தர்மயுக முரசு அக்டோபர் 2023

அய்யாவின் அருளால் எந்நாளும்நன்னாளே

-அசோக்குமார் அய்யா – 009607704901, 8012174032.

“நாராயணர் எங்கும் தாராளமானவர் என்று நகரெங்கும் பேசலாச்சே சிவனே அய்யா”
ஓம்கார நாதனின் கருணையாலும் உத்தமர்களின் முயற்சியாலும் உலகெங்கும் ஆலயங்கள் மலர்ந்து கொண்டு இருக்கும் இந்த நிகழ்காலத்தில் தொடர்ந்து அத்திருப்பணியில் ஈடுபட்டுத் தங்கள் இலக்கை நோக்கிப் பயணிக்கும் ஆன்மீகச் சிற்பிகள் அனைவருக்கும் அன்பு வணக்கம்.

ஆன்மீகச் சிற்பிகளே ஆதி காலத்தில் சனாதன தர்மத்தைப் போதிக்கும் தலங்கள் மட்டுமே இருந்தன. ஆதி நாராயணர் சனாதன தர்மத்தைச் சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்ற நான்கு வடிவங்களாகச் சமைத்து வகுத்துத் தந்தார். அவருடைய இந்த நான்கு வடிவங்களைச் சனத்குமாரர்கள் என்று வேதம் சொல்கிறது. இப்படி நாராயணரால் வகுத்துத் தந்த சனாதன தர்மத்தைப் போதிக்கும் சன்னதிகள் மட்டுமே உலகெங்கும் இருந்தன. இன்று தேசமெங்கும் இந்துக் கோவில்கள் துலங்கி வருகின்றன.

இக்கலியுகத்தில் கலியன், சனாதன தர்மத்தை அழிக்க ஆகமங்களைக் கூறழித்தது மட்டுமல்லாமல் ஆலயங்களையும் இடித்து அவன் உருவாக்கியது போன்ற போலி சமய ஆலயங்களாகவும் மாற்றி அமைத்தான்.

கலியனும், வெண்நீசனும் தான் அமைத்த போலி மதங்களை மக்களைப் பின்பற்றவைக்க பணத்தைக் காட்டி மயக்கி மதம் மாற்றினான். இதனால் பலபேர் மதம் மாறினர். இப்படி பல விதமான தந்திர வேலைகளைச் செய்து சனாதன தர்மத்தை அழிக்க முற்பட்டான்.

இப்படி அதர்மம் மேலோங்கிய காலத்தில் கொல்லம் ஆண்டு 1008 மாசி மாதம் 20 ஆம் தேதி ஆதி நாராயணர் ஆதி வைகுண்டமாகத் தான் வகுத்த சனாதன தர்மத்தைக் காக்க அவதரித்தார். எப்படியென்றால் திருச்செந்தூர் திருபாற்கடலுள் அகரமாய், மகரமாய், உகரமாய் மலர்ந்து ஓம்கார நாதனாய் சமைந்து வைகுண்டக் குழந்தையாகப் பள்ளிகொண்டார்.

வைகுண்டமாய் அவதரித்த ஆதிநாராயணர் திருப்பாற் கடலுக்குள்ளே சனாதன தர்மத்தைக் காக்கச் பிருத்துமன, வாசுதேவ, அனிருத்த, சங்கர்சன என்ற தமது நான்கு வடிவங்களாகக் காட்சி கொடுத்துக் கலியனின் தவறான செயல்பாட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

எம்பெருமானின் வைகுண்ட அவதாரத்தால் அதர்மம் குன்றி தர்மம் மேலோங்கியது. இடிக்கப்பட்ட இந்து ஆலயங்கள் மீண்டும் எழுப்பப்பட்டன. சனாதன தர்மத்தை மீண்டும் மக்கள் பின்பற்றத் துவங்கினர். இன்று உலகமெங்கும் புது புது பிரமாண்ட ஆலயங்கள் கட்டப்பட்டு வருகின்றன. “அயோத்தியில் எனக்கு அரண்மனை உண்டு” என்ற அய்யாவின் சொல் இன்று அங்கு அற்புதமான ஆலயம் அமைந்து கொண்டு இருக்கிறது.

இனி உலகமெங்கும் மீண்டும் சனாதன தர்மம் பரந்து வியாபித்துச் செழித்து வளரும். நாராயணரெங்கும் தாராளமானவர் என்று உலக மக்களெல்லாம் ஆண்டவனின் அவதார மகிமையைக் கண்டு மனமகிழ்வர். இறுதியாக நாராயணரின் கலியுக அவதாரமாம் வைகுண்ட அவதாரத்தைக் கண்டு பலன் பெறுவர்.

எனவே அய்யா வழிபாட்டு இந்து சமய சிற்பிகளே! ஒவ்வொரு ஊரிலும் ஆதி சானாதன தர்மமான அய்யா வழிபாட்டுத் திருத்தலங்கள் அமைக்க வேண்டும். அது அய்யா வகுத்துத் தந்த நெறிமுறையில் சற்றும் பிசகாத வண்ணம் நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஆதி சனாதன தர்மத்தைப் பிரதிபலிக்கும் அய்யா திருத்தலங்கள் எல்லாம் ஆன்மீகப் பாடசாலைகள் என்ற உண்மையை உணர்ந்து உலகத்திற்கே ஒளி காட்டுகின்ற கலங்கரை விளக்கமாக விளங்கி அய்யா வைகுண்ட அவதாரத்தைப் பறைசாற்றி மக்களின் அஞ்ஞான இருளைப் போக்கி மெய்ஞான அறிவைப் பெருக்கி சிற்றின்பத்தில் இருந்து விடுபடச் செய்து பேரின்பத்தில் நிலைபெற்று பிறவிப்பிணி அறுத்துப் பேரின்ப பெருவாழ்வாகிய தர்மயுக வாழ்வு பெற வழிவகை செய்வோம். நாமும் அத்தகுதியைப் பெற்று அய்யா வைகுண்டரின் திருப்பாதக் கமலத்தில் சென்றடைவோம்.

