தர்மயுக முரசு ஜூலை 2023
அய்யாவின் அருளால் எந்நாளும்நன்னாளே
-அசோக்குமார் அய்யா – 009607704901, 8012174032.
என்றைக்கும் நான் இருப்பேன் என் மக்கள் தங்களிடம்”
வாழையடி வாழையாக குழுக்களாக சேர்ந்து ஒன்றுபட்டு தலைமுறை தலைமுறையாக ஓய்வின்றியும், சோர்வின்றியும் ஆன்மிக பணியாற்றி வரும் சான்றோர் பெருமக்களுக்கு அன்பு வணக்கம்
இறையடியாளர்களே: பலபேர் சேர்ந்து ஒன்றுபட்டு ஆன்மிக செயல் புரிகின்ற போது அச் செயல்பாட்டின் வளர்ச்சி என்ன? எப்படிப்பட்ட வளர்ச்சிக்காக அது இருக்க வேண்டும் என்பதை நாம் எல்லோரும் தெரிந்து வைத்துக் கொண்டோமென்றால் அவ்வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும்.
ஆன்மிக பணி முழுக்க முழுக்க நம்மை கலியில் இருந்து கடக்க வைப்பது ஆகும். சரி இப்போது அந்த வளர்ச்சி என்ன என்பதை பார்ப்போம். அந்த வளர்ச்சி முக்கியமான மூன்று அம்சங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும்.
முதல் வளர்ச்சி, ஒன்றுபட்டு இணைந்து குழுக்களாகச் செயல் படும் அனைவரும் ஆன்மிக ஞானம் பெற வேண்டும். மனம் பக்குவம் அடைய வேண்டும். சாஸ்திர வேத நூல் சொல்லுவது போல் நடக்கின்றவர்களாக நம்மை நாம் உயர்த்திக் கொள்ள வேண்டும். பிறருக்கு எடுத்துரைக்கும் ஆசிரியராக தேர்ச்சி பெறவேண்டும். அதே சமயம் நாம் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது என்கிற உண்மையை உணர்ந்து ஒரு மாணவனாகவும் நம்மை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். மொத்தத்தில் நாமும் அய்யாவின் பிள்ளைகளாக தகுதி பெற்று பிறரையும் தகுதி பெற வழிகாட்ட வேண்டும். இதுவே வளர்ச்சியின் முக்கிய ஒன்றாவது அம்சமாகும்.
இரண்டாவது முக்கிய அம்சமாக நாம் எதைப் பார்க்க வேண்டுமென்றால் நாம் அய்யாவின் பிள்ளைகளாகத் தகுதி பெற்று செயல்படுவதைப் பார்த்து பிறர், நாமும் அதுபோல் தகுதி பெற வேண்டும் என்று எண்ணி நமது குழுவில் ஒன்றுபட்டு செயல்பட முன்வர வேண்டும். இப்படி பல பேர் இணையும் போது நமது கூட்டு முயற்சி இன்னும் வலுப்பெறும். மக்கள் பலமே செயல்பாட்டின் ஆணி வேர். பல அன்பர்கள் இணைய இணைய பலபேர் பக்குவம் அடைய அடைய அச் செயல்பாட்டின் உறுதித்தன்மை உலக அரங்கில் பேசப் படும். இப்படி பேசப்படும் போது நாம் உலகத்தின் முன்னோடிகள் என்கிற தன்மையைப் பெறுகிறோம். இப்படி பெறும் போது இன்னும் பலபேரின் ஆதரவு நமக்குக் கிடைக்கும். இதன் மூலம் நமது செயல்பாட்டினை விரிவாக்க முடியும். இப்படிப்பட்ட இந்த முக்கிய அம்சம் ஒரு குழுவின் வளர்ச்சிக்கு உண்மையான வித்திடும். இதுவே வளர்ச்சியின் இரண்டாவது முக்கிய அம்சமாகும்.
மூன்றாவது முக்கியமான அம்சமாக நாம் பார்க்க வேண்டியது நமது திட்டங்களும் செயல்முறைகளும். இந்த திட்டங்களும் செயல் முறைகளும் நமது ஆகம நெறிமுறைப்படியே அமைய வேண்டும். இறைவன் கொடுத்த வேத நூல் படி அமைய வேண்டுமென்றால் மேற் சொன்ன இரண்டு முக்கிய அம்சங்கள் படி நமது குழுவும் நமது செயல்பாடும் அமைந்திருக்க வேண்டும். அப்படி அமையும் பட்சத்தில் திட்டங்களும் செயல்முறைகளும் பிரமாண்டமாக அமையும். திட்டங்களும் செயல்முறைகளும் சிறப்பாக அமையும் போது அது வாழையடி வாழையாக வேகமாக வளரும். இப்படி வளரும் போது அது தலைமுறை தலைமுறையாக பலனைத் தரும். இதுவே வளர்ச்சியில் மூன்றாவது முக்கிய சிறப்பம்சமாகும்.
