தர்மயுக முரசு டிசம்பர் 2022

அய்யாவின் அருளால் எந்நாளும்நன்னாளே

-அசோக்குமார் அய்யா – 009607704901, 8012174032.

“சட்டம் மறவாதே தன்னளவு வந்தாலும்
நட்டங்காணாதே நாடாள்வாய் என்மகனே”

ஆகம விதிமுறைப்படி செயல்பட்டு ஆகம கருத்துக்களை மக்களுக்கு எடுத்து சொல்லும் ஆன்மிகவாதிகள் அனைவரைக்கும் அன்பு வணக்கம்.

தெய்வீகப் பிறவிகளே: “தெய்வப் பிறவியல்லோ திசைவென்ற சான்றோர்கள்” என்று நம்மை பார்த்துப் பகவான் சொல்லுவார். அப்படியிருக்க நாம் எவ்வளவு கருத்தோடு இருக்க வேண்டும். ஆனால் சமீபத்தில் நமது அய்யா வைகுண்ட பரம்பொருளின் தவப்பதியான சுவாமிதோப்பில் நமது அயயாவழிபாட்டு மரபை மீறி தலையில் தலைப்பாக இல்லாமலும், நெற்றியில் திருநாமம் இல்லாமலும் பதிக்குள் சென்ற செய்தி அறிந்து நாம் எல்லோரும் கண்ணீர் விட்டோம்.

இச் செயலை நமது தர்மயுக முரசு வன்மையாகக் கண்டனத்தைப் பதிவு செய்கிறது. மேலும் இது போன்ற ஆகம விதிமுறை மீறல்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ள இந்து அறநிலையத் துறையிடம் விண்ணப்பிக்கிறது. மேலும் இது போன்ற நிகழ்வு எங்கும் செய்யாமல் இருக்க நாம் எல்லோரும் சேர்ந்து ஆண்டவனைப் பிராத்தித்து வேண்டுவோம்.

இதுபோன்ற ஆகம விதிமுறை மீறல்களின் காரணத்தை ஆராய்ந்தால் ஆன்மிகம் அரசியலிடம் மண்டிட்டு கிடக்கிறது. காரணம் ஆன்மிக வாதிகள் தன்நிலை மறந்து சுயநலவாதிகளாக மாறி போலி ஆன்மீக வாதிகளாக வலம் வருவதே ஆகும்.

மேலும் இதுபோன்ற ஆகம விதிமுறைக்கு இரண்டு சாரார்களும் காரணம். ஒரு பதிக்கு நாம் செல்லும் போது அப்பதியின் விதிமுறைகளைக் கேட்டுத் தெரிந்து அதன்படி உள்ளே செல்ல வேண்டும். அதுபோல் ஒருவர் நம் பதிக்கு வந்தாலோ அல்லது நாம் அழைப்பு விடுத்தாலோ நமது மரபுகளை அவர்களிடம் சொல்லி அதற்கு உட்படுத்தி அழைக்க வேண்டும். மரபுகளுக்கு உட்படாமல் இருந்தால் அன்பாக சொல்லி விலகிக் கொள்ள வேண்டும் இது நமது கடமை.

யார் ஒருவர் ஆகம விதிமுறைகளை மதிக்க வில்லையோ அவர்களிடம் இறை பயம் இல்லை என்றே பொருள். அவர்கள் கலிமயக்கத்தில் இருப்பவர்கள். எனவே நாம் எப்போதும் பயபக்தியுடன் செயல்பட வேண்டும்.

மேலும் இதுபோன்ற தவறான சம்பவங்களை எல்லாம் நாம் ஒரு பாடமாக எடுத்து இத் தவறுகளை நாம் செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒருபோதும் போலி ஆன்மிக வாதிகளாக மாறிவிடக் கூடாது. நாம் பிறந்திருப்பதே பாவக் கர்மாவை தொலைத்து ஆண்டவனிடம் சேர்ந்து வாழ. ஆனால் பலபேர் இவ் பேருண்மையை மறந்து சிற்றின்பத்தில் அடிமையாகி மீண்டும் மீண்டும் பாவக் கர்மாவை பெருக்கிக் கொள்கிறார்கள். இதனால் அவர்களுக்குக் கிடைப்பது துன்பமே தவிர இன்பம் அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

சில துன்பத்தில் சில நன்மையும் விழையும். அந்த அடிப்படையிலே அய்யா வைகுண்ட தவப்பதியில் சமீபத்தில் அரங்கேறிய “மரபு மீறல் நிகழ்வு” ஒன்று நமது அய்யாவழிபாட்டு இந்து மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தத் தவறான செயலுக்கு எதிர்ப்புக் குரல் ஒலித்தன. இது தொலைக்காட்சி மூலம் உலகமெங்கும் பரவியது.

அதுமட்டுமல்லாமல் இது மிகப்பெரிய விவாத பொருள் ஆ+னது. இந்த விவாதத்தின் மூலம் இனி யாரும் ஆலய மரபை மீறக் கூடாது என்று முழங்கிய நமது மக்கள், நாமும் நமது தாங்கல்களில் எந்த ஒரு மரபு மீறல்களையும் செய்யக் கூடாது என்று தங்கள் மனத்தில் உறுதி எடுத்துக் கொண்டது ஒரு வகையில் ஆறுதலாக இருந்தது.

“சொல்லுங்கப்பா அன்பர்களுக்குத் துணையாக நின்றுடுங்கோ”

அய்யா உண்டு

அகில கேள்வி

1. ஏழுயுகச் செய்திகளையும் எடுத்துக்கூறிய முனிவர் யார்?

2. தெச்சணா பூமி மக்கள் என்ன சொல்லி இறைவனைத் துதித்தனர்?

3. பூமணக் குழலாள் என்று அகிலம் யாரை சொல்கிறது?

4. நாரணரும் வேதாவும் நாடிப் பெரும் போரில் காரணரே நீரும் கனல்கம்பமாக நின்றது யார்?

5. நாராயணரின் கலியுக அவதாரம் நடந்த இடம் எது?

அகிலதிரட்டு அம்மானை மூலமும், உரையும்

      -க. ரீகன் அய்யா- 0096893145654

“குண்டோமசாலி கொடிய மாபாவியனாய்
பண்டோர் குறோணி பாதகன்றன் துண்டமதாய்
பிறந்தானவனும் பேருதிரம் தன்கிளையாய்
இறந்தாரவர்கள் யிரையாய் அவன்தனக்கு”

சதுரயுகத்தில் குறோணியினுடைய முதல் துண்டு குண்டாமசாலி என்னும் பெயருடன் மாபாவி அசுரனாக பிறப்பெடுக்கின்றான். அந்த குண்டோமசாலி பசியால் இட்ட சத்தம் தவலோகம் என்று சொல்லக்கூடிய மேல் உலகம் அதிரும்படி இருந்தது. இந்த அதிர்வலையைக் கேட்ட நாராயணர் சிவபெருமானிடம், எவனோ ஒருவன் இட்ட சத்தத்தின் காரணமாக தவலோகம் திடுக்கிடுகின்றதே இதற்கு என்ன காரணம் என்று கேட்கின்றார். அதற்குச் சிவ பெருமான் ஆயனே முன்பு குறோணி என்ற அசுரன் நீடிய யுகத்தில் இருந்தான். அப்போது அவனை நீவிர் ஆறு துண்டுகளாக வெட்டி அழித்தீர். அந்த ஆறு துண்டுகளும் மீண்டும் உமக்கு எதிரியாக பிறப்பெடுக்கும் என்று கூறினேன். அப்படி குறோணியின் முதல் துண்டு குண்டோமசாலி என்னும் பெயருடன் இந்த சதுரயுகத்தில் பிறந்திருக்கின்றான். அவன் கூடவே அவனுடைய உதிரங்கள் அரக்கர் குலமாக பிறந்திருக்கின்றன. குண்டோமசாலி தனக்கு ஏற்பட்ட பசியின் காரணமாக தன்னுடைய அசுர குலங்களையே இரையாக எடுத்து விழுங்கிக் கொண்டிருக்கின்றான்.
“ஆனபசிகள் ஆற்றாமலே யவனும்
வானமதுவலைய வாய்விட்டான் கண்டாயே
என்று சிவனார் யீதுரைக்க மாயவரும்
அன்று மகாமால் அக்குண்டாம சாலினுக்கு”
அப்படி பசிக்காக தன் அசுர குலங்களையே எடுத்து விழுங்கினாலும் அவன் பசி அடங்கவில்லை. ஆகவே தான் அவன் இந்த தவலோகம் தன் நிலை மாறும் படி உரக்க சத்தமிடுகின்றான் என்று நாராயணரிடம் குண்டோமசாலி சத்தமிட்ட காரணத்தைக் கூறுகின்றார் சிவபெருமான். நாராயணரும் மேலுலகமான தவலோகம் தன் நிலை மாறாமல் இருக்க குண்டோமசாலியினை வதைக்க முற்படுகின்றார். அப்படி குண்டோமசாலியினை வதைக்க என்ன செய்யலாம் என ஆலோசித்து மகாமால் உபாயம் ஒன்று செய்கின்றார்.
“இரையாகத் தேவர்களை ஏற்ற நாங்கிலாக்கி
வரையா னதைத்தூண்டில் மறையைக் கயிறாக்கி
வாயுவைத் தோணி வருணன்றனை நிரப்பாய்
தேயமதைச் சூழத் திரைகடலைத்தான் வருத்தி”
நாராயணர் மகாமாலாக குண்டோமசாலியை வதைக்க ஒரு சூழலை வடிவமைக்கின்றார். இந்த குண்டோமசாலி பசியால் இருப்பதால் அவனை ஒரு மீன் எவ்வாறு பசியால் இருந்து தூண்டில் இருக்கக்கூடிய புழுவுக்கு ஆசைப்பட்டு கவ்விப் பிடித்து அந்தத் தூண்டலால் கொழுகி இறந்து விடுமோ, அது போலவே இந்தக் குண்டோமசாலியை வதைக்க முதலில் அவனுக்குத் தேவையான இரையைத் தயார் செய்ய வேண்டும் என்று தேவர்களைப் புழுவாக தகவமைத்து அவனுக்கு இரையைத் தயார் செய்கின்றார். அடுத்து இந்தப் புழுவை கொழுகுவதற்கான தூண்டிலாக மலையைத் தகவமைத்துக் கொள்ளுகின்றார்.

