தர்மயுக முரசு ஏப்ரல் 2022
அய்யாவின் அருளால் எந்நாளும் நன்னாளே
அசோக்குமார் அய்யா –009607704901, 8012174032.
“சராசரத்தை நீர் போற்றி தானதர்மம் செய்திடுங்கோ
நல்லவர்கள் இட்ட தர்மம் நாள்தோறும் பொங்கும் தர்மம்
தந்தவனும் நல்லவன் தான் தராதவனும் நல்லவன் தான்
எல்லோரும் நல்லவன் என்று சொல்லி வா என் மகனே”
எல்லோரையும் சமத்துவமாய் பாவித்து சமத்துவ சாம்ராஜ்யமான தர்மயுக வாழ்வை நோக்கி பயணிக்கும் சமத்துவ செம்மல்கள் அனைவருக்கும் வீர வணக்கம்.
சான்றோர் பெருமக்களே, மாயாதி சூட்சன் அய்யா வைகுண்டப் பரம்பொருள் அகிலத்திரட்டு மூலமாக நமக்கு தந்த பாடத்தை செயல்படுத்திக் காட்டுகின்ற முதல் இடமாக திகழ்வது நமது பாடசாலைகளான நிழல் தாங்கல்களே. அது பலதரப்பட்ட மக்கள் ஒன்று சேருகின்ற ஒரு புண்ணிய தலமாக விளங்குகின்றன. மக்களுக்கு அய்யா காட்டிய தர்ம நெறியை சொல்லி, அவர்களை மேலான நிலைக்கு கொண்டு செல்லுவதே தாங்கல்களின் கடமை ஆகும். இந்த கடமையை ஒரு தாங்கல் நிறைவேற்ற வேண்டும் என்று சொன்னால் அத்தாங்கல் அய்யா தந்த அகிலத்திரட்டு அம்மானை மற்றும் அருள்நூல் என்னும் ஆகமத்தின் வழிநின்று செயல்பட வேண்டும்.
ஆகமத்தின் வழிநின்று செயல் படுத்த அத்தாங்கலை முன்னெடுத்து பயணிக்கின்ற அன்பர்களுக்கு ஆகம கருத்து தெரிந்திருக்க வேண்டும். ஆகம கருத்து தெரியவில்லை என்றால் ஆகமத்தை படித்து தெரிந்து கொள்ள வேண்டும் அல்லது ஆகம கருத்து தெரிந்த அன்பர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். மாறாக மனம்போன போக்கில் செயல்படுத்தினால் தானும் தவறிழைத்து பிறரையும் தவறிழைக்க செய்யும் செயலாக அமைந்து விடும்.
வைகுண்ட மாமணி சொல்லுவார் கருதி இருங்கோ கருத்தயர்ந்து போகாதிங்கோ. அதாவது கருத்தோடு இருக்க வேண்டும் ஆகம கருத்தை உற்று நோக்கி உணர்ந்து செயல் படுவோமேயானால் நிச்சயமாக அது நம்மை உலகத்தின் முன்னோடிகளாக திகழ வைத்து பிறரையும் திகழ வைக்கும். ஆனால் இன்றோ நமது எல்லாத் தாங்கல்களிலும் ஆகம நெறிமுறைப் படிதான் செயல் படுகிறாதா என்று பார்த்தால் நிச்சயமாக இல்லை என்றே கூறலாம். இந்நிலை நமக்கு கவலை அளிக்கின்றது. உதாரணமாக பல செயல்களை சொல்லலாம். அதில் ஒன்றை நாம் பார்ப்போம்
அதாவது தாங்கலுக்கு வரும் மக்கள் வசதிவாய்ப்புகளில் மேலும் கீழுமாக இருப்பர். அவர்கள் தாங்கல் முன்னேற்றத்திற்காக தங்களால் இயன்றவற்றை செய்வர். காரணம் பாடசாலைகளாக விளங்கும் தாங்கல்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் அதனை முன்னெடுத்து செல்ல பொருளாதாரம் தேவை என்பதற்காக. அப்படி அவர்கள் செய்யும் போது ஒருவர் அதிகமாகவும், ஒருவர் குறைவாகவும் ஒருவர் ஒன்றும் தரமுடியாமலும் இருப்பர். எவர் எப்படியோ தாங்கலை முன்னெடுத்து பயணிப்பவர்கள் சமமாகவே அனைவரையும் பாவிக்க வேண்டும். இனிமம் கொடுக்கும் போது நிறைய தந்தவர்களுக்கு நிறையவும், குறைவாக தந்தவர்களுக்கு குறைவாகவும் கொடுக்க கூடாது. மேலும் பணம் படைத்தவர்களையும், அதிகாரம் கொண்டவர்களையும் கவுரவிக்கிறேன் என்று தன்னிலை மறந்து விட கூடாது. இறைவன் முன்பு எல்லோரும் சமமே என்ற உண்மையை மறந்து விட கூடாது. எல்லோரையும் ஒருபோலே பாவித்து அன்புகாட்டி செயல்பட வேண்டும். இந்த சமத்துவ முறைக்கு மாறாக செய்தோமே ஆனால் அய்யா சொன்ன சமத்துவ சன்மார்க்க முறையை பின்பற்றாத பிள்ளைகளாக மாறிவிடுவோம். எனவே அனைத்திலும் கவனமாகவே இருக்க வேண்டும்.
மேலும் அன்பர்கள் திருப்பணிக்காக சலியாமல் காசு தந்தார்கள் என்று சொன்னால் அதனை வாங்கி விரைவாக அந்தந்த பணிக்காக செய்து முடித்து விட வேண்டும். தாங்கலை முன்னெடுப்பவர்களும் வாசிப்பாளர்களும் விளக்கவுரையாளர்களும் கருத்தோடு இருந்து செயல்பட்டு வழிபாட்டை முன்னெடுத்து ஆகம நெறிமுறைபடி வாழ்ந்து காட்டி உலகத்தின் முன்னோடிகளாக திகழந்து தர்மயுக வாழ்வு பெறுவோம்.
இப்படி எல்லா தாங்கல்களும் செயல்பட்டால் மட்டுமே அங்கு வரும் மக்களும் மேன்மை அடைந்து வீடுபேறு அடைவர்
வேண்டி நீ தர்மம் விரைவாய் நடத்தியிரு”
–அகிலத்திரட்டு அம்மானை
அகில கேள்வி
1.அலையிலே துயிலும் ஆதிவராகவர் யார்?
2.அய்யா வைகுண்டர் யார்
3.சான்றோர் மக்கள் துவயல் தவசு புரிந்த இடங்களின் பெயர் என்ன?
4.துவயல் தவத்தின் மூலம் தினம் எத்தனை வேளை இறை வழிபாடு செய்ய வேண்டும் என நாம் உணர்ந்து கொண்டோம்?
5.சான்றோர் மக்கள் துவயல் தவத்தை முழுமையாக நிறைவேற்றினார்களா?
விடை ……… பக்கம் பார்க்கவும்
அகில விருத்தம் -1
“கச்சணித் தனத்தாளோடு கறைமிடற் றண்ணலீசர்
பச்சமால் முனிவர் தேவர் பதுமலர்க் கமலத்தேவி
நிச்சயமான கன்னி நிறைந்திடும் பூமியான
தெச்சணாபுதுமை சொல்லிச் சீமையினியல்புஞ் சொல்வார்”
விளக்கம் …….. பக்கம் பார்க்கவும்
உகப்பெருக்கு விளக்கம்
கா.த.லிங்கேஷ்- 9842679780
“…வர்ணமணி மாலை சூடி
மாயக்கலி அறுக்க வருகிறார் எங்கள் அய்யா
சிவசிவ சிவசிவா அரஹர அரஹரா…”
இங்கு ‘வர்ணமணி மாலை’ என்பதற்கு, பல்வேறு நிறத்தால் ஒளிவீசும் தன்மையுடைய மணிகளால் கோர்க்கப்பட்ட மாலை என்று சிறப்பித்து பொருள் கொள்ளலாம். ‘மாலை சூடி’ என்பது வெற்றியின் அடையாளமாக மாலை அணிவதை குறிக்கும்.
பொருள்: –
கலியுகத்தை அழித்து வெற்றி வாகை சூட போவதற்கான அடையாளமாக, பல்வேறு நிறங்களில் ஒளிர்விடும் மணி மாலையை அணிந்து, நம்மை மயக்கி நம் மனத்தை ஆட்கொண்ட அகப்பகைகளான கலித்தன்மையை அறுக்க வருகிறார், மூலமுதற் பொருளான அய்யா வைகுண்டர் என உணர்ந்து சிவசக்தியான உம்மையே போற்றுகின்றோம்! உம்மிடமே அபயமிடுகின்றோம்!
