தர்மயுக முரசு ஜூன் 2022

அய்யாவின் அருளால் எந்நாளும் நன்னாளே

அசோக்குமார் அய்யா –009607704901, 8012174032.

தந்தே னுனக்குத் தரளமணி முத்திரியும்

கந்தைக் துணியதிலே காட்டாதே என்மகனே

 

எந்த நிலைபாட்டிலும் தன்னிலை மாறாமல் நியாயவானாக நின்று செயல்படும் அன்புக்கொடி சொந்தங்கள் அனைவருக்கும் புரட்சிகரமான அன்பு வணக்கம். 

 ஆன்மிக புரட்சியாளர்களே: மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்கிற வாக்குக்கிணங்க ஆன்மிக சேவையே மக்கள் சேவை என்ற உண்மையை உணர்ந்து நாம் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறோம் அல்லவா? இப்படி செயல்படும் போது நிறைய இடையூறுகள் வரலாம். எப்படிப்பட்ட தடைகற்கள் வந்தாலும் நமது ஆன்மீக சித்தாந்தத்தில் இருந்து ஒருபோதும் நாம் பின்வாங்கி விட கூடாது. நமது கொள்கை கோட்பாட்டில் உறுதிவுடையவர்களாக இருக்க வேண்டும். 

 இந்தக் கலியுக மானது ஒரு விசித்திர தன்மையுடையது. அதாவது இங்கு உண்மை ஆன்மிகமும் இருக்கும் போலி ஆன்மிகமும் இருக்கும். உண்மை ஆன்மிக வாதிகளும் இருப்பர் போலி ஆன்மீக வாதிகளும் இருப்பர். உண்மை ஆன்மிகவாதி உண்மை ஆன்மிகத்திலும் இருப்பர் போலி ஆன்மிகத்தில் இருப்பர். போலி ஆன்மிகவாதி உண்மை ஆன்மிகத்தில் இருப்பர் போலி ஆன்மிகத்திலும் இருப்பர். யாரையும் முழுமையாக நாம் கணித்துவிட முடியாத நிலைதான் இக்கலியுகத்தின் வினோதமான நிலையாகும். 

 இந்தக் கொடுமையான நிலையறிந்து நாம் அதிலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும் என்றால் நமது சித்தாந்தத்தில் உறுதிபாடு உடையவர்களாக நம்மை நாம் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். மாறாக இந்த கொள்கைக் கோட்பாட்டில் நாம் தளர்வை காட்டினோம் என்றால் நமது சித்தாந்தத்தில் இருந்து தவறி பாவ கர்மாவில் சிக்கி விடுவோம் என்பதை மறந்துவிட கூடாது 

 நமது கொள்கைக் கோட்பாட்டில் இருந்து நாம் தவறி விடாமல் இருக்க நமது செயல்பாட்டில் பற்று வைத்துவிடக் கூடாது. பெயர் புகழுக்கு அடிமையாகிவிடக் கூடாது. தர்மயுக வாழ்வு என்கிற இறை அன்பு மீது மட்டுமே பற்று வைக்க வேண்டும் 

 மேலும் பெயர் புகழுக்கு அடிமை ஆகாமல் அங்கீகாரம் வேண்டி செயல்படாமல் நாம் நம்மை இறை பணியில் முழுமையாக ஈடுபடுத்த வேண்டும். அவ்வாறு செயல்படும்போது பகவான் அய்யாவுடைய அங்கீகாரம் நிச்சயம் கிடைப்பதோடு, அவருடைய திருப்பாதத்தில் நம்மை சேர்க்கும். 

 தர்மயுக வாழ்வுதான் நமது லட்சியம் என்கிற உண்மையை ஒருபோதும் மறவாமல் சொல்லும் செயலும் நல்லவையாகவே அமைத்து, நடை, உடை, பாவனைகளில் பக்குவத்தையும் சமத்துவத்தையும் ஏற்படுத்தி கொண்டோமேயானால் நமது செயல்பாடு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து நமது லட்சியத்தை அடைய வைக்கும். 

 ஆன்மிக புரட்சி என்பது முதலில் நம்மை செதுக்கி அதன்மூலமாக உலகுக்கு முன்னுதாரணமாக திகழ்வது. எனவே ஆன்மிக செயல்பாடுகளில் நம்மை பக்குவப்படுத்துகின்ற செயல்வடிவங்களை அமைத்துச் செயல்படுவோமே என்று சொன்னால் நமது ஆன்மிக சித்தாந்தங்களில் இருந்து நழுவி போகாதவர்களாகவும் உறுதிப்பாடு உடையவர்களாகவும் நம்மை நாம் அமைத்துக் கொள்ள முடியும் 

 எனவே அகிலத்திரட்டு அம்மானையைப் படித்து உணர்ந்து அதன்படி செயல்படுவோம் என்றால் நிச்சயமாக ஆன்மிக புரட்சியாளராக திகழ்ந்து உலகத்தின் முன்னோடிகளாக விளங்க முடியும். 

 அன்புச் சொந்தங்களே! அகில ஜோதிகளாக நாம் விளங்க வேண்டும் என்றால் முச்சந்தி வழிபாடுகளை தவறாமல் செய்து சைவ உணவு முறையைக் கடைபிடித்து சதாகாலமும் அய்யா வைகுண்ட பரம்பொருளை நினைத்து எல்லாச் செயலையும் அவரிடமே அர்ப்பணித்து பகவானே எங்களுக்கு நேர்மறை கதாபாத்திரத்து தந்து எங்களை ஆட்க்கொள்ள வாரும் இறைவா என்று வேண்டி செயல் படுவோம்! தர்மயுக வாழ்வு பெறுவோம்! 

மகனே உனது மனறியக் காட்டினதை

அகமதிலே வைத்து அகமகிழு என்மகனே

 அய்யா உண்டு

அகில கேள்வி

1.தவப்பொருள் யார்? 

2.மகரமாக சமைந்தவர் யார்? 

3.அகிலத்திரட்டு குறிப்பிடும் மொத்தம் நோய்கள் எந்தனை? 

4.மொத்தம் எத்தனை லோகங்கள்?

5.பத்தும் பெரிய பாலர்கள் யார்? 

 விடை ……… பக்கம் பார்க்கவும்

உச்சிப்படிப்பு – விளக்கம்                            கா.த.

“சிவசிவா அரிகுரு சிவசிவா
சிவசிவா ஆதிகுரு சிவசிவா
மூலகுரு சிவசிவா சிவசிவா சிவமண்டலம்
அல்லா இல்லல்லா இறைசூல் மகிலல்லா சிவசிவா மண்டலம்
அரி நாராயணகுரு சிவசிவா சிவமண்டலம்
நாதன் குருநாதன் சிவசிவா சிவ மண்டலம்”

‘சிவசிவா’ எனும் பதத்தின் பொருள், சிவமாகவும் சக்தியாகவும் கலந்தே இயங்கும் அனைத்தையும் படைத்து, காத்து, இரட்சிக்கும் பரம்பொருளையே குறிக்கும். இந்த சிவ-சக்தியே தன்னந்தன்னால் பிரணவித்து, புவன சராசரங்கள் அனைத்தையும் உண்டாக்கியது. சிவ-சக்திக்கு மேலான ஒன்று இல்லை என்றும் சொல்லலாம். அதனால் தான் இறைவனைத் துதிக்கும் மந்திரங்களில் ‘சிவசிவா’ என்பது முதன்மையானது. இதையே நமது ஆன்றோர் பெருமக்களும், 

“சிவசிவா என்றிட தீவினை மாளுமே” எனும் வாசகம் மூலம் குறிப்பிடுகிறார்கள்.

 “…சிவசிவா என்று துதிக்கின்ற பேரொலியும்…” எனும் அகிலத்திரட்டு வாசகத்தையும் இங்கு ஒப்பு நோக்குவோம்.

 ‘அரி’ என்கிற பதம் சாட்சாத் நாராயணனையே குறிக்கும். மேலும் இதற்கு ‘அரிசி’ என்கிற பொருளும் உண்டு. அரிசி என்பதை பொதுவாக ‘உணவு’ எனப் பொருள் கொள்ளலாம். முந்தைய ஆகமமான தைத்திரிய உபநிடதம் சொல்கிறது, ‘உணவிலிருந்தே உயிர் பிறவி எடுக்கிறது, உணவிலிருந்தே தன்னை வளர்த்து கொள்கிறது’. ஆக அனைத்துக்கும் மூலமாக இருக்கும் உணவும் இறைவனின் மாயா சொருபம் என்பதே அதன் உட்பொருள். ஆனால் இங்கு நாம் அனைத்து உயிரினங்களுக்கும் தேவையான உணவு முதலாய் அனைத்தையும் அருளிக் கொண்டிருக்கும் காக்கும் கடவுளான நாராயணரையே ‘அரி’ எனும் நாமத்தால் உணர்வோம்.

 

“…என்பேர் அரிதான் எனை நினைத்து பாண்டமதில்
அன்பரே நீரை அதுநிறைய விட்டவுடன்
என்பேர் அரியை எடுத்ததில் இட்டதுண்டால்
அன்பாக எல்லோர்க்கும் அமுதாய் வளருமென்றார்….”
எனும் அகிலத்திரட்டு வாசகத்தையும் இங்கு ஒப்பு நோக்குவோம்.

அதுபோல் ‘குரு’ என்கிற பதம் ஞானத்தை நல்கும் (அ) போதிக்கும் ஞானாசிரியனான இறைவனையே குறிக்கும்.