அதன் பிறகு இதைக் கட்டக்கூடிய கயிறாக வேதத்தைக் கயிறாக்கி தகவமைத்துக் கொள்ளுகின்றார். அதன் பிறகு காற்றினை ஒரு படகாக அமைத்துக் கொள்ளுகின்றார். இப்போது இரையும் தூண்டலும் படகும் தயாராகிவிட்டது. இனி வருணனை அழைத்து இந்தத் தூண்டிலுக்கான மிதவையாக இருக்கும்படி தகவமைத்து வைத்துக் கொள்ளுகின்றார். இனி இந்த அமைப்பில் குண்டமசாலியை அகப்படுத்த வேண்டும் என்பதற்காக உலகைச் சுற்றிக் கடலைச் சூழும்படி செய்கின்றார்.

“ஓடையாய்ச் சதுர யுகம்வழியே தானேவி
தேடரிய மாயன் திருவோணி தானேறி
மூவாதிமூவர் தோணிதனைத் தள்ளிவர
காவாலி மாயன் கன்னியிலே தூண்டலிட”

     இப்போது உலகம் கடலால்க் சூழப்பட்டுவிட்டது. அந்தக் கடலின் நீரோட்டத்தைக் குண்டோமாசாலியின் சதுரயுகத்தில் பாய்ச்சுகின்றார். அந்த நீரோட்டத்தில் ஏற்கனவே உண்டு பண்ணி இருக்கக் கூடிய படகிலே நாராயணர் மகாமாக ஏறி வருகின்றார். மூவாதிமூவர் எனப்படுகின்ற தேவ சங்கத்தார் அந்தப் படகினைத் தள்ளி வருகின்றார்கள். இப்போது நாராயணர் அந்த ஓடையிலே தூண்டிலை இடுகின்றார்.

“சதுர யுகமாளுஞ் சண்டித் தடிமூடன்
எதிரே வருமாற்றில் இரையை மிகக்கண்டாவி
நாடிப் பசிதீர நல்லயிரை யாகுமென்று
ஓடிவந்து பாவி உழுங்கினான் தூண்டல்தனை”
இப்போது நாராயணர் சதுரயுக ஆற்றிலே தூண்டிலை இடுகின்றார் அப்படி தூண்டிலில் புழுவாக இருக்கக்கூடிய தேவர்களைப் பார்த்தவுடனேயே குண்டாமசாலிக்கு அதை உண்ண ஆசை வருகின்றது. பசியால் இருக்கக்கூடிய குண்டோமசாலி எதையும் ஆராய்ந்து பாராமல் அப்படியே வந்து இரையை எடுத்து விழுங்குகின்றான். இப்போது இரைக்கு உள்ளிருக்கக்கூடிய தூண்டில் கொழுகி அதில் குண்டோமசாலி அகப்பட்டுக் கொள்ளுகின்றான்.

“தூண்டல் விழுங்கச் சுரண்டி மிகக்கொழுவி
மாண்டனன் காண்பாவி வலியமலை போல
பாவி மடிய பரமே சுரனாரும்
தாவிச் சலத்தால் சதுரயுக மழித்தார்”

இப்படி நாராயணர் குண்டோமசாலியை வதைக்க ஏற்படுத்திய இரையை எடுத்து விழுங்கிய குண்டாமசாலி தூண்டிலில் அகப்பட்டு மாண்டு போகின்றான். குண்டோமசாலி மடிந்ததால் அவனுக்கான சதுரயுகமும் அங்கே நிறைவுக்கு வருகின்றது. இப்போது ஈசுரனார் அந்த சதுர யுகத்தை நீரால் அழிக்கின்றார்.
“சதுரயுகமழியத் தானவர்க ளெல்லோரும்
மதுர மொழிஈசன் மலரடியைத் தான்பூண்டு
தேவர் மறையோர் தெய்வேந்திரன் முதலாய்
மூவர்களும் வந்து முதலோனடி பணிந்து”
சதுரயுகத்தைச் சிவபெருமான் அழித்த பின்பு தேவர்கள் எல்லோரும் சேர்ந்து சிவபெருமானைக் காணச் செல்லுகின்றார்கள். அவர்கள் எல்லோரும் சேர்ந்து சிவபெருமானைத் தொழுது வணங்கி இனி படைக்கக்கூடிய யுகத்தினைப் பற்றிச் சிவபெருமானிடம் தங்கள் விண்ணப்பத்தை வைக்கின்றார்கள்.
“பரமனே நீரும் படைத்தயுகம் ரண்டதிலும்
வரமே துங்கேட்டு வாழ்ந்தவரைக் கண்டிலமே
அந்த சந்தமில்லா தாணுவங்கள் தானுமில்லா
இந்த வகைச்சாதி இல்லாம லீசுரரே
பிறந்தா லவனும் பெரியோ னடிவணங்கி
வரந்தாரு மென்று வாளா யுதத்தோடே”
சிவ பெருமானே நீர் இப்போது நீடிய யுகம் சதுரயுகம் என்று இரண்டு யுகங்களை படைத்துள்ளீர். அந்த இரண்டு யுகங்களிலும் அந்த யுகத்தை ஆளுவதற்கு இரண்டு அசுரர்களையும் படைத்திருந்தீர். அவர்களின் அநியாயத்திற்கு ஏற்ப அவர்களும் அழிக்கப்பட்டு விட்டார்கள். ஆனால் அந்த இரு அசுரர்களும் தங்களுக்குத் தேவையான வரங்களை உம்மிடம் கேட்டுப் பெற்று, அந்தப் பராக்கிரமங்களின் படி வாழ்ந்ததாக இல்லையே!. ஆகவே இனி படைக்கக்கூடிய அசுரர்களுக்கு உம்மை வணங்கி வரத்தை வாங்கி அதன் மூலம் பல வித ஆயுதங்களோடும் பராக்கிரமங்களோடும் வாழும்படி படைக்க வேண்டும் என்று தேவர்கள் சிவ பெருமானிடம் கேட்டுக் கொண்டார்கள்.
(தொடரும்)

அன்புக்கொடி சொந்தங்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம்: அன்பானவர்களே: தாங்கள் சார்ந்துள்ள தாங்கல் வரலாற்றை நமது தர்மயுக முரசு பத்திரிகையில் வெளியிட வேண்டும் என்றால் உங்கள் தாங்கலின் வரலாற்றை அழகாக எழுதி 0096893145654 என்ற வாட்சப் எண்ணிற்கு தாங்கலின் புகைப்படத்தோடு சேர்த்து அனுப்பி தாருங்கள். அதனை வருகின்ற மாதங்களில் நமது தர்மயுக முரசு பத்திரிகையில் பதிவு செய்து வெளியிடலாம்.

அய்யா உண்டு

சிவகாண்ட அதிகார பத்திரம்

சிவகாண்ட அதிகார பத்திரம்

சூத்திரம்:
“சூத்திரக் கணக்கு ஒன்று சொல்லுகிறேன் கேள் மகனே”

பதவுரை:
சூத்திரக் கணக்கு- இரகசியமான கணக்கு

பொழிப்புரை:
இனி இரகசியமாக ஞானிகள் சொல்லி வைத்த கணக்கை சொல்லப்போகிறேன் கவனமாக கேளுங்கள்

விளக்கவுரை:
முழு முதற் கடவுளான பகவான் ஞானிகள் வழி வழியாக பெற்று வந்த இரகசியமான உபதேசத்தை இனிக் கூறப் போகிறார். அந்த உபதேசமானது சூத்திர வடிவில் அய்யாவால் அருளப்படுகிறது. சூத்திரம் என்பது மிகவும் சுருக்கிச் சொல்லுதலாகும். அதன் ஒவ்வொரு வார்த்தையும் மிகுந்த அர்த்தம் உடையது. சிவ காண்ட அதிகாரப் பத்திரம் முழுவதும் சூத்திரமே என்பது குறிப்பிடத் தக்கது.

