்பிடிக்கிறார். தினமும் பற்பல நிகழ்வுகள் வந்து போகின்றன. எல்லாவற்றையும் சம மனதுடன் எதிர்கொள்வதே நம் கடமை. நல்ல விளைவுகளைச் சந்தோஷமாக ஏற்க வேண்டும். தீய விளைவுகளை வெறுப்பும் கசப்புமின்றி துணிவுடன் ஏற்க வேண்டும். (இதன் பொருள் நடப்பவை எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதில்லை) இக்கட்டான சூழலை முடிந்த அளவுக்கு இதமாக்க முயல வேண்டும், முடியாவிடில் முழுமனத்துடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

 அய்யா உண்டு

அகில விருத்தமும் விளக்கமும்

– பா. அசோக் குமார் அய்யா 009607704901, 8012174032

விருத்தம்: 6

“ஆறு செஞ்சடை சூடிய அய்யனார்
அமர்ந்து வாழுங் கைலை வளமதை
வாறு வாறு வகுக்க முடிந்திடா
மகிளுங்குண்ட வளஞ் சொல்லி யற்புதம்
கூறக் கூறக் குறைவில்லை காணுமே
கொன்றை சூடிய அண்டர்த்திருப்பதம்
வேறு வேறு விளம்பவே கேளுங்கோ
மெய்யுள்ளோறாகிய வேத அன்போரே”

விளக்கம்:

 கங்கையை தன்னுடைய செம்மையான ஜடாமுடியில் சூடிய சிவபெருமான் அமர்ந்து வாழுகின்ற கைலை மலையின் சிறப்பானது, கொன்றை என்னும் மலரைச் சூடுகின்ற சிவனின் திருபாதத்தைப் போன்று, கைலையின் வளமும் சொல்லச் சொல்லக் குறையாமல் இருப்பதைக் காணலாம். சொல்லிச் சொல்லி விவரிக்க முடியாத சிறப்புப் பொருந்திய வைகுண்டத்தின் வளமையைச் சொல்லிய பின்பு, வேறு வேறான பல விஷயங்களையும் அய்யா சொல்ல கேளுங்கள் வேதத்தின்படி நடக்கின்ற உண்மையான அன்பர்களே!

அய்யா உண்டு

அய்யாவின் வருத்தமும், நடுத்தீர்ப்பும்

– பா. கிருஷ்ணமணி அப்புக்குட்டி அய்யா – 9841933992

உங்கள் வருத்தம் கண்டு ஒரு மருந்து கொண்டு வந்தேன் என்று அய்யாவே வருத்தப்பட யார் தான் காரண

வேறு யார், நாம் தான் காரணம். ஆம், உண்மையில் நமது செயலைக் கண்டே அய்யா வருத்தப்படுகிறார். சரி, அய்யா வருத்தப்படுகின்ற அளவுக்கு நாம் அப்படி என்ன தான் பெரிய தப்பு செய்து விட்டோம்?. வேறு ஒன்றுமில்லை, அய்யா சொன்னபடி நாம் நடக்கவில்லை அது தான் நாம் செய்த தவறு. அய்யா சொன்னபடி நாம் நடக்காத போது நமது அய்யாவுக்கு வருத்தம் வரத்தானே செய்யும். நாம் பெற்ற பிள்ளை நமது சொல்படி நடக்கவில்லை என்றால் நமக்கு எவ்வளவு கோபமும் வருத்தமும் வருகிறது. அது போல் தானே அய்யாவின் பிள்ளைகளாகிய நாம் அய்யா சொன்னபடி நடக்காத பொது அய்யாவுக்கும் வருத்தம் வரத்தானே செய்யும். அதனால் தான்

புத்திக்கெட்ட பிள்ளைகளே சக்திகெட்டுப் போனீர்களே*

ஒருகாதில் தான்கேட்டு ஒருகாதில் வீட்டீர்களே

 என்கிறார். அய்யா வைகுண்டர் பரம்பொருள் அல்லவா அதனால் தான் நாம் நன்மை பெறும் வகையில் அவரின் உபதேசத்தை கடைப்பிடிக்க மாட்டோம் என்பதை அன்றே சொல்லி விட்டார். அப்படி என்ன தான் சொன்னார் என்றால்.