இந்த மூன்று முக்கிய அம்சங்களே ஒரு குழுவின் அடிப்படைத் தன்மையை உறுதிபடச் செய்யும். மாறாக நாம் பக்குவம் அடையாமலும் நம்மோடு இணைந்தவர்களும் பக்குவம் அடையாமலும் திட்டங்களையும் செயல்முறைகளையும் வகுத்தோம் என்று சொன்னால் அது காலப் போக்கில் காணாமல் போய்விடும். எனவே பக்குவம் பெற்று தன்னலமற்று பொதுநலனைக் கருத்தில் கொண்டு பற்றற்று இறைபணி செய்தால் மட்டுமே அச் செயல்பாடு ஓங்கி வளரும். மேலும் அது நம்மை அய்யாவின் பிள்ளைகளாக்கி உலகத்தின் முன்னோடிகளாக்கி பிறவிப் பிணியில் இருந்து விடுபட வைத்து அய்யா வைகுண்ட பரம்பொருளின் திருவடியை அடையச் செய்து பேரின்ப பெருவாழ்வாகிய தர்மயுக வாழ்வை பெற வைக்கும். இதைக் கருத்தில் கொண்டு செயல் படுவோம் தர்மயுக வாழ்வு பெறுவோம்
வாழுவோம் மக்கா வையகத்து நாமாக”
அய்யா உண்டு
அகில கேள்வி
1. வங்கணமாய் பிண்டத்திலிருந்து தோன்றிய அசுரர்கள் யார்?
2. கறைக்கண்டர் யார்?
3. ஆழி அடைத்தவர் யார்?
4. நீதங்கள் எத்தனை?
5. நீதங்களின் பெயர் என்ன?
விடை ……… பக்கம் பார்க்கவும்
அகிலதிரட்டு அம்மானை மூலமும், உரையும்
-க. ரீகன் அய்யா- 0096893145654
ஆருமொப்பில்லா ஆதி அகமகிழ்ந்து
கேட்டவர முழுதுங் கெட்டியா யுங்களுக்குத்
தாட்டிமையா யிப்போ தந்தோ மெனவுரைத்தார்”
ஐந்து முகம் கொண்ட சிவபெருமானால் அழிவு வரக்கூடாது என்ற வரமும் அடக்கம். இப்படி சூரர்கள் நியாயம் இல்லாத வண்ணம் அவர்களுக்கு வேண்டிய வரத்தினைக் கேட்டார்கள். வரம் கேட்டது நின்ற சூரர்களுக்கு அவர்கள் கேட்ட வரம் அத்தனையும் உங்களுக்குத் தருகிறோம் என்று சொல்லி சூரர்கள் கேட்ட அத்தனை வரத்தினையும் சிவபெருமான் கொடுத்தார்.
பரம உமையாளைப் பைய எடுத்தணைத்து
அலைமேலே ஆயன் அருகிலே போயிருந்தார்
மலைமேலே சூரன் வாய்த்ததென் றவ்வரங்கள்
கயிலை முழுதுங் காவலிட்டுத் தேவரையும்
அகிலம் முழுதும் அடக்கி அரசாண்டனனே”
இப்போது சிவபெருமானுக்கு கைலையங்கிரிக்கு செல்ல இயலாத நிலை வருகின்றது. ஏனெனில் இனி கைலையங்கிரியை ஆளக்கூடிய உரிமை சிங்கமுக வாகனன், திறள் சூர பரப்பனுக்கே வருகின்றது. இப்போது சிவபெருமான் எங்கே போகலாம் என ஆலோசித்துப் பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கக்கூடிய தனது மைத்துனர் நாராயணரிடமே செல்வோம் என்று அம்மை உமையவளோடு போய் அமர்ந்தார்.
இப்படி சிவபெருமான் நாராயணரிடம் போய் இருக்க, தன்னை கேட்கவோ எதிர்க்கவோ யாரும் இல்லை என்ற நிலையில் கைலையங்கிரியில் உள்ள தேவர்களை அடிமைப்படுத்தி சூரர்கள் வேலைகள் கொண்டார்கள். மேலும், எல்லா உலகங்களையும் தாங்கள் அடக்கி ஆட்சி புரிந்து வந்தார்கள்.
முப்படியே விட்டகுறை முடிவாகும் நாளையிலே
தேவரையும் வானவரைத் தெய்வேந்திரன் வரையும்
மூவரையும் பாவி முட்டுப் படுத்தினனே”
ஈனமில்லா தாயன் எடுத்தார் ஒருவேசம்
ஈசனிடம் சென்று இயம்பினாரெம் பெருமாள்
வாசமுள்ள ஈசுரரே மாபாவிச் சூரனுக்கு
ஏது வரங்கள் ஈந்தீர்காண் என்றுரைக்க”
சூரர்களை அழிப்பதற்கு முதலில் அவர்கள் பெற்ற வரத்தின் தன்மையை அறிய வேண்டும் என்பதற்காக அய்யா நாராயணர் சிவபெருமானிடம் செல்கின்றார். சிவபெருமானைப் பார்த்து இந்தச் சூரர்களுக்கு என்ன விதமான வரங்களைக் கொடுத்தீர் ஈசுரரே என்று கேட்டார்.