சூத்திரம்:
” பஞ்சவர்ணக்கிளி ஒன்றிருந்து பறந்துபோக கண்டேனடா”

பதவுரை:
பஞ்சவர்ணக்கிளி- மனித உடலில் வாசம் செய்யும் ஆன்மா

பொழிப்புரை:
மனித உடலிலே ஒன்றிருந்த ஆன்மா அந்த உடலைப் போட்டுவிட்டு பறந்து போகக் கண்டேன்

விளக்க உரை:
இந்த ஆன்மா உடலோடு இயங்குகிறது. உடலானது பஞ்ச பூதங்களால் ஆனது. பஞ்ச பூதங்களுக்கும் தனித்தனியே ஐந்து நிறங்கள் உண்டு என்று யோக நூல்கள் கூறுகின்றன. அவையாவன
நிலம்- மஞ்சள்
நீர்- வெண்மை
வாயு – பச்சை
தீ – செம்மை
ஆகாயம்- கருமை.

இந்த ஐந்து நிறங்களைக் கொண்ட பூதங்களால் ஆன உடலை ஆன்மா சுமந்திருப்பதால் ஆன்மா பஞ்சவர்ணக் கிளி என்று அழைக்கப்படுகிறது. இந்த பஞ்சவர்ணக் கிளி கொஞ்ச நாள் தனது கூடாகிய உடலில் வசித்து அதை விட்டுப் பறக்கிறது‌. கிளி வாழ்ந்த கூடாகிய உடல் அழிகிறது. எனவே ஏரணியும் மாயோன் இவ்வுடலை விட்டு உயிர் பறப்பது முக்காலத்துக்கும் உண்மை என்பதை உணர்த்தும் விதமாக பறக்கக் கண்டேன் என்றார். அதாவது இவ்வுடல் நிரந்தரமானது அல்ல என்றேனும் உயிர் பிரியும் என்பதை ஓங்கி உலகளந்த உத்தமனான பகவான் உணர்த்துகிறார். அப்படியெனில் இந்த குறுகிய காலத்தில் நாம் அறிய வேண்டியது என்ன? செய்ய வேண்டியது என்ன? என்று வினவ அடுத்த சூத்திரங்களில் பகவான் நாம் அறிய வேண்டியவை மற்றும் செய்யவேண்டியவற்றை அருளுகிறார்.

சூத்திரம்:
“ஏழு பெண்கள் தம்கதையை எடுத்துச் சொல்ல நாளாச்சே”

பதவுரை:
ஏழுபெண்கள்- சப்த மாதர்களாகிய தாய்மார்கள்.

பொழிப்புரை:
சப்த கன்னிகளின் கதையை எடுத்துச் சொல்லும் காலம் வந்து விட்டது.

விளக்கவுரை:
மனிதனின் ஆயுட்காலம் மிகவும் குறைவு என்பதை கூறிய‌ பகவான் அவன் அறிய‌ வேண்டிய‌ உண்மையில் முதலாவதும் முக்கிய‌ மானதுமான தத்துவத்தை விளக்குகிறார். அதாவது சீவாத்மா , பரமாத்மா உறவு என்பது தந்தை மகன் உறவு போன்றது. நாம் அனைவரும் நாராயணரின் விந்திலும் நற்கன்னிகள் ஏழு பேரின் நாதத்திலும்‌ பிறந்தவர்கள். ஆகவே, நாம் பகவான் அனந்த நாராயணனின் மக்கள் என்பதை அறியவேண்டும். அதாவது, நாம் இறைவனில் இருந்து வெளிப்பட்ட சிறு துளிகள். எப்படி ஒரு கடலில் இருந்து உண்டான மழை கடலை அடைந்து கடலாகிறதோ அதைப்போல் நம்முடைய பயணமும் நாராயணரில் கலந்து முக்தி அடைய வேண்டும் என்பது கருத்து. அதாவது நாம் அனைவரும் சாதாரண‌மானவர்கள் அல்ல பகவான் விஷ்ணுவின் பிம்பங்கள் என்பது கருத்து. நமக்குள் இருப்பது அவர், அவரின் சக்தி என்பது ஏழு பெண்கள் கதை சொல்லும் கருத்து.

அய்யா உண்டு

அன்பானவர்களே: அகிலத்திரட்டு அம்மானை உதயதின விழா செய்தியை நமது அமைப்பு சார்பில் பத்திரிகை வாயிலாக உலகறிய செய்ய பாக்கியம் தந்த அய்யா வைகுண்ட பரம்பொருளுக்கு நன்றி. மேலும் இச் சிறப்பான செயல்பாட்டிற்கு பல விதங்களில் கருவியாக செயல்பட்ட நம் அனைவருக்கும் நன்றி. இதுபோன்று அய்யா சொன்ன யுகதர்மத்தை செய்ய மேலும் மேலும் எங்களுக்கு பாக்கியம் தர வேண்டும் என அய்யாவிடம் வேண்டுவோம்.

அய்யா உண்டு.

   தர்மம் என்றால் என்ன? அதன் சிறப்பு என்ன?

– S. அன்ன செல்வம் அம்மா – 9443622222

தர்மயுகம் என்பது நிலையான நித்திய உலகம். இது கலியுகம் முடிந்தவுடன் எட்டாவது யுகமாக தோன்றும். அய்யா வைகுண்டருடைய நேரடி ஆட்சியாகும்.
“தர்ம யுகமாக்கி தாரணியை ஆளுதற்கு
கர்மக் கலியில் கடவுளார் வந்த கதை
சாகாதிருக்கும் தரும அன்பு உள்ளோர் முன்
வாகாகத் தர்ம அம்மானை தான்வகுத்தார்”
அய்யா வைகுண்டர் கலியுகத்தை முடித்த பிறகு, நடு தீர்ப்பு என்று சொல்லக்கூடிய இறுதி தீர்ப்பு வழங்கி தர்மவழியில் நடந்த புண்ணிய ஆத்மாக்களைத் தேர்ந்தெடுத்து வைகுண்டராசர் தர்மயுகத்தை நேரடி ஆட்சி செய்வார். இந்த கலியுகத்தில் மக்களுடைய கர்ம வினைகளைத் தீர்க்க வந்த கதை அகிலத்திரட்டு அம்மானையின் முக்கிய சாராம்சமாகும். மரணம் இல்லாத நித்திய வாழ்க்கை வாழப் போகும் அன்பு உள்ளம் கொண்ட மக்களுக்குத் தர்மச்செய்தியை முன் அறிவிப்பாக அறிவிக்கவும் மக்கள் ஞானமடைந்து முக்திப் பேறு அடையவும் கடவுள் நாராயணர் அகிலத்திரட்டு அம்மானையை அருளினார். மேலும் தர்மயுகத்தின் தலைமைப் பதவி அமைய இருக்கும் இடமும் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது.
“தெட்சணா மூலை தென்பாற் கடல் அருகே
மெச்சும்பதிமூலம் விளக்கெரிய கண்டுனது
காலம் இது மகனே கன்னித் திரு தென் திசையில்
கோபுர மண்டபமும் கொடிமரமும் வீதிகளும்
தாபரமாய்த் தன்னால் தலங்கள் அது துலங்கும்”
தெட்சணத்தில் அமைந்துள்ள முக்கடலும் சங்கமிக்கும் திருப்பாற்கடலுக்குள் இருக்கும் கிருஷ்ண பெருமாள் உடைய துவரையம்பதி தர்மத்தின் தலைமையிடமாகத் துலங்கும். கடலுக்குள் மூழ்கியிருக்கும் துவரையம் பதியும் ஒரு எல்கை முட்டப் பதியாகும். இன்னொரு எல்கை வட்டக்கோட்டை. இன்னொரு எல்கை இலங்கையாகும். கிருஷ்ணருடைய பொன்னாலான பொன்னம்பலம், அரண்மனை, கோட்டை கொத்தளங்கள், கோபுர மண்டபம், கொடிமரம், தெரு வீதிகள், அனைத்தும் கடலுக்குள் இருக்கின்றன. இதைக் கலியுக மக்களால் விஞ்ஞானத்தின் மூலம் பிடிக்க முடியாது. தர்மயுகம் தோன்றுவதற்கு முன் பிரளயம் ஏற்பட்டுச் சுசீந்திரம் கோயில் தேர் கடலுக்குள் செல்லும். அப்போது கடலுக்குள் இருக்கும் துவரையம்பதி தானாக துலங்கும்.
“திடத் திருமால் ஆனோர் செப்புவார் பின்னாலே
இவ்வுலகமும் நீசன் இனங்குலமும் நாம் அழித்து
செவ்வுகற்ற நம் மனுவோர் சிறந்த தர்மத் தாரணியும்
புதுயுகம், புதுவிருட்சம், புதுமனு, புது நினைவு
நெதிவு சற்றும் இல்லாத நின்று இலங்கும் பதியும்
புது வாய்வு, புதுவருணன், புதுமுகில், புதுமதியும்
புது மிருகம் புது பறவை புது ஊர்வனங்கள் முதல்
தர்மயுகத்திற்கு தான் ஏற்ற வஸ்து எல்லாம்
நன்மை இனித் திட்டித்து வைத்திடவும் வேணுமல்லோ”
– அகிலத்திரட்டு அம்மானை
வைகுண்ட நாராயணர் கூறுகின்றார் நாம் இந்தக் கலியுகத்தையும் கலிநீசக் குலத்தையும் அழித்து நீதி நேர்மையோடு வாழ்ந்த சான்றோர்களைத் தர்மயுகத்தில் வாழ வைக்க வேண்டும். புதியதொரு புனிதமான யுகமாக தர்மயுகம் மலரும். புத்தம் புதிய தாவரங்களும், முக்தி ஞானம் பெற்ற மக்களும், புதிய காற்று, புதிய மழை, புதிய வானம், புதிய நிலவு, புதிய மிருகங்கள், புதிய பறவைகள், புதிய பிராணிகள், முதல் அனைத்தும் தர்மயுகத்திற்கு ஏற்றபடி அமைக்கப்படும். வானத்தில் முழு நிலவு பிரகாசித்துக் கொண்டே இருக்கும். அதுவே தர்மயுக பூமிக்கு ஒளி விளக்காகும். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்கிற அடிப்படையில் ஒரு குடையின் கீழ் ஆட்சி நடைபெறும்.