“ஊர்தோறும் பதி அமைப்போம்
“அனைத்துப் பதிகளையும் ஒருங்கிணைப்போம்”

நான்வந்து நாட்டும் இத்தலங்களை
நான் வந்து பார்க்க சநதோசமாய் இருக்கும்”

அய்யா உண்டு

அகில கேள்வி

1. அம்மை பத்திரகாளியிடம் சான்றோரை வளர்க்க கொடுத்து விட்டு நாராயணர் எங்கு போய் பள்ளிக் கொண்டார்?

2. மேல் லோகம் ஏழு எது?

3. அரிகோபால சீசருக்கு அய்யா எடுத்துக் கொடுத்த சீர் எது?

4. இளைய பெருமாள் என்றால் யார்?

5. அஞ்சனையின் மைந்தன் யார்?

விடை 9 பக்கம் பார்க்கவும்

அகிலதிரட்டு அம்மானை மூலமும், உரையும்

-க. ரீகன் அய்யா- 0096893145654

“வம்பி லிறவாதே வாழ்விழந்து போகாதே
தம்பி தமையன் தளங்க இழவாதே
பற்பக்கிரீட பவுசு மிழவாதே
அற்பமிந்த வாழ்வு அனியாயம் விட்டுவிடு”
சிங்கமுகாசூரன் திரள் சூர பர்ப்பன் ஆகிய இரு அசுரர்களும் கந்த சுவாமியால் அனுப்பப்பட்ட தூதுவரின் நல்மொழியை கேளாமல் கந்த பெருமானோடு யுத்தம் செய்ய வேண்டும் என்று கூறியதால் கந்தபெருமானும் சூரர்களை அழிப்பதற்காக படைக்களத்திற்கு வருகின்றார். அப்படி வந்த பின்பும் இறுதியாக சூரர்களின் புத்திக்கு உரைக்கும் படியாக மேலும் புத்தி உபதேசங்களை கூறுகின்றார். இந்த புத்தி உபதேசமானது சூரர்களுக்கு மட்டுமில்லாமல் உலகில் வாழக்கூடிய அத்தனை உயிர்களுக்கும் எக்காலத்திலும் பொருந்தக் கூடியதாகும்.

கந்த பெருமான் சூரர்களை பார்த்து *வம்பில் இறவாதே வாழ்விழந்து போகாதே* என்று கூறுகின்றார். அதாவது நேர்மையாக அறத்தோடு செல்கின்ற பாதையில் மறமாக வம்பு செய்து மற்றவர்களை துன்பப்படுத்தி தேவர்களை சிறைப்படுத்தி வம்பாக வைத்திருக்கக் கூடிய காரணத்தினால், நீ உன்னுடைய வாழ்வினை இழந்து விடாதே! என்னோடு போருக்கு வந்தால் உனக்கு நான் கொடுத்திருக்கக்கூடிய வாழ்வானது இழந்து விடுவாய். மேலும் *தம்பி தமையன் தளங்கள் இளவாதே* என்று கூறுகின்றார். அதாவது சூரர்கள் இருவரும் ஒற்றுமையாகவும் அசுர குலங்களோடு ஒன்றாக ஆட்சி புரிந்து வருகின்றீர்கள். அப்படிப்பட்ட பவிசினை கொடுத்திருப்பவன் உங்களையும் விட மேலான நானே. என்னோடு போர் செய்து உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கக் கூடிய பவிசினை இழந்து விடாதீர்கள்.

அடுத்ததாக கந்தசுவாமி சூரர்களை பார்த்து *பற்ப கிரீட பவுசும் இழவாதே அர்ப்பமிந்த வாழ்வு அநியாயம் விட்டு விடு* என்று கூறுகின்றார். அதாவது இந்த கிரேதாயுகமானது இந்த சூரர்களுக்காக படைக்கப்பட்டு அவர்கள் ஆட்சி புரிந்து அரசர்களாக வாழ்வதற்காக படைக்கப்பட்ட யுகமாகும். அப்படிப்பட்ட இந்த உலகில் தர்மத்தோடு ஆட்சி புரியாமல் மற்றவர்களை துன்புறுத்தி அதர்மமாக ஆட்சி புரிந்தால் உங்களுக்கு கொடுக்கப்பட்டு இருக்கக்கூடிய அரசாட்சி பவிசானது பறிக்கப்பட்டு நீங்களும் அழிந்து போவீர்கள் என்று கந்தசுவாமி புத்தி உரைக்கின்றார்.

மேலும் நீங்கள் வாழக்கூடிய வாழ்வானது மிகவும் அற்பமான வாழ்வு ஆகும். இது குறிப்பிட்ட கால அளவுக்கு உட்பட்டது. இது கிரேதா யுகத்திலே சூரர்களுக்கு சொல்லப்பட்டாலும் எல்லாயுகத்திலும் உயிர்களுக்கு பொருந்தக்கூடியதாகும். நாம் இந்த உலகில் எத்தனை விதமான செல்வங்களோடும் சிறப்புகளோடும் படைபட்டாளங்களோடு படைக்கப்பட்டிருந்தாலும் நாம் வாழக்கூடிய காலம் என்பது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒரு குறுகிய கால அளவு ஆகும். நமக்கு கொடுக்கப்பட்ட இந்த கால அளவில் நாம் முடிந்தவரை இந்த உலகில் நேர்மையாக வாழ்ந்து தர்மத்தை கடைபிடித்து இறைவனை அடைவதற்கான வழியை பின்பற்ற வேண்டும். அப்படி இல்லாமல் அதர்மம் கொண்டு அநியாயமாக வாழ்ந்தால் கொடுக்கப்பட்ட இந்த வாழ்வானது பலனில்லாமல் ஒன்றுக்கும் உதவாமல் சென்று விடும்.