 உள்ளபடி நாமளித்த உபதேசம் சொன்னாலும்

*நல்லதென்று சொல்லியவன் நன்மைகொள்ள மாட்டானே

 அவனை விட இவனை விட நான் நல்லவனாக இருக்கின்றேன், ஊரு உலகத்தில் என்னைவிட மோசமானவர்கள் அதிகமாக இருக்கின்றார்கள், இது கலிகாலம் இப்படித்தான் இருக்கும், இந்தக் காலத்தில் இப்படி இருந்தால் தான் பிழைக்க முடியும் என்றெல்லாம் நாம் செய்யும் குற்றத்திற்குச் சாக்குப் போக்குச் சொல்லி அய்யாவின் நடுத்தீர்ப்பிலிருந்து தப்பி விட முடியாது. ஏனென்றால் அய்யா சொல்கின்றார்.

 இச்சட்டந் தன்னில் எள்ளளவு தப்பினதால்

தீச்சட்டம் காய்க்கத் தேதிவரு மென்மகனே

அணுப்போல் மறவாதே யான்வைத்த சட்டமதில்

 ஆம், அவனை விட நல்லவனா? இவனை விட நல்லவனா? என்று மற்றவர்களுடன் ஒப்பிட்டு நம்மை அய்யா பார்ப்பதில்லை. மாறாக அவர் வகுத்துக் கொடுத்த சட்டத்தில் அணு அளவும் தவறாமல் வாழ்கின்றோமா என்று தான் பார்ப்பார். எனவே மற்றவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என ஆராய்வதை விட்டு விட்டு நாம் சரியாக அய்யா சொன்னபடி வாழ்கின்றோமா என்று நம்மை நாமே கேள்வி கேட்க வேண்டும். அப்போது தான் நமது தவறை சரி செய்து தர்மயுகத்திற்கான பாதையில் செல்ல முடியும். பிறர் செய்கின்ற குற்றத்தைக் கண்டு பிடிப்பதிலும், அதனைச் சுட்டிக்காட்டுவதிலும், ஆராய்வதிலும் இருக்கின்ற ஆர்வத்தை நமது குற்றத்தை ஆராய்ந்து விலக்குவதில் காட்ட வேண்டும். அப்படி நாம் செய்யவில்லை என்பதாலேயே அய்யா இப்படி வருந்தி கூறுகின்றார்….

 கோத்திரத்தில் உள்ளவர்களுக்கு கூடுமட்டும் புத்திசொன்னேன்

கேளாத பேர்களுக்கு நானென்ன செய்வேனப்பா

 இந்த மக்களுக்கு எவ்வளவோ புத்தி சொல்லியும் இவர்கள் கேட்கவில்லை, எனவே நான் எந்தப் பலனையும் கண்டதில்லையே, இனி இவர்களைக் கைவிட்டு விட வேண்டியது தான் என்று கோபத்தில் சொல்கிறார்.

 ஓடுங்கிவிட்டேன் ஆடுமேய்த்து ஓருபலனும் கண்டதில்லை

கடுவாய்க்கு இரையாக ஆட்டைக் காட்டிக்கொடுத்திருவேன்

 