தர்மயுகத்தில் வாழும் எல்லோரும் தேவர்களைப் போல் வாழ்வார்கள். நவகிரகங்கள் கிடையாது. எமன், காலன், தூதன் கிடையாது. துன்பமில்லை, துயரம் இல்லை, கண்ணீரில்லை, கவலையில்லை. ஆனந்தம் பேரானந்தம் என்ற நிலை மட்டுமே உண்டு. பிணி, மூப்பு, சாக்காடு என்கிற நிலையில்லாமல் நித்திய ஜீவ தேகத்தோடு, கோடான கோடி காலத்திற்கும், என்றும் வயது பதினாறாக, இளமைப் பொலிவோடு, இறைவனுக்கு உகந்த பிள்ளைகளாக வாழ்த்தலாகும். தர்மயுகம் அன்பு மயமான, இன்பமயமான, சொர்க்கமயமான, பூலோக கைலாயமாக, ஜொலிக்கும்.

அய்யா உண்டு

அகில விடை

1. வியாசர்

2. சிவசிவா

3. பகவதி அம்மை

4. ஈசன்

5. திருச்செந்தூர் திருப்பாற் கடல்

அய்யா உண்டு

சத்தியம்

– ஹரி வெங்கடேஷ் அய்யா 8508518505

“சத்தியத்தை தான் மறந்து மத்திபத்தை செய்யாதே
மத்திபத்தை செய்தாயானால் மனநாகம் தீண்டி விடும்”
-அய்யா
இக்காலத்தில் உண்மையைப் பேசினால் பிழைக்க முடியாது. உண்மை பேசுபவனுக்குக் காலம் இல்லை, உண்மையைப் பேசுபவன் ஏமாளி என்று சிலர் எண்ணி வருகிறார்கள். இவ்விதம் நினைக்கக் காரணம். அவர்கள் பல சமயங்களில் பொய்மை வெற்றி பெறுவதைப் பார்க்கிறார்கள்; உண்மையைக் கூறுபவனுக்குத் தோல்வியும் கஷ்டங்களும் வருவதைப் பார்க்கிறார்கள். பொய் கூறுபவர்கள் சுலபமாகக் காரியத்தை சாதித்துக் கொள்வதையும் பொய்மையால் உடனடி லாபத்தையும் தங்களுடைய அனுபவத்திலும் பிறருடைய அனுபவத்திலும் காண்கிறார்கள். சத்தியத்தை விடுத்து பொய்மையைப் பின்பற்றுவதால் உடனடி லாபம் கிடைக்கிறது என்பதும், சில கஷ்டமான சூழ்நிலையிலிருந்து தப்பித்துக் கொள்ள முடிகிறது என்பதும் நமது அனுபவமாக இருக்கையில் சத்தியத்தைப் பின்பற்றுவதால் வெற்றி கிடைக்கும் என்பது எப்படி உண்மையாகும்?

ஆம், பொய்மையைப் பின்பற்றுவதால் உடனடி லாபம், வெற்றி போன்றவை கிடைக்கின்றன. ஆனால் அந்த லாபம் உண்மையான லாபம் அல்ல. அந்த நேரத்தில் மட்டும் கிடைக்கக் கூடிய பொய்யான இன்பத்தின் தோற்றம். பொய்மையால் வரும் நஷ்டம் அப்பொழுது தெரிவதில்லை. பொய்மையால் வரும் லாபம் மிகவும் அற்பமானது. அற்ப லாபத்திற்காக சத்தியத்தை விடுவதால் வரும் நஷ்டமே உண்மையில் பேரிழப்பு.

சத்தியத்தைப் பின்பற்றுவதால் சில இழப்புகள் நேரிடலாம். சத்தியத்தை பின்பற்றுவதால் வரும் நன்மையைக் கணக்கிட்டுப் பார்த்தால் இந்த இழப்பை இழப்பு என்று சொல்ல முடியாது. எப்படி என உதாரணம் ஒன்றின் மூலம் பார்ப்போம். ஒருவர் பொருளாதாரரீதியாக நடுத்தரத்தில் இருக்கிறார். அவரால் சிறிதளவுதான் சேமிக்க முடிகிறது. அவர் மனதில் எதிர்காலத்தைக் குறித்து பாதுகாப்பின்மை, பயம் போன்ற உணர்வுகள் ஏற்படுகின்றன. பணம் இருந்தால்தான் நமக்குப் பாதுகாப்பு, மகிழ்ச்சியும் பயமின்மையும் பணத்தைச் சேகரித்தால்தான் கிடைக்கும் என்பது அவர் எண்ணம். அவர் மட்டுமல்ல, பொதுவாகப் பலர் இவ்விதமே எண்ணுகிறார்கள்.

ஒரு கடையில் இரண்டு கழுதைகள் இருக்கும் படம் மாட்டப்பட்டிருந்தது. அந்தப் படத்திற்குப் பூமாலை, ஊதுபத்தி போன்ற அலங்காரங்களும் இருந்தன, கழுதையின் படத்தைக் கடையில் மாட்டினால் பணம் அதிகமாகக் குவியும் என்று ஒரு நம்பிக்கை, ஆகவே, பணத்திற்காக கழுதையையும் வழிபடத் தயாராக உள்ளனர். பணத்திற்குச் சமுதாயத்தில் உள்ள மதிப்பின் காரணமாகத்தான் பணம் பலருக்கு முக்கிய இலக்காக அமைந்துள்ளது.

இங்கு நாம் உதாரணமாக எடுத்துக் கொண்ட நபருக்கும் பணமே முன் நின்றது. அவருக்குச் சத்தியத்தை விடுவதால் பணம் அதிகம் கிடைக்கின்ற சூழ்நிலை ஏற்பட்டது. அவர் எடைபோட்டுப் பார்த்தார் -சத்தியமா? பணமா? பணத்தால் வீடு, வாகனம், சமுதாயத்தில் புதிய மதிப்பு போன்ற லாபத்தை அடைய முடிவதை எண்ணினார். பணம் பாதுகாப்பையும் இன்பத்தையும் கொடுக்கிறது என்று கணக்கிட்டார். சத்தியத்தால் கிடைக்கும் நன்மை அவர் புத்திக்கு எட்டவில்லை. ஆகவே அவர் சத்தியத்தை விட்டுப் பணத்தைச் சேகரித்துக் கொண்டார். சத்தியத்தைப் விடுத்துப் பொய்மையைப் பற்றியதனால் பெரிய செல்வந்தர் ஆகிவிட்டார். அவரைச் சுற்றி பாதுகாப்பிற்குப் பொருள்களும் மனிதர்களும் குவிந்தனர். இன்பத்தைக் கொடுக்கும் பொருள்களும் அவரைச் சூழ்ந்தன. சமுதாயத்தில் முன்னேறியவர், பெரிய மனிதர் போன்ற பட்டங்களும் அவருக்குக் கிடைத்தன. இதை மட்டும் பார்த்தால் சத்தியம் வென்றதாக நமக்குத் தெரிவதில்லை. அவருடைய மனதை இனி நாம் பார்ப்போம்.

சத்தியத்தைத் தியாகம் செய்ய அவர் துணிந்ததற்கு முக்கிய காரணம் மனதிலுள்ள பாதுகாப்பின்மை, பயம் போன்றவை நீங்க வேண்டும் என்பதே. ஆனால் பணத்தை அடைந்த பின்னும் பயம் மனதிலிருந்து நீங்கவில்லை. இப்பொழுது பணம் நம்மை விட்டு சென்றுவிடக் கூடாது என்ற பயம். வருமானவரி அதிகாரிகளிடம் பயம். வசதியான வாழ்வை அனுபவித்ததனால் உடலும் மனதும் வசதிகளுக்கு அடிமையாகிவிட்டதால் வசதிகள் பறிபோகக் கூடாது என்ற பயம். தான் கூறிய பொய்கள் வெளிப்பட்டு விட்டால் புகழ் இழக்கப்படும் என்ற பயம்.