நாராயணர் பதியாள வருகிறார் எங்கள் அய்யா
சிவசிவ சிவசிவா அரஹர அரஹரா…”
இங்கு ‘நாட்டு முடி’ என்பது, கலியுகத்தில் மனிதர்கள் செய்யும் ஆட்சியையும், மனதில் எழும் ‘நான்’ என்கிற அகங்காரத்தின் ஆட்சி என இருவிதமாக பொருள் கொள்ளலாம்.
பொருள்: –
தற்போது பூமியில் நிலை பெற்றிருக்கிற மனிதர்களின் ஆட்சியை இறக்கி விட்டு, மனதில் குடி கொண்ட அகங்காரத்தையும் இல்லாமல் ஆக்கி, நாராயயணரே வைகுண்ட பெம்மானாய் தர்மயுக பதியை அரசாள வருகிறார். அவரே மூலமுதற் பொருள் அய்யா என உணர்ந்து சிவசக்தியான உம்மையே போற்றுகின்றோம்! உம்மிடமே அபயமிடுகின்றோம்!
அன்புக் கொடி சொந்தங்களே! இந்த உகப்பாட்டு (அ) உகப்பெருக்கு (அ) உகப்படிப்பு என்பது, பொல்லாத இந்த கலியுகத்தை முடித்து வைப்பதற்காக, உயிருக்கும் உடலுக்கும் பாலமாக இருக்கும் சுவாசத்தை ஒழுங்கு படுத்தி அனைத்து நாடி நரம்புகளிலும் சிவ சுவாசத்தை பெருக செய்யும் சிவ மந்திரமாகும். அப்படியே நாம் சிவ சுவாசம் பெருக்க பெருக்க, நம்முள்ளே பற்றி நிற்கும் கலிமாய எண்ணங்களான அகப்பகைகளை அய்யா வைகுண்டர் முழுமையாக அழித்து சங்கடங்கள் இல்லாத தர்மயுக வாழ்வை நமக்கு நல்குவார். ஆகவே காலை /மாலை என இருவேளை உகப்பாட்டு ஓதி அய்யாவை சரணடைவோம்!
தொடந்து வந்த விளக்க உரை பகுதியில், ஏதேனும் சொற்குற்றம் பொருட்குற்றம் இருப்பின் அடியேனின் சிறுமை கருதி பொறுத்தருள வைகுண்டரிடம் வேண்டி உகப்படிப்பு விளக்கத்தை நிறைவு செய்வோம்!
அய்யா உண்டு
(அடுத்த இதழில் உச்சிபடிப்பு விளக்கம் தொடங்குவோம்)
அகிலதிரட்டு அம்மானை மூலமும்,உரையும்
க.ரீகன் அய்யா- 96890418976
இந்திரரும் தேவ ரிறஞ்சி தொழுதிடவும்
தான தவங்கள் தப்பிமிகப் போகாமல்
ஈன மில்லாமலிது தெய்வநீத மெல்லாம்
மானம் நிறுத்தி வையென்றா ரீசுரரும்”
சோழ தேசத்தில் சோழ மன்னனுடைய ஆட்சி சிறப்பாக இருந்ததால் தெய்வ நீதம் அந்த தேசத்தில் சிறப்போடு செயல்பட்டது. அவ்வாறு தெய்வ நீதங்கள் சிறப்போடு செயல்பட வைக்க சிவபெருமான் நாராயணரிடம் கூறிக்கொண்டே வருகின்றார்.
இப்போது சோழதேசத்தின் நன்மைக்காக சந்திர சூரியர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று மேலும் சிவபெருமான் கூறி வருகின்றார். உலகில் உயிர்கள் வாழ தட்பமும், வெட்பமும் இன்றியமையாதது ஆகும். இந்த தட்பமும் வெட்பமும் சமநிலையில் இருக்கும்போதுதான் உயிர்கள் செழித்து வாழ முடியும். இதில் ஒன்றிலிருந்து மற்றொன்று தன் இயல்பைவிட்டு கூடினாலோ, அல்லது குறைந்தாலோ உயிர்கள் துன்பபடும் அல்லது அழிவை நோக்கி செல்லும். ஆனால் இது ஏற்படாமல் இருக்க வேண்டுமெனில் இந்த தட்ப வெட்பம் எவ்வாறு ஏற்படுகிறது என்பதை பார்க்க வேண்டியது அவசியம் ஆகும்.
அதாவது இந்த உலகில் உண்டுபண்ணபட்ட சந்திரனும், சூரியனுமே கால நிலைக்கு காரணம் ஆகும். இந்த காலநிலைகளே உயிர் உற்பத்திக்கு காரணம் ஆகும். அடிப்படையில் இவை உலக உயிர் உற்பத்திக்கு காரணமாக அமைந்தாலும், அவை அமைய வேண்டிய தன்மையில் (விகிதத்தில்) அமைந்தால் மட்டுமே உலக உயிர்கள் வாழும். அல்லது மாறுபட்ட காலநிலையால் உயிர்கள் அழிவையே சந்திக்கும். அப்படி இந்த உலகியல் தன்மையை தீர்மானிக்ககூடிய தண்மையை தரக்கூடிய சந்திரனும், அதுபோலவே வெப்பத்தை வெளியிடக்கூடிய சூரியனும் அதனதன் தன்மையில் செயல்பட்டு சோழதேசத்து உயிர்கள் நன்மை பெறும்படி அதை அமைக்க வேண்டும் என்று சிவபெருமான் நாராயணரிடம் கூறுகின்றார்.
மேலும் தான தவங்கள் சோழ தேசத்தில் குறைவில்லாமல் நடக்க வேண்டும் என்று சிவபெருமான் நினைக்கின்றார். ஏனெனில் ஒழுக்கமான தவநிலையை கடைபிடிப்பதாலேயே ஒரு தேசம் அதன் ஒழுங்கு பாதையில் செல்லும். தானம் கொடுப்பதன் மூலம் நமக்கு நன்மை வந்து சேர்வதோடு மட்டுமல்லாமல் அதை பெற்றுக் கொள்பவர்களும் ஒழுங்கு தவறாமல் வாழ முடியும். அதுபோல இறைவனை தேடுபவர்களுக்கும், இறை ஞானத்தை உபதேசிப்பவர்களுக்கும் நாட்டு மக்கள் தானம் கொடுக்கும் போது அவர்கள் பணியை சிறப்பாக தடையில்லாமல் செய்ய இயலும். அப்படி தான தவங்கள் சோழ தேசத்தில் குறைவில்லாமல் நடக்கவும், தெய்வ அருள் சக்தி சோழதேசத்தில் குறைவில்லாமல் அருள்பாலிக்கவும் வைக்க நாராயணரிடம் சிவபெருமான் கூறுகின்றார்.
செப்படி மறவா வண்ணம் திருமருகோனுஞ் செய்தார்
அப்படித் தவறா நீதம் அம்புவி தனிலே வாழ
மல்ப்பணி குழலார் தங்கள் மனுநெறி வகுத்தார் தானே”
இப்படியாக சோழ மன்னவனுடைய ஆட்சியின் சிறப்பை கண்டு மேலுலகில் உள்ள தேவர்கள் மற்றும் திருமாலும் தேவசங்கத்தோடே கூடி சிவபெருமானிடம் சோழதேசத்திற்குசிறப்பு செய்ய வேண்டும் என கூற; அதற்கு சிவபெருமான் சோழ தேச சிறப்பை மெச்சி நாட்டை காக்க பூமா தேவியையும், மழையை பொழிவிக்க வருணனையும், இதமான வெப்பத்தை கொடுக்க சூரியனையும், காற்று பூப்போல் வீச வாயுவையும் மேலும் அங்கு வேற்றுமை உணர்வு இல்லாமல் மிருகங்கள் முதற்கொண்டு வாழ வேண்டும் என்றும், தேசம் எப்போதும் செழிப்பாக இருக்க வேண்டும் என்றும் சிறப்பு செய்ய சிவபெருமான் திருமாலோடு கூற, திருமாலும் அப்படியே செய்தார். இப்படியாக அனைத்து தெய்வ நீதங்களும் சோழ தேசத்தில் சிறப்பாக நடைபெற இனி அந்த தேசத்தில் வாழ்ந்த பெண்களினுடைய நிலையைப் பற்றி அய்யா வாசகத்தில் சொல்லி வருகின்றார்.
நெய்நீதப் பெண்கள் நிலைமை கேளம்மானை
கணவன் மொழியக் கலவுமொழி பேசாத
துணைவி நிலைமை சொல்லுவே னம்மானை”
இப்படியாக தெய்வநீதங்கள் எப்படி சோழதேசத்தில் செயல்பட்டன என்று கூறிய பின்பு இனி தேசத்தில் பெண்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்று அய்யா சொல்லுகின்றார்.