வையகத் திலுள்ள வலுவாயு தத்தாலும்
தெய்வலோ கத்தில் சிறந்தமன்னர் தன்னாலும்
அஞ்சு முகத்தாலும் அழியா தவனுயிரும்
தஞ்சமிடவானோர் தையல் தெய்வக் கன்னிமுதல்
கயிலை முழுதும் கமண்டலங்க ளேழுமுதல்
அகில முழுதும் அடக்கி வரங் கொடுத்தோம்”
ஆகவே சிவபெருமான் மூலமாக அழிவு வரக்கூடாத வரத்தினைச் சூரர்கள் பெற்றுக் கொண்டார்கள். மேலும் தேவ லோகத்தில் தேவ கன்னிகள் முதல் இந்தச் சூரர்களுக்குப் பணிந்து ஏவல் செய்யும்படியாக வரத்தினைப் பெற்றார்கள். அதுமட்டுமல்லாமல் கயிலை முதற்கொண்டு ஏழு தேவ லோகங்கள் முதல் இந்தப் பழமையான பூமி முதற்கொண்டு இவர்கள் அடக்கி அரசு ஆளும்படி வரத்தினைக் கொடுத்தேன் என்று சிவபெருமான் தான் சூரர்களுக்குக் கொடுத்த வரத்தினைப் பற்றி நாராயணரிடம் கூறினார்.
நின்று தியங்கி நெஞ்சமது புண்ணாகி
பேயனுக் கென்னுடைய பிறப்பை கொடுத்தல்லவோ
தேயமதில் நானும் திரிந்தலையக் காரணந்தான்
என்று திருமால் இதுசதையஞ் சொல்லியவர்
இன்றந்தச் சூரர் இருவர் தன்னைக் கொல்லவே
ஆறு முகமாய் ஆயனள விடவே”
அப்படி பிறப்பெடுக்கும்போது நீரும் (நாராயணர்) இந்த உலகில் பிறப்பெடுத்து அவனை அழிக்க வேண்டிவரும் என்று சிவபெருமான் நாராயணருக்குக் கொடுத்த வரத்தின் படி, நான் இந்த உலகில் பிறப்பெடுத்து இந்தச் சூரர்களால் எனக்குப் படும் துன்பத்துக்குக் காரணம். இப்படி அய்யா நாராயணர் சிவபெருமானோடு உரைத்து விட்டு இனி எப்படி ஆயினும் தாமே இந்த அசுரர்களை அழிக்க வேண்டும் என்று நாராயணர் ஆறுமுக வேலவனாக அவதாரம் எடுக்கலுற்றார்.
(தொடரும்)
அய்யா உண்டு
நான் என்ற தலைக்கனம்
– மீனா சுகின் அம்மா- 9344813163
பஞ்சபாண்டவர்களுக்கு எப்பொழுதும் துணையாக உடன் இருப்பவர் கிருஷ்ணர். பஞ்சபாண்டவர்களில் மூத்தவர் தர்மர். இவர் தர்மத்தில் மிகவும் சிறந்தவர். உலகிலேயே சிறந்த தர்மவான் என்ற காரணத்தினால் தான் இவருக்கு இந்தப் பெயர் வந்தது. கிருஷ்ணருக்கு ஒரு சிந்தனை தோன்றியது, தர்மர் தர்மத்தில் தான் மட்டுமே சிறந்தவர் என்ற அகந்தை கொண்ட தர்மருக்கு ஒரு பாடத்தை கற்றுக் கொடுக்க நினைத்தார்.
அதன்படியே கிருஷ்ணர் தர்மரைப் பக்கத்து நாட்டிற்கு அழைத்துச் சென்றார். வெகு நேரம் நடந்து சென்றதால் இருவருக்கும் தாகம் ஏற்பட்டது. எனவே இருவரும் அருகில் இருந்த வீட்டிற்குச் சென்று தண்ணீர் கேட்டனர். அப்போது அந்த வீட்டில் இருந்த பெண் அவர்களுக்குத் தங்கச் செம்பில் தண்ணீர் கொடுத்தாள். இருவரும் தங்கள் தாகத்தைத் தீர்த்துவிட்டு செம்பைத் திருப்பிக் கொடுத்தார்கள்.
ஆனால் அந்தப் பெண் செம்பைத் தூக்கிக் கீழே வீசினாள். தர்மருக்கு மிகுந்த கோபமும் அதிர்ச்சியும் ஏற்பட்டது. மனதிற்குள் இவள் அகந்தை பிடித்தவளாக இருப்பாளோ என்று எண்ணிக் கொண்டே அந்தச் செம்பை எடுத்து அவளிடம் கொடுத்தார். பின்பு அவளிடம் அம்மா இந்தச் செம்பு விலை உயர்ந்தது இதை இவ்வாறு தூக்கி வீசுவது மிகவும் தவறு என்று கூறினார். அதற்கு அந்தப் பெண் ஐயா எங்கள் நாட்டில் யாரும் ஒரு முறை உபயோகித்தப் பொருட்களை மறுபடியும் உபயோகிப்பது இல்லை என்றாள். இதைக் கேட்டதும் தருமர் மிகுந்த குழப்பம் அடைந்தார்.