அய்யா சொல்லிய உபதேசங்களை நாம் கேட்காமல் இருப்பதால் அய்யாவுக்கு எந்த விதமான நஷ்டமும் ஏற்படப் போவதில்லை. ஆனால் நமக்கே மீள முடியாத நரக வாழ்கை காத்துக் கொண்டிருக்கிறது. அதர்மமாக வாழ்கின்ற எவரும் நரகத்தில் வீழ்வதிலிருந்து தப்ப முடியாது. அய்யா இந்த கலியுகத்தை முடித்து தர்ம யுகத்தை தோன்ற வைக்க வருகின்ற போது எங்களுக்கு எதுவுமே தெரியாது, தெரியாமல் செய்து விட்டோம், எனவே மன்னித்து உம்முடைய அருளை தந்து எங்களை காத்துக் கொள்ளும் என்று கும்பிட்டாலும் அதர்மிகளை அய்யா விட்டு விடுவதில்லை. தீயவர்களை எப்படியும் நரகத்திற்கு அனுப்பி விடுவேன் என்கின்றார். எனவே சாகின்ற தருவாயில் “சங்கரா சங்கரா” என்பதை விட, வாழ்கின்ற போதே நல்வழியில் வாழ்ந்தோமானால் சாவைக் கண்டோ, நடுத்தீர்ப்பைக் கண்டோ அஞ்ச வேண்டியதில்லை. இதையே அய்யா….

 ஒருசாம நேரத்திலே ஊழியென்ற காற்று வரும்

மற்புடைய பிள்ளைகளே வருவேன் நான் எழுப்புதற்கு

என்னை அறியாதவன் உன்னால் தவம் வேணுமென்பான்

எப்படியும் கும்பிடுவான் புழுக்குழியில் தள்ளிடுவேன்

என்கிறார். நாமெல்லாம் அய்யாவின் பிள்ளைகள் என்கிறோம், எனவே அதற்குரிய தகுதியோடு நடப்பதே நமக்கு பெருமை சேர்க்கும். அவ்வாறு இல்லாமல் நம்மை படைத்த தகப்பனான அய்யா வருந்தும் வகையில் நடப்பது அழகல்ல. எவ்வளவு மன சங்கடப்பட்டு இருந்தால் அய்யா *”இது வரையும் புத்தி சொல்லி என் வாயும் சடைந்து போச்சு”* என்று சொல்லியிருப்பார் என்பதை நாம் மனதில் எண்ணிப் பார்க்க வேண்டும். நாம் புத்தி கெட்டுப் போனால் அதற்கு அய்யா பொறுப்பாக மாட்டார், அப்போது நமக்குத் துணையாகவும் இருக்க மாட்டார். அவர் சொன்ன சத்தியத்தில் நடக்கும் போது மட்டுமே நமக்கு என்றென்றும் துணையாக இருப்பார். இதை அய்யாவே.

 புத்தியினாற் கெட்டதுக்கு பெருமாள் நானென்ன செய்வேன்

சத்தியத்தில் குடியிருந்தால் சாமி துணையாய் வருவேன்

என்கின்றார். அய்யா இந்தக் கொடிய கலியுகத்தை முடித்துத் தர்ம யுகத்தை ஆள வர இருக்கின்றார். நாம் ஒவ்வொருவரும் அவரின் பாதத்தை அடைவதற்கான தர்ம வழியினைக் கடைப்பிடித்து, அதனைப் பேணி நடக்க வேண்டும். இல்லையென்றால் அய்யாவின் நடுத்தீர்ப்புக்கு நாம் பதில் சொல்ல முடியாது. பின்னால் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் தர்ம யுகத்தை அடைய முடியாது. எனவே இக்கணமே அய்யாவின் உபதேசத்தின் படி நடந்து, தர்மயுக வாழ்வை அடைவதையே லட்சியமாகக் கொண்டு நமது வாழ்க்கைப் பாதையை அமைப்போம் அய்யாவின் துணை கொண்டு.