“கரண மீதில்லாமல் கவ்வையில்லா வாழ்ந்திருந்து
மரணம் வந்து சீவன் மாண்டு போகும் போது
நன்மையது கூட நாடுமே யல்லாது
தின்மை வராது தேவரையும் விட்டுவிடு
தீர்ச்சையுடன் புத்தி செவ்வே நேரிட்டுவொரு
மோட்சமது தேட முடுக்கமதை விட்டுவிடு”
மேலும் சூரர்களுக்கு கந்தசுவாமியாக இருக்கக்கூடிய நாராயணமூர்த்தி வேண்டிய புத்தி உபதேசங்களை சொல்லி வருகின்றார். இந்த உலகில் வாழக்கூடிய நாட்களில் மற்றவர்களுக்கு எந்தவித கெடுதலும் செய்யா வண்ணம் வாழ்ந்து தர்மத்தை கடைபிடித்து வாழ வேண்டும். நீங்கள் இந்த உலகில் எப்படி வாழ்கின்றீர்களோ அதன்படி தான் உங்கள் இறப்பிற்குப் பின்பு உள்ள நிலையும் தீர்மானிக்கப்படும். உலகில் பிறந்த எல்லோருக்கும் மரணம் என்பது உண்டு. அது தவிர்க்க முடியாதது.

அப்படிப்பட்ட மரணம் வரும்போது உங்கள் கூடவே உங்களுக்கு துணையாக வரக்கூடியது நீங்கள் வாழக்கூடிய காலத்தில் செய்த நன்மைகள் ஆகும். நீங்கள் தர்மத்தை கடைபிடித்து நன்மையை செய்திருந்தால் அது உங்களை காப்பாற்ற உங்களோடு வரும். ஆனால் அதர்மத்தை செய்து தீமையை நீங்கள் செய்திருந்தால் உங்களைக் காப்பாற்ற தீமையானது உங்களோடு வராது.

ஆகவே நீங்கள் தீமையை செய்யாமல் தேவர்களை விட்டு விடுங்கள். நான் சொல்லக்கூடிய புத்தி உபதேசங்களை கேட்டு உங்கள் வாழ்விற்கு பின்னால் மோட்சத்தை தரக்கூடிய நிலையை அடைய, மற்றவர்களுக்கு துன்பத்தை தரக்கூடிய நிலையை செய்யாமல் விட்டு விடுங்கள் என்று கந்தசுவாமி சூரர்களுக்கு புத்தியை கூறுகின்றார்.

“இத்தனையும் நாதன் யெடுத்துமிக யுரைக்க
புத்திகெட்ட பாவி போர்சூரன் யேதுரைப்பான்
இரந்து திரிகின்ற இரப்பனுக்கு உள்ளபுத்தி
பரந்த புவியாளும் பாரமுடி காவலர்க்கு”
இப்படி சூரர்களுக்கு வேண்டிய புத்தி உபதேசங்களை கூறிய பின்பும் இரு அசுரர்களும் கந்த சுவாமியின் புத்தி உபதேசங்களை ஏற்கவில்லை. அவர்கள் சுவாமியுடன் போர் செய்வதிலேயே குறியாக இருந்தார்கள். ஏனென்றால் அவர்கள் படைபட்டாளங்களோடு வலிமையாக தாங்கள் இருப்பதாக எண்ணினார்கள். மேலும் மூவுலகையும் வெற்றி கொண்ட ஆணவத்தில் இருந்தார்கள். ஆகவே கந்த சுவாமி சொன்ன புத்தி உபதேசங்கள் சூரர்கள் காதில் ஏற்கவில்லை.

அவர்கள் சுவாமியை பார்த்து நீ சொல்லக்கூடிய இந்த புத்தி உபதேசங்கள் ஒன்றும் இல்லாத ஆண்டிகளுக்கு உதவுமே தவிர எங்களுக்கு தேவையில்லை. ஏனெனில் புத்தி உபதேசங்களை கூறக்கூடிய நீயும் ஒன்றும் இல்லாத ஆண்டிப்பண்டாரம்! ஆனால் நாங்களோ வலிமையானவர்கள். இந்த உலகினை அடக்கி ஆளக்கூடியவர்கள். ஆகவே உன் புத்தி உபதேசங்கள் எங்களுக்கு தேவை இல்லை என்று கூறினார்கள்.

“ஏற்க்குமோ ஞானம் யிரப்போர்க்கல்லாது
ஆர்க்குமே செல்லாது ஆண்டிவுன் ஞாயமது
சண்டைக்கு வாவெனவே தான் கூறி தூதுவிட்ட
பண்டாரமென்ற படைக்காரனும் நீயோ”
இப்படி நீ சொல்லக்கூடிய புத்தி உபதேசங்கள் உன்னை போன்ற பண்டாரங்களுக்கு ஏற்கும் படியாக இருக்கும். ஆனால் சர்வ வல்லமை பொருந்திய எங்களுக்கு இது தேவையில்லை. நீதான் அன்று யுத்தத்துக்கு தூதுவனை அனுப்பிய பண்டாரமா? எங்களோடு வேறு மொழிகள் சொல்லாமல் சண்டைக்கு வா என்று அசுரர்கள் இருவரும் போர் புரிய கந்த சுவாமி அழைத்தார்கள்.
(தொடரும்)

அய்யா உண்டு

அய்யாவின் உபதேசங்கள்

– பா. கிருஷ்ணமணி அப்புகுட்டி அய்யா 9841933992

“உன்கணக்கைச் சொல்லறிவேன் ஊழ்வினையை நானறிவேன்”
பண்டிதங்கள் சோதிடங்கள் படித்தாலும் அறிவாயோ

உங்கள் பிறவிகள் அனைத்திலும் செய்த நன்மை தீமை செயல்களால் விளைந்த பாவ புண்ணிய கணக்கை நான் அறிவேன். உங்களின் பாவ புண்ணியத்தினால் அமைந்த பிறவியின் விதியையும் நான் அறிவேன். ஆனால் நீங்கள் எல்லாவிதமான நூல்களையும் கற்றுப் பண்டிதராகவோ, ஜோதிட சாஸ்திரத்தைக் கற்றுச் சோதிடராகவோ இருந்தால் கூட உங்களின் விதிக் கணக்கைப் பற்றி அறிந்து கொள்ள மாட்டீர்கள்.