 அதாவது இறைவன் பூமியில் எடுக்கின்ற அவதாரங்கள் அனைத்துமே உலகை (அ) உயிரைக் காத்து நெறிபடுத்துவதற்காகத் தான் எடுக்கப்படுகின்றன. அதனால் தான் ஒவ்வொரு அவதாரமும் ஞானாசிரிய முகூர்த்தமாக சிறப்பிக்கப்படுகிறது. குறோணி முதல் அவனது துண்டங்களிலிருந்து பிறந்த அனைத்து அசுரர்களுக்கும் புத்தி சொல்லி கேளாத காரணத்தால், அவர்களைக் கொல்வதன் மூலம் அனைத்து உயிர்களுக்கான வாழ்வியல் செய்தியை உணர்த்திய நாராயணப் பொருளையே குருவாகக் கொள்வது சிறப்பானதாகும். அதிலும் ஞான பெட்டகமான ‘அகிலத்திரட்டை’ அருளித் தந்த அய்யா வைகுண்ட அவதாரத்தை பூரணமான குருவாகக் கொள்வது என்றால் அது மிகையல்ல.

 ‘ஆதிகுரு’ என்கிற பதம், அனைத்துக்கும் முதன் முதலில் தோன்றிய ஞானாசிரியரான சிவப்பொருளைக் குறிக்கும். ‘மூலக்குரு’ என்கிற பதம், உடற்கூறு தத்துவத்தில் ஒவ்வொரு உயிருக்கும் ஞானநிலை துவக்கி வைக்கும் மூலாதார சக்கரத்தில் நின்றிலங்கும் ஞான முதல்வனான கணபதி நாராயணரையே குறிக்கும். ‘மண்டலம்’ என்கிற பதம் பிரபஞ்சம் எனும் அண்ட புவன சராசரங்களைக் குறிக்கும். சிவமண்டலம் எனும் போது பிரபஞ்சம் முழுவதும் வியாபித்திருக்கும் சிவப்பொருளையே குறிக்கும்.

 “…மண்டலத்துள் ஊறலுமாய் மயமுமாய் நின்றோனே.” எனும் அகிலத்திரட்டு வாசகத்தையும் இங்கு ஒப்பு நோக்குவோம்.

 ‘அல்லா’ என்கிற பதம், ஓர் இறை தத்துவத்தின் படி அனைத்தையும் படைத்த ‘ஏகன்’ எனும் இறைவனின் மற்றொரு திருநாமமே ஆகும். சுருங்க சொன்னால் ‘படைத்தவன்’ என்பதே சிறப்பானதாகும். 

“…எல்லாம் படைத்த ஏகன் கிருபை என அல்லா நினைத்தப்படி ஆகும்.” எனும் அகிலத்திரட்டு வாசகத்தையும் இங்கு ஒப்பு நோக்குவோம்.

 அதுபோல, ‘இல்லல்லா’ என்கிற பதம் இல் + அல்லா எனப் பிரிகிறது. ‘இல்’ என்பதன் பெருளாக வீடு, மனைவி, இல்லாமை என பல இருந்தாலும் ‘இல்லாமை’ என்பதே இவ்விடத்தில் பொருந்தி வருகிறது. எனவே ‘இல்லல்லா’ என்பதை, தன்னைப் படைத்தவன் என்று யாருமே இல்லாத இறைவன் என்று பொருள் கொள்ளலாம். 

“…தூண்டா சுடரோன் திருமாலை.” எனும் அகிலத்திரட்டு வாசகத்தையும் இங்கு ஒப்பு நோக்குவோம்.

 ‘இறைசூல்’ என்கிற பதம், தனக்குத் தானே இன்னொரு நாமத்தில் படைப்பித்துக் கொள்கிற இறைவனின் பிரணமித்தலயே குறிக்கும். விந்து வழி செய்து வித்தகனை ஈன்றெடுக்கும் தத்துவமும் இதுவே ஆகும். சிவபொருளிலிருந்து நாராயண பொருள் பிறப்பிக்கப்பட்டதும் மற்றும் நாராயணம் தனக்குத் தானே மகனாக வைகுண்டர் நாமத்தில் பிறப்பிக்கப்பட்டதும் இந்த ‘இறைசூல்’ தத்துவத்தின் படியே ஆகும்.

‘மகிலல்லா’ = மகில் + அல்லா, எனும் பதத்தில் ‘மகில்’ என்பது நாராயணரின் திவ்ய நாமங்களில் ஒன்றாகக் கருதப்படுவதால், எல்லாம் படைத்த நாராயணப் பரம்பொருள் என்று பொருள் கொள்ளலாம். நாத – விந்து தத்துவமாக எங்கும் வியாபித்திருக்கும் பரபிரம்மத்தையே ‘நாதன்’ எனும் பதம் சுட்டுகிறது.

 பொருள்:அனைத்து உயிர்களுக்கும் அமுதளித்துக் காக்கும் நாராயணனே ஞானாசிரியனான அய்யா வைகுண்டர் என உணர்ந்து சிவ-சக்தியான உம்மையே துதிக்கின்றோம்.

 அனைத்துக்கும் முதன் முதலாகத் தோன்றிய சிவப்பொருளே ஞானாசிரியரான அய்யா வைகுண்டர் என உணர்ந்து சிவ-சக்தியான உம்மையே துதிக்கின்றோம்.

 மூலாதாரத்தில் நின்றருளும் கணபதி நாராயணரே பிரபஞ்சம் முழுதும் நிறைந்திருக்கிறார். அவரே ஞானாசிரியனான அய்யா வைகுண்டர் என உணர்ந்து சிவ-சக்தியான உம்மையே போற்றுகின்றோம்.

 யாராலும் படைக்கப்படாதவனாய், தன்னம் தன்னால் தோன்றி, அனைத்தையும் படைத்தவனே, நம்மீது கொண்ட கருணையால், அய்யா வைகுண்டராக அவதரித்தார். அவரே பிரபஞ்சம் முழுதும் நிறைந்திருக்கிறார் என உணர்ந்து சிவ-சக்தியான உம்மையே துதிக்கின்றோம்.

நாத-விந்து தத்துவமான பரபிரம்மமாய் பிரபஞ்சம் முழுதும் நிறைந்திருப்பவனே ஞானாசிரியனான அய்யா வைகுண்டர் என உணர்ந்து சிவ-சக்தியான உம்மையே துதிக்கின்றோம்.

                                                       [தொடரும்]

அகில விருத்தமும் விளக்கமும்

– பா. அசோக் குமார் -009607704901, 8012174032.

விருத்தம்: 3
“இவ்வகையாகச் சோழன் யிருந்து ராச்சியத்தையாள
கவ்வைகளில்லா வண்ணம் கலியுகம் வாழும்நாளில்
செவ்வகை திருவேயான திருவுளக்கிருபை கூர்ந்து
தெய்வமெய் நீதம்வந்த செய்தியை செலுத்துவாரே”

விளக்கம்:இப்படியாக சிறப்பான முறையில் சோழ மன்னன் நாட்டை ஆளும் வேளையில், எந்தவிதமான துன்பங்களும் இல்லாமல் மக்கள் கலியுகத்தில் வாழ்ந்து வருகின்ற போது, சிறப்புடைய இறைவனின் திரு உள்ளத்தில் உள்ள கிருபையினால் இராஜியத்தில் தெய்வநீதம் வந்த செய்தியை அய்யா சொல்கிறார்.

அகிலதிரட்டு அம்மானை மூலமும்,உரையும்       

  க.ரீகன் அய்யா- 96890418976

“செல்வம் பெருக சிவநிலைமை மாறாமல்
அல்வல் தினம்செய் தன்புற் றிருந்தனராம்
தான் பெரிதென்று தப்புமிக செய்யாமல்
வான்பெரி தென்று மகிழ்ந்தா ரம்மானை”

 

தெச்சணா பூமியில் எல்லா வகையான மக்களும் தங்களுக்குள் எந்தவித வேறுபாடும் இல்லாமல் மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தார்கள். அப்படி அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்வதோடு இயற்கையின் முறைமைகளை இறைவன் அருளால் சிறப்பாக செயல்பட்டதால் பயிர் விளைந்து வேண்டிய செல்வத்தை அவர்களுக்குக் கொடுத்தது. பொதுவாக செல்வம் அதிகமாக சேரும் போது மக்களிடம் ஒரு மமதை குடிகொள்ளும். அந்த மமதை பின்பு “தான்” என்ற ஆணவத்தை அடைந்து மற்றவர்களை மதிக்காமல் நடக்கும் நிலையை உருவாக்கும். ஆனால் தன்னை மறைக்கும் போது செல்வத்தை கொடுத்த இறைவன் கண்ணுக்குத் தெரிவதில்லை. அவன் கொடுத்த செல்வம் மட்டுமே தெரியும். ஆனால் தெச்சணத்தில் வாழ்ந்த மக்கள் அவ்வாறு இல்லாமல் சிவ நிலைமை என்று சொல்லக்கூடிய பக்தி நிலை மாறாமல் இருந்தார்கள். செல்வம் பெருகி அவர்கள் வாழ்க்கை உயர்நிலை அடைந்தாலும் அந்த செல்வத்தைத் தந்த இறைவனை எப்போதும் மறவாமல் துதித்து இயங்கும் எல்லோரிடமும் அன்பு பாராட்டி வாழ்ந்து வந்தார்கள். 