நடுத்தீர்வை செய்யவாறேன் நாதனிடம் சேர்ந்திருங்கோ

பின்னாலே ஏலாது பேணிவழி நடந்திடுங்கோ

சரணாகதி 

– வைகுண்ட ராஜன் அய்யா – 9500791234

“ஆண்டவரே இப்பரிசம் தருவீரானால்
யாமடியார் ஆளுகின்ற வஸ்து எல்லாம்
கூண்டபண்டம் பொன்னுடைமை ஆடுமாடு
குருபரனே யாங்கள் வரை உமக்கு சொந்தம்
மீண்டடிமை முக்காலும் உமக்கு நாங்கள்
விலையடிமை ஆனோம் காண் விரய மாலே
பாண்டவரை காத்து ரட்சித்து ஆண்டார் போலே
பாவையரும் மக்களும் உம் பக்கம் தானே”

இவ்வார்த்தைகளைச் சொன்ன பின் தான் எம்பெருமான் சப்த கன்னி மாதர்களை மனமுவந்து திருமணம் புரிந்து தன்னோடு ஐக்கியப்படுத்திக் கொள்கிறார். இதுவே முழுமையாக ஆண்டவனிடம் சரணாகதி அடைவது. துரியோதனன் சபையில் துச்சாதனன் துகில் உரியும் போது பாஞ்சாலி தன் இரு கைகளையும் மேலுயர்த்தி கிருஷ்ண பரமாத்மாவிடம் சரணாகதி அடைந்தாளே அதைப்போல. அந்த சரணாகதி தான் முழுமையான பக்தி மார்க்கம்.

 அந்த சரணாகதி அடையும் அளவுக்கு மனதை பக்குவப்படுத்திய அன்பர்கள், இறைவனை எங்கும் தேடி அலைய வேண்டியதில்லை. அப்படிப்பட்ட ஒரு பக்தனை இறைவனே தேடி வருவான்.

 மாறாக, வருடத்துக்கு ஒரு முறை கோயிலுக்குச் சென்றுவிட்டு இறைவா எனக்குக் கார் வேண்டும் பங்களா வேண்டும், பணம் வேண்டும், சொத்து வேண்டும் எனக் கேட்பதெல்லாம் பக்தி அல்ல.

 மனமது செம்மையானால் மந்திரமும் தேவை இல்லை

தர்மத்தை கடைப்பிடிப்போம்

      – அலெக்ஸ் ராஜன் அய்யா, 8248688566

மாமனுக்கு ஏற்காமல் மனம் போல் நடக்கின்றார்

அனேகமானோர்கள் இன்று மனுதர்மத்தைக் கடைபிடியாமல் “இல்லாத எளியோரை வஞ்சித்து சம்பாதித்து வருகின்றனர்”. அன்பாகி வந்தோரை அலைச்சல் செய்து ஏற்கும் மாயவரின் வித்தைகளில் ஒன்று என்னவென்றால், ஒரு சான்றோனுக்கு அவனின் வாழ்வுக்குத் தேவையான பொன்னையும், பொருளையும் கொடுத்துவிட்டு… அதன் பின்னர் அவன் எப்படி நடக்கிறான் என்பதற்காக இன்னும் பல வாய்ப்புகளைக் கொடுக்கிறான். இதன் நோக்கமானது அவனைப் புடம் போடுவதாகும். எனவே, அநியாயம் செய்யாமல் நடக்க முயற்சிக்க வேண்டும். அவ்வாறில்லாமல் நிலையற்ற பொருள்கள் மீது கொண்ட ஆசையின் காரணமாக தன்னிலை இழந்து மென்பொருள் மீது ஆசை கொண்டு அநியாயம் செய்யும் பட்சத்தில் சிறுக சிறுக சில சில புரிதல் நோக்கத்திலான காரியத்தைச் செய்து பாதைதவறியவனின் திசையை மாற்ற வாய்ப்பளிக்கிறார்.

