தர்மயுக முரசு ஜனவரி 2022
அய்யாவின் அருளால் எந்நாளும் நன்னாளே
அசோக்குமார் அய்யா –009607704901,8012174032.
“பொறுதி மகனே பெரியோரு ஆகுவது உறுதி மகனே உலகமதை ஆளுவது “
“பொன்னப்ப நாராயணர் சொன்னபடி பொறுமை என்னும் ஆயுதத்தால் கலியை எதிர்கொண்டு வெற்றி நடை போடும் சான்றோர் மக்களுக்கு அன்பான
வணக்கம்”.
அன்பானவர்களே:
“பொறுமை கடலினும் பெரிது” என்பது ஆன்றோர் வாக்கு. நம் வைகுண்ட பரம்பொருள் பொறுமையை தான் மிகப் பிரதானமாக வலியுறுத்துகிறார். எந்த ஒரு செயல்பாடாக இருந்தாலும் சரி அங்கு நாம் பொறுமையாக, நிதானமாக தன்னடக்கமாக, சாதுரியமாகச் செயல்படுவோம் என்று சொன்னால் நிச்சயமாக வெற்றி கிடைக்கும்.இந்தப் பொறுமையை நாம் இழந்துவிட்டோம் என்று சொன்னால் அனைத்திலும் தடுமாற்றம் அடைந்து நாம் சின்னாபின்னமாகி நமது வாழ்வை நாம் எதிர்கொள்ள முடியாமல் நாம் முடங்கிப்போய் கிடப்போம்.
நேர்மையாக சுயநலம் இல்லாமல் செயல்படுகின்ற போது கலியன் பலவிதங்களில் நமக்கு இடையூறுகளைச் செய்து கொண்டிருப்பான். அதையெல்லாம் நாம் வெற்றி கொள்ள வேண்டும் என்று சொன்னால் நாம் எம்பெருமான் காட்டினப் பொறுமையைத் தவறவிடாமல் நாம் கையாள வேண்டும்.
பொறுமையை நாம் கடைபிடிக்கும் போது நமது பேச்சில் கனிவும், நடை உடை பாவனைகளில் சமத்துவமும் பிறக்கும். சமத்துவம் இதயத்தில் பூத்து விட்டால் நான் என்கிற அகங்காரம் ஒழிந்துவிடும். இதனால் நாம் சான்றோனாக விளங்கி உலகத்தின் முன்னோடிகளாகத் திகழ முடியும்.
மேலும் பொறுமையின்மையே அனைத்து தவறுகளுக்கும் அடிப்படையாக விளங்கி விடுகிறது. எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் அமைதியாகப் பொறுமையாக கையாண்டால் அப்பிரச்சனையில் இருந்து முற்றிலுமாக விலகி விடலாம். எனவே பொறுமையாகச் செயல் பட நாம் பழகிக் கொள்ள வேண்டும்.
நம்முள் பொறுமைப் பூக்க நமதுப் பாடசாலைகளாகத் திகழும் தாங்கல்களில் நடக்கின்ற அனைத்து செயல் பாடுகளிலும் நாம் பொறுமையை கடைபிடித்து வாழ்ந்து காட்ட வேண்டும். சொல்லும் செயலும் ஒருபோல் இருந்தால் மட்டுமே நாம் வெற்றியாளனாகத் திகழ முடியும்.
நமது பொறுமையைப் பார்த்து இவன் பலவீனமானவன் என்று பலர் நினைக்கலாம். ஆனால் உண்மை அதுவல்லப் பொறுமையாக இருப்பவனே பலமானவன், எதையும் சாதிக்க கூடியவன். எப்பொழுதும், எந்த நேரத்திலும், எந்த செயல் பாட்டிலும் பொறுமையைக் கடைபிடித்தால் இந்த உலகை ஆளலாம். அதனை எம்பெருமான் அழகாக சொல்லுகிறார் “துள்ளாத யானை துடியானை என்மகனே” என்று நமக்கு உபதேசிக்கிறார்.
எனவே அன்பானவர்களே: எந்த சூழ்நிலையிலும் பொறுமையைக் கடைபிடித்து அய்யாவின் சொல் கேட்கும் பிள்ளைகளாகத் திகழ்ந்துத் தர்மயுக வாழ்வு பெறுவோம்
“பொறுத்து இருந்தோரே பெரியோரே ஆகுமக்கா”
– அகிலத்திரட்டு அம்மானை
உகப்பெருக்கு விளக்கம்
கா.த.லிங்கேஷ்- 9842679780
“….அக்கினியால் அழிப்பேன் என்று சொல்வதும் மென்தானப்பா அனல் வந்து அஞ்சாறு நாளையில் அரசாள்வதும் மெய்தானப்பா
ஆபரண மாலை அணிவதும் எங்கள் அய்யா
சிவசிவ சிவசிவா அரஹர அரஹரா…”
‘அக்கினி’ என்கிற பதம் நேரடியாக நெருப்பு எனும் பொருளைத் தரும். அதாவது நெருப்பு சக்தியாலும் நான் இந்த கலியுகத்தை அழிப்பேன் என்பது சத்தியம் தான். அதுபோல, அக்கினி என்பது ‘ஞான அக்கினி’ என்பதையும் குறிக்கும். அதாவது நம்மை காப்பதற்காக பூமிக்கு வந்த நாராயணரின் அவதாரம் தான் வைகுண்டர் என்று அவரை துதிப்பதும், அவர் அருளித் தந்த ‘அகிலத்திரட்டை’ சிரத்தையுடன் படிப்பதும், இல்லாதவர்களுக்கு தன்னால் முடிந்த தர்மத்தை வைகுண்டர் பெயரால் செய்வதும், ஆக அறிவு முதிர்ச்சி பெற்றவர்கள், கலிமாயத்தை எதிர்க்கும் வல்லமையை பெறுவார்கள். அப்படிபட்ட ஞான அக்கினியால் நம்முடைய கலிமாய எண்ணங்களை அழிப்பேன் என்று சொல்வதும் உண்மை தான், என்று இரண்டு விதமான பொருளையும் இணைத்தே சொல்லலாம்.
‘அஞ்சாறு நாளையில்’ என்பதற்கு 5 (அ) 6 நாட்களுக்குள் என்று பொருள் வரும். ஆனால் இங்கு சிறிய காலத்திலேயே (அ) சீக்கிரமாக என்று பொருள் கொள்வதே சிறப்பானதாக இருக்கும். அதுபோல ‘ஆபரண மாலை அணிவதும்’ என்கிற பதமும் உவமை படுத்தும் பொருளாகவே இங்கு வருகிறது. மேல் இரண்டு வரிகளும் கலியழிப்பதையும், தர்மயுகத்தில் அரசாள்வதையும் குறிப்பதால், அனைத்தையும் ஒரு சேர கூட்டி மாலையாக அணிவது என்றுப் பொருள் கொள்வதே சிறப்பு. அதாவது தர்மயுகத்திலே வைகுண்டர் திருமுடி சூடி அரசாள்கிறார். அங்கு சப்தமாதர்களின் வழி வந்த சான்றோர் மக்களும் ஒரே நிலைப்பாட்டால், ஒரு மொழி, ஒரு சொல்லில், அவரை நோக்கி வாழ்கிறார்கள். மறுமொழியோ, மறு சொல்லோ அங்கு இல்லை. அதனால் தான் அனைவரின் எண்ணமும், செயலும் அங்கு ஒரே குடையின் கீழ் ஆட்சி செய்யும் நாராயணரின் ஆபரண மாலையாக அமைகிறது.