பின்பு இருவரும் அங்கிருந்து கிளம்பினார். போகும் வழியில் இன்னும் சில ஆச்சரியம் அவர்களுக்குக் காத்திருந்தது. ஒரு யானை தங்கச் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தது. கால்நடைகளுக்குத் தங்கக் குடத்தில் நீர் வைக்கப்பட்டிருந்தது. இதைப் பார்த்து வியந்த தருமர் கிருஷ்ணரிடத்தில் இந்த நாட்டு மக்கள் இவ்வளவு செல்ல செழிப்பாக மிகவும் ஆடம்பர வாழ்க்கையை வாழ்கிறார்களே எனக்கு இந்த நாட்டின் அரசரை பார்க்க மிகவும் விருப்பமாக உள்ளது என்னை அழைத்துக் கொண்டு செல்வீர்களா என்று கேட்டார்.
கிருஷ்ணர் தருமருமாக அந்நாட்டின் அரசவையை அடைந்தனர். அந்த நாட்டின் அரசன் நவரத்தினத்தினால் ஆன கீரிடமும் நிறைய ஆபரணங்களும் அணிந்து இருந்தார். கிருஷ்ணர் அந்த அரசரிடம் நாங்கள் பக்கத்து நாட்டில் இருந்து வருகிறோம் இவர்தான் தர்மர் இவர் சிறந்த கொடையாளி, தர்மம் செய்வதில் இவரை மிஞ்ச யாரும் இல்லை என்று கூறிக் கொண்டே இருந்தார்.
ஆனால் அந்த அரசன் தர்மரைத் திரும்பிக் கூட பார்க்கவில்லை. கிருஷ்ணர் பலமுறை கூறியும் அந்த அரசன் தர்மரைக் கண்டு கொள்ளவில்லை. உடனே தர்மர் “நான் எந்த நாட்டிற்குச் சென்றாலும் எனக்குத் தனி மதிப்பும் மரியாதையும் கிடைக்கும் ஆனால் இந்த அரசன் என்னைக் கண்டு கொள்ளவில்லையே என்று நினைத்தார்.
அப்பொழுது அந்த அரசன் கிருஷ்ணனிடம் என் நாட்டு மக்கள் உழைப்பில் சிறந்தவர்கள் அதனால் அவர்களிடம் அதிக செல்வம் இருக்கின்றது அதனால் அவர்கள் என்னிடம் எதையும் நாடி வருவதில்லை. எனக்கும் தான தர்மம் செய்யும் நிலையும் ஏற்படவில்லை. ஆனால் தருமர் தன்னுடைய நாட்டில் அதிக ஏழைகளைக் கொண்டுள்ளார். அதனால் அவர்கள் இவரிடம் சென்று தர்மம் பெறுகின்றார்கள். ஆகையால் இப்படி அதிக ஏழை மக்களை கொண்ட நாட்டு அரசரை எனக்கு பார்க்க கூட விருப்பமில்லை எனக் கூறினார்.
இதை கேட்டதும் தர்மரின் தலை குனிந்தது, இனி என் நாட்டு மக்கள் நிலையை உயர்த்துவது என் கடமை என்று எண்ணிக் கொண்டு அங்கிருந்து கிருஷ்ணரிடம் சென்றார். இப்படி கிருஷ்ணர் தர்மருக்கு “நான்” என்ற எண்ணத்தை நீங்க இப்பாடத்தை காட்டினார்.
இக்கதையைப் போன்று தான் நாமும் நம் வாழ்வில் சிறிதாக எதையாவது செய்து விட்டு நான் தான் அனைத்திலும் உயர்ந்தவன் என்று நினைக்கின்றோம். நமக்கு மேலாக உள்ளவர்களை பார்த்து வெட்கி தாழ்வு மனப்பான்மையுடனும் நமக்கு கீழாக இருப்பவர்களை பார்த்து இழித்து, பழித்து ஏளனம் செய்யாமலும் இருக்க வேண்டும்.
நாம் வாழ்வில் முன்னேற தெளிந்த எண்ணமும் தூய சிந்தனையும் போதும். இதைத்தான் அய்யா அகிலத்தில் “நன்றி மறவாதே நான் பெரிது என்று எண்ணாதே” என்று கூறியுள்ளார். ஒருபோதும் நாம் நம்மை நான் தான் பெரியவன் என்று எண்ணக்கூடாது. எப்போதும் ஒரே மனநிலையில் தலைக்கனம் இல்லாமல் வாழ வேண்டும்
அய்யா உண்டு
மஎம்மதமும் சம்மதமா?
– ஹரி வெங்கடேஷ் அய்யா 8508518505
– அய்யா
எல்லா மதத்திலும் இருக்கும் கடவுள் ஒருவர்தான் என்பதற்காக எல்லா மதமும் ஒன்று ஆகிவிடாது. சில நாட்களுக்கு முன் எனக்குத் தெரிந்த அய்யாவழி அன்பர் ஒருவர் இஸ்லாமிய மத விருந்தில் கலந்து கொண்டு அங்கு பரிமாறப்பட்ட உணவை உண்டு விட்டு அங்கிருந்து வெளியே வந்தார். இதைக் கண்டு சற்று வருத்தம் அடைந்த நான் அவரிடம் சென்று ஒரு வார்த்தைக் கேட்டேன்.