ஒரு குடும்பம் எனும்போது அதில் முக்கிய பங்கு கணவன், மனைவி என்பவர்களை சார்ந்தே அமையும். தனது குடும்பத்தின் நன்மைக்காகவும், நிர்வாகத்திற்காகவும் முடிவுகளை எடுப்பதில் கணவன் முற்படும்போது அந்த முடிவுக்கு எதிர்வினை அல்லது குறைமொழி சொல்லாமல் அதற்கு தக்க ஆலோசனை சொல்லும் விதமாக மனைவி நடந்து கொள்ள வேண்டும். இதையே அய்யா கல்யாண வாழ்த்திலே சொல்லும்போது “மன்னனுக்கு ஏற்ற மதிமந்திரி” என்று மனைவி இருக்க வேண்டும் என்று குறிப்பிடுவார். எனவே ஒரு குடும்பம் சிறப்பாக செயல்பட வேண்டுமெனில் கணவன் ஆய்ந்து நல்ல முடிவுகளை எடுக்க வேண்டும். அந்த முடிவுகளுக்கு தேவையான ஆலோசனைகளை சொல்லும் விதத்தில் மனைவி இருக்க வேண்டும் என்பதற்கு இணங்க சோழதேசத்தில் வாழ்ந்து வந்த பெண்கள் இருந்தார்கள்.
தொற்கதவு ஞானத் திறவுகோ லம்மானை”
கற்பு என்பது பொதுவானதாக பரிசுத்தம் என்று பொருள் கொள்ளலாம். அதுவே உண்மை சத்தியம் என்பது ஆகும். கற்பு தவறுதல் என்பது, தான் கொண்டிருக்ககூடிய உண்மையும், சுத்தமும் தவறுதல் என்பதாகும். இது அனைவருக்கும் பொதுவான ஒன்றாகும். உதாரணமாக ஒருவர் தான் குறிப்பிட்ட நேரத்தில் ஒரு இடத்தில் வருவேன் என்று சொல்லி அந்த நேரத்தில் வராவிட்டால் கூட, அங்கே அவர் சொன்ன உறுதிமொழியின் கற்பு தவறியதாகவே பொருள். இப்படி உண்மை தவறுதல், பரிசுத்தத்திற்கு களங்கள் தருதலே கற்பு தவறுதல் ஆகும்.
இங்கே அய்யா சோழ தேசத்தில் வாழ்ந்த பெண்களினுடைய கற்பை பற்றி கூறுகிறாரெனில், அந்த பெண்கள் எப்படி கற்பு நெறியோடு வாழ்ந்து வந்தார்கள் என்பதை பற்றி சொல்லுகின்றார். பொதுவாக கற்பு என்பது காப்பாற்றபட வேண்டுமெனில் மன உறுதி என்பது மிகவும் அவசியம். தான் கொண்ட செயலில் உண்மையை கடைபிடிக்க வேண்டுமெனில் மன உறுதி மிகவும் அவசியம். ஒரு குடும்பத்தில் பெண்களின் நடத்தையே அந்த குடும்பத்தின் பெருமையை தாங்கி நிற்கின்றது.
இல்லறத்திற்கு ஏற்ற நற்குண நற் செய்கைகள் ஒருவனுடைய மனைவினிடத்து இல்லாவிடில், அவனது வாழ்க்கை வேறு எந்த வகையில் சிறப்பாக இருந்தாலும் அந்த வாழ்வு சிறப்பாக இருக்காது. ஒருவனுடைய மனைவி நற்குண செய்கைகள் நிரம்ப பெற்றால் அவரிடம் இல்லாதது என்று சொல்வதற்கு எதுவும் இருக்காது. அவர் அத்தனையும் பெற்றவருக்கு சமமான மரியாதை இருக்கும். ஆனால் ஒருவரின் மனைவி நற்பண்பு (கற்பு) இல்லாதவளாக இருந்தால், அவரிடம் உலகத்திலுள்ள அத்தனையும் இருந்தாலும் அவை இருந்தும் பயனற்றதாகவே கருதப்படும். அவர் மற்றவர் முன் நிமிர்ந்து நடக்க முடியாமல் தலை குனிந்தே வாழ வேண்டி வரும் என்று முன் நூல்களில் சொல்லப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட கற்பு என்னும் உறுதிக்கு கற்கதவு என்னும் யாராலும் அசைக்க முடியாத உறுதியை சோழதேசத்தில் வாழ்ந்த பெண்கள் கொண்டிருந்தார்கள் என்று கூறுகின்றார். அதுபோல இந்த கற்பு என்னும் பரிசுத்தத்திற்கான கதவிற்கு திறவுகோலாக ஞானம் என்னும் திறவுகோலே உள்ளது. எனவே பெண்கள் எப்போதும் உண்மையை கடைபிடித்து தங்களுடைய மன உறுதியால் நிலைதவறாது ஞானத்தோடு வாழ்ந்து வந்தார்கள்.
(தொடரும்)
அகில விடை
1.ஆதி நாராயணர்
2.முப்பொருள் ஒருபொருளாய் வந்த ஆதி நாராயணரே அய்யா வைகுண்டர்
3.வாகைப் பதி, முட்ட
4.காலை உச்சி மாலை என மூன்று வேளை
5.ஆமாம்
அய்யா உண்டு
அய்யா துணை
நமது தர்மயுக முரசில் “கேள்வி பதில்” என்கிற பகுதியில் கேள்வி கேட்க நினைப்பவர்கள் கீழ் கண்ட விலாசத்திற்கு கடிதம் மூலமாக கேட்கலாம் அல்லது கீழ் கண்ட வாட்சப் எண்ணிற்கு டைப் செய்தும் அனுப்பலாம். அதன் விடைகளை உங்கள் கேள்வியோடும் உங்கள் பெயரோடும் நமது தர்மயுக முரசில் பதிவாகும்
விலாசம்:
அகில உலக அய்யாவழி சேவை அமைப்பு
அய்யா வைகுண்டர் வளர்பதி, கைலாசக் கோனார் காம்பவுண்ட்,
வடக்கு மெயின் ரோடு, வள்ளியூர் 627117, திருநெல்வேலி மாவட்டம்
வாட்சப் எண்: 8903201008
1. தாண்டவ சங்காரன் யார்?
2. அரிகோபால சீசர் எப்படிப்பட்ட நித்திரையில் இருந்தார்
3. பருதி சூடும் பரமன் யார்?
4. மள்ளர் என்பவர் யார்?
5. நால் வேதம் எது?
சிவகாண்ட அதிகார பத்திரம்
மாடசாமி அய்யா – 8973349046
சூத்திரம்:“மச்சமுனி நானுமப்பா மாயச்சொரூபம் அறிவாயோ“
பொருள்:
மச்சவதாரியான நான் உங்கள் கண்களுக்கு மானுட வடிவத்தில் காட்சி அருளுவது, யோகமாயையை வசப்படுத்திக் கொண்டு என் விருப்பம் போல் தோன்றும் மாயத்தோற்றம் அதாவது பொய்யான வேடம் என்பதை அறிவீர்களா?
விளக்கம்:
உலகில் தருமம் குன்றும் காலங்கள் தோறும் பகவான் அவதாரம் எடுத்து தருமத்தை காத்து அதர்மத்தை அழிக்கிறார். இதை பகவான் கீதையில் விளக்கியுள்ளார். அகிலப் புத்தகம் இந்த அவதார லீலைகளை பலவாறாக விளக்குகிறது. பகவான் உலகில் அவதரிக்கும் போது அவர் மக்களுக்கு தன் மீது ஈர்ப்பும் பக்தியும் வருமாறு ஒரு பொய் வடிவைக் காட்டுகிறார். அந்த அவதாரம் நிறைவு பெறும் போது அந்த உருவை மறைக்கிறார். ஆனால் ஏழைப் பங்காளரான பகவான் பரமான பட்டணத்தின் அரசர். அவரின் உரு இன்னதென்று இயம்ப இயலாது. எங்கும் நிறைந்தவர்க்கு ஏது உரு? எனவே பகவானின் பொய் வடிவத்தை தாண்டி பர சுவரூபத்தில் அதாவது உருவ வழிபாடை விடுத்து பரமாத்ம தியானத்தில் ஈடு படுதல் முக்திக்கு வழி வகுக்கும். எனவே இறைவன் அவதாரத்தின் போது காட்டிய வடிவம் பொய் வடிவம் என்பதை அய்யா வழியுறுத்துகிறார்.