பொருள் :
நெருப்பு சக்தியால் கலியுகத்தை அழிப்பது போல அவரவர்களின் ஞான அக்கினியால் கலிமாய எண்ணங்களை அழிப்பேன்சொல்வதும் உண்மை தான். அதுபோல நெருப்பு வந்து சிறிது நாளையிலே தர்மயுகத்தை வைகுண்டர் அரசாள்வதும் உண்மை தான். அப்போது,அனைத்து சான்றோர் மக்களின் எண்ணமும் செயலும் ஒன்றும் படியாக அதை ஆபரண மாலையாக அணிவதும் மூலமுதற் பொருளான நம் அய்யாவே என உணர்ந்து சிவசக்தியான உம்மையே போற்றுகின்றோம்! உம்மிடமே அபயமிடுகின்றோம்!
“…தெரிந்தவர் தெரிந்திடுங்கோ எங்கள் அய்யா திரை கடல் ஓடும் முன்னே அய்யா
சிவசிவ சிவசிவா அரஹர அரஹரா…”
அலைகடலில் துயிலும் நாராயணரே வைகுண்டமாக இந்த வையகத்தில் காட்சிக் கொடுத்து கொண்டிருக்கிறார். அவர் மீண்டும் கடலுக்குள் சென்று மறையும் முன் அனைவரும் அவரை தெரிந்துக் கொள்ள வேண்டும். ஏனனெனில் தாமதிப்பதற்குக் காலம் இல்லை என்பதே இதன் பொருள்.
பொருள் :-மூலமுதற் பொருளான அய்யா வைகுண்டர் மீண்டும் திரைகடலுக்குள் ஓடி மறையும் முன்பாக அவரை தெரிந்துக் கொண்டுச் சிவசக்தியான அவரையே போற்றுவோம்! அவரிடமே அபயம் இடுவோம்.
“….பணிந்தவர் பணிந்திடுங்கோ பாலன் பதியேறும் முன்னே
அய்யா சிவசிவ சிவசிவா அரஹர அரஹரா…”
இங்கு ‘பாலன்’ என்கிற பதம் நாராயணரின் ஒரே பேறாக வந்துதித்த அய்யா வைகுண்டரையும், ‘பதியேறும் முன்பே’ என்பது, அவர் தர்மயுகச் சிம்மாசனத்தில் முடிசூடுவதற்கு முன்பு அவரைப் பணிந்துக் கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
பொருள் :-மூலமுதற் பொருளான அய்யா வைகுண்டர் தர்மயுகப் பதியில் ஆட்சியில் அமர்வதற்கு முன் அவரைப் பணிந்து கொண்டுச் சிவசக்தியான அவரையே போற்றுவோம்! அவரிடமே அபயம் இடுவோம்!
மேற்கூறிய இரு விருத்தப்பாடலும், அய்யா வைகுண்டரை பற்றி தெரிந்து அவரை பணிவதற்கானக் காலம் மிகக் குறைவாகவே உள்ளது, எனவே நாமும் உணர்ந்து, நம்மைச் சார்ந்தவர்களையும் உணர வைக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது. இல்லையேல், நரகத்திற்குத் தள்ளப்படுவார்கள் என்பது எச்சரிக்கை.
“…பத்தி சோதித்தே பல நாளும் காத்திருந்தவித்தகனை வந்து வேண்டார் மேல் வீடிழந்து– எத்தனைக்கும்
செத்திறந்து தீநரகக்கூட்டிலே அடைய கொத்தி அருந்த புழுக்கள் கொஞ்சுதோ…”
எனும் அகில வாசகத்தையும் இங்கு ஒப்பு நோக்குவோம்!
(தொடரும்…)
அகிலதிரட்டு அம்மானை மூலமும்,உரையும்
க.ரீகன் அய்யா- 96890418976
“ஆலமு தருந்தி அரவை மிகத் தரித்துகோலத் திருக்கழுத்தில் கோர்வையா யிட்டோனே
ஆனைதனை யுரித்து அரங்கமெல்லாம் புனைந்து
மனேந்திய கரனே மழுவேந்திய சிவனே”
முன்பு தேவா்களும் அசுரா்களும் அமிா்தத்தை பெறுவதற்காகப் பாற்கடலை கடைய முற்பட்டாா்கள். அப்போது அவா்கள் மந்திரமலையை மத்தாகவும் வாசுகி என்ற பாம்பினை கயிறாகவும் கொண்டு ஒருபுறம் தேவர்களும் மறுபுறம் அசுரா்களும் நின்று பாற்கடலை கடைந்தாா்கள். அப்போது பாற்கடலிலிருந்து ஆலகால விஷம் என்றுச் சொல்லக்கூடியக் கொடிய விஷம் வெளிப்பட்டது. இதனைக் கண்டு அதிர்ச்சியுற்ற தேவா்களும், அசுரா்களும் பாற்கடலைக் கடைவதை நிறுத்திச் செய்வதறியாது தி்கைத்தாா்கள். தேவா்களுக்காக இரக்கம் கொண்ட சிவபெருமான் அந்த ஆலகால விஷத்தை தாமே உட்கொள்ள முடிவுசெய்தாா். அதன்படி அந்த ஆலகால விஷத்தை அப்படியே வாயில் எடுத்து விழுங்கினாா்.
இதனைக் கண்ட அம்மை உமையவள் உலகத்தைப் படைத்து அதில் உயிருக்கு உயிராக இருக்க கூடிய சிவபெருமான் ஆலகால விஷத்தை உட்கொண்டால் உலக உயிா்கள் பாதிப்படையும் என்று எண்ணி அவர் தொண்டையான கண்டத்தில் கை வைத்து விஷம் கீழிறங்காதபடி வைத்து கொண்டாள். ஆலகால விஷத்தின் வீரியத்தின் காரணமாகச் சிவபெருமானினுடைய அந்த தொண்டையானது நீல நிறமாக மாறியது . இதனால் அவருக்கு திருநீலகண்டா் என்றும் பெயா் உண்டு. மேலும் அந்த வாசுகி பாம்பையே சிவபெருமான் தன் கழுத்தில் மாலையாக அணிந்தாக வரலாறும் உண்டு. இப்படி ஆலகால விஷத்தை அருந்திப் பாம்பினை கழுத்தில் மாலையாக அணிந்து இருக்கும் சிவனே என்று கூறுகிறாா். மேலும் “ஆனைதனை யுரித்து அங்கமெல்லாம் புனைந்து
மானேந்திய கரனே மழுவேந்திய சிவனே” என்று கூறுகிறாா்.அதாவது முன்பு தாருகாவனம் என்றுச் சொல்லக் கூடிய வனத்திலே ரிஷிகளும், ரிஷி பத்தினிகளும் கற்பு நெறி தவறாமல் வேள்வி வளா்த்து யாகம் செய்து, அந்த யாகத்தின் மூலம் தமக்கு வேண்டிய அத்தனையும் பெற்றுக் கொண்டாா்கள். வேதத்தை நன்கு அறிந்திருந்த காரணத்தால் அந்த வேதங்கள் மூலமாக அதை ஒதி வேள்வி வளா்த்து முறைப்படி செய்ததால் அவா்களுக்கு வேண்டிய அனைத்தும் கிடைத்தன.