அய்யாவழி என்று சொல்லுகிறீர்கள் நெற்றியில் நாமமும் போட்டுக் கொள்கிறீர்கள். ஆனால் மாற்று மதத்தவரின் மதவிருந்தில் கலந்து கொள்ளுகிறீர்களே! இது நியாயம்தானா? என்றேன். ஆனால் அவரோ உடனடியாக எனக்குப் பதிலளிக்கும் விதமாக “நீ மத வெறியன்” ஆனால் நானோ அய்யா காட்டிய சமத்துவ வழியில் செல்பவன். எம்மதமும் எனக்குச் சம்மதமே என்றார். “பேய் எச்சித் தின்று அவர் பேய் போலே அலைகிறாரே” என்று அய்யா சொன்னது இவர்களைப் போன்றவர்களைத்தானோ என்று நினைத்து அவ்விடம் விட்டு அகன்றேன்.
இவரைப் போன்ற சிலர் “எல்லாக் கடவுளும் தாமே என்று அய்யா சொல்லி இருக்கிறாரே ஆகவே பைபிள் குர் ஆனும் அய்யா உடையதுதான் என்று தவறாக நினைத்து விடுகிறார்கள். இறைவன்தான் ஒருவனே தவிர மதம் ஒன்று அல்ல. இறைவன்தான் ஒருவனே தவிர மதத்தைப் போதிக்கும் ஆகமங்கள் ஒன்று அல்ல.
அய்யாவழியினர் பலர் இக்கருத்தில் தெளிவாக இருந்தாலும் அகிலத்திரட்டைப் படித்து உணராத சில அய்யாவழியினர் இந்தக் கருத்தில் குழம்பிப் போய் கிறிஸ்துவ மற்றும் இசுலாமிய மதங்களும் அய்யாவின் மதமே என்று புரிந்து கொள்ளும் அவல நிலையில் உள்ளனர். இந்தத் தவறான புரிதலால் மாற்று மதத்தவர்களுடன் அவர்கள் மதக் கொள்கைகளில் சமரசம் செய்து கொள்கிறார்கள். இது மிகவும் தவறான போக்கு.
“உண்டு பண்ணி வைத்த நல்ல உட்பொருளைத் தேடாமல் கண்டதெல்லாம் தெய்வம் என கை எடுப்பான் சண்டாளன்” என்ற அய்யாவின் வாசகம்தான் நினைவுக்கு வருகிறது. இது போன்று மாற்று மதத்தவரின் கொள்கைகளில் சமரசம் செய்து கொண்டு நமது அய்யாவழி கொள்கையை (உட்பொருளை) அறியாதிருக்கும் அன்பர்களுக்கு அய்யாவழியின் மேன்மையை எடுத்துச் சொல்வது நமது கடமை ஆகும்.
அய்யா உண்டு
பிரணாயாமம் என்றால் என்ன?
– S. அன்ன செல்வம் அம்மா – 9443622222
மூச்சு இரண்டு வகையாக செயல்படுகிறது. அவை உள்மூச்சு, வெளிமூச்சு எனப்படும். உள்மூச்சு மூலம் ஆக்ஸிஜன் உள் இழுக்கப்படுகிறது. வெளிமூச்சு மூலம் கார்பன்டை ஆக்ஸைடு வெளியிடப்படுகிறது. நாம் காற்று மண்டலத்தில் காற்றைச் சுவாசித்து வாழ்கிறோம்.
நாம் சுவாசிக்கும் காற்று மூக்கு துவாரங்கள் வழியாக தொண்டைக்கும் தொண்டையில் இருந்து சுவாச நாளங்களுக்கும் சுவாச நாளத்தில் இருந்து நுரையீரலுக்கும் செல்கிறது. நுரையீரல் காற்றில் இருந்து பிராண வாயுவை தனியே பிரித்தெடுத்து ரத்தத்தில் கலக்கிறது. ரத்தத்தின் மூலம் நரம்பு வழியாக அனைத்து உறுப்புகளுக்கும் போய் சேருகிறது. நாம் காற்றை முறைப்படி சுவாசிக்காமல் அவசர அவசரமாக சுவாசிக்கின்ற காரணத்தால் பலவிதமான நோய்களுக்கு ஆளாகின்றோம்.
நாம் யோக பயிற்சியின் மூலம் மூச்சைக் கட்டுப்படுத்தி, ஒரு சில விதிமுறைகளின் படி சீராக இயங்கச் செய்யும் போது, பிராண சக்தி உடலுக்கு அதிகமாக கிடைக்கிறது. எனவே ஆரோக்கியமாக வாழ முடிகிறது.
மோட்டி லேணியானேன் சிவனே அய்யா
வாசி பாம்புக்கும் பஞ்சபதி தனக்குமொரு
வாயமாய் யிருந்தேனையோ சிவனே அய்யா”
– அருள்நூல் வாசகம்.