சூத்திரம்:“ஊமையானேன் செவிடானேன் உலகமெங்கும் நானானேன்‘
பொருள்:
நான் ஊமையாகவும் செவிடாகவும் எங்கும் நிறைந்துள்ளேன்.
விளக்கம்:
முந்தய சூத்திரத்தில் தன்னுடய பொய் சொரூபம் பற்றி விளக்கிய பகவான் இனி தன்னுடய பல வித சொரூபம் பற்றி விளக்குகிறார். பகவான் எவ்விடமும் தானாய் மேவி இருக்கிறார். ஒவ்வொரு உயிர்வாழியின் இதயத்திலும் பரமாத்வாக வீற்றிருக்கிறார். மேலும் நாம் காணும் சடப்பொருட்களிலும் இரண்யகர்பன் என்ற வடிவில் நீக்கமற நிறைந்திருக்கிறார். ஆனால் அந்த பகவான் வாய்திறந்து பேசாமல், நமது வாக்கை கேட்காமல், ஊமைப்போலவும் செவிடன் போலவும் அசைவற்று இருக்கிறார். ஆனால் நம்முடய செயல்கள் அனைத்தையும் சாட்சியாக பார்த்து கொண்டு இருக்கிறார். நம் ஒவ்வொரு நடத்தையையும் கண்காணித்துக் கொண்டு இருக்கிறார். எனவே அய்யா இந்த பரமாத்மா, இரண்யகர்பன் எனும் இரண்டு நித்ய மங்களமான வடிவங்களையும் “ஊமையானேன் செவிடானேன் ” என்னும் பதங்களால் குறிப்பிடுகிறார். மனதை உள்முகமாக செலுத்தி பரமாத்ம சொரூபத்திலோ, இல்லை உலகவடிவான இரண்யகர்ப்ப வடிவத்திலோ இறைவனைத் தியானித்து பதம் பெற வேண்டும் என்பது கருத்து.
சூத்திரம்:“பித்தனானேன் பேயனானேன் என்பெருமை அறிவாரில்லை“
பொருள்:
நான் இவ்வுலகில் பித்தனாகவும் பேயனாகவும் ஆனேன், அந்த என்னுடைய பெருமையை அறிபவர்கள் யாரும் இல்லை.
விளக்கம்:
தன்னுடய வடிவத்தை விளக்கும் பகவான், தன்னுடய லீலா வினோதத்தையும் தியானிப்பதற்காக விளக்குகிறார். பொதுவாக ஒருவரை வசை பாடுவதற்கு, பேயே, பயித்தியமே என்று சொல்லுவார்கள். ஆனால் இந்த வசை மொழிகளை தனக்குக் கூறி, அதை பெருமை என்றும், அந்த பெருமையை அறிவாரில்லை என்றும், கூறுகிறார். இதன் உட்பொருள் யாதெனில். 63 நாயன்மார்களில் ஒருவரான ஆலால சுந்தரரின் வாழ்வில் நடந்த சம்பவத்தை ஞாபகம் படுத்துகிறார். சுந்தர மூர்த்தி நாயனார் பிறவி எடுக்கும் போது இறைவனிடம் என் பிறவிக் காரணத்திற்கு மாறாக தவறி செல்லும் போது என்னை தடுத்தாட் கொள்ள வேண்டும் என்று வரம் கேட்கிறார். பகவானும் சுந்தரர் கேட்ட வரத்தை அருளுகிறார். சுந்தரர் பூமியில் பிறந்து, அவருக்கு மணமுடிக்கும் காலம் நெருங்குகிறது. மணமுடிக்க ஏற்பாடுகள் நடந்தேறின. மணமகன் கோலத்தில் சுந்தரர் மணமேடையில் அமர்ந்து, மணப்பெண்ணுக்கு மாங்கல்யம் அணுவிக்கும் நேரம் வந்தது. அப்பொழுது அங்கு பகவான் பித்தன் என்ற பெயருடன் கிழப்பார்ப்பானாய்த் தோன்றி, சுந்தரர் தனக்கு அடிமை யென்று, சுந்தரரின் முன்னோர் எழுதிக் கொடுத்ததாக ஓலையை காட்டி திருமணத்தை நிறுத்தினார். ஆத்திரம் அடைந்த சுந்தரர் பகவானை, பித்தனானாலும் ஆகுக, பேயனானாலும் ஆகுக என்று வசைபாடினார். பின் நீண்ட போராட்டதிற்கு பின் வந்தது பகவான் சிவனே என அறிந்தார். பகவான் சுந்தரரின் பிறவிக் கடமையை நினைவூட்டி சமயத்தை பரப்பும் பணியை பணித்தார். உடனே சுந்தரர் பகவானை பாட அடியெடுத்து கேட்க, என்னை எப்படி வைதாயோ அப்படியே பாடு என்றார். உடனே சுந்தரர் ” பித்தா பிறைசூடி” என்றுப் பாடினார். இந்த வரலாறே மேற்கண்ட சூத்திரத்தில் சுருக்கமாய் சொல்லப்பட்டது. அதாவது பித்தன், பேயனென்ற வசை மொழிகளை ஏற்றுக்கொண்டு, அன்பர்களைத் தடுத்தாட் கொள்ள வந்த கிருபா சமுத்திரமவன். எனவே ஏழைப் பங்காளனான இறைவனின் பெருமையை அறிந்து கொள்ளுதல் வேண்டும். நாம் தகாத செயல் செய்யும் போது அதை தடுப்பவனும் அவன். அதனாலா அவனை நாம் விமர்சிப்பதையுங் கடந்து நம் வாழ்வில் மேன்மைகளை அள்ளித்தரும் பெருமையுள்ளவன் என்பதை சூத்திரம் விளக்குகிறது. அதாவது அனைத்துக்கும் சாட்சியாக, அனைத்தின் உள்ளும் ஊமை போலவும் செவிடு போலவும் பகவான் இருந்தாலும், பக்தன் வழி தவரும்போது அவனை தடுத்து நல்வழிப்படுத்த வெளியில் இருந்து வருபவனுபம் அவனே. அனைத்தின் உள்ளும் இருந்தாலும் வெளியில் இருந்து உதவுபவனும் அவனேயாம். அவனே உள்ளும் புறமும் இருந்து அருளுகிறான் என்பது சூத்திர கருத்து.
சூத்திரம்:“மண்டலத்துப் பெண்மாய்கையுமாய் மாலயனும் நானானேன்“
பொருள்:
இந்த உலகில் இறைவனின் பெண் தன்மை என்று சொல்லப்படும் மாயையாகவும், திருமாலாகவும், பிரம்மனாகவும் நானே காட்சித் தருகிறேன்.
விளக்கம்:
பொதுவாக சாஸ்திரங்கள் இறைவனின் சக்தியை இரண்டாக பிரிக்கின்றன. ஒன்று மாயை. மற்றொன்று ஆத்ம சக்தி. இந்த மாயையை பெண் என்றும், பரமாத்மாவாகிய இறைவனை ஆண் என்றும் கீதையும் மற்ற சாத்திரங்களும் கூறும். இந்த மாயையும் பகவானும் இணையும் போது உலகம் உற்பத்தியாகிறது. இதை பகவான் கீதையில் விளக்கியுள்ளார். இந்த மாயை எனும் இறைவனின் பெண் சக்திக்கும் இறைவனுக்கும் வேறுபாடு இல்லாததால் ” மண்டலத்துப் பெண் மாய்கையானேன் என்றார். அதாவது மாயையும் அவரே என்பது கருத்து. மேலும் பரப்பிரம்மாகிய நராயணரே ரஜோ குணத்தை ஏற்று படைப்புத்தொழில் புரியும் பிரம்மனாகவும் ஆனார் என்று சாத்திரங்கள் கூறுகிறது. இந்த கருத்தை பகவான் இந்த சூத்திரத்தில் உறுதி செய்கிறார்.
சிவகாண்ட அதிகாரப் பத்திரம் தொடரும்..