தங்களுக்கு வேண்டிய அத்தனையும் தாங்கள் செய்யும் யாகங்கள் மூலமாக கிடைத்ததால் இதை அத்தனையும் அருளக்கூடிய எல்லாவற்றிற்கும் மேலான அந்த இறைவனை மறந்தாா்கள் தங்களால் எதுவும் முடியும் என்ற ஆணவம் அவர்கள் கொண்டாா்கள். இதனைக் கண்ட சிவபெருமானும், நாராயண மூா்த்தியும் முனிவா்களுடைய ஆணவத்தை அடக்க திருவுளம் கொண்டாா்கள். ரிஷிகளும் ரிஷி பத்தினிகளும் கற்பு தவறாமல் இருந்த காரணத்தால் இவா்களுடையக் கற்பினை வலுவிழக்க செய்ய வேண்டுமென திருமால் ஒரு அழகிய மோகினி வடிவம் கொண்டும், சிவபெருமான் எவரையும் உடனே வசீகரிக்க செய்யும் மிகுந்த அழகோடு, பிச்சைக் கோலமாக பிச்சாடன மூா்த்தியாகத் தாருகாவனத்தை அடைந்தாா்கள்
தாருகாவனத்தில் முனிகள் இருந்த பக்கமாக மோகினி வடிவம் கொண்ட திருமால் செல்லவே அந்த அழகில் மயங்கி தங்கள் கற்பு நெறி தவறி ரிஷிகள் அனைவரும் திருமால் பின்புச் சென்றாா்கள். அதே நேரத்தில் அழகே வடிவான பிச்சாடனமூா்த்தி ரிஷிபத்தினிகள் இருக்கும் பக்கம் செல்லவே ரிஷிபத்தினிகளும் தங்கள் கற்பு தவறிப் பிச்சாடன மூா்த்தியாக வந்திருக்க கூடிய சிவபெருமான் பின்னால் சென்றாா்கள். இப்படி சிவபெருமானும் நாராயணரும் ஒரு இடத்தில் சந்தித்து கொள்ள அவா்கள் பின்பு வந்த ரிஷிகளும் ரிஷிபத்தினிகளும் ஒருவருக்குகொருவா் பாா்த்து தங்கள் இயல்பு நிலைக்கு திரும்பினாா்கள்.
ரிஷிகளும் ரிஷிபத்தினிகளும் தங்கள் கற்பு நிலை தவறிவிட்டதே என வருத்தம் கொண்டாா்கள். இதற்கெல்லாம் காரணம் ஆணாகவும் பெண்ணாகவும் வந்த சிவபெருமானும், நாராயணருமே காரணம் என ரிஷிகள் கோபம் கொண்டாா்கள். அவா்கள் சிவபெருமானை அழிப்பதற்க்காக யாகத்தை வளா்த்தாா்கள் . அதிலிருந்து புலி வெளிப்பட்டது. அதைச் சிவபெருமானை தாக்க அனுப்பினாா்கள். சிவபெருமான் அந்த புலியை கொன்று அதன் தோலை ஆடையாக இடுப்பிலே அணிந்துக் கொண்டாா். அதன்பிறகு மூா்க்கமான யானை வேள்வியிலிருந்து வர அதை சிவபெருமானைக் கொல்ல அனுப்பினாா்கள்.
சிவபெருமான் அந்த யானையின் வயிற்றின் உள்சென்றுக் கனலை எழுப்பினாா் வெப்பம் தாங்காமல் யானை அலறியது. சிவபெருமான் யானையின் வயிற்றினை கிழித்து வெளியே வந்து அதன் தோலை உரித்து போா்வையாக அணிந்து கொண்டாா். அதன் பிறகு வேள்விக் குண்டத்திலிருந்து மான் வெளிப்பட அதை சிவபெருமானை தாக்க பணிந்தாா்கள். சிவபெருமான் தன் இடது புரத்தில் அதனை ஏந்திக் கொண்டாா் அதன்பின் வேள்வியிலிருந்து மழு என்று சொல்ல கூடிய ஆயுதம் வெளிப்பட அதை சிவபெருமானை தாக்க எத்தனித்தாா்கள். சிவபெருமான் அந்த மழு என்னும் ஆயுதத்தைத் தன்னுடையக் கரத்தில் ஏந்தி கொண்டாா்.
“கோனேந்திரு கிரியில் குடியிருக்குங் கோவே தானே யிருக்குந் தவமே தவப்பொருளே
ஆதியாய் நின்ற அதியத் திருமாலே சோதியே சோழன் சொல்நெறியைக் கேளுமையா“
கோனேந்திருகிரி என்று சொல்லுகின்ற கைலை மலையில் வீற்றிருக்க கூடிய சிவபெருமான் அனைத்து உயிர்களுக்கும் அரசனாக வீற்றிருக்கின்றாா். தாம் இருக்ககூடிய இடத்திலிருந்தே அனைத்தையும் நடத்த கூடியவா் சிவபெருமான். அவா் எப்போதும் நிலையாக மாறாமல் இருக்க கூடியவா்.
உலக உயிா்கள் அத்தனைக்கும் படியளக்ககூடியவரும் அவரே. தாம் படைத்த உயிா்களுக்கு வேண்டியதை கொடுக்க கூடியவரும் அவரே. யாா் அவரை நினைத்து தவம் இருந்தாலும் அந்த தவத்திற்கு இரங்கி அவா்களுக்கு வேண்டிய வரங்களை கொடுக்க கூடிய வள்ளலும் அவரே. தவமும் அவரே அந்த தவத்திற்க்கான பொருளாக விளங்கக்கூடிய மூலமும் அவரே. ஆதி என்று சொல்லக்கூடிய முன் உதித்த பொருளும் அவரே. ஜோதியாக நின்று இலங்க கூடிய சிவபெருமானே பூவுலகில் தென்பகுதியான தெட்சணாபூமியை ஆண்டு கொண்டிருக்க கூடிய சோழமன்னனின் ஆட்சி முறையையும் அவன் எவ்வாறு குடிமக்களை நடத்துகிறான் என்பதையும் கேளுங்கள் என்று தேவா்கள் எல்லோரும் சிவபெருமானிடம் கூறினாா்கள்.
“வாடிவந்த பச்சினுக்கு வளா லவனுடம்பை
தேடிவந்த வேடனுக்கு துடையரிந்து ஈந்தவன்காண்“
சோழன் ஆண்டிருந்த தேசத்தை செல்வ செழிப்போடு வைத்திருத்ததோடு அல்லாது நீதி நேர்மையோடு ஆண்டு வந்தான். இப்படி தா்ம நியாயத்தோடு ஆண்டு வந்த சோழமன்னனை சோதிப்பதற்காக தரும தேவன் எண்ணினாா். ஆகவே தரும தேவன் சோழமன்னான சிபிசக்கரவா்த்தியை சோதிப்பதற்காக ஒரு புறாவும் அதை துரத்தகூடிய ஒரு வேடுவனுமாக வடிவெடுத்து அப்படியே ஒரு திருவிளையாடலை நடத்த வேண்டும் என எண்ணினார்.
ஒரு சமயம் சிபி சக்கரவா்த்தி தோட்டத்தில் இளைப்பாறிக் கொண்டிருந்த சமயத்தில் வேடனால் துரத்தப்பட்ட புறாவானது அரசனுடைய மடியில் வந்து வேகமாக அமர்ந்தது அதைப் பார்த்த மாத்திரமே அது மிகவும் படபடப்புடன் தன் உயிரினைக் காப்பாற்றிக் கொள்ள வந்து அமர்ந்தது போலவே அரசனுக்கு தோன்றியது. அவன் எண்ணியது போலவே வேடன் ஒருவன் அரசன் இருக்க கூடிய அந்த இடத்தை வந்தடைந்தான். புறாவினைக் கண்ட வேடுவன் மிகுந்த மகிழ்ச்சியோடு அரசனிடம் அந்த புறாவினை தன்னிடம் கொடுக்குமாறு வேண்டினான்.
மன்னவன் புறாவினை நன்கு நோக்கினான். அது அரசனின் மடியிலேயே ஒதுங்கி கொண்டது. மன்னன் தன்னை நாடி, தன்னை அடைக்கலமாக வந்த எந்த உயிருக்கும் தான் பாதுகாவலாக இருக்க வேண்டும் என்ற ராசநீதியினை நினைவில் கொண்டு அந்த வேடுவனை பார்த்து “வேடுவனே இந்த ராச்சியத்தை ஆளுகின்ற ராஜாவான நான் என்னுடைய ராச்சியத்தில் அடைக்கலமாக வந்தவரைக் காப்பது என் தர்மம். இப்புறா மானிட தன்மையில் இல்லாவிட்டாலும், உயிர் அடிப்படையில் இதைக் காக்கும் பொறுப்பு எனக்கு உள்ளது. ஆகவே உனக்கு வேண்டிய வேறு ஏதாவது கேள் தருகிறேன்” எனக் கூறினான்.