பணம் தன்னைக் காக்கும் என எண்ணிய அவருக்கு இப்பொழுது புரிகிறது – அவர்தான் பணத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று. எந்த பயம் மனதிலிருந்து நீங்க சத்தியத்தை விட்டாரோ அந்த பயம் அவரை விட்டு நீங்கவில்லை. முன்பு பணம் இல்லை என்ற பயம். இப்பொழுது பணம் சென்றுவிடக்கூடாது என்ற பயம். முன்பு நிம்மதியாக உறங்கினார். இப்பொழுது உறங்க மாத்திரை தேவைப்படுகிறது. அவரைச் சுற்றி பாதுகாப்பிற்காகப் பல கதவுகள் உருவாக்கி இருந்தும் புதிய விதமான பயம் அவருடைய மனதிற்குள் புகுந்து விட்டது. சத்தியம் என்ற கதவுதான் மனதிற்குள் பயம் புகுந்து விடாமல் பாதுகாக்கும். சத்தியத்தை விட்டதால் பெற்ற வெற்றியே பொருள்களின் சேர்க்கை. ஆனால் எதற்காகப் பொருளைச் சேர்த்தாரோ, அதை அப்பொருள் உண்மையில் தரவில்லை. அவர் பொய் கூறி சேர்த்த பொருள்களை மட்டும் பார்த்துவிட்டு, சத்தியம் தோற்றது என்று நாம் நினைக்கலாம். ஆனால், அவருடைய மனதைப் பார்த்தால் சத்தியமே வென்றது என்பது புரியும். இந்த உண்மையை இன்னமும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். எனவே வேறு ஒரு உதாரணத்தையும் பார்க்கலாம்.

ஒரு மனிதர் சத்தியத்தைப் பின்பற்றுவதால் கிடைக்கும் வருமானத்தை மட்டுமே வைத்து வாழ்க்கையை நடத்தி வருகிறார். இவரைச் சுற்றி அதிகமாகப் பொருள்கள் சேரவில்லை. ஆனால் சத்தியத்தையே வாழ்வாகக் கொண்டுள்ளார். சத்தியத்தை பின்பற்றியதன் பலனாக மனதில் நிறைவையும், அளவிடமுடியாத தைரியத்தையும் அடைகிறார். பாதுகாப்பின்மை, பயம், போன்றவை நீங்கிய மனதை அடைகிறார். போதும் என்ற நிறைவை அடைகிறார். இவருக்கு வாய்மை வெளிப்பொருள்களைக் கூட்டவில்லை. ஆனால், அதே நேரத்தில் மனதில் உறுதியையும் பயமின்மையையும் நிறைவையும் கூட்டியது. இந்த இருவரில் உண்மையில் வெற்றி பெற்றவர் யார்? சத்தியத்தைப் பின்பற்றியவரே வெற்றி பெற்றவர். ஆகவே சத்தியத்தைப் பின்பற்றினால் மனதிற்குத் தைரியம் வரும். மனதிலுள்ள பயம் நீங்கும். மனதில் நிறைவு ஏற்படும்.

வெறும் பொருள்களை மட்டுமே சேகரித்து வைப்பவரைக் கண்டு பொறாமைப்படும் குணம் நீங்கும். நம்மையே நாம் பெருமிதமாகப் பார்க்கும் உணர்வும் நம்மையே நாம் ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் ஏற்படும். இதுபோன்ற பலனைக் கொடுக்கும் சத்தியத்தை விடுவதால் கிடைக்கும் லாபம் இரு கண்களை விற்று தொலைக்காட்சிப் பெட்டி வாங்குவது போன்றதாகும். சத்தியத்தைப் பின்பற்றுவதால் சில நஷ்டங்கள் அவ்வப்போது வரலாம். ஆனால் லாபத்தைக் கணக்கிட்டுப் பார்த்தால் அடைந்த நஷ்டத்தை நஷ்டம் எனக் கூற முடியாது. முதலீடு என்றே
கூறவேண்டும்.

வாழ்வில் எதையும் இலவசமாகப் பெறமுடியாது. தவத்தால் தான் எதையும் அடைய முடியும். சத்தியத்தைப் பின்பற்றுவதனால் வரும் நஷ்டங்களையும் கஷ்டங்களையும் தவம் என்று நாம் எடுத்துக் கொண்டால் சத்தியமே எப்போதும் வெற்றி அடைகிறது. சத்தியத்தைப் பின்பற்றியதால் ஹரிச்சந்திரனுக்கு ஆரம்பத்தில் பல இன்னல்கள் வந்தன. இறுதியில் பெரும் நன்மை ஏற்பட்டது. ஒரு கோணத்தில் சத்தியம் முதலில் தோற்றது. இறுதியில் வென்றது எனலாம். சற்று ஆழ்ந்து நோக்கினால் இறுதியில் அடையும் பெரும் நன்மைக்கு, முதலில் வந்த இன்னல்கள் தவமாகின்றன. அப்படியென்றால் சத்தியம் எப்பொழுதுமே தோற்பதில்லை. ஒரு கோணத்தில் தோற்றது என ஆரம்பத்தில் எண்ணினாலும், உண்மையில் சத்தியத்துக்குத் தோல்வி என்ற அனுபவமே இல்லை.

எந்த ஒரு முக்கியமான பலனை அடையவேண்டும் என்று சத்தியத்தை விடுகிறோமோ, அந்தப் பலனை சத்தியத்தை விடுவதால் அடைய முடியாது. சத்தியத்தைப் பின்பற்றுவதால்தான் உண்மையில் நாம் விரும்பும் பலனை அடைய முடியும். பொய்மை எப்படிப்பட்ட பலசாலியையும் கோழையாக்கிவிடும். பொய்மையால் பொருள்களைக் குவிக்கலாம். ஆனால் அதை அனுபவிக்கும் மனதை இழந்து விடுவோம். மனதிலுள்ள பொறாமை பயம் போன்ற அசுத்தங்கள் பொய்மையால் வளர்கிறது. சத்தியம் என்ற தர்மத்தால் மனம் பண்படுகிறது. நம் மனம் நமக்கு நண்பனாக மாறுகிறது.

“சத்தியத்தில் நீ இருந்தால் சுவாமி துணை இருப்பேன்”.
அய்யாஉண்டு

அய்யாவின் அற்புதம்

— வைகுண்ட ராஜன் அய்யா – 9500791234

திரு ராமர் அய்யா என்ற ஒரு அன்பர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வாழ்க்கையே சூனியமானதைப்போல ஒரு முகநூல் பதிவொன்று போட்டார். ஆறுதல் வார்த்தையாவது சொல்வோமே என்று மெஸ்ஸெஞ்சரில் அவரது அலைபேசி எண்ணை வாங்கி தொடர்பு கொண்டேன்.
அவரதுக் கதையைக் கேட்ட உடன் மனம் மிகவும் பாரமாகி விட்டது. அவருக்கு 41 வயது. மூன்று வயதில் ஒரு மகன். இரண்டு கிட்னியும் பழுது. கிரியாட்டின் அளவு மிகவும் அதிகமாகி, கிட்னி வழக்கத்திற்கு மாறாக மிகவும் சுருங்கிப்போய் பழுதான நிலையில் மிகுந்த மன வேதனையில் இருந்தார்.

இன்னும் இரண்டு மாதத்தில் டயாலிசிஸ் பண்ண வேண்டும். ஆறு மாதத்தில் கிட்னி மாற்று அறுவை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் சொன்னதால் கையறு நிலைக்குத் தள்ளப்பட்ட நிலையில் “எனது மூன்று வயது மகனைப் பார்க்கும் போது தான் அய்யா மிகவும் கவலையாக இருக்கிறது, அவனைத் தனியாக விட்டு விடுவேனோ என்று” என அவர் சொன்னபோது எனது கண்கள் கலங்கியது.

என்னால் முடிந்த அளவு ஆறுதல் வார்த்தைகள் சொன்னேன். அடுத்த வாரத்தில் ஊருக்கு வந்தவர் நமது கரும்பனூர் அய்யா நாராயணர் அரசாளும் பதி வாகன சிற்பக் கூடம் பதிக்கு வந்தார். “உயிரைக் காத்துத் தருகிறேன், உன்னுள் நான் குடி இருக்கிறேன், நீ என்னுடைய பிள்ளை, உன்னைப் பரிதவிக்க விட மாட்டேன், உனக்கு நோயும் இல்லை நொம்பலமும் இல்லை “என அய்யா வாக்குரைத்தார்.

வருடங்கள் மூன்று ஆகி விட்டது. மருத்துவர்களால் கைவிடப்பட்டவர் இன்று அய்யாவால் தலைநிமிர்ந்து நிற்கிறார். அய்யாவின் பிள்ளையாக. உயர்ந்த குல சான்றோராக.

கடனில் தத்தளிக்கும் போது கூட அய்யாவின் மேலுள்ள பற்றால் அவ்வப்போது அய்யாவுக்கு விளக்கு எண்ணெய் காசு என்று எனக்கு அனுப்பி விடுவார். நானும் அடுத்த நாளே அய்யாவுக்கு விளக்கு நேமிக்க தேங்காய் எண்ணெய் வாங்கிப் பதியில் வைத்து விடுவேன்.