“சலியாமல் காசுத் தந்தவர்க ளுண்டானால்
வேண்டிநீ தர்மம் விரைவாய் நடத்தியிரு”

எவ்விதமான கஷ்டமும், மன சங்கடமும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் மன விருப்பமாக தர்மம் செய்ய விரும்புகின்ற அன்பர்களிடம் இருந்து மட்டுமே தர்மமாக பணத்தைப் பெற்று, அதன் மூலம் எவ்வித கால தாமதமும் இன்றி விரைவாக தர்ம காரியங்களைச் செய்யுங்கள்.

“உபதேசம் சொல்லுங்கூலி உடன்கையில் கொடுத்திடுங்கோ”
புனித நூல்களின் வழியாக இறைவன் தந்த நல்ல கருத்துகளை உலகிற்கு தெரியப் படுத்துகின்றவர்களின் பணிக்கு உண்டான கூலியை(பணம்) உடனே அவர்களுக்குக் கொடுத்துவிடுங்கள்.

இறைவனின் உபதேசங்களை உலகிற்கு எடுத்துச் சொல்கின்றவர்கள் தங்களையும், தங்களை நம்பியுள்ள குடும்பத்தையும் காப்பாற்ற முடியாத நிலையில் இருந்தால் அவர்களால் தங்களின் ஆன்மிகப் பணியைச் சரியாக செய்ய முடியாது. எனவே உண்மையாக இறைப் பணி செய்கின்றவர்களை ஆதரித்து அவர்களுக்கு உதவுவது தர்மம் ஆகும்.

“வாதாடி வந்தவர்க்கு வழக்கறுத்து வைப்பேன்சுவாமி”
நியாயம் கேட்டு முறையிடுகின்ற பக்தர்களுக்குச் சரியான நேரத்தில் நியாயம் வழங்கி, அவர்களின் வழக்கை நாராயண சுவாமியாகிய நான் முடித்து வைக்கின்றேன்.
தொடரும்

அய்யா உண்டு

மனித உடலின் சிறப்பு என்ன?

– S. அன்ன செல்வம் அம்மா – 9443622222

வைகுண்ட பரம்பொருள் மனிதனைப் பார்த்து மண்ணால் உனைமனைந்தேன் என்று சொல்வார். ஒரு குயவன் மண்பாண்டங்கள் செய்வதற்கு மண்ணும் தண்ணீரும் தேவை. அதுபோன்று நம்முடைய உடல் மண்ணும் தண்ணீரும் கலந்த கலவையாக உள்ளது.
“மண் தான் உடம்பு வந்துதித்தோன் தனக்கு
விண் தான் உடம்பு விலாச குருவோடு
சலம் தான் உடம்புக்கு உறுதி தைரியங்கள்”
என்று அகிலத்திரட்டு அம்மானை கூறுகிறது. மனித உடல் மண்ணால் ஆனது என்றும், உடலமைப்பு விண்ணில் உள்ள திருமாலின் அம்சத்தை ஒத்தது என்றும், நீர் சக்தி தான் உடலுக்கு உறுதியையும் பலத்தையும் கொடுக்கிறது என்றும் கலியனைப் பிறவி செய்யும் போது அய்யா வைகுண்டப் பரம்பொருள் கூறுகின்றார்.

“பாதியாய் நீசனையும் பகிர்ந்தே அவனுடம்பில்
விதியாம் இடது விலாவில் ஒரு எலும்பை
தட்டிக் கழற்றி சச்சுருவம் தானாக்கி
திட்டித்து நீசனுக்கு சினங்கொடுவும் ஈசுரரே”

இது அகிலத்திரட்டு அம்மானை வாசகம். கலியனுடைய விலா எலும்பிலிருந்து உருவாக்கப்பட்டவள் பெண். அதாவது கலிச்சி என்று கூறப்பட்டுள்ளது. மனித உடல் பஞ்சபூத சக்தியால் ஆனது.
நிலம் – தசையும் உடல் உறுப்புகளும்
நீர்- ரத்தம். உமிழ்நீர் வியர்வை.
நெருப்பு – உடல் வெப்பம், பசி, செரிமானம்.
காற்று – சுவாசக் காற்று
ஆகாயம் – மனம்

இவ்வாறாக, பஞ்ச பூத சக்தியால் மனித உடல் இயங்குகிறது. மனித உடலில் மிகவும் முக்கியமானது செல். பல செல்களின் கூட்டமைப்பு திசுக்கள். அணுக்களின் தொகுப்பு என்றும் சொல்லலாம். பல லட்சக்கணக்கான திசுக்களின் கூட்டமைப்பு தான் நம்முடைய உடல் உறுப்புகள்.

வயிறு -உணவு உட்கொள்வதையும், குடல்- ஜீரண சக்தியாகவும், நுரையீரல்- காற்றைக் கடத்தவும், சிறுநீரகம்- திரவக் கழிவைப் பிரிக்கவும், கல்லீரல்- உடல் உஷ்ண மானியாகவும், எலும்புகள் -உடல் அமைப்பாகவும், நரம்புகள்- உணர்ச்சிகளை உணர்வதற்கும், இதயம்- ரத்தத்தைப் பம்பு செய்யவும், கால்- ஓட, நடக்கவும், கைகள் -உழைக்கும் கரங்களாகவும், தலை- ஐம்புலன்களின் உறைவிடமாகவும் உள்ளது.