உடனே வேடுவனாக இருந்த தரும தேவன் “இல்லை இல்லை” அரசனான நீர் இரண்டு பக்கமும் உள்ள நியாய தர்மங்களையும் பார்க்க வேண்டும். என்னுடைய தொழில் வேட்டையாடும் தொழில். இன்று எனக்காக இந்த உணவினை இறைவன் எனக்கு தந்திருக்கின்றான். ஆகவே இறைவன் கொடுத்த உணவை நான் உண்பதே சரியாகும். எனக்கு வேறெதுவும் வேண்டாம் என மறுத்து கூறினான். உடனே சிபி சக்ரவர்த்தி, நான் என் நிலையிலிருந்து மாறுவதில்லை. உன்னுடையப் பசியைப் போக்க வேண்டுமெனில் நானே இந்த புறாவின் எடைக்கு என்ன மாமிசம் வருகிறதோ அதை உனக்கு நிகராக தருகிறேன் என கூற வேடனாக வந்த தரும தேவனும் சம்மதித்தார்.
உடனே அங்கே தராசு தட்டு கொண்டுவரப்பட்டு மன்னன் புறாவினை ஒரு தட்டில் வைத்தும், தன்னுடையத் தொடையிலிருந்து மாமிசத்தை அரிந்து அதை மறுதட்டிலும் வைத்தான். இப்போது அதன் துல்லியத்தைப் பார்க்க வேண்டும் என தராசு தட்டினைப் பார்க்கும் போது புறிவின் தட்டு உயராமல் அப்படியே இருந்தது. இதை கண்ட மன்னன் ஆச்சரியபட்டாலும், தான் சோதனைக்கு உட்படுகிறோம் என எண்ணி, மேலும் மேலும் தன் தொடையிலிருந்து மாமிசத்தை அரிந்து எடுத்து வைத்தான். ஆயினும் அவன் மாமிசத் தட்டுத் தாழாமல் இருக்கவே, இறுதியில் தானே அந்த தட்டில் ஏறி அமர்ந்து தன் முழு சரணாகதியையும் வைத்தான். இதைக்கண்டு மகிழ்ந்த அந்த தரும தேவர் அரசன் முன் தோன்றி அவனை வாழ்த்திவிட்டுச் சென்றார்.
தொடரும்…….
சிவகாண்ட அதிகார பத்திரம் மாடசாமி அய்யா – 8973349046
சூத்திரம்:“மூன்று பத்து ரெண்டு அறம் நான் வளர்த்தேன் கலியுகத்தில்“
பொருள்:
முப்பத்திரெண்டு அறங்களையும் இந்தக் கலியுகத்தில் வளர்த்தது நானே.
விளக்கம்:
இங்கு ஏக இறைவன் தானே முப்பத்திரண்டு அறங்களையும் வளர்ப்பதாக கூறுகிறார். அதன் உட்பொருள் யாதெனில், ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் பரமாத்மாவாக வீற்றிருந்து இறைவனே அவனை நல்வழியில் இயக்குகிறார். மனிதனிடம் இருந்து நற்குணங்களாக இறைவனின் திவ்ய சக்தியே வெளிப்படுகிறது. இவ்வாறாக முன்னோர்கள் வகுத்த 32 அறங்களும் இறைவனின் திவ்ய சக்தியின் வெளிப்பாடாக மனிதனிடம் இருந்து வெளிப்படுபவை.
முப்பத்திரெண்டு அறங்களாவன…
1) ஆதுலர்க்கு சாலை அமைத்தல் : நோயாளிகள் மற்றும் முதியோர்களுக்கு வீடு கட்டி தந்து அன்பாக மருந்தளித்தல்
2) ஓதுவார்க்கு உணவு : கல்வி பயில்பவர்களுக்கு நல்ல முறையில் கல்வி புகட்டி அவர்களுக்கு உணவு அளித்தல்
3) மாந்தர்க்கு உணவு : சமய வேறுபாடின்றி அனைவருக்கும் உணவு வழங்குதல்
4) பசுவுக்கு வாயுறை : பசுக்களை தெய்வமாக பாவித்து அவற்றை போஷித்து உணவளித்தல்
5) சிறைச்சோறு : சிறையில் அடைக்கப் பட்டிருப்பவர்களுக்கு நல்ல உணவளித்தல்
6) ஐயம் : இரப்பவர்க்கு ஈதல். யாசகம் கேட்டு வருபவர்களுக்கு ‘இல்லை’ என்று சொல்லாமல் இயன்ற உதவி செய்தல்
7) வழிப்போக்கர்க்கு உதவுதல் : வழிப்போக்கர்களுக்கு உணவு வழங்கி அவர்களது பசி தீர்த்தல்
8) அறவைச் சோறு : ஆதரவற்ற அனாதைகளுக்கு உணவளித்தல்
9) மகப்பேறுவித்தல் : பெண்கள் பிரசவிக்கும் நேரத்தில் அவர்கள் உடனிருந்து தேவையான உதவிகளை செய்தல்
10) மகவு வளர்த்தல் : குழந்தைகளைப் பராமரித்து அவர்களை வளர்ப்பதில் உதவுதல்
11) மகப்பால் வார்த்தல் : தாயை இழந்து தவிக்கும் பிள்ளைகளுக்குப் பாலளித்தல்
12) அறிவைப் பிணம் சுடுதல் : அனாதைகள் மற்றும் ஆதரவற்றவர்களின் உடலுக்கு ஈமச்சடங்கு செய்து தகனம் செய்ய உதவுதல்
13) அறவைத் தூரியம் : ஆதரவற்றவர்களுக்கு தேவையான துணிமணிகள் மற்றும் ஆடைகள் கொடுத்து அவர்கள் மானம் காத்தல்.
14) சுண்ணம் : தாம்பூலம் தரிப்பவர்களுக்கு சுண்ணாம்பு கொடுத்து உதவுதல்.
15) நோய்மருந்து : நோயில் தவிப்பவர்களுக்கு மருந்து வாங்கித் தந்து உதவுதல்.
16) வண்ணார் : ஏழை எளியோருக்கு துணி துவைக்க உதவுதல், அவர்கள் ஆடைகளை வெளுத்துக் கொடுத்து உதவுதல் (வண்ணார்களுக்கு தரவேண்டிய கூலியை உடனே தந்துவிடவேண்டும். தாமதிக்ககூடாது.)
17) நாவிதர் : ஏழை எளியோருக்கு முடிவெட்டிக்கொள்ள, முகச்சவரம் செய்ய உதவுதல் (நாவிதர்களின் கூலியையும் உடனே தந்துவிடவேண்டும். தாமதிப்பது பாபம்.)
18) கண்ணாடி : ஒருவர் தங்களை ஒழுங்குபடுத்திச் சரிச் செய்துகொள்ள கண்ணாடிக் கொடுத்து உதவுதல்.
19) காதோலை : பெண்கள் காதணியில்லாது (தோடு) இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு காதணி வாங்கித் தந்து உதவுதல்.
20) கண்மருந்து : பெண்கள் தங்கள் கண்களை அழகுபடுத்திக்கொள்ளக் கண்மை அளித்தல்.
21) தலைக்கு எண்ணை : பரட்டைத் தலையோடு இருக்கும் ஏழை எளியோருக்குத் தலைக்கு எண்ணை வாங்கிக் கொடுத்தல்.