நேற்று அவர் அனுப்பி வைத்த விளக்கு எண்ணெய் காசில் இன்று அய்யாவுக்கு விளக்கு நியமிக்க வாங்கிய தேங்காய் எண்ணெய் ஐந்து லிட்டர்.

அன்பான மக்களே அற்புதங்களாலும் அதிசயங்களாலும் நிறைந்ததே அய்யாவழி. அய்யாவை மட்டுமே நம்புங்கள். மனிதர்களை அல்ல.

“இன்னார் வந்து விட்டார். இவ்வளவு கொடுத்தால் தான் மதிப்பார்” என மனிதனை சந்தோஷப்படுத்த கட்டு கட்டாக கொடுப்பதை விட, இன்றும் ஒரு வேளை விளக்கு நியமிக்க ஊர் ஊராக பிச்சை எடுக்கும் பண்டாரங்கள் எவ்வளவோ பேர் உள்ளனர். நலிவடைந்த பதிகளுக்கு உங்களால் முடிந்த அளவுக்கு விளக்கு எண்ணெய் வாங்கிக் கொடுங்கள்.

உங்கள் அருகாமையில் உள்ள பதியில் விளக்கெரிய காரணமாய் இருங்கள். உங்கள் வம்சத்தையே தழைக்க வைப்பார் அய்யா.

மாறாக பகட்டுக்காக “கட்டு கட்டாக ” கொடுத்தால் அது “வீணுக்குத் தேடும் முதல் விருதாவில் போட்ட கதை தான்”.

அய்யா உண்டு

அகில விருத்தமும் விளக்கமும்

– பா. அசோக் குமார் அய்யா 009607704901, 8012174032

விருத்தம்: 9

ஆதியைத் தொழுது போற்றி அரக்கனும் வரமும் வேண்டி
சீரிய சீதையாலே சீவனுக்கிடறும் பெற்று
வாரிய மூணுகோடி வரமது தோற்றுபின்னும்
மூரியன் மூன்று லோகம் முழுதுமே யடக்கியாண்டான்

விளக்கம்:

இராவணன் ஆதியான சிவபெருமானை வணங்கி, புகழ்ந்து அவரிடம் இருந்து மூன்றரை கோடி வரங்களையும் பெற்று, உயர்வான அம்மை சீதாபிராட்டியால் உயிருக்கு ஆபத்து என்கிற நிலையும் பெற்று, வாங்கியதில் மூணுகோடி வரங்களைத் தோற்ற பின்னும் மூர்க்கனான இராவணன் மூன்று லோகம் முழுவதையும் அடக்கி ஆண்டான்.

அய்யா உண்டு

அய்யா அருளிய வாழ்வியல் நெறி முறைகள்

-த. சீதா லெட்சுமி அம்மா 949655691

பொல்லாதாராகிடினும் போரப்பகையாதே
பகை என்பது பண்பற்ற ஒன்று. அதை விளையாட்டாகக் கூட எண்ணக்கூடாது. பகையுணர்வு என்ற ஒன்று யாரிடம் வந்துவிட்டதோ அது அவனுடைய மனதில் இருந்து தன்னைத் தானே அழித்து விடும். ஏனென்றால் ஒருவரிடம் நாம் பகை உணர்வு கொண்டோமேயானால் அவரிடம் எத்தனை நல்ல விஷயங்கள் இருந்தாலும் அது கண்ணுக்குப் புலப்படாது. எப்போதும் பழிவாங்க வாங்கும் தீய எண்ணங்களே மன ஓட்டத்தில் வந்துபோகும்.

அப்படிப்பட்ட தீய எண்ணங்கள் மனதில் வருகின்றபோது அது மனத்தில் அழுக்கை உருவாக்கி நல்ல எண்ணங்களைச் சிந்திக்கவிடாமல் செய்து விடும்.பலர் வெளிப்படையாக நல்லவர்கள் போலும் உள்ளுக்குள் மிகுந்த பகை உணர்வு கொண்டவர்களாக இருப்பர் அப்படிப்பட்ட தீய எண்ணத்தினால் தனக்குத்தானே துன்பத்தை ஏற்படுத்திக்கொண்டு அழிந்துபோவார்கள். ஆகவே எப்படிப்பட்ட தீய குணமுடைய வரிடமும் நாம் சண்டைக்குப் போகவேண்டிய அவசியமில்லை.

பகை உணர்வு கொண்டவர்கள் தன்னால் அழிந்து போவார்கள். மனத்தில் தோன்றிய பகை உணர்வானது எப்போதும் அந்த எண்ணத்தையே நினைத்துக் கொண்டு வேறு எதைப்பற்றியும் எண்ணாமல் இருந்துகொண்டிருக்கும்.

அப்படி இருக்கின்ற போது அவருடைய அந்த மனமானது அரத்தால் தேய்க்கப்பட்ட இரும்புத் தேய்ந்துப் போவது போல அந்த மனமானது வலிமை குறைந்து தன்நிலையை இழந்து விடும். இழந்துவிட்ட அந்த மனதில் நல்ல எண்ணங்கள் தோன்றாது.

ஒருவருடைய மனதில் சிறிதளவு பகை உணர்வு என்ற கெட்ட எண்ணம் இருந்தால் கூட அவருடைய அந்த மனமானது அங்குக் கெட்டு அந்தக் குடும்பத்தையே அழித்து விடுகின்றது .அப்படி சிதைந்து விட்ட அந்தக் குடும்பமானது, எப்படி ஒரு சுடப் படாதப் பானையில் உலை வைத்தால்
அது அழிந்து போகுமோ அதைப் போலக் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து போகிறது.

அறிவு, ஆற்றல், அடக்கம் உடையவரிடத்து பகை உணர்வு கொள்ளக்கூடாது. எப்போதும் நன்றி பெருக்கோடு வாழ வேண்டும். ஏனென்றால் நாம் இவர்களோடுப் பகையுணர்வு கொள்ளுகின்ற போது நாம் அறிவு, ஆற்றல், அடக்கம் எல்லாவற்றையும் இழந்து கீழ் நிலைக்குத் தள்ளப்படுகிறோம்.

அய்யா தன்னுடைய பிள்ளைகள் எப்போதும் சான்றோர்களாக இருக்க வேண்டும் என்று எண்ணினார். அதற்காகத்தான் நாம் எப்போதும் உயர்ந்த நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காக நம்மிடம் இப்படிப்பட்டக் கீழான எண்ணங்கள் இருக்கக் கூடாது பகையுணர்வு மனதில் வந்துவிடக்கூடாது. எப்படிபட்டக் குணம் உடையவரிடமும் பகைக் கொள்ளக் கூடாது என்கிறார்.

பொறாமை கொள்ளுதல், கோள்மூட்டி குடும்பத்தைப் பிரித்தல் போன்ற தீயக் குணம் உடையவராக இருந்தாலும் தனக்கென்று ஒரு பகைவன் வரவேண்டிய அவசியமில்லை. ஒருவரிடம் இருக்கின்ற தீய எண்ணங்களே பகையாக மாறி அவனை அழித்து விடுகிறது.எனவே இப்படிப்பட்டத் தீய குணமுடையவர் இடமும் நாம் மோதிப் பகைக்க வேண்டும் என்று எண்ணம் வேண்டாம். அந்தப் பகை உணர்வு உடையவர்கள் தன்னால் அழிந்து போவார்கள்.

ஏனென்றால் நற்பண்புகளைத் தனக்குக் கொள்கையாகக் கொண்டவர்கள் சீறினால், அரசன் கூட எத்தகைய படைபலம் இருந்தாலும் பலன் இல்லாமல் போய் விடுவான். அய்யா கூறுவார், “கற்புடைய சாணத்தி கதறி அழுது சாபமிட்டால் பொற்புடையக் கோட்டை பொடிந்துவிடும் தன்னாலே” என்று எனவே அய்யாவின் பிள்ளைகள் நல்ல எண்ணம் உடையவர்களாக இருந்து நம்மை அழிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களிடமும் நாம் நல்லச் செயல்களைச் செய்து அவர்களுக்கு அறிவுப் புகட்டி நற்சிந்தனை ஏற்பட வழி செய்வோம்.

அய்யா உண்டு

தர்மயுக முரசு வாசகர்களுக்கு அன்பான வேண்டுகோள்

நமது அகில உலக அய்யாவழி சேவை அமைப்பு (IASF)
நடத்தும் கூகுள் மீட் அகிலத்திரட்டு அறப்பாட சாலை எல்லா சனிக்கிழமையும் இரவு 8 மணி முதல் 9 மணி வரை நடைபெறுகிறது

எனவே அப் அறப்பாடசாலையில் கலந்து கொள்ள எல்லா சனிக்கிழமையும் கீழ் கண்ட லிங்கை கிளிக் செய்து இணைந்து பயன் பெறுங்கள் https://meet.google.com/btd-zzjs-uph

இந்த வகுப்பில் திருஏடு வாசிப்பு, பாராயணம், ஆன்மிக கதை, அய்யா பாடல், அய்யாவின் உபதேசங்கள் போன்றவை அன்பர்களால் சிறப்பாக வழங்கப்படுறது.