த.சீதா லெட்சுமி அம்மா -9486880072
“உறுதியின் சிறப்பு”
‘உறுதிதான் என் மகனே உலகமதை ஆளுவது’
மன உறுதி என்ற பண்பு எதையும் சாதிக்கும் தன்மையுடையது. மன உறுதியுடன் வாழ்வில் வெற்றி பெற முயற்சி செய்ய வேண்டும். முயற்சியும் அதற்கு தேவையான இடைவிடா பயிற்சியுமே வெற்றி பயணத்திற்கு படிக்கட்டாகும். அப்படிக்கட்டில் பயணிக்க வேகமும், விவேகமும் தேவை. விவேகமாய் சிந்தித்து மனஉறுதியுடன் வேகமாக செயலாற்றினால் வெற்றிக்கனியை எளிதில் பெறலாம். உறுதியான வேர்களை உடைய மரங்கள் பொதுவாக எந்த புயலுக்கும் சாய்ந்து விடுவதில்லை. அதைப்போல் உறுதியான மன மிருக்கும் மனிதர்கள் சோதனையை கண்டு அஞ்சாது சாதனை படைப்பர். மனிதர்கள் அனைவருமே ஏதாவது ஒரு காலகட்டத்தில் வாழ்வில் சோதனைக்கு ஆட்படுவார்கள். அந்த நேரத்தில் மன ஆற்றலும், மனித ஆற்றலும், உறுதியுடன் இணைந்துப் பொறுமையோடுச் செயல்பட்டால் எதையும் சாதிக்கலாம். தடைகள் வரும் போது பொறுமையுடன் முயற்சியுடன் மாற்றுவழியை தேடினால் அந்த வழியே அவர்களை மற்றொரு துறையில் சிறந்தவர்களாக மாற்றலாம். இடர்ப்பாடு வந்தாலும் இடைவிடா முயற்சியால் எந்த நிலையிலும் முன்னேற முடியும்.
இன்பம், துன்பம், வெற்றி, தோல்வி, பயம், கவலை, விருப்பு, வெறுப்பு, ஆசை அனைத்தையும் மனிதன் மனதின் மூலமாகவே அனுபவிக்கிறான். மனதைப் பொருத்தே மனிதனுக்கு உயர்வும் தாழ்வும் உண்டாகிறது. இதைத் தான் ‘மனம் போல் வாழ்வு’ என்கின்றனர். இதையே அய்யா அவரவர் நினைப்புக்குத்தக்கதாக விளையாடுகிறேன் சிவனே அய்யா என்றுக் கூறுகிறார்.
மனதில் ஊக்கம் உள்ள அளவுக்கு அவனுடைய உயர்வு இருக்கும். மனம் உடலை ஆள்கிறது. மனவலிமை இல்லாதவனால் எதையும் சாதிக்க முடியாது. எந்த சுகத்தையும் அனுபவிக்க முடியாது. எல்லாம் இருந்தும் இல்லாதவன் ஆவான். வலிமையற்ற மனம் உடையவனால் எதையும் செயலுக்குக் கொண்டுவர முடியாது. ஏக்கமும், கவலையும், எதிர்பார்ப்பும், எதிர்காலத்தின் மீது பயமும் உள்ளவனாக வாழ்வின் இறுதி வரை ஒன்றையும் சாதிக்க இயலாதவனாகக் காலம் கழிப்பான்.
மனித வாழ்க்கையில் உயர்வை அடைய பல வகையில் மன வலிமை இன்றியமையாதது. வறுமையை விரட்டி வாழ்க்கையில் முன்னேற, திறமைகள் பெற, திறமைக்குத் தகுந்த வாய்ப்புகள் பெற, போட்டிகளில் வென்று புகழ்பெற, பகையை வெற்றிகொள்ள, நோயை விரட்ட, சோம்பலைத் துரத்த மனிதனுக்கு மன உறுதியும், மனவலிமையும் தேவை.
மன வலிமை உள்ளவன் வாழ்க்கையில் வரும் துன்பங்கள், சோதனைகள், இழப்புகள், ஏமாற்றங்கள் போட்டிகள், பொறாமைகள், கொடுமைகள் அனைத்தையும் எளிதில் சந்தித்துச் சமாளிப்பான். ஒரு மனிதன் வெற்றியாளனாகவும், இன்னொருவன் தோல்வியாளனாகவும், ஒருவன் மகிழ்ச்சி உள்ளவனாகவும், இன்னொருவன் துன்பப்படுபவனாகவும், ஒருவன் செல்வந்தனாகவும், இன்னொருவன் வறுமையில் வாடுபவனாகவும், ஒருவன் சாதனைகள் புரிபவனாகவும் இன்னொருவன் சாதரணனாகவும் இருப்பது அவர்கள் அவர்களுடைய மனதைப் பயன்படுத்தும் முறையில் தான் இருக்கிறது. புராண இதிகாசங்களில் மன உறுதியால் சாதனைப் புரிந்தவர்கள் பலர். இதில் சாவித்திரியினுடைய மன உறுதிமிக சிறப்பு வாய்ந்ததாக கூறலாம். எதிரில் நிற்பவன் காலனே ஆனாலும், கலங்காமல் துணிந்து பேசி காரியத்தை சாதித்துக்கொண்டாள். இதுதான் சாவித்திரியின் மன உறுதி. பொறுமையும், மனஉறுதியும் ஒரு மனிதனை உயர்வாக்கும் என்பதை மனதில் கொண்டுச் செயல்படுவோம் தர்மயுக வாழ்வுப் பெறுவோம்.
திருக்கலியாண இகனை
– பா. கவிதா அம்மா 009609805601
சென்ற மாத தொடர்ச்சி…..
இப்படியாக பூரண சரணாகதி அடைந்த அவர்களை பார்த்து எம்பெருமான் சொல்லுவார் தருவீர் என என்னை நெருங்கி கொஞ்சி குழைந்து கேட்க வேண்டாம். நீங்கள் பிள்ளைகளை விட்டு விட்டுச் சென்ற இடத்தில் போய் பாருங்கள் அந்தக் காட்டிலே பெற்று பெருகி வாழ்ந்திருப்பார்கள் உறுதியாக சொல்லி விட்டேன் இன்னும் என்னை நெருங்க வேண்டாம் உங்கள் பிள்ளைகளை தேடி வனம் செல்லுங்கள் என்றார்.
உடனே அவர்கள் வனம் செல்லுவீர் என்று சொன்ன பரமானந்த அமிர்த சொரூபனே ஒப்புமை இல்லா பரம்பொருளே ஞானத்தின் அதிபதியே கலைவாணியின் நாவிலிருந்து அருள்பவனே அனைத்து உயிர்களையும் படைத்து காத்து ரட்சித்து அருள்பவனே பருவனத்தில் எங்களை நீர் பற்றி வந்து தொல்லை வினை செய்து நாங்கள் சுமந்து பெற்ற சுத்தமான தெய்வ சான்றோர்களை இந்த இடத்தில் இப்போது தரவில்லை ஆனால் இழுத்து உண்மை சந்தியிலே ஏற்றுவோம் என்று நெருங்கினார்கள்.
அதற்கு எம்பெருமான் சந்தியிலே ஏற்றுவோம் என்று சொல்கிறீர்களே அப்படி நான் என்ன தவறு செய்து விட்டேன் நீங்கள் எனக்கு கடன் கொடுத்தீர்கள் நான் உங்களிடம் கடன் பட்டு பாக்கி ஏதாவது தர வேண்டி உள்ளதா என்று கேட்டார். ஏன் அப்படிக் கேட்டார் என்றால் இறைவன் ஒருநாளும் யாருக்கும் கடன் படமாட்டார். அவரவர் வினைக்கேற்ப பலனை உடனே கொடுத்துவிடுவார். யாருக்கும் பாக்கியும் வைக்க மாட்டார். நாம் தான் அவருக்கு கடன் பட்டிருக்கிறோம்.
மேலும் அவர் சொல்லுவார் நீங்கள் பேச்சை வளர்க்க வேண்டாம் ஓடி விடுங்கள் உங்கள் கதைகளை எல்லாம் சொல்ல வேண்டியதாகிவிடும். உலக மக்கள் அறிந்தால் சிரிப்பார்கள் சிந்தனைக்கேடாகும் வரை நிற்க வேண்டாம் தேன்மொழியே போய் விடுங்கள் என்றார்.
உடனே அம்மைமார்கள் தேடுவீர் என தாங்கள் சொன்ன இந்திரசாலம் எங்களோடு செல்லாது. உங்களின் மாயையை நாங்கள் நன்கு அறிவோம் உம்முடைய கள்ள ஞாயம் நாடு பணினாலும் அறியும் என்றார்கள். இறைவனின் மாயையை யாராலும் அறிய இயலாது அவர் செப்படி வித்தை நாதன் அமைமார்கள் சக்தியின் அம்சம் ஆகையால் அவர்கள் அய்யாவைப் பற்றி அறிவார்கள்.