22) பெண் போகம் : தனக்குரியப் பெண்ணிடம் முறையான இன்பம் அனுபவிக்க வழியில்லா ஏழைகளுக்கு உரியத் தனியிடம் அமைத்துத் தருதல்.
23) பிறர் துயர் தீர்த்தல் : காயமோ நோயோ ஏற்பட்டுத் துன்பப்படுபவர்களுக்கு உதவுதல்.
24) தண்ணீர் பந்தல் : தாகத்தால் தவிப்பவர்களுக்கு தண்ணீர் தந்து உதவுதல்.
25) மடம் : வழிப்போக்கர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள, குளிக்க, இயற்கை உபாதையைத் தணித்துக்கொள்ள சாலையோரங்களில், விடுதி அமைத்தல்.
26) தடம் : வழிப்போக்கர்கள் நீர் அருந்தி இளைப்பாறக் குளம் தோண்டுதல், அவற்றைப் பராமரித்தல்.
27) சோலை : நிழல் தரும் மரங்கள் மற்றும் பூஞ்சோலை அமைத்து அவர்கள் தங்கி இளைப்பாற உதவுதல்
28) ஆ உராய்ஞ்சிக்கல் நிறுவுதல் : பசுக்கள் மேயும் இடங்களிலும், பசு கொட்டில்களிலும் அவை தங்கள் உடலை தேய்த்துக்கொள்ள பசு உராய்ஞ்சிக்கல் நிறுவதல்
29) ஏறு விடுதல் : பசுக்களை சினைப்படுத்த தரமான எருதுகளைக் கொடுத்து உதவுதல் மற்றும் எருதுகளை பேணுதல்
30) விலங்கிற்கு உணவு : பல்வேறு விலங்கினங்கள் பசியாற உணவைக் கொடுத்து உதவுதல்
31) விலை கொடுத்து உயிர் காத்தல் : கொலைக்குச் செல்லும் உயிர்களை வாங்கிக் காத்தல்
32) கன்னிகா தானம் : வரன் தேடிக் கொடுத்து உதவுதல். ஏழைப் பெண்களின் திருமணத்திலும் திருமண வயது நெருங்கியும் திருமணமாகாமல் தவிக்கும் முதிர்கன்னிகளுக்கும் திருமணம் செய்து வைத்து உதவுதல்….
32. இந்த முப்பத்திரண்டு அறங்களும் இறைவனின் திவ்ய சிம்மாசனம். இதை அகிலம் ” முப்பத்திரண்டு அறத்தால் முகித்த சிங்காசனம்“ என்று கூறுகிறது. இந்த அறங்கள் முப்பத்திரண்டும் இறைவனுக்கே உரியவை. எந்த மனிதன் இந்த அறங்களை மேற் கொள்கிறானா, அவனிடமிருந்து இறைவன் தனது சக்தியை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதே உண்மை. அதாவது அறங்கள் முப்பத்திரண்டும் இறைவறனாலே இவ்வுலகில் வளர்க்கப்படுகிறது. புண்ணியவான்களின் மூலம் இறைவன் தான் வளர்க்கும் அறத்தை வெளிப்படுத்துகிறார் என்பதுக் கருத்து.
மனிதன் அறத்தை வளர்க்கிறான் என்பதுத் தவறானக் கருத்து. இறைவனே உயிர்கள் மீது கொண்ட கருணையால் அறத்தை வளர்க்கிறார். புண்ணிய மனிதர்கள் ஒரு கருவியே..
சூத்திரம்:
” நாள் தோறும் ரெண்டு அறம் நாதன்வேலை செய்தாலும் சம்பளமும் தண்ணீர் குடி தான் தருவார் இல்லையப்பா“
பொருள்:
ஒரு நாளின் இரவு பகல் எனும் இரண்டு பகுதிகளிலும் ஓய்வின்றி நான் அறத்தை வளர்த்தாலும் , அதற்கு ஊதியமும் தண்ணீரும் தருவாரில்லை..
விளக்கம்:சீவ கோடிகள் மீது கொண்ட அளவற்றக் கருணையினால் இறைவன் இரவு பகலாக ஓய்வின்றி இந்த 32 அறங்களையும் வளர்க்கிறார். இதை அறியாத மனிதர்கள் இந்த 32 அறங்களையும் தானே நடத்துவதாகவும், தன்னால் செய்யப்படுவதாகவும் கருதுகின்றனர்.சில மனிதர்கள் நாத்திக வாதம் பேசவும் செய்கின்றனர். செயல்கள் அனைத்தும் பகவானுக்கே என்ற அர்ப்பணிப்பு உணர்வுடன், செயலில் பற்றற்று இறைவனிடம் சரணாகதி அடைதலே இறைவனுக்கு நாம் கொடுக்கும் தண்ணீர் ஆகும். எனவேதான் அய்யா ” என் பேரால் முந்திரிப் இடுவதுவே நன்றாகும்” என்றார். அறம் வளர்ப்பது அய்யாவே என்றுணர்ந்து , தம்மால் இயன்ற அறங்களை இறைவன் பெயரால் செய்து, அவருக்குத் தொண்டாற்றி, அவரைச் சரணாகதி அடையும் முக்தர்கள் குறைவு , எனவே ” சம்பளமும் தண்ணீர் குடி தான் தருவார் இல்லையப்பா ” என்றார்.
தொடரும்…
சிவகாண்ட அதிகாரப் பத்திரம் தொடரும்
அய்யா நிகழ்த்திய அற்புதங்கள்
தொகுப்பு: சிவபிரகாசம்
அய்யா வைகுண்டர் அருளிய வாழ்வியல் நெறி முறைகள்
த.சீதா லெட்சுமி அம்மா -9486880072
“வல்லாமை பேசாதே மாதிரி போடாதே
ஏழையாய் இரு நீ என்னுடைய கண்மணியே”
ஒரு மனிதன் தன்னுடைய வளர்ச்சியில் பிறரை ஒப்பிட்டு வாழ்வது என்பது கூடாது. இன்றையச் சமுதாய சூழலில் பிறருடைய வாழ்க்கையோடு தன் வாழ்க்கையை ஒப்பிட்டு நாமும் அது போல் வாழவேண்டும் என்று எண்ணி மக்கள் பல தவறுகளைச் செய்துத் துன்பத்திற்கு ஆளாகின்றனர். தான் துன்பம் அனுபவிப்பதோடு மட்டுமல்லாமல் பிறரையும் துன்பப்படுத்துகின்றனர்.
எப்படி என்றால் சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் இருக்கும் ஒருவரோடு தன்னை ஒப்பிட்டுப் பார்த்து தானும் அதுபோல் வரவேண்டும் என்பதற்காக பிறரிடம் சென்று உதவி கேட்பதும், பிறகு அவர் கேட்ட உதவியைச் செய்கிறேன் என்றுச் சொல்லிச் செய்யாவிடின் அவருக்கு துன்பமாக மாறி விடுகிறது. இதனால் பிறரை தூற்றுவதும் இயல்பானக் காரியமாக மாறிவிடுகிறது ஒன்றை நாம் செய்ய முடிந்தால் முதலில் உறுதி அளிக்க வேண்டும் இல்லை என்றால் அதை உறுதிச் சொல்லாமல் இருப்பது நல்லது.
நான் முதலில் ஒன்றை அறிந்துக் கொள்ள வேண்டும், நம்முடைய தகுதி என்ன? நம்முடைய தகுதிக்கு ஏற்றவாறு நாம் வாழுகின்றோமா? நம்முடைய தகுதிக்கேற்ப வாழ்வை நாம் அறிந்தும், எந்த விதத்தில் பிறருக்கு உதவிச் செய்ய நம்மால் முடியும் என்பதை அறிந்து நாம் செயலாற்றினால் நமக்கு எந்தவிதமான துன்பமும் இல்லை. அது அல்லாமல் இயலாத ஒன்றை நான் செய்து முடிப்பேன் என்று கூறுவதும், எல்லாவற்றையும் நான் செய்து தருகிறேன் என்றுச் சொல்வதும், எல்லாம் என்னால் முடியும் என்றுக் கூறுவதும் மிக துன்பத்திற்கு ஆளாக்கும்.