 

மேலும் அந்த மக்கள் ஞானத்தில் சிறந்து விளங்கினார்கள். தங்களால் உலகில் எந்தக் காரியம் நிகழ்ந்தாலும் அது நம்மால் நடந்தது அல்ல அது இறைவன் மூலமே நடந்தது என்கின்ற பக்குவத்தை மக்கள் கொண்டிருந்தார்கள். எப்போதும் மக்கள் இந்த ஞானத்தை பெற்றிருந்ததால் உலகில் மக்கள் எந்தவிதமான சண்டை சச்சரவுகளில் ஈடுபட மாட்டார்கள். ஏனெனில் நாம் செய்யக்கூடிய எந்தவித செயலையும் நம்மை விட பெரியவர் ஒருவர் பார்க்கின்றார் அவரே உயர்ந்தவர் எனும் எண்ணம் வரும்போது மக்கள் எந்தவித தவறும் செய்யாமல் இறைவன் வகுத்த நெறி முறையில் வாழ்வார்கள். 

அகிலத்திரட்டிலே தவம் என்பதற்கு பல இடங்களில் சிறப்பாக அய்யா சொல்லி வருகின்றார். முனிவர்கள் இறைவனை காண இருப்பது தவம் என்றும் அகிலத்திரட்டு சொல்லுகின்றது. அவர்கள் தங்கள் விரும்பிய வரம் வாங்க நிற்பதும் தவமாகும். விரும்பியதை அடைவதற்கு செய்யக் கூடியதும் தவம் ஆகும் என்று அகிலம் சொல்லும். கலியுகத்திலே இல்லறம் என்பது தவம் என்று அய்யா சொல்லுகிறார். அதன்படி வாழ்ந்து வந்த பெண்கள் மனு நீதிப்படி காலையில் எழுந்து இரவு தூங்க செல்வதுமாக மிகவும் கவனத்தோடு முழுமனதோடு செய்யும் செயல் மிகப் பெரிய தவச் செயல் என்று அய்யா சொல்லுகிறார். இப்படியாக தெச்சணத்தில் வாழ்ந்து வந்த பெண்களுடைய உயர்ந்த தன்மையை சொல்லிக் கொண்டே போகலாம் என்று அய்யா சொல்லி இனி இந்த சோழ தேசத்தில் சாதி முறைகள் எப்படி இருந்தன என்று அய்யா மேலும் வாசகத்தில் சொல்லி வருகின்றார் 

“ஒருவருக் கொருவ ரூழியங்கள் செய்யாமல்
கருதல் சிவன்பேரில் கருத்தா யிருந்தனராம்
செய்யும் வழக்குச் சிவன் பேரி லல்லாது
வையம் வழக்கு வாரா தேயிருந்தார்”

தெச்சணா பூமியில் வாழ்ந்திருந்த மக்கள் தங்களுக்குள் எந்த விதமான ஜாதிய வேறுபாடு பார்க்காமல் வாழ்ந்து வந்திருக்கின்றனர். இதை அய்யா ஒருவருக்கு ஒருவர் ஊழியங்கள் செய்யாமல் என்று குறிப்பிட்டு சொல்கின்றார். அதாவது பலவித சாதி மக்கள் தெச்சணத்தில் வாழ்ந்து வந்தாலும் அவர்கள் இறைவனுக்கு ஊழியங்கள் செய்பவர்களாக மட்டுமே இருந்தார்களே தவிர இன்னவகை சாதிக்காரர்களுக்கு இன்னவகை ஜாதிக் காரர்கள் ஊழியர்கள் செய்ய வேண்டும் என்ற நிலை இல்லாமல் இருந்தார்கள். மக்கள் தங்கள் தங்கள் நிலைமை தப்பிப் போகாமல் அதே நேரத்தில் எல்லோரிடமும் அன்பு பாராட்டி யார் யாருக்கும் அடிமை வேலை செய்யாமல் இறைவனையே சதா காலமும் எண்ணிக் கொண்டு இருந்தார்கள்.

தெச்சணா பூமியில் ஒருவர் மற்றவரோடு சண்டை போட்டார் என்றோ, கருத்து மோதலில் ஈடுபட்டார் என்றோ யாராலும் கூற முடியாது. ஆனால், அவர்களுக்குள்ளும் வழக்கு இருந்தது. அந்த வழக்கு யார் யாரையும் பற்றிய தனிப்பட்ட வழக்கு அல்ல. அந்த வழக்கு இறைவனைப் பற்றியதாக இருந்தது. இறைவனின் புகழைச் சொல்லும் விதமாக இருந்தது. அவரது அவதார லீலைகளைப் பட்டியல் இடும் வண்ணம் இருந்தது. இப்படி அந்த மக்கள் உலக இயல்பு வழக்கு என்று இல்லாமல் சதா காலமும் இறைவனைப் பற்றிய சிந்தையில் அவனைப் போற்றிக் கொண்டும் அவர் புகழ் சொல்லும் விதமாக இருந்தார்கள்

“அடிபணிய வென்று அலைச்சல் மிக செய்யாமல்
குடிபொருந்தி வாழ்ந்து குடியிருந்தா ரம்மானை
சேயினுட ஆட்டுச் செவிகேட் டிருப்பதல்லால்
பேயினுட ஆட்டோர் பூததறியா திருந்தார்”

 

இப்படி மக்கள் ஒருவருக்கு ஒருவர் மற்றவர்களை அடக்கி ஆள வேண்டும் என்ற எண்ணம் சற்றும் இல்லாமல் குடிபொருந்தி வாழ்ந்து வந்தார்கள். அதாவது வேறுபட்ட பல வகையான மக்கள் தெச்சணத்தில் வாழ்ந்து வந்தாலும் அவர்கள் தங்கள் குடிப் பெருமையை நிலை கொண்டு அதில் வாழ்ந்து வந்ததோடு மற்றைய குடிமக்களிடம் அன்பு பாராட்டி ஒற்றுமையோடு வாழ்ந்து வந்தார்கள். 

 அய்யாவின் அவதாரத்திற்கு முன்பு பேய்கள் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருந்தன. மக்களின் உடலில் குடிகொண்டு அவர்களை ஆட வைத்துக் கொண்டு கொடுமை செய்தன. ஆனால், இத் துன்ப நிகழ்வு தெச்சணா பூமியில் சோழ தேசத்தில் வாழ்ந்து வந்த மக்களுக்கு ஏற்படாமல் இருந்தது. ஏனெனில் சோழ தேசத்தின் ஆட்சி சிறப்பாக இறைவனின் அருள் அந்த தேசத்தில் அருள்பாலித்ததால் கெட்ட சக்திகள் அந்த தேசத்தை அணுகாமல் இருந்தது. அந்த தேசத்து மக்கள் குழந்தையை தூங்க வைக்கும் தாலாட்டினை அறிந்திருந்தார்களே அன்றி பேயாட்டம் என்ற ஒன்று பற்றி அறிந்திருக்கவில்லை. 

 

“இந்தப் படிமனுவோர் எல்லா மிருந்துவொரு
விந்துக் கொடிபோல் வீற்றிருந்தா ரம்மானை
“இப்படித் தெய்வ இராச்சிய நீதமும்
மல்ப்படித் தேச மனுவுட நீதமும்
கல்ப்புடன் தேசம் நாடி வாழ்வதைக்
நல்ப்புடன் ஈசர் கண்டு மகிழ்ந்தனர்”

அனைத்து விதமான சிறப்புகளையும் சோழதேசம் கொண்டிருந்தால் அது முத்துபோல் ஒளிவீசும் தேசமாக இருந்தது. அந்த தேசத்தில் மூன்று விதமான நீதங்கள் (மனுநீதம், இராஜ நீதம், தெய்வ நீதம்) இறைவன் கருணையோடு சிறப்பாக நடைபெற்று வந்தன. 

 இப்படி சிறப்பு பெற்று இந்த தேசம் விளங்கி இருப்பது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்திலேயே ஆகும். ஆம் கலியுக தொடக்கத்தில் கலியன் இந்த தேசத்தில் கால் வைக்கும் முன்பாக சோழதேசம் இத்தனைச் சிறப்புகளோடு வேதத்தில் சொல்லிய நீத நெறியோடு ஆட்சியோடு மக்களும் மகிழ்வோடு வாழ்ந்து வந்தார்கள்.

“தேவ ருறையும் திருக்கயிலை தன்வளமை
பாவலர்கள் முன்னே பாடினா ரம்மானை
ஈச ருறையும் இரத்தின கிரிதனிலே
வாசகனுந் தேவர் மறையோரும் வீற்றிருக்க”

இப்படி சோழ தேசத்தின் சிறப்புகளைச் சொல்லி, இனி சிவபெருமான் வீற்றிருக்கக்கூடிய கயிலையின் வளமைகளை அய்யா ஆகமத்தில் சொல்லி வருகின்றார். 

 திருக்கயிலை என்பது தேவர்கள் அமர்ந்திருக்கக் கூடிய இடமாகும். அங்கே சிவபெருமானுக்கு வேண்டிய தொண்டுகளைத் தேவர்கள் செய்து விடுவார்கள். அப்படிப்பட்ட அந்தக் கயிலை ரத்தினங்கள் ஒளிவீசி பிரகாசிப்பது போல பிரகாசித்துக் கொண்டிருந்தது. அதில் வாசவன் என்று சொல்லக்கூடிய தேவேந்திரன் அமர்ந்திருந்தான். அவருடனேயே வேத மறையோர்கள் ஒன்றாக வீற்றிருந்தார்கள். 