மேலும் கள்ள நியாயம் என்பது பின்னின்று அருளும் பிறவியை அனுத்திடும். மேலும் அவர்கள் சொல்லுவார்கள் வீடுகள் தோறும் விருந்து உண்டு முன்னே மெல்லி மடவார் சிலரை கொள்ளை கொண்டு ஆயர்பாடியில் எம்பெருமான் வீடுகள் தோறும் அமுது உண்டு மெல்லி மடவார் ஆகிய கோபியர்களின் பக்தியை அறிந்து கொள்ளை கொண்டு அதாவது ஜீவ பிரம்ம ஐக்கியம் செய்ததை வஞ்சப்புகழ்ச்சி அணியாக சொல்லி அவர்களை பரகதி நிலை கொடுக்க பட்ட பாட்டை இனி நாங்கள் சொன்னால் உலகில் உள்ளோர் உம்மை பேசி பழிப்பார்கள் என்றார்கள்.
உடனே எம்பெருமான் சொல்லுவார் பழிப்பரன சொன்ன இளம் பாவைமாரே பாரில் உள்ளோர் அறிவார்கள் பச்சைமாலின் களிப்பதுவும் காண்ட முறை நூல்கள் தோறும் காரணத்தைச் சொல்வார்கள் கருதி கேளு.
என்னை உலகிலுள்ளோர்கள் பழித்து பேசுவார்கள் என்று சொன்ன பாவைமாரே படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் பஞ்ச கிருத்தியங்களை செய்து உயிர்களை உய்விப்பது தானே என்னுடைய சொந்த தொழில். இதனைப் பாரில் உள்ளோர் அனைவரும் அறிவார்கள். ஆனால் நீங்கள் குளிக்கப்போன இடத்தில் குழந்தை பெற்று வந்தீர்கள் என்று சொன்னால் யார் தாம் உங்களைப் பார்த்து சிரிக்க மாட்டார்கள் என்றார்?
உடனே அமைவார்கள் கோபம் கொண்டு குளிக்க சென்ற இடத்தில் குழந்தை பெற்றீர்கள் என்று எங்களை குறை சொல்லும் கள்ள குறவா! அதற்கு யார் காரணம்? நாங்கள் மறை முதல்வரான சிவனாருக்கு தொண்டு செய்யவே சுனையாடி கங்கை திரட்டி வரச் சென்றோம். ஆண்கள் வரக்கூடாத அந்த இடத்தில் உனக்கு என்ன வேலை உமது மாயையால் எங்களை கவர்ந்து மதலையை தந்துவிட்டு இப்போது குறை சொல்கிறீரா என்று சொன்னார்கள்.
அதன்பிறகு என்ன ஆயிற்று என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்……
தொடரும்….
அய்யா சொன்ன முன் அறிவிப்புகள் எவை?
– S. அன்ன செல்வம் அம்மா 9443622222
சென்ற மாத தொடர்ச்சி…….
தர்மயுகம் தோன்றுவதற்கு முன் அதற்கு அடையாளமாக என்னென்ன நடக்கும் என்று அய்யா பத்துவிதமான அடையாளங்களை கூறுகின்றார். அதில் மூன்றாவது அடையாளம் பேய் மாறாட்டத்தால் அழிவு.
- அய்யா வைகுண்டமாக அவதரித்து பேய்களை எரித்து விட்டாலும், அவைகளின் பேரைச் சொல்லி கலியின் மாய்கையால் மாறாட்டம் செய்து இந்த உலகில் அழிவுகள் நடக்கும்.
அடுத்ததாக வாதை. வாதை என்றால் ஏவல் வேலை செய்யும் துர்சக்திகள் என்றும் கூறுவர். இவற்றிற்கும் பல பெயர்கள் உண்டு. இந்த சிறுதெய்வ வழிபாட்டை அய்யா வைகுண்டர் பேய் வழிபாடு வேண்டாம் என்று அறிவுறுத்துகிறார் வன்மையாக கண்டிக்கிறார்.
இவ்வாறு பேய் பிசாசுகளையும், வாதைகளையும் பற்றி அய்யா எச்சரிக்கையாக இருங்கள் என்று கூறுகின்றார், இன்றைய நவ நாகரீக விஞ்ஞான உலகில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கிறதா? என்றால் நடந்து கொண்டே இருக்கிறது. அடுத்ததாக மாறாட்டம் என்றால் என்ன? மாறாட்டம் என்பது நயவஞ்சகச் செயல் அல்லது பொய்யான செயல். ஒன்றுக்குப் பதிலாக இன்னொன்றை சொல்லி ஏமாற்றுவது. இது எல்லா மதங்களிலும் உள்ளது. எனவே பேய் ஓட்டுபவர்களும் மந்திரவாதிகளும் வைத்தியர்களும் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றார்கள். கள்ளர்களும் பெருகி போனார்கள். இதனால் பல குடும்பங்கள் தங்கள் சொத்து உடமைகளை இழந்து நிம்மதியற்ற நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எனவே இதுபோன்ற விஷயங்களில் எச்சரிக்கையாக விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்று நமது அய்யா நமக்கு பல உபதேசங்களை அருளியுள்ளார். அவருடைய உபதேசங்களை கைக்கொண்டு நாம் நடந்தோம் என்றால் எந்த விதமான தீய சக்திகளும் நம்மை அண்டவே அண்டாது.
குறிப்பு: இறை பக்தர்களையும், ஆன்மீகவாதிகளையும், திடமான மன உறுதி கொண்டவர்களையும் பேய் பிசாசுகள் அணுகுவது இல்லை. நல்லவர்களை கெட்ட சக்திகள் ஒருபோதும் நெருங்க முடியாது. இறைவன் பெயரைச் சொல்லி வயிறு வளர்க்கும் ஏமாற்று காரர்களை வளர விடாதீர்கள். குறி சொல்பவர்களை தேடி போகாதீர்கள். அவர்கள் பணம் பறிக்கும் கொள்ளையர்கள். மாய தந்திரகாரர்கள் விரிக்கும் வலையில் விழுந்து விடாதீர்கள். நாம் நம்முடைய மனதில் இறை சிந்தனை உள்ளவர்களாக இருந்தால் இறை ஒளி பிரகாசித்துக் கொண்டே இருக்கும். அய்யா நமக்கு அருளிய வேத ஆகமங்கள் அனைத்தும் மனித குலம் தெய்வீகமாக வாழ வழி சொல்கிறது. எனவே மக்கள் ஞானமாக வாழவேண்டும். அகிலத்திரட்டு அம்மானையில் அய்யா பேய்களை எரித்து விட்டார் என்பதை படிக்கிறோம். ஆனாலும் கலியுக பய உணர்வு நம்மை ஆட்கொள்கிறது. எனவேதான் பேய் அல்ல பேய் மாறாட்டம் என்கிறார். தீய சக்திகள் இறை நாமத்தை சொல்பவர்களைக் கண்டால் காததூரம் ஓடும். நாம் அய்யாவின் பிரதிபிம்பம் என்பதை மறந்துவிடாதீர்கள். தெய்வப்பிறவியல்லோ சான்றோர் மக்கள். ஆகையால் அய்யாவின் அருளாசி எப்போதும் துணை நிற்கும்.
…… மீண்டும் தொடரும்
அகில விருத்தத்தின்
விளக்கம்:கச்சை என்று சொல்லக்கூடிய துணியால் அலங்கரிக்கப்பட்ட அழகு பொருளை
தன் மார்பிலே அணிந்துள்ள சக்தியோடு, பாற்கடலை கடையும் போது தோன்றிய விஷத்தை உண்டதால் தன் கழுத்திலே ஏற்பட்ட நீல நிற கறையையுடைய பரம்பொருளாகிய சிவனும், நாராயணமூர்த்தி, முனிவர்கள், தேவர்கள், தாமரைபூவிலே அமர்ந்து இருக்கக்கூடிய பூமகள் ஆகிய மகாலட்சுமியும், என்றும் இளமையாக தூய்மையாக இருக்கின்ற குமரி பகவதியும் நிறைந்து இருந்து அருள்புரிகின்ற புண்ணியபூமியான தெச்சணாபூமியின் புதுமையை சொல்லி இனி அதன் இயல்பையும் அய்யா சொல்கிறார்.
ஆசையே தோசம்
– ஹரி வெங்கடேஷ் அய்யா 8508518505
– அய்யா வைகுண்ட பரம்பொருள்
இவ்வுலகில் நாம் எந்த பொருளை ஆசைப்பட்டு அடைந்தாலும் அந்த பொருளுக்கு நம்மை நிரந்தரமாக மகிழ்ச்சியில் திழைக்க வைக்க செய்யும் சக்திகிடையாது. நாம் ஆசைப்பட்ட பொருள் கிடைத்ததும் மீண்டும் நமது மனம் மேலும் ஒரு பொருள் மீது ஆசைக் கொள்ளும்.
ஆகவே இறைவன் மீது அன்பு கொண்டு அவனை அடைய முயற்சி செய்வதன் மூலம் மட்டுமே நிறைவு பெறாத மனதின் ஆசைகளை நிறைவு செய்ய முடியும்.