அன்புக்கொடி சொந்தங்கள் இந்த ஆன்மிக வகுப்பில் கலந்து பயனடைய அன்போடு வேண்டுகிறோம்.

அய்யா உண்டு

அய்யா வைகுண்ட பரம்பொருள்

– வைகுண்ட ராஜன் அய்யா – 9500791234

முப்பொருளும் ஒருபொருளாய் வந்த கலியுக அவதாரம்
அய்யா வைகுண்ட பரம்பொருள்
அய்யாவை சிறை பிடித்து இழுத்து சென்று கொடுமைப்படுத்திய மன்னன் சுவாதி திருநாள் ராமவர்மனுக்கு உருவப்படம் உண்டு.

சுவாதி திருநாள் மன்னனுக்கும் முன் ஆண்ட ராணி லட்சுமி பாய் அதற்கும் முன் ஆண்ட திருவிதாங்கூர் மன்னர்களின் உருவப் படங்களை திருவனந்தபுரம் அரண்மனையில் இப்போதும் காணலாம்.

கேமரா கண்டுபிடிக்கப்பட்டது 1825 ஆம் வருடம். அய்யா அவதரித்தது 1833 ஆம் வருடம். அதாவது முழுமையான கேமரா கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்த 8 ஆண்டுகளுக்குப் பின் தான் அய்யாவின் அவதாரம் நிகழ்ந்தது.

அய்யாவின் அவதார காலத்தில் இருந்த மன்னர்களின் உருவப்படமும், அய்யாவின் வருகைக்கு முன் இருந்த மன்னர்கள், ஆன்மீக ஞானிகள், சமூகச் சீர்திருத்தவாதிகளின் உருவப் படங்களும் இருந்த வேளையில் அய்யா வைகுண்டரின் உருவ படம் இது தானென்று எங்கும் கிடைத்ததில்லை.

இது தான் அய்யாவின் அவதார சூட்சுமம். முழுக்க முழுக்க உருவ வழிபாட்டையும், பல தெய்வ வழிபாட்டையும் தவிர்ப்பதே அய்யாவழி. ஓரிறைக் கோட்பாடே அய்யாவழி.

அய்யாவின் அவதார காலத்தில் சாமானிய மக்களின் கண்களுக்கு ஓர் உருவத்தைக் காட்டிய அய்யா வைகுண்டர் சப்த கன்னி மாதர்களுக்கு நாராயனராகத் தனது சொரூபத்தைக் காட்டுகிறார்.

பகவதி திருமணத்தின் போது பண்டாரக் கிழவனாக தனது சொரூபத்தைக் காட்டி பகவதியை வரவைத்து அய்யா இகனை மணம் புரிகிறார்.

பார்வதி திருமணத்தின் போது, அய்யா வைகுண்டரின் காலடியில் பார்வதி அன்னை, “நீர் எனக்கு அண்ணன் அல்லவா, நீர் என்னை மணம் புரிய போகிறேன் எனச் சொல்கிறீரே, கலியுகத்தில் இது என்ன சீர்க்கேடு என அழுது புலம்பும் போது அய்யா வைகுண்டர் அன்னை பார்வதிக்கு சாட்சாத் ஆதி சிவனாக காட்சிக் கொடுக்கிறார். ஆதி சிவ வடிவில் அன்னையை ஆட்கொள்கிறார்.

இப்படி வேளைக்கு வேளை பல விதக்கோலம் அணிந்த அந்த பரம்பொருளான அய்யா வைகுண்டருக்கு இது தான் அவர் உருவம் என எவரால் கொடுத்து விட இயலும்.

அய்யா மனுசொரூபம் காட்டி இருந்த வேளையில் அவரை எப்படியாவது வரைந்து விட வேண்டும் என்று முயற்சித்து அதற்கு அய்யாவிடம் அனுமதி வாங்கி நான்கு ஓவியர்கள் அய்யாவை சுற்றி நின்று வரைந்த போது, ஒருவர், ஒரு பண்டார கிழவனையும், இரண்டாம் ஓவியர், நடுத்தர வயது இளைஞனையும், மூன்றாம் ஓவியர் சாட்சாத் கிருஷ்ண பரமாத்மாவையும் நான்காம் ஓவியர் ஒரு ஒளி சொரூபத்தையும் வரைந்த வைத்து இருந்தார்களாம். இது செவி வழி செய்தி.

ஒரே நேரத்தில் நான்கு பேருக்கு நான்கு சொரூபம் காட்டிய அந்த ஏக பரம்பொருளை எந்த உருவத்தில் அடக்க முடியும்.

சிவபக்தர்கள் மற்றும் சிவனடியார் கனவில் சென்று நான் இப்போது சுவாமிதோப்பில் இருக்கிறேன் அங்கு வந்து என்னைப் பார் என்று சொல்லி அவர்களுக்குச் சிவனாக காட்சிக் கொடுத்தும், விஷ்ணு பக்தர்களின் கனவில் திருமாலாகச் சென்று காட்சி கொடுத்து அவர்களையும் சுவாமி தோப்பு வரவைத்து அருள்பாலித்தும், முருகன், பிள்ளையார் என இன்ன பிற இறை அடியார்களில் நல்ல மனுக்களைத் தேர்ந்தெடுத்து அவர்களின் கனவில் அவரவர் இஷ்ட தெய்வங்களின் வடிவில் சென்று சுவாமி தோப்புக்கு வர வைத்து அவரவர் இஷ்ட தெய்வங்களின் வடிவிலேயே காட்சிக் கொடுத்து அவர்களை ஆட்கொண்டு பிறப்பு இறப்பு இல்லா பேரின்ப முக்தி கொடுத்த அய்யா வைகுண்ட பரம்பொருளை என்ன உருவத்துக்குள் அடைக்க முடியும்.

மும்பையில் வாழ்ந்து வந்த தினமும் ஐந்து வேளை தொழுகை செய்யும் ஓர் இஸ்லாமிய பெண்ணின் கனவில் ஒளியாக தோன்றி நீ தினமும் தொழும் அல்லாஹ்வை காணவேண்டும் என்றால் தமிழ்நாட்டில் சுவாமிதோப்புக்கு வா என அழைத்து அந்தக் குடும்பம் சுவாமி தோப்பு வந்து அய்யாவை பணிந்து நற்பேறு அடைந்ததாகச் செவிவழி செய்தி உண்டு.

“முப்பொருளும் ஒரு பொருளாய் உருவெடுத்தாய் ஆனதினால், எப்பொருளைக் கண்டு இயல்பு பெற போறோம் யாம்” எனத் தேவர்கள் அய்யா வைகுண்டரைப் பார்த்து உரைப்பதாக அகில வாசகம் உண்டு.

இப்படி மும்மூர்த்தியும் ஒரு மூர்த்தியாகி வந்த ஏக பரம்பொருளை, அவரே ஏக இறைவன் எனச் சொல்ல கடமைப்பட்டவர்களே அவருக்கு ஒரு போலியான உருவம் கொடுத்து மனிதனாகச் சித்தரிக்க முயல்வது மிகவும் வேதனையான விஷயம்.

அய்யாவின் பெயரைச் சொல்லி மக்களிடம் தர்மம் பிரித்து உண்டு கொழுத்த பேர்கள், அய்யாவுக்கு அடியாராக இல்லாமல் கயவர்களிடம் விலை போனதால் இது போன்ற சிறுமை செயல்களில் ஈடுபடுவது மிகவும் கீழ்த்தரமான செயல்.

அய்யாவின் பதியான சுவாமிதோப்பு பதியைக் குறுக்கு வழியில் கைப்பற்றிய குள்ள நரிக் கூட்டத் தலைவன் இன்று மதி கெட்டு போய், “பைத்தியம் பிடித்த கிழவி நைட்டி போட்டுக்கொண்டு திரிவாளாம்” என்ற சொலவடை போல, வயோதிகத்தால் மதி இழந்து அய்யா வைகுண்டர் இவர் தான் என ஒரு படத்தை வரைந்து அதை உலகுக்குக் காட்டுவதும், அகிலத்திரட்டில் இல்லாத ஒரு பெயரான முத்துக்குட்டி என்ற பெயரைக்கொண்டு அய்யாவை சொல்லி நாங்கள் அவரின் ஆறாம் தலைமுறை வாரிசு என உளறி வருவதும் மிகக் கேவலமான செயல் மட்டுமல்ல அப்படி உளருபவர்களின் நிச்சயமாக அய்யாவின் அன்பு அடியார்களின் வயிற்றெரிச்சலில் விழுவதுடன் நிச்சயமாகக் கடுமையான இறை நிந்தனைக்கும் ஆளாவார்கள்.