சிவகாண்ட அதிகார பத்திரம்

மாடசாமி அய்யா – 8973349046

சூத்திரம்:கடலை யடைத்ததினா உங்கள் கண்மயக்கம் ஆச்சுதப்பா

நான் என்னாலும் பள்ளிகொண்டு இருப்பதைநீ யறியவில்லை

பொருள்:

இந்த மனித உடலில் பதினான்கு உலகங்களும், கயிலையும் பாற்கடலும் அமைக்கப்பட்டாலும் அவற்றை   மாயை மறைத்துள்ளதால் உங்கள் கண்கள் அவற்றை அறியாமல் மயங்குகின்றன.

விளக்கம்:

உடலின் பெருமையை சொல்லும் அய்யா பாற்கடலும் நமது உடலில் சிருஷ்டிக்கப் பட்டுள்ளதாக குறிப்பிடுகிறார். ஆனால் மாயை என்னும் திரை இன்னிலையை அறிய விடாமல் நமது கண்களை மயக்கி இறைவனை வெ‌‌‍ளிப்புற‌மாகத் தேடச் செய்கிறது. இறைவன் நமக்குள் இருப்பதை உணர்ந்து அகத்துள் வழிபாடு செய்யவேண்டும் என்பது கருத்து.

சூத்திரம்:அமிர்தமது தான் கடைந்த அதிசயத்தை சொல்மகனே

பொருள்:

முன்பு தேவர்களுக்காக அமிர்தம் கடைந்த அதிசயத்தை சொல் மகனே

விளக்கம்:பண்டொருநாள் துருவாசர் இந்திரனுக்கு ஓர் முத்து மாலையைப் பரிசளித்தார். இந்திரன் தேவர்களின் தலைவன் கர்வத்தால் முனிவர் அளித்த முத்து மாலையை தனது யானையின் துதிக்கையில் கொடுத்தான். யானை முத்து மாலையை தரையில் எறிந்தது. வெகுண்ட முனிவர் அமிர்தத்துக்கு காரணமான அத்தனைப் பொருளும் கடலில் விழட்டும், லெட்சுமி யின் பார்வை அமராவதியை விட்டு அகலட்டும் என்றார். உடனே முனியின் சாபம் அமராவதியை பீடித்தது.  இந்திர‌ லோகம்விட்டு லெட்சுமியின் பார்வை அகன்றது. தரித்திரம் பீடித்தது. இந்திரன் முதலாய் அத்துனை தேவர்களும் மூப்பு அடைந்து நரைப்பருவம் எய்தினர்‌. அனைவரும் தங்கள் தவறை உணர்ந்து பிரம்ம தேவருடன் நாராயணரைத் தொழுதனர். நாராயணர் பாற்கடலைக் கடையச் சொன்னார். மந்தர மலையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கி தேவர் ஒருபுறமும் அரக்கர் ஒருபுறமுமாய் கடலைக் கடைந்தனர். (தேவர்களால் மட்டும் கடைய முடியாததால் அசுரர்களுக்கும் அமுதம் அளிப்பதாக கூறி அசுரர்களின் உதவியை நாடினர்.) மலை சரிந்து அசுரர்கள் மீது சரிந்தது. நாகம் வலியால் விடத்தை‌ அசுரர்கள் மீது கக்கியது. அது பாற்கடலிலும் விழுந்தது. தேவர்கள் பகவான் விஷ்ணுவை துதிக்க பகவான் ஆமையாக மலையை தனது முதுகில் தாங்கினார். தேவர்கள் தொடர்ந்து கடைந்தனர் முதலில் ஆலகாலம் தோன்றியது அதனை ஈசன் ஏற்றார், பின்பு, முதலில் தவ்வை, பிறகு இலக்குமி தோன்றினார்கள். இலக்குமி திருமாலின் மார்பை விரும்பி ஏற்றால். குதிரை, யானை கற்பக விருட்சம் முதலியவைகள் தோற்ற இறுதியாய் அமுதம் தோன்றியது.

மறைபொருள்:

பாற்கடல் என்பது உள்ளம், மலையும் கயிறும்‌ நாராயண நாமம், தேவரும் அசுரரும் நமது குணங்கள் இவற்றைக் கொண்டு உள்ளத்தைக் கடையும் போது (தியானிக்கும் போது) அசுரர்களாகிய தீமை அழிந்து, அமுதமாகிய இறைநாமத்தின் சுகத்தை அடையலாம்

  சிவகாண்ட அதிகாரப் பத்திரம் தொடரும்..

 தர்மயுக முரசு வாசகர்களுக்கு அன்பான வேண்டுகோள்

 நமது தர்மயுக முரசில் கேள்வி பதில் என்கிற பகுதியில் கேள்வி கேட்க நினைப்பவர்கள் கீழ் கண்ட விலாசத்திற்கு கடிதம் மூலமாக கேட்கலாம் அல்லது கீழ் கண்ட வாட்சப் எண்ணிற்கு டைப் செய்தும் அனுப்பலாம். அதன் விடைகளை உங்கள் கேள்வியோடும் உங்கள் பெயரோடும் நமது தர்மயுக முரசில் பதிவாகும்

 விலாசம்:

அகில உலக அய்யாவழி சேவை அமைப்பு அய்யா வைகுண்டர் வளர்பதி, கைலாசக் கோனார் காம்பவுண்ட்,

வடக்கு மெயின் ரோடு, வள்ளியூர் 627117, திருநெல்வேலி மாவட்டம்

வாட்சப் எண்: 8903201008

சைவ உணவு நெறியே அய்யாவழி

-முத்துக்குமார தங்கவேல் அய்யா 9920619001

“எனக்காகும் பேர்கள் இனம் கேளு மாமுனியே” என கூறி, தனக்கான பிள்ளைகள் எப்படி இருப்பார்கள் என அகிலம் மூலம் அய்யா நமக்கு சொல்கிறார். 

 ஆடு கிடாய் கோழி அறுத்து பலியிடார்கள்“.

 கலியனின் வருகையால் அவனது கண்ணில் சிக்காமல் சென்று கொண்டிருந்த மகாவிஷ்ணுவிடம் கலைக்கோட்டு மாமுனி “அய்யனே, தாங்களே அவனைக் கண்டு ஓடினால் நாங்கள் எப்படி இக்கலியில் இருந்து மீண்டு வரமுடியும்” என்று வினவுகிறார். இறைசக்தியை எல்லாம் வரமாக வாங்கி வந்த கலியனின் பிடியில் இருந்து தப்புவது மிகக் கடினம், அப்படிப்பட்ட கலியுகத்தில் இப்படி இப்படி வாழ்ந்து தனது அருளைப் பெறலாம் என்று வழிவகைகளைக் கூறும் இடத்தில் தான் இந்த உபதேசத்தைக் கலைக்கோட்டு மாமுனிக்கு சொல்வது போல் நமக்குச் சொல்லுகிறார். 

 உலகில் உண்டாக்கிய ஒவ்வொரு ஜீவராசிகளும் இப்படி, இப்படித்தான் வாழவேண்டும், இன்ன இன்ன உணவுகளை உண்ணவேண்டும் என்று வகையிட்ட இறைவன், மனிதனுக்கு மட்டும் நன்மை தீமைகளை ஆராயும் பகுத்தறிவான ஆறறிவு சக்தியையும் கொடுத்து அதன் படி வாழுங்கள் என்று சொல்ல, அதன் அடிப்படையில் உலகம் இயங்குகிறது. உணவு சங்கிலியின் சுழற்சியில் பாம்புக்குத் தவளையையும், பறவைக்குப் பாம்பையும், மானுக்குப் புல்லையும், சிங்கம் புலிக்கு மானையும் உணவாக்கி உலக சமநிலையை உறுதி செய்தான் இறைவன். 

 ஆம், அசைவம் கூடாது என்று பாம்பிடம் கூறியிருந்தால் இன்று இப்புவியில் எங்கு பார்த்தாலும் தவளைகளாகத்தான் இருக்கும். இது படைப்பின் ரகசியம். ஆனால் மனிதப்பிறவி என்பது உலகை சமநிலைப் படுத்துவதற்காகவா? புல்லாகி, பூண்டாகி, மரமாகி, பறவையாகி, விலங்காகி, மனிதனாய் வந்தோம் என்று மாணிக்கவாசகர் கூறுகின்றார். அப்படிப்பட்ட மனிதப் பிறவி உணவு உண்பதற்காகவா? இல்லை, மனித உடலமைப்புத்தான் இவ்வுலகில் மேல் நிலைக்கு உயர உதவி செய்யக்கூடியது, அப்படிப்பட்ட உடலை வாங்கி வந்த ஆன்மாக்கள் பாவங்களைச் சம்பாதிக்கலாமா?

 ஒரு சில சமயத்தவர்கள் தங்களின் வசதிக்காக “இறைவன் ஆட்டையும் மாட்டையும் மனிதனுக்காகவே படைத்திருக்கிறான், அதைச் சாப்பிடுவது நமது கடமை” என்று சப்பைக் கட்டுவார்கள். இவர்கள் உணவு சுழற்சிக்காக படைக்கப் பட்டார்களோ! என்றும் எண்ணத் தோன்றுகிறது. ஆம், ஒரு சான்றோன்/ யோகி/ஞானி வாழ்வதற்கு வேண்டி அவன் இருக்கும் இடத்தில் அவனுக்காகவே பல ஜீவராசிகள் வாழ்ந்து கொண்டிருக்குமாம், ஞானி ஒன்றும் செய்யமாட்டான், அவன் சார்பாக உலக சமநிலை காரியங்களை மற்ற உயிரினங்கள் செய்யுமாம். அப்படிப்பட்ட உயிரினங்களாகவே நாம் அசைவம் உண்ணும் மனிதக் கூட்டத்தை எண்ண வேண்டி உள்ளது. 