சம்பூரணன் போல் நொம்பலங்கள் பல கண்டு மீண்டு வா எனத் தள்ளி விடுகிறார். அய்யா அய்யா எனக்கூறினாலும், இன்னொரு புறம் சொத்தாஸ்த்தி வஸ்த்தின் பேரில் ஆசை கொண்டு அலைவோர் கவனமாக இருக்க வேண்டும்!  ஆனாலும் நம் மக்களும், அனேகப் பணிவிடையாளர்களும், பண்டாரங்களும் இதன் குறியாகவே பொய், புரட்டு, சூழ்ச்சி, நம்பிக்கைத்துரோகம் என சிறிதும் சிந்திக்காமல் மனுதர்மத்தைக் கடைபிடியாமல் இல்லாத எளியோரை வஞ்சித்து சம்பாதித்து வருகின்றனர். தொழில் வேறு, கோவில் வேறு என சப்பைக்கட்டு கட்டிவருகின்றனரே.

 அய்யா அய்யா என ஒருவர் முகத்தை நோக்கி இன்னொருவர் பேசினாலும் “புத்தி தடுமாறி பணத்தின் மீது குறியாய்” இருந்த காரணத்தால் சகல பாவத்தையும் செய்து விட்டு, சுத்தமான பக்தனாக தம்மை தாமே நினைத்துக்கொண்டு பிறரிடம் உபதேசம் செய்கின்றனரே! கலியுகமாகியதால் கவனமாக இருக்க சொல்லிய காரணத்தை அறியாமல் இது கலியுகம்தானே, இப்படித்தான் இருக்கும் என ஆறுதல் சொல்வது சரியல்லவே.

கலியுகம் இப்படித்தான் இருக்கும், கலியில் இப்படித்தான் பொய்யும் புரட்டும் செய்து வாழுங்கள் எனக் கூறவா அய்யா வந்தார்? இல்லையே, ஏதோ இவனுக்கு ஒன்றுமில்லை என்பதற்காக இப்படிப்பிதற்றுகிறான் எனவும் சிலர் சொல்வதுண்டு. ஆனால் அய்யா சொன்னது “அவரவர்க்கு உள்ளது உண்டு, அநியாயம் செய்யாதிருங்கோ” எனக்கூறியுள்ளார்…. இந்தப் பணப்பேய்கள், கண் மண் தெரியாமல் உலகமே ஏற்காத வண்ணம் பித்தலாட்டம் செய்து சம்பாதித்துவிட்டு அதனை “அவரவர்க்கு அளந்த படி” என அய்யாவின் வாசகத்துக்கு ஒப்பிட்டுப் பிதற்றி வருகின்றனரே.

 சொல்லிலும், செயலிலும், நடத்தையிலும் நியாயமாக நடந்து அநியாயம் செய்யாதுங்கோ எனும் சொல்லின் ஆழம் புரியாமல் களவாணித்தனம் செய்ததைச் சாதனையாக நினைத்து நமக்கு அய்யா கொடுத்தார் எனக்கூவி அலைகின்றனரே! எவன் ஒருவனின் புத்தியும், ஆசையும் பணத்தை அடிப்படையாக்கி அலைகிறதோ அவனது கையும், வாயும் பித்தலாட்டம் செய்ய அஞ்சாது. சிந்தையும் தன்னை முன்னிலைப்படுத்தி நிரூபிக்கும் பாவச்செயலையும் தயங்காமல் செய்யும், சக மனிதனுக்கு நிந்தனை செய்கிறோம் எனும் எண்ணம் இம்மியளவும் இல்லாத மிருகமாய் அலைவதே மிகவும் வருத்தத்திற்குரியது.

திருக்கலியாண இகனை

– பா. கவிதா அம்மா 009609805601

சென்ற மாத தொடர்ச்சி….