ஐம்புலன்கள் என்பது மெய், வாய், கண், மூக்கு, செவி என்பவையாகும்.

இவை மூலம் உணர்தல், ருசித்தல், பார்த்தல், முகர்தல், கேட்டல் ஆகிய செயல்கள் நடைபெறுகின்றன. “என் சாண் உடம்புக்குச் சிரசே பிரதானம்” என்பார்கள். ஆம் உடலுக்குப் பிரதானம் தலை, தலைக்குப் பிரதான உயிர், உயிருக்குப் பிரதானம் அறிவு. அறிவுக்குப் பிரதானம் இறைவன். இறை சக்தியாகிய சிவமே உடலுக்கு உயிராக இருக்கிறது. அதையே ஜீவன் என்று சொல்கிறோம்.

நம்முடைய உடல் மூன்று வகைப்படுகிறது. அவை ஸ்தூல உடல், சூட்சும உடல், காரண உடல் என்பவை.

ஸ்தூல உடல்: நம் கண்களால் பார்க்கக்கூடிய அதாவது உடல் உறுப்புகளால் ஆன நம்முடைய மாமிச சரீரம். இது 96 தத்துவங்களால் ஆனது. ஆயுட்காலம் முடியும்போது அழிந்து போகும். எனவே இந்த உடல் அநித்தியம் ஆனது.

சூட்சும உடல்: இதை ஒலியுடல், நித்திய உடல், நுண் உடல் என்பர். மனம், சித்தம், புத்தி, அகங்காரம் ஆகிய நான்கும் சேர்ந்ததாகும். இது பஞ்ச கோஷங்களால் ஆனது. இதற்கு ருசி, கேட்டல், பார்த்தல், மனம், புத்தி, காந்த சக்தி என அனைத்து சக்திகளும் உண்டு.

காரண உடல்: பிறப்புக்குக் காரணமான, முன் ஜென்ம கர்மாவை அடிப்படையாகக் கொண்ட உடல். ஆத்மாவை உணர்ந்து, தன்னுடைய நோக்கத்தை உரிய இடத்தில் செயல் படுத்துவதாகும்.

மனித உடல் அற்புத அதிசயங்கள் நிறைந்து காணப்படுகிறது. மனிதன் நினைத்தால் அவன் தெய்வமாகலாம். ஆன்மா முக்தி பெறலாம். மரணம் இல்லா நித்திய வாழ்க்கை வாழலாம். சாகா கலையைக் கற்றுக் கொள்ளலாம். மனிதனுக்கு மட்டுமே இந்த இறை சக்தி கொடுக்கப் பட்டுள்ளது.

மனித உடல் நாராயணர் அம்சமாகவும், உயிர் சிவமாகவும், உடல் இயக்கம் மகா சக்தியாகவும் பிறவி செய்யப்பட்டுள்ளது. மனித உடல் எத்தனை சிறப்புகள் நிறைந்தது என்பதை நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

அய்யா உண்டு

அகில விடை

1. ஸ்ரீரங்கம்

2. பரலோகம், சிவலோகம், வைகுண்டலோகம், பிரம்மலோகம், சொர்க்கலோகம், தெய்வலோகம், எமலோகம்

3. ஏரணியும்

4. லட்சுமணர்

5. அனுமன்

அய்யா உண்டு

சனாதன தர்மத்தைக் காக்க அய்யா வைகுண்டர்

– ஹரி வெங்கடேஷ் அய்யா 8508518505

“வழிதப்பி எல்லோரும் மயங்குகிறார் என்மகனே”
– அய்யா
தர்மம் தழைக்க பிறந்தவர்தான் வைகுண்டர். ஆம் சனாதன தர்மம் தழைக்கத்தான் வைகுண்டர் பிறந்தார். இந்து தர்மம் தழைக்கவே வைகுண்டர் பிறந்தார். நாம் அனைவரும் இந்துதான். அதற்காக இந்து மதத்தில் உள்ள அத்தனை வழிபாட்டு முறைகளையும் நாம் ஆதரிக்க வேண்டுமா? அப்படி அத்தனை வழிபாட்டு முறைகளையும் ஆதரிக்க வேண்டும் என்றுதான் சனாதன தர்மம் சொல்கிறதா?

சனாதன தர்மம் என்பது வாழ்வியல் முறைதானே தவிர வழிபாட்டு முறை அல்ல. பலருக்கு இதில்தான் குழப்பம் ஏற்படுகிறது. பிறப்பால் அய்யாவழியாக இருந்த பின்னும் சனாதன தர்மம் என்ற வார்த்தையைத் தவறாகப் புரிந்து கொண்டதன் விளைவாகக் கண்ட வழிபாட்டு முறைகளையும் ஏற்றுக் கொண்டு வழி தவறிச் சென்று விடுகிறார்கள். பூசை புனக்காரம் செய்வது. ஆட்டுக்கிடா, கோழி பலி இடுவது என்று திசை மாறிச் சென்று விடுகிறார்கள். கேட்டால் எல்லாம் ஒன்றுதானே என்று விளக்கம் தருகிறார்கள்.

சனாதன தர்மத்தை ஆதரிப்பது என்பது இந்து மதத்தில் உள்ள அத்தனை வழிபாட்டு முறைகளையும் ஏற்றுக்கொள்வது என்று தனக்குத் தானே தப்புக் கணக்கைப் போட்டுக் கொள்கிறார்கள். நாமும் இந்துதானே.. ஆகவே எல்லா விதமான இந்து வழிபாட்டுத் தலங்களுக்கும் சென்று அங்குள்ள வழிபாட்டு முறைகளையும் பின்பற்றுவதால் எந்த தவறும் இல்லை என்று நினைத்துக் கொள்கிறார்கள்.