 “கொன்ற பாவம் தின்றால் போச்சு” – செய்த பாவங்கள் அதற்குரிய தண்டனைகளை அனுபவித்தால் மட்டுமே போகும் என்பதை கூறும் இப்பழமொழியையும் தங்களுக்கு சாதகமாகக் கூற ஆரம்பித்து விட்டார்கள். அசைவம் உண்ணும் ஜீவராசிகள் புத்தியிலும், செயலிலும் அமைதியின்றி சஞ்சலத்தோடு திரிவதையும், சைவ உண்ணிகளான ஆடு, மாடு, யானை, மான் போன்றவை செயலில் அமைதியாகவும், சாந்தமாகவும், பலமாகவும் உள்ளதை அறியலாம். 

 அன்போரே! நீங்கள் பகுத்தறிவுள்ள மனித இனம் என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும் எனில் அசைவத்தைத் தவிருங்கள், உங்கள் உடலை இறைவன் வாசம் கொள்ளும் ஆலயமாய் மாற்றுங்கள். 

 அய்யா உண்டு

திருக்கலியாண இகனை

– பா. கவிதா அம்மா 009609805601

சென்ற மாத தொடர்ச்சி….

அன்புடையீர் அய்யா வைகுண்ட பரம்பொருள் தெச்சணாபதி பூபனாக எழுந்தருளி மக்களுக்கு ஞானத்தை உணர்த்தி ஜீவாத்மா பரமாத்மாவோடு ஐக்கியமாகும் ஜீவபிரம்ம ஐக்கியத்தை – ஆத்ம விவாகத்தை ஓர் இகனையாக நடத்திக் காட்டியதே திருக்கல்யாணத்தின் தத்துவம். இதன் பொருள் ஆசைகளை துறந்தவர்கள் எம்பெருமான் பரம்பொருளோடு சேர்ந்தனர் என்பதாம். பரமாத்மாவை அடைவதற்கு உள்ள நிறை நிலையே கல்யாண பந்தம். இது ஆன்மா பரமாத்மாவிடம் ஐக்கியமாவதைத் தான் குறிக்கிறது. 

 ஜீவாத்மா என்பது பெண் பரமாத்மா என்பது ஆண் – புருஷன். ஜீவாத்மா ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலக் கட்டறுத்து உயிர்களை பேணும் பெண்மை அழகு பொலியும் நிலையில் பரமபுருஷனாகிய இறைவனிடம் ஐக்கியப்படும் பொழுது அது ஒளி நிலை பெற்று தன் அழகு அழியாமல் இயல்பு நிலையில் இறைவனோடு இருக்கிறது. எனவே தான் இது கோலமணம் என்றும் மாமணம் என்றும் கடிமணம் என்றும் அருமை மணம் என்றும் கூறப்படுகிறது. இதுவே உண்மையான மௌனி கல்யாணம். 

 இப்படி “குடில் அதுக்கு போய் அமுது குடித்து வாரும்” என அம்மைமார்களுக்கு விடை அருளிய எம்பெருமான், வருணன் வாயு முதலான பஞ்ச பூத மகாசக்திகளுக்கும் மற்றும் வானோர்க்கும் அழைப்பு விடுக்க அவர்கள் மங்கல இசை முழங்கிய வண்ணம் திருமண விழாவுக்கு வந்து சேர்ந்தனர். வெள்ளிக்கிழமை அதிகாலை சூரியனும் உதயமானது. ஈசர் மாதுவான உமாதேவியும், துதிமுகனான கணபதியும், நான்முகனான பிரம்ம தேவனும், தொல்வி மாதுவான ஆதிசக்தியும், கூன்றிரிஷிகளான அனுபூதிமார்களும், தேவரிஷியான பிரகஸ்பதியும் (வியாழ பகவான்), வேத வித்தகர்களும், கலைவாணியும், ஞானாம்பிகையான பகவதி தேவியும் ஆக, தேவ மாதர்கள் அனைவரும் மற்றுமுள்ள வானவர்களும் நாராயணருக்கும் சப்த மாதர்களுக்கும் திருமணமாகிறது நாமும் போய் அந்த நிகழ்ச்சியை கண்டு மகிழ்வோம் என்று வந்தனர். ஏனெனில் திருக்கல்யாணம் ஞானவான்களுக்கெல்லாம் பேரானந்தம் அளிப்பதாகும். 

 பஞ்சபூத மகாசக்திக ளெல்லாம் சேர்ந்து நமனாதி திக்குப்பாலர்களான எமதர்மன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன், இந்திரன், அக்கினி, ஆகிய உலகைக் காக்கும் மகாசக்திகளைத் தூண்களாகவும், கால ஓட்டத்திற்குக் காரணமான திதிகளை வளைபரப்பாகவும், சமயங்களைக் கூரையாகவும், வேதங்களை மேற்கட்டியாகவும் கொண்டு பந்தல் விதானமிட்டனர். அனைத்துச் சீவர்களுக்கும் ஒரே சொந்தமான சிவமாகிய பரிபூரண ஞானமே மணமேடையாக அமைக்கப்பட்டது. 

 இதனால் உணர்த்தப் படுவதாவது இந்தக் கல்யாணத்திற்கும் லெளகீகத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதாம். அந்தமுறை சூரியனே – ஞானச் சுடரே சுயம்பிரகாச அறிவு வெளிச்சமான திருவிளக்காகவும் நட்சத்திரங்கள் அலங்கார ஒளிவிளக்காகவும், நான்முகனாகிய பிரம்மதேவர் முகூர்த்தத்திற்கான வேத முறை கூற, தெய்வலோகத்துப் பெண்கள் குரவையிட, நமனும் மாற என்றால் பிறப்பு இறப்பு என்னும் தாழ்வு இல்லாமல் இருக்க சிறப்பு பொருந்திய மாமடவார்கள் வாழ்த்துக் கூற, தேவர்களெல்லாம் வானத்தில் டம்மானம் முழங்க அதாவது ஓம்கார நாததொனி எங்கும் வியாபித்து நிற்க, மலர்மாரி, சலமாரி வானவர்கள் துவ, தரணிதனில் நாரணர்க்கும் கருணையே உருவான மேன்முகில் மாதருக்கும் மணவிழா நடக்கிறது என மேலோகப் பந்தல் விண்ணோர் இட்டனர். 

 இத்தனையும் வெகு சிறப்பாக அமைத்துப் பந்தல் அலங்காரமிட்டு நிறைவு செய்த மகாதேவர்களான பஞ்சபூத மகாசக்திகள் எல்லாம் அய்யாவின் திருவடி தொழுது பணிந்து பயபக்தியுடன் கைகூப்பிய வண்ணம், அய்யனே! பிறப்பித்த பெம்மானே! அனைத்துயிர்களுக்கும் அமுதளித்துக் காக்கும் கருணாகரனே! உமது திரு அருள் கருணையால் இத்தனைச் சிறப்பாக முகூர்த்தங்கள் அமைத்தோம். இனியும் நாங்கள் என்னென்ன செய்ய வேண்டும் விடை அருளும் என வேண்டி நின்றனர். 

 அவர்களின் வேண்டுதலைக் கேட்ட எம்பெருமான் மிகுந்த மகிழ்ச்சியோடு இனி நீங்கள் எல்லோரும் அமைதியாக இதமாக மக்கள் கீதம் பாடி நில்லுங்கள் என்றார். 

 மேற்கூறிய அனைத்தும் இயற்கை எழில் கூட்டமேயன்றி செயற்கையாக எதுவும் இல்லை. 

 எப்போதும் எதையும் தம் எண்ணத்தினாலேயே முடிப்பதற்கு அடிமுடியடில்லாத ஆற்றலுடைய எம்பெருமானான தெய்வம் மடவார்கள் வருக எனச் சிந்தித்தார். 

 “சிந்தித்த உடனே அந்தத் தேன்மொழி மாதர் எல்லாம் 

வந்தவர் அடியைப் போற்றி வணங்கியே நாங்கள் பெற்ற 

சந்ததி ஏழுபேரும் தன்னுடைய கிளைகள் ஒக்க

தந்துநல் புவியை ஆளத் தருவீர் என் தலைவா என்றார்” 

 இப்படி எம்பெருமான் நினைத்தவுடன் சப்தமாதர்கள் எல்லோரும் வந்து எம்பெருமானின் பாதக் கமலத்தைப் போற்றி வணங்கி சந்ததி ஏழுபேரும் அவர்கள் சந்ததிகள் ஒக்க தந்து நல்ல யுகமாகிய தர்மயுகத்தை ஆள வைப்பீர் என்னுடைய தலைவா என்று வேண்டி நின்றார்கள். 

 அதன்பிறகு என்ன ஆயிற்று என்பதை அடுத்த இதழில் பார்ப்போம். 

அய்யா சொன்ன முன் அறிவிப்புகள் எவை?

– S. அன்ன செல்வம் அம்மா 9443622222

சென்ற மாத தொடர்ச்சி….

அய்யா வைகுண்டர் தர்மம் தோன்றுவதற்கு முன் அறிவிப்பாக இவ்வுலகில் என்னென்ன சம்பவங்கள் நடக்கும் என்று கூறுகின்றார். அய்யா சொன்ன பத்து முக்கியமான அடையாளங்களில் 4 அடையாளங்களை இதற்கு முன்புள்ள தொடர்களில் தெரிந்துகொண்டோம். ஐந்தாவது அடையாளமாக சம்மாரியால் அழிவு என்று கூறுகின்றார். அதை பற்றி தெரிந்து கொள்வோம். 