என்னால் தான் எல்லாமே என்று பேசாதே ,மாதிரி போடாதே என்று அய்யா கூறுகிறார். மேலும் பகட்டான வாழ்க்கை வாழ வேண்டும் என்றும், பகட்டுக்கு அடிமையாக வேண்டும் என்று மக்கள் தன்னால் இயலாதச் செயல்களைக் கூடச் செய்து முடித்து விடுவேன் என்றும் பகட்டாக பேசி மாதிரிகள் போட்டுக் கொண்டிருக்கின்றார்கள் . மக்களை தன் வயப்படுத்த எண்ணுகிறார்கள். ஆனால் அப்படிப்பட்ட வாழ்க்கை உங்களுக்கு உகந்தது அல்ல என்று அய்யா,
“ஏழையாய் இரு நீ என்னுடைய கண்மணியே“ என்கின்றார்.
நம்மால் இயன்றச் செயல்களைச் செய்ய வேண்டும். இயலாத காரியங்களை இயலாது என்றுச் சொல்லி அமைதியாக இருக்க வேண்டும். நம்முடைய சொல், செயல் எல்லாமே இறைவனை நாடுவதாக இருக்க வேண்டும். அதற்குரிய வழிகளை நாம் தேடவேண்டும். ஆனால் இந்தப் பொய்யான மாயச் செயலுக்கு நாம் அடிபணியக் கூடாது. இந்தப் பகட்டான வாழ்க்கை வாழ வேண்டும் என்று நம்முடைய மனதில் எண்ண கூடாது. இறைவனை அடைவதே நம்முடைய ஒரே குறிக்கோள் ஆகும் . அப்படி இறைவனை அடைவதற்கு இந்த பகட்டான வாழ்க்கை தேவையில்லை . ஆகவே எந்த விதமான மாதிரிகளும் நாம் செய்யாமல் இறை அன்போடு அமைதியாக உள்ளத்தில் இறைவனை நாடும் எளிய வாழ்வை வாழ்வதே சிறப்பானதாக இருக்கும்.
திருக்கலியாண இகனை
– பா. கவிதா அம்மா 009609805601
……இப்படியாக அம்மைமார்கள் எம்பெருமானை போற்றி வணங்கிச் சொல்லுவார்கள் கைலையங்கிரியில் கரைக் கண்டர் தம் சிரசில் கங்கை திரட்டி அபிஷேகம் செய்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்து இருந்த எங்களின் ஆணவத்தை அடக்கி மக்கள் ஏழும் பெற அருளித் தவத்திற்கு அனுப்பி வைத்த தலைவரே நீர் வந்தீரோ எங்களுடைய பிள்ளை ஏழும் இன வழியும் அங்கம் குறையாமல் எல்லோரையும் சேர்த்து குடும்பத்தோடே அடக்கி அனைவருக்கும் பெருவாழ்வு அருளி எங்களையும் சேர்த்து மங்களமாய் வாழ்வோம் என்ற மாதவனே வந்தீரோ! இனி இப்போ ஏழ்வரையும் ஏற்ற மணம் புரிந்து மக்களையும் எங்களையும் மங்களமாய் வைத்தாளும் என எம்பெருமானின் திருப்பாதம் பணிந்தனர்.
இப்படி அவர்கள் நிற்க எம்பெருமான் தன் அருகில் நின்ற அன்பான சான்றோர்களை பார்த்து இவர்கள் எந்தனுக்கு முன்னமைத்த கன்னிதானோ கள்ளிகளோ பாருங்கள் என்று உன்னி மனதில் உபாயமாய் தானுரைத்தார்.
அதாவது தாம் யார்? அந்த தாய்மார்கள் யார்? ஏன் இந்த திருவிளையாடல்களை இவர் நடத்துகிறார்? என்பதை உலகோர் அறிந்து கொள்ள வேண்டும் என்று இப்படி ஒரு லீலையை புரிகிறார்.
மேலும் அவர் நடை உடைகள் பேச்சு, நாரியரின் தன் குணங்கள் இவர்களின் சாடை மாதிரியை பாருங்கள் என்று மக்களிடம் சொல்ல அவர்கள் படைத்தவருக்கே தெரியும் பாவையரின் தன் குணங்கள் எங்களுக்கு ஒன்றும் தெரியாது என உரைத்தனர்
உடனே எம்பெருமான் அவர்களைப் பார்த்து சொல்லுவார் நீங்கள் யார்? உங்களை நான் கண்டதில்லை. நீங்கள் சொல்வது ஒன்றும் எனக்கு புரியவில்லை. நான் எப்போ உங்களை கானகத்தில் சந்தித்தேன் காட்டில் வந்ததெப்போ? கற்பை அழித்ததெப்போ? பேட்டி செய்து பிள்ளை பெற்றதெப்போ? உங்களை நான் கண்டதில்லை பெண்களே இந்த பேச்சு பேசாதீர்கள் மாயமாய் நீங்கள் மருட்டி பேச வேண்டாம். உங்கள் உபாயம் என்னிடத்தில் செல்லாது பண்டாரத்தோடே பழிமொழிகள் பேசாது போய் விடுங்கள் என்றார்
உடனே அம்மைமாரின் மூத்த அம்மை தங்கையரைப் பார்த்து கள்ளமாக நம்மளை ஈடழித்து இந்த தாதனை சென்று பிடித்து செய்தி என்ன என்று கேளுங்கள் என கண் காட்டினார்
மேலும் அவர்கள் சொல்லுவார்கள் தேன்மொழி மாரே என் சிறப்பான தங்கைமாரே அன்றைக்கு கானகத்தில் நமது ஆணவத்தை அழித்து பிள்ளைகளை பெற வைத்தவர் இவர் தான் இப்பொழுது வார்த்தைகளை சோற்றில் குழைக்கிறார். ஆதலால் அவரை விட வேண்டாம் பிடித்து என்னச் செய்தி என்றுக் கேட்போம் என்றார்கள்.
உடனே எல்லா தேவியர்களும் எம்பெருமானை வழைந்துக் கொண்டு அவருடைய துகிலை பிடித்து இழுத்து எங்கள் பிள்ளைகளை இப்பொழுது தரவேண்டும் என்றுக் கேட்போம் வாருங்கள் என்றவாறு ஒன்றுபோல் ஓடிச்சென்று அய்யாவை நெருங்கி வளைந்தனர்.
உடனே மாயவரும் மனதில் ஒரு உபாயம் எடுத்தார். இப்படி இழந்த மொழிகள் சொன்னால் இப்படி தானாகும் என்று நினைத்து சற்று இதமாகப் பேசுவோம் என்று நினைத்து உங்கள் குழந்தை ஏழும் இனவழியும் நொடிப்பொழுதில் எடுத்து நேரே கொண்டுத் தருகிறோம் என்றார்.
மேலும் சொல்லுவார் “பிள்ளையை நாம் தாறோம் கிள்ளை மடவாரே கள்ள மொழி இல்லை உள்ளதை சொல்கிறோம் பிள்ளையை நாம் தாறோம்” என்றார்.