“இந்த நாட்டுக்கு அரிவிதி நான்
நாராயணனும் நான்
பட்சி பறவை பல ஜீவ செந்துக்களை,
நிச்சயமாய் படைத்த நீல வண்ண நாதனும் நான்
மண்ணெழும் அளந்த மாய திருமாலும் நான்
விண்ணேழும் அளந்த விஷ்ணு திருவுளம் நான்
ஏகம் படைத்தவன் நான்
எங்கும் நிறைந்தவன் நான்
நாத கடல் துயின்ற நாகமணி நானல்லவோ”
– அய்யா வைகுண்ட பரம்பொருள்
அய்யா உண்டு

நற்செய்தி: கலியுக வேதமாம் அகிலத்திரட்டு அம்மானை உதய தினத்தை முன்னிட்டு அய்யாவழிபாட்டு இந்து சமய ஆலயங்களில் சிறப்பு பணிவிடை, அன்னதர்மம், ஆகமதர்மம், கலைநிகழ்சிகள், திருஏடுவாசிப்பு, சொற்பொழிவு, ஆகம ஊர்வலம் போன்ற பல நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைப் பெற்றது.

மக்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்தினை பரிமாறிக் கொண்டனர். மேலும் வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற சமூக வளைதலங்களின் மூலமும் அகிலத்திரட்டில் பகவான் வைகுண்டர் சொல்லிய வாசகங்களை பதிவிட்டு வாழ்த்துக்களை பரிமாறி மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆண்டவர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை எழுதப்பட்ட இத்திருநாளில் அனைத்து அய்யாவின் திரு நிழல் தாங்கல்களில் மக்கள் கலந்துக் கொண்டதோடு அங்கு நடைப்பெற்ற ஆகம ஊர்வலம், திருஏடுவாசிப்பு பாராயண நிகழ்ச்சியிலும் கலந்துக் கொண்டு இறைவனின் அருளைப் பெற்று சென்றனர். அடுத்த வருடம் இதைவிட பிரம்மாண்டமாக கொண்டாட ஆயத்தமாவோம்

அய்யா உண்டு

தலைமை பதி” என்று அழைப்பது சரியா?

– பா. கிருஷ்ணமணி அப்புக்குட்டி அய்யா 9841933992

ஸ்ரீமன் நாராயண பரம் பொருள் கலியுகத்தில் தன்னுடைய பத்தாவது அவதாரமான “அய்யா வைகுண்டர்” அவதாரத்தை திருச்செந்தூர் திருப்பாற்கடலில் நிகழ்த்திய பின்பு, இன்று நாம் சுவாமிதோப்பு என்று அன்போடு அழைக்கின்ற தாமரையூர் பதியை அடைந்து, அங்கு பத்து மாதங்கள் பார் நடப்பை எல்லாம் சொல்லிவிட்டு, பின்பு இந்த உலகத்தின் நன்மைக்காக ஆறு ஆண்டுகள் தவத்தை நிறைவேற்றினார்.

மேலும் முத்திரி கிணறு என்கின்ற உலகத்திலே உயர்வான தீர்த்தத்தை ஏற்படுத்தி சமதர்ம சாம்ராஜ்யத்தை அமைத்து, மண்ணும் தண்ணீரையும் கொடுத்து மக்களின் நோய்களைப் போக்கினார். பேய் பிசாசுகளை எரித்து, மந்திர தந்திரத்தை அழித்து மக்களைக் காத்தார். நமது ஏழு அம்மைமார்களையும் இகனை திருக்கல்யாணம் புரிந்தார். அம்மை லட்சுமியையும் திருக்கல்யாணம் புரிந்த புண்ணிய பூமியாக சுவாமித் தோப்பு இருந்து வருகிறது. அய்யாவின் பாதம்பட்ட தவப்பூமியான சுவாமித்தோப்பு மிக உயர்ந்த புண்ணிய பூமி எனபதில் யாருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது.

இவ்வளவு சிறப்புகள் பொருந்திய பதியாக சுவாமிதோப்பு பதி இருப்பதால் அதனை தலைமை பதி என்று அழைப்பதில் என்ன தவறு இருக்க முடியும் என்று நமக்குத் தோன்றலாம். ஆனால் அதற்கான விடையை நமது முன்னோர்கள் எவ்வாறு ஆலயங்களை அழைத்தார்கள் என்பதிலிருந்து அறிந்து கொள்ளலாம். ஆம்!, நமது பாரத மண்ணில் எவ்வளவு சிறப்பு வாய்ந்த ஆலயமாக இருந்தாலும் அதனை “தலைமை ஆலயம்” என்றோ அல்லது “தலைமை கோயில்” என்றோ அழைக்கின்ற வழக்கம் இல்லை.

உதாரணமாக இந்தப் பாரத மண்ணில் நமது அய்யா இராமராக அவதரித்த அயோத்தியிலும், கண்ணனாக அவதரித்த மதுராவிலும் உள்ள ஆலயத்தைக் கூட “தலைமை ஆலயம்” என அழைப்பதில்லை. ஏன் காசி, இராமேஷ்வரம், திருப்பதி, ஸ்ரீரங்கம், திருவண்ணாமலை, சிதம்பரம் கைலாயம், பத்திரிநாத் போன்ற புண்ணிய தலங்களையும் “தலைமை கோவில்” என்று அழைக்கும் மரபு இல்லை.

அதற்குக் காரணம் தலைமை என்று அழைக்கும் போது இறைவன்
அந்தத் தலைமை இடத்தில் மட்டும் அதிகமாக இருப்பதாகவும் மற்ற இடங்களில் எப்போதாவது வந்து போவதாகவும் பொருள் வந்துவிடும். உதாரணமாக ஒரு கட்சியின் தலைமை அலுவலகத்தில் தான் எப்போதும் அந்தக் கட்சியின் தலைவர் இருந்து தன்னுடைய பணியை ஆற்றுவார். எப்போதாவது தான் மற்றைய மாவட்ட, வட்ட, அலுவலகங்களுக்கு வருவார். அவருடைய முழுப் பணியும் தலைமை இடத்திலே இருக்கும்.

அதுபோல ஒரு நிறுவனத்தின் தலைவரும் அந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள இடத்தில் இருந்து கொண்டு மற்றைய கிளை அலுவலகங்களுக்கு எப்போதாவது மேற்பார்வையிட வருவார். ஆனால் இறைவனை அப்படிச் சொல்ல முடியுமா? முடியாது. இறைவன் ஒரே நேரத்தில் எல்லா ஆலயத்திலும் கோவில்களிலும், பதிகளிலும் தாங்கல்களிலும் இருந்து அருளாட்சி புரிபவன். அதனால் தான் கோயில்களையும் ஆலயங்களையும் தலைமை என்று அழைக்கின்ற மரபு இந்த மண்ணில் இல்லை.

இருப்பினும் அந்த அந்த தலங்களுக்கு உரிய அருமை பெருமைகளை இந்த மக்கள் போற்றிப் பாதுகாத்து உள்ளார்கள். சரி, இப்படி ஒரு வழக்கம் இதுவரை இந்த மண்ணில் இருக்கவில்லை என்றாலும், அய்யா வைகுண்டப் பரம்பொருள் நம்மை சுவாமித்தோப்பு பதியை தலைமைப்பதி என்று தான் அழைக்கவேண்டும் என்று அகிலத்திரட்டிலோ அல்லது அருள் நூலிலோ சொல்லியிருந்தால் நாம் அதை ஏற்றுக்கொண்டு தான் ஆகவேண்டும். ஆனால் அய்யா நமக்குத் தந்த அகிலத்திரட்டு அம்மானை மற்றும் அருள் நூலில் எந்த இடத்தையும் சுவாமித்தோப்பு பதியை தலைமைப் பதி என்று அழைக்கச் சொல்லவில்லை.

தலைமை என்று வருகிற போது துணை எது? கிளை எது? என்கின்ற கேள்வி பிறக்கின்றது. இன்று நெல்லை மாவட்டத்தின் தலைமைப் பதிக்குப் போட்டியே நடக்கின்றது. வடலிவிளை, ஐயனார்குளம், சிதம்பராபுரம் போன்ற ஊர்கள் “நெல்லை மாவட்டத்தின் தலைமைப்பதி” என உரிமை கொண்டாடி வருகின்றன. இவையெல்லாம் நாம் இறைவனையும், ஆன்மிகத்தையும் உணராதவர்கள் என்கின்ற நிலையை நமக்குக் காட்டுகின்றது

சுவாமித் தோப்பு பதியை “தலைமை பதி” என்று அழைக்காதீர்கள் என்று சொல்வதினால் சுவாமித் தோப்புப் பதியின் சிறப்பையும், புனிதத்தையும் குறைத்துச் சொல்லி விட்டதாக அன்பர்கள் எண்ண வேண்டாம். தலைமை பதி என்று அழைக்க வேண்டும் என்பது அய்யாவின் உத்தரவு அல்ல, மனிதர்களால் ஏற்படுத்திய முறை என்பதையும் அன்பர்கள் மனதில் எண்ண வேண்டும். உண்மையான ஆன்மிக ஞானம் பெற்ற எவரும் “தலைமை” என்று போடுவதும் இல்லை, அழைப்பதும் இல்லை என்பதாலே இந்தப் பதிவு ஆகும்.

அய்யா உண்டு

CONTACT
close slider

    Please feel free to get in touch, we value your feedback.