சைவ மதத்தினர் பலர் வைணவ மத வழிபாடுகளை ஏற்றுக் கொள்வதில்லை. வைணவ மதத்தினர் பலர் சைவ மத வழிபாடுகளை ஏற்றுக் கொள்வதில்லை. ஆகவே அவர்கள் சனாதன தர்மத்தைச் சார்ந்தவர்கள் இல்லை என்று சொல்லிவிட முடியுமா?

அதுபோல மக்களே நமக்கும் ஒரு வழிபாட்டு முறை உள்ளது. அது சாதாரண வழிபாட்டு முறை அல்ல. கலியுகத்தில் அவதரித்த இறைவன் தன்னைக் கலியுகத்தில் எப்படி மக்கள் வழிபட வேண்டும் என்று வகுத்துத் தந்த வழிபாட்டு முறை. அந்த முறையைத் தவறி நாம் இன்னொரு முறையை ஆதரித்து எந்த இடத்திலும் ஒரு அணுவளவேனும் கூட வழி தவறி நிற்கக்கூடாது.

“எனக்காகும் பேர்கள் இனம் கேளு மாமுனியே
புனக்காரம் இல்லை பூஜை முறையும் இல்லை

கோவில்கள் வைத்து குருபூஜை செய்யார்கள்
பூவதுகள் போட்டு போற்றியே நில்லார்கள்

ஆடு கிடா கோழி அறுத்து பலியிடார்கள்
மாடு மண்ணுருவை வணங்கித் திரியார்கள்”

இதனை நாம் எப்போதும் நினைவில் ஏற்றிக் கொள்ள வேண்டும். சனாதன தர்மம் என்பதைத் தெளிவாகச் சொல்ல வேண்டுமெனில் அகிலத்திரட்டு அம்மானைத் தான் சனாதன தர்மம்., சனாதன தர்மம் தான் அகிலத்திரட்டு அம்மானை
“நமக்கென்று உள்ளது ஒரு கோட்பாடு.
அதுவே அகிலத்திரட்டு அய்யா வழிபாடு”
அய்யாஉண்டு

கர்மா

– மீனா சுகின் அம்மா- 9344813163

நல்லவர்களின் துன்பமும் தீயவர்களின் இன்பமும் எப்போது முடிவுறும்?
ஓர் ஊரில் ஞானசித்தன் என்ற விவசாயி வாழ்ந்து வந்தார். குணத்தில் மிகவும் சிறந்தவராகவும் கிருஷ்ண பக்தராகவும் இருந்தார். ஆனாலும் இவருக்குச் சந்தோஷம் என்பதே கிடையாது. மனைவியும் மிகவும் கொடுமைக்காரியாகவே இருந்தாள். தன்னுடைய வாழ்வில் எப்போதும் கஷ்டங்களை மட்டுமே அனுபவித்து வந்தார். ஆனாலும் கிருஷ்ணர் மீது கொண்டிருந்த பக்தியை கைவிடவில்லை. தொடர்ந்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் பூஜை செய்வதும் இறை நாமத்தை உச்சரித்துக் கொண்டும் இருப்பார். ஆனாலும், அவருக்கு வரும் துன்பங்கள் குறைந்தபாடில்லை.

அதே ஊரில் குமணவித்தன் என்ற மோசமான பணக்காரன் இருந்தான். அவன், தான் சந்தோஷமாக இருக்க பிறரைத் துன்புறுத்தி வந்தான். இவனுக்கு இறை நம்பிக்கை என்பதே கிடையாது. இவனுடைய பொழுதுபோக்கு ஞான சித்தனை எப்போதும் கேலி செய்வது. வழக்கம் போல் குமணவித்தன் ஞான சித்தனைச் சந்தித்து ஏளனமாக நீயும் இறை நம்பிக்கையுடன் இருக்கின்றாய். ஆனால், உன்னுடைய பிரச்சனை தீர்ந்தபாடில்லை. நானும் இறைவனை நம்பாமல் எப்படி மகிழ்ச்சியாக வாழ்கிறேன் பார்த்தாயா? என்று இறை நம்பிக்கையை இகழ்ந்து பேசினார்.

கோபம் அடைந்த ஞானசித்தன் குமண வித்தனைப் பார்த்து நான் வணங்கும் இறைவன் நிச்சயமாக ஒரு வாரத்தில் உன்னுடைய செல்வம் உன் ஆணவம் எல்லாம் அழித்து என்னையும் நலமாக வாழ வைப்பார் என்று கூறினார். அதைக் கேட்டதும் குமணவித்தன் அவ்வாறு நடக்கவில்லை என்றால் நீ உன் இறை நம்பிக்கையை கைவிட வேண்டும் என்று ஞானசித்தனிடம் கூறிவிட்டுச் சென்றார்.

ஒருநாள் குமணவித்தன் காட்டிற்கு வேட்டையாட சென்ற போது அவனுக்கு ஒரு பெட்டி நிறைய தங்கம் கிடைத்தது. அதேசமயம் ஞானசித்தன் வேலைக்குச் சென்ற இடத்தில் அவனை மாடு முட்டி அதிக அளவு காயம் ஏற்பட்டது. உடனே, குமணவித்தன் சென்று ஞானசித்தனிடம் ஏளனமாக பார்த்தாயா? இறை நம்பிக்கைக்கு உனக்குக் கிடைத்த பரிசு நான் எப்படி மகிழ்ச்சியாக இருக்கிறேன். இறைவனை நம்பாமல் இருந்தாலே அனைத்தும் சிறப்பாக நடக்கும் என்று கூறிவிட்டுச் சென்றான்.

அதைக் கேட்ட ஞானசித்தன் மனம் உடைந்து தற்கொலை செய்து கொள்ள தன் தோட்டத்தில் இருந்த கிணற்றுக்குள் குதித்தான். அப்போது இரு கைகள் அவனை தூக்கி மேலே எடுப்பதை உணர்ந்தான். கண்களைத் திறந்து பார்க்கும் பொழுது கிருஷ்ணர் அங்கே நின்று கொண்டிருந்தார். ஞானசித்தன் அவரை வணங்காமல் தன் நிலைக்கு ஏன் இந்த காரணம் அநீதி செய்பவன் சிறப்பாக வாழக் காரணம் என்ன? என்று வினவினார்.