மேலும் அவர் சொல்லுவார் அயோக அமிர்த வனத்தில் உங்களை நான் சந்தித்ததும் நீங்கள் ஆணவத்தால் என்னிடம் பேசியதும் அதன் விளைவாக நீங்கள் காட்டில் பெற்று வைத்துவிட்டுச் சென்றப் பிள்ளைகளை நாம் தருகிறோம் என்றார்
மேலும் சொல்வார் வனத்தில் நான் உங்களைச் சந்தித்த பொழுது என் மாயையை அறியாது என்னிடம் ஆணவம் பேசினீர்கள். நான் இதுதான் நல்ல தருணம் என்று கண்டு உங்கள் மூலம் ஏழு லோகத்தில் உள்ள உயர்வான உயிர்களைப் பாச நீக்கம் செய்து பேரின்பம் அருள, எண்ணி, உங்கள் மணிவயிற்றில் பிறவிச் செய்ய, பேணியே நீவிர் பெற்றப் பிள்ளைகளை நாம் தருகிறோம் என்றார்.
மடமையில் மாதர்களே! நீங்கள் வந்து என்னை நெருங்க வேண்டாம். என்னை தொடவும் நியாயமில்லை தூரவே அகல நின்று நீங்கள் வனத்தில் பெற்றப் பிள்ளைகளின் அடையாளத்தைச் சொல்லுங்கள் உடனே அந்த மலைகளை தந்து உலகாளச் செய்வோம் என்றார் மாயன்.
இதனைக் கேட்ட அந்த தாய்மார்கள் அனலில் இட்டப் புளூப் போல் துடித்தனர், துவண்டன.
……. தொடரும்
அய்யா சொன்ன முன் அறிவிப்புகள் எவை?
– S. அன்ன செல்வம் அம்மா 9443622222
அய்யா சீசருக்கு சொன்ன சிவகாண்ட அதிகாரப் பத்திரத்தில் விண்ணுலக தெய்வ ரகசியங்களை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சீடர்கள் மூலம் தெரியப்படுத்துகிறார். அதில் மிகவும் முக்கியமாக சில சம்பவங்களை முன் அறிவிப்பாக அய்யா வைகுண்டர் கூறுகின்றார்.
தர்மயுகம் தோன்றுவதற்கு முன் கலியுக முடிவில் நடக்கும் சம்பவங்களை கூறுகின்றேன் என்று சொல்லி பத்து அடையாளங்களை கூறுகின்றார். அந்த அடையாளங்கள் அனைத்தும் அழிவுகள் சம்பந்தமான விபரங்கள் ஆக உள்ளது. அவை,
- பெரும்காற்றினால் அழிவு,
- வெள்ளத்தால்அழிவு
- பேய்மாறாட்டத்தால்அழிவு
- பெருஞ்சுரத்தால்அழிவு
- சம்மாரியால்அழிவு,
- காளிவெள்ளத்தால் அழிவு
- நஞ்சுதின்று கொலைப்பட்டழிவு
- பெண்ணாலேஆண் அழிவு
- ஆணாலேபெண் அழிவு
- பூமிஅதிரும் ஓசையினால் ஒரு பெருமூச்சு உண்டாகும்
இப்படி பற்பல தீர்ப்பு கேட்க நாராயணம் நாவில் வகுத்துசொன்னோம்
இவை அய்யா வைகுண்டர் சொன்ன அருள்நூல் வாசகங்கள். இப்படி பற்பல தீர்ப்புகள் கேட்க என்று சொல்கிறார். ஆம் அன்பர்களே தர்மயுகம் தோன்றுவதற்கு முன் கலியுக முடிவில் அதாவது தர்மயுகத்திற்கும் கலியுகத்திற்கும் நடுவில் நடக்கும் நடுத்தீர்ப்பு நிகழ்வுக்குரிய அடையாளங்களை அய்யா தெளிவாக கூறுகின்றார்.
நடுதீர்ப்பு கேட்பதற்கு நாளடுத்து வருதப்பா நடுதீர்ப்பு கேட்டவுடன் நாடாள நான் வருவேன் என்று தர்மயுகம் எப்போது தொடங்கும் என்கிற காலகட்டத்தையும் தெளிவு படுத்தி மக்களுக்கு முன் அறிவிப்பாக அறிவிக்கிறார். அதுமட்டுமல்ல கலியோ விளைந்து போச்சு சக்கராயுதத்திற்கு இரைகாணும் பருவமாச்சே சிவனே அய்யா என்றும் அய்யா நம்மை முன்னெச்சரிக்கை செய்கிறார். மக்கள் கலிமாயை என்கிற கர்மவினைக்குள் அகப்பட்டு தீவினைகள் செய்து துன்பத்திற்கு ஆளாகி உள்ளார்கள். எனவே மக்களுக்கு தண்டனை கொடுத்து நீதி வழங்கும் காலம் வந்துவிட்டது சிவனே அய்யா என்கிறார்.
மேலும் ஆயிரத்தி எட்டாம் ஆண்டு மாசியில் ஆண்டி தெச்சணம் பள்ளி கொண்டு வந்திருந்த பற்பல காரணம் நடத்தி சொல்லி வந்தும் உலகம் அறியாமல் மயங்கி போச்சு. அய்யா வைகுண்டர் மக்கள் நலனுக்காக எவ்வளவோ ஞான உபதேசங்களை சொல்லியும் அதை காதில் வாங்காமல் உலக சிற்றின்பத்தில் மயங்கி நித்திய பேரின்பத்தை மறந்து போனீர்களே என்பதாகும். இந்த உலகம் காலச்சக்கரத்தின் அடிப்படையில் இயங்குகிறது.
எது எது எப்போது நடக்க வேண்டும் என்று நியமிக்கப்பட்டுள்ளதோ அது அப்போது நடந்தே தீரும். அந்த கால அவகாசங்களில் மக்கள் நல் வினைகளைச் செய்து புண்ணியத்தை சம்பாதிக்கவேண்டும். புண்ணியம் செய்த ஆன்மாக்கள் மட்டுமே தருமயுகத்தில் நிலையான நித்திய வாழ்க்கை வாழ முடியும். இதுவே அய்யா வைகுண்டர் கூறும் உண்மை நியதியாகும். இப்போது சற்று யோசித்துப் பாருங்கள் இந்த பத்து அடையாளங்களையும் பார்த்த ஒரே தலைமுறை நாம் தானே.
நம் முன்னோர்கள் இத்தனை சம்பவங்களையும் பார்க்கவில்லை. சூறாவளி போன்ற புயல் காற்றையும் மழை வெள்ளத்தால் அழிவும், வாதைகள் மூலம் சித்து விளையாட்டும் தீராத கொடிய நோய்களும், சுனாமி போன்ற கடல் கொந்தளிப்பும், விஷ உணவுகளும் அதாவது காய்கறி பழங்கள் வரை விஷ மருந்துகளால் நஞ்சாக உள்ளது. பெண்களால் ஆண்களுக்கும் அழிவும் ஆண்களால் பெண்களுக்கும் அழிவும், நிலநடுக்கம் போன்ற செய்திகளும் இப்படி அழிவு அழிவு என்கிற செய்திகளை கேட்ட வழியாக இருக்கிறது. நாடு நடுநடுங்கிங்கிப் போகும் என்று நாராயணர் சொன்னதைப் போன்று நம் கண்முன்னால் நடந்து கொண்டிருக்கிறது. இதன் விரிவான விளக்கத்தை அடுத்த தொடரில் காணலாம்..
தொடரும்….
அய்யா சொன்ன முன் அறிவிப்புகள் எவை?
-செ. அன்ன செல்வம் அம்மா
ஆசை வையாதுங்கோ அவகடம் செய்யாதுங்கோ
– ஹரி வெங்கடேஷ் அய்யா 8508518505
இவ்வுலகில் நாம் எந்த பொருளை ஆசைப்பட்டு அடைந்தாலும் அது நம்மை முழுமையாக திருப்தி படுத்தி விடாது. நாம் ஆசைப்பட்ட பொருள் கிடைத்ததும் மீண்டும் நமது மனம் மேலும் ஒரு பொருள் மீது ஆசைக் கொள்ளும். அந்த பொருளை அடைந்தால்தான் மனம் திருப்தி அடையும் என்று நினைத்து மீண்டும் அந்த பொருளை அடைவதிலேயே மனம் தீவிரமாக ஈடுபடும். அந்த பொருளை அடைந்ததும் மனம் திருப்தி அடைந்து விடுமா என்றால் அதுவும் இல்லை.