பிராணாயாமம் ஒன்றே நம் உடலில் உள்ள சக்திகளைக் கட்டுப்படுத்தும் வல்லமை பெற்றது. பிராணனைக் கட்டுப்படுத்த யாரால் முடியுமோ அவர்களே உலகில் உள்ள எல்லா சக்திகளையும் கட்டுப்படுத்த வல்லவர்களாக இருக்கிறார்கள். ஒருவரது ஆயுள் காலம் அவர்கள் விடும் மூச்சை பொறுத்தே அமைகிறது. எனவே தான் நமது அய்யா வைகுண்டர் துவையல் தவசு மக்களை
உகப்பாட்டும் ஓதி உற்ற அபயமிட்டு”
தவ வாழ்க்கையால் மட்டுமே கலியை வெல்ல முடியும் என்பதையும் சொல்லிக் கொடுத்தார். தவ வாழ்க்கை வாழ்ந்த காரணத்தால்
அவர்கள் தர்மயுக வாழ்வு பெற தகுதியும் பெற்றார்கள்.
அய்யா உண்டு
அய்யா அருளிய வாழ்வியல் நெறி முறைகள்
-த. சீதா லெட்சுமி அம்மா 949655691
“வல்லாமை பேசாதே மாதிரி போடாதே
ஏழையாய் இரு நீ என்னுடைய கண்மணியே”
எப்படி என்றால் சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் இருக்கும் ஒருவரோடு தன்னை ஒப்பிட்டுப் பார்த்து தானும் அதுபோல் வரவேண்டும் என்பதற்காக பிறரிடம் சென்று உதவி கேட்பதும், பிறகு அவர் கேட்ட உதவியைச் செய்கிறேன் என்று சொல்லிச் செய்யாவிடின் அவருக்குத் துன்பமாக மாறி விடுகிறது. இதனால் பிறரைத் தூற்றுவதும் இயல்பானக் காரியமாக மாறிவிடுகிறது. ஒன்றை நாம் செய்ய முடிந்தால் முதலில் உறுதி அளிக்க வேண்டும் இல்லை என்றால் அதை சொல்லாமல் இருப்பது நல்லது.
நான் முதலில் ஒன்றை அறிந்து கொள்ள வேண்டும், நம்முடைய தகுதி என்ன? நம்முடைய தகுதிக்கு ஏற்றவாறு நாம் வாழுகின்றோமா? நம்முடைய தகுதிக்கேற்ப வாழ்வை நாம் அறிந்தும், எந்த விதத்தில் பிறருக்கு உதவிச் செய்ய நம்மால் முடியும் என்பதை அறிந்து நாம் செயலாற்றினால் நமக்கு எந்தவிதமான துன்பமும் இல்லை. அது அல்லாமல் இயலாத ஒன்றை நான் செய்து முடிப்பேன் என்று கூறுவதும், எல்லாவற்றையும் நான் செய்து தருகிறேன் என்று சொல்வதும், எல்லாம் என்னால் முடியும் என்று கூறுவதும் மிக துன்பத்திற்கு ஆளாக்கும்.
என்னால் தான் எல்லாமே என்று பேசாதே ,மாதிரி போடாதே என்று அய்யா கூறுகிறார். மேலும் பகட்டான வாழ்க்கை வாழ வேண்டும் என்றும், பகட்டுக்கு அடிமையாக வேண்டும் என்று மக்கள் தன்னால் இயலாத செயல்களைக் கூடச் செய்து முடித்து விடுவேன் என்றும் பகட்டாக பேசி கொண்டிருக்கின்றார்கள். மக்களைத் தன் வயப்படுத்த எண்ணுகிறார்கள். ஆனால் அப்படிப்பட்ட வாழ்க்கை உங்களுக்கு உகந்தது அல்ல என்று அய்யா,
அய்யா உண்டு
அகில விடை
1. சூரபர்பன், சிங்கமுகா சூரன்
2. அரன் (சிவன்)
3. நாராயணர்
4. மூன்று
5. தெய்வ நீதம், இராச நீதம், மனு நீதம்
அய்யா உண்டு
அய்யாவின் உபதேசங்கள்
– பா. கிருஷ்ணமணி அப்புகுட்டி அய்யா 9841933992
“நாளும்பல ஊழியங்கள் நமக்குமிக செய்திடுங்கோ
ஏவல்கண்டு உங்களை இரட்சித்து ஆட்கொள்வோம்”
ஆண்டிநானும் அறிவேனடா”
உங்களுடைய பாவம் உயிர்வதையாய் இருக்குதடா”
தொடரும்
அய்யா உண்டு
ஏகம் ஒரு பரம்
கோபால கிருஷ்ணன் அய்யா – 7200031169
ஒரு தெய்வ வழிபாடு தான் மேன்மை தரும். தெய்வம் ஒன்றுதான் ஆனாலும் வழிபடும் தெய்வங்களின் எண்ணிக்கை (மனதில்) அதிகமாகும் போது நம்பிக்கையின் ஆழம் குறைந்துவிடுவது இயல்பு.
இறை நம்பிக்கை தான் மனதையும், எண்ணங்களையும், சொல்லையும் செயலையும், வாழ்க்கை முறையையும் பண்படுத்தி, பதப்படுத்தி செம்மைப் படுத்தும். உதாரணமாக, அய்யா வழியின் முதன்மைப் பதியாக விளங்கும் சாமிதோப்பிற்க்கு சென்று வந்தால் மன அமைதியும், நோயின்மையும், செல்வச்செழிப்பும், பேரும் புகழும் இன்னும் சகல வசதி வாய்ப்புகளும் வந்தடையும் என்பது அய்யாவழி அன்புக்கொடி மக்களின் நம்பிக்கை மட்டுமல்ல அனுபவப் பூர்வமான உண்மையும் கூட. யாராலும் மறுக்க முடியாது.