அதற்குக் கிருஷ்ணர் நீ இப்பொழுதும் அனுபவிக்கும் துன்பங்கள் அனைத்தும் உன் முன் ஜென்ம பாவங்களே. ஏனென்றால், நீ உன் முந்தைய பிறவியில் பாவம் மட்டுமே செய்தாய். உன் மனைவியை மிகவும் கொடுமை படுத்தினாய். ஆகவே இப்பிறவியில் இந்நிலை ஏற்பட்டது. ஆனால், குமணவித்தன் மிகவும் தர்மவானாக வாழ்ந்தான். இதனால் தான் இப்பொழுது மகிழ்ச்சியாக இருக்கின்றான்.

உடனே ஞான சித்தனுக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது அப்படி என்றால் இப்பிறவியில் நான் செய்யும் புண்ணியம் எனக்கு உதவாதா? என்று கிருஷ்ணிடம் கேட்டார். அதற்குக் கிருஷ்ணர் நீ அனைத்து பாவ பலன்களையும் அனுபவித்து கடைசியில் உயிரைவிடும் நிலை வரை சென்று விட்டாய். ஆகவே, இனி உன் துன்பங்கள் விலகி மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்வாய். மேலும், அவன் இனிதான் இப் பிறவியில் செய்த பாவப் பலனை அனுபவிப்பான் என்று கூறி மறைந்தார்.

அதுபோலவே, அன்று முதல் ஞானசித்தன் மகிழ்வான வாழ்வை வாழ ஆரம்பித்தார். குமணவித்தன் நோய்வாய்ப்பட்டு அனைத்துச் செல்வங்களையும் இழந்து படுக்கையில் இருந்தான். ஆதரவளிக்க யாரும் இல்லாத காரணத்தால் ஞான சித்தனே, குமண வித்தனைப் பராமரித்து வந்தார்.

அன்பானவர்களே! இப்பிறவியில் நாம் துன்பம் அனுபவிக்கிறோம் என்றால் அது நாம் செய்த பாவத்தின் பலன் ஆகும். தீயவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்றால் அது கொஞ்ச காலமே. நிச்சயமாக அவர்களுக்கான பாவப் பலனை அனுபவிப்பார்கள்

“நல்ல நினைவோர்க்கு நாள் எத்தனை ஆனாலும்
பொல்லாது வராமல் புவி மீதில் வாழ்ந்து இருப்பார்”
என்ற அகில வரிகளுக்கு ஏற்ப நல்லவர்களுக்கு வரும் துன்பம் கொஞ்ச நாள் மட்டும். அவர்கள் அய்யாவை நம்பி பிடித்து எல்லா செயல்களையும் அவரிடம் ஒப்படைத்துச் செய்தால் நிச்சயமாக பேரின்ப வாழ்வை அருள்வார்.

அய்யா உண்டு

அகிலம் அறிவோம்?

-பா. கிருஷ்ணமணி அப்புகுட்டி அய்யா 9841933992

தாழக்கிடப்பாரை தற்காப்பதற்காக கலியுகத்தில் வைகுண்டமாக அவதரித்த நாராயணப் பரம்பொருளின் அவதாரம் நிகழ்ந்த இடம் திருச்செந்தூர் திருப்பாற்கடல் ஆகும். அவதாரப் பூமி தெச்சாணா பூமி அல்ல.

இறைவனின் 18 ஆண்டு கால அவதார லீலை நடந்த இடமே தெட்சணா பூமியாகும். எவ்வாறு பரம்பொருளின் முருக அவதாரத்தின் போது பூலோக தாய் தந்தையர்கள் யாருக்கும் பிறக்கவில்லையோ அதுபோலவே வைகுண்ட அவதாரத்திலும் பூலோக தாய் தந்தையர் எவருக்கும் பிள்ளை போன்று பிறக்கவில்லை.

அய்யா உண்டு

அய்யா அருளிய வாழ்வியல் நெறி முறைகள்

-த. சீதா லெட்சுமி அம்மா 949655691

உறுதியின் சிறப்பு

“உறுதிதான் என் மகனே உலகமதை ஆளுவது”

மன உறுதி என்ற பண்பு எதையும் சாதிக்கும் தன்மையுடையது. மன உறுதியுடன் வாழ்வில் வெற்றி பெற முயற்சி செய்ய வேண்டும். முயற்சியும் அதற்கு தேவையான இடைவிடா பயிற்சியுமே வெற்றி பயணத்திற்கு படிக்கட்டாகும். அப்படிக்கட்டில் பயணிக்க வேகமும், விவேகமும் தேவை.

விவேகமாய் சிந்தித்து மனஉறுதியுடன் வேகமாக செயலாற்றினால் வெற்றிக்கனியை எளிதில் பெறலாம். உறுதியான வேர்களை உடைய மரங்கள் பொதுவாக எந்த புயலுக்கும் சாய்ந்து விடுவதில்லை. அதைப்போல் உறுதியான மன மிருக்கும் மனிதர்கள் சோதனையை கண்டு அஞ்சாது சாதனை படைப்பர்.

மனிதர்கள் அனைவருமே ஏதாவது ஒரு காலகட்டத்தில் வாழ்வில் சோதனைக்கு ஆட்படுவார்கள். அந்த நேரத்தில் மன ஆற்றலும், மனித ஆற்றலும், உறுதியுடன் இணைந்து பொறுமையோடு செயல்பட்டால் எதையும் சாதிக்கலாம்.