‘தகருமோ நான் தரும் தங்கக்காசு‘ என்று வைகுண்டர் நான் உங்களுக்கு தர்மயுகம் தருவேன் என்று சொல்லும் போது சூழ்ந்திருந்த சான்றோர்கள் ஆண்டவரே இப்பரிசம் தருவீரானால் யாம் அடியார் வாழுகின்ற சொத்து வஸ்து கூண்டபண்டம் ஆடுமாடு குருபரனே நாங்கள் வரை உமக்கு சொந்தம் என்று அத்தனை உலகியல் பொருட்கள் மீதும் உள்ள ஆசைகளை மறந்தவராய் இறைவனை அடைவது ஒன்றே எங்கள் ஆசை. அதுவே எங்கள் லட்சியம் என்பதை வெளிபடுத்தி நின்றார்கள். துவையல் தவசிகளோ தாம் சேர்த்து வைத்திருந்த அத்தனை சொத்து மற்றும் பொருட்களையும் ஒன்னில் அரைபாதி என கிடைக்கும் பணத்திற்கு விற்று இறைவன் மீது ஆசை கொண்டார்கள். இவர்கள் உணர்ந்தவர்கள். உலகியல் பொருள்கள் எல்லாம் மாயை. இவை எவற்றிற்கும் நமது மனதை நிறைக்கும் சக்தி இல்லை என்பதை அறிந்தவர்கள். அனைத்தையும் விற்று விட்டு உலகியல் வாழ்க்கையில் இருந்து விடுபட வேண்டும் என்பதற்காக சொல்லப்படவில்லை. அவர்கள் எந்தஅளவிற்கு உலகியல் பொருள்களை துச்சமாக கருதி இறைவனை மேன்மையாக கருதி உள்ளார்கள் என்பதே இதன்மூலம் சுட்டிக்காட்டப்படும் செய்தி.
நாம் பயன்படுத்தும் உலகியல் பொருள்கள் அனைத்தும் உலக வாழ்க்கையை நடத்துவதற்குதானே அன்றி உலகியல் இன்பத்துக்குள்ளேயே உலலுவதற்கு அல்ல என்பதை நாம் உணர வேண்டும். நம்மிடம் எல்லா பொருளும் இருக்கலாம் அது தவறில்லை. ஆனால் இந்த பொருள்கள் அனைத்தும் என்னுடையது நானே அனைத்து பொருளுக்கும் உரிமையாளன் என்ற எண்ணமே ஆசைக்கு அடிப்படை காரணமாகிறது. ஆகவே அனைத்துக்கும் உரிமையாளன் இறைவன். பொருளை கொடுப்பதும் அவனே எடுப்பதும் அவனே என்ற எண்ணத்தை நாம் நினைவில் கொண்டு இது போன்ற நான் மற்றும் எனது என்ற எண்ணத்தில் இருந்து விடுபட வேண்டும். இது போன்று ஆசையின் விளைவாக ஏற்படும் எண்ணங்களால் நாம் எவ்வளவு செல்வங்களை சேர்த்தாலும் தேவைக்கு அதிகமான செல்வத்தை சேர்ப்பதால் நமக்கு நாமே தீமையைத்தான் தேடி கொள்வேமே தவிர நன்மையை அல்ல.
ஒரு ஊரில் ஒரு நேர்மையாக வாழ்ந்த விவசாயி இருந்தான். தனது நிலத்தில் பயிர் இட்டு அதனை விற்பனை செய்து வாழ்ந்து வந்தான். நேர்மையின் மறு உருவமான இவன் கிடைக்கும் பொருள் எதுவாகினும் தனது சொந்த உழைப்பில் கிடைத்ததாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன். இவனது நேர்மையைக் கண்ட சிறு பேய்கள் இவனை எப்படியாவது அதர்மம் செய்ய வைக்க வேண்டும் என எண்ணி எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தன. அவனுக்கு தேவையான தங்கம், பொருள் என எல்லாவற்றையும் கீழே தூக்கிப் போட்டு அவனது நேர்மையை அழிக்க முயற்சித்தன. ஆனால் எந்த வகையிலும் அவனுடைய நேர்மையை அழிக்க முடியாமல் சிறு பேய்கள் எல்லாம் திணறி பெரிய பேயாகிய தலைமை பேயிடம் சென்று அந்த ஒரு விவசாயியை மட்டும் எவ்வளவோ முயற்சி செய்தும் எங்களால் தவறு செய்ய வைக்க முடியவில்லை என்று கூறியது. இதைக் கேட்ட தலைமை பேய் நான் அவனை தவறு செய்ய வைக்கிறேன் என்று மற்ற பேய்களிடம் சொல்லி விட்டு ஒரு வேலைக்காரன் போல் அந்த விவசாயியிடம் வேலைக்கு சேர்ந்தது. மகசூலை எப்படி அதிகரிப்பது? வியாபாரத்தைஎப்படி பெருக்குவது என்பது பற்றி பல ஆலோசனைகள் புதிது புதிதாக வழங்கி அவனது லாபத்தை அதிகரிக்கச் செய்தது. இதனால் சிறிது நாட்களில் மிகப்பெரும் செல்வந்தனாக அந்த விவசாயி மாறினான். பின் வைத்திருக்கும் பணத்தை எப்படி செலவழிப்பது என்று எண்ணி செய்வதறியாமல் திகைத்தான். மதுவை வாங்கினான். குடித்தான். மதி மயங்கினான். செய்யாத தீவினைகள் செய்தான். ஆகவே தேவைக்கு அதிகமானபொருள் நம்மிடம் இருந்தாலும் அது நம்மை தீய பாதைக்கும் இட்டு செல்லும் என்பதை உணர்ந்து தேவைக்கு அதிகமான பொருள்கள் நம்மிடம் இருக்கும் பட்சத்தில் தாழகிடப்பாரை தற்காக்கும் பணிக்கு பயன்படுத்துவோம் பலன் பெறுவோம்.
அய்யா உண்டு
மனமே மார்க்கம்
– அ. ஐவி அம்மா, திருவண்ணாமலை, 9444741707
பகுத்தறிவுள்ள மனம் இறைவனால் மனிதனுக்கு வழங்கப்பட்ட வரமாகும். மனம் என்பது நம் ஐம்புலன்களான கண், காது, மூக்கு, நாக்கு, உடல் ஆகியவற்றில் ஏற்படும் பதிவுகளால் ஆனது. ஒரு மனிதன் அடையும் வெற்றி, தோல்வி, உயர்வு, தாழ்வு அனைத்தும் அவரவர் மனத்துள் நிறைத்து வைத்திருக்கும் சிந்தனைகளை பொறுத்தே அமையும். இதைத்தான் சான்றோர் “மனம் போல வாழ்வு, என்பர்.
மனம் எப்போதும் விழிப்புடன் இருந்தால் சிக்கல்கள் வந்தாலும் விடுபட முடியும். பதட்டமும் குழப்பமும் நிறைந்திருக்கும் மனதை உடையவன் சிக்கலில் இருந்து மீளமுடியாது. சான்றாக மாவீரன் நெப்போலியன் பிரிட்டனிடம் தோல்வியுற்று தனிச் சிறையில் சிறைவைக்கப்படுகிறான். அவனைக் காண வந்த நண்பர் ஒரு சதுரங்க அட்டையை கொடுத்து மனதை ஒரு நிலைப்படுத்தி இதனை கவனித்தால் உன் தனிமை நீங்கும் எனக் கூறிச் செல்கிறான். நெப்போலியனின் மனமோ தோல்வியின் விரக்தியில் இருந்ததால் மனத்தை ஒருநிலைப்படுத்தி கவனிக்க முடியாமல் அச்சிறையிலேயே மாண்டான். பிற்காலத்தில் அச்சதுரங்க அட்டையை ஆய்வு செய்தபோது அந்த அட்டையின் நடுவில் சிறிய அளவில் சிறையில் இருந்து தப்பிப்பதற்கான குறிப்பு இடம்பெற்றிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன்மூலம் மாற்றங்களை ஏற்கும் பக்குவமும், ஏமாற்றங்களை தாங்கும் சக்தியும் கொண்ட மனநிலை பெற்றவர்களால் மட்டுமே இக்கலியுக வாழ்வை வாழ முடியும். எனவே மனதை நல் எண்ணங்களால் நிரப்ப முயற்சி செய்வோம். தேவையற்ற எண்ணங்கள் வராமல் இருக்க “அய்யா சிவசிவ சிவசிவ அரகரா அரகரா” என்ற மூல மந்திரத்தை உச்சரிப்போம். இம்மந்திரம் நமது மனதை செம்மைப்படுத்த உதவும்.
“மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம்” என்னும் அகத்தியர் பாடலுக்கு ஏற்ப மனம் முழுதும் இறை நாமத்தை நிரப்பினால் எவ்வித இன்னல்களும் இன்றி வாழ்க்கையை வாழலாம்.
அய்யாவழிபாட்டை முன்னெடுத்த துவயல் பண்டாரங்கள்
– அ. வைகுண்ட ராஜன் அய்யா 9500791234
துவையல் தவசு மேற்கொண்டு வந்த துவையல் பண்டாரங்கள் துவையல் தவசு முடிந்து கூரைக்கு திரும்பும் பொழுது அவர்களிடம் வீடு வாசல் கன்று காலிகள் எதுவும் இல்லை. காரணம் துவையல் தவசு என்பது வாழ்க்கையின் கடைசி நிலை என்று நினைத்து துவையல் தவசுக்கு சென்றவர்கள் தாங்கள் வைத்திருந்த வஸ்துகளை எல்லாம் விற்று விட்டனர்.
துவையல் தவசு என்பது வாழ்க்கை வாழும் நெறிமுறை என்பதனை உணர்ந்து பின்பு துவையல் தவசு முடிந்து ஊருக்கு திரும்பி வரும் பொழுது இவர்களிடம் ஒரு மன சஞ்சலம். இருந்த பொருட்கள் அனைத்தையும் விற்று விட்டோமே இனி எப்படி வாழ்வது என்று மன வருத்தத்துடன் வந்துள்ளார்கள். ஊருக்கு வந்த உடன் தாங்கள் விற்ற வஸ்துக்களை வாங்கியவர்கள் அய்யா வைகுண்ட பரம்பொருள் அருளால் திரும்பவும் துவையல் பண்டாரங்களிடம் கொடுத்துள்ளார்கள்.
துவையல் தவசுக்கு பிறகு இந்த துவையல் பண்டாரங்கள் அய்யாவை ஒரே நினைவாய் மனதில் நினைத்து வணங்கி தாங்கள் வசிக்கும் கூரையில் ஒரு இடத்திலையே அய்யாவுக்கு என்று ஒரு இடம் ஒதுக்கி விளக்கு மட்டுமே வைத்து வழிபட்டுள்ளார்கள். துவையல் பண்டாரங்கள் வணங்கிய இடம் தான் இன்று பல தாங்கல்களாக மாறி உள்ளன. இந்த துவையல் பண்டாரங்கள் தீபம் ஏற்ற பயன்படுத்தியது “தண்ணீர்”, ஆம் ஆத்து, குளத்து, கிணத்து, கடல் நீர் தான்.
காச்சல் உடல் நல குறைவு என்று தங்களை நாடியவர்களுக்கு அந்த இடத்தில இருக்கும் மண்ணை அய்யாவை நினைத்து எடுத்து கொடுத்துள்ளார்கள், உடல் நல குறைவும் சரியாகி உள்ளது. பெரும்பாலும் துவையல் பண்டாரங்களுக்கு வாரிசுகள் இருந்ததாக தெரியவில்லை, ஒரு சில பண்டாரங்களை தவிர்த்து. ஆனால் துவையல் பண்டாரங்கள் வம்ச வழியினர் இருக்கிறார்கள். சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு வரை துவையல் பண்டாரங்கள் வணங்கிய இடங்கள் தான் தாங்கல்களாக இருந்து வந்தன. துவையல் பண்டாரங்களுக்கு துவையல் தவசில் உணர்த்தப்பட்டவை தான் “அய்யா வழி” வழிபாடு முறையில் இருந்து வந்தன.
ஆனால் இன்று காணிக்கை, கைக்கூலி பிரிக்கவும், தனி மனிதன் ராஜ போக வாழ்வு வாழவும் பல பேர் பதிகள் என்ற பெயரில் தாங்கல் ஆரம்பிக்க போய் துவையல் தவசில் உணர்த்தப்பட்ட தத்துவங்கள் அனைத்து மங்கி கொண்டே இருக்கிறது. அனைத்து பேரும் ஓன்று சேர்ந்து வாழ்வதுக்காக தான் துவையல் தவசு ஏற்படுத்தப்பட்டது. அதனால் தான் ஊருக்கு ஒரு தாங்கல் இருந்தது. ஆனால் இன்றோ ஒரே ஊரில் இரண்டு மூன்று தாங்கல்கள் உள்ளது, ஆனால் ஒருவரிடமும் ஒற்றுமை இல்லை. இன்று துவையல் தவசில் உபதேசித்த ஒற்றுமை என்பது எத்தனையோ ஊர்களில் அடியோடு அழிந்து விட்டது, இன்னும் எவ்வளவோ சொல்லலாம்.
சர்வமும் வைகுண்ட மயம்
முச்சந்தி வழிபாடு
அசோக்குமார் அய்யா –009607704901, 8012174032.
முச்சந்தி வழிபாடு என்பது மூன்று சந்தி வேளையில் இறை வழிபாடு செய்வது. மூன்று சந்தி வேளை என்பது காலை சந்தி உச்சி சந்தி மாலை சந்தி என்பதாகும். இந்த சந்தி வேளையில் கட்டாயம் இறை வழிபாடு செய்ய வேண்டும் என்பதை நமது தர்மம் வலியுறுத்துகிறது. காரணம் இந்த சந்தி வேளைகளில் உடலும் உள்ளமும் இறை வழிபாட்டால் விரைந்து விளிப்படைந்து மனம் செம்மை அடையும் என்பது ஆன்மிகம் காட்டும் பாதை. இனி இந்த மூன்று சந்தி வேளைகளையும் அவ்வேளையில் நாம் செய்ய வேண்டிய வழிபாடுகளை பற்றி பார்ப்போம்.
காலை சந்தி: காலை சந்தி என்பது இரவு மாறி பகல் துவங்கும் நேரம். இதனை பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லுவர். இந்த காலை சந்தி நான்கு மணி முதல் ஐந்து மணி வரை. இந்த காலை சந்தியில் நாம் அய்யா வைகுண்ட பரம்பொருளுக்கு தீபம் ஏற்றிய பிறகு ஐந்து முறை மாப்பு கேட்டு பதினொன்று முறை சிறிய உகப்படிப்பு படித்து மீண்டும் மாப்பு கேட்டு நிறைவு செய்ய வேண்டும். மேலும் உகப்படிப்பு படிக்கும் முறையை இன்னும் விரிவாக உகப்படிப்பு என்கிற தலைப்பின் கீழ் பார்க்கலாம். இந்த காலை சந்திதியா வழிபாடு செய்ய எல்லோரும் காலை மூன்றரை மணிக்கு எழுந்து காலை கடன்களை முடித்து நீராடி சரியாக நான்கு மணிக்கு காலை சந்தியா வழிபாடு செய்ய தயார் ஆகிவிட வேண்டும்.
உச்சி சந்தி: உச்சி சந்தி என்பது வெளிச்சம் உச்சம் பெறுகின்ற நேரம். இதனை மத்திய வேளை என்றம் அழைக்கிறோம். இச் சந்நி வேளை மதியம் 12 மணி முதல் 1 மணி வரை. இந்த உச்சி சந்தியில் நாம் ஒரு முறை உச்சி படிப்பை தவறாது படிக்க வேண்டும். ஒருவேளை தொடர்ந்து தினமும் படிக்க இயலவில்லை என்றால் ஞாயிற்றுக்கிழமை ஏழு முறை படித்து முடிக்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமை களில் ஏழு முறை படிக்கும் போது முதல் ஒரு முறை நின்றும் அதனை தொடர்ந்து ஆறு முறை அமர்ந்தும் படிக்க வேண்டும். இதனை இன்னும் விரிவாக உச்சிப்படிப்பு என்கிற தலைப்பின் கீழ் பார்க்கலாம்.
மாலை சந்தி: வெளிச்சத்தில் இருந்து இரவு நோக்கி நகர்வது. இதனை கங்குல் நேரம் என்றும் அழைப்பர். இச்சந்தி மாலை ஐந்து மணி முதல் ஆறு மணி வரை. இந்த மாலை சந்தியில் நாம் மீண்டும் அய்யா வைகுண்ட பரம்பொருளுக்கு தீபம் ஏற்றிய பிறகு ஐந்து முறை மாப்பு கேட்டு பதினொன்று முறை சிறிய உகப்படிப்பு படித்து மீண்டும் மாப்பு கேட்டு நிறைவு செய்ய வேண்டும். மேலும் உகப்படிப்பு படிக்கும் முறையை இன்னும் விரிவாக உகப்படிப்பு என்கிற தலைப்பின் கீழ் பார்க்கலாம்.
அய்யா உண்டு