அய்யாவும் அம்மைமார்களும் திருக்கல்யாண இகனை முடித்துத் தெருவீதி வலம் வருவார்கள். அப்போது அய்யாவும் அம்மைமார்களும் உரையாடுவது போல் அந்தப் பாடல் அமைக்கப்பட்டுள்ளது. இதில்

“தெண்டமிறை பொய் களவு – பெண்ணே
செய்யும் வண்டக் குலங்களெல்லாம்
கொண்டகலி கூட மாண்டு – குரு
நாதர்பதி வலம் வருவோம்”

கொடிய வரி, பொய் சொல்வது, களவு செய்வது போன்ற பஞ்சமா பாதக செயல்களைச் செய்தும் நல்லோரைக் கொடுமைப்படுத்தும் நீசக் குலத்தை மற்றும் அசுர சக்திகளைக் கொண்ட கலியை முற்றிலுமாக ஒழித்துப் போக குருநாதர் பதி வலம் வருவோம்.

“வீணான கலியுகத்தைச் சுவாமி
வெய்யோனுக்கு அமுதளித்துச்
சாணாரை வைத்தாள- சுவாமி
தர்மபதி வலம் வருவோம்”

 மனிதப் பிறவியின் மகத்துவத்தை உணராமல் ஆணவத்தால் வீணாக தங்கள் லட்சியத்தை வீணாக்கிய கலியை ஞான ஒளியாகிய வெய்யோனுக்கு அமுதளித்து மெய் கொண்ட மணிகளான மேன் மக்களாகிய சாணாரை தர்மபதியில் வைத்து ஆள்வோம் என்றார்கள் அம்மைமார்கள். அதன்பிறகு அய்யா

“நாடும்பதி துலங்குதடிப் பெண்ணே
நல்லசிலை குதிக்குதடி
ஆடுமாடு அருகுதடி- கர்த்தா
ஆவினங்கள் தோணுதடி”

ஆடு மாடு என்னும் அகங்கார மமகாரங்களின்றும் விடுபடுபவர்கள் இறையருளால் சகசிராரமலரில் விளங்கும் சுத்த அறிவாகிய சிவத்தோடு ஐக்கியமாகும் சுத்த ஆன்மாவாக ஆகிறார்கள் என்றார். அதன் பிறகு அம்மைமார்கள்.

“நல்லபதி துலங்கணமே – சுவாமி
நாடு தர்மம் ஆகணுமே
பொல்லாப்பது ஒழியணுமே – சுவாமி
புத்தி யொன்றாய் குவியணுமே”

தர்மபதி துலங்கணுமே சுவாமி மக்கள் எல்லாம் தர்மசீலர்களாக வேண்டும். பொல்லாப்பு என்னும் மிருக குணத்தை ஒழித்து ஒரு புத்தியாக குவியச் செய்வோம். உடனே அய்யா

“கோவில் தெரு துலங்கணுமே – நம்மள்
கோட்டை வெளி ஆகணுமே
தேவருட நல்திருநாள் – பெண்ணே
தினமும் வந்து கூடணுமே”

கோவில் தெருவாகிய ஆதார வீதியை துவங்கச் செய்து கோட்டை வெளி என்னும் ஞானகாயப் பெருவெளியில் ஐக்கியமாகி மகிழச் செய்வோம். உடனே அம்மைமார்கள்

“தங்கத்தொட்டில் தண்டாயமும் சுவாமி
தாண்டும்பதி வீதிகளும்
சங்கமுடன் டம்மானமும் – சுவாமி
தலத்தில் வந்து தோணணுமே”

சீவர்களெல்லாம் சோம சூரிய அக்கினி கலைகள் எழுச்சியுறப்பெற்று அவற்றின் சங்கமத்தால் அநாகதத் தொனியை அகத்தில் கேட்டு மகிழ்ந்து அத் தொனியை சக்தியில் ஒடுங்கச் செய்து, சக்தி சிவத்தில் ஒடுங்க, ஜீவன் சிவமாகி சகஸ்ரார ஒளியில் நிலைத்திருக்கச் செய்வோம் வாரீர் என்று அய்யாவை வேண்டுவார்கள். அதற்கு அய்யா