 சம்மாரியால் அழிவு: சம்பந்தமில்லாத அதிக மழையால் அழிவு என்று பொருள் படும். காலநிலை மாறி பெய்கின்ற மழை பருவகாலங்களில் பெய்யாமல் வெயில் காலத்தில் மழையும் மழை காலத்தில் வெயிலும் என நிலை நிலை மக்களுக்குப் பயன்படாமல் அழிவை கொடுக்கும் பெரியோர்கள் சொல்வார்கள் உப்பு விற்க சென்றால் மழை பெய்கிறது, பஞ்சு விற்க சென்றால் காற்று அடிக்கிறது, கம்பளி விற்க சென்றால் வெயில் அடிக்கிறது, கூழ் விற்க சென்றால் குளிர் அடிக்கிறது நேரம் சரியில்லை இது தான் விதி என்பார்கள். இது போன்றுதான் இந்தப் பஞ்ச பூதங்களில் ஒன்றாகிய மழை, பருவகாலத்தில் பெய்து மக்களுக்குப் பலனைக் கொடுப்பதை விட துன்பத்தையும் துயரத்தையும் கொடுக்கும். விளைந்த பயிரை அறுவடை செய்து பலனை அனுபவிப்பதற்குள் மழை வந்து பயிரை அழித்து விடும். 

 மேலும், கொடிய தொற்று நோய்களை உருவாக்கும் மழை நீர் விஷமாகக் மாறி கொண்டிருக்கிறது என்று சொல்கிறார்கள். மழையால் நன்மை மட்டுமே நடந்தது என்ற காலம் மாறி மழையால் தீமையான காரியங்கள் அதிகம் காணப்படுகிறது. பொதுவாக, மழையால் நன்மை தீமை இரண்டும் நடுநிலையாக இருக்கும். ஆனால் கலியுகத்தில் காரணமில்லாமல் மழைகள் பொழிகிறது. சமீபத்தில் நெல்லை மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை பெய்தது. நம்நாடு மிதவெப்ப நாடு இதற்கும் ஆலங்கட்டி மழைக்கும் சம்பந்தம் இல்லை. ஆனால், அய்யா சொன்ன வார்த்தைகள் நிறைவேறும் படியாக இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன. சில இடங்களில் அமிலத்தன்மை உள்ள மழை பெய்கிறது என்று சொல்கிறார்கள். சில இடங்களில் மீன் மழை பெய்கிறது, சில இடங்களில் இடி மின்னல் மழை பெய்கிறது, மின்சாரத்தைத் தாக்குகிறது. இப்படி நடக்கும் காலம் தர்மயுகம் தோன்றுவற்கு முன் நடக்கும். இது உங்களுக்கு முன் அறிவிப்பு என்கிறார். 

 காளி வெள்ளத்தால் அழிவு:  காளி என்பவள் கொடூரமான ஈரத் தன்மை வாய்ந்தவள் என்று பொருள். தன்னுடைய அசுர பலத்தால் அரக்கர்களை அழித்தவள் காளி. எனவே, கலியுகத்தை அழிக்க வந்த வெள்ளத்திற்குப் பெயர் காளி வெள்ளம். காளி வெள்ளம் என்பது கட்டுக்கு அடங்காதது. கலியுகத்தை முடிக்க அய்யாவால் ஏவப்பட்ட மழை வெள்ளம். அதில் நாம் தப்பித்துக் கொள்ள வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் என்று அய்யா வைகுண்டர் நமக்குக் கூறுகிறார். “காளி வெள்ளம் வருதப்பா ஒரு கப்பல் செய்து வைத்திடுங்கோ” என்று அருள் நூலில் கூறுகின்றார். அது என்ன கப்பல் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். 

 அய்யா சொன்ன ஞான உபதேசங்களைக் கடைபிடித்து நடப்பவர்களுக்கு மரணமில்லா நித்திய வாழ்க்கை உண்டு. அதுவே, தர்மயுக வாழ்வு. அதைத்தான் அய்யா கப்பல் என்கிறார். ஞானக் கப்பல். இந்தக் கப்பலைத் தண்ணீரால் அழிக்க முடியாது. அக்னியால் எரிக்க முடியாது. காற்றால் தவிர்க்க முடியாது. பஞ்சபூத சக்திகள் எதுவும் செய்ய முடியாது. ஞானக்கப்பல் என்பது இறை பயணத்திற்கு உரிய கப்பல். காளி வெள்ளத்தால் நெருங்கவே முடியாது என்பதாகும். உயிரை சிவமாக்கி, உடலைக் கப்பல் ஆக்கி, தர்மத்தை நோக்கி பயணிப்போம். 

 வள்ளியாற்றுக்கு மேற்கு வாரியால் தானழியும்

கோட்டாறு அங்கே கொள்ளையினால் அழிப்போம்

சுசீந்திரம் ஆறுடைத்து சுத்தகதி ஆகுதங்கே

ஆறுடைத்து தேரும் அன்புடனே தெற்கேவர

தாமரைகுளம் பதியும் தண்ணீராய் போகுமங்கே

சுழிக்கரையைத் தான் அழித்து கடற்கரையில் முளித்து

 என்று காளி வெள்ளத்தின் அழிவு விவரம் தெள்ளத்தெளிவாக அருள்நூலில் சொல்லப்பட்டுள்ளது. இந்த உண்மைகளை எல்லாம் நாம் உணர்ந்து ஞானமாக செயல்பட்டோம் என்றால், தர்மத்தின் வழியில் நடந்தோம் என்றால் “தர்மம் தலைகாக்கும்” என்பது போல் தப்பித்துக் கொள்வோம். தர்மயுக வாழ்வு பெறுவோம். “மாரி வெள்ளம் அழிக்குதடா மாயாண்டி சொல்கிறேன்” என்கிறார் மாயாதி சூட்சனாகிய மாயப்பெருமாள் எல்லா விவரங்களையும் நமக்குச் சொல்லி விட்டார். இதில் ஏதுவினை வந்தாலும் அவர்மேல் குற்றம் இல்லை. நன்மையோ தீமையோ அதற்குப் பொறுப்பு நாமே என்பதை உணர்ந்து கருத்தோடும் கண்ணியத்தோடும் வாழ்வோமாக 

                                                 …… மீண்டும் தொடரும்

அய்யா உண்டு

 அன்பான வாசகப் பெருமக்களுக்கு வணக்கம்: 

 கடந்த 28/5/2022 அன்று நமது அகில உலக அய்யாவழி சேவை அமைப்பின் முப்பெரும் விழா (அமைப்பு ஆண்டு விழா, அறப்பாடசாலை ஆண்டு விழா, தர்மயுகமுரசு ஆண்டு விழா) மிகச்சிறப்பாக உடையப்பன்குடியிப்பு அய்யா வைகுண்ட திருப்பதியில் வைத்து சிறப்பாக நடைபெற்றது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறோம்

 அய்யா வைகுண்ட பரம்பொருளுக்கு நன்றி

அன்பே அய்யா 

– ஹரி வெங்கடேஷ் அய்யா 8508518505

அன்பு மலர் எடுத்து அனுதினமும் பூசை செய்வாய் 

 இறைவனிடம் நாம் செலுத்தும் அன்புதான் பக்தி என்று அழைக்கப்படுகிறது. அய்யாவிடம் நாம் அன்பு செலுத்துகின்றோமா? செலுத்துகின்றோம் என்றால் எந்த அளவுக்கு? அன்பு செலுத்துவதின் காரணம் என்ன?  நம்மில் பலர் நான் அய்யாவிடம் அந்தப் பொருள் கேட்டேன் தந்தார் இந்த இன்னல் நீங்க வேண்டினேன், செய்தார் என்று உலகியல் நிகழ்வுகளை நினைவு படுத்துவோம் …. இப்படி அன்பு செலுத்துவது தவறு இல்லை. ஆனால், இந்த, நன்றி மறவாத அன்பு அய்யாவிடம் மட்டும் இல்லை.  யார் நமக்கு உதவி செய்தாலும் வரும். ஆனால், இந்த அன்பு நிரந்தரமானது இல்லை. நாளைக்கே நாம் வேண்டியது நமக்குக் கிடைக்காவிட்டால் அய்யா மீது நமக்கு இருந்த அன்பு வெறுப்பாகவும் மாறி விட வாய்ப்பு உள்ளது. இப்படிப் பட்ட நிலையில் நாம் இருந்தால் நம்மால் எப்படி “அன்பு மலர் எடுத்து அனுதினமும் பூஜை செய்ய முடியும்”? பெரும்பாலான மக்கள் இறைவனை வேண்டுவதே ஏதேனும் அழியக் கூடிய உலகியல் விருப்பங்கள் நிறைவேறவே, இவைகளை வேண்டுவது தவறு இல்லை. நாம் உலகில் நலமாய் வாழ இந்த உலகியல் பொருட்கள் அவசியமானது. ஆனால் நாம் அய்யாவிடம் வேண்டும் போது, இந்த, அற்ப உலகியல் பொருட்களில் வைத்திருக்கும் அன்பு கூட, நம் தந்தை அய்யா மீது வைப்பதில்லை. அதனால்தான், அய்யாவை வணங்க சென்று உலக சொத்து சுகங்களான பொய்ப் பொருளையே லட்சியமாக வேண்டி வரும் நாம் மெய்ப் பொருளாகிய அய்யாவை அடைவதை லட்சியமாக நினைக்க மறந்து விடுகிறோம்.  அய்யாவழி காரர்களின் லட்சியம்(குறிக்கோள்) உலகியல் பொருட்களை அடைவதாய் இல்லாமல் பரமாத்மாவை அடைவதாகவே இருக்க வேண்டும். ஆகவேதான், அய்யா உன் லட்சியம் உடலுக்கு வெளியே இருக்கும் உலகியல் பொருட்கள் என்று நினைக்காதே. “உடற்குள் குறியாய் (உயிராகிய பரமாத்மாவை லட்சியமாய்) ஒத்து மிக வாழும்” என்றார்.