ஆனால் அதே பதியின் வடக்கு வாசலில் அழுக்கான கிழிந்த உடைகளோடு, தங்கும் வீடின்றி பலஆண்டுகளாக ஒரு சாண் வயிற்றுக்காக பிச்சை எடுப்பவர்களும் இருக்கின்றனர். சாமிதோப்பை தேடி வரும் அன்பர்களுக்கு கிடைக்கும் பாக்கியம், சாமிதோப்பிலேயே தங்கி இருக்கும் பிச்சைகாரர்களுக்கு ஏன் கிடைப்பதில்லை?
நம்பிக்கையின் ஆழம் தான் காரணம். முன் ஜென்மத்தின் பாவங்களும் புண்ணியங்களும் இதனை தீர்மானிக்கின்றன. கீழ்வரும் உதாரணம் இதனை அருமையாக விளக்கும்.
அலைமகளும் கலைமகளும் வாசம்புரிகின்ற தாமரை மலர்கள் பூத்துக்குலுங்கும் பொய்கை நீரில் வாழ்ந்து தாமரை இலைகளிலும் மலர்மீதும் அமர்ந்து விளையாடும் மண்டூகம் எனப்படும் தவளைகள், தாமரை மலரின் இனிய தேனை உண்டு சுவைத்து வாழ்வதில்லை. எங்கிருந்தோ பறந்துவரும் தேனீக்களும் வண்ண இறகு கொண்டு அழகாய் பறந்து திரியும் வண்ணத்துப்பூச்சிகளும், தேன் சிட்டுக்களும் தாமரை மலரின் தேனை சுவைத்து உண்டு வாழும் பாக்கியத்தைப் பெற்றுள்ளன.
மனதில் யாரோவென்று வையாதே என் மகனே”
அய்யாவழியை பின்பற்றும் அன்புக்கொடி மக்கள் பிற மதத்தவர்களோடு பகைமை பாராட்டவேண்டாம் என்பதையே இந்த விஞ்சை வெளிப்படுத்துகிறது. அவர்கள் வணங்கும் கடவுளும் நான் தான் என்று அய்யா சொல்கிறார்.
ஒரு குடும்பத்தலைவன் தன்னை பெற்றவர்களுக்கு தாய் தந்தையர்க்கு மகனாகவும், துணைவியாருக்கு கணவனாகவும், தனது குழந்தைகளுக்கு தகப்பனாகவும், மருமக்களாக வந்தவர்களுக்கு மாமனாராகவும் பேரக்குழந்தைகளுக்கு தத்தாவாகவும் விளங்குவது எப்படி சாத்தியமோ அப்படியே ஈரேழு லோகமும் படைத்த ஆண்டவன் பல நாமங்களில் / தலங்களுக்கு தக்கவாறும் / மக்களினங்களுக்கும் அவர்கள் செய்யும் தொழிலுக்கும் ஏற்பவும் மாறுபட்டு நிற்பது சாத்தியம் என்பது மட்டுமல்லாமல் ஒரு அத்தியாவசிய தேவை என்றும் ஆகிறது.
நாம் வணங்கும் இறைவன் நமக்கு சொர்க்கத்தை தருவதில்லை. ஆனால் நாம் வாழும் வாழ்க்கை நெறிகள் மற்றும் ஒழுக்கம் நம்மை சொர்க்கத்திற்கு அழைத்து செல்கின்றன என்பது ஆகமங்கள் எடுத்துரைக்கும் மறுக்க முடியாத உண்மை. வெறும் மத மாற்றங்கள் மட்டும் கர்மவினைகளுக்கும் வேறு எந்த பிரச்சினைகளுக்கும் விடிவாகாது, முடிவுமாகாது. நாராயணர் சொல்லும் விஞ்சையின் படி வாழும் வாழ்வே தர்மயுகதிற்கு நம்மை அழைத்துச் செல்லும் என்பதில் அணுவளவும் ஐயமில்லை.
அய்யாவைப்பற்றியும் அகிலத்திரட்டைப் பற்றியும் அய்யா வழியைப்பற்றியும்,மலர இருக்கும் தர்மயுகம் பற்றியும் அறியாத மக்களுக்கு எடுத்து சொல்லுவோம். மக்களின் வாழ்க்கை நெறியினை நேர் படுத்துவோம்.அய்யாவழி என்பது ஒரு மதம் அல்ல , ஆன்மீகத்தில் கலந்து வாழும் நெறி என்று அகில மக்கள் அனைவருக்கும் உணர்த்துவோம். தர்மயுகவாழ்விற்கு ஆயத்தமாவோம். அன்பால் ஒன்றுபட்டு ஏர் அணியும் தயாபரன் பாதம் பணிவோம்.
அய்யா உண்டு
சுவாமிதோப்பு பதியில் ஞானமுனி கலைமுனி மேடை எங்கே?