“கோட்டையிட்டுக் கொடியுங்கட்டி – பெண்ணே
கொத்தளமாய் மேடை செய்து
நாட்டையெல்லாம் தான் கிலுக்கி- பெண்ணே
நமக்கு பதி ஏறணுமே”

  ஆசையென்னும் கலிமாயை சற்றும் உள்ளே நுழையாதபடி கோட்டை அமைத்து மனதை ஒரு நிலைப்படுத்தி புருவமத்தியில் இறை தரிசனத்தை கண்டு மகிழச் செய்வோம் என்றார். அதற்கு அம்மைமார்கள்

“நம்பினோரைக் காக்கணுமே – சுவாமி
நாடுகட்டி ஆளணுமே
அம்பலங்கள் ஏறணுமே – சுவாமி
அவதாரங்கள் நடத்தணுமே”

  அவதார இகனைகள் மூலம் நம்பின அன்பர்களெல்லாம் அம்பலங்கள் என்னும் ஆதார தானங்கள் விளங்கப் பெற்று, தன்னை அறிந்து, தலைவனை அறிந்து உய்வு பெற அருளுவோம். உடனே அய்யா

சிங்காசனம் ஏறணுமே – பெண்ணே
தீவட்டிகள் போடணுமே
கண்காட்சை காணணுமே – பெண்ணே
கன்னியரை கைப்பிடித்தால்”

 

தேவிகளே உங்களை நான் கைபிடித்ததன் பலனாக மக்கள் ஆதாரங்கள் ஒளிரப்பெற்று புருவ மத்தியில் இறைவனைக் கண்டு அதனை தாண்டிச் சென்று சிவ சிங்காசனத்தில் திளைத்திருக்கச் செய்வோம் என்றார். உடனே அம்மைமார்கள்

“பாக்கியங்கள் பெருகணுமே – சுவாமி
பாரிலுள்ளோர் காணுதற்கு
ஆக்கி நாங்கள் படைக்கணுமே – சுவாமி
அமுதருந்தி வாழணுமே”

ஆதார சக்தியைப் பெற்று மக்களெல்லாம் நிறை நிலை யடைந்து உம்மோடு அவர்கள் ஐக்கியமாக நாங்கள் உமதருளால் பக்குவப்படுத்துவோம் என்றார்கள். உடனே அய்யா

“மக்கள் பெற்று வாழணுமே – பெண்ணே
வந்து எந்தன் கால்பிடித்து
ஒக்க நின்று ஆடணுமே- பெண்ணே
உற்றபள்ளி மெத்தை சூழ”

 மக்களெல்லாம் பதினாறு செல்வமும் பெற்று பூரணத்துவம் அடைந்து என் திருவடிப் பேறு பெற்று சிவ சிங்காசனத்தைச் சூழ்ந்து நின்று ஆனந்தக் கூத்தாடி மகிழட்டும் என்றார். அதற்கு அம்மைமார்கள்

 

பால்பவிசு பெருகணுமே – சுவாமி
பஞ்சணையில் கொஞ்சணுமே
தூலருமை அறியாமலே – கலி
தொல்புவியும் மயங்கணுமே”

மக்களெல்லாம் பால் பவிசு என்னும் ஆராவமுதாகிய உம்மோடு சகஸ்ரார ஒளியில் திளைத்து மகிழட்டும். இந்த மானிட உடலைப் பெற்றதன் பயன் தன்னை அறிந்து தலைவனைச் சார்ந்து நின்று மீண்டும் பிறவா பெருநிலை யடைதல் என்னும் அருமையை அறியாமல் கலி தொல்புவி என்னும் மாய்கையில் வீழ்ந்து கிடப்போரெல்லாம் மயங்கட்டும் என்றார்கள். இதன் தொடர்ச்சியை அடுத்த இதழில் பார்ப்போம்.

 அய்யா உண்டு

CONTACT
close slider

    Please feel free to get in touch, we value your feedback.