மேலும் வேண்டும் வேண்டும் என்று வேறு ஏதேனும் பொருளில் ஆசைவயப்பட்டு அதை அடைய தீவிரமாக முயற்சி செய்யும். இப்படி எந்த வகையிலும் திருப்தி படுத்த முடியாத மனதை எப்படிதான் திருப்தி அடைய செய்வது? இறைவன் மீது அன்பு கொண்டு அவனை அடைய முயற்சிசெய்வதன் மூலமே நிறைவு பெறாத மனதை நிறைக்க முடியும். ஆகவே மனதை அமைதி படுத்துவது நமது முதல் கடமையாக உள்ளது. உலகியல் வாழ்விற்கு வாழ்க்கை வாழ்வதற்கு மட்டுமே உலகியல் பொருட்கள் தேவை.
இன்று நாம் ஆசைப்படும் பொருள் நாளை நமக்கு கிடைத்து விட்டால் மனமானது இது போதும் என்று அமைதி அடைந்து விடாது. ‘தகருமோ நான் தரும் தங்கக்காசு‘ என்று வைகுண்டர் நான் உங்களுக்கு தர்மயுகம் தருவேன் என்று சொல்லும் போது சூழ்ந்திருந்த சான்றோர்கள்
ஆண்டவரே இப்பரிசம் தருவீரானால் யாம் அடியார் வாழுகின்ற சொத்து வஸ்து கூண்டபண்டம் ஆடுமாடு குருபரனே நாங்கள் வரை உமக்கு சொந்தம் என்று அத்தனை உலகியல் பொருட்கள் மீதும் உள்ள ஆசைகளை மறந்தவராய் இறைவனை அடைவது ஒன்றே எங்கள் ஆசை. அதுவே எங்கள் லட்சியம் என்பதை வெளிபடுத்தி நின்றார்கள்.
துவையல் தவசிகளோ தாம் சேர்த்து வைத்திருந்த அத்தனை சொத்து மற்றும் பொருட்களையும் ஒன்னில் அரைபாதி என கிடைக்கும் பணத்திற்கு விற்று இறைவன் மீது ஆசை கொண்டார்கள். இவர்கள் உணர்ந்தவர்கள். உலகியல் பொருள்கள் எல்லாம் மாயை. இவை எவற்றிற்கும் நமது மனதை நிறைக்கும் சக்தி இல்லை என்பதை அறிந்தவர்கள். ஆனால் அவர்களை போல் அனைத்தையும் விற்று விட்டு உலகியல் வாழ்க்கையில் இருந்து விடுபட வேண்டும் என்பது அல்ல இதில் சொல்ல வரும் கருத்து. அவர்கள் எந்தஅளவிற்கு உலகியல் பொருள்களை துச்சமாக கருதி இறைவனை மேன்மையாக கருதி உள்ளார்கள் என்பதே இதன்மூலம் சுட்டிக்காட்டப்படும் செய்தி. நாம் பயன்படுத்தும் உலகியல் பொருள்கள் அனைத்தும் உலக வாழ்க்கையை நடத்துவதற்குதானே அன்றி உலகியல் இன்பத்துக்குள்ளேயே உலலுவதற்கு அல்ல என்பதை நாம் உணர வேண்டும்.
நம்மிடம் எல்லா பொருளும் இருக்கலாம் அது தவறில்லை. ஆனால் இந்த பொருள்கள் அனைத்தும் என்னுடையது நானே அனைத்து பொருளுக்கும் எஜமானன் என்ற எண்ணமே தவறானது. ஏனெனில் அனைத்துக்கும் எஜமானன் இறைவன். பொருளை கொடுப்பதும் அவனே எடுப்பதும் அவனே என்ற எண்ணத்தை நாம் ஒரு போதும் மறக்கக் கூடாது. சிலர் எவ்வளவு பொருளை சேர்த்தாலும் போதாது போதாது என்று சேர்த்துக் கொண்டே இருப்பார்கள்.
ஒரு ஊரில் ஒரு நேர்மையான விவசாயி இருந்தான். தனது நிலத்தில் பயிர் இட்டு அதனை விற்பனை செய்து வாழ்ந்து வந்தான். நேர்மையின் மறு உருவமான இவன் கிடைக்கும் பொருள் எதுவாகினும் தனது சொந்த உழைப்பில் கிடைத்ததாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன். இவனது நேர்மையைக் கண்ட சிறு பேய்கள் இவனை எப்படியாவது அதர்மம் செய்ய வைக்க வேண்டும் என எண்ணி எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தன. அவனுக்கு தேவையான தங்கம், பொருள் என எல்லாவற்றையும் கீழே தூக்கிப் போட்டு அவனது நேர்மையை அழிக்க முயற்சித்தன.
ஆனால் எந்த வகையிலும் அவனுடைய நேர்மையை அழிக்க முடியாமல் சிறு பேய்கள் எல்லாம் திணறி பெரிய பேயாகிய பேய்த் தலைவனிடம் சென்று அந்த ஒரு விவசாயியை மட்டும் எவ்வளவோ முயற்சி செய்தும் எங்களால் தவறு செய்ய வைக்க முடியவில்லை என்று முறையிட்டன. இதைக் கேட்ட பேய்த்தலைவன் நான் அவனை தவறு செய்ய வைக்கிறேன் அது எப்படி என்பதை பொறுத்து இருந்து பாருங்கள் என்று மற்ற பேய்களிடம் சொல்லி விட்டு ஒரு வேலைக்காரன் போல் அந்த விவசாயியிடம் வேலைக்கு சேர்ந்தது.
மகசூலை எப்படி அதிகரிப்பது? வியாபாரத்தைஎப்படி பெருக்குவது என்பது பற்றி பல ஆலோசனைகள் புதிது புதிதாக வழங்கி அவனது லாபத்தை அதிகரிக்கச் செய்தது. இதனால் சிறிது நாட்களில் மிகப்பெரும் செல்வந்தனாக அந்த விவசாயி மாறினான். பின் வைத்திருக்கும் பணத்தை எப்படி செலவழிப்பது என்று எண்ணி செய்வதறியாமல் திகைத்தான். மதுவை வாங்கினான். குடித்தான். மதி மயங்கினான். செய்யாத தீவினைகள் செய்தான். ஆகவே தேவைக்கு அதிகமானபொருள் நம்மிடம் இருந்தாலும் அது நம்மை தீய பாதைக்கும் இட்டு செல்லும் என்பதை உணர்ந்து லோபியாக இல்லாமல் தர்மம் செய்து வாழும் தர்மவானாக இருந்து உயர்வடையும் வழியை தேடுவோம்.
மனிதன் சவமா? சிவமா
அய்யா வைகுண்ட பரம்பொருளின் அருளுரை என்ன?
– S. அன்ன செல்வம் அம்மா 9443622222
நல்லறிவு
– ஹரி வெங்கடேஷ் அய்யா 8508518505
ஒரு வரியில் ஒரு புராண கதை தந்த அகிலம்
– பா. கவிதா அம்மா 009609805601
இன்றைய நிகழ்வை அன்றே சொன்ன அய்யா
பா.கிருஷ்ணமணி அப்புக்குட்டி 9841933992.
அய்யா சொன்ன முன் அறிவிப்புகள் எவை?
-செ. அன்ன செல்வம் அம்மா
அய்யா உண்டு
அய்யாஉண்டு
இல்லறமே தவம்*
– R. கோபால கிருஷ்ணன் அய்யா
அய்யா உண்டு.