இந்த அவதார திருவிளையாடலைப் பிரதிபலிக்கும் வண்ணமே சுவாமிதோப்பு திருப்பதி அமைந்திருக்கும். அதாவது நாம் பதியைச் சுற்றி வர கொடிமரத்தில் இருந்து இடப் பக்கமாகச் செல்லும் போது ஒரு சிறிய மேடை மண்டபம் இருக்கும். அதுவே ஞானமுனி மேடையாகும். ஆனால் தற்போது அது இருட்டடிப்பு செய்து அய்யாவின் இல்லற புதல்வன் பொதுக்குட்டி உறைவிடம் என்று இல்லாத ஒன்றை இருப்பதாக கற்பனை செய்து பொய்யைக் கல்வெட்டில் பதித்து வைத்துள்ளனர்.
மேலும் ஞானமுனி மேடையைக் கடந்து பதியைச் சுற்றி வரும் போது இன்னமொரு சிறிய மேடை மண்டபம் இருக்கும். அதுவே கலைமுனி மேடையாகும். ஆனால் தற்போது அதுவும் இருட்டடிப்பு செய்து அய்யாவின் இல்லறத் துணைவி திருமாலம்மை என்று இல்லாத ஒன்றை இருப்பதாக கற்பனை செய்து பொய்யைக் கல்வெட்டில் பதித்து வைத்துள்ளனர்.
காரணம் பதி தங்கள் கையை விட்டு அரசாங்கத்திற்குப் போய்விடும் என்று எண்ணி அய்யாவின் மேல் நம்பிக்கை இழந்து சுயநலவாதிகளால் அரங்கேற்றப்பட்டும் அய்யாவின் அவதாரத்தை தவறாக சித்தரிக்க பட்டுள்ளது. இந்த நம்பிக்கை இல்லாத சுயநலவாதிகளின் செயலால் தற்போது சுவாமிதோப்பு பதி அறநிலையத்துறையிடம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
சுயநலவாதிகளின் தவறான இச்செயலால் அவர்கள் சாதித்தது என்ன என்று பார்க்கும் போது ஒன்று, மிகப்பெரிய பாவத்தை சம்பாதித்து உள்ளனர். இரண்டு, எங்கு பதி போகக்கூடாது என்று எண்ணினார்களோ அங்கே பதி சென்று விட்டது. இந்த உண்மையை இனிமேலாவது அவர்கள் உணர்ந்து தவறான கல்வெட்டுகளை அப்புறப்படுத்தி உண்மையை நிலைநாட்டி இது ஞானமுனி கலைமுனி மேடைதான் என்று பறைசாற்றி பாவத்தில் இருந்து விடுபட்டு புண்ணியத்தை தேடினால் சிறப்பாகும்.
ஞானமுனி கலைமுனி மேடை என்கிற உண்மையை பறைசாற்றுவோம்
செயல்படுவோம் தர்மயுக வாழ்வு பெறுவோம்
அகில உலக அய்யாவழி சேவை அமைப்பு வழங்கிய
அய்யாவே தஞ்சமென்று
என்கிற ஒலிநாடாவில் உள்ள பாடல்
இயற்றியவர்: த. சுஜிமோன் அய்யா
பாடியவர்: பா. இளையபெருமாள் அய்யா
பல்லவி
அய்யாவே தஞ்சமென்று ஆடிக்கொண்டு பாடிக்கொண்டு
கலியுகத்தில் வாடுகின்றோம் நாரணசுவாமி
என் பாட்டுக்குள்ள வந்திருந்து ஆளணும்சுவாமி
மெய்யான சான்றவர்க்கு மேகமாகி தூறல் தந்து
குறைபாட்ட தீர்த்து வைக்கும் காரண சுவாமி
என் கூட்டுக்குள்ள வந்து நீயும் வாழணும் சுவாமி
(அய்யாவே தஞ்சமென்று)
சரணம்:1
தூரத்தில் நிற்பவருக்கும் துணையாட்டும் தானிருப்பார்
அவராசை கொண்டவர்க்கு இமையாட்டும் அவரிருப்பார்
நீகொஞ்சம் அருகே போனால் அவர் கொஞ்சம் விலகி போவார் (2)
சழைக்காமல் நீயும் போனால் சன்னியாசி சாஞ்சிடுவார் (2)
(அய்யாவே தஞ்சமென்று)
சரணம்:2
பிச்சி பூ அச்சு மால பொரி அவுல் கேட்கவில்ல
நஞ்சுண்ட நாராயணர் பலி தீபம் கேட்கவில்ல (2)
மொத்தத்தில் தூயவனார் அன்பொன்றே போதும் என்றார் (2)
வற்றாத கடலும் உண்டோ
பொறுமைக்கு பொருள் தான் அய்யா (2)
(அய்யாவே தஞ்சமென்று)
சரணம்:3
சத்தியம் சொல்லுகின்ற சன்னதி கொண்டவர்தான்
புத்திய தெளியவைக்கும் தத்துவம் தந்தவர் தான்
சிங்கத்தின் முகமெடுத்து துரும்பிலும் இருப்பவர் தான் (2)
சீமையில் தேட வேண்டாம்
நெஞ்சுக்குள் பார்த்தால் உண்டு (2)
(அய்யாவே தஞ்சமென்று)
குறிப்பு: இப்பாடல் இசை வடிவில் வேண்டுமென்றால் 009607704901 என்கிற வாட்சப் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.
அய்யா உண்டு