 சொத்து ஆஸ்திகளை சேர்க்கக் கூடாது என்பது இதன் பொருள் அல்ல. சொத்து ஆஸ்தி வஸ்துகளைச் சேர்ப்பது மட்டுமே உலகின் லட்சியம் என்ற எண்ணம் ஏற்படக் கூடாது என்பதே இதன் பொருள்.  சொத்து ஆஸ்தி வஸ்துகளைச் “சுகம்” என்று எண்ணக் கூடாது என்பதே இதன் பொருள். ஆகவே, இப்பொருட்களுக்கு நம் மனம் அடிமை ஆகி விடாமல் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.  இவை அற்பமானவை. அழியக்கூடியவை.  மனிதன் உலகியல் பொருட்கள் மீது மட்டுமே அன்பு செலுத்தி அவைகளை மட்டுமே நாடிச் சென்றால் இறைவன் மீது எப்படி நமக்கு அன்பு ஏற்படும்.  வாழும் காலம் முழுவதும் நாம் நமது அன்பு எனும் உணர்வை இந்த அற்ப பொருட்களுக்கு அர்ப்பணித்து விட்டால் நாம் அய்யாவிடம் அன்பு செலுத்த எப்படி இயலும்?  

 கிருஷ்ண பரமாத்மா துவாபராயுகத்தில் துரியோதனன் குற்றுயிரில் கிடந்த சமயம், துரியோதனனிடம் கலியுகத்திலே என் பேரில் நீங்கா அன்பு உனக்கு ஏற்பட்டு தன்பேதம் அறிய உனக்கு ஒரு சாத்திரம் தருவேன் அப்போதாவது என் மீது அன்பு வைத்து தன்னை அறிய முற்படு என்று அவனுக்கு உணர்த்தினார். அப்படி அவர் அந்த யுகத்தில் அறிவித்து அவர் மீது அன்பு நீங்காமல் இருக்க நமக்கு இந்தக் கலியுகத்தில் தந்த சாத்திரம்தான் அகிலத்திரட்டு அம்மானை. ஆகவே, அவர் மீது நமக்கு நீங்கா அன்பு ஏற்பட ஒவ்வொரு நாளும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அகிலத்திரட்டு அம்மானையைப் படித்து அவரைப் பற்றிய அறிவை அடைந்து அவர் மீது நீங்கா அன்பை (பக்தியை) செலுத்துவோம். 

 நாம் அய்யா உண்டு என்று சொல்வதன் காரணமே இவ்வுலகில் உண்டு என்று சொல்ல தகுதி படைத்த பொருள் ஏதாவது இருக்கிறதா என்று எண்ணிப் பார்க்கும் போது அய்யா ஒருவரே உண்டு என்று சொல்ல தகுதி படைத்த பொருள் என்பது புரியும். மீதமுள்ள பொருட்கள் இன்று இருக்கும் நாளை இருக்காது. அவைகளை எல்லாக் காலத்திலும் உண்டு என்று சொல்ல முடியாது. அதை நினைவு படுத்தவே நாம் அய்யா உண்டு என்கிறோம். ஆகவே நாம் நம் மாயவரை நெஞ்சில் மறவாமல் எப்போதும் வைத்து வாழக் கற்றுக் கொள்வோம்…

 “காரண தெய்வமென்று எனக்குக் கடன் செலுத்த யாருமில்லை”

-அருள்நூல்

அய்யாஉண்டு

 அன்பான வாசகப் பெருமக்களே:

 அய்யா வைகுண்ட பரம்பொருளால் நமது அகில உலக அய்யாவழி சேவை அமைப்பு ஆரம்பிக்கப் பட்ட நாள் 8/6/2015. 

 ஏழு ஆண்டுகளைக் கடந்து எட்டாம் வருடத்தில் நம்மை அழைத்துச் செல்லும் அய்யா வைகுண்ட தயாபரனுக்கு நன்றி சொல்லி நமது அமைப்பின் கட்டமைப்பை விரிவாக்கியும் செயல் பாட்டை துரிதபடுத்தியும் தாரும் அய்யா என்று வேண்டுவோம்

 மேலும் அய்யாவே நீர் வகுத்துத் தந்த வழிபாட்டில் நாங்கள் சற்றும் பிசகாமல் நடக்க எங்களை வழிநடத்தும் அய்யா என்று வேண்டி செயல் படுவோம் தர்மயுக வாழ்வு பெறுவோம்.

 மேலும் அன்பானவர்களே:  அமைப்பில் இணைந்து பணியாற்ற விரும்பும் அன்பர்கள் தங்களை இணைத்துக் கொள்ளுங்கள்

 அய்யா உண்டு

எண்ணங்கள் மாறட்டும் 

      – அ. ஐவி அம்மா, திருவண்ணாமலை, 9444741707

கலி மாய்கைக்குள் அகப்பட்டு நிலையில்லாத வாழ்வை நிலையானதாகக் கருதி போராடிக் கொண்டிருக்கிறோம். இப்போராட்டத்தில் சில வேளைகளில் வெற்றி பெறுகின்றோம். பல வேளைகளில் தோல்வி அடைகின்றோம். வெற்றியைக் கொண்டாடும் நாம் தோல்வியைக் கண்டு சோர்ந்து போவதோடு மட்டுமல்லாமல் தோல்விக்குப் பிறரைக் காரணம் காட்டுகின்றோம். சில சமயம் விதியின் மீது பழி போடுகின்றோம். 

 இறை சக்தியால் மனிதன் எல்லாக் காரியங்களையும் செய்கின்றான். அதேவேளையில் அவரவர் செய்கின்ற வினைகளுக்கு ஏற்ப பலன்களை அவர்களுக்கு அளிக்கின்றார். அதாவது இறைவன் ஒருவருடைய பாவ புண்ணிய பலன்களை ஏற்பதில்லை. இதனைக் கணியன் பூங்குன்றனார் 

 “தீதும் நன்றும் பிறர் தர வாரா”

என்கிறார். திருவள்ளுவர் 

 “பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா 

பிற்பகல் தாமே வரும்” என்கிறார் 

 எனவே எண்ணும் எண்ணங்கள், சொல்லும் சொற்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் நன்மை அளிக்கக் கூடியதாக இருக்கும் படி நடக்க முயற்சி செய்வோம். அய்யா இதனை, 

 “அவரவர் தேடுமுதல் அவரவர் வைத்து ஆண்டிடுங்கோ” என உரைப்பதன் மூலம் உணரலாம் 

 அய்யா உண்டு

அகில விடை

  1. பரம்பொருள்
  2. அம்மை மகாலஷ்
  3.  4448
  4. 14 லோகங்க
  5. சான்றோர்கள் 

அய்யா உண்டு

பிறப்பு மறுபிறப்பு

           – ரா. கோபாலகிருஷ்ணன் அய்யா 7200031169

பிறப்பும் இறப்பும் உயிரினங்களின் விருப்பப்படி நடப்பது இல்லை.  காரணம் அவை நம்மால் நிச்சயிக்கப்படுவதில்லை. அறுவை சிகிச்சையால் பிறக்கும் குழந்தையும் தற்கொலை பண்ணிக்கொண்டு உயிர்துறப்போரும் கூட இந்த விதிக்குள் அடக்கம். ஆனால் விதியின் படி வாழும் நாமே நமது மறுபிறப்பிற்கு நாம் அறிந்தோ அறியாமலோ காரணமாகிறோம். 

 மறுபிறப்பு பற்றி பல்வேறு கருத்துகள் பல்வேறு தரப்பினரிடையே நிலவுகின்றன. சிலர் நம்புவதில்லை ஏற்றுக்கொள்வதுமில்லை பலர் நம்புகிறார்கள். பிறப்பு எவ்வாறு நிச்சயிக்கப்படுகிறது. மறுபிறப்பு யாருக்கு எவ்வாறு எந்த அடிப்படையில் தொடர்கிறது?  கலியுகத்தின் கடைசி வேதமான அகிலத்திரட்டு அம்மானை இது குறித்து என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்போம். 

 நாராயணர் அருளால் அரிகோபாலன் சீடர் எழுதிய அகிலத்திரட்டு அம்மானை பிரபஞ்சத்தின் யுக சுழற்சியை 

நீடிய யுகம், சதுர யுகம், நெடிய யுகம், கிரேதா யுகம், திரேதா யுகம், துவாபரயுகம், கலியுகம் மற்றும் மலரவிருக்கும் தர்மயுகம் என எட்டு யுகங்களாகப் பிரிக்கிறது.  

 பரப்பிரம்மம் நிலையானது என்றும் மாறாதது. ஆனால் தனக்குள்ளே மாற்றங்களோடு தொடர்ந்து இயற்கையான சுழற்சிகளோடு இயங்கிக் கொண்டிருப்பது. ஒரு விதை மரமாகும்போது மண், தண்ணீர், வெப்பம், காற்றோடு சேர்ந்து மரமாகிறது. அதே மரம் மக்கிப்போகும் போது மரம் மீண்டும் மண்ணாகிறது. 

 நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் எனப் பஞ்ச பூதங்களால் இயக்கப்படும் மனிதனுக்கும் ஏனைய உயிர்களுக்கும் இதேநிலைதான். 