தடைகள் வரும் போது பொறுமையுடன் முயற்சியுடன் மாற்றுவழியை தேடினால் அந்த வழியே அவர்களை மற்றொரு துறையில் சிறந்தவர்களாக மாற்றலாம். இடர்பாடு வந்தாலும் இடைவிடா முயற்சியால் எந்த நிலையிலும் முன்னேற முடியும்.

இன்பம், துன்பம், வெற்றி, தோல்வி, பயம், கவலை, விருப்பு, வெறுப்பு, ஆசை அனைத்தையும் மனிதன் மனதின் மூலமாகவே அனுபவிக்கிறான். மனதைப் பொறுத்தே மனிதனுக்கு உயர்வும் தாழ்வும் உண்டாகிறது. இதைத் தான் ‘மனம் போல் வாழ்வு’ என்கின்றனர். இதையே அய்யா அவரவர் நினைப்புக்குத்தக்கதாக விளையாடுகிறேன் சிவனே அய்யா என்று கூறுகிறார்.

மனதில் ஊக்கம் உள்ள அளவுக்கு அவனுடைய உயர்வு இருக்கும். மனம் உடலை ஆள்கிறது. மனவலிமை இல்லாதவனால் எதையும் சாதிக்க முடியாது. எந்த சுகத்தையும் அனுபவிக்க முடியாது. எல்லாம் இருந்தும் இல்லாதவன் ஆவான். வலிமையற்ற மனம் உடையவனால் எதையும் செயலுக்குக் கொண்டுவர முடியாது. ஏக்கமும், கவலையும், எதிர்பார்ப்பும், எதிர்காலத்தின் மீது பயமும் உள்ளவனாக வாழ்வின் இறுதி வரை ஒன்றையும் சாதிக்க இயலாதவனாக காலம் கழிப்பான்.

மனித வாழ்க்கையில் உயர்வை அடைய பல வகையில் மன வலிமை இன்றியமையாதது. வறுமையை விரட்டி வாழ்க்கையில் முன்னேற, திறமைகள் பெற, திறமைக்குத் தகுந்த வாய்ப்புகள் பெற, போட்டிகளில் வென்று புகழ்பெற, பகையை வெற்றிகொள்ள, நோயை விரட்ட, சோம்பலைத் துரத்த மனிதனுக்கு மன உறுதியும், மனவலிமையும் தேவை.

மன வலிமை உள்ளவன் வாழ்க்கையில் வரும் துன்பங்கள், சோதனைகள், இழப்புகள், ஏமாற்றங்கள் போட்டிகள், பொறாமைகள், கொடுமைகள் அனைத்தையும் எளிதில் சந்தித்துச் சமாளிப்பான்.

ஒரு மனிதன் வெற்றியாளனாகவும், இன்னொருவன் தோல்வியாளனாகவும், ஒருவன் மகிழ்ச்சி உள்ளவனாகவும், இன்னொருவன் துன்பப்படுபவனாகவும், ஒருவன் செல்வந்தனாகவும், இன்னொருவன் வறுமையில் வாடுபவனாகவும், ஒருவன் சாதனைகள் புரிபவனாகவும் இன்னொருவன் சாதரணனாகவும் இருப்பது அவர்கள் அவர்களுடைய மனதைப் பயன்படுத்தும் முறையில் தான் இருக்கிறது.

புராண இதிகாசங்களில் மன உறுதியால் சாதனை புரிந்தவர்கள் பலர். இதில் சாவித்திரியினுடைய மன உறுதி மிக சிறப்பு வாய்ந்ததாக கூறலாம். எதிரில் நிற்பவன் காலனே ஆனாலும், கலங்காமல் துணிந்து பேசி காரியத்தை சாதித்துக்கொண்டாள். இதுதான் சாவித்திரியின் மன உறுதி. பொறுமையும், மனஉறுதியும் ஒரு மனிதனை உயர்வாக்கும் என்பதை மனதில் கொண்டு செயல்படுவோம் தர்மயுக வாழ்வுப் பெறுவோம்.

அய்யா உண்டு

அகில விருத்தமும் விளக்கமும்

-அசோக்குமார் அய்யா – 009607704901, 8012174032.

விருத்தம்: 15

“பிறவியது தான் செய்யவென்று பெரியோனுரைக்கப் பெண்ணார்கள்
அலறியழுது முகம்வாடி அரனாரடியை மிகப்போற்றி
திறவிமுதலே திரவியமே சிவமேயுமது செயலைவிட்டு
இறவியானா லெங்களுக்கு யினிமேல்பிறவி வேண்டாமே”

விளக்கம்: இரண்டு மாதர்களையும் பூலோகத்தில் பிறவி செய்ய போவதாக பெரியோனான சிவபெருமான் சொல்லவதைக் கேட்டு அவ்விரு மாதர்களும் அலறி அழுது மனமயர்ந்து முகம் வாடி சிவன் அடியை போற்றி அனைத்துக்கும் மூலமும் முடிவுமான மூலப்பொருளே, உமக்கு தொண்டு செய்வதை தவிர்த்து வேறு ஒரு பிறவி இனிமேல் எங்களுக்கு வேண்டாம் என்று வேண்டி நின்றார்கள்.

அய்யா உண்டு

அன்புக்கொடி சொந்தங்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம்: அன்பானவர்களே, தாங்கள் சார்ந்துள்ள தாங்கல் வரலாற்றை நமது தர்மயுக முரசு பத்திரிகையில் வெளியிட வேண்டும் என்றால் உங்கள் தாங்கலின் வரலாற்றை அழகாக எழுதி 0096893145654 என்ற வாட்சப் எண்ணிற்கு தாங்கலின்
புகைப்படத்தோடு சேர்த்து அனுப்பி தாருங்கள். அதனை வருகின்ற மாதங்களில் நமது தர்மயுக முரசு பத்திரிகையில் பதிவு செய்து வெளியிடலாம்

அய்யா உண்டு

CONTACT
close slider

    Please feel free to get in touch, we value your feedback.