 நீடிய யுகம் முதல் கலியுகம் வரையில் நல்லோரைக்காக்கும் பொருட்டு நாராயணப் பரம்பொருள் யுகந்தோறும் அவதரித்து அசுரர்களை வதைத்து யுகதர்மத்தை நிலைநாட்டுகிறார். 

ஒவ்வொரு யுகத்திலும் பிறவி செய்யப்பட்ட அசுரர்கள் இறைவனை உணராமல், மதிக்காமல், நல்வழியில் வாழாமல் நல்லோரைத் துன்புறுத்தி கொடுமைகள் புரிந்து மீண்டும் மீண்டும் அடுத்தடுத்த யுகங்களில் பிறவி செய்யப்படுகிறார்கள். 

 ஒவ்வொரு பிறவியிலும் நாம் செய்யும் புண்ணியங்களும், பாவங்களும், தவங்களும், வரங்களும், சாபங்களும் அடுத்தப் பிறவியை நிர்ணயிக்கின்றன. அசுரர்கள், மனிதர்கள், தேவர்கள், முனிவர்கள், ரிஷிகள் யாவராயினும் அதுவே நியதியாகிறது. அகிலத்திரட்டு அம்மானையின்படி ஏழுயுகங்களிலும் வரம்பெற்று வாழ்ந்த அசுரர்களுக்குத் தாங்கள் அறிந்தே செய்த தவறுகளைத் திருத்திக்கொள்வதற்கு ஓர் அரிய வாய்ப்பாக அடுத்தப் பிறவி இறைவனால் வழங்கப்படுகிறது. யுகந்தோறும் பிறவி செய்யப்பட்டு தர்மத்தைத் தொடர்ந்து மீறியதால் அரக்கர்கள் நாராயணரால் வதைக்கப்பட்டனர். 

 நீடிய யுகத்தில் மாயோன் குறோணியை ஆறு துண்டுகளாக வெட்டி வதைத்தார். சதுர யுகத்தில் குண்டோமசாலியை வதைத்தார். அடுத்து வந்த நெடிய யுகத்தில் தில்லை மல்லாலன், மல்லோசிவாகனன் என இரு அசுரர்களை வென்றார். நான்காவது யுகமான கிரேதா யுகத்தில் சிங்கமுகாசுரன், சூரபற்பன் இருவரைக் கந்தனாக அவதரித்து சக்தி வேலால் கொன்றார். அதே யுகத்தில் இரணியனை நரசிம்மமாகி விரல் நகங்களால் கீறிக் கொன்றார். திரேதா யுகத்தில் இராவணன், கும்பகர்ணன் இருவரும் இராமசரத்தால் வீழ்த்தப்பட்டனர். ஆறாவது யுகமான துவாபரயுகத்தில் கம்சனைக் குடலைப்பிடுங்கிக் கொன்றார் கண்ணன். துரியோதனனைப் பீமசேனன் மூலம் வதைத்தார். நடக்கும் ஏழாவது யுகமான கலியுகத்தில் ஆயுதங்களின்றி கலி மாயையை வைகுண்டராக இருந்து ஒடுக்குகிறார். 

 சிவபெருமான் கயிலையில் கனலெழுப்பி ஒரு வேள்வி வளர்த்தார். வேள்வியில் அசுரன் குறோணி பிறந்தான்.  தேவர்கள் குறோணியின் ரேகைகளைப்பார்த்து அவன் அண்டர் கயிலை விழுங்க முற்பட்டு ஆயனால் சாவான். அவனைக்கண்ட தோசம் நீங்க நாம் ஏழ்பிறவி பிறக்க நேரிடும் என்று தேவர்கள் வாயிலாகவே அவர்களது விதியை இறைவன் பேச வைத்தார். ஏழு யுகங்களிலும் தேவர்கள் பிறந்து அசுரர்களால் கொடுமைகளை அனுபவித்து மகாவிஷ்ணுவோடு துணை நின்று அரக்கர்களை அழிக்க உதவினர். 

 திரேதாயுகத்தில் வரங்கள் பெற்ற வல்லவனாயினும் வாலி செய்த பாவம் அவனுக்கு இராமசரத்தால் இறப்பினைக் கொடுத்தது. இறக்கும் தறுவாயில் வாலியானவன் தனது தவறுகளை உணர்ந்து மனம் திருந்தியதால் இராமபிரானருளால் துவாபர யுகத்தில் கர்ணனாக பிறக்க வழிவகுத்தது. கர்ணனாக வாழ்ந்து பேரும் புகழோடும் ஶ்ரீகிருஷ்ணன் அருளோடும் நற்கதியடைந்தான். 

 கயிலாசத்தில் வாழ்ந்திருந்த சுகசீலமாமுனிவரும் துசுவீசு முனிவரும் மண்ணில் பிறக்க ஆசைகொண்டு தவம் புரிந்தனர். தவத்தின் பலனாக அவர்கள் இருவரும் தசரதனும் தினகரனும் என திரேதாயுகத்தில் பிறக்க நாராயணர் தமது இராம அவதாரத்திற்கு பயன்படுத்திக் கொண்டார். 

சக்கரவர்த்தி தசரதற்கு இராமன் மகனாக பிறக்கும் பாக்கியம் கிடைத்தது. மன்னன் தினகரனுக்கு சீதாலட்சுமியை மகளாக வளர்க்கும் புண்ணியம் கிடைத்தது. இருவரும் சம்பந்தம் கண்டு சந்தோசம் கொண்டார்கள். 

 தேவலோகத்து கன்னியர்களான தேவகியும் ரோகிணியும் மாயவனின் குழந்தை வேசசூழ்ச்சியால் மனம்குழறியதால் அவர்கள் இருவரும்

துவாபர மண்ணில் பிறக்க சிவ பெருமானால் சபிக்கப்பட்டனர்.  ஆனால் அதுவே தேவகிக்குக் கீதையருளிய ஶ்ரீகிருஷ்ணனைக் கருவில்சுமந்து மகவாக ஈன்றெடுக்கும் மாபெரும் பாக்கியமானது. 

 திரேதாயுகத்தி்ல் விபீசணன் மகளாகிய திரிசடை அன்னை சீதாலட்சுமிக்கு அசோகவனத்தில் செய்தப் பணிவிடைகளுக்கு பலனாக துவாபரயுகத்தில் திரௌபதியாக பிறவி செய்யப்பட்டாள். பஞ்சபாண்டவர்க்கு மனைவியுமானாள். 

 திரேதாயுகத்தி்ன் லட்சுமணன், பரதன், சத்ருகன், விபீசணனும் சாம்பவனும் ஒழுக்கமான தவ வாழ்க்கையால் துவாபரயுகத்தில் பஞ்சபாண்டவர்களாக பிறந்து மீண்டும் கலியுகத்தில் வைகுண்டரின் சீடர்களாக வாழும் பாக்கியங்களைப் பெற்றனர். 

 திரேதாயுகத்தில் கும்பகர்ணன் இராவணனுக்குத் தம்பியாக பிறந்து அவனோடு கூடி செய்த பாவங்களின் விளைவாக இராமசரத்தால் வதைக்கப்பட்டு அவன் துவாபர யுகத்தில் கம்சனாகப் பிறக்க நேர்ந்தது. அப்போதும் மனம் திருந்தாத காரணத்தினால் கண்ணனது கைகளால் வதம் செய்யப்பட்டு தீநரகம் சேர்ந்தான். 

 துவாபரயுகம் முடிந்து கலியனைப் பிறவி செய்யும் சமயத்தில் சிவபெருமான் திருமால் எங்கேயிருக்கிறார் என்று கேட்டபோது அலட்சியமாக ஏழுலோகத்தாரும் மகாவிஷ்ணு பூலோகத்தில் மாண்டு கிடக்கிறார் என்று சிவ சங்கத்தில் பொய்கூறியதால், அவர்கள் அனைவரும் கலியுகத்தில் ஏழினமாய் சான்றோர்களாய் பிறந்து அநீத கலியால் கொடுமைகள் அனுபவிக்க நேர்ந்தது. கலிமாயைக்குள் கட்டுண்டு சான்றோர்கள் என்னென்ன குற்றங்கள் பாவங்கள் செய்தாலும் மீண்டும் மீண்டும் சான்றோர் இனத்திலே பிறப்பார்கள் என்றும் நாராயணர் வைகுண்டமாக அவதரித்து சான்றோர்களுக்காக தவமிருந்து கலிமாயையிலிருந்து விடுவித்து தர்மயுக வாழ்வு கொடுப்பார் என்று அகிலத்திரட்டில் நாராயணர் சொல்கிறார். 

 “மானமாக வாழ்ந்தால் மாளும் கலி தன்னாலே” என்கிறார் அகிலத்திரட்டில் அய்யா நாராயணர். கலியுகத்தில் மானமாகவும் அகிலத்திரட்டு சொல்லும் தர்மவழியிலும் வாழ்ந்து தாழக்கிடப்பாரைத் தற்காத்து மாயக்கலி வெல்வோம். அகிலத்திரட்டு அம்மானையை உலகறியச் செய்து வைகுண்டரின் உவமைச் சொல்லி அகிலமக்கள் யாவரும் கலியை வென்றிட யுகதர்மம் செய்து தர்மயுகத்தில் இறப்பிறப்பில்லா பேறு நாராயணர் அருளால் நிச்சயம் பெறுவோம். 

 ஏகம் ஒரு பரம்.

CONTACT
close slider

    Please feel free to get in touch, we value your feedback.